“ஹே…” என்ற பெரும் அதிர்வோடு வண்டியை ஓரம் நிறுத்திய கருடேந்திரன், காரை நோக்கி ஓடினான். நெடுஞ்சாலைக்கு நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, புகைச்சலுக்குள் காணாமல் போனது அவன் மனைவி ஓட்டிச் சென்ற கார்.
அவனுக்குள் உண்டான அதிர்வு, அதிவேகத்தில் ஓட வைத்தது. அதற்குள் வாகன ஓட்டிகள் அந்தக் காரைச் சூழ்ந்தனர். பயத்தின் ஒலச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அருகில் வந்தவன், “ரிது!” என அழைத்துக் கொண்டு ஆள்களை விலக்கிட, சிறு ரத்தக் காயங்களோடு சுயநினைவு இல்லாமல் இருந்தாள் ரிதுசதிகா.
“ரிது!” எனக் கார் கதவைத் திறந்தான்.
கதவைத் திறந்ததுமே அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள். பயத்தின் உச்சத்தை அடைந்த அவன் மனம், கன்னத்தைத் தட்டி எழுப்ப முயற்சித்தது. மணாளனின் எந்தக் குரலுக்கும் செவி மடுக்காதவள் அதே நிலையில் அப்படியே இருந்தாள். நசுங்கிப் போயிருந்த தண்ணீர் பாட்டிலில் மீதமிருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தவன்,
“இங்கப் பாரு, கண்ணத் திற. உனக்கு ஒன்னும் இல்ல. நீ நல்லாத்தான் இருக்க…” எனக் கத்திக் கூப்பாடு போட்டும் எந்த அசைவும் இல்லை அவள் தேகத்தில்.
சுற்றி இருந்தவர்கள், ஆளாளுக்கு ஒன்று பேசி அவன் பயத்தின் அளவுகோலை இன்னும் உயர்த்தி வைக்க, உயிர் இருக்கிறதா எனச் சோதித்தவனின் கை கால்கள் நடுங்கியது. தன்னவளின் உயிர் நாடி பத்திரமாக இருப்பதை உணர்ந்து, அந்தப் பயத்திற்கு நடுவிலும் சின்னதாகப் புன்னகைத்தான்.
யார் உதவி செய்ததோ தெரியவில்லை, சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. யாரையும் தன் மனைவி அருகில் விடாதவன் கையோடு தாங்கிக் கொண்டு வண்டியில் ஏறினான். உடனடி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இமையின் விளிம்பில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தைத் துடைத்தவன்,
“நல்லாத் தான இருக்காங்க?” என ஆழ்ந்த குரலில் கேட்டான்.
“பெருசா எதுவும் இருக்க மாதிரித் தெரியல சார். பயத்துல அன்கான்சியஸ் ஆகி இருக்கலாம். ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனா என்னன்னு தெரிஞ்சிடும்.”
“கொஞ்சம் சீக்கிரம் போங்க சார்”
“இவங்க உங்களுக்கு யார் சார்?”
ஒரு நொடி தடுமாறியவன் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்ட வார்த்தையை மேல்நோக்கி இழுத்து, “என்னோட வைஃப்!” என்றான்.
முதல்முறையாக, அவளுடனான உறவை ஒப்புக் கொண்டவன் இமை சிமிட்டாது அவளையே பார்த்துக் கொண்டு பயணிக்க, துணைவனின் மடியில் சுகமாக உறங்கிக் கொண்டு வந்தாள் ரிதுசதிகா. ஓட்டநரின் அசாத்திய தைரியத்தால், இருபது நிமிடத்தில் மருத்துவமனைக்கு வந்தடைந்தாள். வண்டியை விட்டு இறங்கியதுமே ஓட்டுநரின் கைப்பிடித்தவன்,
“ரொம்பத் தேங்க்ஸ் சார்!” என்றான்.
அவர் சின்னப் புன்னகையுடன் கடக்க, அந்தச் சிரிப்புக்குப் பின் எத்தனை நபர்கள் இந்த நன்றியை உரைப்பார்கள் என்ற எண்ணம் ஒளிந்திருந்தது. உயிர்ச் சுமையைத் தாங்கிக்கொண்டு, எமனோடு போராடி பல உயிர்களைக் காப்பாற்றும் ஓட்டுநர்கள் நிலை, பெரிதாக வெளியில் தெரிவது இல்லை. சுய விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கும் நபர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் கூட இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
கண்ணாடிக் கதவின் வழியாக, மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான். மாமனார் சொன்ன போதே யோசித்திருக்க வேண்டும் எனத் தாமதமாக உணர்ந்தான். கம்பீரத்திற்குச் சொந்தக்காரி, ஒரு இருக்கையின் மேல் இவ்வளவு பயம் ஏன் கொள்கிறாள் என்ற கேள்வி அவனைத் துரத்தியது. அவள் தோரணையும், வாயிலிருந்து உதிக்கும் கடுமையான சொற்களும், ஒரு பயத்திற்குக் கட்டுப்படுவது ஆச்சரியமாக இருந்தது.
“ரிது எங்க?”
மாமனாரின் குரலுக்குத் திரும்பியவன் விலகி நின்றான். கண் கலங்கக் கண்ணாடி வழியாக மகளைப் பார்த்தவர், “டாக்டர் என்ன சொன்னாரு?” விசாரித்தார்.
“பெருசா அடி எதுவும் இல்லை. அங்கங்க சின்னக் காயம் தானாம்.”
மருமகனின் வார்த்தையை நம்பாது மருத்துவர் வெளியில் வரும் வரை அப்படியே நின்றிருந்தார் பொன்வண்ணன். கொடுக்க வேண்டிய சிகிச்சையைக் கொடுத்துவிட்டுக் கதவைத் திறந்த மருத்துவர்,
“ரொம்ப பேனிக் ஆனதோட ரிஃப்ளெக்ட் தான் இந்த மயக்கம். மத்தபடி பயப்பட எதுவுமில்லை. நர்ஸ் ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரத்துல நீங்க போய் பார்க்கலாம்.” என்றார்.
உள்ளே சென்றவரின் கண்கள், கண்ணீருக்கு நடுவில் மிதந்து கொண்டிருந்தது. அங்கங்கே ரத்தக் காயங்களோடு, பயம் தெளியாது மருந்தின் வீரியத்தோடு படுத்துக் கொண்டிருக்கும் மகளைக் கரிசனத்தோடு பார்த்தார். அவருக்குப் பின் வந்தவன் மனநிலை, குற்ற உணர்ச்சியில் தத்தளித்தது. தன்னால் தான் இப்படி ஒரு நிலை என்று எண்ணியவன்,
“சாரி சார்!” என்றான் வருத்தத்தோடு.
மருமகன் பக்கம் திரும்பாதவர், மகள் தலையில் கை வைத்து மெதுவாக வருடிவிட்டு, “என்ன ஆனாலும் டிரைவ் பண்ண மாட்டான்னு நம்புனதால தான் எல்லாரையும் அனுப்பி விட்டேன். இந்த அளவுக்குத் துணிவான்னு எதிர்பார்க்கல. என் பொண்ணைப் பத்தி நானே சரியாப் புரிஞ்சுக்கல. இப்ப வந்த நீ எப்படிப் புரிஞ்சிப்ப?” என்றதும் புருவங்களைச் சுருக்கினான்.
மெல்ல மகள் மீதிருந்த பார்வையை மருமகன் மீது திருப்பியவர், “வாழ்க்கையில எந்தக் குறையுமே இல்லாம வளர்ந்தவ என் பொண்ணு. கேட்ட எல்லாத்தையும் உடனே நடத்திக் கொடுக்குற அண்ணன். பசங்களை மட்டுமே உசுரா நினைக்கிற அம்மான்னு, இவ உலகம் ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. என் பையனுக்குப் பொண்ணு பார்த்தோம். அன்னைக்கு ரிது ஒரு வேலை விஷயமா வெளிநாடு போயிட்டா. திரும்ப வந்தவ உடனே அண்ணனுக்குப் பார்த்த பொண்ணைப் பார்க்கணும்னு அடம் பிடிச்சா. நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்கல. அண்ணனைக் கூப்பிட்டுட்டுக் கிளம்பிட்டாள்.
அன்னைக்கு ரிது தான் டிரைவ் பண்ணிட்டுப் போனா… அதுதான் என் பொண்ணைச் சாதாரணமாய் பார்த்த கடைசி நாள். கொஞ்ச நேரத்துல ஆக்சிடென்ட்னு போன் வந்துச்சு. இதே மாதிரி தான் ஓடி வந்தேன். அன்னைக்கும் என் பொண்ணு இப்படித்தான் படுத்திருந்தா. பையன் தான் மொத்தமா படுத்துட்டான்…” என இடைவெளி விட்டார் தொண்டை அடைத்ததில்.
மாமனாரின் வார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், “தண்ணி குடிக்கிறீங்களா சார்” கேட்டிட, தொண்டையைச் செருமிக் கொண்டு,
“அன்னைக்குப் படுத்த படுக்கை ஆனவதான் என் பொண்டாட்டி. பிள்ளையோட மரணம் அவளை மொத்தமா மாத்திடுச்சு. யாரைப் பார்க்குறதுன்னு தெரியாம திண்டாடி நின்னேன். சொந்தம்னு சொல்லிக்கிட்டு வந்து பார்த்த அத்தனைப் பேரும், அவங்களோட வன்மத்தைக் கொட்டிட்டுப் போனாங்க. அன்னைக்குத் தான் தெரிஞ்சுது, பணத்தைச் சம்பாதிச்ச நான் நல்ல மனுஷங்களைச் சம்பாதிக்கலன்னு.
நினைவு திரும்பிக் கண் முழிச்சதும் அண்ணனைக் கேட்டா. நல்லா இருக்கான்னு எவ்ளோ சொல்லியும் நம்பல. தன்னோட அண்ணன் உயிரோட இல்லன்னு தெரிஞ்சு துடிச்சா… அவனோட சாவுக்கும் நான் தான் காரணம்னு பைத்தியக்காரி மாதிரி உளறிட்டு இருந்தா. அதை இன்னும் அதிகப்படுத்துச்சு என் மனைவியோட விஷயம். கண்ணு முன்னாடி உணர்வில்லாமல் படுத்திருக்க அம்மா, தன்னோட ஆசையால உயிரை விட்ட அண்ணன், பெரிய இழப்பைத் தாங்கிக்க முடியாமல் தனியா நிக்கிற அப்பான்னு அவளோட தண்டனை ரொம்பப் பெருசு!” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
அவர் நிலை கண்டு ஆதரவாகத் தாங்கிப் பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான். மருமகன் கையைத் தன் உள்ளங்கையில் வைத்து மூடியவர் ஆழமாகப் பார்த்தார். அந்தப் பார்வைக்குப் பின், ஒரு தேடுதலும் பாதுகாப்பும் இருப்பதை உணர்ந்து கொண்டவன் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான்.
ரிது சதிகா அந்தச் சம்பவத்திலிருந்து மீள முடியாமல் மனநல மருத்துவரைத் தேடிச் செல்லும் அளவிற்குச் சிதிலமடைந்தாள். மனைவிக்காக வெளிநாட்டிலிருந்து கூட மருத்துவரை அழைத்து வந்து பார்த்து விட்டார். அதிர்வு தாங்காமல் சரிந்தவர், சரிந்தவராக இன்று வரை இருக்கிறார்.
பெற்ற பிள்ளையைத் தொலைத்துவிட்டு, மீதம் இருக்கும் மகளைத் தேற்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவர், மனைவியைத் தனி ஆளாக மருத்துவமனையில் சேர்த்துக் கவனித்துக் கொண்டார். தந்தையின் அவஸ்தைகளைப் புரிந்து கொள்ளாதவள், தனி ஒரு உலகில் குற்ற உணர்ச்சியில் நாள்தோறும் பயணிக்க ஆரம்பித்தாள்.
இம்மூவரின் தாக்கத்தால், முடங்கிப் போன நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாமல் இவர்களைச் சுற்றியே இருந்து விட்டார் பொன்வண்ணன். நன்றியோடு வேலை பார்க்க வேண்டிய சில கயவர்கள், இதுதான் சமயம் என்று அவர்கள் சொத்தை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். மெல்ல மெல்லச் சுரண்டி பெரும் நஷ்டத்திற்குத் தள்ளப்பட்டது பொன்வண்ணனின் தொழில்கள் அனைத்தும்.
வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, ஆறு மாதமாகச் சம்பளம் தராமல் இருக்கும் தகவலைத் தெரிந்து கொண்டவர் அனைத்துக் கையாடலையும் கண்டு பிடித்தார். தனி ஆளாக நிற்கும் இவர் என்ன செய்து விடப் போகிறார் என்ற எண்ணத்தில், பணத்தைச் சுருட்டிய அனைவரும் தைரியமாக ஒப்புக்கொண்டு வெளியேறினார்கள்.
ஏற்கெனவே மனமுடைந்து முடங்கி இருந்தவர், தப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடத் திராணி இன்றி, போனது போகட்டும் என்று விட்டுவிட்டார். மனநல மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும் வழியில், மூடி இருக்கும் கம்பெனியைப் பார்த்தாள். தந்தையிடம் விசாரிக்கலாம் என்று வீடு வந்தவள் பாதி மயக்கத்தில் இருந்த தந்தையைக் கண்டு பதறினாள்.
“அப்பா…”
மகளின் அனத்தல் சத்தத்தில் அசைந்தவர் தண்ணீர் கேட்டார்.
அதைக் கூடச் செய்யாமல் அழுது கொண்டிருந்த தன் முட்டாள் தனத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டவள், தந்தையை இயல்புக்கு மீட்டாள். வெகு மாதங்கள் கழித்துத் தந்தை, மகள் இருவரும் அன்றுதான் முகம் பார்த்துக் கொண்டனர். தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் விவரித்தவர் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாதவராய் கண்ணீர் சிந்தினார்.
அந்தக் கண்ணீரும், சுற்றி இருந்தவர்கள் செய்த துரோகமும், அவளை எழ வைத்தது. இவ்வளவு இழப்புகளைத் தன்னால் சந்தித்த தன் தந்தைக்கு அனைத்தையும் திருப்பிக் கொடுக்க முடிவு செய்தாள். சொந்தம் என்று சொல்லிக்கொண்டு பணத்திற்காக உறவாட வந்தவர்களை முதல் வேலையாக வெட்டி விட்டாள். அவளுக்கென்று இருந்த நம்பகமான தோழர்களின் உதவியால் நம்பிக்கைத் துரோகம் செய்த அனைவரையும் பிடித்தாள்.
பெண், என்ன செய்து விடப் போகிறாள் என்ற எண்ணத்தில் அவளுக்குப் போக்கு காட்ட, கையடக்கக் கத்தியைக் கழுத்தில் வைத்து,
“எண்ணி ஒரு மணி நேரத்துல எடுத்த பணம் எல்லாம் முழுக் கணக்கோட வந்தாகணும். இல்லனா, செத்தது நீதான்னு கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கிழிச்சுக் குப்பையா போட்டுடுவேன்.” என்றவளின் புது அவதாரம் தான் கருடேந்திரன் பார்த்தது.
மகளைப் பற்றிய வரலாறைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தவர் அமைதியாகக் கண்மூடிச் சுவரில் சாய்ந்து கொண்டார். அவரையும், படுத்திருக்கும் மனைவியையும் பார்த்தவனுக்குப் பலத்த பெருமூச்சு.
***
கண் முழித்ததும் தந்தையானவர் ஓடிச் சென்று நலம் விசாரிக்க, தாலி கட்டியவன் பெயருக்கென்று நின்றிருந்தான். வாய்மொழி தந்தைக்காக இருக்க, விழிமொழி அவனுக்காக இருந்தது. சிவந்த விழிகள் கோபத்தின் அளவைப் புரிய வைத்தது. சிறிது குற்ற உணர்வு இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாது திடமாக நின்றிருந்தான் கருடேந்திரன்.
“என்ன நினைச்சு இவனை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்கன்னு தெரியல. இப்ப அது தப்புன்னு புரியுதா?” என்றவள் பார்வை அவன் மீதுதான் நிலை குத்தியது.
கொடுக்க வார்த்தைகள் இல்லாததால் தடுமாறிக் கொண்டிருந்தார் பொன்வண்ணன். தந்தையின் தடுமாற்றத்தைப் பார்த்தவள், வெற்றி பெற்ற மிதப்பில் லேசாக உதடு வளைத்து, “ரொம்ப அவசரப்பட்டுட்டிங்கப்பா… இதுக்கான விலையா என் உசுரை எடுக்கப் பார்த்திருக்கான். இனியும் இவன் கட்டுன இந்தத் தாலி என் கழுத்துல இருக்கனுமா?” என்ற இரண்டாவது கேள்வியில் அந்தத் தடுமாற்றம் ஆட்டம் கண்டது.
கனகச்சிதமாகத் திட்டம் போட்டுக் கொலை செய்யப் பார்த்தது போல் பிதற்றும், மனைவி மேலிருந்த சின்னக் கருணையும் மறைந்து போனது. அப்படியே விட்டுச் செல்லாமல் காப்பாற்றியதற்கான தண்டனையாகக் கருதியவன்,
“என்னமோ அந்தத் தாலிக்கு மதிப்புக் கொடுத்துக் கழுத்துல மாட்டிருக்க மாதிரிப் பேசுற. உனக்கெல்லாம் அது ஒரு தூசு. ஏற்கெனவே தூக்கிப் போட்டவ தான… காரியம் ஆகாம ஒன்னும் அது உன் கழுத்துல இல்ல. என்னை வச்சு உன்னை நல்லவளாக்கிக்காத.” என்றான்.
“நான், என் அப்பாகிட்டப் பேசிட்டு இருக்கேன்.”
“என்னைப் பத்திப் பேசிட்டு இருக்க.”
“சோ வாட்!”
“என்னைப் பத்திப் பேசினா நான்தான் பதில் கொடுப்பேன்.”
“முதல்ல உனக்கு இங்க என்னடா வேலை? அதான் கொலை பண்ணப் பார்த்த பர்ஸ்ட் அட்டெம்ட் நல்லபடியா முடிஞ்சிருச்சில்ல. அடுத்து என்ன பண்ணலாம்னு ஓசில தின்னுட்டு யோசி.”
“அடுத்த தடவை உன் வாயைக் கிழிக்கிற மாதிரி தான்டி ஸ்கெட்ச் போடுவேன்.”
“அதுக்கு நீ உயிரோட இருக்கணும்.”
“இப்படியே உன் மூஞ்சப் பார்த்துட்டு இருந்தா, சத்தியமா நெஞ்சு வலி வந்து செத்துடுவேன்.”
“அப்போ நல்லாப் பாரு.”
“ரெண்டு பேரும் நிறுத்துங்க.”
“அவன மட்டும் நிறுத்தச் சொல்லுங்கப்பா. உங்களுக்கும் எனக்கும் நடுவுல அவன் யாரு? பஞ்சப் பரதேசிய வீட்டுக்குள்ள விட்டதே தப்பு. இதுல நமக்கு நடுவுல விடுறது பெரிய தப்பு!” என்ற வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் சரளா, சத்யராஜ் தம்பதிகள்.
மருமகளின் வார்த்தை ஊசியாய் உள்ளத்தைக் குத்தினாலும் காட்டிக் கொள்ளாது, “எப்படிம்மா இருக்க? பார்த்து வண்டிய ஓட்டிட்டுப் போகக் கூடாதா? நல்லவேளையா சின்னக் காயத்தோட ஆச்சு.” கருணையாக நலம் விசாரித்தார் சரளா.
“பெருசா எந்தப் பிரச்சினையும் இல்லல்ல சார்.”
மகள் பேசிய வார்த்தைகள் அவள் புகுந்த வீட்டு ஆள்களின் காதில் விழுந்திருக்கும் என்ற சங்கடத்தோடு நின்று கொண்டிருந்தவர், “அதெல்லாம் இல்ல.” என நெளிந்து கொண்டு பதில் கொடுத்தார்.
தங்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி புரியாததால் பக்கத்தில் நின்றிருக்கும் மகனைப் பார்த்தார்கள். அவனோ சுழற்றி அடிக்கும் சூறாவளி போல், கடுமையான பார்வையோடு நின்றிருந்தான். வாய் வார்த்தை, பிரச்சினையாக மாறிவிடக் கூடாது எனப் பயந்தவர் மகளை அடக்க முயன்றார்.
“என்னை எதுக்காகப்பா அடக்குறீங்க? குடும்பமா சேர்ந்துதான் இந்தப் பிளானைப் போட்டு இருப்பாங்க. உங்களுக்கு ஒரே வாரிசு நான் மட்டும்தான். என்னைக் கொலை பண்ணிட்டா, இவனைப் புருஷன்னு காரணம் காட்டி எல்லாச் சொத்தையும் வாங்கிக்கலாம் பாருங்க. அதுக்கான முயற்சியா தான் இவனை என் தலையில கட்டிய வச்சாங்க. அதுக்காக, இவங்க சொன்ன அத்தனையும் பொய்! அந்த ரவி கூடச் சேர்ந்து பித்தலாட்டம் ஆடி இருக்காங்க.”
“சம்பந்தமில்லாம தான் இப்படி நல்லவங்க மாதிரி வந்து விசாரிக்கிறாங்களா? உங்களை மாதிரித் திருட்டுக் குடும்பத்து கிட்ட இருந்து சொத்தைக் காப்பாத்த தான்டா, கடவுள் என்னை உயிரோட விட்டு வச்சிருக்காரு.”
“உன் பொண்டாட்டி என்னப்பா சொல்றா?” என்ற தந்தையின் கேள்விக்குப் பதில் அளிக்காதவன்,
“உங்க பொண்ணை வாயை மூடச் சொல்லுங்க. தேவை இல்லாம என் அப்பா அம்மாவை அசிங்கப்படுத்துறதைப் பார்த்துட்டுச் சும்மா இருக்க மாட்டேன்.”
“இங்கப் பாருடா, கொலைகாரனுக்கு ரோஷத்தை. என்னைக் கல்யாணம் பண்ண கையோட வீட்ட மீட்டுட்ட. உன் தம்பிய பெரிய ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் பார்க்குற. இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுகிட்டு இருக்கியா? என் வாழ்க்கைலயே பார்த்த மிகப்பெரிய பிச்சைக்காரத் திருட்டுக் குடும்பம் நீங்க தான்டா.” என்றவளை அடிப்பதற்காகப் பாய்ந்தான் கருடேந்திரன்.
பாயும் மகனைத் தடுத்துப் பிடித்தார் சத்யராஜ். ஒரு நொடியில் தலைகீழான சூழ்நிலையில், பதறிப் போன பொன்வண்ணன் மகள் பக்கம் நின்று கொள்ள, “சரியான ஆம்பளையா இருந்தா, மேல கை வச்சுப் பாருடா.” என அவனை உசுப்பேற்றினாள்.
“நீ பேசுறது ரொம்பத் தப்பா இருக்கும்மா. உங்க அப்பாவா வந்து தான் வீட்டை மீட்டுக் கொடுத்தார். நாங்க எவ்வளவோ வேணாம்னு சொன்னோம். அவர்தான் என் பொண்ணு பண்ணலனாலும், அவளால உங்களுக்கு ஏற்பட்டதைச் சரி பண்ண வேண்டிய கடமை எனக்கு இருக்குன்னு மீட்டுக் கொடுத்தார். என் பையன் முன்ன விட இப்ப ரொம்ப நல்லா இருக்கான். வேற ஹாஸ்பிடல் மாத்த வேண்டிய தேவையே இல்ல. அதையும் உங்க அப்பா தான் வலுக்கட்டாயமாய் பண்ணாரு. காசு பணத்துக்குப் பிள்ளையை விக்கிற பெத்தவங்க நாங்க இல்ல.”
“ஹா ஹா!” கம்பீரமாகப் பேசும் மாமனாரைக் கண்டு சத்தமிட்டு நகைத்தவள், “அவர் கொடுத்தா வெட்கமே இல்லாம வாங்கிப்பீங்களா? ரோஷத்தோட இருக்க எந்த மனுஷங்களும் இப்படிச் சொல்ல மாட்டாங்க.” என்றதைக் கேட்டதும் தந்தையை விட்டுத் திமிறப் பார்த்தான் கருடேந்திரன்.
அவனை அடக்க முடியாமல் அடக்கியவர், “அந்தக் காசை நாங்க திருப்பிக் கொடுத்திடறோம். எங்க பிள்ளைய எப்படிப் பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும். இன்னொரு வார்த்தை எங்க குடும்பத்தைப் பத்தியும், என் பிள்ளைங்களைப் பத்தியும் பேசாதம்மா.” என்றவரின் வார்த்தையில் இருக்கும் கோபத்தை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.
“நல்ல டிராமா கம்பெனி! உங்க பையன் திட்டம் போட்டு என்னைக் கொலை பண்ணப் பார்ப்பான். அதுக்கு வக்காலத்து வாங்கப் பின்னாடியே நீங்க வருவீங்க. ஏன்டா இப்படிப் பண்ணிங்கன்னு கேட்டா துள்ளிக் குதிப்பீங்க. நல்லா இருக்கு உங்க கூத்து!”
“வேணாம்டி! என்னை மிருகமா மாத்தாத. அப்படியே செத்துத் தொலைன்னு விடாமல் கூட்டிட்டு வந்து சேர்த்ததுக்கு நல்லா நன்றியைக் காட்டுற.”
“ஆக்சிடெண்ட் ஆனதுக்குக் காரணமே நீதான்டா”
“இதுக்கு மேல இங்க இருக்குறது சரி வராது. நம்ம போகலாம் கருடா…” என மகனை இழுக்கும் கணவனைத் தடுத்த சரளா, “உனக்கு இப்படி ஆனதுக்கு எந்த விதத்துல என் பையன் காரணம்?” அழுத்தமாகக் கேட்டார்.
தான் பேச ஆரம்பித்ததற்குப் பின்னர், அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மாமியார் கேள்வி எழுப்பியதும், வெகுண்டு எழுந்தவள் நடந்த அனைத்தையும் விவரித்தாள். உண்மையா என்பது போல் மகனை ஒரு பார்வை பார்க்க, தலை குனிந்து கொண்டான் கருடேந்திரன். அவன் கையைப் பிடித்திருந்த கணவனின் கையைப் பிரித்தார்.
“என் வளர்ப்பை அசிங்கப்படுத்தினதுக்காகத் தான் இந்தக் கல்யாணத்தையே நடத்தி வச்சேன். இப்பத் திரும்பவும் அதையே பண்ணிட்டு வந்து நிக்கிற. இனி ஒரு தடவை இந்தப் பொண்ணு என் வளர்ப்பைத் தப்புச் சொன்னா, உசுரோடவே இருக்க மாட்டேன்.” என்றவர் பொன்வண்ணனைப் பார்த்து,
“உங்க பணம் உங்க வீடு தேடி வரும், சார்.” என்றதோடு மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேற, அவருக்குப் பின்னால் சத்யராஜும் வெளியேறினார்.
அன்னை பேசி விட்டுச் சென்ற வார்த்தையால் கடும் ஆத்திரத்திற்கு ஆளானவன், பக்கத்தில் இருந்த மருந்து பாட்டிலைத் தூக்கிப்போட்டு உடைத்து விட்டுச் சரசரவென்று வெளியேற, செய்வதறியாது நின்று கொண்டிருந்தார் ரிதுவின் தந்தை.
***
மாமனார் வீட்டிற்குச் செல்ல விரும்பாதவன் பூங்காவில் அமர்ந்து விட்டான். உள்ளம் கொதியாய் கொதித்துக் கொண்டிருந்தது. தன் வாழ்வில் மனைவி என்றவள் வந்த நாளிலிருந்து, தனக்கு எதிராக நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்குக் கொலைவெறி உண்டானது. இனி ஒரு நொடி கூட அன்னை முன்பு, இன்று நின்றது போன்ற சூழ்நிலையில் நிற்கக்கூடாது என்ற சபதத்தை எடுத்தவன், அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய அனைத்தையும் துல்லியமாகத் திட்டமிட்டான்.
முதல் வேலையாக, அந்த ரவியைச் சுற்றி வளைக்க நினைத்தவன் எண்ணத்தைக் குறுஞ்செய்தி கலைத்தது. கட்டியவள் தான், மருத்துவமனைக்கு வருமாறு செய்தி அனுப்பி இருந்தாள். அதைப் பார்த்ததும் குபுகுபுவென்று கோபம் கொப்பளிக்க,
“என்னால வர முடியாது. கூப்பிட்டதும் வரதுக்கு நான் உன் வீட்டு நாய் இல்ல.” எனப் பதில் அனுப்பி வைத்தான்.
“இதுதான உன்னோட அம்மா நம்பர்?” எனச் சரளாவின் எண்ணை அனுப்பி வைத்து மறைமுகமாக மிரட்ட,
“இவள…” எனப் பல்லைக் கடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
அவன் வருகைக்காகக் காத்திருந்தவள் பார்த்ததும் மிதப்பாகக் காலை ஆட்ட, “அங்கங்க அடி பட்டதுக்குப் பதிலா இந்தக் கால் உடைஞ்சு இருக்கலாம்.” என முணுமுணுத்தான்.
“அடுத்த அட்டெம்ப்ட்ல ட்ரை பண்ணுடா.”
“உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் மொத்தமா முடிச்சு விட தான் ட்ரை பண்ணனும்.”
“அடுத்த தடவையாவது சொதப்பாம ஒழுங்காப் பண்ணு.” எனக் கேலி செய்தாள்.
“இப்ப எதுக்கு என்னை வரச் சொன்ன?”
“ஹாஸ்பிடல் பில்ல யாரு கட்டுவா?”
“அடியே…” என அடிக்குரலில் சீறும் கணவன் முன்னால் கைபேசியை உயர்த்திக் காட்டியவள், “போன் போடவா?” என இழுத்து எள்ளல் செய்தாள்.
“எங்கிட்டக் காசு இல்ல.”
“அது என்னோட பிரச்சினை இல்ல.”
“ஏன்டி! என் உசுர வாங்கிட்டு இருக்க.”
“சீக்கிரம் போய் ஹாஸ்பிடல் பில்ல கட்டு.”
“முடியாதுன்னு சொன்னா…”
“சோ சிம்பிள்!” எனச் சரளாவிற்கு அழைப்பு விடுத்தாள். அதைப் பார்த்தவன் பிடுங்கப் போக, லாவகமாக அவனிடமிருந்து தப்பித்தவள்,
“ரொம்ப ஆடிட்ட. இனி என்னோட ஆட்டத்தைப் பார்க்கப் போற.” என்றாள்.
இப்போது தனக்கு நேரம் சரியில்லாததால், முறைக்க மட்டுமே முடிந்தது அவனால். அந்த முறைப்பிற்கு ஏளனத்தைப் பதிலாகக் கொடுத்தவள் வாசலைக் கை காட்ட, பல்லைக் கடித்துக் கொண்டே வெளியேறினான் ரிதுவின் கணவன்.