81. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.8
(5)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 81

 

“அவனைப் பாருங்களேன்! ரொம்ப கோபப்படுறான்” என்று ரூபன் சொல்ல, “நீங்க வேற ஏன்மா அடிச்சுட்டீங்க? அவன் மனசு கஷ்டப்படும் தானே?” பாவமாகக் கேட்டான் சத்யா.

 

“அவன் பேசுற பேச்சுக்கு உன் மனசு கஷ்டப்படாதா? இதை யார் பண்ணி இருந்தாலும் நான் அடிச்சிருப்பேன். எனக்கு நீங்க எல்லாருமே ஒன்னு தான். நீங்களும் அப்படி தான் என் மேல ஒரேயளவு பாசம் வெச்சிருக்கீங்க. இதை யாரு பொய்யாக்கினாலும் எனக்கு கோபம் வரும்” அழுத்தமாகக் கூறினார் மேகலை.

 

“இப்போ நீங்களே போய் சமாதானப்படுத்துங்க அத்தை” என்று ஜனனி சொல்ல, “அதற்கு அவசியம் இல்லை ஜானு. சட்டு சட்டுனு கோபம் வருமே தவிர அவனால அவ்ளோ நேரம் தனியா ரூம்ல இருக்க முடியாது. வந்துடுவான்” சோஃபாவில் அமர்ந்து கொண்டார் மேகலை.

 

“இப்போ எல்லாம் ஓகே ஆகிடுச்சு தனு! நீ இனிமே எங்களை வேற மாதிரி யோசிக்கக் கூடாது. நீயும் எங்கள்ல ஒருத்தி தான். அதை மண்டையில் ஃபிக்ஸ் பண்ணிக்க” அழுத்தமாக மொழிந்தான் சத்யா.

 

அவனுக்கு தன்யா மீதுள்ள பிரியம் இன்று நேற்று உருவானது அல்ல. சிறு வயதில் தங்கை வேண்டும் என்று அடம்பிடித்து அழுவான். அப்படி இருக்கையில் தன்யா பிறந்த நேரம் மகேந்திரன் சத்யாவை அழைத்துச் சென்று காண்பித்தார்.

 

“ஆன்ட்டி! குட்டி பாப்பா அழகா இருக்கா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” சுலோச்சனாவிடம் சொன்னான் சத்யா.

 

“அப்படினா இவளை உன் தங்கச்சியா நெனச்சுக்க. கண்ணாவுக்கு தனு பாப்பா தான் தங்கச்சி” சத்யாவை உச்சி முகர்ந்து புன்னகைத்தாள் சுலோ.

 

அன்று அவள் பிஞ்சுக் கரம் பற்றியது முதல் தன்யாவைத் தன் தங்கையாகப் பார்க்க ஆரம்பித்தான். உண்மை தெரிந்த பிறகும் கூட அவன் வழமை போன்ற சகோதர பாசத்துடனே அவளுடன் நடந்து கொண்டான்.

 

அத்தகைய தூய உறவை இனியா கொச்சைப்படுத்தி சந்தேகப்பட்டது அவனுக்கு ஆறாத காயத்தைக் கொடுத்தது. தேவன் சண்டையிட்ட போதும் கூட அவளை விட்டு விலகாமல் அந்த நேசம் பிடித்து வைத்திருந்தது.

 

“அவனுக்கு அவ்ளோ சீன் இல்லனு சொன்னது நிஜம் தான். அதோ வர்றான்” ரூபன் கை காட்ட, அவனை முறைத்துக் கொண்டு வந்து அமர்ந்தான் தேவன்.

 

“சாப்பிடலாம் வாங்க” ஜனனி அவர்களை டைனிங் ஹாலிற்கு அழைத்துச் சென்றாள். சிறுவர்களை அழைக்க, அவர்களும் வந்து விட்டனர்.

 

“இனிமே சண்டை போடுறதா இருந்தா ஷர்ட் போடாம வரச் சொல்லி யுகி சொன்னான் ஜானு” அகி போட்டுக் கொடுக்க, “ஆமா! அப்போ தானே காலரைப் பிடிக்க முடியாது” ஏதோ சாதித்த பெருமையில் சொன்னான் யுகன்.

 

“டேய் சில்வண்டு! எதுல எதுல ஆராய்ச்சி பண்ணி இருக்க பாரு. நீ பெரிய ஆளுடா” அவனது காதைப் பிடித்துத் திருகினான் ரூபன்.

 

“ஆனா யுகி..” என ஜனனி ஏதோ சொல்ல வர, “இதைப் பார்த்து நான் ஒன்னுமே நினைக்கல ஜானு. அவங்க சண்டை போட்டாங்கனு நானும் சண்டை போட மாட்டேன். சித்தா டாடியை தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கலாம். அது டாடிக்கும் தெரியும் என்றதால அவர் சித்தா மேல கோபப்பட மாட்டார்” என்று யுகன் சொல்ல, தேவனுக்கு என்னவோ போல் இருந்தது.

 

சத்யா சொன்னானா என அவனிடம் கேட்காமல், சொல்லி இருப்பான் என்று அவனே முடிவு செய்து அண்ணன் என்றும் கருதாமல், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருப்பதையும் பாராமல் தான் நடந்து கொண்டதில் அவனது உள்ளம் குறுகுறுத்தது.

 

அவன் எழுந்து செல்ல எத்தனிக்க, “நீ எழும்ப கூடாது! அப்படியே உட்கார்ந்து சாப்பிடனும்” என்று விட்டார் மேகலை.

 

“எனக்கு சாப்பிடப் பிடிக்கலமா. அப்பறம் சாப்பிடுறேன்” என்று சொல்ல, “நீங்க போகக் கூடாது தேவா. சாப்பிடுங்க” அன்புக் கட்டளை விடுத்தாள் ஜனனி.

 

தாயிடம் மறுத்தவனால் ஜனனியிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தலையசைப்புடன் சாப்பிடத் துவங்கினான்.

 

“ஜானு ஊட்டுங்க” யுகி வாயைத் திறக்க, “இந்தா டா செல்லம்” அவனுக்கு ஊட்டி விட்டாள்.

 

அகிக்கும் ஊட்டியவளின் பார்வை சத்யாவைத் தொட்டது. அவன் பார்வையும் ஊட்டி விடுவாளா என எதிர்பார்க்க, நீட்டி விட்டாள்.

 

அவனது எதிர்பார்ப்பு நிறைந்த விழிகளைக் கண்டவளுக்கு, வேறு எதுவும் சிந்தையில் எட்டவில்லை. ஏற்கனவே கலங்கிப் போயுள்ளான். அவனை ஏமாற்ற அவளுக்கு விருப்பமில்லை. எனவே அவ் ஏக்கத்தை நிறைவேற்றக் கருதி ஊட்டினாள்.

 

வாய் திறந்து வாங்கிக் கொண்டான் சத்யா. அவனுக்கு மகேந்திரனின் நினைவு. அவரும் இப்படித் தான் அவனுக்கு ஊட்டுவார். இவனும் தந்தையைப் பார்த்தவாறு சாப்பிடுவான். அதே உணர்வை மேகலையும் அவன் முகத்தில் கண்டு கொண்டார்.

 

இனியாவை ஒரு கணம் அவர் மனம் நினைவு கூர்ந்தது. அவளுடன் அவன் வாழ்ந்தான் தான். ஆனால் இத்தனை அன்னியோன்னியத்தை அவர் உணர்ந்ததில்லை. அவள் எப்பொழுதும் அகியை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பாள். சத்யா யுகியைப் பார்த்துக் கொள்வான்.

 

ஆனால் இப்போது அப்படி அல்லவே. அகியும் யுகியும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். சத்யாவும் ஜனனியும் இருவரையும் ஒன்றாகக் கவனிக்கிறார்கள். அவர்களும் அன்பால் பிணைந்த தம்பதியர் போல் நடந்து கொள்கிறார்கள்.

 

தேவனுக்கும் இனியாவின் நினைவு வந்தது. இன்று ஜனனியின் இடத்தில் அவள் இருந்திருந்தால், சத்யாவுக்காக சண்டை போட்டு இருப்பாள். தேவனைத் திட்டித் தீர்த்திருப்பாள். அவனிடம் மன்னிப்புக் கேட்க வைத்திருப்பாள். அவ்வாறல்லாமல், அண்ணன் தம்பியின் பிரச்சினைக்கு இடையில் வராமல் பொறுமை காத்த ஜனனியின் குணம் அவனை நெகிழச் செய்தது.

 

சாப்பிட்டு முடித்த பின்னர் அவளிடம் செல்ல, “ஏதாச்சும் சொல்லனுமா தேவா?” என அவன் முகம் பார்த்தாள்.

 

“சாரி அண்ணி” படபடப்புடன் சொல்ல, “சொல்லிட்டல்ல. இப்போ எல்லாம் சரியாகிடுச்சா?” அவளின் கேள்விக்குப் பதிலின்றி தலை குனிந்து நின்றான் தேவன்.

 

“என் கிட்ட ஏன் சாரி கேட்குற? உன் கோபத்தால் பாதிக்கப்பட்டது நான் இல்லை. உங்க அண்ணா, அம்மா, தன்யா.. அப்பறம் மிக முக்கியமா பாதிக்கப்பட்டது யார் தெரியுமா? நீ தான் தேவா.

 

ஒரு மனிஷனுக்கு கோபம் தான் முதல் எதிரி. கவலையில் இருந்தா கூட பரவாயில்லை, ஆனால் கோபத்தில் இருக்கும் போது தான் என்ன பண்ணுறோம்னு தெரியாத அளவுக்கு நாம மாறிடுறோம். நான் உங்களைக் குறை சொல்லல. நடந்தது விபத்து மாதிரி.

 

யாரும் யாரையும் டார்கெட் வெச்சு, வன்மம் வெச்சு தாக்கல. குடும்பம்னா இப்படிப்பட்ட சில விஷயங்கள் நடக்கும். மனஸ்தாபங்கள் வரும். அதைப் பெருசாக்காம அந்த நேரத்தோட எல்லாத்தையும் உதறிடனும். நல்ல விஷயங்களை எடுத்துக்கிட்டு, கெட்ட விஷயங்களை தவிர்ந்துட்டு, தவறுகளை சரி பண்ணிட்டு, அனுபவங்களை பெற்று பாடங்கள் படிச்சுட்டு விலகி வந்துடனும் அவ்ளோ தான்” அவள் சொல்வதைச் செவி தாழ்த்திக் கேட்டான்.

 

“இவ்ளோ பெருசா பேச அவசியம் இல்ல தான். இருந்தாலும் ஏன் சொல்லுறேன் தெரியுமா? இனிமே இந்த தப்பு நடக்கக் கூடாது என்பதற்காக. இதே கோபத்தை வேற யார் கிட்டேயாவது தவறான புரிதலோட காட்டி இருந்தா அவங்க உங்க மேல கோபப்பட்டு அடிச்சு உதைச்சு பெரிய கலவரமே நடந்து இருக்கும்.

 

உங்க அண்ணன் என்பதால தாங்கிக்கிட்டு திருப்பி ஒரு அடி அடிக்காம பேசாம இருந்தார். அவருக்கு திருப்பி அடிக்கவோ, தள்ளி விடவோ ஒரு நிமிஷம் ஆகி இருக்காது. இருந்தாலும் உங்க மேலுள்ள அன்பால பொறுமையா இருந்தார். அத்தை கிட்ட கூட உங்களை அடிச்சதுக்காக வருத்தப்பட்டார்.

 

நான் இன்னிக்கு நேற்று வந்தவ தேவா! அவரைப் பற்றி நான் புரிஞ்சுக்கிட்டது என்ன தெரியுமா? சத்யா அன்புக்காக ஏங்குறவர், அது ஒருத்தர் கிட்ட கொஞ்சம் கெடச்சாலும் போதும். அவங்களுக்கு அதைப் பலமடங்கு திருப்பி கொடுப்பார். அவர் குணம் இத்தனை வருஷம் பக்கத்துல இருந்த உங்களுக்கு புரியலையா?

 

அப்பறம், தன்யாவுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதை சொல்லி கோபப்பட்டீங்களே. அதை இப்படி யோசிங்க. யாருன்னே தெரியாம ஒரு வேலைக்கார பொண்ணோட மகளா இருக்கும் போதே தன்யா கூட தங்கச்சி என்கிற உணர்வோட பழகினார். அவளை உங்க கிட்ட கூட விட்டுக் கொடுக்கல. அவ மேலயே அவ்ளோ பாசம் காட்டும் போது அவர் கூடப் பிறந்தவர் நீங்க. அவரோட சொந்தத் தம்பி. உங்க மேல எவ்ளோ அன்பு வெச்சி இருப்பார். உங்களை யாருக்காகவும் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்” மிக மிக நிதானமாக ஒவ்வொரு வார்த்தைகளையும் வெளிப்படுத்தினாள் ஜனனி.

 

அவை தேவனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவள் கூறுவது நிதர்சனம் அல்லவா?

 

“இன்னொரு முக்கியமான விஷயம். தன்யா மேல கோப்படுறது நியாயமே இல்ல. அந்த பச்சைக் குழந்தை எவ்வளவு பாடுபட்டிருக்கா? அப்பா இல்லாம வாழ்ந்தா, அம்மாவை இழந்தா, அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தா, இப்போவும் ஏதோ குற்றவாளி மாதிரி உங்கம்மா கிட்ட மன்னிப்பு கேட்டா. அவ எதுவும் குற்றம் பண்ணுனாளா, உங்க அப்பாவுக்கும் சுலோச்சனா என்கிற பெண்ணுக்கும் மகளாக பிறந்ததைத் தவிர?” அவள் கேட்ட கேள்வியும் நியாயம் தானே?

 

தன்யாவின் மீது என்ன தவறுள்ளது? அவளை குற்றவாளியாகப் பார்த்தால், பார்ப்பவர் மீது தான் அத்தனை தவறும்.

 

இன்றைய சமுதாயத்திலும் அப்படித் தான். விபச்சாரி, குடிகாரர், திருடர் என்று குற்றம் செய்தவர்களைத் தவறு சொல்வதை ஏற்கலாம். ஆனால் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளும் சமுதாயத்தில் சீரழிக்கப்பட்டு, ஒதுக்கப்படுகிறார்களே. அவர்களுக்கு பிள்ளைகளாகப் பிறந்ததைத் தவிர அந்த அப்பாவிகள் செய்த குற்றம் தான் என்ன என்பதை எவரும் சிந்திப்பதில்லை. சிந்திக்கவும், அவர்களது முகத்தில் குத்தப்பட்ட இவரின் பிள்ளை எனும் அடையாளம் இடம் கொடுப்பதில்லை.

 

ஜனனி சொல்வதைக் கேட்கக் கேட்க, தேவனுக்கு மாபெரும் தவறிழைத்து விட்டதாக உணர்வு.

 

“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்ல அண்ணி?” கவலையோடு கேட்டவனின் குரல் அவள் மனதைப் பிசைந்தது.

 

“நீங்க தப்புன்னு சுட்டிக் காட்ட சொல்லல தேவா. இது தான் தவறுனு சொன்னேன் திருத்திக்கலாம் இல்லையா? அகி, யுகியைப் போல உங்களையும் நெனச்சு தான் சொன்னேன். எதுவும் தப்பா சொன்னா சாரி” அங்கிருந்து நகர்ந்தாள் ஜனனி.

 

சிலை போல் சமைந்து நின்றவன் வாசலுக்குச் செல்ல, மேகலை மட்டும் அமர்ந்திருந்தார். தேவனின் வருகைக்காகக் காத்திருக்கிறார் என்பதை அவரது பார்வை சொல்லியது.

 

“அம்மா” அவரது காலடியில் அமர்ந்து கொண்டான் தேவன்.

 

“தேவா” அடித்த கன்னத்தில் ஆதுரமாக வருடிக் கொடுத்தார்.

 

“என்னை இன்னும் நாலு அடி அடிச்சிருக்கலாமே. அவ்வளவு மூர்க்கமா நடந்துக்கிட்டேன்ல?” அவரது கைகளைத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான் மைந்தன்.

 

“அப்படிலாம் பேசாத டா. இனிமே நீ இப்படி நடந்துக்க மாட்டன்னு உன் முகம் சொல்லுது. எனக்கு அதுவே போதும்” என்று கூற,

 

“உங்களை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் எல்லாமே பண்ணுனேன். ஆனால் இன்னிக்கு உங்க கஷ்டத்துக்கு நானே காரணமாகிட்டேன். ரொம்ப வலிக்குதும்மா. நீங்க நம்பினாலும் சரி இல்லைனாலும் சரி, இனிமே கோபத்தை விட்டுடுவேன்மா. பொறுமையா இருக்க ட்ரை பண்ணுவேன். என்னைச் சுற்றியுள்ள யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன். இன்னிக்கு நல்ல ஒரு லெசனை கத்துக்கிட்டேன்” அவரது மடியில் தலை வைத்துக் கொண்டான்.

 

“இது என் பையன்” அவனது தலையை வருடிக் கொடுத்தவருக்கு மனதில் தெளிவு பிறந்தது.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!