💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 79
“இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ஜானு?” நர்சரி விட்டு வந்ததும் வராததுமாக சமயலறையில் இருந்து வந்த வாசத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு கேட்டான் யுகி.
“விஷயம் தெரியாதா உனக்கு? இன்னிக்கு தனு அத்தை வர்றாங்க” என்றவாறு அவனது ஷூவைக் கழற்றி விட்டாள் ஜனனி.
“ஹேய் குட்டீஸ்! வந்துட்டீங்களா?” மாடியில் இருந்து வந்த சத்யாவைக் கண்டு, “டாடீஈஈஈ! சாக்ஸ் கழற்றி விடுங்க” தந்தையின் முன் சென்று நின்றான் யுகன்.
“டாடி இல்லன்னா ஜானு கிட்ட இருப்பான். அவரைப் பார்த்தா போதும், டாடி கூட பசை போட்டு ஒட்டிப்பான்” சோஃபாவில் சாய்ந்து கொண்டு சொன்னான் அகி.
“உனக்கு என்னடா? நான் டாடி கூட இருப்பேன். ஜானு கூட இருப்பேன். எல்லாத்துலயும் சண்டை போட வராத” முறைத்துப் பார்த்தான் யுகி.
“திரும்ப என்ன பிரச்சினை உங்களுக்குள்ள?” தலையில் கை வைத்துக் கேட்டான் சத்யா.
“நான் ஆகாஷ் கூட பேசினா யுகி கோவிச்சுக்கிறான் டாடி” உடன்பிறந்தவனைச் சுட்டிக் காண்பித்தான் அகிலன்.
“அவன் பேசுறதுல எனக்கு ஒன்னும் இல்ல. அந்த ஆகாஷ் வந்து, அகி உன் தம்பி என்றாலும் என் கூட தான் பேசுறான் பார்த்தியா? அவனுக்கு உன் மேல பாசமே இல்லன்னு கிண்டல் பண்ணுறான்” முகத்தை உப்பிக் கொண்டான் யுகன்.
“அவன் சொன்னா உனக்கென்ன? அப்படி இல்லன்னு சொல்ல வேண்டியது தானே. என் கிட்ட சொன்னா நான் சொல்லுவேன்” என்றான் மற்றவன்.
“நீ என் கிட்ட பாசமா இருந்து இருக்கியா? அங்கே போனா என் கூட பேசவே மாட்ற”
“நீ வீட்டுல என் கூட பேச மாட்டியே. அப்பறம் எதுக்கு அங்கே பேசணும்னு நினைக்கிற?” எதிர்க்கேள்வி எய்தான் அகி.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. அங்கே போனா என் கிட்ட பேசணும். ஃப்ரெண்டா இருக்கனும்” உதடு பிதுக்கினான் யுகி.
“நீங்க வீட்டில் எப்படி வேணா இருங்க. ஆனால் போற இடத்தில் மத்தவங்க உங்க நடுவில் வந்து அடுத்தவனைப் பற்றி பேசாம பார்த்துக்கனும். நீங்க ஒற்றுமையா இருக்கனும். யாரும் யாரையும் விட்டுக் கொடுக்கக் கூடாது புரிஞ்சுதா?” என்று ஜனனி சொல்ல,
“ஆமா ஜானு! அவங்க அப்படி சொல்லும் போது எனக்கு கஷ்டமா இருக்கு. என் கூட பிறந்தவன்னா என் கூட தானே இருக்கனும்?” என்று யுகி கேட்க,
“நீ அவன் கூட இருக்க மாட்டியே யுகி. அவன் கூட இருக்கணும்னா நீ போய் கூப்பிடனும். உன் பக்கத்தில் அகி இருக்கனும்னு நெனச்சி மட்டும் பத்தாது. அதை அவன் கிட்ட வாய் திறந்து சொன்னா தானே உன் மனசு அவனுக்கு புரியும். எப்போவாச்சும் நீ கூப்பிட்டு அவன் முடியாதுன்னு சொல்லி இருக்கானா?” சத்யாவின் வினாவுக்கு, இல்லையென்பதாக தலையை ஆட்டினான்.
“பார்த்தீங்களா டாடி? இவன் சொல்லாம எப்படி தெரியும் எனக்கு? வீட்டில் ஒரு நேரம் கோபப்படுவான். இன்னொரு நேரம் சண்டைக்கு வருவான். அங்கே நடந்துப்பான்னு தெரியாததால நான் பேச மாட்டேன்” என்று தன் மனதில் உள்ளதைக் குறிப்பிட்டான் அகி.
“இனிமே ரெண்டு பேரும் ஒழுங்கா இருக்கனும். முக்கியமா விட்டுக் கொடுக்கக் கூடாது. எங்க கிட்ட உங்க பக்க நியாயத்தையும், அடுத்தவனோட குறையையும் தானே சொல்லுறீங்க. இனி இப்படி நடக்கக் கூடாது” என்றுரைத்தாள் ஜனனி.
அங்கு வந்த ரூபன் மற்றும் தேவனுக்கு அவள் சொன்னதைக் கேட்டு இதழில் சிரிப்பு மலர்ந்தது. அவர்களுக்கு மேகலையின் நினைவு. சிறு வயதில் இதே அறிவுரையை அவர்களுக்கு சொல்லியுள்ளாரே.
“இந்த விஷயத்தில் உங்க சித்தப்பாங்களைப் பாருங்க. எப்போவும் ஒன்னா தானே இருக்காங்க. ஏதாவது நடந்தாலும், அவன் இதனால பண்ணி இருப்பான். அப்படி பண்ணி இருக்கான்னா ஏதாச்சும் காரணம் இருக்கும்னு விட்டுக் கொடுக்காம மத்தவனுக்காக நியாயம் பேசுவாங்க. அப்படி இருக்கனும் நீங்களும்” சத்யாவின் வார்த்தை கேட்டு இருவரும் தலையசைத்தனர்.
“தலையை ஆட்டி மட்டும் வேலை இல்ல டா. இப்போவே அதைப் பண்ணியும் காட்டனும். வாங்க! வந்து நின்னு தோள்ல கை போடுங்க. ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம்” என்று அழைத்தான் ரூபன்.
“அதெல்லாம் முடியாது” யுகன் மறுத்து விட, “அகி பாப்பா! நீ போய் ஆகாஷ் கழுத்தில் கை போட்டு நிறைய ஃபோட்டோ எடுத்துக்க சரியா? நாம ஸ்டேட்டஸ் கூட வெச்சுப்போம்” என்று தேவன் கூற,
“நோ சித்தா” என்றவாறு சகோதரனின் தோளில் கை போட்டான் யுகன்.
“உர்ருனு இருக்காம, பல்லைக் காட்டி சிரிங்க டா” என்று ரூபன் சொல்ல, அரிசிப்பல் தெரிய சிரித்தவர்தளை அலைபேசியில் சேமித்துக் கொண்டான்.
இருவரும் இன்னுமின்னும் நெருக்கமும், நேசமும் மிகுந்து வாழ வேண்டும் என்பதே சத்யா மற்றும் ஜனனியின் அவாவாக இருந்தது.
“அம்மா எங்கே காணவே இல்ல” தேவன் கேட்க, “சமைச்சிட்டு இருக்காங்க. இன்னிக்கு தன்யா வர்றாள்ல” என்று ரூபன் பதிலளிக்க, அவன் முகத்தில் கடுமை குடி கொள்ளத் துவங்கிற்று.
“தேவா…!!” என சத்யா அழைக்க, “பயப்படாதீங்க. உங்க அருமைத் தங்கச்சி கிட்ட நான் கோபமா பேச மாட்டேன். அதே சமயம் அவ கிட்ட பேசவும் மாட்டேன். அண்ணா நொண்ணானு கூப்பிட்டு முன்னால வரவும் வேணாம்னு சொல்லி வைங்க” எவ்வளவு முயன்றும் அவனால் தன்யா மீதான கோபத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
“அட அட! அண்ணா நொண்ணா முன்னானு ரைமிங்ல பின்னுறியே ப்ரோ! கலக்கிட்ட போ” ரூபன் சொன்னதில் மற்றவர் சிரிக்க, “பின்னால ஒன்னு போடுவேன் டா வெண்ண” அவன் முதுகில் ஒரு போடு போட்டு விட்டு சமயலறைக்குச் சென்றான் தேவன்.
சமையல் கட்டில் ஏதோ யோசனையோடு நின்றிருந்தார் மேகலை.
“வா தேவா! எதுவும் வேணுமா?” மகனின் வருகை அறிந்து கேட்க, “என்னம்மா ஆச்சு? டல்லா இருக்கீங்க. டயர்டா ஃபீல் பண்ணுறீங்களா?” அவரின் சோர்ந்து போன முகத்தைப் பார்த்து அக்கறையோடு வினவினான்.
“இல்லடா நான் நல்லா தான் இருக்கேன்” பாத்திரங்களைக் கழுவ எடுக்க, “நீங்க ஏன்மா இதையெல்லாம் பண்ணுறீங்க?” எனக் கேட்டான் அவன்.
“வேற நாளைக்கு ஜானு தான் பாத்திரம் கழுவுவா. நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டா. இன்னிக்கு தான்டா நான் பண்ணுறேன். அவளும் பாவம். வேலைக்கும் போயிட்டு இந்த வேலையும் பண்ணி களைச்சு போயிடுறா” மருமகளை எண்ணி வருந்த,
“ம்மா! நான் அண்ணிக்கு கொடுக்கனும்னு சொல்லல. அவங்களை மாதிரி இந்தக் குடும்பத்துக்காக யாராலேயும் பண்ண முடியாதும்மா. உங்களுக்கு டயர்டாக கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார்ல. எதுவும் இருந்தா என்னைப் பேசுங்க. நான் பண்ணுவேன்” என்றவாறு அவரைக் கதிரையில் அமர வைத்து விட்டு தானே அனைத்தையும் கழுவி வைத்தான்.
மகனின் அக்கறையில் அகம் மகிழ்ந்து போனார் மேகலை. வேலையை முடித்துக் கொண்டு தாயைப் பார்த்த தேவன் அவரது கண்களில் நீரைக் கண்டு பதறி விட்டான்.
“என்னாச்சும்மா? ஏன் அழுறீங்க?” அவர் கண்ணீரைப் பார்த்து கலங்க, “உங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சு. அவரும் இப்படித் தான் என்னை உட்கார வெச்சு வேலை செஞ்சு தருவார்” என்றவரைக் கூர்ந்து பார்த்தவனுக்கு எதுவோ சரியாகப் படவில்லை.
“சத்யா பேசினானா உங்க கிட்ட? தன்யா பற்றி எதுவும் சொன்னானா?” என்று தேவன் கேட்க, அவர் முகம் இருண்டு போனது.
“சத்யா சொன்னான். த..தன்யா” என அவர் இழுக்க, “சொல்லும்மா. ஏதாச்சும் அவளைப் பற்றி சொன்னானா?” என்று கேட்க, ஆம் எனத் தலையசைத்தான்.
அவ்வளவு தான். விருட்டென்று எழுந்து கொண்டான் தேவன்.
“பாட்டி! தனு அத்தை வந்துட்டாங்க” துள்ளலுடன் சொல்லி விட்டுச் சென்றான் அகி.
“இரு வர்றேன்” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் செல்ல, “தேவா” மகனின் கோபத்தைப் புரியாமல் பார்த்து விட்டுத் தொடர்ந்து சென்றார்.
“வாடி வந்துட்டியா?” என்று தேவன் கேட்க, “தேவா” மென்குரலில் அழைத்தாள் தன்யா.
“திரும்ப முருங்கை மரம் ஏறியாச்சா?” என்று சத்யா கேட்க, “ஏய்ய்” அவனது ஷர்ட் காலரைப் பிடித்திருந்தான் தேவன்.
“தேவா என்ன பண்ணுற?” ரூபன் அவனை இழுக்க, “விட்றா என்னை. கை வெச்சேனா சும்மா இருக்க மாட்டேன்” ரூபனின் கையைத் தட்டி விட்ட தேவனுக்கு கழுத்து நரம்புகள் புடைத்தன.
“நீ என்ன பண்ணிட்டு இருக்க தேவா? முதல்ல கையை எடு” மேகலை சொல்ல, “இன்னிக்கு இவனால தானே அழுதீங்க. எனக்கு அவன் பதில் சொல்லியே ஆகனும்” அவன் கோபம் தீர்வதாக இல்லை.
“சத்யா எதுவும் சொல்லல எனக்கு. தன்யா வர்றதைப் பற்றி சொன்னானே. அதைத் தான் உன் கிட்ட சொன்னேன். மற்றபடி எதுவும் சொல்லல. ஏன் இப்படி பண்ணுற?” தலையில் கை வைத்துக் கேட்டார் மேகலை.
“பொய் சொல்லாதீங்க! அவனை ஏன் காப்பாற்ற நெனக்கிறீங்க? உங்க முகத்தில் தெரிஞ்ச உணர்வு, எனக்கு உண்மையை சொல்லிடுச்சு. உங்களுக்கு அது தெரிஞ்சு போச்சு” தேவனின் கைகள் சத்யாவின் மீதான பிடியைத் தளர்த்தவில்லை.
“எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். கை வைக்கிற வேலை வேண்டாம் தேவா” ரூபன் அழுத்தமாகச் சொல்ல, ஜனனியின் விழிகளோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்ற கணவன் மீதே படர்ந்தன.
முகத்தில் தான் உணர்வில்லையே தவிர, உள்ளத்தில் உணர்வலைகள் எரிமலையாய் வெடிக்கத் தான் எங்கோ வெறித்திருந்தான் சத்ய ஜீவா.
“அய்யோ தேவா! அண்ணனை எதுவும் சொல்லாதீங்க. என் மேல கோபம்னா அதை என் கிட்ட காட்டுங்க” தன்யா கதறி அழுதாள்.
அகியும் யுகியும் மலங்க மலங்க விழிக்க, இருவரையும் அறையில் விட்டு வந்தாள் ஜனனி.
“நீ எதுக்கு கை வெச்சேனு மட்டும் சொல்லு” இத்தனை நேரம் அமைதியாக நின்ற சத்யா வாயைத் திறந்தான்.
“உண்மையை சொல்ல வேண்டாம்னு என் கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டியே. இப்போ எதுக்கு அதைச் சொன்ன. அம்மாவை அழ வெச்சிட்ட சத்யா! அவங்க மேல பாசம் இருந்தா இப்படி பண்ணி இருப்பியா?” என்று கேட்க, மௌனித்து நின்றானே தவிர, பதில் கொடுக்கவில்லை அவன்.
“அம்மாவுக்கு உண்மை தெரியக் காரணம் அண்ணா இல்ல. நான் தான். அவர் மேலிருந்து கையை எடுங்க” தேவனின் கையை தன்யா விலக்க முயற்சிக்க, அவளைத் தள்ளி விட்டான் தேவன்.
ரூபன் அவளைப் பிடித்து நிறுத்த, அவன் கன்னம் பதம் பார்த்தார் மேகலை. தேவன் கன்னத்தில் கை வைத்துக் கலங்கி நின்றான்.
“உண்மை உண்மைனு சொல்லுறீங்களே. என்ன அது?” ரூபனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. ஜனனிக்கும் அதே நிலை தான்.
மேகலை சொன்ன உண்மையில் அவர்கள் அதிர, மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாய் மயங்கிச் சரிந்தார் மேகலை.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி