💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 78
தமது வீட்டருகில் இருந்த பார்க்கிற்கு அனைவரையும் அழைத்துச் சென்றாள் ஜனனி. அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்த சிட்டுக்கள் குஷியாகி விட்டனர்.
“முன்னாடி இங்கே வெறும் காடு தான். நாங்க மூனு பேரும் வந்து கண்ணாமூச்சி விளையாடுவோம். செம ஜாலியா இருக்கும்” என்று சொன்னாள் நந்திதா.
தன் மனையாட்டியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை, ஆசை தீர ரசித்தான் எழிலழகன்.
“எவ்வளவு ஆட்டம் போட்டாலும் அந்தி சாயும் முன்னால வீட்டில் இருக்கனும் இல்லனா அவ்ளோ தான். அடிக்கடி லேட்டாகி போயிருக்கோம். தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுறது, வீடு பெருக்கிறதுனு அப்பா கிட்ட டிசைன் டிசைனா பணிஷ்மண்ட் கிடைக்கும்” அந்தக் கால ஞாபகங்களை நினைவு கூர்ந்தாள் ஜனனி.
“அது கூட பரவாயில்லையே ஜானு. நூறு கணக்கு தந்து செய்ய வெச்சாரே அதுக்கு தான் நாக்கு தள்ளி போச்சு. நான் பாதியில் புக் மேல தலை வெச்சு தூங்கி, அதுக்கு வேறயா ஏச்சு வாங்கிட்டேன்” மகி சொன்னதைக் கேட்டு, அந்நாள் நினைவில் சிரித்தனர் சகோதரிகள்.
“நீங்க செம்ம சித்தி. நல்லா ஜாலியா கதை சொல்லுறீங்க” என்றான் அகி.
“டேய்! நானும் கதை சொல்லுவேன் தானே? எனக்கு இப்படி சொல்லி பாராட்டி இருக்கியா?” முறைத்துப் பார்த்தாள் ஜனனி.
“நீங்களும் சொல்லுவீங்க. ஆனால் நீங்க சமத்து பிள்ளை தானே. அப்பா சொல்லுவதைக் கேட்குறது, டீச்சர் கிட்ட பாராட்டு வாங்குறதுனு கியூட்டான ஸ்டோரீஸ் தான் இருக்கும்” என்று அகி சொல்ல,
“எஸ் ஜானு! ஆனால் மகி சித்தி அப்படி இல்லல்ல. டீச்சர் கிட்ட அடி வாங்குறது, தாத்தா கிட்ட தண்டனை வாங்குறது, திருட்டு மாங்கா பறிக்க போய் மாட்டுறதுன்னு அவங்க ஸ்டோரி ஃபயரா இருக்கும். சும்மா த்ரில்லிங்கா இருக்கும்” யுகி சொன்ன விதத்தில் அங்கே பெருத்த சிரிப்பலை.
“ஆக மொத்தத்தில் உங்களுக்கு சுட்டியா இருக்கனும். சமத்தா இருந்தா சரி வராது அப்படித் தானே?” என்று கேட்டான் சத்யா.
“எக்ஸாட்லி அண்ணா! இனம் இனத்தையே சாரும்” என்று மகியைப் பார்த்தபடி சொல்ல, ‘நீயும் அதே இனம் தான்டா’ கடுமையாக முறைத்தாள் அவள்.
அவ்விடத்தால் ஐஸ்கிரீம் வண்டி சென்றதைக் கண்டு நிறுத்தினான் எழில். சென்று பார்த்தவன் முகம் சுருக்கி நிற்க,
“என்னாச்சு?” புரியாமல் கேட்டாள் நந்து.
“எல்லாம் முடிஞ்சிருச்சு. ஒன்னு தான் மீதம் இருக்காம்” இருவர் இருக்கும் போது ஒன்றை எப்படி வாங்குவது என்று யோசனை செய்தான் அவன்.
“அதை வாங்கித் தாங்க பெரியப்பா. நாங்க ஷேர் பண்ணி ஹால்ஃப் சாப்பிடுவோம்” என்று சொன்னான் யுகி.
“அப்படி வாய் திறந்து கேட்பியா? ஒருத்தர் வாங்கி தந்தா தான் எடுக்கனும்” என்று கேட்டான் அகி.
“மத்தவங்க கிட்ட கேட்கக் கூடாது. பெரியப்பா கிட்ட கேட்கலாம் தானே? நானா கேட்கலையே. அவர் வாங்கி தர போய் தான் அவருக்கு ஐடியா சொன்னேன்” என்றான் யுகன்.
“நல்ல பிள்ளைங்க” அவர்களது முதிர்ச்சியான பேச்சில் வியந்து பாராட்டினாள் நந்து.
எழில் ஐஸ்கிரீமை நீட்ட, அதை வாங்கிக் கொண்டான் யுகி. அவன் அரைவாசி சாப்பிட்டு விட்டு அகியிடம் கொடுக்க, அவனும் ருசித்து சாப்பிட்டான்.
“ராஜீவ் கல்யாணத்துக்கு இன்விடேஷன் தந்தாங்க ஜானு. உனக்கும் வர சொல்லி அத்தை வேறயா கார்ட் அனுப்பினாங்க. நெக்ஸ்ட் வீக் கல்யாணம்” என்று மகி கூற, சத்யாவின் பார்வை ஜனனி மீது திரும்பியது.
“ஓகே மகி. பார்ப்போம்” என்றவளுக்கு அது பெரிய விடயம் போல் தோன்றவில்லை.
அவளுக்கு இப்பொழுதெல்லாம் ராஜீவ் நினைவு வருவதே இல்லை. சமையல், நர்சரி செல்வது என்பவற்றின் பிறகு அகி, யுகியுடனே அவளின் நேரம் கழியும். இதில் அவனை நினைக்கத் தான் நேரம் இருக்கும்.
சத்யாவிடம் இனியா பற்றி சொல்லும் போது கூட, ராஜீவ் விடயத்தை நினைவுறுத்தி, ‘பழையதை இனி நினைக்கக் கூடாது. சத்யா வாழ்க்கையில் இனியா எப்படி முடிந்து போன அத்தியாயமோ, எனது வாழ்வில் ராஜீவ் அப்படித் தான்’ என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“நாங்க கிளம்பனும். டைம் ஆகுது” சத்யா கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு சொல்ல, ஜனனியின் வீட்டிற்குப் புறப்பட்டனர்.
“நந்து கிட்ட பேசுனியாம்” ஜனனியைக் கண்டதும் ஓடி வந்து ரகசியமாகக் கேட்டார் ஜெயந்தி.
“அதுக்குள்ள நியூஸ் வந்தாச்சா? இந்த ஊருல மட்டும் ஒரு தகவல் எப்படித் தான் வைரஸை விட பவரா பரவுதோ?” அலுத்துக் கொண்டாள் மகி.
“எங்களைப் பார்த்துட்டு வந்தாம்மா. அப்பாவைப் பார்க்க வர முடியலன்னு ரொம்ப வருத்தப்பட்டா” நந்து சொன்ன விடயங்களைப் பகிர்ந்து கொண்டாள் ஜானு.
“எப்படி இருந்திருக்க வேண்டியவ. அவளே அவ தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கிட்டா. என்ன பண்ணுறது. என் பொண்ணுங்க நல்லா இருக்கனும்” கவலையுடன் சொன்னார்.
“நந்து கிட்ட நான் சொன்னேன் மா. அவ சந்தோஷம் தான் எங்களுக்கு வேணும்னு சொன்னேன். அவ நல்லா இருப்பா. நம்ம குடும்பம் பழைய கசப்புகள் இல்லாம சீக்கிரமே பழையபடி மாறும். இல்லல்ல! இன்னும் அழகாகவே மாறும். நாம நம்புவோம்” தாயை அணைத்துக் கொண்டாள் ஜனனி.
அவளின் நம்பிக்கையான வார்த்தைகள் ஜெயந்தியினுள் புதுத் தெம்பைப் பிறக்க வைத்தன. யாவும் நலமாக மாற வேண்டுமென மனமுருகி வேண்டிக் கொண்டார்.
……………….
தேவனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தாள் வினிதா. அவளது கைகள் இரண்டும் அவனின் இடுப்பைச் சுற்றிப் பிடித்திருந்தன.
“கையை எடு வினி. கூச்சமாகுது” அவளின் ஸ்பரிசத்தில் தேவனுக்கு குறுகுறுத்தது.
“இன்னிக்கு நேத்தா பிடிக்கிறேன்? முன்னெல்லாம் நான் இதை விட டைட்டா பிடிச்சுப்பேன் தெரியும்ல?” அவனை மேலும் இறுக்கிக் கட்டிக் கொண்டாள் மங்கை.
“அது அப்போ. இப்போ ரொம்ப நாளாச்சுல்ல. எல்லாமே புதுசா இருக்கு. கிச்சு கிச்சு மூட்டுற மாதிரி ஃபீல் ஆகுது. தோள்ல கை வெச்சுக்க” என்றவனின் அவஸ்தை, அவளுக்கு சிரிப்பை ஊட்டியது.
“முடியாதே. கையை எடுக்க மாட்டேன். என்ன பண்ணுவ?” சிரிப்புடன் கேட்டாள் வினி.
“பாக்கெட்டில் இருக்கிற ஃபோனை எடுத்து ஒரே ஒரு ரிங் தான். அந்தப் பக்கம் இருக்கிற என் மாமனார் கிட்ட அவர் மகள் என் கூட லாங் ட்ரைவ் போறதை சொல்லிடுவேன். எப்படி வசதி?” புருவம் உயர்த்திக் கேட்க,
“ஆத்தீஈஈஈ” அவனிடமிருந்து கையை விலக்கி வாயில் கை வைத்துக் கொண்டாள்.
“இப்போ கையை வையேன்” தேவன் நகைக்க, “ஏன்டா! அப்பா பெயர் சொல்லி பயம் காட்டுறியா? உன்னைஐஐஐ” அவனது இடுப்பில் அழுத்தமாகக் கிள்ளி வைத்தாள்.
“அடியே! பைக் ஓட்டிட்டு இருக்கேன். கையை வெச்சுட்டு வா”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. எங்கேயாவது முட்டி மோதாம கரெக்டா ஓட்டு. இல்லனா என் அப்பாவுக்கு பிள்ளை கொடுக்கனும் சொல்லிட்டேன்”
“பிள்ளையா இது பிசாசு” என்றவனோ அவளின் முறைப்பைக் கண்டு, “பிள்ளை இல்ல! என் பொம்மைக் குட்டி. பட்டுக் குட்டி” சமாளித்து வைத்தான்.
“அந்த பயம் இருக்கட்டும்” விரல் நீட்டி எச்சரித்தாள்.
“உண்மையில் பயம் தான். பொண்டாட்டிக்கு பயப்படாம வாழ முடியாதாம் தெரியுமா?” என்று அவன் சொல்ல, “தெரியாதே. ஏன் பயம்?” தீவிர யோசனையோடு கேட்டாள்.
“பொண்ணுங்க கோபப்பட்டா சமாளிக்க ரொம்ப கஷ்டமாம். அதுக்கு பதிலா அவங்களை கோபப்படுத்தாம சொன்னதை கேட்டு பயந்துட்டே இருந்துடலாம் இல்லையா?”
“இது நல்லாருக்கே. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்” அவள் சொல்லும் போது இடைமறித்து, “அது பழமொழி! பொண்டாட்டியைக் கண்டால் தொடையும் நடுங்கும். இது புதுமொழி” அவன் சொன்ன தோரணையில், “டேய்ய்” சிரித்து விட்டாள் வினிதா.
அவளின் சிரிப்பை நிறைவோடு ரசித்தான் காளை. தன் காதலுக்காகப் போராடும் அவளுக்காக அவனால் கொடுக்க முடிந்த ஒன்று அவளின் சிரிப்பு தான்.
குல்பி விற்பதைக் கண்டவன் பைக்கை நிறுத்தி அதனை வாங்கிக் கொடுத்தான்.
“அஞ்சு வாங்கி இருக்க. இவ்ளோவும் எதுக்கு?” இமை தட்டிக் கேட்டாள் காரிகை.
“உனக்கு தான். போதுமான அளவு சாப்பிடு. நான் உன்னை சாப்பிடுறேன்” அவனின் விழுங்கும் பார்வையில் அவள் வதனம் சிவப்பேறத் துவங்கிற்று.
“அப்படி பார்க்காத தேவ்” சிணுங்கலுடன் அதனைச் சாப்பிட ஆரம்பித்தாள்.
“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா வினி?” அவனின் கேள்வியில் சட்டென்று தன்னிலை இழக்கலானாள் அவள்.
“நீ எதுவும் பண்ணலயே தேவ். எனக்குனு அப்படி எழுதி இருக்கு. வீட்டிலும் ஒத்துக்கல. உன் கிட்ட அதை சொல்லவும் முடியல. என் நிலமை உனக்குத் தெரியாதுல்ல. தெரிஞ்சு இருந்தா நீ சப்போர்ட்டா இருந்திருப்ப” என்றவளோ தொடர்ந்து பேசலானாள்.
“எல்லாம் கூட தாங்கிக்கிட்டேன் தேவ். ஆனால் அப்பா திட்டும் போது சட்டுனு தடுமாறிப் போயிடுவேன். அவ்வளவு ஹார்ஷா திட்டுவார். என் கூட மாசக்கணக்குல பேசல. அவர்னா எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு தெரியும் தானே தேவ்? உன்னை விட்டா தான் அவர் என் கிட்ட பேசுவாராம்.
உன்னை விட்டுட்டேன்னு சொல்லிட சொல்லி அம்மா வற்புறுத்தினாங்க. சும்மா ஒரு பேச்சுக்கு அப்படி சொல்லுனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. ஆனால் என்னால் அதைப் பண்ண முடியல. மனசுல நீ இருக்கும் போது இல்லனு எப்படி சொல்ல முடியும்?
அப்படியே சொன்னா அது அவருக்கு ஹோப் கொடுக்குற மாதிரி ஆகிடும்ல? உன்னை விடுவேன்னு நெனச்சு இன்னுமொரு கல்யாணம் பேசலாம். அதை வேணான்னு நான் எப்படி மறுக்க முடியும்? அப்படி மறுத்தா, அதுக்கு காரணம் உன்னை மறக்காததுனு அவர் புரிஞ்சுப்பார். இன்னும் ஏமாற்றம் அடஞ்சிடுவார். மறுபடி மறுபடி அப்பாவோட நம்பிக்கையை உடைக்க நான் விரும்பல” தந்தையின் புறக்கணிப்பும், அவரின் பேச்சுகளும் அவ்வளவு தாக்கத்தை அவளுள் கொடுத்திருந்தன.
தேவனுக்கு குற்றவுணர்ச்சி முள்ளாய்க் குத்தியது. அவளது நிலை தெரியாமல் தானும் வார்த்தைகளால் குத்தி விட்டோமே என்றிருந்தது.
“என் காதல் தான் பெருசுன்னு நெனச்சேன் வினி! ஆனால் என் வாழ்க்கை ஸ்மூத்தா தான் இருக்கு. உனக்கு அப்படி இல்லல்ல. இந்த காதலுக்காக எவ்ளோ போராடி இருக்க, வலியை அனுபவிச்சு, அப்பாவோட தவிர்ப்பில் நொந்து, அப்போவும் கூட நீ ஸ்ட்ராங்கா இருக்க. உண்மையில் என்னை விட உன் காதல் உயர்ந்து போச்சு டி” அவளின் கரங்களைத் தன்னுள் பொத்திக் கொண்டான் தேவன்.
“உயர்ந்தது தாழ்ந்தது என்று சொல்ல முடியாது டா. ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு வகை. உன் காதல் மட்டும் என்னவாம்? நான் போனேன்னு என்னை மறந்துட்டு வாழ்ந்தியா? உனக்கும் எவ்ளோ ப்ரபோசல்ஸ் வந்திருக்கும். அதை உதறித் தள்ளி, பிரிவையும் தாண்டி என் மேல வெச்ச காதல் அழியாம பார்த்துக்கிட்டியே. நீயும் பெஸ்ட் தான் டா” அவனை அணைத்துக் கொண்டாள் வினிதா.
“லவ் யூ வினி” அவள் நெற்றியில் இதழ் ஒற்றியவனின் உள்ளம், இவளுடன் சேர்வதற்காக என்ன செய்வது எனும் யோசனையில் ஆழ்ந்தது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி