💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 71
குட்டி போட்ட பூனை போல் நடை பயின்று கொண்டிருந்தான் சத்யா. அவனது விழிகள் தன் தேடலுக்குக் காரணமானவனைக் கண்டு கொண்டன.
“எதுக்கு கூப்பிட்ட?” எனக் கேட்டவாறு வந்தான் தேவன்.
அவன் முகத்தில் உயிர்ப்பில்லை. மனதில் மகிழ்வில்லை. வினிதாவின் எண்ணத்தில் இருந்தவன், சத்யாவின் அழைப்பில் இங்கு வந்தான்.
“தனு உன் கிட்ட பேசனும்னு சொன்னா” என்று அவன் சொல்ல, “அவ எதுக்கு என் கிட்ட பேசனும்?” அவன் முகம் கோபச் சாயம் பூசிக் கொள்ளலானது.
“எனக்கு தெரியாது. உன் கூட பேசனும்னு சொன்னா. அதான் ஃபோன் தரலாம்னு வந்தேன்” என்றவன் அலைபேசியை நீட்ட,
“எனக்கு வேண்டாம். என்னால பேச முடியாது” உதட்டைச் சுளித்துத் கொண்டான் தேவன்.
“அவ கிட்ட ஏன் இப்படி நடந்துக்கிற?” என சத்யா கேட்க, அந்நேரத்தில் தேவனுக்கு தன்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. புருவம் சுருக்கிப் பார்த்தவன் சத்யாவை நோக்க, “என்னை எதுக்கு பார்க்குற? உனக்கு தானே எடுக்கிறா. பேசு” என்றான் அவன்.
அழைப்பை ஏற்றவன், “என்ன விஷயம்?” முகத்தில் அடித்தாற் போல் வினவினான்.
தன்யாவுக்கு முகம் கூம்பிப் போயிற்று. அதைக் கண்ணுற்ற சத்யா, “தனு! ஏதாச்சும் பிரச்சினையாம்மா?” என்று கேட்க,
“ஏய்! கால் பண்ணுனா முதல்ல விஷயத்தைச் சொல்லு. மூஞ்சைத் தூக்கி உன் பாசக்கார அண்ணனை சென்டிமண்ட் மழை பொழிய வெச்சிடாத” கடுப்பாகக் கூறினான் தேவன்.
“கொஞ்சம் மெதுவா தான் பேசேன் டா. எதுக்கு எப்போவும் எரிஞ்சு எரிஞ்சு விழுற?” என்று சத்யா எகிற, “அண்ணா! நீங்க கோபப்படாதீங்க. நான் பேசுறேன்” அவனை அமைதிப்படுத்தாள் தன்யா.
“என்ன வேணும் உனக்கு?”
“அசைமண்ட் செய்ய கொஞ்சம் டீடேல்ஸ் தேவைப்படுது. உங்க ஃப்ரெண்ட் அவினாஷ் கிட்ட பேசனும். அவர் நம்பர் வேணும். தர முடியுமா?” என்று கேட்க, “ஓகே” ஒற்றை வார்த்தையில் சொன்னான்.
“தாங்க் யூ அண்ணா” அவள் அன்புடன் சொல்ல, “ஏய்! இந்த அண்ணா நொண்ணா சொல்லுற வேலையை சத்யா கூட வெச்சுக்க. என் கிட்ட சொன்னே அவ்வளவு தான்” முறைப்புடன் சொன்னான் தேவன்.
“தேவாஆஆ” சத்யா கோபம் கொள்ள, “நான் தேவாண்ணா கூட பேசிக்கிறேன். நீங்க கோபப்படாதீங்க அண்ணா” தன்யா சொன்னதும் வெகுண்டு எழுந்து,
“ச்சீ நிறுத்து டி. என் அண்ணன் கிட்ட கோபப்படாதனு நீ சொல்லுவியா? அவன் என் மேல கோபப்பட நீ தான் காரணம். எனக்கும் அவனுக்குமான உறவில் விரிசல் வர மொத்த காரணமும் நீ ஒருத்தி தான். நீ எப்போ வந்தியோ அப்போவே சத்யாவுக்கும் எனக்கும் சண்டை. முன்னெல்லாம் எப்படி இருந்தவங்க நாங்க. எல்லாம் உன்னால தான்” இருந்த மன அழுத்தத்தில் கோபமாகக் கத்தி விட்டு அழைப்பைத் துண்டித்தான் தேவன்.
அதிர்ந்து நின்ற சத்யா, தம்பியின் தோள் தொட்டு “தேவா” என்று அழைக்க,
“என்ன? என்ன வேணும் உனக்கு? உனக்கு என்னை விட எங்கேயோ இருந்து வந்த அவ தான் முக்கியமா போயிட்டாள்ல? என்னை எதுக்கு கூப்பிடுற? அவ கூடவே உறவு கொண்டாடிக்க” அவனது கையை உதறித் தள்ளினான்.
“சொல்லுறத புரிஞ்சுக்கோயேன். அவளுக்கு நம்மளை விட்டா யாரு இருக்கா? வாக்கு கொடுத்திருக்கேன், அவளைப் பார்த்துக்குவேன்னு. வேற எதுவும் செய்ய முடியாது டா”
“வாக்குக்காக மட்டும் நீ இப்படி பண்ணல. உனக்கு அவ மேல பாசம். என்னை விட அவ முக்கியமாகிட்டா. அவ முன்னாடி என்னை அசிங்கப்படுத்துறதே வேலையாப் போச்சுல்ல உனக்கு?” தாங்க முடியாமல் உரைத்தான் தேவன்.
“நான் எப்போவும் போல தான் இருக்கேன். தனு கிட்ட காட்டுற பாசத்தை வெச்சு உன்னை விட்டு தூரமாகி போறேன்னு நெனக்கிறது நீ தான். நீயா ஒன்னு நெனச்சுக்கிட்டா நான் அதுக்கு பொறுப்பாக முடியாது” தோளைக் குலுக்கியவனுக்கு இதற்கு மேல் எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை.
“பார்த்தியா உனக்கு அவ்ளோ தான் நான். பொறுப்பாக முடியாதுன்னு அலட்சியமா சொல்லுற அளவுக்கு நான் கேவலமா போயிட்டேன்ல? அவ வந்து உன் கிட்ட அண்ணன்னு உரிமை கொண்டாடுறா. நீயும் பாசத்தைக் கொட்டுற. அவ முன்னால என்னைத் திட்டி யாரோ மாதிரி ட்ரீட் பண்ணுறது என்னை எவ்ளோ ஹர்ட் பண்ணுது தெரியுமா?” என்றும் இப்படிப் பேசுபவன் அல்ல அவன்.
இன்று, வினிதா வீட்டில் என்ன நடக்கிறதோ என்ற அச்சம் சூழ்ந்து கொண்டதில் தன் உளக்கிடக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தான் உடன் பிறந்தவன்.
“உன் கிட்ட என்ன சொல்லுறதுன்னு தெரியல டா. தப்பு தப்பாவே யோசிச்சிட்டு இருக்க. உன் கிட்ட எதை சொன்னாலும் ஆப்பசிட்டா பார்க்கிற. போடா” அங்கிருந்து வந்த சத்யா, ஜனனியைக் கண்டு அப்படியே நின்றான்.
“எங்க போறீங்க?” அவள் புருவம் உயர்த்த, “பேசின எல்லாம் கேட்டிருப்ப தானே? பார்த்தியா அவனை. புரிஞ்சுக்காம பேசிட்டிருக்கான்” இயலாமையுடன் வந்தது அவன் குரல்.
“நீங்க புரிய வெச்சீங்களா?” அவள் கூர்மையாகக் கேட்ட கேள்வியில் அவனிதயம் தடுமாற்றம் கொண்டது.
“இல்லல்ல? ஒருத்தர் புரிஞ்சுக்கலனா நாம புரிய வைக்கனும். வேற யாரும் இல்ல, உங்க தம்பி தானே? அவர் கிட்ட இறங்கி போய் பேசுறதுல எதுவும் குறைஞ்சு போயிடாது.
அவர் புரிஞ்சுக்கலனா பக்கத்தில் போய் தலையை தடவி, மெதுவா எடுத்து சொல்லுங்க. அவர் இல்லனு சொல்லுற பாசம் உங்களுக்குள்ள இருக்குனு காட்டுங்க. அதை விட்டுட்டு கோவிச்சுக்கிட்டு போனா, அது புரியும்னு நெனக்கிறீங்களா? விரிசலும் விலகலும் தான் அதிகரிக்கும்” அவள் சொன்னதை ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டான் சத்ய ஜீவா.
“நீ சொல்லுறது சரி தான். இருந்தாலும் மறுபடி போனா அவன் கோபப்படுவானே” இழுவையாகச் சொல்ல,
“கோபப்பட்டா பட்டுட்டு போகட்டும். உங்க கூடப் பிறந்தவர் இல்லையா? விட்டுக் கொடுத்து போங்க. இதையே யுகி பண்ணி இருந்தா இப்படி விலகி வந்து இருப்பீங்களா?” என்று கேட்டாள் ஜனனி.
அவளின் வினா, சத்யாவின் உள்ளத்தை கத்தி முனையாக பதம் பார்த்தது. இதுவே யுகன் அவன் மீது பாசம் இல்லை என்று சொன்னால் என்ன செய்திருப்பான்?
‘அப்படி இல்ல கண்ணா! டாடிக்கு உன் மேல பாசம் இருக்கு. இல்லாமலா உன் கிட்ட வந்து பேசுறேன்? உன் கூட பேசாம என்னால இருக்க முடியாது. நீ இப்படி சொல்லுறது என்னைக் கஷ்டப்படுத்துது டா. என் அன்பை நம்பு’ என அவனிடம் இறைஞ்சி இருப்பான்.
மகனுக்கு அப்படி செய்யும் தன்னால் தம்பிக்கு செய்ய முடியாதா? தேவனும் அவனுக்கு மகன் போலத் தானே? தோளுக்கு மேல் வளர்ந்தாலும், தந்தைக்குப் பின்னால் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தது அவன் தான்.
‘உங்களுக்கு இனிமே நான் தான் அப்பா. அவர் ஸ்தானத்தில் இருந்து நான் பார்த்துப்பேன். எது வேணும்னாலும் என் கிட்ட தயங்காம கேட்கனும் சரியா?’ அன்றொரு நாள், அவன் சொன்னதைக் கேட்டு நெகிழ்வோடு கட்டிக் கொண்ட இரு தம்பிகளையும் நினைவு கூர்ந்தான்.
உடனடியாக தேவனிடம் சென்றவன், “தேவா” என்றழைக்க, “என்ன?” கோபமாகத் தான் கேட்டான் அவன்.
“சாரி தேவா! என்னை மன்னிப்பியா?” கமறும் குரலில் அவன் கேட்க, “எ..என்னாச்சு? ஏன் சாரி கேட்கிற?” பதறிப் போனான் தேவன்.
“நான் சொன்ன சொல் தவறிட்டேன். உன்னை அப்பா ஸ்தானத்தில் இருந்து பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு உன்னை அம்போனு விட்டுட்டேன். உன்னை பத்தில்லாம் நான் யோசிக்கவே இல்ல. தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிரு டா” அவனது கையைப் பிடித்துக் கொண்டான் சத்யா.
“அண்ணா! இப்படி கேட்டு என்னை குற்றவாளியா ஃபீல் பண்ண வைக்காத. நீ எந்த தப்பும் பண்ணல. எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்துருச்சு. உனக்கே எத்தனையோ பிரச்சினை. இதுல என்னைப் பார்க்கலனு நான் குற்றம் சாட்ட மாட்டேன். நீ தன்யாக்காக என்னை திட்டுறது மட்டும் தான் பிடிக்கலயே தவிர, வேறெந்த கோபமும் உன் மேல கிடையாது” என்றவனுக்கு சத்யா தன்னால் வருந்துவதைப் பார்க்கும் சக்தி இல்லாது தான் போயிற்று.
“ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் உங்களுக்கான கடமையை செஞ்சிருக்கனும்ல? இப்போ கூட உனக்கு புரிய வைக்காம விட்டேற்றியா போயிட்டேன். எனக்கு உன் மேல பாசம் இல்லாம இல்லடா” அவன் சொன்னதைக் கேட்டு உள்ளம் பூரித்தான் தேவன்.
“நீ இப்படி மனசு விட்டுப் பேசுனதே பெருசு. இப்படி பக்கத்தில் உட்கார்ந்து பேசி எத்தனை வருஷமாச்சு தெரியுமா? இப்போ இருக்கிற நிலமைக்கு இதுவே எனக்கு பெரிய ஆறுதல்” எனக் கூறி, “உன் மடியில் கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்” அவன் மடியில் தலை சாய்த்தான்.
“என்னடா நடக்குது இங்கே? காண்பது கனவா நிஜமா?” அங்கு வந்த ரூபன், கண்களைக் கசக்கிப் பார்க்க, “நீ எப்போ பாரு கனவுல உலகத்தில் தானே மிதந்துட்டு இருக்க?” முறைத்துப் பார்த்தான் தேவன்.
“டேய் டேய்! என் உடன் பிறப்பே. நீயா இது? அண்ணன் கூட கோபமா இருந்தியே. அது என்னாச்சு?”
“அப்படியே இருக்கு. இப்போதைக்கு ஓரம் கட்டி வெச்சிட்டேன். அதை ஞாபகப்படுத்தாத” என்று கண்களை மூடிக் கொண்டான் தேவன்.
“எனக்கும் இடம் தாடா” ரூபனும் வந்து சத்யாவின் மடியில் தலை வைக்க, “நான் வந்தா தான் உனக்கும் வேணுமா? வேற ஒரு நாளைக்கு இரு. இப்போ என்னை விடு” அவனைத் தள்ளி விட்டான்.
“சண்டை போடாதீங்க. ரெண்டு பேரும் இருங்க. சத்தத்தை மட்டும் கம்மி பண்ணிக்கங்க. யுகி வந்தான்னா ரெண்டு பேருக்கும் இடம் இல்லாம போயிரும்” என்றவாறு வந்தாள் ஜனனி.
“அண்ணி” இருவரும் தலையைத் தூக்க, “பேசாம இருங்க டா. உங்க அண்ணன் மடியில் இடம் கேட்டு நான் சண்டை போட மாட்டேன். நீங்க தாராளமா படுத்துக்கங்க” என்றபடி அமர்ந்தவளுக்கு தன் சகோதரிகளின் நினைவு தீண்டியது.
‘இல்லனா மட்டும் இவ வந்துட்டாலும்’ செல்லமாக முணுமுணுத்தவனின் நெஞ்சம் அவளுக்கு நன்றி கூறியது, தன் தம்பிகளுடன் இப்படி இருக்கக் காரணம் அவள் தானே என்று.
“இப்போ சொல்லு! என்னாச்சு தேவா? வினியை மீட் பண்ணதா சொன்ன. அவ என்ன சொல்லுறா?” சத்யா கேட்டதும், “அவ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கிட்டு இருக்கா” என்றவனோ வினிதா பற்றிக் கூறினான்.
அவனது நிலமை அனைவருக்கும் புரிந்தது. இப்படியான நிலமைகளைக் கையாள்வது கடினம் அல்லவா?
“ஒன்னும் பயப்படாத. உன்னை மீறி எதுவும் நடக்காதுனு நம்புறல்ல அது போதும். நமக்கு பிடிச்ச சில விஷயங்கள் கிடைக்க காலம் போகலாம். அது உனக்கானதா இருந்தா உன்னை வந்து சேரும். கிடைக்காமல் இருக்காது. உங்க மனசுல இருக்கிற உறுதியான காதல் உங்களை சேர்த்து வைக்கும்” தேவனின் தலையை வருடிக் கொடுத்தான் சத்யா.
தலையசைத்த தேவனின் பார்வை ரூபனைத் தழுவியது, இந்த ஆறுதல் உனக்கும் பயன்படும் என்று.
கண்களை மூடித் திறந்து புன்னகைத்த ரூபனின் புன்னகை, தேவனைத் தொற்றிக் கொள்ள, அதன் தாக்கம் ஜனனி மற்றும் சத்யாவின் இதழ்களையும் வசீகரித்தன.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி