7. நேசம் நீயாகிறாய்!

4.8
(5)

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎

 

நேசம் 07

 

தலையில் பூ மணக்க, உடலோ அலங்காரங்களில் பளபளக்க, கையில் பால் சொம்புடன் அறை வாயிலில் நின்றிருந்தாள் தேன் நிலா.

 

“உள்ளே போ தேனு” என ரேஷ்மா கூற, மறுக்கும் வழியின்றி உள்ளே நுழைந்தாள்.

 

‘என்னெனமோ பேச்செல்லாம் பேசிட்டு எங்கே போயிட்டான்? நினைக்கும் போதே உள்ளுக்குள்ள உதறுதே’ அவனைக் காணாதவளாய் சுற்றும் முற்றும் தேடுதல் வேட்டை நடாத்த,

 

“வெல்கம் வெல்கம்” என வரவேற்றவாறு வந்தான் ராகவேந்திரன்.

 

“இந்த கம் ஒன்னு தான் குறைச்சல்” என முறைத்தவளோ, “இதோ பாருங்க. நீங்க சொல்லுறதுக்காக என்னால உங்க இஷ்டப்படி எதையும் பண்ண முடியாது” என்று சொன்னாள்.

 

“எனக்கும் உன் இஷ்டப்படி எதையும் நிறுத்த முடியாது” அவனும் அழுத்தமாக நின்றான்.

 

“ரெண்டு பேரும் முட்டிக்கிட்டு நிற்கிற விஷயம் இது கிடையாது. புரிஞ்சுக்கோங்க ராகவ்” இறங்கி வந்து கெஞ்சுவதைத் தவிர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

 

“கெஞ்சவோ, மறுக்கவோ இப்போ நீ என் எதிர் வீட்டுப் பொண்ணு இல்லை. எனக்கு பொண்டாட்டி”

 

“ஆனா நான் உங்களை புருஷனா ஏத்துக்கல”

 

“அக்னி சாட்சியா ஏத்துக்கிட்ட. என் கையால தாலி வாங்கிக்கிட்ட. வேறு என்ன வேணும் உனக்கு?” கடுமையாகக் கேட்டான் அவன்.

 

“மனசார ஏத்துக்கனும். மனசு ரெண்டும் இணையனும். அது முக்கியம் இல்லையா?” அவனுக்குப் புரிய வைக்க முயற்சித்தாள் பெண்.

 

“ரொம்ப முக்கியம். ஆனால் இதை விட மனசு ஒத்துக்காம எத்தனையோ கல்யாணங்கள் நடந்திருக்கு. லவ் மேரேஜ் மட்டுமா இந்த உலகத்தில் நடக்குது? அர்ரேன்ஜ் மேரேஜ் எவ்ளோ நடக்குது. அவங்க கல்யாணத்தின் பின்னால ஒருத்தர ஒருத்தர் ஏத்துக்கிட்டு புரிஞ்சுக்கிட்டு நல்லா வாழுறாங்க. அர்ரேன்ஜ் மேரேஜ் பண்ணுற சிலர் லவ் மேரேஜ் பண்ணுனவங்களை விட அன்னியோன்யமா சந்தோஷமா வாழுறாங்க” சற்றே நீளமாகப் பேசி விட்டான் ராகவ்.

 

அவளோ வாய் பிளந்து யோசனையில் ஆழ்ந்து போக, “என்ன யோசனை?” என்று கேட்டான் அவன்.

 

“நீங்க டாக்டரா இல்ல லெக்சரரானு யோசிக்கிறேன். அவ்ளோ நல்லா விளக்கம் தர்றீங்க”

 

“லூசுப் பொண்ணே! உனக்குப் போய் விளக்கம் கொடுத்த என் புத்தியை செருப்பால அடிக்கனும்” அலுப்புடன் பல்கோணிக்குச் சென்று நின்று கொண்டான்.

 

“நான் ஒன்னு கேட்கவா?” என அவள் வினவ, தலையசைத்தான் அவன்.

 

“கல்யாண நேரத்தில் எங்கே போனீங்க? மத்தவங்க கிட்ட சொன்ன பொய்யை எனக்கு சொல்ல வேண்டாம்” வன்மையாகப் பிறந்தது, அவள் வினா.

 

“சொல்லியே ஆகனுமா?” என்று கேட்ட போது, சொல்லாமல் விடப் போவதில்லை என்ற‌ தோரணையில் அவள் நின்றாள்.

 

“பிடிக்காத கல்யாணம் எதுக்குன்னு போனேன். உனக்கு பிடிக்கலல்ல. பிடிக்காத ஒருத்தர் கூட எதுக்கு வாழனும்னு யோசிச்சேன். ஆனால் இடையில் துருவன் என்னைக் கண்டதால எதுவும் பண்ண முடியாம பேச்சை மாற்றி வர வேண்டியதாப் போச்சு”

 

“அப்போ அவன் என் கிட்ட சொல்ல வந்தது?” யோசனைக்குச் சென்றாள் அவள்.

 

“அவன் என்னனு கேட்கவும் எனக்கு கல்யாணம் பிடிக்கலனு சொன்னேன். உனக்கு பிடிக்கலனு சொல்ல முடியாது இல்லையா? அதைத் தான் மனசு பொறுக்காம உன் கிட்ட சொல்ல வந்தான் போல” என்றவனைக் கூர்மையாகப் பார்த்து,

 

“எனக்கு பிடிக்கலனு சொல்லியும் கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு நின்னீங்க. இப்போ நீங்களே கல்யாணத்தை நிறுத்தப் போய் இருக்கீங்கனா கல்யாணம் பிடிக்காதது எனக்கு இல்ல, உங்களுக்கும் தான்” என்றாள், துளைக்கும் பார்வையோடு.

 

“உன் ஊகம் அதுன்னா அப்படியே வெச்சுக்கோ. ஆனால் எவ்ளோ ட்ரை பாண்ணியும் கல்யாணம் நடந்துருச்சுனா அது கடவுள் போட்ட முடிச்சுனு நம்புறேன். சோ இனி என் வாழ்க்கை உன்னோட, உன் வாழ்க்கை என்னோட” அவன் சாதாரணமாகக் கூறினான்.

 

ஆனால் அவளால் அவ்வளவு இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்குப் பிடிக்காததை விட, அவனுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தான் பூதாகரமாகத் தோன்றியது.

 

“உங்களுக்கு ஏன் கல்யாணம் பிடிக்கல?” அவள் கேட்க,

 

“அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது. இப்போ பிடிக்கலங்குற பேச்சுக்கு இடமில்லை. ஏன்னா இது தான் வாழ்க்கைனு முடிவாகிருச்சு. இனி பிடிக்கனும், பிடிக்க வைக்கனும்” என்று பதிலளித்தான்.

 

அவளுக்கு அவனது பக்கத்தில் இருந்து யோசிக்க முடியவில்லை. பிடிக்கவில்லை என்று கல்யாணத்தை நிறுத்தப் போனவன், தாலி கட்டியவுடன் மாற்றமாக யோசிக்கிறானே.

 

அவ்வளவு எளிதில் தன்னால் மாற முடியாது. தன் மனதை மாற்றவும் முடியாது. இந்த வாழ்க்கை ஏன் இவ்வளவு வேடிக்கையாகிப் போனது என்ற யோசனை வந்தது.

 

“இங்க பாருங்க ராகவ்! மேஜிக் மாதிரி சட்டு சட்டுனு என்னால மாற முடியாது. அதுக்கு டைம் வேணும்”

 

“தாராளமா டைம் எடுத்துக்கலாம்னு சொன்னா நீ அதையே வெச்சுட்டு தள்ளி நிற்ப. அது சரி வராது. ஆனாலும் டைம் தர்றேன். ஜஸ்ட் ஒன் வீக்! அதற்குள் நிதர்சனத்தைப் புரிஞ்சுக்க. அதுக்கப்பறம் நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்” என்றவன் கண்களை மூடிச் சாய்ந்து கொள்ள,

 

சற்று யோசித்தவள், “எனக்கும் உனக்கும் செட்டாகும்னு தோணவே இல்ல. அதை உனக்கும் புரிய வைக்கிறேன் ரோஸ் மில்க்” என்றவாறு அங்கிருந்த சோஃபாவில் உறங்கிப் போனாள்.

 

காலையில் பொழுது இனிதாய்ப் புலர்ந்தது. உறக்கம் கலையும் போது கழுத்து வலித்தது. சோஃபாவில் தூங்கியதால் வந்த வினை அது.

 

‘என்னை கழுத்து வலிக்க வெச்சுட்டு எங்கே போயிட்டான் இந்த ரஷ்யாக்காரன்?’ கழுத்தைப் பிடித்துக் கொண்டு அமர,

 

“தைலம் இருக்கு கழுத்துல தேய்ச்சுக்க” என்றவாறு குளியலறையில் இருந்து வந்தான் ராகவேந்திரன்.

 

“ரொம்பத் தான் அக்கறை இருக்கிற மாதிரி நடிப்பு. அவ்ளோ அக்கறை இருந்தா எனக்கு இப்படி ஆகிருக்குமா?” கழுத்தை இடமும் வலமுமாய் அசைத்த வண்ணம் கேட்டாள்.

 

“கட்டில்ல தூங்குனு சொன்னது நான். முடியாதுனு அடம்பிடித்து சோஃபாவில் தூங்கினது நீ. இப்போ எனக்கு அக்கறை இல்லேங்குறியா?” முறைத்துப் பார்த்தான் அவன்.

 

“சரிங்க டாக்டர் சார். உங்களுக்கு அக்கறை சக்கரை எல்லாம் அளவுக்கு அதிகமாகவே இருக்கு போதுமா? நான் எதுவுமே பேசல” தலைக்கு மேலால் கும்பிடு போட்டவள் குளியலறைக்குள் புகுந்து கொள்ள,

 

“பெயருல இருக்கிற தேன், பேச்சுல ஒரு சொட்டும் இல்லை” என்றவாறு வாசலுக்குச் செல்ல, மொத்தக் குடும்பமும் அவனுக்காகக் காத்திருந்தது.

 

“மாமா” என ஓடி வந்த ப்ரீத்தியை அலேக்காக தூக்கி, “மை டியர் ப்ரின்சஸ்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

“மறுவீட்டுக்கு அழைச்சிருக்காங்கள்ல ராகவ். தேனு வந்ததும் நேரத்தோட கிளம்புங்க” என்றவாறு காஃபி பரிமாறினார் மரகதம்.

 

“என்ன அத்தை என்னம்மோ நாலு கிலோமீட்டர் கடந்து போற மாதிரி சொல்லுறீங்க. நாலு எட்டு வெச்சா ராகவ்வுக்கு மாமியார் வீடு. நமக்கும் அப்படி இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்” என மாதவன் பெருமூச்சு விட,

 

“உங்க வீட்டு முன்னாடி இருக்கிற தேவியை கட்டியிருக்கலாம். தேவி வீட்டுக்கு நாலு இல்லை, ரெண்டே எட்டுல தாவி போகலாமே ஐயாவுக்கு”

 

“ஆமால்ல ரேஷு. மிஸ் பண்ணிட்டேன்” என்று மாதவன் கவலைப்பட, “நான் ஒரு பேச்சுக்கு சொன்னா உனக்கு நெஜமாவே ஃபீலிங்ஸ்ஸா? கொன்றுவேன்” விரல் நீட்டி எச்சரித்தாள் ரேஷ்மா.

 

“மாப்பிள்ளையை இப்படியா அவன் இவன்னு பேசுவ?” என மரகதம் முறைக்க, “மன்னிச்சுடும்மா தாயே. இனி உங்க மாப்பிள்ளையை எதுவுமே சொல்லல” என்று சொன்னவள்,

 

அங்கு வந்த தேனுவைக் கண்டு, “தேனு! கோவம் வந்தா நீ ராகவ்வை அவன் இவன்னு பேசுவியா?” என்று கேட்டாள்.

 

‘நான் மைண்ட் வாய்ஸ்ல தான் அப்படி பேசுவேன். அவனோட பேசும் மரியாதையை கடைப்பிடிப்பேன். ஆனா எப்பயாச்சும் கோவத்துல பேசியிருந்ததை இந்த ரஷ்ய பீஸ் போட்டுக் கொடுத்துருச்சா?’ கணவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் தேனு.

 

அவனோ அவளைக் கண்டு கொள்ளாது ப்ரீத்தியோடு அரட்டையடிக்க, “இன்னிக்கு உன் வீட்டுல விருந்து டா. ரெடியாகிட்டு ராகவ் கூட போ” என மரகதம் சொல்ல, “சரிங்கத்தை” தலையாட்டி வைத்தாள் மருமகள்.

 

அவள் அறையினுள் நுழைய, அவன் ஷர்ட்டை எடுத்தான்.

 

“நீங்க வெளியே போங்க. நான் ட்ரெஸ் சேன்ஜ்‌ பண்ணனும்” என்று‌ அவள் பிடவையை எடுத்து கட்டிலில் வைக்க, “நான் முதல்ல வந்தேன். சோ நீ வெளியே போ” என்றான் ராகவ்.

 

“சண்டைக்கு வராதீங்க. ரெண்டாவதா ட்ரெஸ் பண்ணுனா என்ன நடந்துட போகுது?” என அவள் கேட்க, “அதையே தான் நானும் கேட்கிறேன். எனக்கு அப்பறம் உடுத்தா ஒன்னும் குறைஞ்சு போயிடாது” பதிலுக்கு அவன் கூற,

 

“லேடீஸ் ஃபர்ஸ்ட்னு சொல்லுவாங்க மறந்துருச்சா? அதனால நான் தான் ஃபர்ஸ்ட்”  அவளும் மல்லுக்கு நின்றாள்.

 

“எப்போவும் லேடீஸ் ஃபர்ஸ்ட் தான்ல? இன்னிக்கு ஒரு நாளாச்சும் ஆம்பளைங்களுக்கு முதலிடத்தை வாங்கிக் கொடுக்கனும்னு ஆசைப்படுறேன்”

 

“சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடக்குது. இவரு தன் நாட்டுக்கு முதலிடம் வாங்கிக் கொடுக்க போறாரு. சும்மா போங்க டாக்டர் சார்” அவள் நக்கலாக சிரிக்க,

 

“உன் வீட்டுல எல்லாரும் பார்த்துட்டு இருப்பாங்க. சீக்கிரம் போகனும்ல. டக்குனு வெளியே போ”

 

“என்னால போக முடியாது. உங்களை போக சொல்லுறேன்ல. போங்க” அவனை அனுப்ப முயன்றாள்‌ அவள்.

 

“என்னாலயும் போக முடியாது. நீ போ. நான் உடனே சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்” என்றவனுக்கு அவளோடு வாயாடுவதும் சுவாரஸ்யாகத் தோன்றியது.

 

“ஏங்க இப்படி பண்ணுறீங்க?” பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள,

 

“பால் வடியுற பாப்பா மாதிரி மூஞ்சை வெச்சுக்கிட்டாலும் நான் பாவம் பார்க்க மாட்டேன்” என்றுரைத்தாலும், அவளது முகபாவங்கள் அவனைக் கவரத் தான் செய்தன.

 

“விட்டுக் கொடுத்து போகனும்னு தெரியாதா உங்களுக்கு? கணவன் மனைவின்னா ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுப்போட நடந்துக்கனுமாம்” என்று அவள் சொல்ல,

 

அவளை நெருங்கி நின்று “அப்போ நாம புருஷன் பொண்டாட்டினு ஒத்துக்குறியா?” எனக் கேட்டவனது வாசம் அவளைத் தீண்டிச் சென்றது.

 

“ஆமா இதுல என்ன சந்தேகம்? இதோ இருக்கு தாலி” தன் கழுத்தில் தொங்கிய தாலியைக் காட்டினாள்.

 

“நீயே ஒத்துக்கிட்ட. இந்த வார்த்தையை இனிமேல் மறக்கக் கூடாது. பேச்சு மாறவும் கூடாது” என்று அவள் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு சென்றவன்,

 

“நீயே ஃபர்ஸ்ட் ரெடியாகு” என்ற மறுகணம் பச்சக்கென அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

எதிராபாரா முத்தத்தில் அவள் விழிகள் வட்டமாக விரிந்து கொள்ள, “வர்றேன் பொண்டாட்டி” அழுத்தமாக உச்சரித்து, குறும்புப் புன்னகையோடு நகர்ந்தான் நாயகன்.

 

அம்முத்தம் தந்த அதிர்விலிருந்து மீளாது, ஒற்றை விரலால் அவன் இதழ் பட்ட இடத்தை வருடிக் கொண்டாள் நாயகி.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி

2024-11-13

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!