8. விஷ்வ மித்ரன்

4.5
(4)

💙 விஷ்வ மித்ரன் 💙

அத்தியாயம் 08

 

கண்களோரம் சுரந்த நீரைத் துடைத்து விட்டு நிமிர்ந்த பூர்ணியோ, கை கட்டி தன்னை ஆராய்ச்சியாய் பார்த்திருந்த வைஷ்ணவியைக் கண்டு அதிர்ந்தும் தான் போனாள்.

 

“வை..வைஷு! வா” என்றவளுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.. தான் ரோஹனுடன் பேசியதைக் கேட்டு விட்டாளோ என்று மனம் படபடவென அடித்துக் கொண்டது.

 

ஆனால் அதைத் தீர்க்கும் விதமாக “என்ன பூரி ஷாக்காகி நின்னுட்டு இருக்கே? ஐஸ்கிரீம் வாங்கலாம்” என்று வைஷு சொல்ல, சரியென தலையசைத்தவள் அவளுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு புறப்பட்டாள்.

 

ஸ்கூட்டியை வைத்து விட்டு வந்த பூர்ணி “வைஷு! நான் அழுறத பார்த்தும் நீ யேன் எதுவுமே கேட்கல?” என்று கேட்டாள்.

 

அவள் முகம் பார்த்து விட்டு “சொல்லனும்னா நீயே சொல்லி இருப்பல்ல.‌ வீணா ஏன் அழுத எதுக்கு அழுதன்னு கேட்டு உன்ன கஷ்டப்படுத்த விரும்பல” என்றாள்.

 

வைஷு உள்ளே செல்லப் போக, அவள் கைப் பிடித்து தனது அறைக்குள் இழுத்துக் கொண்டு ஓடினாள் பூர்ணி.

 

“எதுக்கு பூரி இப்படி இழுத்துட்டு வந்த?” புரியாமல் தான் நோக்கலானாள்.

 

பதிலேதும் சொல்லாமல் அவளை அணைத்துக் கொண்டு கதறியழுதாள் அவள்.

 

இதுவரை கலகலப்பாகவே இருந்த பூர்ணி அழுதிட, வைஷ்ணவிக்கு மனம் வலிக்க, அவள் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தாள்.

 

“வைஷு! என்னால முடியல டி. நான் அவன கஷ்டப்படுத்திட்டேன். எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல” என்று அழுதவளின் பேச்சில் குழம்பிய வைஷுவின் கரத்தில் தட்டுப்பட்டது பூர்ணியின் தாலி.

 

கண்களை அகல விரித்தவள் “பூ.. பூரி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா? உன் ஹபி எங்க டி?” என்று கேட்டவளுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

 

“எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு வைஷு. இன்னிக்கு என் கூட பார்த்தேல அவன் தான் ரோஹன். என் கழுத்துல தாலி கட்டினவன். அப்புறம் எதுக்கு இங்க வந்து தனியா இருக்கனு கேக்குறியா? அவனோட உறவே வேணாம்னு வந்துட்டேன் டி. யேன்னா அவன் என்ன சந்தேகப்பட்டான்.

 

மி..மித்து கூட அவங்க வீட்டாக்கள் எல்லாருமே சேர்த்து வெச்சி அசிங்கம் அசிங்கமா பேசினாங்க. அத தட்டிக் கேட்காம அவனும் இருந்தான் டி. வலிச்சுது! ரொம்ப வலிச்சுது. அவன நம்பித் தானேடி போனேன்? ஆனால் என் நம்பிக்கைய மொத்தமா உடைச்சு போட்டுட்டான்” என்றவள் கண்களில் நீர் ஓயாது வழிந்தது.

 

பூர்ணிக்கு வரன் தேடிக் கொண்டிருந்த நேரம் அது! தரகர் கொண்டு வந்திருந்த வரன்களில் அனைவர் மனதையும் கவர்ந்தது ரோஹன் தான். அழகிலும் சரி குணத்திலும் சரி சிறந்து விளங்கிய ரோஹன் ஒரு இன்ஜினீர்.

 

இரு வீட்டாரும் பேசி பிடித்துப் போனதில் அவ்விடத்திலே  நிச்சயதார்த்தமும் முடிந்தது. ரோஹன் ஏதோ ஒரு பில்டிங் ப்ளானிங்கில் பிசியாகி விட்டான். வேலை என்று வந்து விட்டால் அத்தனையும் மறந்து போய் விடும் ரகம் அவன்.

 

இதனால் பூர்ணியின் நினைவு அவனிடத்தில் சுத்தமாக இல்லை. பூர்ணிக்கோ அவனுடன் பேச ஆர்வமாக இருந்தாலும் அவனே முயற்சிக்காத போது தான் என்ன செய்ய முடியும் என்று அமைதி காத்தாள்.

 

திருமண நாளும் வந்தது. ரோஹன் தாலி கட்டும் முன் அவளை நிமிர்ந்து பார்க்க அவளோ நாணத்தில் தலையைக் குனித்துக் கொண்டிருந்தாள். அவன் எங்கோ பார்த்த சமயம் பூர்ணி அவனை ரசித்தாள்.

 

சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் நிறைவுற பூர்ணி ரோஹனுடன் வீட்டுக்கு சென்றாள்.

 

இரவு கையில் பால் சொம்பைக் கொடுத்து அவளை அனுப்ப, கதவைத் திறந்து அவனறைக்கு வந்தாள்.

 

அவளை இப்போது தான் முதன் முறையாகப் பார்த்தான். அவள் எழிலில் சொக்கிப் போனான் ரோஹன். பூர்ணிக்கோ வெட்கம் பிடுங்கித் தின்ன க்ளாஸை நீட்டினாள்.

 

அதை எடுத்து மேசையில் வைத்து விட்டு அவளின் வெட்கத்தை உணர்ந்தவனோ நாக்கு மடித்துச் சிரித்தான்.

 

தள்ளி உட்கார்ந்தவன் “வா! இங்க உட்காரு” என்க, அவளும் அருகில் அமர்ந்து கொண்டாள்.

 

ரோஹன் “உனக்கு என்னைப் புடிச்சிருக்கா?” என்று கேட்க, “ம்ம்” என தலையாட்டினாள்.

 

“நீ வாய திறந்து பேசவே மாட்டியா” என வாட்சைக் கழற்றி வைத்தான்.

 

“பேசுவேன் நிறைய பேசுவேனே. நீங்க பேசாம நான் என்னத்த பேசுறது?” என்று அவள் தலை சாய்த்துப் பார்க்க, அவளது தேன் குரல் அவனுக்குப் புது வித உணர்வைத் தோற்றுவித்தது.

 

கட்டடங்களை மட்டுமே ஆராய்ந்து பார்த்திருந்த அந்த இன்ஜினீர் இவ்வஞ்சியின் அழகில் விழுந்து தான் போனான்.

 

ரோஹன் கேள்விகள் கேட்க அவளும் சலிக்காது பதிலளித்துக் கொண்டிருந்தாள். பேச்சு படிப்பைப் பற்றி திசை திரும்பிட அவள் முகத்தில் ஏக்கம் பரவியதை உணர்ந்து கொண்டான் ரோஹன்.

 

“நீ காலேஜ் போனன்னு சொன்ன. அப்போ படிச்சு முடிக்கலயா? யேன் உனக்கு ஸ்டடிஸ்ல ஆர்வம் இல்லையா?” என்று கேட்டான்.

 

அவள் கண்கள் மின்னிட “ரொம்பவே இருக்கு. பட் டாடி தான் படிச்சது போதும்னு சொல்லிட்டார். இனி என் ஸ்டடிஸ் அவ்ளோ தான்” என்று பூர்ணி சொன்னாள்.

 

“யேன் அப்படி சொல்லுற? உன்னால முடியும் டி. நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். அத தட்டிக் கேட்க யாராலயும் முடியாது. ஓகேவா பூ?” மென்மையாக சொன்னான்.

 

அவன் சொன்னதில் மகிழ்ந்தவள், பூ எனும் அழைப்பில் உருகிப் போய் அவன் தோள் சாய்ந்தாள்.

 

தன்னவளின் இந்த சந்தோஷத்திற்காக என்ன வேணுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு.

 

ரோஹன் “தூக்கம் வருதுல்ல வா தூங்கலாம்” என்று அழைக்க, “அ…அது பஃர்ஸ் நைட்” என தயங்கினாள்.

 

“ம்ஹூம்! உனக்கு ஸ்டடி முடிஞ்சா அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்” என்று அவள் கன்னம் தட்டி விட்டு படுத்துக் கொள்ள, அவனைக் காதலாய்ப் பார்த்தாள் பெண்ணவள்.

 

இன்று,

 

பூர்ணி “இவ்ளோ பாசமா என் கிட்ட நடந்துக்கிட்டாரு. நானும் அவர ரொம்ப லவ் பண்ணேன் காலேஜ்கும் போனேன். அப்படி இருக்கும் போது தான் அந்த கொடூரமான நாளும் வந்துச்சு” என்ற பூர்ணியோ வெடித்து அழுதாள்.

 

அவளைச் சமாதானப்படுத்திய வைஷு வாயில் கை வைத்து “ஷ்ஷ் அழாத பூரி. எல்லாம் அப்பறமா பேசிக்கலாம். நீ தூங்கு” என்று அவளைத் தட்டிக் கொடுக்க, பூர்ணியும் தூங்கிப் போனாள்.

 

………………….

ஷாப்பிங் மாலிற்கு வந்திருந்தான் விஷ்வா. முன்பெல்லாம் மித்ரனுடன் அடிக்கடி வருவான்.

 

தோளில் கை போட்டுக் கொண்டு பீச், பார்க், ஷாப்பிங் மால், காபி ஷாப் என்று காதலர்கள் போல் வலம் வருவர் இருவரும்.

 

அதிலும் அதிகமாக ஷாப்பிங் மால்கு தான் செல்வதுண்டு. செல்லும் நேரமெல்லாம் ஒரே மாதிரியான ட்ரெஸ் சிலெக்ட் பண்ணுவதிலேயே நேரம் கழியும். அங்கு இருக்கும் சேல்ஸ்மேன் தான் இருவரின் லூட்டியில் நெஞ்சைப் பிடிப்பார்.

 

ஒட்டிப் பிறந்த இரட்டையர் போல் சேம் கலர் காஸ்டியூம் போட்டு, கண்களில் கூலர்ஸ் மாட்டி, முடியை ஸ்டைலாக கோதி விட்டு அனைவர் மனதையும் காந்தமாக ஈர்த்துக் கொள்ளும் ஹீரோவாக இருப்பர், நம் விஷ்வ மித்திரன் இருவரும்! 

 

அவற்றை நினைக்க நினைக்க விஷ்வாவின் மனதில் கவலை பொங்கியது. நட்பினில் தித்தித்த அந்த அழகிய நாட்களுக்காய் மனம் ஏங்கியது.

 

அவன் வந்து விட மாட்டானா? தன்னோடு தோள் சாய மாட்டானா? “விஷு” என பாசமாக அழைத்திட மாட்டானா? விஷ்வா பைக் ஓட்ட தன் தோள் மீது கை போட்டு பயணத்திட மாட்டானா என் மித்து? ஏக்கமும் துக்கமுமாய் அவனைத் தாக்கின வினாக்கள்.

 

மற்றோர் விழிகளில் தென்படக் கூடாது என்பதற்காக உதட்டில் ஒரு புன்னகையை படர விட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

பல நாட்களுக்குப் பின் அவனைக் கண்ட மேனேஜர் புன்னகைக்க, அதை சிறு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டு முன்னேறினான்.

 

ஜென்ஸ் செக்ஷனுக்குச் சென்று ஆராய்ந்தவனுக்கு பிடித்தது போல் எதுவுமே அமையவில்லை. சலித்துப் போய் திரும்பப் போனவனின் விழிகளில் சிறு மின்னல் பளிச்சென வந்தது..

 

சற்று தூரத்தில் ப்ளேக் அன்ட் வைட் டிசர்ட் அவனை வா வா என அழைத்தது. பார்த்தவுடனேயே பிடித்துப் போக, ஈரெட்டில் வேகமாக சென்று அதை எடுக்க கை வைத்தவன் திகைத்தான்.

 

ஏனெனில் அவன் கரம் தொட்டது டிசர்ட்டை அல்ல ஒரு வலிய கரத்தையே! அக்கரத்தில் பதிந்த கையைப் பார்த்து விட்டு யார் என்ற கேள்வியுடன் நிமிர்ந்து எதிரில் பார்வையை செலுத்திட, விஷ்வஜித்தின் வேல் விழிகளோ அகல விரிந்தன.

 

அவனைப் போலவே எதிர்பாராத சந்திப்பில் இன்ப அதிர்ச்சியுடன் நின்றிருந்தான் மித்ரனும்.

 

மித்ரன் வர மாட்டானா? என்று ஏங்கித் தவித்த விஷ்வாவிற்கோ அவன் வருகையில் மனம் தாறு மாறாக குத்தாட்டம் போட “மித்து! என் மாப்ள” என்று தான் அவன் இதயம் துடிக்கலானது.

 

அன்று கோபமாக சென்று விட்டவனை சரியாகப் பார்க்க முடியாது வருந்திய மித்துவோ இப்போது நன்றாக ஆராய்ந்தான்.

 

முன்பு போலவே தான் இருந்தான். ஆனால் முகத்தில் மகிழ்வு இல்லை என்பதை உணர ஒரு நொடி கூடத் தேவைப்படவில்லை அவனுக்கு. நெருஞ்சி முள்ளாக குற்றவுணர்ச்சி அவன் மனதை நெருடியது.

 

மித்ரனின் கையின் மேல் விஷுவின் கை. மற்றைய கையை இருவரும் பாக்கெட்டிற்குள் விட்டிருக்க விழிகள் நான்கும் ஒன்றோடு ஒன்று உறவாடி உரசிக் கொண்டிருந்தன.

 

கையை விலக்கிக் கொள்ள விஷ்வாவும் முயற்சிக்கவில்லை. விடுவிக்க மித்துவின் மனமும் இடம் கொடுக்கவில்லை.

 

ஒரு மழலையின் சிரிப்பொலியில் இத்தனை நேரமும் சூழப்பட்டிருந்த மாய வலை அறுபட விஷ்வா கையை எடுத்தான். பின் தோழனைப் பார்த்தான். பேச வேண்டும் என்று மனம் துடித்தது! பேச விடாது ஏதோ ஒன்று தடுத்தது.

 

“வி…விஷு” என மெதுவான குரலில் அவன் அழைக்க, அவனைப் பார்த்து முறைத்தான் விஷ்வா.

 

“எதுக்கு டா முறைக்கிற?” என்று கேட்க, “நீ எப்படி எனக்கு புடிச்ச டிசர்ட்ல கையை வைக்கலாம்?” வினாத் தொடுத்தான் அவன்.

 

மித்ரனோ “அது எனக்கு புடிச்சி இருந்துச்சு நான் எடுக்க போனேன்” என்றான்.

 

“அது எப்படி எனக்கு புடிச்சது உனக்கும் புடிக்கும்?” சிறு பிள்ளை போலத் தான் வினவினான் விஷ்வா.

 

“நம்ம நட்போட பவர் அது” கண் சிமிட்டிச் சொன்னான் மித்ரன். விஷ்வாவுக்கோ அவ்வார்த்தைகள் உள்ளுக்குள் இனித்தன.

 

எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “நட்பா? நமக்குள்ளயா? நீ எப்படி என் நண்பன் ஆவ” பொய்யாகக் கேட்க, அவன் இன்னும் கோபமாகத் தான் இருக்கிறான் என்று தவறாக நினைத்துக் கொண்ட மித்ரனுக்கோ அன்று கடற்கரையில் நடந்த ஞாபகங்கள் மனதில் வந்து குவிந்தன.

 

மீண்டும் தன்னைத் துரோகி என்று கூறி விடுவானோ என பயந்தவனுக்கு இனி ஒரு தடவை அவன் வாயில் இருந்து அச்சொல்லை கேட்க சக்தியற்றுப் போனது.

 

இங்கிருந்து சென்று விடலாம் என்று நகரப் போனவனின் கைகளைப் பிடித்திருந்தான் நண்பன்.

 

திரும்பிப் பார்த்தவனோ “என்ன விஷ்வா?” என்றவனின் குரலில் ஒரு வித வலி மறைந்திருந்தது.

 

“ட்ரெஸ் எடுக்க வந்துட்டு எங்க போற?” புருவம் தூக்கினான் விஷ்வா.

 

தலையைக் குனித்துக் கொண்ட மித்ரனோ “எனக்கு வேணாம். உனக்கு புடிச்சிருக்குல்ல நீயே வாங்கிக்க. என்னைப் போக விடு” என்று கூறினான்.

 

அவனின் திடீர் மாற்றத்திற்கான காரணம் அறியாமல் குழம்பி நின்றதென்னவோ ஓர் நொடி தான். மறு கணமே அவன் மனதில் இருப்பதை துல்லியமாக அறிந்து விட்டான் விஷ்வஜித்.

 

அவன் கைகளுக்கு அழுத்தம் கொடுத்து விட்டு “மித்து! நான் அன்னிக்கி உன்ன எந்தளவுக்கு காயப்படுத்தி இருக்கேன்னு புரியுது. ப்ராமிஸ்ஸா இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன். சா…” என ஆரம்பிக்கும் போதே, சட்டென அவன் வாயைத் தன் கையால் மூடினான் மித்ரன்.

 

“நான் தான் உன் கிட்ட சொல்லி இருக்கேன்ல யார் கிட்டவும் சாரி கேட்க கூடாதுன்னு. அது நானா இருந்தாலும் சரி. என் முன்னாடி நீ சாரி கேட்டு நிக்குறது எனக்கு பிடிக்காது விஷு” என்று சொன்ன மித்ரனுக்கு அவன் தன்னோடு சற்றே சகஜமாகப் பேசியது மகிழ்வைக் கொடுத்தது.

 

“இத வெச்சி உன் மேல இருக்கற கோவம் குறைஞ்சிடுச்சுன்னு நினைக்காத. அது நிறையவே இருக்கு” என்று சிறு பிள்ளை போல் முறைத்துக் கொண்டு சொன்ன விஷ்வாவைப் பார்த்து, அவனிதழில் சிரிப்பு மலர்ந்தது.

 

மித்ரன் “சரி சரி நீ கோவமாவே இருந்துக்கோ இந்த டிசர்ட் மட்டும் வாங்கிக்க” என்று கூற, “இல்ல நீ எடு டா. எனக்கு வேண்டாம்” என்று விஷு சொல்ல, “நோ! நீயே எடு விஷு” மித்ரன் மறுத்தான்.

 

விஷ்வா “இவன் இந்த ஜென்மத்துல எடுக்க மாட்டான். நானே எடுத்து கொடுத்துடலாம்” என்று நினைக்க, மித்துவோ “இப்படியே போனா இவன் சரிப்பட்டு வர மாட்டான். நான் பில் போட கொடுத்துட்டு மெதுவா இவன் பேக்ல போட்டு விடனும்” என்று மனதினுள் நினைத்தான்.

 

“ஓகே நான் எடுத்துக்குறேன்” இருவரும் ஒரே நேரத்தில் கூறி விட்டு முழித்துக் கொண்டு நின்றனர்.

 

இருவரின் அலும்பைத் தாங்க முடியாத சிப்பந்தி அங்கு வந்து “சார்! இதோட இன்னொரு டிசர்ட் இருக்கு தரட்டுமா?” என்று வினவினார்.

 

விஷ்வா “இத இப்பயா சொல்லுவீங்க..? கொண்டு வாங்க” என கடுப்படிக்க, அவரும் கொண்டு வந்து கொடுத்தார்.

 

அதை எடுத்த மித்து விஷ்வாவைப் பார்த்து கண்ணடித்து விட்டுச் செல்ல, பல நாட்களுக்குப் பிறகு நிறைவாகப் புன்னகைத்தான், மித்ரனின் மித்திரன்!

 

………………

ப்ளூ கலர் லாங் ப்ராக் அணிந்து, கூந்தலை போனி டெயிலாகக் கட்டி, லேசாக மேக்அப் இட்டு அழகியாய் வந்தாள் அக்ஷரா. கார்டனில் அமர்ந்து போஃனை நோண்டிக் கொண்டிருந்த விஷ்வா அவளைப் பார்த்தான்.

 

“அண்ணா நான் எப்படி இருக்கேன்” என்று அவள் கேட்க வருவதற்குள், வாந்தி எடுப்பது போல் செய்கை செய்தான் அவன்.

 

“என்னடா வாந்தி வருதா?” என்று கேட்க, “ஆமாடி மேக்அப் போட்ட காட்டுப் பன்னி ஒன்னு முன்னாடி வந்துச்சா தானாவே வாமிட் வருது” என்றவனைத் தீயாக முறைத்தாள் அக்ஷரா.

 

“யேன்டா என்ன பார்த்தா காட்டுப் பன்னி மாதிரி இருக்கா..? நீ தான் கொரில்லா மாதிரி இருக்கே” என அவன் முடியைக் கொத்தாகப் பிடித்து ஆட்டினாள்.

 

விஷ்வா “அடியே விடு டி ராட்சஸி. ஆவ்வ் வலிக்குது டி. என் முடி தான் உனக்கு மாவாட்ட கிடைச்சுதா?” என அலறினான்.

 

“என்னையே கலாய்ச்சல்ல? அனுபவி டா” என்றவள் அவனை இன்னும் சிறிது நேரம் அலற வைத்து விட்டே கைகளை எடுத்தாள்.

 

அவள் தலையில் கொட்டு வைத்து விட்டு “எங்கடி கிளம்பிட்ட?” என்று கேட்க, “இன்னிக்கு என் ப்ரெண்டு த்ரிஷாவோட பர்த்டே. அவங்க வீட்டுக்கு தான் போறேன். போகவே இஷ்டமில்ல, பட் எல்லாரும் போகும் போது நான் மட்டும் போகாம இருந்தா நல்லா இருக்காதுல்ல அதான் கிளம்புறேன்” என்றவள் தன் நண்பிகளோடு சென்றாள்.

 

த்ரிஷாவின் வீடோ கல்யாண மண்டபம் போல் அலங்கரிக்கப்பட்டு இருக்க, த்ரிஷா கேக் வெட்டிட அங்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நேரம் நகர்ந்தது.

 

மது கோப்பைகளுடன் இருந்த ஆடவர்களின் பார்வை தன் மீது விழுவதைக் உணர்ந்த அக்ஷுவிற்கோ ஏதோ போல் இருக்க தள்ளிச் சென்றாள்.

 

தன் கையைச் சுரண்டிய தோழியிடம் “வாட் ஹேப்பன் ஜீவி” என செய்கையில் கேட்க, “வாடி டான்ஸ் பண்ணலாம்” என்று ஜீவிதா அழைக்க, “ப்ச் எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்லித் தானே வந்தேன். நீ போ” என மறுத்துரைத்தவள் ஒரு ஓரமாக ஒதுங்கி இருந்தாள்.

 

த்ரிஷாவின் தந்தையின் தொழில் ரீதியான பார்ட்னர் என்பதால் தர்ஷனும் அங்கு வருகை தந்திருந்தான். அவன் விழிகளில் வானலோகத்து தேவதையாக மின்னிய அக்ஷரா தென்பட்டாள்.

 

போதையின்றியே போதையூட்டும் அவளின் அழகைக் கண்களால் பருகினான். மெதுவாக முன்னே சென்று அவளை உரசிக் கொண்டு நிற்க, அவளோ கடுப்புடன் நகர்ந்து நின்றாள்.

 

மீண்டும் மீண்டும் அவளை ஒட்டி ஒட்டியே வர அக்ஷுவிற்கோ கோபம் எல்லையைக் கடக்க, பல்லைக் கடித்தாள்.

 

“ஹாய் பேப்! ஷேல் வீ டான்ஸ்?” என குழையும் குரலில் கையை நீட்ட,

 

“நோ” என ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்து விட்டு செல்லப் போனவளின் இடையைப் பிடிக்க அவன் கரம் நீண்டது.

 

முன்னிருந்த கண்ணாடியின் மூலம் இதைக் கண்டு கொண்ட அக்ஷரா, சட்டென நகர்ந்து பின் ஏதோ தோன்ற கையிலிருந்த கைக்குட்டையைக் கீழே போட்டாள்.

 

அதைக் கண்ட தர்ஷன் குனிந்து அதை எடுக்க முற்பட, அவன் கையை ஹீல்ஸ் காலால் ஓங்கி மிதித்தாள்.

 

அவனோ ஆஆ என அலறிக் கொண்டு கையை எடுத்து விட்டு கைக்குட்டையை அவளிடம் கொடுக்க அவளும் அதை வாங்கிக் கொண்டாள்.

 

அவன் கையைப் பிடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து உதட்டுக்குள் சிரித்துக் கொண்டு “என்னாச்சு சார்ர்ர்?” படு நக்கலாகக் கேட்டாள்.

 

“ஒன்னுல்ல பேப்…” என்ற தர்ஷனின் விழிகள் அவள் மீது ஊர்ந்து போக, “கண்டதெல்லாம் பிடிக்க போனா இப்படி தான் நடக்கும். சோ பீ கேர்ஃபுல்” என இரட்டை அர்த்தத்தில் கூறி முறைத்து விட்டுச் சென்றாள்.

 

முதலில் புரியாமல் முழித்தவனுக்கு பின்பே அது புரிபட, ‘ஓஹ்ஹ் நீ வேணும்னே தானா கைய மிதிச்ச..? இருடி உன் திமிர நான் அடக்குறேன்’ உள்ளுக்குள் கர்ஜித்துக் கொண்டான்.

 

வெளியே சென்ற அக்ஷரா கைக்குட்டையை தூர வீசினாள். அவன் பார்வையை நினைக்க நினைக்க அருவெறுப்பு தோன்றியது. விஷ்வாவுக்கு அழைப்பு விடுத்து வரச் சொல்ல அவனும் வந்து சேர்ந்தான்.

 

“அக்ஷு வா” என்று கூப்பிட பதில் ஏதும் சொல்லாமல் பைக்கில் ஏறினாள். பைக்கை ஸ்டார்ட் செய்யப் போனவன் ஒரு நிமிடம் நின்று அவளாகப் பேசும் வரை காத்திருந்தான் விஷ்வா.

 

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாது போய் “அக்ஷு! என்னாச்சு டி..? யேன் டல்லா இருக்க?” எனக் கேட்டான்.

 

அக்ஷுவோ “ஒன்னுல்ல விஷு! லைட்டா தலை வலிக்குது. நீ பைக் எடு” என்று அவன் முதுகில் தலை வைத்துச் சாய்ந்தாள்.

 

சைட் கண்ணாடி வழியே அவளைக் கூர்ந்து பார்த்தவன் “இல்ல டி. உனக்கு வேற ஏதோ நடந்திருக்கு. அது என்னனு நான் கண்பிடிக்கிறேன். சீக்கிரமே உன்னை மித்து கூட சேர்த்து வெச்சி சந்தோஷமா வாழ வைப்பேன் ராட்சசி” மனதில் உறுதி பூண்டான் விஷ்வஜித்.

 

அக்ஷரா விஷ்வாவுடன் செல்வதைக் கண்ட தர்ஷனோ மீளாத அதிர்ச்சியில் நின்றான்.

 

“அடடா கதை அப்படி போகுதா? இந்தக் கிளி விஷ்வாவோட தங்கச்சியா? இது கூட நல்லாத் தான் இருக்கு. இவளையும் அனுபவிச்சுட்டு, அத வெச்சே விஷ்வா மித்ரன் ரெண்டு பேரோட லைப்லயும் விளையாடப் போறேன். விஷ்வா! உன் செல்ல தங்கச்சிய என் கிட்ட காப்பாற்றவே முடியாதுடா.. ஹா ஹா” என வன்மமாகக் கூறி அவ்விடமே அதிரும்படியாக நகைத்தான் தர்ஷன்.

 

நட்பு தொடரும்………!

 

✒️ ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!