💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 84
ராஜீவ்வின் திருமணத்திற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் அனைவரும்.
“இந்த ட்ரெஸ் அழகா இருக்கா?” யோசனையுடன் கேட்ட அகியைப் பார்த்து, “நான் சொன்ன மாதிரி ட்ரெஸ்ஸ போடு அகி. ஏன் இப்படி பண்ணுற?” சற்றே கோபத்துடன் கேட்டான் யுகன்.
“அதானே. ரெண்டு பேரும் ஒன்னு மாதிரி ட்ரெஸ் பண்ணுனா அழகா இருக்கும்” என்று ஜனனி சொல்ல, “முடியாது ஜானு. அவன் இரக்கமா கேட்டா நான் ஓகே சொல்லுவேன். ஆனால் மத்தவங்க பார்க்கனும் என்பதற்காக மட்டும் தான் சொல்லுறான். நான் எதுக்கு அவன் சொல்லுற மாதிரி ட்ரெஸ் பண்ணனும்?” முகத்தை உப்பிக் கொண்டான் அகிலன்.
சிரித்துக் கொண்ட ஜனனி, “அவனுக்கு உன் மேல பாசம் இல்லாமலா ஒரே மாதிரி ட்ரெஸ் பண்ண சொல்லுறான். உன் மேல கோபம்னா அப்படி சொல்லுவானா இல்லல்ல? அவனே மனசு மாறி கேட்குறப்போ நீ எதுக்கு மறுக்குற?” எனக் கேட்க, “ஆமால்ல” நாடியில் விரல் வைத்து யோசிக்க ஆரம்பித்து விட்டான் அவனும்.
இதைக் கேட்டும் கேட்காதது போல் இருந்தான் யுகன். அவனுக்கு இப்போதெல்லாம் அகி மீது கோபம் இல்லை. சத்யாவுடனோ ஜனனியிடமோ பழகினால் பொறாமை உணர்வு இல்லை. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவும் இல்லை.
குளித்துவிட்டு ஷார்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்தவாறு வந்த சத்யாவின் தலையில் ஈரம் சொட்டியது.
“டவல் எங்க?” என்று ஜனனி கேட்க, “கீழே விழுந்திருச்சு ஜானு. மொத்தமா நனைஞ்சு போச்சு” என்று பதில் அளித்தவாறு ரேக்கில் இருந்த யுகனின் டவலை எடுக்கப் போனான்.
“நோ டாடி எடுக்காதீங்க. ஒருத்தரோட டவலை எல்லாரும் அப்படி யூஸ் பண்ணக் கூடாது. தனித்தனியா தான் யூஸ் பண்ணனும்னு டீச்சர் சொல்லித் தந்தாங்க” என்று யுகன் சொல்லி விடவே, “இப்போ என்ன பண்ணுறது?” என்று அவன் கேட்க,
“ஜானுவோட சாரியால துடைச்சு விட சொல்லுங்க” என்றான் அகிலன்.
“என்ன?” இருவரும் அதிர்ந்து நோக்க, “ஆமா! அன்னிக்கு நான் டவல் கொண்டு போகாமல் போனப்போ ஜானு அவங்க புடவையால தலையை துவட்டி விட்டாங்க. அப்படி பண்ணி விடுங்க ஜானு” என்று கூறினான் அகி.
“அ..அது இல்ல” இருவரும் தடுமாற்றமாய் ஏக காலத்தில் சொல்ல, “இது நல்ல ஐடியாவா தான் இருக்கு. ஜானு சீக்கிரம் பண்ணுங்க. ரொம்ப நேரம் தலை துடைக்காம ஈரத்தோட இருக்கக் கூடாது” என்று பெரிய மனிதன் போல் சொன்னான் யுகன்.
“ஓகே டா” என்று சேலை நுனியைய் பிடித்தவள் சத்யாவை பார்க்க, அவனது சிரம் தானாகக் குனிந்தது.
“டாடி! நீங்க உட்காருங்க” என்று யுகி சொல்லவே, அவன் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
அவனை நெருங்கிய ஜனனி சேலை நுனியால் தலையைத் துடைத்து விட ஆரம்பித்தாள். அவளின் கைகள் தன் சிரத்தில் பட்டவுடன் உடல் சிலிர்த்தது சத்யாவுக்கு.
மங்கையவளின் மதி முகம் பார்க்க எண்ணி இமை திறக்க, நேரே இருந்த பெண்மைப் பொக்கிஷங்கள் விழிகளுக்கு விருந்தளித்தன. சட்டென்று தலையை தாழ்த்திக் கொண்டான். தனது கைகளை இரண்டையும் ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொண்டவனுக்கோ இனம் புரியாத உணர்வு.
அவளின் அசைவுகள் மற்றும், ஸ்பரிஷங்களை விழி மூடிய நிலையிலேயே அறிந்து கொண்டான். இது அறியாத பேதையவள் தலை துவட்டுவதில் மும்முரமாக இருந்தாள்.
“என்னங்க ஓகேவா?” என்று கேட்க, தலையைப் பிடித்துப் பார்த்தவன், “இல்ல ஜானு இன்னும் கொஞ்சம் துவட்டி விடு” என்றுரைத்தவனுக்கோ அவளின் மென்மையான தொடுதல் இன்னுமின்னும் வேண்டும் என்ற பேரவா.
“ஓகே” என்று துவட்டிட, “ஜானு! இனிமே உங்களுக்கு ரெண்டு இல்ல மூனு பிள்ளைங்கனு சொல்லுங்க. டாடியும் உங்க குழந்தை மாதிரி தானே? அவருக்கும் ஊட்டி விடுறீங்க, தலை துவட்டுறீங்க” என்று யுகன் சொல்ல,
“ஆமாடா. கால்ல போட்டு தூங்க வைக்கிறதும், தண்ணி ஊத்தி குளிக்க வைக்கிறதும் தான் பாக்கி. இல்லனா முழு நேர மதர் சர்வீஸ் பண்ண வேண்டி வரும் அவருக்கு” அவள் சிரிப்புடன் கூற, சிரித்து விட்டனர் சிட்டுக்கள்.
“சர்வீஸ் எடுக்க எனக்கு டபுள் ஓகே. உனக்கு ஓகேவா ஜானு?” என்று சத்யா குறும்பு மிளிரக் கேட்க, “அடி பின்னிடுவேன்” அவனது தலையில் தட்டி விட்டுச் சென்றாள்.
ஜனனியைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க, “போகனும்ல? ரெடியாகலயா?” என்று கேட்டாள் ஜனனி.
“ஆமா போகனும்ல? அயர்ன் பண்ணிட்டு வர்றேன்” உடைகளை எடுத்துக் கொள்ள, சிறுவர்கள் இருவரும் கீழே சென்றனர்.
“போகவே வேணுமா ஜானு?” என்று கேட்ட சத்யாவின் முகத்தை ஏறிட்டு, “ஏன்?” எனக் கேட்டாள்.
“எனக்கு விருப்பம் இல்லாம இல்ல. அங்கே போய் நீ அப்சட் ஆகிடுவியோனு யோசிக்கிறேன். ராஜீவ்வைப் பார்த்தா உனக்கு ஒரு மாதிரி இருக்காதா?” என்று வினவினான்.
“அங்கே ஒரு மாதிரியும் ஆகாது. எதுக்கு ஆகனும்னு கேட்கிறேன். அவனுக்கும் எனக்கும் இருந்த உறவு அறுந்து போயிடுச்சு. அவனையே நெனச்சிட்டு இருந்தா தான் அப்செட் ஆகும். அதை விட்டு நான் மூவ் ஆன் ஆகிட்டேன்.
இப்போ என் மனசு முழுக்க யுகி, அகியும் இந்த குடும்பமும் தான் இருக்கு. சோ அதைப் பற்றி அலட்டிக்க வேண்டிய அவசியம் இல்ல. ஏனோ அங்கே போய் அவன் சந்தோஷமா இருக்கிறதைப் பார்க்கனும்னு தோணுது. நான் இப்படி சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்தா அவனும் சந்தோஷப்படுவான்” என்றுரைத்தவள் சத்யாவின் முகத்தைப் பார்த்து, “நான் இப்படி பேசுறதால இன்னும் ராஜ்ஜை நெனச்சிட்டு இருக்கேன்னு நெனச்சு கேவலமா பேசிட மாட்டீங்களே?” அன்று அவன் கோர்ட்டில் பேசிய வார்த்தைகளை நினைத்துக் கேட்டாள்.
“இல்ல ஜானு! உன்னை நான் புரிஞ்சுக்கிட்டேன். இனி எவன் சொன்னாலும் உன்னை தப்பா யோசிக்க என் மனசு இடம் கொடுக்காது. அப்படி ஒரு இடத்தில் உன்னை வெச்சுட்டேன்.
அவனை லவ் பண்ணின. அவன் சந்தோஷமா இருக்கும்னு நெனக்கிற. இதுல எந்த தப்பும் இல்லயே. யாரும் சந்தோஷமா இருக்கனும்னு தான் நாம விரும்பனும், நமக்கு துரோகமே செஞ்சவங்களா இருந்தாலும் சரி” என்று சத்யா கூற, அவனை இமைக்க மறந்து பார்த்தாள் ஜனனி.
சற்று நேரத்தில் அனைவரும் ஆயத்தமாகினர். காரில் தன் குடுப்பத்தினருடன் சென்றான் சத்யா.
“நாம யார் கல்யாணத்து போறோம்? ராஜீவ் என்றது யாரு?” கேள்விக்கணை தொடுத்தான் யுகன்.
“ஜானுவோட தூரத்து சொந்தம் டா. இங்கே பக்கத்தில் தான் இருக்கும். நான் கூட அங்கே போனதில்ல” வழி நெடுகிலும் கதை சொல்லிக் கொண்டு வந்தாள் ஜனனி.
மண்டபத்திற்குச் செல்ல, அங்கு மகியும் ஜெயந்தியும் இருந்தனர். நடக்க இயலாத காரணத்தால் மாரிமுத்து வர மறுத்து விட்டார்.
மண்டபத்தினுள் நுழைய, அவர்களைப் பார்த்தவன் கீழே இறங்கி வந்தான்.
“எப்படி இருக்கீங்க அத்தை? என்னை ஆசீர்வாதம் செய்ங்க” ஜெயந்தியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்.
“ஹாய் ப்ரதர்! ஹேப்பி மெரீட் லைஃப்” என்று ராஜீவ்வுடன் கை குலுக்கிக் கொண்டான் சத்யா.
“எப்படி இருக்க ஜனனி?” அவனது கேள்விக்கு, “நல்லா இருக்கேன் ராஜீவ்” அவளும் அவ்வாறே சிநேக முறுவலைப் பரிசளித்தாள்.
ராஜீவ் தன் மாமா மகளுக்குத் தாலி கட்டி, அவளைத் தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.
“நாங்க ஆசைப்பட்டா மட்டும் பத்தாது, மேலே இருக்கிறவன் விதிக்கனும். அப்போ தான் எதுவும் நடக்கும்” என்று ஜனனியிடம் சொன்னவாறு அர்ச்சதை தூவினார் ராஜீவ்வின் தாய்.
அவள் புருவம் சுருக்கிப் பார்க்க, “எனக்கு எல்லாம் தெரியும் ஜானு! நீயும் ராஜீவ்வும் விரும்பினீங்க தானே? அவன் என் கிட்ட சொன்னான். நான் தான் இதெல்லாம் சரி வராது விட்டுடுன்னு சொல்லிட்டேன். அவன் மறுத்தான். அப்பறம் யோசிச்சு முடிவு செய்வோம்னு தள்ளிப் போடப் போறப்போ நீ வேற கல்யாணம் கட்டிக்கிட்ட” என்று சொல்ல, அவளுக்கோ என்ன சொல்வதென்றே புரியாத நிலை.
“அதென்ன காதல் கத்திரிக்கா எல்லாம்? இந்தக் காலத்துப் பசங்களே அப்படித் தான் ஒருத்தனைக் காதலிச்சுட்டு, இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது. கட்டுன புருஷனுக்குக் கூட உண்மையா இருக்க மாட்டாங்க” என்று அவர் கூற, “அவ கட்டுன புருஷனுக்கு உண்மையா தான் இருக்கா. நீங்க தான் மத்தவங்க கிட்ட எப்போ என்ன எப்படி பேசனும்னு புரியாம விஷத்தை கக்கிட்டு இருக்கீங்க” எனும் குரலில் இருவரும் திடுக்கிட்டனர்.
கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தான் சத்யா. அவனைக் கண்ட ஜனனி விம்மலுடன் நிற்க,
“ஒருத்தனை காதலிச்சா இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு எங்கேயும் எழுதி இல்ல. அப்பறம் ஒன்னு கேட்கிறேன். காதலிக்கிற பையன் ஒழுங்கா இருந்தா அவங்க ஏன் இன்னொருத்தனை கட்டிக்கனும்?
உங்க பையன் ஒரு நிலையில் இல்லாம அவளை காதலிக்க வெச்சுட்டு அம்மா சொல் கேட்டு மாமா பொண்ண கட்டிக்கிறதா சொல்லிட்டான். இப்போ வேற கல்யாணம் பண்ணிக்கிறானே. அது நல்லது. ஜானு வேற கல்யாணம் பண்ணுனா அது தப்பா? ஆணுக்கு ஒரு சட்டம் பொண்ணுக்கு ஒரு சட்டமா?
எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம், ஜனனி ராஜீவ்வை காதலிச்ச விடயம் எனக்கு தெரியும். அவ என் கிட்ட சொல்லிட்டா. அவ யாருக்கும் துரோகம் செஞ்சு வாழல. ஒவ்வொரு உறவுக்கும் உண்மையா இருக்கா. யாரையும் மனசளவுல கூட காயப்படுத்தாத பொண்ணு அவ.
கல்யாணத்து வர சொல்லி கூப்பிட்டு வெச்சு, காயப்படுத்த தான் உங்களுக்கு தெரியும். என் ஜானு அப்படி இல்ல. குணத்துல அவ தங்கம்! அவ கிடைக்க உங்க குடும்பத்துக்கு கொடுத்து வைக்கல. இவளை மாதிரி ஒரு பொக்கிஷத்தை நாங்க அடைஞ்சிட்டோம். எந்த ஜென்மத்தில் செஞ்ச புண்ணியமோ எனக்காக வந்திருக்கா” அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தான் சத்யா.
அவனின் கை வளைவுக்குள் நின்று கண்ணீர் சிந்தினாள் ஜனனி. அவளுக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை. சத்யா தனக்காகப் பேசியது அவளுக்கு சொல்லொணா உணர்வைத் தந்தது.
ராஜீவ்வின் தாய்க்கு செருப்பால் அடித்த உணர்வு. ஜனனியை நினைத்து மகன் வருந்திய பொழுதுகளைக் கண்டவர் அவளை வலிக்கச் செய்யவே இப்படிப் பேசினார். ஆனால் அங்கு சத்யா வருவான் என்பதோ, அவன் பேசுவான் என்பதோ முற்றிலும் எதிர்பாராதது.
“வா வீட்டுக்குப் போகலாம்” அவளின் கையைப் பிடிக்க, எதுவும் பேசாமல் அவனுடன் சென்றாள். அவள் கண்களில் கண்ணீர் நிற்கவில்லை.
காரின் அருகே சென்றதும் அவளை அணைத்துக் கொண்டாள் ஜனனி. அவளின் கண்ணீர் அவன் மார்பை நனைத்தது.
“நா..நாங்க வராமலே இருந்திருக்கலாம். வந்ததால இப்படி ஆகிடுச்சு. உங்க கோபத்துக்கு நான் காரணமாகிட்டேன்” அவள் அழுது கரைய, “முதல்ல அழுகையை நிறுத்து. உன்னை அழ விடாம பத்துரமா பார்த்துக்கனும்னு ஆசைப்பட்டேன். இந்த கண்ணீரைப் பார்க்கப் பார்க்க எனக்கு அந்தம்மா மேல கோபம் வருது” கை முஷ்டி இறுகக் கூறினான் சத்யா.
அவனது கோபத்தில் மெல்லியவள் மேலும் அழத் துவங்க, கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ஜானு! நான் சொன்னா கேட்க மாட்டியா? அழாதம்மா” அவளின் கண்ணீரைத் துடைத்தெறிந்தான்.
அவளோ அவனை அணைத்திருப்பது புரிந்து விலகிக் கொள்ள, “எதுக்கு என்னைக் கட்டிப் பிடிச்சியாம்?” இமையுயர்த்திக் கேட்டான் ஆடவன்.
“ஏதோ சந்தோஷத்துல. எனக்காக நீங்க பேசினது அப்படி இருந்தது. தாங்க் யூ” என்று அவள் சொல்ல, “அதுக்காக இந்த ஹக் கிடைக்குதுன்னா இனி அடிக்கடி பேசுறேனே. அந்த அம்மாவை வீட்டில் கொண்டு போய் வெச்சுப்போமா?” கிண்டல் தொனியில் கேட்டான் சத்யா.
“வேற வினையே வேண்டாங்க! ஆளை விடுங்க” தலைக்கு மேலால் கும்பிடு போட்டவளுக்கு கவலை தொலைந்திட, அவளைப் பார்த்துப் புன்னகை பூத்தான் கணவன்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி