8. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

5
(4)

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

👀 விழி 08

காலைக் கதிரவனானது திருவிளையாடல் மூலம் வானை சிவக்க வைத்ததோடு நில்லாமல் ருத்ரனின் அறையின் யன்னலினூடாகவும் ஊடுறுவி அங்கும் தன் சில்மிஷத்தை நடாத்தலானது.

முதலில் துயில் போர்வையை உதறித் தள்ளியெழுந்து வழமை போல் பக்கத்து மேசையின் மீதிருந்த தாளை எட்டி எடுக்கப் போனவனின் கரம் நொடியில் தன் பணியை இடைநிறுத்தம் செய்ததது.

தன் விழிகளை தனதருகே உறக்கம் கொள்ளும் ஊர்வசியின் மீது பதித்தவனுக்கோ நேற்றைய சம்பவங்கள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைகட்டி நினைவுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின.

அவளை வரைந்த ஓவியத்தை அருகில் வைத்திருப்பான். எழுந்ததும் கண்களை மூடியவாறே அதனை எடுத்து அவள் முகத்தில் தான் கண்விழிப்பான். அவளைப் பாராது அவன் நாட்கள் விடிவதில்லை.

ஆனால் இனி அது தேவை இல்லை அல்லவா? நிழல் உருவத்தின் சொந்தக்காரி நிஜமாகவே அவனருகே வந்து விட்டாளே.

“என் செல்ல அம்மு! லவ் யூ டி” அவளைப் பார்த்து புன்னகை தவழ விட்டவன் குளியலறையினுள் புகுந்து கொண்டான்.

அவன் வரும் போது கதவு திறக்கும் ஓசையில் எழுந்து அமர்ந்தவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பது புரியவே இல்லை. அருகில் இருப்பவனும், அறையின் வாசமும் அவளுக்கு சுய உணர்வைக் கொண்டு வந்தது.

“குட் மார்னிங் ஸ்லீப்பிங் பியூட்டி” தலையைத் துவட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான் ருத்ரன்.

“குட் மார்னிங்” எனக் கூறி எழுந்து சென்றாள். மனதின் சிந்தனை சோர்வைக் கொடுத்திருந்தது அவளுக்கு.

வெளியில் வரும் போது காபி கொண்டு வந்திருந்தான் அவன்.

“இப்படி கொண்டு வராதீங்க. இனிமே நானே போய் எடுத்துக்கிறேன்” மெல்லிய குரலில் நவின்றாள்.

“நீ எனக்கு வேலை தாறனு அப்பாம்மா நெனச்சிடுவாங்கனு நெனக்கிறியா?” புருவம் உயர்த்தினான்.

“இல்லை! என் வேலையை நானே பார்த்துக்கிறேன்” தட்டுத்தடுமாறி சொன்னவளின் தடுமாற்றமே சொல்லியது அவன் கூறியதை அவளும் நினைத்திருக்கிறாள் என்று.

“இது உன் வீடு அம்மு. உனக்கு நெனச்சபடி இருக்கலாம். அம்மாவுக்கு கோபம் எல்லாம் இல்லை. கொஞ்சம் வருத்தம், அப்பா என்ன சொல்லுவாரோனு பயமும் கூட. மத்தபடி என் மம்மி ஜாலி டைப் தான். அவங்களா வந்து பேசுவாங்க. நீயா பேசினாலும் பேசுவாங்க” தன்னவளுக்கு எடுத்துரைத்தான் அவன்.

நேற்று அவன் தன்னைப் பற்றி கூறும் போது தாயின் புகழைத் தான் அள்ளி வீசி விட்டானே. அதிலிருந்தே புரிந்து கொள்ள முடிந்தது சித்ராவின் நிலையை. செல்வனைப் பற்றித் தான் அவ்வளவு புரிய முடியவில்லை.

ஆபிஸில் இருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசினான்.

“சொல்லுங்க. நான் ரெண்டு நாளைக்கி வர மாட்டேன். இம்போர்டன்ட் மீட்டிங்னு எதுவும் இல்லையே. சரி வைக்கிறேன்” வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசிவிட்டு வைத்தான்.

தற்செயலாக அஞ்சனாவின் மனம் சுஜித்தை நினைத்துக் கொண்டது. நிச்சயதார்த்த தினம் கூட பிசினஸ் என்று சென்றானே. இவனோ அதை விடப் பெரிய பதவியில் இருந்தும் அனைத்தையும் நடுநிலையில் கையாள்கிறானே என ஆச்சரியமும் தொற்றிக் கொண்டது.

அவன் கீழே செல்லவும் அஞ்சனாவும் அவனோடு சென்றாள். சமையலறைக்குள் சென்று காபி கப் இரண்டையும் கழுவி வைத்தாள்.

“டேய் ருத்ரா” பெரும் சத்தத்தோடு வந்தான் நிதின்.

“வாடா நல்லவனே! குப்புற படுத்து குறட்டை விடுற பழக்கத்தை வெச்சிட்டு அதிசயமா நண்பனை தேடி வந்திருக்க” சோபாவில் அமர்ந்து கொண்டான் ருத்ரன்.

“நீ யாருடா என் நண்பன். உன்னை தேடி வராம இருப்பேனா நான்?” என்று வராத கண்ணீரைத் துடைக்க, “சென்டிமென்டா பேசி சாவடிக்காத. உனக்கு இந்த சீன் நடிக்க வரல” அவன் தலையில் தட்டினான்.

அங்கு வந்த அஞ்சனாவைக் கண்டு “வணக்கம் தங்கச்சி! நான் யாருனு தெரியுமா?” எனக் கேட்க, “நீங்க தான் அஞ்சு வயசுலயே மலையேறி பேமஸான ஆளா” பதிலுக்கு வினவினான் அவன்.

“இல்லை. ஒருத்தனை ப்ரெண்டா வெச்சுக்கிட்டு ஏன்டா இவன் கூட ப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கிட்டோம்னு தினமும் அழுது புலம்புற ஆளு நானு” பாவமாகப் பார்த்தான் நிதின்.

“என்னண்ணா சொல்லுறீங்க?”

“ஆமாமா! நர்சரில விட்டு போகும் போது அம்மாவ போகாதீங்கனு சொல்லி அழுதேன். டீச்சர் கதவை மூடி என்னை உள்ளுக்கு எடுக்கவும் அந்த யன்னல் மேல ஏறி தொங்கிட்டு அழுதது. அறியாத வயசுல நடந்ததை இவன் இன்னிக்கு வரைக்கும் மலை ஏறினேன்னு சொல்லி மறைமுகமா என்னை கலாய்ச்சிட்டு இருக்கான்” விட்டால் அழுது விடுவது போல் புலம்பினான்.

அவனது பேச்சையும் முகபாவனையையும் கண்டு வாயை மூடிக் கொண்டு சிரித்தாள் பெண்.

“தெரிஞ்ச கதையை கேட்டு ஏன் கெக்கபிக்கனு சிரிப்பு. உன் பொண்டாட்டிய சிரிக்க வேணாம்னு சொல்லு” நண்பனிடம் சொல்ல,

“டேய் எரும! மலையேறின பெருமையை தான் சொன்னேனே தவிர அதற்கான விளக்கத்தை சொல்லவே இல்லை. நீயே வாய விட்டு மாட்டிக்கிட்ட” ருத்ரன் வெடித்துச் சிரிக்க,

“விளக்கத்துல விளக்கெண்ணைய வெச்சு தேய்க்க. உன்னெல்லாம்” அருகிலிருந்த பேப்பரை எடுத்து அவனை அடித்தான் நிதின்.

இதற்கு மேல் அடக்க முடியாமல் களுக்கென நகைத்தாள் அஞ்சனா.

நண்பனிடம் அடி வாங்கினாலும் ருத்ரன் இடையறாது சிரிக்கும் தன்னவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவள் சிரிப்பில் உள்ளம் நிறைந்தது.

வெளியில் சென்றிருந்த தந்தை உள்ளே வருவதைக் கண்ட ருத்ரன் “மச்சி பேப்பர்டா பேப்பர்” என ரகசியமாக சொல்ல, “தர மாட்டேன்டா போ” அதனைக் கிழித்து கசக்கி அதனால் வீசி எறிந்தான்.

அவன் எறிந்ததில் ஒன்று வந்து செல்வனின் காலடியில் விழ “சித்ராஆஆ” என சத்தமிட்டார் அவர்.

“என்னங்க” கணவனின் கத்தலில் ஒரே நிமிடத்தில் ஆஜரானார்.

“என்ன இது? என்னன்னு கேட்கிறேன்”

“இது கூடவா அங்கிள் தெரியல. பேப்பர் நியூஸ் பேப்பர்” தனது கையிலிருந்த கசக்கிய பேப்பரை விரித்து அவர் முன் காட்டினான் நிதின்.

“இவன் வேற நேரம் காலம் தெரியாம படுத்துறானே” ருத்ரன் நொந்து கொள்ள, “அது தெரியாத முட்டாளா நான்? நான் பேப்பர் வாங்கி படிக்க வெச்சா உன் உத்தம நண்பனோட சேர்ந்து கிரிக்கெட் ப்ராக்டிஸ் பண்ணுறியா” என சீறினார் அவர்.

“அய்யய்யோ இந்த செல்வச் சீமான் வாங்கிட்டு வந்த பேப்பரா? சீமான் கோபக் கோமான் ஆகி முறைக்குதே என்னா பண்ணுறது” உள்ளுக்குள் உதறல் எடுத்தது அவனுக்கு.

“தெரியாம பண்ணிட்டான். நீங்க வாங்க காபி போட்டு தரேன்” என சித்ரா அழைக்க,

“அங்கிள் வாட்ஸ்அப் க்ரூப்ல டெய்லி நியூஸ் பேப்பர் அப்லோட் பண்ணுறாங்க. அதை உங்களுக்கு ஷேர் பண்ணி விடவா? அதுல வாசிங்க” இன்னும் விடாமல் உளறினான் நிதின்.

“எனக்கு அதெல்லாம் தெரியாதோ? உங்களை மாதிரி ஷாக் அடிச்ச சோளக்காட்டு பொம்மையாட்டம் போனை பார்த்துட்டு இருக்க வேற வேலை இல்லை எனக்கு. பேசுறான் பாரு பேச்சு ஷேர்ரிங்காம் ஷேர்ரிங்கு” நொடித்துக் கொண்டு சென்றார் செல்வன்.

“காலங்காத்தால அந்த மனுஷன் வாயை திறக்கிறியே பா” தலையிலடித்துக் கொண்டு அவர் பின்னால் சென்றார் சித்ரா.

“அக்கறையா வாட்ஸ்அப் பற்றி சொன்னா இப்படி சொல்லிட்டு போறாரே உன் அப்பன்” ருத்ரனிடம் அங்கலாய்த்தான்.

“வாட்ஸ்அப் பத்திலாம் அவர் கிட்ட பேசாதடா வாஸ்பேஷன் வாயை கொஞ்சம் மூடு. இந்த ஃபோன் பேச்ச எடுத்தாலே என் டாடி சூடாகிருவார்” என்றான் ருத்ரா.

“சூடாகினா ப்ரீஸர்ல வை. அதுக்காக என்னை குறை சொல்ல வாறது எந்த விதத்தில நியாயம்” பேப்பரை கிழித்து இத்தனை பேச்சுக்கும் வழி வகுத்தது தானே என்பதை மறந்து நியாயம் கேட்டவனைக் கண்டு அஞ்சனாவுக்குத் தான் சிரிப்பை அடக்குவது சிரமமாகப் போனது.

இவர்களது பேச்சு சுவாரசியமாக இருந்தது அவளுக்கு. தனிமையில் இருந்தவளுக்கு இந்த சம்பாஷணை, கேலி, சீண்டல் அனைத்தும் புதிதாக இருந்ததால் தன்னையும் மீறி அவர்களது உரையாடலை ரசிக்க ஆரம்பித்தாள்.

“தங்கச்சி பெயர் என்னடா?” நிதின் கேட்க, “தெரியாது நீயே கேளு” என்றவனை வாயைப் பிளந்து பார்த்தான் நிதின்.

“என்ன டிசைன் நீ? கட்டுன பொண்டாட்டியோட பெயர் கூடவா தெரியல?”

அஞ்சனாவும் இதையே தான் நினைத்தாள். நேற்று அவன் பெயரைக் கூறினானே தவிர தனது பெயரைக் கேட்கவில்லை. அவளாக கூறவும் இல்லை.

“இவ என் அம்மு! அதைத் தவிர வேறு என்ன வேணும்?”

“ஹப்பாடா போதும் போதும். இங்க பாரும்மா இவன் கிட்ட இந்த மாதிரியான கேள்விகளை மறந்தும் கேட்டுடாத. அப்பறம் அம்மு அம்முனு சொல்லியே நம்மளை கும்மி எடுத்துருவான்”

அவனது பேச்சில் தலையை நாலாபக்கமும் உருட்டி “அண்ணா! என் பெயர் அஞ்சனா” என்று முறுவலித்தாள்.

“சரிமா நான் இனிமே உன்னை அஞ்சுனு கூப்பிடுவேன் சரியா?” என அதிகாரமாகக் கேட்க

“சரிண்ணா” என்றவளுக்கு நிதினின் குணம் பிடித்து விட்டது.

அவளது கணவனோ “அஞ்சனா! அஞ்சன விழிகள் அவளுக்கு. சோ என் மாமா நல்லா தான் பெயர் சிலெக்ட் பண்ணி இருக்கார்” என அவள் பெயரை உச்சரித்துப் பார்த்தான் மனதினுள்.

அஞ்சனா சமயலறைக்குள் நுழைய அங்கிருந்த சித்ரா அவளைப் பார்த்தார். அவரைப் பார்த்தவளுக்கோ சங்கடமாக இருந்தது.

பேசினால் என்ன சொல்வாரோ என பார்த்தவளின் கையில் காபி கப்பைக் கொடுத்து “நிதினுக்கு கொடு” என்று கணவனுக்கு காபி எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

அவருக்குத் தன் மீது வருத்தம் எதுவும் இல்லை. கணவனுக்காக தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது புரிய ஆசுவாசமடைந்தாள்.

நடந்த விடயங்களை ருத்ரா சுருக்கமாக சொல்லி முடிக்க “இவ்ளோ விஷயம் ஆச்சா?” என கண்களை விரித்து நின்றிருந்தான் நிதின்.

“ம்ம் நான் நினைக்கவே இல்ல நித்தி இப்படிலாம் நடக்கும்னு. அம்முவை என்னிக்காச்சும் காண்பேன்னு உறுதியா நம்பினேன். ஆனா இப்படி ஒரு சிடுவேஷன் அமையும்னு எதிர்பார்க்கலடா. அதுவும் தாலி கட்டுவேன்னு” கனவில் நடப்பது போல் இருந்தது இன்னும் அவனுக்கு.

“நான் எதிர்பார்த்தேன் ருத்ரா. ஆனா என்ன தாலி கட்டுனதோட மட்டும் விட்டுட்ட நான் வேற என்னென்னவோ நெனச்சேன்”

“ச்சீ கருமம் பிடிச்சவனே. உன் நினைப்புல நெருப்ப வெச்சி கொளுத்த” எனும் போது அஞ்சனா வரவும் இருவரும் நல்ல பிள்ளைகளாக அமர்ந்து கொண்டனர்.

“டீச்சர் வரும் போது பிள்ளைங்க பூனைக்குட்டி மாதிரி உட்கார்ரது போல இருக்கு நம்ம நிலமை” சத்தமாகத் தான் சொன்னான் நிதின்.

“நெஜமாவே அவ டீச்சர் தான். என்ன டீச்சர் மேடம்?” என ருத்ரன் சொல்ல,

தன்னை டீச்சர் என்று அழைத்ததில் ஏனோ இதயம் தாளம் தப்ப அவனையே பார்த்தாள் அஞ்சு.

♡♡♡♡♡

“என்னங்க ஏன் ஒரு மாதிரி யோசனையா இருக்கீங்க?” சாப்பிடாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த கணவனிடம் கேட்டார் லீலா.

“இன்னும் ருத்ரா மாமா பத்தியே நெனச்சிட்டு இருக்கீங்களாப்பா? ப்ளீஸ்பா அதை மறந்துருங்க. இனிமே அந்த எண்ணத்தை விட்றுங்க” என்றாள் ஆலியா.

“நான் அதை நினைக்கலமா. உன் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறேன். உனக்காக நான் ருத்ராவ தேர்ந்தெடுத்தேன். இப்போ அது இல்லனு ஆனத உடனே என்னால ஏத்துக்க முடியல. வேற ஒரு நல்ல பையனை பார்க்கனும்” தனது எண்ணத்தை வெளிப்படையாகவே அவரிடம் பகிர்ந்து கொண்டார் கோபால்.

ருத்ரனின் விடயத்தில் மகளிடம் மறைத்தது என்னவோ தற்போது விபரீதமாகப் பட்டது. இனி எதனையும் மறைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

“கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச காலம் உங்க கூடவே இருக்கேனே” மீண்டும் கல்யாணப் பேச்சைக் கேட்டதும் அவளுக்கு அச்சம் சூழ்ந்து கொண்டது.

“எங்க கூட இருக்கலாம். ஆனால் கல்யாணம் எல்லாம் காலாகாலத்தில் நடக்கனும் ஆலியா. அப்பா சொல்லுற மாதிரி கல்யாணம் பேசுறது தான் சரி” லீலாவும் கணவனின் கூற்றை ஆமோதித்தார்.

“தரகர் ஒரு வரன் கொண்டு வந்தார். நல்ல தொழில் கை நிறைய சம்பளம். போட்டோ அனுப்புறேன்னு சொன்னார். வந்ததும் உன் கிட்ட காட்டுறேன்”

ஆலியாவின் மனதில் நிதினின் உருவம் வந்து நின்றது. அவனைத் தனக்கு பிடித்திருப்பதாக தோன்ற இதற்கு மேல் மௌனமாக இருப்பது சரியல்ல என்று புத்தி உரைக்க “அப்பா நான் ஒருத்தரை லவ் பண்ணுறேன். கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்” பட்டென உடைத்துச் சொல்லி விட்டாள்.

“லவ்வா? யாரு?” அதிர்ச்சியோடு கேட்டார் கோபால்.

“நிதின். ருத்ரா மாமாவோட ப்ரெண்ட்”

“அந்த பையனா? உனக்கென்ன புத்தி கெட்டு போச்சா?” இத்தனை நேரம் அமைதியாக இருந்த கோபால் பாய்ந்து சீறினார்.

“ஏன்ப்பா?” தந்தையின் இந்த எதிர்ப்பை சிறிதும் எதிர்பார்க்கவில்லை அவள்.

“உனக்கும் அவனுக்கும் என்ன பொருத்தம் இருக்கு? நீ இங்க இளவரசி மாதிரி வாழுறவ. அவன் வயல்ல சேறும் சகதியுமா வாழுறவன். சொற்ப சம்பளத்தை வெச்சி அவனால உன்னை எப்படி பார்த்துக்க முடியும்?”

தந்தையின் பேச்சு அவளுக்கு என்னவோ போல் இருந்தது. ருத்ரனின் வீட்டிற்கு வந்தால் நிதினோடு நன்றாகக் கதைப்பார். அவனோடு சேர்ந்து கேலி பேசி சிரிப்பார். ஆனால் இப்போது இப்படி பேசுகிறாரே என்றிருந்தது.

“நிதின் கூட நல்லா தானே பேசுவீங்க. இப்போ ஏன்?” தனது எண்ணங்களை வார்த்தைகளால் வெளிப்படுத்தவும் தான் செய்தாள்.

“பேசுறதும் கட்டி கொடுக்குறதும் ஒன்னா? புரிஞ்சுக்க மா. காதலுக்கு நான் எதிரி இல்லை. அதுக்குனு தகுதி தராதரம் பார்த்து கொடுக்கனும்ல. காதல்னு சொன்னதும் கண்ணை மூடிட்டு கட்டி வைக்கலாமா? ஆய்ஞ்சு அறிஞ்சு பார்க்கனுமே” நாசூக்காக தனது மறுப்பை வெளியிட்டு விட்டுச் சென்றார்.

ஆலியாவுக்கு கண்கள் கலங்கின. தனக்கு காதல் எல்லாம் கை கூடாதா? தனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

ஆனால் அழவில்லை அவள். என்ன இருந்தாலும் தனது காதலில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. இந்த காதல் எப்படி வந்தது எப்போது மலர்ந்தது என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் மனம் முழுக்க நிதின் நிறைந்திருந்தான். அவனைத் தவிர வேறு எவரையும் தன் மனதிலோ வாழ்க்கையிலோ இணையாகக் கருதக் கூடாது என்று மாபெரும் திடம் கொண்டாள்.

“ஆய்ஞ்சு அறிஞ்சு பார்த்தாலும், இதையே தேய்ஞ்சு போன ரெக்காடர் மாதிரி சொன்னாலும் என் முடிவு ஒன்னு தான். ஐ லவ் நிதின். ஐ வான்ட் ஹிம்” தாயிடம் சொல்லி விட்டு அறைக்கதவை படீரென்று அடித்துச் சாத்தினாள்.

தந்தை இவ்வாறு தகுதி எல்லாம் பார்ப்பார் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. தகுதியை வைத்து என்ன செய்வது என்றவளுக்கு அவர் மனம் புரியுமா என்ன?

தனது மகள் வீட்டில் கேட்பதை எல்லாம் உடனுக்குடன் பெற்றுக் கொண்டு செல்லமாக வளர்ந்தவள். அவளது ஆசைகளை நிறைவேற்ற நிதினின் தொழிலால் முடியுமா? இதனால் பின்னாளில் அவள் வாழ்க்கையில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுமோ என்பது அவரின் எண்ணம். ஆக, சராசரித் தந்தையின் சிந்தனையோடு அந்தக் காதலை மறுத்து விட நினைத்தார்.

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. நிதினிடம் அழைப்பு வரவும் இல்லை. கோபால் தன் முடிவிலிருந்து மாறுவதாகவும் இல்லை.

அவளாக நிதினுக்கு அழைத்தாள். அவனோ அழைப்பைத் துண்டிக்க அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

மறுநாள் தந்தையறியாமல் அவனைத் தேடிச் சென்றாள். வயலில் இருந்தவனோ அவளைக் கண்டு “ஆலி! கால் பண்ணிருந்தியா டி? பிரச்சனை ஒன்னு ஆச்சு இங்கே. அதான் எடுக்க முடியல. வா” முகத்தில் அரும்பிய வியர்வையைத் துண்டால் துடைத்துக் கொண்டு வந்தான் நிதின்.

அவளோ எதுவும் பேசாமல் நடக்க “என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க” எனக் கேட்டான்.

“நான் ஒன்னு சொன்னா பண்ணுவியா நிதின்?”

“என்ன கேள்வி இது? சொல்லு என்ன பண்ணனும்?”

அடுத்து அவள் கேட்ட விடயத்தில் அதிர்ச்சியில் உறைந்து போன நிதினுக்கு மயக்கமே வருவது போலிருந்தது.

தொடரும்…….♡

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!