💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 82
அறையினுள் வந்த ஜனனியோ, பல்கோணியில் நின்றிருந்த சத்யாவை நோக்கி நடை போட்டாள்.
அவனை எப்படி அழைப்பது என்று யோசித்தவளுக்கு, அவனின் மனம் புயலில் சிக்குண்ட கப்பலாகத் தவித்துக் கொண்டிருப்பது புரியத் தான் செய்தது.
என்ன செய்வது? வேறு வழியில்லை அழைத்துத் தான் ஆக வேண்டும் என எண்ணியவள், “என்னங்க” என்று மென்மையான அழைப்புடன் அவன் தோளில் கை வைக்க, சடாரென்று திரும்பி சற்றும் எதிர்பாராமல் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் கணவன்.
அந்த அணைப்பை எதிர்பாராதவள் திகைத்து நிற்க, அவனது அணைப்பு மேலும் இறுகியது. அவனை விட்டு விலக முடியாமல் இருந்தவளுக்கு, அவனின் அணைப்பு தாய் மடி தேடும் சேயின் செய்கை போல் தான் தெரிந்தது.
சற்று முன்பு கீழே இறங்கி வந்தான் சத்யா. மேகலையின் மடியில் சாய்ந்து கொள்ளலாம் என்று தான் எதிர்பார்த்தான். ஆனால் அவர் மடியில் தேவன் சாய்ந்திருப்பதைக் கண்டு திரும்பி வந்து விட்டான்.
இப்போது ஜனனியைக் கண்டதும், அவள் குரலும், அன்பான அழைப்பும், தொடுதலும் அவனை சுயநினைவு இழக்க செய்ய அவளை அணைத்து விட்டான். அன்பினை தேடும் சிறுவனாகவே அவனும் ஜனனியின் கண்களுக்குத் தெரிந்தான்.
“ஓகே ஓகே! எதுவும் ஃபீல் பண்ணாதீங்க. எல்லாம் ஓகே ஆயிருச்சு. இப்போ உங்க மனசுல எந்த கவலையும் இல்ல. இனி அம்மா கிட்ட மறைச்சிட்டு இருக்கோமேன்னு நினைக்கத் தேவையில்லை. தன்யாவைப் பத்தின கவலையும் வேண்டாம். எதுவும் இல்லாம ஃப்ரீயா இருக்கலாம். இதுக்கு நீங்க சந்தோஷம் தான் படனும். ஏன் அழுறீங்க?” என்று கேட்டவாறு அவனது முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தாள்.
அவனுக்கோ எதுவும் புரியவில்லை. அவனின் மொத்தத் தவிப்பையும், ஏக்கங்களையும், உணர்வுகளையும் அவளிடம் கொட்டி விடும் வேகம் அவனுக்கு. இன்று அவன் மனம் மிகவும் காயப்பட்டுத் தான் போனது.
அனைத்தையும் விட, தேவனின் கோபமும், அவன் ஷர்டைப் பிடித்து உலுக்கியதும் அவனை வெகுவாய்க் காயப்படுத்தின. தம்பியிடம் இருந்து வந்த வார்த்தைகள் அவனைக் கொன்று புதைத்தன. இதற்கென ஆறுதல் தேடியவன், அவளுள் மேலும் மேலும் புதைந்தான்.
அவளுக்கு அவ்வணைப்பு எந்தவொரு தாக்கத்தையும் தரவில்லை. மாற்றமாக, அவனைச் சமாதானப்படுத்துவது ஒன்றே அவளின் ஒற்றைக் குறிக்கோளாக இருந்தது.
“என்னால முடியல ஜானு! அவ்ளோ கஷ்டமா இருக்கு. தேவா என்னை புரிஞ்சிக்கவே இல்ல. இருந்தாலும் அவன் நிலைமை அப்படி. அவன் அம்மாவுக்காக தானே என் மேல கோபப்பட்டான்” என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டவனுக்கு அப்பொழுது தான் அவளை அணைத்திருப்பது புரிந்தது.
வெடுக்கென்று விலகி நின்றான். அவள் முகம் பார்த்தவனுக்கு ஏதோ போல் இருந்தது. என்ன நினைத்திருப்பாளோ என்ற எண்ணம் உள்ளத்தில் புற்றீசலாய்க் கிளம்பிற்று.
“சாரி ஜானு” என்று சொல்லவே, அவள் இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“எதுக்கு சாரி கேட்கிறீங்க? அப்படினா வேணும்னேவா கட்டிப்பிடிச்சீங்க?” என்று கேட்க, “அய்யோ இல்ல இல்ல” என்று பதறிப் போனான்.
“அப்புறம் எதுக்கு சாரி ஜாக்கெட்னு?தெரியாம தானே கட்டிப்பிடிச்சீங்க. இப்படி நீங்க கேட்கவும், சினிமால எல்லாம் அந்த பல்லி, கரப்பான் பூச்சி இதையெல்லாம் காரணம் காட்டி ஹீரோ ஹீரோயினை அடிக்கடி கட்டிப்பிடிப்பானே, அந்த மாதிரி நீங்களும் இதை சாக்கா வெச்சு கட்டி பிடிச்சிட்டீங்களோன்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்துருச்சு. வேற ஒன்னும் இல்ல” இரு புறமும் தலையாட்டி சிறுபிள்ளை போல் சொன்ன அவளின் குரல் அவனைக் கவர்ந்தது.
“அய்யோ நீ வேற ஜானு” என்றவனுக்கு கலங்கிய கண்களையும் மீறி, இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது.
“ஹான் இது இல்லையா நான் பார்த்த சத்யாவுக்கு அழகு? நான் இந்த சிரிப்பைக் கூட பார்த்ததில்லை. என்னை செருப்புக்கு கூட மதிக்காம தானே கல்யாணம் பண்ணுனீங்க. அவ்வளவு கோபம் அந்த டெரர் பாஸ் முகத்துல. அது தான் ஹிட்லர்னு பெயரும் வெச்சேன். இப்போ பாருங்களேன்! அப்பறம் சிரிச்சிட்டு இருந்தீங்க. இன்னைக்கு அழுதுட்டீங்க. உங்களுடைய எல்லா உணர்ச்சிகளையும் நாம் பார்த்துட்டேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா இருக்கு” அவள் பேசும் விதம் அவனை ரசிக்கத் தூண்டியது.
தலையை ஆட்டி அவனும் கேட்க, அவனது மனதைத் திசை திருப்புவது, அவளுக்கு ஒருவித சுகத்தைக வழங்கியது. அவன் தன்னால் கவலை மறக்கிறான் எனும் உணர்வு அவளுக்கு ஒருவித திருப்தியை அளித்தது என்பதே உண்மை.
இயன்ற அளவு மற்றவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பவள் தான் ஜனனி. அந்தக் குணத்தில் சத்யாவும் தன்னை ஒத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு, அவனுக்கு ஆறுதல் கொடுப்பது இன்னும் மகிழ்வைத் தந்தது.
“சத்தியமா சொல்றேன் ஜானு. நீ மட்டும் இல்லைனா இத நினைச்சு மனசுக்குள்ள புழுங்கித் தவிச்சிட்டு இருந்திருப்பேன். உன் கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. என் கவலைகளை எல்லாம் சட்டுன மாயமாக்கி வைக்கிற” என்று சொல்ல,
இதழ் பிரித்துச் சிரித்தவள், “சிட்டுவேஷனுக்கு ஏத்த மாதிரி ஒரு ஷாங் பாடட்டுமா?” என்று கேட்க, “எங்கே பாடு பார்ப்போம்” என்றான்.
“🎶 இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா 🎶 “
இனிமை ததும்பப் பாடினாள் பாவை.
தன்னை மறந்து சிரித்து விட்டவனோ அதன் மறு பகுதியை அவளைப் பார்த்தவாறே பாட ஆரம்பித்தான்.
“உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ளவரை நானுன் அடிமையடி” அந்த வரிகள் அவனுக்காகவே எழுதப்பட்டவை போல் இருந்தன சத்யாவுக்கு.
உண்மையில் இன்று அவனுக்கு அவள் தானே தாயானாள்? அன்பையும், ஆறுதலையும் தக்க சமயத்தில் வழங்கிய அவளுக்கு உயிர் உள்ள வரை அடிமை சாசனம் எழுதித் தந்து விடலாம் என்று தான் அவன் உள்ளம் ஏங்கியது.
“உட்கார் ஜானு” என்று அவன் சொல்ல, “எதுக்கு? பாட்டுல வந்த மாதிரி மடியில வந்து சாஞ்சுடாதீங்க” அவள் பயப்பட, “ஏய் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்” என்றான்.
“அப்போ கட்டிப்பிடிச்சீங்க?” என அவள் புருவம் உயர்த்த, “அது ஏதோ தெரியாம எமோஷனலாகி..” என்று அவன் தடுமாற,
“ஓகே ஓகே! நான் எதுவும் சொல்லல. உங்க பிள்ளைங்க பார்க்காதது வசதியாப் போச்சு. இல்லனா ஊட்டி விட்டேனு சொன்ன மாதிரி, நீங்க என்னை கட்டிப்பிடிச்சதை ஊர் முழுக்க தண்டோரா போட்டு சொல்லிடுவாங்க” புன்னகை மாறா வதனத்துடன் மொழிந்தாள்.
“அப்படின்னா நான் அவங்க முன்னால வேணும்னே கட்டிப்பிடிக்கிறேனே. நம்ம விஷயம் பரவட்டும்” என்று அவன் சிரிக்க, “ஆசை தான்” அவன் தோளில் செல்லமாக அடிக்க, இருவர் இதழ்களிலும் இதமான இளநகை.
………………
தங்கையின் திருமணத்திற்காக நகைகள் வாங்க வந்திருந்தான் எழிலழகன். அன்னம்மாளும் மலரும் வேறு கடைக்குச் செல்ல, நந்திதாவுக்காக நகைகளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“எனக்கு எதுக்குங்க? வேண்டாம் அப்புறமா எடுத்துக்கலாம்” என அவள் சொல்ல,
“நான் உனக்கு எதுவுமே எடுத்துக் கொடுத்ததில்லை நந்து. இதையாவது எடுக்க விடு. கல்யாணம் தான் அவசரமாக கட்டிக்கிட்டோம். நகை சேர்த்து எதுவுமே பண்ண டைம் கிடைக்கல. உனக்கு விதவிதமா நகை போட்டு பாக்கணும்னு எனக்கு ஆசை தெரியுமா?” என்று அவன் கூற,
“நகை போட்டா தானாங்க உங்க அன்பை நான் புரிஞ்சுப்பேன்?அதெல்லாம் வேணாம்”
“இந்த நைன்டீஸ் கிழவி மாதிரி பேசாதத நந்து. என் பொண்டாட்டிக்கு நான் வாங்கித் தருவேன். நீ போட்டு தான் ஆகனும். அப்புறம், உன்னை நான் மகாராணி மாதிரி பார்த்துக்கணும் இல்லையா? அதை உங்க அப்பாம்மாவும் பார்க்கனும்” என்றான் அவன்.
“அவங்களுக்கு காட்டனும்னு இதெல்லாம் போடனுமா?” அவள் மீண்டும் கேள்வி கேட்டாள்.
“அவங்களுக்கு காட்டனும்னு இல்ல நந்து. ஆனால் நீ இப்படி இருந்தா அவங்களும் சந்தோஷப்படுவாங்க. உன் கல்யாணத்துக்கு அவங்க ஏதும் தரலல்ல. உன்னை வெறும் கையும், கழுத்துமா பார்த்தா இன்னுமே வருத்தப்படுவாங்க தானே? நீ அழகா இதெல்லாம் போட்டுட்டு இருந்தா நம்ம பொண்ணு நல்லா இருக்கா, வசதியா இருக்கான்னு அவங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அதை கொடுக்கலாம் இல்லையா?” என்று அவன் சொல்ல,
“அதுவும் சரி தாங்க. அப்போ எடுத்துக் கொடுங்க” என்று விட்டாள் நந்திதா.
“இது நல்லா இருக்கே. என் ஆசைக்காக எடுக்கச் சொன்னா முடியாது. அப்பாம்மாக்கு திருப்தி கொடுக்கனும்னா எடுக்க சொல்லுற. உனக்கு என்னை விட அவங்க தான் முக்கியமா போய்ட்டாங்களா?” செல்லமாக கோபித்துக் கொண்டான் எழில்.
“இன்னைக்கு என்னாச்சு உங்களுக்கு? என் கூட சண்டை போடறதுலயே குறியா இருக்கீங்க. எனக்கு அவங்களும் முக்கியம். நீங்களும் முக்கியம். என் எழில் தான் ரொம்ப முக்கியம். அவனைப் பிடிக்காமல் இருக்குமா எனக்கு?” என்று கேட்கும் போதே அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“நீ என்ன நந்து புதுசா வெட்கப்படுற?” சிரிப்புடன் கேட்டான் அவன்.
“உங்களை செல்லம் கொஞ்சுற மாதிரி பேசும் போது எனக்கு வெட்கமா வருது ” என்றவளின் வெட்கம் சூழ் செவ்வதனம் அவனைக் காந்தமாக ஈர்த்தது.
அவளுக்கு மோதிரம், தோடு, மாலை என அனைத்தும் பார்த்துப் பார்த்து எடுத்தான்.
“இது போல மலருக்கும் எடுங்க” என்று சொல்ல, “ஏன் எங்கம்மா எதுவும் கேட்பாங்களேன்னு பயப்படுறியா?” என வினவினான்.
“அப்படி இல்லங்க! இருந்தாலும்..” என்று யோசித்தவளின் தடுமாற்றமே அவள் கூறியது உண்மை என்பதை உறுதிப்படுத்தியது.
“அம்மா நினைக்கிறாங்கன்னு எல்லாம் வாங்க முடியாது. என் பொண்டாட்டிக்கு நான் வாங்குறேன். என் தங்கச்சிக்கு அவள் புருஷன் வாங்கிக் கொடுப்பான். அவளுக்காக நான் வேற நிறைய வாங்கி கொடுத்துட்டேன். உனக்கு கொடுத்ததையும் அதே மாதிரி அவளுக்கு கொடுக்கணும்னு இல்லல்ல” என்று விட்டான்.
இரண்டு பக்கமும் தலையாட்டிக் கொண்டவளுக்கு அவனது அன்பும், அக்கறையும், தன் மீதான உரிமை உணர்வும் மிகுந்த இன்பத்தைக் கொடுத்தன. ஒரு பெண் ஆசைப்படுவதெல்லாம் இதைத் தானே? அவளுக்கு பணம், அணிகலன்களை விடுத்து சின்னச் சின்ன அக்கறைகளும், அன்பான பேச்சுகளும், குறும்புகளும் அல்லவா ஆனந்தத்தைக் கொடுக்கும்?
“கடையில் ஆட்கள் பார்க்கிறாங்க. அதுவும் அங்கே நிற்கிறது உன் அப்பாவோட இடது கை. அப்புறம் நாம நகைக் கடையில் வந்து ரொமான்ஸ் பண்ணனும்னு அப்பாவுக்கு செய்தி போயிடப் போகுது” அவளது காதினுள் கிசுகிசுத்தான் எழில்.
“போனா என்ன? உங்க கூட தானே ரொமான்ஸ் பண்ணுறேன்” என்று அவள் சொல்ல, “அடடா! ஏன் நந்து இப்படி மாறிட்ட?” எனச் சிரித்தவனுக்கு அவளது மாற்றம் மழைத் துளியாக மனதை நனைத்தது.
“சும்மா சொன்னேங்க. அதுக்கிக அப்பா மேல பயம் போயிடுச்சானு கேட்காதீங்க. பயம் எல்லாம் அப்படியே இருக்கு. இப்படியும் பேசுறேன்”
“இது எப்படியோ நந்து. அந்த செய்தியும் போகட்டும். நான் உனக்கு ஒரு கன்னத்தில் உன்னை கிஸ் தர்றேன். அதையும் போய் அவர் சொல்லட்டும். உன் அப்பா சந்தோஷப்படுவார்ல?”
“அப்பா சந்தோஷப்படுவார் என்று இதை எல்லாம் பண்ண முடியாது. பேசாம இருங்க. உங்கக்கு வர வர வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு” என்று முறைத்தாள் அவள்.
“வேற யாருக்கும கொடுக்கலையே. என் பொண்டாட்டிக்கு தானே கொடுக்கிறேன” என்று அவளது வாசகத்தையே அவன் திருப்பிக் கூற, “அதுவும் இதுவும் ஒன்னா? பப்ளிக்ல யாராவது முத்தம் கொடுப்பாங்களா?” என்று கேட்டாள் காரிகை.
“பப்ளிக்ல முத்தம் மட்டும் இல்ல. வேற என்னென்னமோ எல்லாம் பண்ணுவாங்க” என்றவனைப் பார்த்து,
“நீங்க எதுவும் பண்ண வேணாம். வாய மூடிட்டு வந்தாலே போதும்” என்று விரல் நீட்டி எச்சரிக்க, “சரிங்க மேடம்” பவ்யமாக வாயைப் பொத்திக் கொண்டான் எழிலழகன்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி