💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 70
நிச்சயதார்த்த மாலையைக் கையில் வைத்துக் கொண்டு அறையில் நின்றிருந்த வினிதாவுக்கு உலகம் நின்று விட்டால் என்ன என்று தோன்றியது.
தேவன்!
அவளின் இதயம் கொய்த தேவதூதன் அல்லவா அவன்? உள்ளம் பறி கொடுத்த நாள் முதல், அவனுடன் வாழ்வதற்காக எத்தனை எத்தனை கனவுகள் கண்டிருப்பாள்?
“நம்ம நிச்சயதார்த்தம் நடக்கும் போது, அதுக்கு முந்தைய நாள் உன்னைப் பார்க்க வருவேன் வினி. உன் கூட ஸ்பெஷலா ஒரு மணி நேரமாவது செலவழிச்சிட்டு போவேன்” காதலில் கரைந்த பொழுதுகளில், இந்த வாசகத்தை சில வேளைகளில் கூறுவான் தேவன்.
“ஏன் ஏன்? உனக்கு ஏன் அப்படியொரு ஆசை?” கையில் நாடி குற்றிக் கேட்டதற்கு, “தெரியல டி. அது எனக்கு இருக்கிற ஒருவகை ஆசை. உன்னை மூச்சு முட்டுற அளவு இறுக்கி அணைச்சு விடுவேன்” அவளின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வான்.
அதை நினைக்கும் போது, கண்ணீர்ச் சுரப்பிகள் அசுர வேகத்தில் தம் பணியைச் செய்யலாயின. மடியில் முகம் புதைத்து அழுதவளுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லை.
அவளின் தோள் தொட்ட கரத்தினைப் பார்த்தவளுக்கோ கண்கள் அகன்று விரிய, “தேவ்வ்வ்” கேவலுடன் அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் வினிதா.
“அழாத வினி. நான் தான் வந்துட்டேன்ல? இதோ பார் வினி” அவளது முதுகை ஆதுரமாக வருடிக் கொடுத்தான்.
“அவங்க கிட்ட முடியாதுனு சொன்னேன் தேவ். நா..நான் உன்னை லவ் பண்ணுறது தெரிஞ்சும் ஏன்டா இப்படி பண்ணுறாங்க. நான் சந்தோஷமா இருக்கனும்னா நீ வேணும்னு சொன்னேன். அப்போவும் எனக்கு அஷோக்கையே கல்யாணம் பண்ணிக்க சொல்லுறாங்க. நான் என்ன டா பண்ணுவேன்?” அழுகையினூடே தனது நிலமையை எடுத்துச் சொன்னாள்.
“பிள்ளைங்க சந்தோஷத்தை விட அவங்களுக்கு என்ன வேணுமாம் வினி?”
“எனக்கும் அஷுவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க அவங்க வீட்டுல கேட்டு வந்தாங்க. நல்ல சம்பந்தம்னு விட முடியாதுனு நான் மறுத்தும் நிச்சயதார்த்த நாள் குறிச்சிட்டாங்க. வீட்டை விட்டுப் போற முடிவெடுத்தா அப்பாவுக்கு நஞ்சைத் தந்துட்டு போக சொல்லுறார்.
அவருக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை. ஏதாவது ஆகிடுச்சுனா அதுக்கு நானே காரணம்னு முத்திரை குத்திடுவாங்க. அப்பறம் நான் வாழவும் முடியாம குற்றவுணர்ச்சியிலே சாக வேண்டி வரும். அதான் இப்படி இருக்கேன். எனக்கு ஒன்னுமே புரியல தேவ்” அவள் அழுது கொண்டிருக்க,
“உன் நிலமை புரியுது டி. நாம என்ன செய்ய முடியும்? அவரை எதிர்த்து உன்னைக் கூட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன். இப்போ நீ சொன்னதைக் கேட்டு மனசு மாறிடுச்சு. என்ன இருந்தாலும் அவர் உன் அப்பா. அவரை இப்படியொரு நிலமைக்குத் தள்ள நான் விரும்பல” என்றவாறு அவளது தலையைத் தடவினான்.
“என்னை என்ன பண்ணச் சொல்லுற?”
கண்களை மூடித் திறந்தவனோ “போ வினி! ஹாலுக்கு போ. என்ன நடக்குதுனு பார்ப்போம். நிச்சயம் பண்ணுனாலும் நம்ம உறவைப் பிரிக்க முடியாது” என்க, அவள் மறுப்பாகத் தலையசைத்தாள்.
“அப்படினா என் கூட வா. உன்னை நான் நல்லா வெச்சு பார்த்துப்பேன். என் கூட சந்தோஷமா வாழலாம். என் பொண்டாட்டியா வருவியா வினி?” அவனின் ஏக்கத்தோடு கூடிய குரலில் அவளுள்ளும் ஏக்கம் படர்ந்தது.
“அது முடியும்னா நான் எப்போவோ வந்திருப்பேன் தேவ். முடியாததால தான் இப்படி இருக்கேன். இவ்ளோ கஷ்டத்தை அனுபவிக்கவும் தேவை இருக்காது” அவள் விரக்தியுடன் கூற,
“அதான் சொல்லுறேன் வினி. இதைப் பண்ண முடியாதுன்னா நீ போய் தான் ஆகனும். என்ன நடந்தாலும் நான் உன் கூட இருப்பேன். எப்போ வேணா கூப்பிடு, உனக்காக நான் வருவேன்” அவனின் வார்த்தைகளில் உறுதி தெரிந்தது.
“உன்னை விட்டு எப்படி டா?” காதல் கொண்ட இதயம் தீயில் விழுந்து துடிக்க, “பண்ணி தான் ஆகனும். வேற வழி இல்லையே. எனக்கும் கஷ்டமா இருக்கு. உன்னை இப்படி அனுப்ப முடியல வினி” என்றவன் அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டான்.
“எனக்கு நீ வேணும் தேவ்! உன் கூட நான் வாழனும். உன்னை விட்டுப் போகனும்னு நான் நெனச்சதே இல்ல. இவங்களுக்கு நான் உன் கூட சேர்றது பிடிக்கல டா. என்னை உன் கிட்டிருந்து விலக்க பார்க்கிறாங்க.
நீ எனக்குள்ள மொத்தமா கலந்துட்ட. உன்னை விட்டு என்னால வாழ முடியாதுன்னு அவங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது? என் ஃப்ரெண்ட்ஸ்லாம் லவ் பண்ணுன உடனே வீட்டுல ஓகே பண்ணி, சிலருக்கு கல்யாணம் கூட ஆகிடுச்சு. ஆனால் என் நிலமையைப் பார்த்தியா?” விம்மலுடன் மொழிந்தாள் மாது.
“எல்லாருக்கும் ஒரு காலம் வரும் வினி. அந்த டைம் வரும் போது எல்லாம் நல்லதாகவே நடக்கும். அது எப்போனு தான் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமா உனக்கான சந்தோஷம் உன்னைத் தேடி வரும். அழாம போயிட்டு வா. எது நடந்தாலும் அழக் கூடாது. என்னை மீறி எதுவும் நடக்காது. நம்பி போ” அவளின் கையைப் பற்றிப் பிடிக்க,
“ஓகே தேவ்” என்றவளோ அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு சென்றாள்.
அவளை வலிந்த மிகுந்த பார்வையால் வருடி விட்டு, யன்னல் வழியே திரும்பிச் சென்ற தேவனுக்கு உள்ளமெல்லாம் அவனவள் நினைவுகள்.
………………..
தலையில் கை வைத்து அமர்ந்திருந்த மகிஷாவுக்கு மாலை மங்கும் நேரம் கூட, காரிருள் சூழ்ந்து கொண்டதாகத் தோன்றியது.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே! கண்ணுக்கே அப்படி என்றால், இருண்டு போயிருந்த அவளின் உள்ளத்தால் பார்க்கையில் அவளுக்கு எது தான் ஒளியாய்த் தோன்றும்?
“ரூபன்! சாரி ரூபன். என் கூட பேசுங்க ப்ளீஸ்” உள்ளுக்குள் கதறினாளே அன்றி அவளின் கவலை விலகவில்லை.
ரூபன் எனும் ஒளியின்றி அவளது உள்ளமும் வாழ்வும் பாழடைந்து, கும்மிருட்டில் ஆழ்ந்தது போல் இருந்தது. அவன் சென்று இத்தோடு மூன்று நாட்களாகி விட்டன. ஒரு முறை கூட அழைத்துப் பேசவில்லை.
அவளும் அழைக்கவில்லை. பேச வேண்டும், பேசித் தீர்க்க வேண்டும். தன்னுள்ளத்தின் ஏக்கங்களைக் கொட்டி விட வேண்டும் என்று உள்ளம் தவித்தாலும், அதைச் செய்யாமல் வீம்புக்கு என்று நின்றாள் மகி.
“காதல்னா மட்டும் தான் பேசுவானா? காதல் வேண்டாம்னா என்னைத் தூக்கி உதறிடுவானா?” ஆங்காரமாகக் கேட்ட மனதுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருந்தது மூளை.
கையில் அலைபேசியை வைத்துக் கொண்டிருந்தவளது கண்கள் ரூபனை நோக்கின. டாக்டர் கோர்ட்டை ஒற்றைக் கையால் பிடித்து, மறு கையைப் பின்னந்தலையில் வைத்து பல்வரிசை பளிச்சிட நின்றிருந்தான் அவன்.
🎶 எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீ தானே..
கண்ணா எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே
நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே 🎶
அடுத்த வீட்டு வானொலியில் ஒலித்த பாடல் வரிகள் அவளது செவி தொட்டு, அடிமனது வரை ஊடுறுவித் தாக்கின.
ஒருபக்கம் நீண்ட தூரம் சென்றது போல் தான் இருந்தது. இன்னொரு பக்கமோ நினைவுகளின் ஆட்சி அவளை அவனோடு நெருங்க வைப்பது போன்ற உணர்வைக் கொடுத்தன.
என்ன செய்வதென்று தெரியவில்லை அவளுக்கு. காதல் உள்ளதே அவளுள்ளும்? இருந்தும் அதை மறைத்துக் கொள்ளப் போராடுகிறாள். காதலை மறைக்க முடியாமல், மறக்க முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடிப் போனாள் பேதை.
“ஒரு வார்த்தை பேச மாட்டீங்களா? அந்தளவுக்கு என் மேல கோபமா? மகி மகினு சொல்லிட்டு எப்படி ஒரேயடியா மகிஷானு சொன்னீங்க. என்னை காயப்படுத்தவே சொன்னீங்கள்ல? லவ்வை அக்சப்ட் பண்ணலனா இப்படி தான் பண்ணுவீங்களா?” என்று அவள் புலம்ப,
“லவ்வ அக்சப்ட் பண்ணிக்கலனா கூட விட்டிருப்பேன். உன் பின்னாடியே சுத்தி சுத்தி வந்து ப்ரபோஸ் பண்ணி இருப்பேன். என்னால முடிஞ்சளவு போராடி உன் பயத்தைப் போக்கி இருப்பேன். ஆனால் நீ என் காதலை கொச்சைப்படுத்திட்ட.
தொட்டா உருகுவேன்னு நெனச்சு தொட்டதா சொல்லிட்டல்ல. என் மேல நீ வெச்சிருந்த நம்பிக்கை அவ்வளவு தானா? என் மீதான உன் எண்ணம் ஏன் அவ்ளோ ச்சீப்பா போச்சு? அதை என்னால ஏத்துக்கவே முடியாது மகி” என்றவாறு தனது கேபினில் அமர்ந்திருந்தான் ரூபன்.
சிந்தனைகளின் கனம் தாங்க இயலாமல் அவனுக்கு தலை வலித்தது. முன்பெல்லாம் அவ்வளவு ஜாலியாக இருப்பவன் அவன். காணும் பெண்களை சைட்டடித்து, நர்ஸ்மாருடன் வம்பிழுத்து, லூட்டி அடித்துக் கொண்டிருந்தவளின் வாழ்க்கை வட்டம் மகிஷா மீதான காதலின் பின்னர் தலைகீழாகிப் போனது.
வேலை எங்கே முடியும் என்று பார்த்துக் கொண்டிருப்பவன், குறித்த நேரம் வந்ததும் கூண்டிலிருந்து விடுபட்ட பறவை போல் சிறகு விரித்துப் பறந்து விடுவான்.
யுகியோடு விளையாடி, மேகலையுடன் செல்லம் கொஞ்சி, தேவனுடன் கதையளந்து விட்டு சாப்பாட்டு முடிப்பவன் அடுத்து அலைபேசிக்குள் தஞ்சும் புகுந்திடுவான், தன் அழைப்பிற்காகக் காத்திருக்கும் அன்புப் பெண்ணுடன் உரையாட.
இன்றும் பேச வேண்டும் போல் மனம் தவியாய்த் தவித்தது. வீடு சென்றால் அவளின் நினைவுகள் ஆட்டிப் படைக்கும் என்று எண்ணி தனது கேபினில் காலம் கழிக்கலானான்.
“மகி…!! ஒரே ஒரு கால் பண்ணுனியா டி? என்னை ஏன் இப்படி தவிக்க விடுற? வந்துடு மகி. முடியல டி. லவ் யூ மகி. மிஸ் யூ சோ மச்” அவளுடன் மானசீகமாக உரையாடினான்.
அவளின் புகைப்படத்தைப் பார்த்தவனுக்கோ அவளுடன் மகிழ்வாகக் கழித்த நேரங்கள் நினைவு மேடையில் நர்த்தனம் புரியத் துவங்கின.
கோபம் கொள்ளும் போது “ரூபீஈஈஈ” என்று கடுப்புடன் சொல்வது அவன் செவியில் இப்போதும் எதிரொலி செய்தது.
அவளின் குறும்புச் சிரிப்பும், கோபமும் பித்துப் பிடிக்க வைத்தன.
“அன்னிக்கு ஒரு நாள் நான் பேசலனு எவ்ளோ கோபப்பட்ட. சண்டை போட்ட. இப்போ வந்து பேச மாட்டியா? என் கூட பேசுனு சொல்ல மாட்டியா? உன் குரல் கேட்காம இருக்க முடியலடி. எத்தனை நாளைக்கு தான் இந்த தண்டனை? என் காதலும், உன் காதலும் என்னிக்கு ஒன்னு சேரும்?” என்று பரிதவிப்புடன் கேட்டான்.
காதல் சேரும் என்பதில் அத்தனை நம்பிக்கை அவனுக்கு. ஆனால் அது எப்போது நிகழும்? அதுவரை எப்படித் தாங்குவது? பிரிவின் தாகம் தீரும் நாள் எது? என்ற கேள்விகள் அவனைச் சுழற்றியடித்தன.
“என் காதலை ஏத்துக்கிட்டு, எனக்காக நீ வரனும் மகி. உன் எண்ணங்களை ஒதுக்கிட்டு, பயத்தை ஒழிச்சிட்டு என் காதலுக்காக அத்தனையையும் உதறித் தள்ளிட்டு வரனும். என் மகியா நீ எப்போ வருவ?” அவளின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் காதலன்.
தொடரும்……..!!
ஷம்லா பஸ்லி