💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 74
“ஹேய் மகி…!!” எனும் சத்யாவின் குரலில் காதுகளைக் கூர் தீட்டிக் கொண்டான் ரூபன்.
“அக்காவோட போன் ஆன்ஸ்வர் இல்ல மாமா. அவ கிட்ட பேச முடியுமா?” என்று கேட்டாள் மகிஷா.
“இரு கொடுக்கிறேன்” என்றவனோ, “ஜானு சாஞ்சுட்டு இருக்கா. நான் கூப்பிட்டு வரும் வரை நீ பேசிட்டு இரு” அங்கிருந்த ரூபனிடம் அலைபேசியைக் கொடுத்து விட்டுச் சென்றான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத இருவருக்கும் விழிகள் முழுதாக விரிந்தன. படபடக்கும் விழிகளோடு அவனை நோக்கினாள் மகிஷா.
அலைபேசித் திரை வழியே தெரிந்த அவனது முகத்தை அவளது நேத்திரங்கள் ஆழ்ந்து நோக்கின. அவளைத் திறந்த விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரூபனும். நொடிப்பொழுதும் இமைகளை சேர்க்க நினைக்கவில்லை.
🎶 அன்பே என் ஞாபகம் தீண்டி
உன் தூக்கம் தொலைந்ததா
அங்கே என் யோசனை வந்து
உன் ஏக்கம் வழிந்ததா 🎶
ஆழமாக ஆழமாக, அவளைத் தன் விழி வழியே இதயத்திற்குக் கடத்திக் கொண்டான். ஏக்கம் நிறைந்த மனதைத் தேற்றுவதற்காக போராட்டம் நடத்தினான்.
🎶 காதலின் கைகளில் பொம்மையாய் உடைகிறேன்
காயங்கள் உண்மையில் இன்பம் தான் அறிகிறேன் 🎶
🎶 உன் இதயம் என் வசத்தில்
என் இதயம் உன் தடத்தில் 🎶
“மகி! மகி” அவனது உள்ளம் உள்ளுக்குள் ஓவென்று கதறினாலும், வெளியில் மௌனத்தை மட்டுமே அவன் பரிசாகக் கொடுத்தான்.
அவளுக்கும் “ரூபன்” என்று ஒரே மூச்சில் அழுது தீர்த்து விட வேண்டும் போல் இருந்தது. இருப்பினும் அழவில்லை. அவனைக் காதலும், தவிப்பும் நிறைந்த பார்வையால் தீண்டிக் கொண்டிருந்தாள்.
‘இப்போவாவது பேசுறியா இல்லல்ல? உனக்கு அவ்ளோ அழுத்தம் டி’ என்று அவன் நினைக்க, ‘நீ என்னை ஒரு தடவை கூப்பிடு ரூபன். உன் கூட பேசணும் போல இருக்கு. என்னால முடியல. வேறு நாளைக்கு என்னை பார்த்தா மகினு எவ்வளவு சந்தோஷமா பேசுவ. இப்போ ஒரு வார்த்தை பேச உனக்கு தோணல தானே?’ என நினைத்தாள் அவள்.
உள்ளங்கள் இரண்டும் ஆயிரம் கதைகள் பேசின. வாய்கள் மௌனத்தின் உச்சத்தில் தாழ் போட்டுக் கொண்டன. ஒன்றுமே பேசாமல் இருந்தவர்களின் கண்களும் கூட பேசிக் கொண்டன. அவை உறவாடின, உரையாடின.
“ஹே மகி! போன்ல சார்ஜ் இல்ல டி. அதான் ஆஃப் ஆகிடுச்சு. எப்படி இருக்க?” என்று கேட்டவாறு ரூபனின் எதிரில் வந்து அமர்ந்தாள் ஜனனி.
சத்யாவும் அவள் அருகில் அமர்ந்து கொள்ள, “நல்லா இருக்கேன் அக்கா. உன் கூட பேசணும் போல இருந்துச்சு. அதான் கூப்பிட்டேன்” என்றவளின் களையிழந்த முகம் ஏதோ சரியில்லை என்பதை அக்காளுக்கு உணர்த்தியது.
“ஆர் யூ ஓகே மகி?” என்று அவள் வினவ, “ஓகே கா. காலேஜ், அசைன்மென்ட் அது இதுன்னு காலைக் கடிக்குது. அதனால கொஞ்சம் டயர்ட் ஆகிட்டேன்” என்று பதிலிறுத்தினாள்.
உண்மையில் அந்த சோர்வும் அவளுக்கு இருந்தது. இருப்பினும், அதை விட ரூபனுடன் பேசாதது மனதைச் சோர்வடைய வைத்தது. அவள் மனதோடு, முகமும் வாடியிருந்தது.
அவள் பொய் சொல்லுகிறாள் என்று நினைத்த ரூபன் அனல் பார்வையால் தாக்க, சத்யாவின் பார்வை நொடிப்பொழுதில் என் தம்பியைக் கண்டு கொண்டது. அவனுக்கு ஏதோ புரிவது போன்ற நிலை. இருவரும் இருக்கும் போது கேட்க முடியாமல் அமைதி காத்தான்.
“குட்டீஸ் எங்க ஜானு?” என்று மகி கேட்கும் போது, இருவரும் வந்து விட்டனனர்.
“இதோ இருக்காங்க” என்று ஜனனி சிரிக்க, “அடடா! ஒன்னா வர்றாங்களே ஜானு. இப்போ ரெண்டு பேரும் செட் ஆகிட்டாங்களா?” ஆர்வமாகக் கேட்டாள் மகி.
“செட்டாகுறதுக்கு நாங்கள் லவ்வா பண்ணுறோம்?” இடுப்பில் கை குற்றி, யுகன் கேட்ட கேள்வியில் அனைவரும் சிரித்து விட்டனர்.
“உனக்கு லவ் பத்தி எல்லாம் தெரியுமா?” மகிஷா ஆச்சரியமாகப் பார்க்க, “தெரியுமே! லவ்வுன்னா பாசம். எனக்கு டாடி மேல, ஜானுவுக்கு அகி மேல, டாடிக்கு ஜானு மேல..” என்று அவன் சொன்னதும், சத்யாவும் ஜனனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன இதுக்கு ஷாக் ஆகுறீங்க? லவ் இருக்கத் தானே வேணும். லவ் இல்லனா அந்த உறவுல வேல்யூ இல்ல. லவ் இருந்தா அதை வெளியில சொல்லிரவும் வேணும். உள்ளுக்குள்ள வச்சுட்டு, இல்லாத மாதிரி நடிச்சுட்டு இருக்கக் கூடாது. அது எல்லாருக்குமே கஷ்டத்தைத் தான் தரும்” விரக்தியான குரலில் ரூபன் சொன்னது மகியின் மனதை ஆழமாகத் துளைத்தது.
அவளுக்காகக் கூறிய வார்த்தைகள் அல்லவா அவை? காதலை வைத்தும், மறைத்துக் கொண்டிருப்பதும் அவள் தானே?
“ஆமா. நீங்க சொல்லுங்க. உங்களுக்கு ஜானுவைப் பிடிக்கும் தானே?” என்று அகி கேட்க, “ஆமாடா பிடிக்கும். உங்க பார்வையில் லவ்வுக்கு அப்படித் தான் அர்த்தம்னா ரொம்ப பிடிக்கும்” தோளைக் குலுக்கிக் கொண்டவனை விரிந்த விழி மூடாமல் பார்த்தாள் ஜனனி.
‘என்ன இப்படி வெளிப்படையாக சொல்லிட்டான்?’ என்றிருந்தது அவளுக்கு.
‘ஒரு வேளை அகி கேட்டதற்காக ஆமா சொல்லி இருப்பானா? இல்லை, உண்மையாகவே இருக்குமா?” அவளது உள்ளம் பட்டிமன்றம் நடத்த, எதுவா இருந்தா எனக்கு என்ன என்று தலையை உலுக்கி அந்த எண்ணத்திலிருந்த வெளி வந்தாள்.
“நான் நந்து கூட பேசினேன் மகி” என்று ஜனனி சொல்ல, “என்னக்கா உண்மையாவா? நீ பேசலன்னு அவ கோவில்ல வச்சு கவலைப்பட்டா” என்றவளுக்கும் நந்திதாவின் நினைவுகள்.
“என்ன பண்ணுறது? அவ பண்ண காரியம் அப்படித் தான். என்றாலும் என்னால கோபத்தை ஒரு அளவுக்கு மேல இழுத்து வச்சுக்க முடியல. நடந்தது நடந்து போச்சுல்ல. இனி நாம அதை இழுத்து பிடிக்கிறதால என்ன நடக்கப் போகுது? நாம பேசலனு நினைச்சு அவ கஷ்டப்படுவா. அதனால அவ வாழ்க்கையை வாழாமல் போனா என்னாகும்?
ஒரு விதத்துல அந்த கஷ்டத்துக்கு நாமளும் காரணமாயிடுவோம். அவ நமக்கு கஷ்டம் தந்தானு நாமளும் கொடுக்கறது சரியில்லையே. என்ன இருந்தாலும் அவ நம்ம கூடப் பிறந்தவ” என்று ஜனனி சொல்ல,
“அதுவும் உண்மை தான். நானும் அவ கூட பேச ட்ரை பண்ணுனேன். அப்பா வேணாம்னு சொன்னதால விட்டுட்டேன். நந்து என் கூட பேசினதைப் பார்த்துட்டு ரொம்ப கோவப்பட்டார். என்னையும் அவள மாதிரி மாத்த போறியான்னு கேட்டார். அதனால தான் நானும் எதுவும் வேணான்னு விலகி இருக்கேன்.
நந்துவால நம்ம குடும்பம் அனுபவிச்ச அவமானமும் கஷ்டமும் என்னாலயும் வர வேணாம்னு நினைக்கிறேன். நான் நல்லபடியா இருப்பேன்கா. உனக்குத் தந்த வாக்கை நான் காப்பாத்துவேன்” இது ரூபனுக்காகவே சொல்லியது போல் இருந்தது.
பேச்சு சகோதரியிடம் இருந்தாலும், அவளது கண்கள் ரூபன் மீதே இருந்தன.
“நீ என் தங்கச்சி மகி! அந்த வாக்கை நீ காப்பாற்றுவனு எனக்குத் தெரியும்” என்று ஜனனி சொல்ல, அப்பொழுது தான் ரூபனுக்கு அந்த விடயம் உறைத்தது.
காதலிக்க வேண்டாம் என்று ஜனனி சொல்லி இருக்கிறாள். அவர்களது நிலைமையில் இருந்து பார்த்தால் அதுவும் நியாயம் தானே? ஏற்கனவே நந்திதாவால் ஏற்பட்ட கறையைத் துடைக்க, இவள் சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள்.
ஆனால் அவள் மனதில் மலர்ந்த காதல் அவளுக்குப் பின்னாளில் கஷ்டத்தைத் தானே கொடுக்கும் என்று நினைத்தவனுக்கு, என்ன செய்வது என்று புரியாத நிலை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போன்று இருந்தது.
மகியிடம் கோபம் கொள்வதும் கூட அவனுக்கு சரியாகப் படவில்லை. அவள் ஒன்றும் காதலித்து ஏமாற்றவில்லையே, அவள் மீது கோபம் கொள்வதற்கு. அவளது நிலையை உரைத்து, காதலை மறுத்துத் தானே இருக்கிறாள்.
“மகிக்கு நாமளே ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம். அவளுக்காக அவளை அன்பால கொண்டாடித் தீர்க்குற ஒரு பையன் நிச்சயம் வருவான்” என்று சத்யா கூற, தலையசைத்து ஆமோதித்தாள் ஜனனி.
“அவ கல்யாணத்தை அழகா செய்யனும். நந்து கல்யாணம் ஒழுங்கா நடக்கல. எனக்கும் எதிர்பார்க்காமலே நடந்து போச்சு. அவளோடத பார்த்து பார்த்து நல்லா பண்ணனும். சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கனும்னு ஆசைப்படுறேன். அப்பாம்மா இஷ்டப்படி அவங்க மனசு குளிருற மாதிரி செய்யனும்” தனது ஆசையை முன்னிறுத்தினாள்.
“கண்டிப்பா பண்ணலாம். நான் தான் இருக்கேன்ல? நான், தேவா, ரூபன், நீ, குட்டீஸ்னு எல்லாரும் சேர்ந்து கலக்கிடுவோம். ப்ளான் பண்ணி சூப்பரா செய்வோம்” என்று சத்யா சொல்ல, நிறைவாகப் புன்னகைத்தாள் மனைவி.
அவளின் நீண்ட நாள் ஆசைகளுள் இதுவும் ஒன்று. தனக்கு வரும் கணவன், தன் குடும்பத்தை அவன் குடும்பமாகக் கருத வேண்டும் என்பது எந்தவொரு பெண்ணுக்கும் உள்ள ஆசை தான். ஜானுவுக்கும் அப்படியே. செய்வானோ இல்லையோ, அவன் இப்படி வாய் விட்டு மனதார சொன்னதே அவளுக்குப் போதுமாக இருந்தது.
இந்தப் புறம் காதல் ஜோடிக்கோ இதயங்கள் இரட்டிப்பாய் துடித்தன. தனது திருமணம் பற்றிய பேச்சு மகிஷாவுக்கு பீதியைக் கிளப்பி விட்டது. ரூபன் இன்றி அவள் எப்படி வாழ்வது? அவனை விடுத்து இன்னொருவனைத் திருமணம் செய்வதா?
அதனை நினைக்கவே உள்ளம் நடுங்கியது. அவனை மனதினுள் சுமந்து விட்டாள். வாய் விட்டுச் சொன்னால் மட்டும் தான் காதலா? இல்லையே. அவளுக்கும் அவன் மீது அளவில்லாக் காதல். இருந்தும் வெளியில் சொல்லவில்லை.
சொன்னதோ இல்லையோ காதல் காதல் தானே? அவனை விடுத்து இன்னொருவனை ஏற்க இயலாது. அவன் வேண்டும் என்று சொல்லவும் முடியாமல் சூழ்நிலை அவளைக் கட்டி வைத்துள்ளதே.
அவளின் காதல் கொண்ட கண்களைக் கூர்ந்து நோக்கினான் ரூபன்.
‘வாயைத் திறந்து உன் காதலை சொல்லேன் மகி! என்னைத் தவிர யாரும் உன் பக்கத்தில் நிற்கிறதை என்னால ஏத்துக்க முடியாது. உசுர விட்றுவேன் டி. எனக்கு நீ வேணும் மகி! நீ இல்லனா நான் என்னாவேன்னு தெரியாது’ உள்ளுக்குள் பேசியவனின் முகத்தில் அத்தனை பரிதவிப்பு.
‘என்னால நீ இல்லாம வாழ முடியாது ரூபன். எனக்கு உன் காதல் வேணும். உன் முகத்தில் தொலஞ்சு போன சிரிப்பை நான் மீட்டுக் கொண்டு வரனும்னு நினைக்கிறேன். இதெல்லாம் நடக்குமா? நம்ம காதல் ஒன்னு சேருமா?’ மனதினுள் கேட்டுக் கொண்டாள் காரிகை.
“நீங்க ரெண்டு பேரும் பேசலயா? எப்போவும் பேசிட்டே இருப்பீங்க?” யுகன் இருவரையும் பார்த்துக் கேட்க, “பேசுவோமே” ஏக காலத்தில் மொழிந்தனர் இருவரும்.
“அவ பேசினா நான் பேசுவேன்” என்ற ரூபனின் சொல் கேட்டு, “நீங்க பேசினா நான் பேசுவேன்” என்றாள் அவளும்.
“இப்படி சொல்லிட்டு இருந்தா கடைசியில் ரெண்டு பேரும் பேச முடியாது. ஒன்னு நெனச்சா மனசுல வெச்சிட்டு இருக்காம அப்பப்போ பேசிடனும். பேசாம வெச்சிட்டு இருக்கிற வார்த்தைகள் பின்னால அதோட உணர்வுகளை இழந்துடும். அப்பறம் அதைப் பேசி பிரயோசனம் இல்ல. மனசுல பேசிட்டோம்னு நின்னுட்டா, அது மத்தவருக்கு உரிய உணர்ச்சியோட போய் சேராது” பொதுவாக சொன்னாள் ஜனனி.
இரு சோடி விழிகளும் ஒன்றையொன்று கவர்ந்து நின்றன. வாய் பேசாத வார்த்தைகளை விழிகள் பரிமாறிக் கொண்டன.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி