💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 08
மாரிமுத்துவின் வீட்டில் அவரது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரே நாளில் நிச்சயதார்த்த ஏற்பாடுகளைச் செய்து விட்டார் அவர்.
பணச் செல்வாக்கும், ஆட்பலமும் அதற்கு உதவ ஒவ்வொருவரையும் வேலைக்கு ஏவினார்.
“மகி! அந்தத் தட்டை எடுத்து வை” என்க, அவள் சொன்ன வேலையைச் செய்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
அடுத்த ஒரு நிமிடத்தில், “மகி” என்ற அழைப்பு கேட்க, “மகீஈஈஈ மகீஈஈஈ” பல்லைக் கடித்துக் கொண்டு சென்றவள் சற்று நேரத்தில் வந்து கட்டிலில் படுத்தே விட்டாள்.
“அடியே என்னடி இது?” ஜனனி சிரிப்போடு கேட்க, “எங்கப்பாவுக்கு நான் மட்டும் தான் பொண்ணா? மகி மகினு மொத்த வேலையையும் இந்த ஒத்த ரோசா கிட்ட வாங்குறார்” என்றாள், சோர்ந்து போன குரலில்.
“அப்பாவுக்கு உன் மேல அம்புட்டு பாசம் மகி. அதனால தான் அப்படி கூப்பிடறார்” சிரித்துக் கொண்டாள் ஜனனி.
“வாயில நல்லா வந்துட போகுது. கடைசிப் பிள்ளையை வேலை வாங்கவே வெச்சுக்குறாங்களோ? முடியல சாமி” குப்புறப் படுத்துக் கொண்டவளைக் கண்டு மற்றவளுக்குப் புன்னகை.
இது எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியின் சொரூபமாக கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள் நந்திதா. நிச்சயதார்த்தத்திற்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தாள்.
உயிருள்ள சிலையாக இருந்தவள் ஒரு வார்த்தை பேசவில்லை. இவர்களது பேச்சைக் காதில் வாங்கியதாகவும் தெரியவில்லை.
“அக்கா!” அவளை உலுக்க, “வந்துட்டாங்களா ஜானு?” படபடத்தாள் நந்திதா.
“அவங்க இன்னும் வரல. நீ எதுக்கு நர்வர்ஸா இருக்கே? ரிலாக்ஸா இரு” அவளது கைகளைப் பிடித்துக் கொள்ள, “உன் மடியில் கொஞ்சம் சாஞ்சுக்குறேன் ஜானு” கதிரையில் அமர்ந்தவாறு அவளது மடியில் தலை சாய்ந்தாள்.
“நான் ஒன்னும் பூதம் இல்லக்கா, உன் மனசுல என்ன ஓடுதுன்னு கண்டு பிடிக்க. நீயா சொல்லாம நான் எதுவும் யோசிக்க முடியாது. அவ்ளோ தான் சொல்லுவேன்” அவளைத் தட்டிக் கொடுக்க, “ப்ளீஸ் டி எதுவும் கேட்காத. என்னை இப்படியே விட்று” என அவளது வாயை அடைத்தாள்.
சற்று நேரம் கழித்து வெளியில் வந்து ராஜீவ் அருகில் நின்று கொண்டாள். கார் வந்து நின்றதும் சத்யாவின் குடும்பத்தினர் வந்து இறங்கினர்.
“வாங்க வாங்க” மாரிமுத்து அவர்களை அமோக வரவேற்போடு அழைத்துச் சென்றார்.
“இது யாருடா அழகா இருக்கா” ரூபன் தேவனிடம் கேட்க, “உனக்கு முதல் பார்வையில் எல்லாரும் அழகா தான் தெரிவாங்க. கழுதையும் கோல்டன் வுமனா தெரியும் போல” அவனது காதைக் கடித்தான் தேவன்.
“போடா உனக்கு வேற வேலையே இல்ல. நான் போய் பேசுறேன்” என வேகமாக சென்றவன், “ஹாய்ங்க” என்றிட, அவளோ இருந்த கடுப்பில் அவனை முறைத்துப் பார்த்தாள்.
“ஹாய் சொன்னது ஒரு குற்றமா இப்படி முறைக்கிறீங்க? உங்கக்கா எவ்ளோ அடக்கமா இருந்தாங்க. நீங்க அடாவடியா தெரியுறீங்களே” சட்டென சொல்லி விட்டான் ரூபன்.
“சோ வாட்? அடாவடின்னு தெரியுதுல்ல. என் கிட்ட அடக்கியே வாசிங்க. இல்லனா அடி தாறுமாறா இருக்கும்” என்றவளை ராஜீவ் அழைக்க, “என்ன ராஜ்?” புன்னகை பூத்தாள் ஜனனி.
“நான் உள்ளே போறேன். உங்கப்பா தேடப் போறார்” என்றிட, தலையசைத்தவள் மீண்டும் ரூபனிடம் திரும்பும் போது புன்னகையை அழித்து விட்டாள்.
“அவர் கிட்ட எவ்ளோ கியூட்டா சிரிச்சீங்க. இப்போ என்னாச்சு?”
“அவரும் நீங்களும் ஒன்னா? ஹீ இஸ் மை..” என சொல்ல வந்தவள் அத்தோடு நிறுத்திக் கொள்ள, “அய் நோ! ஹீ இஸ் யுவர் பாய் ஃப்ரெண்ட். ரைட்?” சரியாகவே கணித்துக் கேட்டவனைக் கண்டு அவளது புருவங்கள் மேலெழுந்தன.
“அவரைப் பார்க்கிற பார்வையே சொல்லுச்சு உங்க காதல் கதையை. அப்பறம் உங்க தங்கச்சி எங்கே?” ரூபன் கேட்டதும், “என் கிட்டயே என் தங்கச்சி பற்றி கேட்கிறியா? உனக்கு என்ன தைரியம்?” எனக் கேட்டாள், காட்டமாக.
“உங்க கிட்ட கேட்காம கடைக்கண் பார்வை பார்க்கிறது தான் தப்பு. இப்படி டேரக்டா கேட்டா தப்பில்லங்க. அன்ட் என் ப்ரதருக்கும் உங்க கூட பேசனுமாம். கொஞ்சம் வெட்கப்பட்டுட்டு இருக்கார்” தேவனைச் சுட்டிக் காட்ட,
“நீங்க வெட்கப்படறீங்களா சார்?” என அவள் சத்தமாக கேட்டு விட, “உங்க ப்ரதர் தான் சொன்னாரு” என அவனைக் காட்டி விட்டுச் செல்ல, “டேய் எரும. மானத்தை வாங்குறியேடா. நான் சொன்னேனா பேசனும்னு?” அவனை முறைத்துத் தள்ளினான்.
“வழக்கமா சேர்ந்து தானே பொண்ணுங்க கூட பேசுவோம். இன்னிக்கு என்ன உனக்கு?” புருவம் உயர்த்திக் கேட்க, “இந்தப் பொண்ணு சாதாரணமா தோணல. சைட்டடிக்க கூட தோணல. நீயும் வம்பு பண்ணாத” என உள்ளே செல்ல ரூபனும் அவனைப் பின் தொடர்ந்தான்.
யுகனைப் பார்த்த ஜெயந்திக்கு என்னவோ போல் இருந்தது. இரண்டாம் தாரம் எனும் விடயத்தை அவரால் இன்னும் ஏற்க முடியவில்லை.
மாரிமுத்து மகிழ்வோடு சத்யாவைப் பார்த்தார். அவன் பணம், குடும்ப அந்தஸ்து அனைத்திலும் அவருக்கு சரி நிகராக இருந்தான். படித்தவன், குடும்பமும் நல்ல குடும்பம் என்பது அவருக்கு போதுமாக இருந்தது.
ஜெயந்தி மூத்த மகளை அழைத்து வந்தார். மகிழ்வைத் துடைத்தெறிந்த முகம், ஆனால் சிரிப்பை கடினப்பட்டு உதட்டில் ஒட்ட வைத்துக் கொண்டு வந்தாள்.
“யுகி கண்ணா! இவங்க தான் உன் அம்மா” என மேகலை காண்பிக்க, “அம்மா சொல்லாதீங்க பாட்டி. எனக்கு அம்மா யாரும் வேணாம்” மெல்ல கிசுகிசுத்தான் யுகன்.
மேகலைக்கு மனம் வருந்தியது. இருப்பினும் அனைத்தும் சரியாகும் எனும் எண்ணத்தில் மனதைத் தேற்றிக் கொண்டார்.
சத்யா இறுக்கம் தளராது அமர்ந்திருந்தான். அவனுக்கு அவ்விடத்தில் இருப்பது முள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது.
மகி மெல்ல எட்டிப் பார்த்து, “மாம்ஸ் செமயா இருக்கார்ல அக்கா” என்று ஜனனியிடம் கூற, அவளது பார்வை அவன் மீது படிந்து மீண்டது.
நந்திதா மேகலையிடம் ஆசீர்வாதம் வாங்கி, நிச்சயதார்த்தப் பிடவையை எடுத்துக் கொண்டு சென்றாள். இதற்கு மேல் ஆதங்கப்பட்டு எதுவும் ஆகப் போவதில்லை என ஜெயந்தியும் நடப்பதை ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையில், ராஜீவ்வுக்கு வீட்டில் அழைப்பு வந்தது. அவன் செல்வதற்கு ஆயத்தமாக, “இப்போவே போகனுமா ராஜ்?” கவலையோடு கேட்டாள் ஜனனி.
“அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க ஜானு. நான் கிளம்புறேன்” அவனுக்கும் செல்ல மனமில்லை.
உடைகளை எடுத்து வைத்து விட்டு, பையைத் தோளில் மாட்டியவனை இமைக்காமல் பார்த்திருந்தாள் பெண். இனி மீண்டும் என்றைக்குப் பார்க்கக் கிடைக்கும் என நினைத்தாள்.
அவளது காதல் ஏக்கங்கள் நிறைந்தது. ஒரு நாள் கூட வாய் விட்டு மகிழ்வோடு கூறாத காதல். தயக்கத்தோடு தான் காதல் உரைத்தாள். உடனுக்குடன் அவனும் தவிர்த்து விட்டான். இருந்தும் காதலிக்கிறாள், அவன் தனக்குக் கிடைக்க மாட்டானா என்றொரு குருட்டுத்தமான ஆசையில்.
“ராஜ்….!!” காதலோடு அவள் அழைக்க, தலை தூக்கிப் பார்த்தான்.
அவனிடம் ஒரு ஃபோட்டோ ஃப்ரேம் கொடுத்தாள். அவன் பயன்படுத்தும் போனுக்கு ஒரு கவரையும் கூட. அவனுக்காக பார்த்துப் பார்த்து வாங்கியவை அவை.
“உனக்கு நான் எதுவும் கொண்டு வரல ஜானு” அவன் கவலையோடு சொல்ல, “எனக்கு நீ வந்ததே போதும். உன்னை என் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க முடியாதானு ஏங்கினேன். அந்த ஆசை நிறைவேறிடுச்சு. அதுவே எனக்கு பெரிய கிஃப்ட்” என்றவள், அவனிடம் ஒரு பேனாவை நீட்டினாள்.
அது அவன் அனுப்பிய பேனா. அவளுக்கு எக்ஸாம் செய்ய வேண்டும் என்று பேனா கேட்டதற்காக, அவன் போஸ்ட் செய்திருந்தான். அந்தப் பேனாவால் தான் பரீட்சை எழுதினாள் ஜனனி.
அவளது இடது கையை நீட்டி, “இதில் உன் பெயரை எழுது ராஜ்” எனச் சொல்ல, “இதெல்லாம் எதுக்கு டி?” என்று கேட்டாலும், அவளது ஆசைக்காக அவள் கையில் தனது கையொப்பத்தை இட்டான்.
அதனைப் பார்த்து விட்டு, அவனை விழிகளுக்குள் சேகரிக்க, அங்கு கால் பேசிக் கொண்டிருந்த சத்யா இதைப் பார்த்து அங்கிருந்து நகர்ந்தான்.
ராஜீவ் செல்லும் வரை பார்த்திருந்த ஜனனி அறையினுள் வர, நந்திதாவின் முன் நின்றிருந்தான் யுகன்.
“ஹேய் குட்டி பையா. உன் பெயர் என்ன?” ஜனனி கேட்க, “அய்ம் யுகன்! எனக்குப் பிடிச்சவங்க என்னை யுகினு கூப்பிடுவாங்க” என்றான் அவன்.
“சரி. உனக்கு என்ன வேணும்?” என்று மகி அவனைப் பார்க்க, “எனக்கு எதுவும் வேண்டாம். தெரியாதவங்க கிட்டிருந்து ஒன்னும் வாங்க மாட்டேன். டாடி சொன்னா மட்டும் வாங்கிப்பேன்” சின்னவன் கூறிய தோரணையில் இருவரும் சிரிக்க, நந்திதா எங்கோ பார்த்திருந்தாள்.
“இவங்க பேச மாட்டாங்களா? வீட்டுக்கு வந்து இப்படி இருந்தால் எனக்கு போரடிக்கும்” என்றான் அவன்.
“அவங்க நல்லா பேசுவாங்க. இன்னிக்கு ஏதோ அப்செட்ல இருக்காங்கள்ல. அதான்” என ஜனனி சொல்ல, “எங்க டாடிக்கும் அப்சட். இவங்களுக்கு என்ன அப்சட்? இவங்களுக்கு கல்யாணம் பிடிக்கலயா?” பெரிய மனுஷன் போல் கேட்க,
“அப்படினா உங்க டாடிக்கும் கல்யாணம் பிடிக்கலயா?” பதில் கேள்வி கேட்டாள் ஜானு.
“எஸ் ஆன்ட்டி” என சென்று விட்டான் யுகன்.
இது என்ன புது பிரச்சினை என்று ஜனனி சிந்திக்கும் போது, “அவருக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு எனக்கு தெரியும். நீ இதைப் பெரிசு பண்ணாத ஜானு. இத்தோட விட்று” என உறுதியாகக் கூறினாள் நந்திதா.
“நீ எதையோ மனசுல வெச்சு போராடிட்டு இருக்க நந்து. என்ன தான் பிரச்சினை உனக்கு?” ஜனனியால் அதை சும்மா விட முடியவில்லை.
“தீர்த்துக்கக் கூடிய பிரச்சினைன்னா ஓகே. ஆனால் இது அப்படி இல்லை. அதனால நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். இந்த கல்யாணம் நடக்கனும்னு இருக்கிறதால் தான் நிச்சயம் வரை வந்திருக்கு” என்றவாறு நகைகளைப் போட்டாள்.
நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது. சத்யாவும் நந்திதாவும் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டனர்.
“இந்தப் பொண்ணுக்கும் ஏதோ பிரச்சினை இருக்கு போல” என நினைத்துக் கொண்டான்.
அடுத்த ஒரு வாரத்தில் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. அனைத்தும் மளமளவென்று நடப்பது போல் இருந்தது நந்திதா மற்றும் சத்யாவுக்கு.
சற்று நேரத்தில் விருந்து சாப்பிட்டுச் செல்லலாம் என்று மாரிமுத்து கூறியதால் அவர்கள் நிற்க, “அந்த பொண்ணு கிட்ட எப்படியாச்சும் பேசனும்” என்று நினைத்து, “நான் பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று சத்யா மகிஷாவிடம் சொல்ல,
மறுபுறம் ரூபனிடம், “நான் மாப்பிள்ளை கிட்ட தனியா பேசனும்” என்றிருந்தாள் ஜனனி.
தொடரும்…….!!
ஷம்லா பஸ்லி
2024-11-24