வாடி ராசாத்தி – 7
என்னடி, அதிசயமா வேலைக்கு போகும் போது சுடிதார் போட்டுக்கிட்டு போறே….? எப்போதும் பேண்ட்டும், வெளுத்த கலர்ல ஒரு சட்டையும் தானே போட்டுக்குவே….?” ஆச்சர்யமாக மகளிடம் கேட்டார் வாசுகி.
“நல்லா ட்ரெஸ் பண்ணலைனா தான் வம்புஇழுப்பே, இப்ப தான் பண்ணி இருக்கேன்ல…. என்னமா…. இப்படி பண்றீங்களே மா….?” அம்முவும் கலகலத்தாள்.
“என் வேலை தான் கலர்புல்லா இருக்கணும் நான் இல்லை…. அப்படினு ஒருத்தி சொல்வா, அவளை யாராவது பார்த்தீங்களா….? ஒழுங்கா சொல்லுடி வேலைக்கு தான் போறியா…. இல்லை வேற யாரையாவது பார்க்க போறியா….?”
“ம்ம்…. உன் நாத்தனார் பையனை தான் பார்க்க போறேன்…. சார் தான் சிறப்பு விருந்தினர்….. சீப் கெஸ்ட்….(chief guest ஐ cheap கெஸ்ட்)” என்று கிண்டல் அடித்து கண் சிமிட்டி சிரித்தாள் அம்மு.
“உதை வாங்குவடி, ஒழுங்கா பேசு பார்க்கும் போது….” சொல்லி அனுப்பினார் வாசுகி.
“நீ அவனுக்கு ஏஜென்ட் மாதிரி இருக்க இந்த வீட்டில, அநியாயம் பண்ற மா எங்க அப்பாவுக்கு….” அம்மாவை வம்பு இழுத்தபடி கிளம்பினாள் அம்மு.
அது ஒருவர் பணி ஓய்வு பெற்றதற்காக நடை பெறும் விழா, அதோடு சேர்த்து அதில் அவர் பேத்தியின் நடனமும் இடம் பெற போகிறது. அவர் மருமகள் தான் அம்முவை புகைப்படம் எடுக்க அழைத்திருந்தார். ஓய்வு பெறுபவர் கேபியின் குழுமத்தில் வேலை செய்தவர், அதனால் கேபி, அவனின் தந்தை, இருவரும் சிறப்பு விருந்தினர்.
************
பார்ட்டி ஹாலில் நடைபெறும் அந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவே சென்று கோணங்கங்கள், லைட்டிங் எல்லாம் பார்த்து கொண்டாள் அம்மு. அவளை தவிர வீடியோ எடுக்க இன்னொரு குழுவும் இருந்தனர். அனைவரும் வர ஆரம்பிக்க, வேலையில் மும்முரம் ஆனாள் அம்மு. சரியான நேரத்திற்கு சிறப்பு விருந்தினர் வர, கேமரா கண் வழியே கேபியை கண்டவள், செங்கல் கலரில் சட்டைக்கு பொருத்தமாக சந்தன கலர் பேண்ட்டில் வழக்கம் போல் அம்சவல்லி பேரன் அம்சமா இருக்கான் என்று மெச்சி கொண்டாள். இவளை அங்கே எதிர்பார்க்காதவன், இவளை ஆச்சரியமாக நோக்குவதையும், பின் இவளுக்காக பிரத்யேகமான சிரிப்பையும் சிந்த, அதை அழகாக கேமிராவில் பதிந்து கொண்டாள் அம்மு.
ஒய்வு பெற்றவரின் பேத்தியின் நடன நிகழ்ச்சியுடன் இனிதே தொடங்கிய நிகழ்ச்சி, அவரின் சேவையை பாராட்டி அனைவரும் பேசிய பின் இனிதே நிறைவடைந்தது. இதில் கேபி பேசும் பொழுது, புகைப்படங்கள் எடுப்பவரை போலவே அழகாக வரும் என்று நம்புகிறேன் என்று சேர்த்து சொல்ல, அங்கிருந்த பலருக்கு அவர்களின் உறவு முறை தெரியும் என்பதால், பெரிய சிரிப்பு சத்தம் ஏற்பட்டது. எவ்வளவு முயன்றும் தடுக்க முடியாமல் முகம் சிவந்து விட்டது அம்முவிற்கு.
பின் அனைவரும் உணவருந்த செல்ல, சற்குணம் அம்முவை தேடி வந்தான்.
“என்ன சறுக்கு மரம் நழுவிட்டு வருது இந்தப்பக்கம்?” கேலியாக வரவேற்றாள் அம்மு.
“உன்கிட்ட பேசினாவே, சும்மா போற ஆத்தா வந்து என் மேல ஏறு ஆத்தாங்கிற மாதிரி தான் நீ பேசவேன்னு தெரியாத உங்க மாமா உன்னை பார்க்கணுமாம், கூப்பிடுறார்….” என்றான் சற்குணம்.
“என்னை யா….?” ஆச்சர்யமாக கேட்டாள் அம்மு. இத்தனை வருடத்தில் அவருடன் பேசியதே இல்லை அவள்.
“உன்னை தான்…. வா….” என்று அழைத்து போனான்அவன்.
அப்பாவிற்கு பிடிக்காதே என்று அவள் மனம் பதறினாலும், எதிர்பார்ப்புடன் அங்கே அமர்ந்திருந்த கேபியை பார்த்தவளால் மறுக்க முடியவில்லை. அதனால் உள்ளூர அவனை அர்ச்சித்து கொண்டே சென்றாள். போயும் போயும் இவனை எல்லாம் கணக்கில எடுத்துக்கிட்டு இப்படி அல்லாடுறேனே….லொடுக்கு பாண்டி….
***********
“வாம்மா, நல்லா இருக்கியா….?” வாஞ்சையுடன் கேட்டார் ஞானம். தன் மனைவியின் அச்சு அசலாக இருப்பவளிடம் அவரால் நெகிழாமல் பேசவே முடியவில்லை. சிறு வயதில் அவ்வப்போது அம்முவை கவனித்து இருந்தாலும், வளர்ந்து பின் அவர் பார்க்க வாய்ப்பே இல்லை. இப்போது கண்டவருக்கு அவளுடன் பேசாமல் கிளம்ப மனமே இல்லை.
அப்பா உருகுவதையும் அம்மு ஒட்டாமல் பேசுவதை கண்ட கேபிக்கு பெரிதாக ஆச்சரியம் இல்லை. எதையும் முகத்தில் காண்பித்து கொள்ளாமல் அமைதியாக அவளையே பார்த்து கொண்டு இருந்தான் அவன். பேசி விட்டு ஞானம் இன்னொரு நண்பருடன் செல்ல, அவளின் சில முடிவுகள் நியாபகம் வர,
“அத்தான், என்னை வீட்டில இறக்கி விடுறீங்களா….?” என்றாள் கேபியிடம்.
சில்மிஷம் ஏதோ பிளான் பண்றாளே…. உள்ளுக்குள் உற்சாகம் குமிழிட,
“வீட்டிலே இறக்கி விடலாமா….? இல்லை உங்க அப்பாவுக்கு தெரியாம தெரு முனையில் இறக்கி விடணுமா….?” என்றான் நக்கல் சிரிப்புடன்.
“இதுக்கு தான் அமைதியா வந்தியா….?” சற்குணம் அவள் ஞானவேலிடம் பேச வந்ததை கிண்டல் அடிக்க,
“இப்போ எதுக்கு இந்த பல்லி கத்துது அத்தான்….?” அம்மு நக்கல் அடிக்க,
“டேய், சொல்லி வைடா இந்த பூச்சிகிட்ட, இல்லைனா சாப்பிட்ருவேன்….”
சற்குணம் டென்ஷன் ஆக,
அட, கொஞ்சம் பல்லியும் பூச்சியும் அமைதி ஆகுங்க என்ற கேபி, வா போலாம் என்று அவளை அழைத்து கொண்டு கிளம்பினான். போகும் வழியில், ஒரு இடத்தில் காரை நிறுத்தி,
“யார் மேடம் நீங்க….?” என்றான் அம்முவிடம்.
“ஏன்….? இப்போ எதுக்கு இப்படி கேட்குறீங்க….?”
“புது வெர்ஷனா இருக்கியே…. எப்போதும் என்னை வெட்டவா குத்தவான்னு தானே பார்ப்பே…. பேசுவே…. ஏதோ சரியில்லை….ம்ம்ம்….கண்டுபிடிக்கிறேன்….”
“உங்களுக்கு என்னை பத்தி எல்லாம் தெரியுமோ….? நீங்க நல்லா பேசினா நானும் நல்லா பேசுவேன்…. எப்போதும் என்னை சீண்டுவீங்க, சோ நான் சண்டை போடுவேன்….”
“செல்லம், நான் உன் அத்தான் டி…. இன்னும் பிரச்சனையே முழுசா ஆரம்பிக்கலை, அதுக்குள்ள அதை சரி பண்ண பார்க்கிறியே….” சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான் கேபி.
“ஹான்…. அப்படியா, நான் மறந்துட்டேன் நீங்க யாருன்னு….!” அவனின் புரிதலில் கொஞ்சம் மிரண்டாலும் சமாளித்து கொண்டாள் அம்மு.
“இப்படி எல்லாம் பேசினா, நீ என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆய்டுவியா….? எப்படியும் என்கிட்ட தான் வரணும் சில்மிஷம்….”
“நீங்களும் உங்க இஷ்டத்துக்கு இந்த விஷயத்தில தீர்ப்பு சொல்லாதீங்க…. வேற மாதிரி மாத்தி நடந்தா இந்த சிங்கத்துக்கு அசிங்கமாய்ட போகுது….” நக்கல் அடித்தாள் அம்மு.
“இந்த ஊருக்கே தெரியும்டி என்ன நடக்க போகுதுன்னு…. என் மாமனுக்கும் அவர் பெத்த ரத்தினத்துக்கும் தான் தெரியலை….”
“உங்கப் பெரியம்மாவுக்கு தெரியுமா?”
“நடக்கிற அப்போ தெரிஞ்சுக்குவாங்க….!” எந்த கவலையும்யின்றி சொன்னான் கேபி.
“நல்லா யோசிங்க, எதுக்கு இந்த வம்பு, வழக்கு எல்லாம்….? உங்களுக்கு வேணா சுவாரஸ்யமா இருக்கும்…. ஆனா எனக்கு இதெல்லாம் வேண்டாம்…. எந்த விஷயமும் கை மீறி போறது எனக்கு பிடிக்காது….” என்றாள் அம்மு நிதானமாக.
“இந்த விஷயத்தை பத்தி எந்த டிஸ்கஷனுக்கும் நான் தயாரில்லை…. இதுக்கு முடிவு மட்டும் தான் எனக்கு தெரியும்!” பிடிவாதமாக சொன்னான் கேபி.
“சரி நீங்க இவ்ளோ பிடிவாதம் பிடிச்சா, நானும் சொல்றேன், கண்டிப்பா எங்க அப்பாவை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்…. என் மேல சத்தியம்….” என்றாள் சட்டென்று மூண்ட கோபத்தில் உணர்வசப்பட்டு.
ஒரு நிமிடம் அவளை, உற்று நோக்கியவன்,
“உங்க அப்பா சம்மதித்து தான் எல்லாம் நடக்கும்!” என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.
“எதுக்கு இவ்ளோ போராட்டம்….? அப்படி என்ன….?” அம்மு ஆரம்பிக்க,
“ஒரு விஷயத்தை பத்தி தெரியாமலே வேண்டாம் வேண்டாம் சொல்றியே…. நியாயமா டி….? தெரிஞ்சுகிட்டு அப்புறம் பேசு….” என்றவன், அவள் பக்கம் நகர்ந்து, அவளை தன்னிடம் நெருக்கமாக இழுத்து அவள் இதழ்களை பற்றினான்.
அவன் ஏதோ பேச போகிறான் என்று எதிர்பார்த்தாளே தவிர இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அம்மு. திகைத்து, தடுமாறினாலும் அவனிடம் இருந்து விடுபட முடியவில்லை அவளால். விட்டேனா பார் உன்னை என்று அவனுள் அவளை இழுத்து அடக்கினான் கேபி.
அவன் காதலை தெரிந்து கொள்ளட்டும், அவளை எவ்வளவு விரும்புகிறான் என்று புரியட்டும் என்று அவளை தன் கரங்களில் அள்ளி கொஞ்ச, அவனின் தேடலில் மிரண்டு போனாள் அம்மு. மிரண்டவள், விலக துடிக்க, அவளின் நிலை புரிய அவளை விட்டு தள்ளி அமர்ந்தான் கேபி.
“சே! நீங்க இவ்ளோ தானா….? இந்த வழியை பயன்படுத்தி நினைச்சத்தை சாதிக்க பார்க்கிறீங்க….” அம்மு ஆத்திரத்தில் பொரிய தொடங்க,
“இதை வேற மாதிரி நல்ல விதமா உன்னால யோசிக்க முடியலையா….?” நிதானமாகவே கேட்டான் கேபி.
“உங்க கிட்ட நல்ல விதமாவா? எப்படி….? சின்ன வயசுல இருந்தே நீங்க என்னை பொருட்படுத்தினதே இல்லை பெரிசா…. எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கு, வாய் மட்டும் இவ்ளோ பேசுற செயல்ல ஒன்னும் இல்லையா சொல்லி இருக்கீங்க நிறைய தடவை…. அப்படிப்பட்டவர் என்னை லவ் பண்றார்னு நினைக்கவா….?” ஆத்திரமாகி அவள் பேச,
“அப்பறம் உனக்கு கூஜா தூக்கணுமா…. நீயே தான் எல்லாம் செஞ்சுக்கணும்….! உண்மையிலேயே வாய் அதிகம் தானே உனக்கு…. அப்போ உன்னை நீ தான் பார்த்துக்கணும்…. எதுக்கு இன்னொருத்தர் தயவு….?” என்றான் இப்போவும் அதையே வலியுறுத்தி எதையும் சமாளிக்காமல்.
“இப்படிப்பட்ட ஒருத்தர் எனக்கு வேண்டாம்…. உங்க எண்ணத்தை நீங்களே வைச்சுக்கோங்க…. நான் என் வழியில போறேன்….”
“உங்க அப்பா வழியிலனு சொல்லு….”
“ஆமா, எங்க அப்பா வழியில…. அதை பத்தி உங்களுக்கு என்ன….?”
“கரெக்ட் பண்ணேன் மா…. எனக்கு என்ன….? அவரே தான் நம்ம கல்யாணத்தை நடத்தி வைக்க போறார்….” சிரிப்பை அடக்கி கொண்டு சொன்னான்.
“நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க…. ஐ டோன்ட் கேர்…. என்னை வீட்டில விடுங்க பர்ஸ்ட்….” அம்மு கிறீச்சிட,
“இப்போ என் மனசில் நீ ரொம்ப க்யூட்டா இருக்கேன்னு தாண்டி தோணுது…. கத்தாதே வீட்டுக்கு போலாம்….” என்றான் கூல் மன்னனாக.
வீடு வந்து விட, ஒழித்து மறைத்து அவனிடம் விளையாடி அவனின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட நினைத்தவள், இப்போது நேரடியாகவே,
“இந்த கல்யாணம் நடக்காது…. நீங்க எப்படி முயற்சி பண்ணாலும் நான் அதை முறியடிப்பேன்…. “என்றாள் உறுதியாக.
“ட்ரை பண்ணு, சிலநேரம் கெட்டதா சிலது பண்ணா தான் நல்லது நடக்கும், இது நான் பிசினஸ்ல கத்துகிட்ட பாடம்…. உனக்கும் புரியும்….” என்றபடி கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் கிளம்பினான் கேபி.
சே! எந்த பக்கம் பால் போட்டாலும் ஸ்கோர் பண்ணிருவான் போலையே, விட கூடாது, இவனை ஜெயிக்க விடவே கூடாது…. அப்பா மனசு வருத்தப்படக் கூடாது…. தீவிரமாக சிந்தித்தாள் அம்மு!
அதே நேரம், மகனும் அம்முவும் தனியே செல்வதை கண்ட ஞானவேல் மிகுந்த யோசனைக்கு உள்ளானார். மகனிற்கு அப்படி ஒரு ஆசை இருந்தால்….? கொஞ்சம் சங்கடம் கூட வந்தது அவருக்கு! செல்வராஜின் ஒதுக்கம், வருத்தம் அனைத்தும் அவர் கண் முன் வந்தது. கூடவே அம்ரிதவல்லியின் நியாபகமும். எவ்வளவு மென்மையானவள் அவள்! எப்படி தான் அவளுக்கு மனது வந்ததோ சாவதற்கு….? அதுவும் வயிற்றில் நான்கு மாத கருவுடன்…. இன்றும் அவர் நெஞ்சம் ஆறவில்லை …. இருவரும் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எவ்வளவு எதிர்பார்த்து இருந்தார்கள். அதுவும் அம்ரிதவல்லி போலவே வேண்டும் என்று என்றல்லவா இருந்தார் ஞானம். அதில் தான் இன்று அம்முவை கண்டதும் அவர் மனம் நெகிழ்ந்து விட்டது. மகனிடம் பேச வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
இவரை போலவே கேபியையும்,அம்முவையும் கவனித்த இன்னொரு ஆள் கிஷோரின் நண்பன். கவனித்ததை உடனே நண்பனிடம் தெரிவித்து விட்டான் அவன்.
“உடனே என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன் டா நான்…. அமிர்தா எனக்கு தான்…. அம்ரிதா….!” பல்லை கடித்து தன் உணர்வுகளை அடக்கியபடி அவள் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்தான் கிஷோர்.