💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 75
அகியைத் தூங்க வைத்து விட்டு கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் ஜனனி. தூக்கம் தீண்டாததால், அலைபேசியை நோண்டியவளுக்கு சத்யாவின் எண் கண்களில் பட்டது.
அவனது சாட்டினுள் சென்று வரப் போனவளுக்கு ஆன்லைன் காட்டவும், “தூங்காம என்ன பண்ணுறார்?” யோசித்தவாறு அறையை எட்டிப் பார்த்தாள்.
அவன் இல்லாததைக் கண்டு புருவம் சுருக்கினாள் ஜனனி. பின்னர் ஏதோ தோன்ற, பல்கோணிக்குச் சென்றவள் உறைந்து நின்றாள்.
தரையில் அமர்ந்து அலைபேசியை வைத்தவாறு, எங்கோ வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். மறு கையில் சிகரெட் இருந்தது.
“என்னங்க” எனும் அழைப்போடு அவனது அருகில் அமர்ந்து கொள்ள, “போ ஜானு! நாளைக்கு பேசலாம்” அவளைப் பார்க்காமல் சொன்னான் சத்யா.
“முடியாது. நான் போக மாட்டேன்” அவள் மறுப்பாகச் சொல்ல, அனல் கக்கும் விழிகளை அவள் மீது திருப்பினான்.
“சொன்னா கேளு. எல்லாமே விளையாட்டு இல்ல. என்னை என் போக்கில் விட்டுட்டு போறது தான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது” அவனது குரல் இயல்பாக இல்லை.
“நல்லதோ இல்லையோ எனக்கு கவலை இல்ல. என்னாச்சுனு சொல்லுங்க. ஏன் இப்படி இருக்கீங்க? இது என்ன கையில்?” அவனது கையை சுட்டிக் காட்டி கேட்க,
“பார்த்தா தெரியல. சிகரெட்” அவன் சொன்னதும் வெறியாகி விட்டாள்.
“கேவலமா காமெடி பண்ணாதீங்க. இது சிகரெட்னு எனக்கும் தெரியும். இந்த கருமத்தை எதுக்காக கையில் வெச்சிட்டு இருக்கீங்க? இந்த பழக்கம் எல்லாம் இருக்கா உங்களுக்கு? இவ்ளோ நாள் எனக்கு தெரியாம தம் அடிச்சிட்டு இருந்தீங்களா?” காச்மூச்சென்று கத்தினாள் ஜனனி.
“ஏய் ச்சீ! என்னைப் பார்த்தா தினமும் பத்து தம் அடிக்கிறவன் மாதிரி இருக்கா? எப்போவாச்சும் ஒரு தடவை, டென்ஷனா இருந்துச்சுனா அடிப்பேன். அவ்வளவு தான்” என்றவனின் முகத்தில் தெளிவில்லை.
“டென்ஷனாகுற அளவுக்கு என்ன நடந்துச்சு? நல்லா தானே இருந்தீங்க. என்று அவள் வினவ, “நா..நாளைக்கு டேட் நெனச்சா எனக்கு டென்ஷன் ஏறுது” தலையைப் பிடித்துக் கொண்டான் சத்யா.
“ஏன்? நாளை உங்க பர்த்டேவா? ட்ரீட் கேட்டு ஃப்ரெண்ட்ஸ் தொல்லை பண்ணுறாங்களா?” எனக் கேட்டவளைப் பார்த்து, “வீட்டுல தேஞ்சு போன தும்புத்தடி இருக்கா?” என்று வினவினான்.
“இல்ல. நல்ல தும்புத்தடி தான் இருக்கு. எதுக்கு? அதை வெச்சு எதைக் கூட்டப் போறீங்க?”
“கூட்டல டி. உன்னைக் குனிய வெச்சு மண்டையில் குட்டப் போறேன். பர்த் டேவை நெனச்சு யாராச்சும் இப்படி இருப்பாங்களா?” இருந்த கவலை இல்லாது போய் கடுப்பின் விளிம்பைத் தொட்டான் சத்யா.
“அப்பறம் என்னங்க? சொல்லுங்க” முகத்தை உப்பிக் கொண்டு கேட்க, “நாளைக்கு என் கல்யாண நாள்” அவன் சொன்னதும், “வாவ்! ஹேப்பி அன்னிவர்சரி” கையைக் கொடுத்தாள் காரிகை.
“அதுக்கு ஏன் விஷ் பண்ணுற. அது ஒன்னு தான் குறைச்சல்” பல்லைக் கடித்தான் சத்யா.
“உங்களுக்கு அது வேணும்ல? அதற்காகத் தானே அதை மறக்காம ஞாபகம் வெச்சு, இப்படி ஃபீல் பண்ணி உட்கார்ந்து இருக்கீங்க. வேற என்ன பண்ண சொல்லுறீங்க? நீங்க உங்க எக்ஸ் வைப் நெனச்சு ஃபீல் பண்ணுங்க நான் போயிட்டு வர்றேன்” அவள் எழுந்து கொள்ள,
“ஜானுஊஊ” சீற்றம் வழியும் குரலில் அழைத்தான் கணவன்.
“என்ன?”
“எங்கே போற?”
“நீங்க அன்னிவர்சரி நெனச்சு இருக்குறப்போ நான் ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்?” எனக் கேட்டாள் அவள்.
“நான் ஒன்னும் என்னை விட்டுப் போனவளை நெனக்கல. அந்த ஞாபகம் வந்துச்சு. அவ தந்த காயங்கள் வெளியே வந்ததுல அப்செட் ஆகிட்டேன் அவ்வளவு தான். மத்தவன் பொண்டாட்டியை நெனச்சு, அவ கூட வாழ்ந்ததை அசை போடுறதுக்கு நான் அவ்வளவு தரம் தாழ்ந்து போகல. அதை நான் பாஸ்ட்டா நெனச்சு கடந்து வந்துட்டேன்” என்றவனுக்குத் தனது உள்ளத்தில் உதித்ததை எப்படி உரைப்பது என்று புரியவில்லை.
“நீங்க சொல்லுறது எனக்கு புரிஞ்சும் புரியாத நிலை. மறந்துட்டேன்னு சொல்லுறீங்க. ஆனால் கோபமா இருக்கீங்க. யோசிக்கிறீங்க. லாஜிக்கே இல்லாம இருக்கு. உங்க நிலைமையில் இருந்து பார்த்தா மட்டுமே ஒழிய, எனக்கு உங்க ஃபீலிங்ஸ் புரியாது. சோ அதை விடுங்க” என்றவள் தொடர்ந்து பேசினாள்.
“ஒரு ஐடியா சொல்லுறேன். உங்க மனசுல பாஸ்ட் லைஃப்ல நடந்த விஷயங்களை யார் கிட்டேயாவது மனசு விட்டு சொல்லனும்னு தோணிருக்கும். ஆனால் சொல்லி இருக்க மாட்டீங்க. இஃப் யூ டோண்ட் மைண்ட், என் கிட்ட சொல்லலாம். தெரிஞ்சுக்கனும்னு ஒரு செல்ஃபிஷ்ஷான எண்ணமும் இருக்கு. அதைத் தாண்டி உங்க கவலைகளை என் கிட்ட சொல்லுறதால அந்த சுமை குறைய வாய்ப்பிருக்கு எனும் ஆசையும் இருக்கு. சொல்லுவீங்களா?” சாதாரணமாகத் தான் கேட்டாள் அவள்.
அவனது உள்ளம் ஆழிப்பேரலையாய் ஆட்டம் கண்டது. பழைய நினைவுகள் அலை போல் திரண்டு வந்தன. மறைக்க முடியாமல் மறக்க எண்ணியவை யாவும் கரை தாண்டின.
“பெரிய ஃப்ளாஷ் பேக் எல்லாம் கிடையாது. இனியாவுக்கும் எனக்கும் அர்ரேன்ஜ் மேரேஜ் தான். எந்த பிரச்சினையும் இல்லாம வாழ்ந்தோம். குழந்தைங்களும் பிறந்தாங்க. தன்யா வரும் வரை எல்லாம் நல்லதா இருந்தது.
ஆசிரமத்தில் இருந்த தன்யாவை நானும் அப்பாவும் கூட்டிட்டு வந்த பின்னாடி அவளுக்கு என்னையும் தனுவையும் சேர்த்து வெச்சு பேசுறதே வேலையாப் போச்சு. அவ கிட்ட நிறைய மாற்றங்களை நான் பார்த்தேன். அப்பாவும் இறந்துட்டார். அந்த நேரம் கூட இனியா எனக்கு ஆறுதலா இருக்கல. மனசளவுல நான் செத்துப் போயிட்டேன்” என்றவனுக்கு அது தனது வாழ்வில் மறக்கவே முடியாத வலி செறிந்த நினைவு.
சத்யாவுக்கு மேகலையை விட தந்தை மீது அதீத பிரியம். அவரின் இறப்பில் உடைந்து போனவன் இனியாவிடம் அதிக ஆறுதலை எதிர்பார்த்தான். தன்யாவுடனான வாக்குவாதத்தால் கோபத்தில் இருந்தவள் சத்யாவை நெருங்கியும் வராதது அவனை அநாதையாக உணர வைக்கப் போதுமாக இருந்தது.
“எனக்கு அப்பான்னா எவ்வளவு பிடிக்கும் தெரியுமா ஜானு? அவர் இல்லேங்கிறத என்னால ஏத்துக்க முடியல. அம்மா ரொம்ப உடைஞ்சிட்டாங்க. தேவனும் ரூபனும் அவங்களுக்கு ஆறுதலா இருந்தாங்க. என் கண்ணீரைத் துடைக்க ஒரு கை இல்லை. சாப்பிட்டியானு கேட்கக் கூட அவ வரல. எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே கெடச்சுது. அந்த நாட்கள் நான் அனுபவிச்ச வேதனையை ஜென்மத்துக்கும் மறக்க முடியாது” இப்பொழுதும் அவனது கண்கள் கலங்கின.
“அழாதீங்க! நீங்க அழுதா உங்கப்பா தாங்குவாரா? உங்களுக்காகவே இருந்தாலும் யுகி, அகி அழுறதை நீங்க விரும்புவீங்களா? உங்க சந்தோஷம் தான் அவர் சந்தோஷமா இருக்கும். இன்னியோட இந்த வலி, அழுகையை உதறித் தள்ளுங்க. சந்தோஷமா வாழ ஆரம்பிங்க. உங்களோட சந்தோஷம் உங்களைப் பெத்தவங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும்” அவள் சொன்ன வார்த்தைகள் வலி நிவாரணியாக மாறி, அவனது காயம் கண்ட இதயத்துக்கு மருந்திட்டன.
“தனு எனக்கு தங்கச்சினு அவ கிட்ட பல வாட்டி சொன்னேன். இந்த கஷ்டம் தாங்க முடியாம தனு வெளிநாட்டுக்கு படிக்க போறேன்னு கிளம்பினா. அப்போ அவளுக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு. அவளுக்கு நடக்க முடியாம போச்சு. அப்பா இல்லாதப்போ அவளைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்துடுச்சு.
நான் அவளைத் தூக்கி உட்கார வைக்கிறது இனியாவுக்கு பிடிக்கல. அசிங்கமா பேசுவா. ஒரு நாள் நான் கோபத்தில் கை ஓங்கிட்டேன். தனுக்காக அவளை விட்டுக் கொடுத்துட்டேன்னு நான் வேண்டாம்னு அகியைக் கூட்டிக்கிட்டு போயிட்டா. சின்ன கோபம் தானே. வருவானு காத்திருந்தேன். அவ கிட்ட போய் கெஞ்சினேன்.
யுகிக்கு அம்மா வேணும், அகியும் அப்பா இல்லாம வாழ விரும்பலனு சொன்னேன். அதுக்காக அவ கால்ல விழவும் தயாரா நின்னேன். அவ ஒத்தக் கால்ல நின்னு டிவோஸ் வாங்கிக்கிட்டா. நானும் இங்கே இருக்கப் பிடிக்காம அப்ரோட் போயிட்டேன். அவ வேற கல்யாணமும் பண்ணிக்கிட்டா” ஒவ்வொன்றையும் அவன் சொல்லும் போது முகத்தில் கலவையான உணர்வுகள்.
கேட்டுக் கொண்டிருந்த பெண்ணவளுக்கு கண்கள் கலங்கின. இவன் அனுபவித்த வலிகள் தான் எத்தனை? மனைவியை இழந்து, குழந்தையை இழந்து, வாழ்வை வெறுத்து, அத்தனையையும் தாங்கிக் கொண்டும் யுகியை நன்கு வளர்த்துள்ளானே?
“என் காயங்களுக்கு யுகியோட சிரிப்பு தான் காரணமா இருந்தது. அவனைச் சிரிக்க வெச்சு நான் சந்தோஷப்பட்டேன். அவன் ஒரு நாள் கூட அம்மா பற்றி கேட்டதில்ல. ஆனா அவனுக்கு எல்லாம் தெரியும். போன வருஷம் அப்பாவோட நினைவு நாள், இனியா என் கூட இல்லாம அப்பா இறந்த நேரம் பட்ட கஷ்டத்தை தனியா சொல்லி புலம்பினேன். யுகி எல்லாம் கேட்டுட்டான் போல.
அப்போ அவன் ரொம்ப அழுதான். என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டான். அடுத்த வருஷம் நான் சந்தோஷமா இருக்கனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறதா சொன்னான். அதிலிருந்தே அவனுக்கு இனியா மேல வெறுப்பு வந்துருச்சு. இண்டியா வரவே வேணாம்னு சொன்னான். அம்மாவுக்காக தான் இங்கே வந்தேன். அப்பறம் என் வாழ்க்கை வேறு விதமா மாறிடுச்சு” அவன் முகத்தில் கசந்த முறுவல்.
ராஜீவ்வை இழந்து துயரில் ஆழ்ந்து போன ஜனனிக்கு, சத்யா அனுபவித்த வலிகளைக் கேட்டதும் தனது துன்பங்கள் தூசு போல் இருந்தது. தந்தையை, மனைவி, குழந்தை என்று தான் அன்பு வைத்தவர்களைத் தொடர்ச்சியாக இழந்து எவ்வளவு வருந்தி இருப்பான்?
“எனக்கு கவலை எல்லாம் இல்ல ஜானு. நாளை கல்யாண நாள்னு ஞாபகம் வந்ததும் சட்டுனு ஒடஞ்சிட்டேன். அப்பா ஞாபகமும் வந்துருச்சு. எனக்கு கஷ்டம் எதுவும் இல்ல. அய்ம் ஓகே” அவனாக அவனைத் தேற்றிக் கொண்டான்.
“சில விஷயங்கள் அப்படித் தான். எவ்வளவு ட்ரை பண்ணுனாலும் ஞாபகம் வந்து நம்மளை ஆட்டிப் படைச்சிடும். உறவுகள் தொலைஞ்சாலும் நினைவுகள் அழியாது இல்லையா? உயிருள்ள வரை அது வாழ்ந்துட்டு தான் இருக்கும். நாமளும் கடந்து போய்க்கிட்டே இருக்கனும்” என்று சொல்ல அவனும் தலையசைத்தான்.
“இனி இதுக்கு வேலை இல்ல” சிகரெட்டைத் தூக்கி வீச, “ஆமா. இன்னிக்கு நான் தான் உங்களுக்கு சிகரெட் ஆகிட்டேன் போல” சிரிப்போடு சொன்னாள் ஜனனி.
“சிகரெட் இல்ல! நீ சாக்லேட் ஜானு” என்றவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியம் தான்.
சற்று முன் இருந்த வெறுமை, விரக்தி, வலி யாவும் மொத்தமாய் மாயமாகி இருந்தது.
“இருங்க வர்றேன்” என்று சென்றவள் இரு நிமிடங்களில் ஐஸ்கிரீம் கப் இரண்டை எடுத்து வந்தாள்.
“ஐஸ்கிரீமா?” அவனுக்கு முகம் மாற, “ம்ம் ஆமா! சாக்லேட் ஐஸ்கிரீம். அது உங்களுக்கு பிடிக்காதுல்ல. எனக்கு சாப்பிடனும் போல இருக்கவும் கொண்டு வந்தேன்” என்று சொல்ல,
“பிடிக்காதா? சாக்லேட் ஐஸ்கிரீம் எனக்கு ரொம்ப பிடிக்கும்” அவனுக்கு எச்சில் ஊற ஆரம்பித்தது.
“சாப்பிட பிடிக்காதுனு யுகி சொன்னான்” அவள் கேள்வியாக நோக்க, “ம்ம்! அவ போன பிறகு..” என சொல்ல வந்தவன் அவளது அனல் பார்வையில் கப்சிப்பென்று ஆகி விட்டான்.
“போன பிறகு வந்த பிறகுனு சொல்லுறீங்களே. உங்களை விட்டுப் போன பிறகு அவங்க எதையாவது சாப்பிடாம இருந்து இருப்பாங்களா? லூசுத்தனமா பண்ணாதீங்க. உங்களுக்கு பிடிச்ச எல்லாமே இனி பண்ணனும்” கடுமையாக சொன்னாள்.
“அய்யோ சரி ஜானு. இப்போ கொடு” என்று கேட்க, “முடியாதே! அன்னிக்கு நான் வற்புறுத்தியும் சாப்பிடல தானே? இன்னிக்கும் நானே ரெண்டையும் சாப்பிட போறேன்” அவள் சாப்பிட ஆரம்பிக்க,
“இது சரியில்லை. பார்க்க வெச்சுட்டு சாப்பிடாத” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
“இனிமே தேவை இல்லாம சோகம் சுண்டக்கா, போன பிறகு புடலங்கானு சொன்னா அவ்வளவு தான்” ஐஸ்கிரீமை அவன் புறம் நகர்த்தி வைத்தாள்.
ஐஸ்கிரீமைக் கண்டவனுக்கு கண்கள் மின்னின. சாப்பிட்டு எத்தனை வருடங்களாகி விட்டன? வாயில் வைத்துச் சுவைத்தவனுக்கு தேவாமிர்தம் போல் தொண்டைக்குழிக்குள் இறங்கியது.
“பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை..
பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை..” அவனுக்கு ஐஸ்க்ரீம் மீதுள்ள பிடித்தத்தைப் பார்த்து அவள் பாட ஆரம்பிக்க,
“எதற்கு உன்னைப் பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்து கொள்ளத் துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே..
பிடிக்குதே…” என்று பாடிய சத்ய ஜீவாவின் உள்ளமோ அவள் மீதான பிடித்தத்தில் பித்துக் கொண்டது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி