73. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(3)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 73

 

விடியலின் நாதம் செவிக்கு விருந்தளிக்க, வழமைக்கு மாறாக அந்த வீடு சலசலப்பில் நிறைந்திருந்தது.

 

“டாடி கூட போகலாம்” ஒரு பக்கம் யுகன் உர்ரென்று சொல்ல, “ஜானு கூடவே போகலாம்” முறைப்புடன் எதிரில் நின்றான் அகிலன்.

 

“இப்போ என்ன சண்டை உங்களுக்கு?” மேகலை சிரிப்புடன் கேட்க, “நாங்க நர்சரி போகப் போறோம்ல. ஜானுவும் அங்கே தானே போறா. அவ கூட போகலாம்னு சொன்னேன். அதுக்கு டாடி கூட போகனும்னு யுகி சொல்லுறான் பாட்டி” அவரிடம் முறையீடு செய்தான் அகி‌.

 

“போங்க டா! நீங்களும் உங்க சண்டையும்” ரூபன் இருவரது தலையிலும் தட்டி விட்டு சாப்பிட ஆரம்பிக்க,

 

“ம்மா! நானும் போயிட்டு வர்றேன்” என்றவாறு ஷூவை அணிந்தான் தேவன்.

 

“என்னவோ பண்ணுங்க டா. நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளா சரியில்லை‌. முகத்தைத் தூக்கிக்கிட்டு ஒரு மார்க்கமா சுத்துறீங்க” இடுப்பில் கை வைத்து முறைத்தார் மேகலை.

 

“நான் ஓகே ஆகிட்டேன்மா‌. உங்க அருமை மகன் தான் தேவதாஸாகி பல மார்க்கமா இருக்கான். என்னனு கொஞ்சம் விசாரிங்க” மாட்டி விட்டான் தேவன்.

 

“டேய் எரும! கோர்த்து விடுறியா? உன்னைஐஐ” மேசை மீதிருந்த ஆப்பிளை எறிய, லாவகமாகக் கேட்ச் பிடித்து “தாங்க் யூ டா” அதைச் சாப்பிட்டவாறு கிளம்பினான் தேவன்.

 

“சூப்பர் சித்தா. எனக்கு ஆரேன்ஜ்ஜ கேட்ச் போடு ரூபி” யுகன் கையை நீட்ட, “ஜானு கிட்ட திட்டு வாங்கவா? அதோ உங்களை கூப்பிடுறாங்க. போய் ரெடியாகுங்க” என அனுப்பி வைத்தான்.

 

“சீப்பு எடுத்து வர்றேன்னு போனேன். வந்து பார்த்தா அதுக்குள்ள மாயமாகிட்டீங்க” செல்லமாக முறைத்து விட்டு அகியின் முடியைச் சீவ, 

 

“டாடி! எனக்கு நீங்க பண்ணி விடுங்க” தந்தையின் முன்னால் சென்று நின்றான் யுகி.

 

அவனது விழிகள் இரு மகன்களையும் வாஞ்சையோடு வருடின. போர்வைக்குள் பிஞ்சாகப் பூத்திருந்த இருவரும், புத்தகப்பை ஏந்தி முன்பள்ளி செல்வதை நினைத்து அவனுக்கே ஆச்சரியம் தான்‌.

 

“என்ன டாடி அழகா இருக்கேனா?” என்ற யுகனின் வினாவுக்கு, “அழகா இருக்க கண்ணா. சூப்பர் டா” அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

“அப்போ நான்?” அகி கேள்வி கேட்க, “நீயும் தான் டா. ரெண்டு பேருமே அழகு. என் செல்லக் குட்டிங்க” அவனுக்கும் முத்தம் கொடுத்தான்.

 

யுகி அகியை முறைக்க ஆரம்பிக்க, “நீ இங்க வாடா செல்லம்” யுகியை இழுத்து முத்தமிட்டாள் ஜனனி.

 

“அகி டாடி கிட்ட முத்தம் வாங்கவும் கோபம் வருதுல்ல. அதை சமாளிக்க நான் முத்தம் கொடுத்துட்டேன். எப்படி என் ஐடியா?” என்று கேட்க, என்ன நினைத்தானோ அவளைக் கட்டிக் கொண்டான் யுகன்.

 

“என்ன தங்கம்?” அவனது முகம் பொலிவிழந்ததை உணர்ந்து வினவினாள்.

 

“டாடி நர்சரி போறப்போ பாட்டி தாத்தாவை நிற்க வெச்சு ஆசீர்வாதம் வாங்கிட்டு போனாராம். எனக்கும் அப்படி பண்ணனும்னு ஆசையா இருக்கு ஜானு. ஆனால் நான் உன்னை அம்மாவா ஏத்துக்கல தானே? அப்பறம் எப்படி பண்ணுறது?” அவன் கேட்ட கேள்வியில் முகம் வாடியது அவளுக்கு.

 

“பரவாயில்லை யுகி! உனக்கு தோணுச்சுனா அப்படி பண்ணு. இல்லனா வேண்டாம். நீ கால்ல விழுந்தா தான் ஆசீர்வாதம் பண்ணனும்னு இல்லை. உனக்கு டாடியோடதும், என்னோடதும் ஆசீர்வாதம் எப்போவும் இருக்கும். நீ நல்லா இருப்ப கண்ணா” அவனது தலையைத் தடவிக் கொடுத்தாள்.

 

இருந்தும் உள் மனம் அவனது தாய் எனும் உரிமைக்காக ஏங்கியது. கிடைக்கும் போது கிடைக்கட்டும் என நினைத்து தன்னை சமாதானம் செய்து கொண்டாள்.

 

“நான் ரொம்ப கெட்டவன்ல ஜானு? இப்படி பேசினா உனக்கு கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சும் யோசிக்காம பேசிடுறேன்” முகம் சுருக்கிக் கூற, “எனக்கு எதுவும் கஷ்டம் இல்ல யுகி. நீ கவலையா போகாத. இன்னிக்கு ஃபர்ஸ்ட் டே தானே? சிரிச்சிட்டு சந்தோஷமா போகனும்” அவனுக்கு அழகான குடை ஒன்றைப் பரிசளித்தாள்‌.

 

“சூப்பர் ஜானு. தாங்க் யூ” அவள் கன்னத்தில் முத்தமிட்டான் யுகன்‌.

 

“திஸ் இஸ் ஃபார் யூ அகி” அகிலனுக்கு வேறு நிறத்தில் குடை கொடுக்க, “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஜானு” அவளை அணைத்துக் கொண்டான்.

 

“நானும் ஆஃபீஸ் போகனும். உங்களை ட்ராப் பண்ணிட்டு போறேன். இந்த வேலையை முடிச்சிட்டு வர்றேன்” மடிக்கணினியில் ஏதோ செய்யத் துவங்கினான் சத்யா.

 

“பசிக்குது ஜானு” அகி வயிற்றைத் தடவ, “ஃபைவ் மினிட்ஸ் இரு செல்லம். நானும் ட்ரெஸ் பண்ணிட்டு வந்துடுறேன்” அறையினுள் சென்றவள் சாரி கட்டிக் கொண்டு வந்தாள்.

 

இட்லி எடுத்து வந்தவள் சிறுவர்களுக்கு ஊட்டி விட்டு, தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.

 

“உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்க சொல்லட்டுமா?” ஜனனி சத்யாவிடம் கேட்க, “இன்னிக்கு இம்போர்ட்டன் மீட்டிங் இருக்கு. சீக்கிரமே கிளம்பனும்‌. சாப்பிட நேரமில்லை. அப்பறமா சாப்பிடுறேன்” என்றவாறு வேலையில் ஆழ்ந்து போனான்.

 

“அப்போ நான் ஊட்டி விடட்டுமா?” அவளின் கேள்வியில் விழி விரித்தான் காளை.

 

“ஊட்டி விடுறதுக்கு போய் ஏன் இவ்ளோ பெரிய ரியாக்ஷன் கொடுக்குறீங்க?” அவளுக்குப் புரியவில்லை.

 

“ஒன்னும் இல்ல தாயே. உங்களுக்காக இல்ல, அத்தைக்காகனு சொல்லிடுவ. உன் கிட்ட எந்த விளக்கமும் நான் கேட்கல. ஊட்டி விட்டா சாப்பிடுவேன். இல்லனா..” அவன் சொல்லி முடிப்பதற்குள் ஊட்டி விட்டாள் ஜனனி.

 

“டாடியோட வாயை இப்படித் தான் அடைக்கனும் ஜானு. யூ.எஸ்ல இருக்கும் இதை விட மோசம். என்னை சாப்பிட வைப்பாரு‌. ஆனா அவர் சரியா சாப்பிடுறதில்ல. பாலையும் ப்ரெட்டையும் மட்டும் சாப்பிட்டு எப்படி ஆகிப் போயிருக்கார் பார்த்தியா?” ஜனனியிடம் போட்டுக் கொடுத்தான் யுகன்.

 

“டேய் டேய்! மாட்டி விடுறியா நீ? இப்படி சொன்னா பயந்துடுவேன்னு நெனச்சியா?” சத்யா மகனின் கன்னத்தைக் கிள்ள,

 

“பயப்பட வேண்டாம். சாப்பிடனும். இனிமே உங்களை எப்படி சாப்பிட வெச்சு குண்டு பலூன் மாதிரி மாத்துறேன்னு பாருங்க” ஜனனி முறைப்போடு சொன்னதைக் கேட்டு,

 

“குண்டு பலூனாஆஆ?” சிறுவர்கள் இருவரும் சில்லறைக் காசுகள் சிதறியதைப் போல் நகைக்க, “ஆமாடா. அப்போ தானே உங்க ஜானுவுக்கு குண்டூசி வெச்சு வெடிக்க முடியும்” இதழ் வளைத்துச் சொன்னவனுக்கோ, தன் மீதான அவளின் அக்கறை தேனாகத் தித்தித்தது.

 

“சும்மா இருங்க! சிரிப்பு காட்ட வேண்டாம்” அவளுக்கே சிரிப்பு பொங்கியது.

 

“நீ ஊட்டி விட்டா நான் சாப்பிடுவேன் ஜானு” அவனது பார்வை அன்போடு அடைய, “வீட்டில் இருந்தா ஊட்டுறேன்‌. வெளியே போனா நீங்க டைமுக்கு சாப்பிடுங்க” பட்டென்று சொல்லி விட்டு யுகிக்கு ஊட்டினாள்.

 

இவ்வளவு அசால்டாக சொல்வாள் என்று அவன் நினைக்கவில்லை. 

“தினமும் ஊட்டி விட வேற வேலை இல்லையா? கை இருக்குல்ல சாப்பிடுங்க” என்ற ஏச்சை எதிர்பார்த்தவனுக்கு, அவள் சொன்னதைக் கேட்டு ஆச்சரியம் தான்.

 

சாப்பிட்டு முடிந்ததும், “போகலாமா?” என்று சத்யா கேட்க, “கொஞ்சம் இருங்க. ரெண்டு பேரையும் வெச்சு ஃபோட்டோ எடுப்போம்” கேமராவை ஆன் செய்தாள் பெண்.

 

“எதுக்கு? ஃபர்ஸ்ட் டே ஆஃப் ப்ரீ ஸ்கூல்னு ஸ்டேட்ஸ் போடவா?” அவன் கேட்டதும், பல் வரிசை தெரிய இளித்து வைத்தாள்.

 

“இப்போவே சொல்லிட்டேன் ஜானு! சும்மா எடுத்தா பரவாயில்லை‌. கழுத்துல கையைப் போடு, காலைப் போடுனு சொன்னா வர மாட்டேன்” யுகன் கட்டளை விதிக்க,

 

“சரிங்க ஐயா! இப்படி எடுக்கிறதே பெருசு. ஓவரா ஆசைப்பட்டு இதையும் கெடுத்துக்க முடியாதுல்ல” என்றவள், “எப்படியும் ஒரு நாள் அவனே வேணாம்னாலும் நீ அவன் கழுத்துல கையைப் போடத் தான் போற‌. அதனால அடக்கி வாசிக்கனும் சொல்லிட்டேன்” சிரிப்புடன் ஃபோட்டோ எடுத்தாள்.

 

“நீ போய் நில்லு! நான் ஃபோட்டோ எடுக்கிறேன்” என்றதும், அவள் நடுவில் நின்று இருவரையும் பிடித்துக் கொண்டாள்.

 

“சூப்பர்” ரசனையோடு புகைப்படம் எடுத்துத் தள்ளினான் சத்யா.

 

“நீங்க வர்றீங்களா?” அவள் கேட்க, “வேற ஒரு நாள் பொறுமையா எடுத்துக்கலாம்” என்று சொன்றவனோ அவளின் முகம் வாடியது கண்டு, இருவருக்கும் நடுவில் நிற்க, புன்னகையுடன் க்ளிக்கினாள்.

 

“ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க” அகி சொன்னதும், சத்யா மற்றும் ஜனனி அருகருகில் நின்றனர்.

 

அகிலன் அவர்களது காலில் விழ, அவனை ஆசீர்வதித்து கன்னத்தில் முத்தமிட்டனர் இருவரும்.

 

ஜனனியின் பார்வை யுகனைத் தொட்டு மீள, அவன் முகத்தில் சோக ரேகைகள்.

 

“யுகி! நீ வா கண்ணா” சத்யா அவனைத் தூக்க, அவன் கையிலிருந்து இறங்கி அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றான்.

 

“என் உசுரு” அவனை அணைத்து விடுவித்தாள் ஜனனி.

 

யுகியின் மாற்றமும், இந்த நெருக்கமும் அவளுள் ஆனந்தச் சாரல் வீசின. அவளின் கண்களில் தோன்றிய பிரகாசம் சத்யாவுக்கு அதீத திருப்தியைக் கொடுத்தது.

 

“பாட்டி கிட்ட சொல்லிட்டு வாங்க” என்று ஜனனி சொல்ல, “நாம போறது பாட்டிக்கு தெரியும்ல ஜானு?” எனக் கேட்டான் அகி.

 

“ஆமா. அப்போவே சொல்லிட்டு வந்தோமே” யுகனும் ஒத்து ஊத, “பரவாயில்லை. நாம போறப்போவும் சொல்லிட்டு போகனும். இதெல்லாம் நல்ல பழக்கங்கள்! நீங்க போய் சொன்னா அவங்க மனசு சந்தோஷப்படும்ல? நம்ம கிட்டவும் சொல்லுறாங்களேனு ஹேப்பியா ஃபீல் பண்ணுவாங்க‌” என்றுரைத்தான் சத்யா.

 

“ஆமா தங்கங்களா! எங்களால எவ்ளோ முடியுமோ அந்த அளவு மத்தவங்களுக்கு கஷ்டம் வராம பார்த்துக்கனும். அதே சமயம் சின்ன சின்ன விஷயங்களைக் கொண்டாவது அவங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கனும்” ஜனனி சொன்னதைக் கேட்டு, இருவரும் தலையாட்டி விட்டுச் சென்றனர்.

 

சத்யாவின் விழிகள் ஜனனியை நோக்க, “என்ன?” எனக் கேட்டாள்.

 

“சும்மா பார்த்தேன். பார்க்கவும் கூடாதா?” என்று அவன் பார்க்க, “பார்க்கலாமே. அந்தப் பார்வைக்கான காரணம் என்னனு தெரிஞ்சுக்கனும் போல இருக்கே” தலை சாய்த்துச் சொன்னாள்.

 

“இந்த ஜனனி மேல, சத்யாவுக்கு ஆர்வம் வர ஆரம்பிச்சாச்சு என்று அர்த்தம். நீ அவங்களைப் பார்த்துக்கிறது என்னைக் கவருது” தன் உள்ளத்தில் தோன்றியதைக் கூறினான்.

 

“நீங்க இரும்பா இருக்கனும். நான் காந்தமா இருக்கனும். அப்போ தானே கவரலாம். அப்படி இல்லாதப்போ இழுவிசை ஏற்படுமா என்ன?” 

 

“உயிரில்லாத ஜடங்களைக் கவரத் தான் இழுவிசை வேணும். உயிருள்ள ஜீவன்களைக் கவர, அன்பான இதயமே போதும்” அவன் பார்வை அவளது இதயத்தைத் தாக்கியது.

 

“மிஸ்டர் சத்ய ஜீவா!” அவள் அழுத்தமாக அழைக்க, “எஸ்! மிஸ்ஸஸ் சத்ய ஜீவா” அவளைப் போலவே அவனும் அழைத்தான்.

 

“அப்படி கூப்பிடாதீங்க” 

 

“ஏன்? அந்த வார்த்தையில் காந்த சக்தி இருக்குற மாதிரி தோணுதா?”

 

“அந்த வார்த்தையில் இல்ல. இந்த வாயில தான் காந்த சக்தி இருக்கு போல” அவனது வாயைச் சுட்டிக் காட்டி விட்டுச் செல்ல, சத்தமாகச் சிரித்தான் சத்யா.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!