76. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(5)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!!

ஜனனம் 76

 

காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் சத்யா, ஜனனி, சிறுவர்கள் மற்றும் ரூபன். மாரிமுத்து வழுக்கி விழுந்து காலில் கட்டுடன் இருக்கிறார் என்ற தகவலில் ஜனனி செல்ல வேண்டும் எனக் கூறவே இவர்கள் வந்து விட்டனர்.

 

தேவனும் மேகலையும் பிறகு ஒரு நாள் வருவதாகக் கூறி விட, “உங்க ஊரைப் பார்க்க முடியும்ல ஜானு?” துள்ளலுடன் கேட்டான் அகிலன்.

 

“ஆமா! பார்க்கலாமே. உனக்கு ஊரை சுற்றிக் காட்டுறேன்” அவன் முடியைச் சிலுப்பி விட்டாள் ஜனனி.

 

“ரூபி! எதுக்கு கப்பல் கவிழ்ந்த மாதிரி வர்றீங்க? மகி சித்தி கிட்ட போனதும் அவ கூட சேர்ந்து உங்களைக் கிண்டல் பண்ணுறேன் இருங்க” என்று யுகி கூற, “என்னை கிண்டல் பண்ணுவதைத் தவிர உனக்கு வேற வேலை இல்லல்ல படவா” அவன் தலையில் தட்டிவனுக்கு மகியைக் காணப் போகிறோம் எனும் உணர்வில் உள்ளம் துள்ளியது.

 

வீடு வந்ததும் அனைவரும் இறங்கிக் கொண்டனர். ஜனனிக்கோ தலை சுற்றுவது போல் இருக்க, தடுமாறி நின்றாள்.

 

“ஜானு!” அவளின் கையைப் பிடித்துக் கொண்ட சத்யா, “என்னாச்சு டா?” எனக் கேட்க, அவனது அன்பில் உருகிப் போனாள்.

 

“கார்ல வந்தா அப்படித் தானே? கொஞ்சம் நேரத்தில் சரியாகிடும்” என்று கூற, “பார்த்து வா ஜானு” யுகி அவளின் மற்றைய கையைப் பிடித்துக் கொண்டான்.

 

“அப்பாவைப் பார்க்க வந்திருக்கோம். நீங்க மூனு பேரும் சேர்ந்து என்னை நோயாளியாக்கி வெச்சிடுவீங்க போல” சிரித்து விட்டவள் மெதுவாக நடக்க அவள் பக்கமாகவே நடந்து சென்றான் சத்யா.

 

“அக்காஆஆ” ஓடி வந்து தன்னைக் கட்டிக் கொண்ட மகியைக் கண்டு, “மகி குட்டி” அவளின் தலை கோதி விட்டாள் ஜனனி.

 

ரூபனின் கண்கள் அவளுடன் உறவாடின. அவளோ அவனைப் பார்ப்பதை மொத்தமாகத் தவிர்த்து விட்டிருந்தாள்.

 

“வாங்க மாப்பிள்ளை. வா ஜானு! வாங்க வாங்க” அனைவரையும் வரவேற்றார் ஜெயந்தி.

 

முழங்கால் வரை கட்டுடன் அமர்ந்திருந்த தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள் ஜனனி.

 

“இப்போ கால் வலி எப்படி இருக்குப்பா?” என்று விசாரித்த மகளை, “நல்லா இருக்கேன் ஜானு” அன்பு கனிய நோக்கினார் மாரிமுத்து.

 

“தாத்தா” தன்னருகே ஓடி வந்த சிட்டுக்களைப் பார்த்தனர் மூவரும்.

 

அகியை இன்று தானே நேரில் பார்க்கிறார்கள். யுகனையே அச்சில் வார்த்து நிற்பவனை ஆச்சரியமும் அன்பும் கலந்து ஏறிட்டனர்.

 

“இப்படி உட்கார்ந்துக்கங்க” என்று ஜனனி சொல்ல, “ஓகே ஜானு” சட்டென்று அமர்ந்து கொண்ட இருவரையும் அவர்களுக்கு இன்னும் பிடித்துப் போனது.

 

ஜனனியின் முகத்தில் தெரிந்த பிரகாசமும், அவள் மீதான சத்யாவின் பார்வையும், குழந்தைகளின் ஜனனி மீதான அன்பும் அவளது குடும்பத்திற்கு பூரண திருப்தியைத் தந்தன.

 

அவர் காலைப் பரிசீலித்து விட்டு “டூ த்ரீ வீக்ஸ் எங்கேயும் நடமாடித் திரியாம ரெஸ்ட் எடுங்க மாமா” என்று கூறினான் ரூபன்.

 

“அதான் தம்பி நானும் சொன்னேன். அங்கே வேலை இல்லைனாலும் இவருக்கு வீட்டில் இருக்க முடியாது. ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை எட்டிப் பார்த்துட்டு வரலனா தூக்கம் போகாது. இப்போ பார்த்தீங்களா?” ஆதங்கத்துடன் சொன்னார் ஜெயந்தி.

 

“இது பெரிய விஷயம் இல்ல ஜெயா. சரியாகிடும்” என்ற மாரிமுத்து, “உங்கம்மா எதுக்கு இப்படி இருக்கானு தெரியல. கண்டதுக்கும் மூக்கை உறிஞ்சுறா. நான் வேணும்னே போய் விழுந்ந மாதிரி திட்டு விழுது” ஜனனியிடம் முறையிட்டார்.

 

“அம்மாவுக்கு உங்களை அவ்ளோ பிடிக்கும்பா. அதான் உங்களுக்கு ஒன்னு என்றதும் தவிச்சு போயிடுறாங்க” என்று ஜனனி சொல்ல, மாரிமுத்துவின் அன்புப் பார்வை மனையாளைத் தீண்டியது.

 

“எஸ் தாத்தா! ஜெயா பாட்டிக்கு உங்க மேல நிறைய லவ்” கைகள் இரண்டையும் விரித்துக் காட்டினான் யுகன்.

 

“என்னது லவ்வா?” மாரிமுத்துவின் முகம் அஷ்டகோணலாக மாறியது.

 

நந்திதா சென்ற பின்னால், அவருக்கு அந்த வார்த்தையே வெறுத்துத் தான் போனது.

 

“லவ்னா பாசம் மாமா. உங்களுக்கு அத்தை மேல பாசம் இருக்கு தானே? அந்த வயசுல அவங்க கூட புது மாப்பிள்ளை கணக்கா பைக்ல மீசையை முறுக்கிட்டு போயிருப்பீங்க இல்லையா?” ரூபன் கேட்ட கேள்வியில் மகியும் ஜானுவும் அதிர்ந்து விழித்தனர்.

 

மாரிமுத்து கறாரானவர் அல்லவா? அவரிடம் ஒருவருமே அப்படி நகைச்சுவையாக பேசுவதில்லை. உறவுக்கார இளசுகளைக் கூட ஒற்றைப் பார்வையில் தூர நிறுத்தி விடுவார்.

 

ஜெயந்தியோ வெட்கப்பட்டு சிரிக்க, அதைப் பார்த்த மாரிமுத்துவும் அடர்ந்த மீசைகளுக்குள் பற்கள் தெரியச் சிரிக்க, “ஹேஏஏ! தாத்தா சிரிச்சிட்டாரு” அகிலன் கை தட்டிச் சிரித்தான்.

 

“சிங்கக் குட்டிங்களா” இருவரது கன்னத்தையும் கிள்ளி விட்டார் மாரிமுத்து.

 

சத்யாவுக்கும் மனம் பூரித்தது. இன்னொரு கல்யாணம் வேண்டாம் என்று அவன் கூறக் காரணம், வருகின்ற பெண்ணும் அவளது குடும்பமும் தன் பிள்ளைகளை வேறுபாடின்றி நடத்துவார்களா என்ற அச்சத்தினால் தான்.

 

அதற்கு இடமே இன்றி ஜனனி நடந்து கொண்டாள். நினைத்தது என்ன? அதற்கு மேலாகவே அவள் இருவரையும் உயிரில் சுமக்கிறாள். அவளது குடும்பத்தினரும் தம் சொந்தப் பிள்ளைகள் போல் இருவரையும் நடத்துவது அவனை நெகிழச் செய்தது. 

 

“வாங்க சாப்பிடலாம்” அனைவரையும் ஜெயந்தி அழைக்க, “எங்க மூனு பேருக்கும் ஜானு ஊட்டுவா” என்று சொன்னான் அகி.

 

யுகி, அவனை முறைத்துத் தள்ள, “மூனு பேரா?” மகிஷா புருவம் சுருக்கினாள்.

 

“எனக்கும், யுகிக்கும், டாடிக்கும் ஜானு தான் ஊட்டுவா” என்று அவன் விளக்கம் கொடுக்க, ஜனனியும் சத்யாவும் ஒருவரை ஒருவர் முழித்துப் பார்த்தனர்.

 

அதிலும் அவனின் டாடி எனும் அழைப்பு சத்யாவை ஒரு புறம் சிறகின்றிப் பறக்க வைத்தது.

 

“அ..அது இல்ல!” தடுமாற்றத்துடன் இருவரும் சொல்ல, “இருங்க! எல்லாம் எடுத்து வைக்கிறேன்” என்றவாறு மகியை அழைத்துக் கொண்டு சென்றார் ஜெயந்தி.

 

யுகியின் முறைப்பைப் பார்த்த அகி, “எதுக்கு இவ்ளோ காரமா முறைக்கிற?” என்று கேட்க, “டாடிக்கு ஜானு ஊட்டுறதை ஏன் எல்லார் முன்னாடியும் சொன்ன?” முறைப்போடு கேட்டான் யுகி.

 

“ஏன் சொல்லக் கூடாதா. அது கெட்ட விஷயம் இல்லல்ல. நல்ல விஷயத்தை யார் கிட்டவும் சொல்லலாம். நான் நர்சரி ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கூட சொன்னேனே” ஜனனியின் ஹார்ட் பீட்டை எகிற வைத்தான் அகிலன்.

 

“வேற யார் கிட்டடா சொன்ன?” அவள் வாய் பிளந்து கேட்க, “ஞாபகம் இல்ல ஜானு. சொல்லி இருப்பேன்” என்றவனோ,

 

“நர்சரி வர்ற ஆகாஷ் அவனோட அம்மா சுகமில்லாததால சாப்பிடலனு சொன்னான். நான் அவங்களுக்கு ஊட்டி விட சொன்னேன். அவங்க அவனை விட பெரியவங்க தானே எப்படி ஊட்டுறதுன்னு கேட்டான். எங்க டாடி ஜானுவை விட பெருசு தான். ஆனாலும் ஜானு ஊட்டி விடுவாங்க. டாடியும் சாப்பிடுவாங்கனு சொன்னேன். உண்மையான அன்போட யார் ஊட்டி விட்டாலும் அவங்களுக்கு மறுக்கத் தோணாதுன்னு ஜானு சொன்னதையும் சொன்னேன்” நாடியில் கை வைத்துக் கதை சொன்னான் அகி.

 

“ஓஓ! அதைத் தான் அவன் கிட்ட பேசிட்டு இருந்தியா? அடுத்த நாள் வந்து ஊட்டி விட்டேன்னு சொன்னானே” யுகனும் தலையாட்டிச் சொல்ல,

 

“ஆமா யுகி. அவங்கம்மா சந்தோஷப்பட்டாங்களாம். அவன் ஊட்டுன எல்லாமே வேணாம்னு சொல்லாம சாப்பிட்டாங்களாம். இதை நான் வெளியில் சொன்னது தப்பா ஜானு?” அகி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வினவினான்.

 

“இல்ல செல்லம். இதை சொல்லி ஒரு நல்லது பண்ணி இருக்கல்ல. அதுவே பெரிய விஷயம். வெர்ரி குட் அகிம்மா” அவனது தலையைத் தடவி விட்டாள்.

 

ஜெயந்தி உணவு கொண்டு வர, “என் கிட்ட கொடுங்க பாட்டி” என்று கேட்ட யுகனைப் புருவம் சுருக்கிப் பார்த்தனர் அனைவரும்.

 

“இன்னிக்கு ஜானு ஊட்ட மாட்டா. நான் தான் ஜானுவுக்கு ஊட்டப் போறேன்” என்று சொல்லி விட்டான்.

 

“யுகி நீயா?” அவள் வியந்து பார்க்க, “ஆமா. ஆகாஷுக்கு அகி சொன்ன விஷயம் ரொம்ப நல்லதுல்ல. அதையே நானும் பண்ணனும்னு ஆசைப்படுறேன்” என்றவாறு ஜனனிக்கு ஊட்டி விட்டான்.

 

“அப்போ நான்?” அகிலன் கன்னத்தில் கை வைத்து யோசிக்க, “நீ டாடிக்கு ஊட்டு” என்று ஜனனி சொன்னதை அவனும் ஏற்றுக் கொண்டான்.

 

“அப்போ எனக்கும் பசிக்குதே” யுகி பாவமாகச் சொல்ல, “யுகிக்கும் அகி ஊட்டுவானாம். அகிக்கு நீ ஊட்டி விடு” என்றான் ரூபன்.

 

“குட் ஐடியா டா” என்றான் சத்யா.

 

யுகனும் மறுப்பு சொல்லாமல் அகிக்கு ஊட்ட, அகி யுகனுக்கு ஊட்டினான்.

 

அக்குடும்பத்தைப் பார்க்கும் போது யாவருக்கும் மனம் நிறைந்தது. மாறி மாறி ஊட்டி விடும் செயலுக்குக் காரணம் அன்பைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

 

ஜனனிக்கும் யுகிக்கும் சுமுகமான உறவில்லை. சத்யா மற்றும் அகிக்கு இடையில் சொல்லும் அளவு பிணைப்பில்லை. முக்கியமாக சிறுவர்கள் இருவருக்கும் நடுவே ஒட்டுதலுடனான நெருக்கம் மலரவில்லை. 

 

இருந்தும் அங்கு அன்பு ஆட்சி செய்தது. உறவு எனும் நிலைப்பாடு நெருக்கத்தை அங்கு பூக்கச் செய்தது.

 

மற்றவர்களும் சாப்பிட்டு முடிக்க, ஜனனியைத் தனதருகில் அமர வைத்துக் கொண்டார் மாரிமுத்து.

 

“உன் வாழ்க்கையை நெனச்சு பாதி உசுர கையில் புடிச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ மனசு குளிர்ந்து போச்சுமா. உன் நல்ல மனசு உனக்கு இப்படிப்பட்ட அழகான குடும்பத்தையும், அழியாத சந்தோஷத்தையும் தந்துடுச்சு.

 

உங்களுக்கான சந்தோஷத்தை, சுதந்திரத்தை நான் தர மறுத்துட்டேன்னு தோணுது. மாப்பிள்ளை அவர் பசங்க மேல காட்டுற அன்னியோன்னியத்தைப் பார்க்கும் போது உங்களை விட்டு விலகியே இருந்து பெரிய தப்பு பண்ணிட்டேன்னு நெஞ்சு குறுகுறுக்குது” வேதனையில் கசங்கியது அவர் முகம்.

 

“அப்படிலாம் இல்லப்பா. எல்லாரும் ஒன்னு மாதிரி இல்லயே. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொரு உறவும் வெவ்வேறு விதமானது. எப்படி இருந்து இருந்தாலும் நீங்க எங்களுக்கு அப்பா தான். உங்க கடுமைக்குப் பின்னாடியும் நாங்க அன்பை உணர்ந்திருக்கோம். அப்பா மகள் என்கிற பந்தம் நமக்கு நடுவில் பலமா இருக்குப்பா. அது என்னிக்கும் மாறாது. நீங்க இப்படி யோசிக்கவே வேண்டாம்” என்றவளுக்கு அவரது நெகிழ்வான வார்த்தைகளில் கண்கள் துளிர்த்தன.

 

“நீ நல்லா இருக்கனும் ஜானு! எல்லாருமே நல்லா இருக்கனும்” இச்சமயம் அவர் மனம் நந்திதாவையும் நினைத்துக் கொண்டார்.

 

“ஜானூஊஊ” என்றவாறு அகியும் யுகியும் ஓடி வந்தனர்.

 

“என்னடா?” அவள் கேட்க, “டாடி வெளியில் போயிட்டார். மகி சித்தி கேமரா எடுத்துட்டு வந்திருக்கா. எங்களோட உன்னையும் சேர்த்து வெச்சு ஃபோட்டோ எடுக்கப் போறதா சொன்னா. வர்றியா?” என்று அழைத்தான் யுகி.

 

“ஓகே டா” என்று தந்தையிடம் சொல்லி விட்டுச் சென்றவள், இருவரையும் மடியில் அமர வைத்துக் கொண்டாள்.

 

“கழுத்தில் கை போடுக்கா” என மகி சொல்ல, தோளில் கை போட்டுக் கொண்டாள்.

 

“பர்பெக்ட்” மூவரையும் புகைப்படம் எடுக்க, “ஆமா சூப்பரா இருக்கு” என்று துள்ளிய அகியோடு யுகியையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள் தாயுமானவள்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!