77. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(5)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 77

 

தன் முன்னே வந்து நின்ற ரூபனைக் கண்டு அதிர்ந்து நின்றாள் மகி. அவனை விட்டு விலகிச் செல்ல எத்தனிக்க, “இன்னும் எவ்ளோ தூரம் தான் என்னை விட்டு ஓடுவ?” கடினமான குரலில் கேட்டான் ரூபன்.

 

“பக்கத்தில் இருக்க முடியலனா தூரமா ஓடத் தானே வேணும்” அவன் முகம் பாராது பதிலளித்தாள்.

 

“வேற யார் பக்கத்தில் இருக்க ஐடியா? பேசுற பேச்சைப் பார்த்தா ஐடியா பண்ணிட்ட போல விளங்குது” புருவம் தூக்க, “ரூபன்ன்” சிவந்த விழிகளை அவன் மீது நிலைநாட்டினாள்.

 

“ஏன் சவுண்டு விடுற? நான் சொல்லுறது பொய்யா?”

 

“உன் கிட்ட உண்மை எது பொய் எதுனு நிரூபிக்க முடியாது. அதற்கான அவசியமும் இல்ல” அவனை விட்டு விலகிச் செல்வது ஒன்றே குறியாக இருந்தது அவளுக்கு.

 

“நீ போகனும்னு நெனக்கிற ஒவ்வொரு நேரமும், எனக்கு பக்கத்தில் வரனும் போல இருக்கு. சோ, என்னை ஏடாகூடமா எதுவும் பண்ண வைக்காம நான் சொல்லுறதை மட்டும் கேள்” மேலும் நெருங்கி நின்றான் ரூபன்.

 

“உ.. உங்களுக்கு என்ன வேணும் இப்போ? யாராவது பார்த்தா என்ன நெனப்பாங்க?” இமைகள் பட்டாம்பூச்சியின் சிறகுகளாகப் படபடத்தன.

 

“நீ சாப்பிடனும்” அவன் சொல்ல, “நான் சாப்பிட்டேன்” பட்டென்று சொன்னாள் அவள்.

 

“அதை நானும் பார்த்தேன். கிளி பழத்தைக் கொத்துற மாதிரி கடுகு சைஸ்ல சாப்பிட்டு சரி வராது. ஒழுங்கா சாப்பிடு. இல்லனா நடக்கிறதே வேற” அவனின் பிடிவாதம் அவள் அறிந்தது அல்லவா?

 

இருப்பினும் அவன் சொன்னதை ஏற்க முடியாமல் மனம் முரண்டு பிடிக்க, “அப்பறமா சாப்பிடுறேனே. ஏன் இப்படி டார்ச்சர் பண்ணுறீங்க. உங்களுக்கு நான் சாப்பிட்டா என்ன சாப்பிடலனா என்ன?” கடுப்புடன் கேட்டாள் காதலி.

 

“இந்த மாதிரி வேணும்னே பேசி இர்ரிடேட் பண்ணாத. வாய்க்கு வந்ததைப் பேசும் போது காண்டாகுது. என் பொறுமைக்கும் ஒரு லிமிட் இருக்கு சொல்லிட்டேன்”

 

“லிமிட்டைப் பற்றி நீங்க பேச வேண்டாம் சார். வேணாம்னு சொன்ன பொண்ணு கிட்ட லிமிட்டை க்ராஸ் பண்ணி பேசுறது நீங்க தான்” அவளை உறுத்து விழித்தான்.

 

“என்ன வேணாம்னு சொன்ன? என்னையா? என் முகத்தைப் பார்த்து தைரியமா சொல்லு பார்ப்போம் உனக்கு என் மேல துளி கூட லவ் இல்லனு” அவளின் கையைப் பிடிக்க, அமைதியாய் மாறிப் போனாள் மகிஷா.

 

“பத்து கிலோமீட்டர் நீண்டு போன வாய் இப்போ எங்க போச்சு? சொல்லு டி. என்னை உனக்குப் பிடிக்கலனு சொல்லு. பொய் மட்டும் சொன்ன, மனுஷனாவே இருக்க மாட்டேன்” அவனின் கோப முகத்தைக் கண்டு, அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

“நானும் எவ்வளவு தூரம் தான் தாங்குறது? என் வாயைக் கிளறி எதையாவது கேட்டுக்கிற. உன் அழுகையைப் பார்த்தாலும் எனக்கு தான் கஷ்டம். கண்ணைத் துடை முதல்ல” அவளின் கண்களைத் துடைத்து விட்டான்.

 

“ப்ளீஸ் ரூபன் என்னை விட்டுடுங்க” என்றவளுக்கு ஒரு அளவுக்கு மேல் காதலை மறைப்பது கஷ்டமாக இருந்தது.

 

“முடியாது மகி. நான் இல்லனா நீ சந்தோஷமா இருப்பனா நான் போயிடுவேன். உன் சந்தோஷம் என் கிட்ட இருக்குனு சொல்லுறப்போ, நான் எப்படி போவேன்? தூங்காம, சாப்பிடாம, சிரிப்பு இல்லாம நீ எப்படி வாடிப் போயிருக்க தெரியுமா?

 

நீ இல்லாம நான் கூட இருந்துடுவேன். உன்னை மனசார நெனச்சிட்டு வாழ்ந்துடுவேன். ஆனால் நான் இல்லாம நீ கஷ்டப்படுவியேங்குறது தான் என்னைக் கொல்லுது. இந்த கஷ்டம் எல்லாம் போதும் மகி. ஒரு வார்த்தை சொல்லு. உன் அப்பா கிட்ட நான் பேசுறேன்” அவன் நெஞ்சுருகிப் பேசும் போது அவள் இதயம் மெல்ல மெல்ல நழுவியது.

 

“மகீஈஈ” உயிர் பிசையும் குரலில் அவன் அழைக்க, சட்டென்று தெளிந்தாள்.

 

காதல் வலையை அறுத்துக் கொண்டாள். மீண்டும் அவளுள் ஊறிக் கிடந்த அச்சம் முளை விட ஆரம்பித்தது.

 

“வேண்டாம் ரூபன்! போனது போனதாகவே இருக்கட்டும்‌‌. நமக்கு நடுவில் வேறெந்த உறவும் வேண்டாம். ஜானு சொன்னதைக் கேட்ட தானே? அவங்க ஆசையில் மண்ணள்ளிப் போட நான் விரும்பல” தீர்க்கமாக சொன்னாள் அவள்.

 

“அப்படினா? நான் வேணாம்னு முடிவு பண்ணிட்டியா? அவங்களுக்காக யோசிக்கிறது ஓகே. பட் உன்னைப் பற்றி யோசிக்க மாட்டியா? உன்னால இந்த வேற ஒருத்தர் கூட வாழ முடியுமா?” அவன் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

 

“உன்னால சொல்ல முடியாது மகி. உன் மனசுல நான் இருக்கேன். காதல் வரலனா நீ இப்படி பேசுறது ஓகே. காதலிச்ச பிறகு பேசுறது சரியா? கொஞ்சம் யோசிச்சு பார் மகி. உனக்காக நான் எத்தனை வருஷமானாலும் காத்திருப்பேன். ஆனால் உன்னை வீட்டில் வெச்சுக்க மாட்டாங்கள்ல.

 

எப்படியும் கல்யாணம் பேசுவாங்க. யாரையோ கல்யாணம் பண்ணிக்க தானே போற. அது ஏன் நானா இருக்கக் கூடாது? உன் அப்பா கிட்ட பேசு. இல்லனா என்னைப் பேச விடு” அவளின் அனுமதி வேண்டி நிற்கலானான்.

 

“வேண்டாம்! யாரும் பேசத் தேவையில்லை. தலையே வெடிக்கப் பார்க்குது ரூபன். தயவு செஞ்சு என்னைத் தனியா விடுங்க. தப்பா எதுவும் பேசினா சாரி! ஆனால் என் வாழ்க்கை மேல உங்களுக்கு அக்கறை வேண்டாம். எனக்கு உங்க காதலும் வேண்டாம்” விறுவிறுவென செல்பவளை வெறித்துப் பார்த்தான் வேங்கை.

 

………..

வயலைக் கண்ட அகிலன் துள்ளிக் குதித்து ஒரு ஆட்டம் போட்டு விட்டான். 

 

“அவனைப் பாருங்க டாடி!” கிண்கிணி நாதமாய்ச் சிரித்தான் யுகன்.

 

“இதெல்லாம் புதுசுல்ல அதான் டா” என்ற சத்யாவின் கண்கள் மகியோடு கதைத்துக் கொண்டிருந்த ஜனனி மீதே இருந்தன.

 

“இன்னிக்கு ஜானு ரொம்ப ஹேப்பியா இருக்காள்ல?” அங்கு வந்த அகி சத்யாவிடம் அமர்ந்து கொண்டான்.

 

“ஆமா அகி! பொண்ணுங்க அப்படித் தான். எவ்வளவு தான் சந்தோஷமா இருந்தாலும், பிறந்த வீட்டுக்கு போனா அவங்க வேற மாதிரி ஹேப்பியாகிடுவாங்க. அப்பாம்மா கிட்ட இருக்கிறதே சந்தோஷம் தானே?” என்று சத்யா சொல்ல,

 

“எதுக்கு டாடி கல்யாணம் பண்ணுன பிறகு பொண்ணுங்க மட்டும் வீட்டை விட்டு வர்றாங்க. அவங்க அப்பாம்மாவை மிஸ் பண்ணுவாங்க தானே?” யோசனையாகப் பார்த்தான் யுகி.

 

“அது வழக்கம் கண்ணா. அப்படியே காலம் பழக்கப்படுத்திடுச்சு. ஆம்பளை வீட்டில் பொண்ணுங்க இருக்கனும்னே எழுதிட்டாங்க. அந்த பொண்ணுங்களை முடிஞ்ச அளவு சந்தோஷமா வெச்சுப் பார்த்துக்கனும். அதை மட்டுமே ஆம்பளைங்களால பண்ண முடியும்” என்றுரைத்தவாறு வந்து அமர்ந்தாள் ஜனனி.

 

“பொண்ணுங்க பாவம் தானே? ஜானுவையே பாருங்க. எத்தனை வேலை? வீட்டு வேலை செய்யுறாங்க. எங்களை பார்த்துக்கிறாங்க” என்று அகி கன்னத்தில் கை வைத்துச் சொல்ல,

 

“பதிலுக்கு அவங்க எதிர்பார்க்கிறது அன்பைத் தான் அகி. அவங்க மேல அன்பா, அக்கறையா இருந்தா எல்லாத்தையும் கஷ்டம் பார்க்காம பண்ணுவாங்க. பொண்ணுங்களை நாம மதிக்கனும். அதுவும் அம்மாங்குற உறவு தான் உலகத்திலேயே உன்னதமானது. குடும்பத்துக்காக தியாகங்கள் செய்யுற அம்மாவுக்கு ஆதரவாக இருந்து அன்பை அள்ளிக் கொடுக்கனும். புரிஞ்சுதா?” சத்யாவின் வார்த்தைகளை ஆழமாக உள்வாங்கிக் கொண்டனர் இருவரும்.

 

ஜனனியின் நயனங்கள் கணவனை வருடிச் சென்றன. அவளைத் தன் குழந்தைகளின் தாயாக ஏற்றதை அப்பட்டமாக உணர்த்தியது அவனின் பேச்சு.

 

“நந்திதா வர்றா” என்ற சத்யாவின் கூற்றில் ஜனனி திரும்ப, எழிலுடன் வந்து கொண்டிருந்தாள் நந்திதா.

 

“ஜானு” என்று அழைத்தவாறு வந்தவளை, “அக்கா” என அணைத்துக் கொண்டாள்‌ ஜனனி. மகியும் அவர்களது அணைப்பில் இணைந்திட, சகோதரிகளின் உள்ளத்தில் பிரிவின் தாக்கம் மறைந்து, மகிழ்வு மழை தூறத் துவங்கியது‌.

 

“எப்படி இருக்கே மகி குட்டி?” நந்திதா அவளின் கன்னம் வருட, “இருக்கேன்கா. உன் கூட அன்னிக்கு பேச முடியாம போச்சு. அப்பா திட்டிட்டார்ல. ஒன்னும் நெனச்சுக்காத” முகம் வாடக் கூறினாள் மகி.

 

“அச்சோ சாரி ஜானு! உங்களைக் கண்டதும் சந்தோஷத்தில் தலை கால் புரியாம ஓடி வந்துட்டேன். யாராவது பார்த்தா பிரச்சினை ஆகிடும்ல? அப்பாவுக்கு செய்தி போனா உங்க மேல கோபப்படுவார். நான் வர்றேன்” பதற்றத்துடன் நகரப் போனவளின் கையைப் பிடித்து நிறுத்தினாள் ஜனனி.

 

“உன் கூட பேசினது அப்பாவுக்கு தெரியும் நந்து. உன் கூட பேசுறதால அவரை விட்டுக் கொடுத்துட்ட மாதிரி நினைக்கிறீங்களானு கேட்டேன். இல்லனு சொல்லிட்டார். உன் கூட பேசுறது அவருக்கு பிரச்சினை இல்லை” என்று சொல்ல நந்துவுக்கு கண்கள் கலங்கின.

 

“அப்பா கால்ல அடி பட்டுச்சுனு கேள்விப்பட்டேன். அவர் கட்டு போட்டு வந்ததையும் பார்த்தேன். உரிமையா போய் நலம் விசாரிக்கிற தகுதியை நான் இழந்துட்டேன் ஜானு. அவரைப் பார்க்கும் போது அழுகையே வந்துருச்சு. அதிகம் பேச மாட்டார் தான். ஆனாலும் அவருக்கு நான்னா உசுரு. என் மேல அதிகமா நம்பிக்கை வெச்சு இருந்தார். எல்லாத்தையும் நான் சுக்கு நூறா சிதைச்சுட்டேன்” கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது அவளுக்கு.

 

“ப்ச் நந்து! அதையே நெனச்சு அழாத. முடிஞ்சு போனதை நெனச்சு வருந்துறதால எதுவும் மாறாது. கடந்து தான் வரனும், அதுவரை தாங்கிக்க வேணும்” என்ற ஜனனி மேற்கொண்டு பேசினாள்.

 

“அப்பாம்மா நீ நல்லா வாழனும்னு தான் ஆசைப்படுறாங்க. அவங்களுக்கு ஏற்பட்ட காயம் இந்த மாதிரி கோபப்பட வைக்குது. மற்றபடி நீ வாழக் கூடாதுன்னு நினைக்கல. பிள்ளை மனசு கல்லானாலும் பெத்த மனசு பித்து தான். என் பொண்ணு சந்தோஷமா வாழனும்னு தான் மனசார வேண்டிப்பாங்க. நீ நல்லா வாழ்ந்து காட்டு. அது அவங்களுக்கு மனநிறைவைக் கொடுக்கும் நந்து”

 

ஜனனி சொன்னது சத்தியம். பிள்ளையின் தவறுகளால் மனம் வருந்தி கண்டிப்பதும், தண்டிப்பதும் பெற்றவரின் இயல்பு தான். அது அவர்களது காயத்தின் எதிர்வினை. எத்தனை தவறு செய்திடினும், கோபம் ஏற்படினும் அன்புள்ள எந்தப் பெற்றோரும் பிள்ளையை முற்றாக வெறுத்து விடுவதில்லை.

 

“ஜானு சொன்னது உண்மை. பாஸ்ட் இஸ் பாஸ்ட்! அதை நெனச்சி கண்ணீர் சிந்துறதுல எந்த பிரயோசனமும் இல்லை. நீங்க சந்தோஷமா இருந்தாலே போதும். அவங்க மனசு உருகிடும்” என்று சத்யா சொல்ல, அவனைப் பார்த்து தலையசைத்தான் எழில்.

 

“இது யாரு ஜானு?” அகிலன் யோசனையாகப் பார்க்க, “எனக்கு தெரியும். இவங்க ஜானுவோட அக்கா. நந்து பெரியம்மா” என்று சொன்ன யுகனின் கன்னம் கிள்ளினாள் நந்திதா.

 

“ரெண்டு பேரும் கியூட்டா இருக்கீங்க. நீயும் அப்படியே யுகி போல இருக்க தங்கம்” அகியின் தலையை வருடி விட்டாள்.

 

“நீங்களும் தங்கம் சொல்லுறீங்களா?” என்று கேட்டான் அகி.

 

“ஏன் அப்படி கேட்கிற?” எழில் யோசனையாகக் கேட்க, “ஜானுவும் அப்படித் தானே சொல்லுவாங்க?” சிரிப்புடன் சொன்னான்.

 

“தங்கம் மட்டுமா? தங்கம், வெள்ளி, முத்து, மாணிக்கம், வைரம், செல்லம்னு லிஸ்டே போடுவாங்களே” தலை சரித்துப் புன்னகைத்தான் யுகன்.

 

“கண்மணியை விட்டுட்ட” அகி சொன்னதைக் கேட்டு, “ரெண்டு பேருக்கும் குசும்பு தான்” அவர்களது தலையில் செல்லமாகத் தட்டினாள் ஜனனி.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!