💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 80
மயங்கி விழுந்த மேகலையை தண்ணீர் தெளித்துத் தெளிய வைத்தனர், சத்யாவும் ஜனனியும். அதிர்ச்சியின் தாக்கத்தில் அவ்விடமே மௌனத்தில் ஆழ்ந்தது. குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவு ஆழ்ந்த அமைதி.
“தன்யா உங்க சொந்தத் தங்கச்சி ரூபன்! உங்கப்பாவுக்கும் அவர் ஆஃபீஸ்ல வேலை செஞ்ச சுலோச்சனாவுக்கும் பிறந்த பொண்ணு”
தொப்பென்று அமர்ந்தான் ரூபன். அந்த விடயத்தை அவனால் ஏற்க முடியவில்லை. இது தெரிந்த போது, அவர்களுக்கும் அப்படித் தானே இருந்தது?
“ரூபன்” சத்யா அவனது தோளில் கை வைக்க, “அண்ணாஆஆ” அவனை அணைத்துக் கொண்டவனுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே புரியவில்லை.
மகேந்திரனின் ஆபீஸில் வேலை பார்க்கும் வறுமை மிகுந்த பெண் தான் சுலோச்சனா. அவளுக்கு உறவு என்று எவரும் இல்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தவள், இங்கு க்ளீனிங் வேலைக்கு வந்தாள்.
மகேந்திரனைக் கண்டால் விலகித் தான் இருப்பாள் அவள். சுலோச்சனாவின் வறுமை நிலை உணர்ந்த மகேந்திரனுக்கு அவளிடம் ஒரு அக்கறை இருந்து வந்தது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பார். சுலோச்சனாவும் அந்த நன்றிக்கடனுக்காக மரியாதையாக இருப்பாள்.
அப்படித் தான் ஒரு நாள். ஆபீஸ் முடிந்து கடைக்குச் சென்று வருகையில் இருட்டாகி விட்டது. தமது வீதியோரம் யாரோ விழுந்திருப்பதைக் கண்ட சுலோச்சனா குடித்து மட்டையாகி இருந்த முதலாளியைக் கண்டு திடுக்கிட்டாள்.
என்ன செய்வது என்று புரியவில்லை. அப்படியே விட்டுச் செல்லவும் மனமில்லை. அவரை கைத்தாங்கலாகப் பிடித்து வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.
தண்ணீர் கொடுக்க அருகில் வந்தவளை மகேந்திரனின் கரங்கள் அணைத்துப் பிடித்தன. அவரின் வலுவான பிடியிலிருந்து அவளால் நகர முடியாது போனது.
சுலோச்சனாவின் பெண்மையும் வலுவிழக்க ஆரம்பிக்க, மகேந்திரனுக்கும் சுயநினைவின்றிய நிலையில் உணர்வுகள் சுரக்க, இவரும் ஒன்றாய்க் கலந்தனர்.
காலையில் முதலில் கண்விழித்தது சுலோச்சனா தான். தன்னை சரிசெய்து கொண்டவள், மகேந்திரனையும் பழையபடி மாற்றி வைத்தாள்.
கண்விழித்தவருக்கு உலகம் புரியாத உணர்வு. நான் எப்படி இங்கே என்று கேட்க, மயங்கி விழுந்திருந்ததால் அழைத்து வந்து உறங்க வைத்தேன் என்று மட்டும் கூறி விட்டாள்.
தலையசைத்தவளோ “சீக்கிரம் போகனும். சத்யா எனக்காக காத்துட்டு இருப்பான். அவனுக்காக வாங்கின சாக்லேட் கூட அப்படியே இருக்கும்” சிரித்தவாறு வெளியேறியவரைப் பார்த்து மௌனமாய்க் கண்ணீர் வடித்தாள் சுலோச்சனா.
திருமணம் செய்யாத அவள் மனம், தன் பெண்மையை அடைந்தவரையே மணாளனாகக் கருதிக் கொண்டது. இருந்தும் அதை வெளிக்காட்டவில்லை. அவள் கர்ப்பம் தரித்த போது உறைந்து நின்றாள். ஊராரின் பேச்சுகள் சுலோச்சனாவை உயிருடன் கொன்று புதைத்தன.
மகேந்திரனின் செவியை எட்டிய தருவாயில், “உன் குழந்தைக்கு அப்பன் யார்? என் கிட்டயாச்சும் சொல்லு. கண்டிப்பா உன் கூட சேர்த்து வைக்க முயற்சி பண்ணுறேன். உன் பிள்ளையும் பின்னால கஷ்டப்படும் சுலோ” நட்புரிமையோடு கேட்டார்.
சுலோச்சனாவால் என்ன சொல்ல முடியும்? தவித்துப் போனாள். எதுவும் சொல்லாமல் இருந்தவளின் மௌனம் மகேந்திரனை வாட்டியது. இந்தப் பெண் ஊரார் முன் இப்படி அவமானப்படுகிறாளே என நினைத்தார். இது பற்றி மேகலையிடமும் சொல்லி வருந்தினார்.
இப்படியே நாட்கள் உருண்டோடின. சுலோச்சனா தன்யாவைப் பிரசவித்தாள். தாயாகவும் தந்தையாகவும் மாறி அவளை வளர்த்தாள். தன்யாவுக்கு பத்து வயதாக இருக்கும் போது நோய்வாய்ப்பட்டு இறந்தும் போக, தனு அநாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டாள்.
தன்யாவை மீது மகேந்திரனுக்கு ஒரு தனிப் பிரியமுண்டு. அவளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பார். அவள் வளர்ந்ததும் தன்யா பற்றி சத்யாவிடம் சொன்னவர், மேகலையிடமும் பேசி தம் பிள்ளைகளையாக தத்தெடுத்துக் கொண்டார்.
மாதங்கள் சில கடந்த நிலையில் ஆசிரம உரிமையாளர் மூலம் கேள்வியுற்ற தகவல் மகேந்திரனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுலோச்சனாவின் டைரி தன்யா மூலம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
தனது உயிர் இக்கணமே பிரிந்து விடாதா என்றிருந்தது அவருக்கு. மேகலைக்குப் பெரும் துரோகம் இழைத்து விட்டதாய் மனம் புழுங்கியது. எந்த ஒரு பெண்ணால் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும்? கணவனைப் பங்கு போடுவது என்பது எத்தனை கொடுமை?
இதை எப்படி தன் அன்பு மனைவியிடம் சொல்வது? மறைப்பதும் முடியாத காரியம். தனக்கு மேல் வளர்ந்து விட்ட மகன்களிடம் இதை எப்படிச் சொல்வது? தன் முகத்தில் தனக்கே காரித் துப்பிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
அதீத யோசனையின் தாக்கத்தில் கார் ஓட்டிக் கொண்டு வந்தவர் எதிரில் வந்த லாரியைக் கவனிக்கத் தவறினார். பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தன்னைப் பார்க்க ஓடோடி வந்த சத்யாவைக் கண்டு உள்ளம் புண்பட்டது அவருக்கு.
“அப்பாஆஆஆ” அவரது தலையை வருடியவாறு அழுத மகனைப் பார்த்து, “என்னை மன்னிச்சிரு டா கண்ணா! மன்னிப்பு கேட்கக் கூட எனக்கு தகுதியில்ல. இந்தப் பாவிய மன்னிச்சிடு சத்யா” அவனது கையைப் பிடித்து தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
“அப்பா! ஏன் இப்படி பேசுறீங்க?” அவனுக்கு எதுவும் புரியாத நிலை.
உண்மையைப் போட்டு உடைத்து விட்டார். சுக்கு நூறாக உடைந்து போனது அவனது உள்ளம்.
“என்னை ஹீரோனு சொல்லுவியே! உன் ரோல்மாடல் நான்னு சொல்லுவியே. இனிமே சொல்ல மாட்ட தானே? நான் கேவலமாகிட்டேன் சத்யா. என் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டேன். அதனால தான் என் உசுரை அவன் எடுத்துக்கப் போறான்” அழுது புலம்பியவரை எப்படித் தேற்றுவது என்று புரியவில்லை.
“தெரிஞ்சு பண்ணுனதில்லையேப்பா. நடந்து போச்சு. உங்களுக்கு எதுவும் ஆகாது. முதல்ல குணமாகி வாங்க. அப்பறம் பேசிக்கலாம்” அவரது கையைப் பிடித்துக் கொள்ள, உள்ளே வரப் போன தேவன் அனைத்தையும் கேட்டு விட்டான்.
வெளியில் சென்று அமர்ந்து கொண்டவனுக்கு கோபமும் அழுகையும் கலந்து வந்தன. மேகலை மீது உயிரை வைத்திருப்பவனுக்கு அவர் இதைக் கேட்டால் உடைந்து விடுவாரே என்பது மட்டுமே மனதினில் சுழன்றது.
“இல்ல சத்யா! எனக்குத் தெரியும். நேரம் நெருங்கிடுச்சு. நான் பண்ணுன தப்புக்கு தான் எனக்கு தண்டனை. என் மேகலை முகத்தைக் கூட பார்க்காம போய் சேரப் போறேன். அவளை நல்லா பார்த்துக்கப்பா. சமயம் பார்த்து இதை சொல்லிடு. இல்லன்னா என் ஆத்மா சாந்தியடையாது.
அப்பறம், உன் தம்பிங்களை பார்த்துக்க. அவங்க தப்பு பண்ணுனா தட்டிக் கேளு. தோள் கொடுத்து இரு. என் பொறுப்பை உன் கிட்ட ஒப்படைக்கிறேன் கண்ணா! என்னிக்கும் கொடுத்த வாக்குக்கு உண்மையா இருக்கனும். உன்னை நம்பி வர்ற பொண்ணுக்கு நேர்மையா இருப்பா. தனுவையும் பார்த்துக்க” அவ்வளவு தான், அவரின் இமைகள் மூடிக் கொண்டன.
கதறி அழுதான் சத்யா. அங்கு வந்த மேகலையைப் பார்த்த சத்யாவுக்கு இதைச் சொன்னால் அவர் மனம் தாங்குமா என்பதே கேள்வியாக இருந்தது.
அழுது அழுது மயங்கி விழுந்தார் மேகலை. அவரின் அழுகை அனைவரையும் உலுக்கியது.
“நான் அம்மா கிட்ட உண்மையை சொல்லிடப் போறேன். இதே கவலையோட அதையும் தாங்கிக்கட்டும். இல்லன்னா இன்னொரு நாள் புதுசா கவலைப்பட்டு என்னால பார்க்க முடியாது” என்று தேவன் சொல்லவே, அவனுக்குத் தெரிந்த விடயம் சத்யாவுக்குப் புரிந்தது.
“பைத்தியம் மாதிரி பேசாத தேவா! அம்மா ஏற்கனவே வீக்கா இருக்காங்க. அவங்க கிட்ட இதை சொல்லி எதுவும் ஆச்சுன்னா என்ன பண்ணுவ? அம்மாவையும் இழக்க சொல்லுறியா? நான் சொல்லும் வரை நீ வாய் திறக்கக் கூடாது. இது அம்மா மேல சத்தியம்” என்று அவனது வாயை அடைத்தான் சத்யா.
“நானும் அப்பா மேல சத்தியம் வாங்கிக்கிறேன். நேரம் வரும் போது நான் உன் கிட்ட எதையாச்சும் கேட்பேன். அதை மறுக்காம தருவேனு வாக்கு கொடு” சத்தியம் வாங்கிக் கொண்டான் தேவன்.
அந்த சத்தியத்தையே அவன், சத்யாவின் இரண்டாவது திருமணத்திற்காக பயன்படுத்தினான். இதை சத்யா சொல்லி முடிக்க, ரூபன் புதுத் தகவல் போல் கேட்டுக் கொண்டிருந்தான்.
“சொல்ல சமயம் பார்த்திருந்தேன். அதுக்குள்ள அம்மா வீக் ஆயிட்டாங்க. அடிக்கடி மயங்கி விழுந்தாங்க. இதுல எப்படி சொல்லுறது? அவங்களுக்கு ஏதாச்சும் ஆகிடுமோனு பயமா இருந்துச்சு.
ஆனால் தேவா புரிஞ்சுக்கவே இல்ல. அதை மறைச்சு அம்மாவுக்கு துரோகம் செய்யுற மாதிரி பேசினான். அவனுக்கு முன்னால அவங்க எனக்கு அம்மான்னு மறந்து போச்சு போல. எனக்கும் பாசம் எல்லாம் இருக்கு. யாரோ ஒருத்தி விட்டுட்டு போனா. நான் கல்யாணம் பண்ணிக்காம இருந்து அம்மாவை நோயாளியாக்குறேன்னு அதுக்கும் என் மேல பழி போட்டான்.
தன்யாவைப் பார்த்துக்க சொல்லி அப்பா சொன்னார். அது நமக்கும் கடமை தானே? அவ மேல அக்கறை காட்டுறேன்னு அதுக்கு கோவிச்சுக்கிட்டான். அவனை விட தன்யாவுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதா சொன்னான். இன்னிக்கு கூட அம்மாவை அழ வெச்சதா சொல்லுறான். ஷர்ட் காலரைப் பிடிக்கிறான். எனக்குனு எந்த நியாயமும் இல்லையா? எந்த பாசமும் இல்லையா? ஃபீலிங்ஸ் இல்லையா?” ஆதங்கத்துடன் கேட்ட சத்யாவுக்கு குரல் கமறியது.
“அண்ணா! சாரிண்ணா. எல்லாம் என்னால தானே? நான் உங்க வாழ்க்கையில் வந்ததால எல்லாமே போச்சு. என்னால எத்தனையோ விஷயங்களை இழந்துட்டீங்க.
என்ன தான் அம்மா கிட்ட சொல்லாம இருந்தாலும், அதை மறைக்கிறீங்க என்கிற குற்றவுணர்ச்சி உங்க மனசுல இருக்குனு எனக்கு தெரியும். எப்போதாவது தெரிய தானே வேணும்? அம்மாவை நேரில் பார்த்து சொல்லவும் தைரியம் இல்ல. அதனால தான் அவங்களுக்கு இப்போ கால் பண்ணி எல்லாம் சொல்லிட்டேன்.
எதுக்கும் தயாராகி தான் வந்தேன். உங்க எல்லாரையும் பார்த்து, அம்மா கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டு போயிடுறேன். இனி உங்க வாழ்க்கையில் வந்து தொந்தரவு தர மாட்டேன். தேவாண்ணா உங்க கிட்ட கோபப்படவும் மாட்டார். எல்லாரும் சந்தோஷமா இருங்க” இமை தாண்டி வழிந்த நீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள் தனு.
அவளது கையைப் பிடித்து, “உங்க அண்ணனை திரும்ப கஷ்டப்படுத்தனும்னு முடிவு பண்ணிட்ட போல. கொடுத்த வாக்கை காப்பாற்றலனா அவர் நிம்மதியாவே இருக்க மாட்டார். நீ போனா அவர் சந்தோஷம் பறி போயிடும் தனு” என்றாள் ஜனனி.
“அதான் ஜானு. நடந்ததை ஒரு பொண்ணா ஏத்துக்கிறது கஷ்டம் தான். இருந்தாலும் என் பையனுக்காக ஏத்துக்கிறேன். சத்யா சந்தோஷமும், என் புருஷனோட ஆத்ம திருப்தியும் இதில் இருக்குன்னா எனக்கு அதை விட எதுவும் பெரிசில்ல” என்று மேகலை கூற, “அம்மா” அவரை அணைத்துக் கொண்டாள் தன்யா.
விடுவிடுவென சென்று அறையினுள் புகுந்த தேவனை இயலாமையோடு பார்த்து வைத்தனர் யாவரும்.
“இத்தனை நாள் சொல்லாததுக்கு என்னை மன்னிச்சிடும்மா” என்று சத்யா வருந்த, “மன்னிப்பு கேட்குற போல நீ தப்பு பண்ணல சத்யா. எதுவும் தப்பாகிடுமோனு நெனச்சு, ஒவ்வொருத்தரையும் கஷ்டப்படுத்தாம இருக்கப் போராடி, நீ எவ்வளவு வேதனைப்பட்டிருப்பனு நெனக்கிறப்போ தான் என்னால தாங்க முடியல. அடுத்தவனைப் பற்றியே யோசிக்கிற உன் மனசுக்கு நீ நல்லா இருக்கனும் கண்ணா” அவனை அன்புடன் தழுவிக் கொண்டாள் பெற்றவள்.
சுகந்தமான காற்றை உட்செலுத்தி நுரையீரலைச் சுத்தப்படுத்திக் கொண்ட சத்யாவுக்கு, இத்தனை வருட மனச்சுமை நீங்கியதில் நிம்மதிப் பெருமூச்சொன்று கிளம்பியது.
தொடரும்…….!!
ஷம்லா பஸ்லி