85. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(4)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம்‌ 85

 

காரினுள் அமர்ந்திருந்தனர் சத்யாவும், ஜனனியும். அவளின் ஒற்றைக் கரம் நாடியில் பதிந்திருந்தது.

 

சிறுவர்கள் வரும் வரை நின்றனர் இருவரும். அவர்கள் மகி மற்றும் ஜெயந்தியுடன் சாப்பிடச் சென்றிருந்தனர். அதற்குள் கடைக்குச் சென்று சாப்பாடு வாங்கி வந்தான் சத்யா.

 

“எதுக்குங்க? எனக்கு பசிக்கல” என்று அவள் கூற, “எனக்கு பசிக்குது. ஆனால் நீ சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்” என்று விட்டான்.

 

“அய்யோ! வேண்டாமே” அவள் பாவமாகப் பார்க்க, “நீ ஊட்டி நான் மறுத்ததில்ல. இப்போ நான் ஊட்டுவேன். சாப்பிடுறியான்னு பார்ப்போம்” அவளுக்கு ஊட்ட, மறுப்புச் சொல்லாமல் சாப்பிட்டாள்.

 

அவனது அக்கறையில் அவள் மனம் உருகியது. சத்யா மீது அவளுக்கு நல்ல அபிப்பிராயம் தான். அதைத் தாண்டியும், அவன் மீது அவளுக்கு உணர்வொன்று உருவானது.

 

“உனக்கு ஒன்னு தெரியுமா ஜானு? சின்ன வயசுல அப்பா பிசினஸ் விஷயமா எங்கேயாவதா போனா என்னையும் கூட்டிட்டு போவார். அங்கே பார்ட்டி நடக்கும். அவருக்கு அது பிடிக்காம வெளியே வந்துடுவார். கார்ல என்னை உட்கார வெச்சு சாப்பாடு வாங்கி ஊட்டி விடுவார்” தந்தையின் நினைவுகளில் லயித்தது அவன் மனம்.

 

“அப்பான்னா அப்படி தானே? ஒவ்வொருத்தருக்கும் அந்த உறவு ஸ்பெஷல் தான். எனக்கு அந்தளவு அப்பாவோட நெருக்கம் இருந்ததில்ல. அப்படி எப்போவாச்சும் அவர் கூட பயணம் போகக் கிடைச்சா நான் வானத்துல மிதந்துடுவேன். போற வழியில் சாப்பாடு சாமான் நிறைய வாங்கித் தருவார். அவ்வளவு பேச மாட்டார். நானும் அதை சாப்பிட்டு யன்னல் வழியா எட்டிப் பார்த்துட்டே வருவேன். அவர் கூட சேர்ந்து நடக்கும் போதே தனி கெத்து தான்” ஜனனியும் சிறு பராயத்து நிகழ்வுகளை நினைவு கூர்ந்தாள்.

 

“எஸ் ஜானு! அப்பா என்கிற உறவு அப்படித் தான். அப்பாவோட பொறுப்புகள் சில சமயம் அவர் அன்பை மறைச்சிடும். இப்போ நான் அப்பா என்கிற அந்தஸ்தில் இருக்கும் போது எங்க அப்பாவோட நிலமையும் பொறுப்புக்களும் புரியுது” என்று சொல்ல, அவளும் தலையசைத்தாள்.

 

“டாடீஈஈ” என்றவாறு வந்தனர் சத்யாவின் மகவுகள்.

 

“வீட்டுக்கு கிளம்புறோமா?” என அகி கேட்க, “எஸ் அகி. டாடிக்கு வீட்டில் வர்க் இருக்கு” என்று கூறினான் சத்யா.

 

“ம்மா! இந்தப் பக்கமா தானே போறீங்க. எங்க கூட வீட்டுக்கு வந்துட்டு போங்க” வற்புறுத்தி அழைத்தாள் ஜனனி.

 

ஜெயந்தியும் மகியும் பின்னால் ஏறிக் கொள்ள, அகி மகியின் மடியில் அமர்ந்து கதை பேசிக் கொண்டு வந்தான். யுகி ஜனனியுடன் முன்னால் அமர்ந்தான்.

 

வீட்டை அடைந்த போது அந்திப் பொழுது சாய்ந்தது. இன்று தங்கி விட்டு நாளை செல்வதாக இருந்தனர் மகியும் ஜெயந்தியும். உள்ளே நுழைந்த மகியின் பார்வை ரூபனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

 

“சித்தி! வாங்க விளையாடலாம்” என்று சிறுவர்கள் அழைக்க, “இப்போ தானே வந்தாங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டுமே குட்டீஸ்” என்றுரைத்தான் சத்யா.

 

“ஆமா. இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு விளையாடுங்க. இப்போ நீங்களும் போய் ட்ரெஸ் மாத்திட்டு வாங்க” அவர்களை அனுப்பி விட்டாள் ஜனனி.

 

எங்கோ வெறித்திருந்த மகிஷாவை அழைத்துக் கொண்டு மேல் மாடிக்குச் சென்றவள், “உனக்கு என்ன பிரச்சினை மகி?” நேரடியாகக் கேட்டாள்.

 

தமக்கையை அதிர்ந்து போய்ப் பார்த்தவளுக்கோ வார்த்தைகள் தந்தியடிக்க, “அ..அது அக்கா” இழுவையாக சொன்னாள்.

 

“நீயும் என் கிட்ட மறைக்கனும்னு முடிவு பண்ணிட்டல்ல? அன்னிக்கு நந்துவும் இப்படி தான் பண்ணுனா. அதை நெனச்சு இப்போ ஃபீல் பண்ணுறா. நான் சொல்லுறது ஒன்னு தான். லவ் பண்ணாம இருக்கனும்.‌ மீறி பண்ணுனா அதற்காக தைரியத்தையும் நம்ம கூட வெச்சுக்கனும். வாய் திறந்து பேசி, கரெக்டான டைம்ல காதலை வெளிப்படுத்த முடியாதுன்னா அர்த்தமே இல்ல, அவங்க காதலிச்சு இருக்கவே வேண்டாம்” என்றவளுக்கு மகியின் மாற்றம் கவலை தந்தது.

 

“நான் உனக்கு தந்த வாக்கை காப்பாற்றுவேன்கா‌. நீ ஒன்னும் யோசிக்காத. காதல் எதுவும் இப்போ என் மனசுல இல்ல” என்றவளுக்கோ உண்மையைக் கூறவும் தெம்பில்லை.

 

“அப்படினா ஓகே. நீ ஹேப்பியா இருந்தா அதுவே போதும். இன்னிக்கு சந்தோஷத்துக்காக, திருப்திக்காக நாளைய சந்தோஷம் பறி போற மாதிரி காரியத்தை என்னிக்கும் செஞ்சுடாத. நீ படிச்ச பொண்ணு மகி. யோசிச்சு நடந்துக்க” அவளின் தலையை வருடிக் கொடுக்க,

 

“அக்கா” என்றவாறு அவளது மடியில் தலை சாய்த்தாள்.

 

“நான் உன் கூட இருப்பேன். உனக்காக பேசுவேன். உனக்கு சப்போர்ட்டா நிற்பேன். பதிலுக்கு நீ என்னை நம்புனா போதும்” எனக் கூற, ஒரு புறம் அவளைக் குற்றவுணர்வு கூர்மையாய்க் குத்தியது.

 

‘உனக்கு தந்த வாக்கு தான் எனக்கு பெருசா இருக்கு‌. என் குடும்ப சந்தோஷத்துக்காக காதலை விட்டுக் கொடுத்துடறேன்’ உள்ளுக்குள் கதறியவளுக்கு, மறையாமல் மலர்ந்துள்ள காதல் மனதை வதைத்தது.

 

“ஓகே டா. நான் போயிட்டு ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்” ஜனனி எழுந்து செல்ல, உள்ளுக்குள் ஆயிரம் யோசனைகளுடன் அமர்ந்நிருந்தாள் மகி.

 

“ஹலோ மேடம்! சௌக்கியமா?” எனும் வினாவோடு அவளது அருகில் வந்து அமர்ந்தான் ரூபன்.

 

“நான் நல்லா இருக்கேன். உங்களுக்கு என்ன?” அவள் முறைத்துப் பார்க்க, “நீ நல்லா இல்லனு தெரியுது. அதனால உன்னை நல்லா மாத்த வந்தேன். என்னைப் பிரிஞ்சு நீ எப்படி இருப்ப மகி?” அவனது குரல் சட்டென்று இறங்கியது.

 

“ஏன் முடியாது? நீங்க இல்லாம நான் இருப்பேன்” அவனின் மூக்குடைக்க வேண்டி பதிலிறுத்தினாள் மகிஷா.

 

“இருப்ப. ஆனால் சந்தோஷமா இருக்க மாட்ட. நிறைய பொய் சொல்லுவ, என் கிட்ட கூட. ஏமாற்றுவ, நடிப்ப.. இருக்கிற காதலை இல்லனு சொல்ல நீ என்ன வேணா ட்ரை பண்ணலாம். ஆனால் அதை இல்லாம பண்ண முடியாது” அவன் முகத்தில் அப்படி ஒரு அழுத்தம்.

 

தலை தாழ்த்திக் கொண்டாள். தன் காதலை அவன் அறிந்து விட்டான் என்பதும் புரிந்தது. இருந்தும் நடிக்கிறாள். காதல் இல்லை என்கிறாள். இந்த விடயத்தில் அவள் செய்து கொண்டிருப்பதில் அவளுக்கே உடன்பாடில்லை தான். இருந்தும் அதை மாற்றிக் கொள்ளவும் தயாராக இல்லை.

 

“இல்ல இல்லனு சொல்லுறியே. உன் வீட்டில் வேற கல்யாணம் பேசினா என்ன பண்ணுவ?” வினாவொன்றை நாண் ஏற்றி விடுவித்தான்.

 

“என்ன பண்ணுறது? கட்டிக்க தான் வேணும்” அவன் கேட்ட வேகத்தில் பதிலிறுத்தியவளுக்கு, தான் சொன்னதை நினைத்து என்னவோ போல் இருந்தது.

 

“வாய்ப்பேச்சும் வாழுற வாழ்க்கையும் ஒன்னில்ல மகி. சொல்லுறது ஈசி. அதை செய்யுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? அப்பறம் தான் என்று ஒரு வார்த்தை யூஸ் பண்ணியே, அதை எங்கே வெக்கிறோமோ அதற்கு ஏற்ப அர்த்தம் மாறும்.

 

யாரையோ ஒருத்தனை கட்டிக்க தான் வேணும்னு சொன்ன. இதுக்கு பெயர் அட்ஜஸ்மண்ட்! விரும்பி கட்டிக்காத ஒருத்தனை கடனேன்னு ஏத்துக்கிறது. நான் ரூபனைத் தான் கட்டிக்கனும்னு சொல்லு. அது தான் லவ்! இவர் தான் வேணும்னு நீ மனசார ஏத்துக்கிட்டு எல்லா எதிர்பார்ப்புகளையும் சுமந்து நிற்கிறது. இதில் நீ எதைத் தேர்ந்து எடுக்கப் போற?” அவன் கேட்ட கேள்வியை ஆழ்ந்து உள்வாங்கினாள்.

 

அவன் சொல்வது உண்மை தான். யாரோ ஒருவனை கல்யாணம் செய்வது எனும் நினைப்பே வேப்பங்காயாகக் கசந்தது. அப்படியிருக்க நிஜத்தில் நடந்தேறினால்? அவன் தேகம் நலிந்தது.

 

“மகி! இங்கே பாரேன்” அவளை மென்மையாக அழைக்க, கசிந்து போனது அவளுள்ளம்.

 

இந்த அன்பை இழந்து விடுவேனா என நினைக்கும் போது அவளது கண்கள் கலங்கின. பொங்கியெழுந்த அழுகையை அடக்கியதும், அது விம்மலாய் வெளியேறியது.

 

அவளைப் பார்க்கும் போது அவன் மனம் பிசைந்தது. உறுதியாக ஒரு முடிவு எடுக்காமல் இப்படி அல்லாடுகிறாளே என்றிருந்தது.

 

“ஒன்னும் இல்ல மகி! ரிலாக்ஸ் டா” அவள் கன்னத்தில் கை வைக்க, அவனது கையைப் பிடித்துக் கொண்டாள் மகிஷா.

 

உள்ளத்தில் பேசுவதற்கு பல்லாயிரம் விடயம் தோன்றினாலும், அவை தொண்டைக்குழி தாண்டி வர மறுத்தன. 

 

‘எனக்கு நீங்க வேணும் ரூபன்’ காதல் கொண்ட இதயம் கூக்குரலிட்டது. வாயோ மௌனம் சாதித்தது.

 

🎶உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே

ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே🎶

 

🎶 நூலறுந்த பட்டம் போலே

உன்னை சுற்றி நானும் ஆட

கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்🎶

 

🎶இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன

கேட்க வேண்டும் உன்னை

காலம் கை கூடினால்🎶

 

🎶கதைப்போமா

கதைப்போமா

கதைப்போமா

ஒன்றாக நீயும் நானும்தான்🎶

 

“நான் என்ன பண்ணுறேன்னு புரியல‌. தப்பு தப்பா பண்ணுறேன். ஆனால் என் மனசுல எதுவும் தப்பாகிட கூடாதேங்குற எண்ணம் மட்டும் தான் இருக்கு. நான் தப்பு பண்ணுனா மன்னிச்சிருங்க” அழுகையுடன் சொன்னாள் மாது.

 

“மன்னிக்க மாட்டேன். திட்டுவேன், அடிப்பேன். எதுவா இருந்தாலும் உன்னைப் பக்கத்துல வெச்சுக்கனும் மகி. பக்கத்தில் இருந்து சண்டை போடு. நீ வலிக்க வலிக்க பேசினா கூட தாங்கிக்கிறேன். ஆனால் பேசாம மட்டும் இருக்காத. என்னைத் தள்ளி போகாத. வேணாம்னு சொல்லாத.

 

சத்தியமா முடியல டி. உன்னைத் தவிர எதுவும் எனக்கு தோண மாட்டுங்குது. எந்த வேலையும் ஓடல டி. என் இயல்பு தொலையுற மாதிரி ஃபீல் ஆகுது. அது எனக்கு பிடிக்கவே இல்லை. என்னைத் திருப்பி மீட்டுக் கொடுத்துடு மகி. என் சந்தோஷத்தைத் தந்துடு” அந்த ஆறடி ஆண்மகனும் ஆண் எனும் கர்வம் இன்றி, தன் அன்புப் பெண்ணிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தான்.

 

“ரூபன்” அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் மகி.

 

அவனுக்குத் தன்னால் துயர் எனும் போது அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா என்ன? மனம் நொந்து போனாள்.

 

“என்னால உங்களுக்கு எவ்ளோ கஷ்டம். எனக்கு கவலையா இருக்கு. தாங்கிக்க முடியல ரூபி” அழுது கரைந்தாள் காரிகை.

 

“உனக்காக நான் எதையும் தாங்குவேன். நாம சேர்ந்து வாழ்வோம் மகி” அவளது முதுகை வருடிக் கொடுக்க, வேகமாக விலகி நின்றவளோ “அது நடக்காது ரூபன். என்னை மறந்துடுங்க” அழுத்தமாக சொல்லி விட்டுச் சென்றவளைப் பார்த்து, ஆயாசமாக இருந்தது அவனுக்கு.

 

………………..

“இன்னிக்கு ஒரு நாள் நான் உங்க கூட தங்கிக்கட்டுமா?” தயங்கித் தயங்கிக் கேட்ட ஜனனியை முறைத்துப் பார்த்தான் சத்யா.

 

“ஒன்னும் தப்பா நினைக்காதீங்க. நான் வேற ரூம்ல தங்குறதைப் பார்த்தா அம்மா கேள்வி கேட்பாங்க. ப்ளீஸ்” கண்களைச் சுருக்கிக் கெஞ்ச, கோபமாக வெளியில் சென்று விட்டான் சத்யா.

 

“ரொம்ப பண்ணாதீங்க! நான் பாவம் இல்லையா? யோவ் ஹிட்லர்” கெஞ்சலில் தொடங்கி, கடுப்பில் முடிக்க, அவளது தலையணையைக் கொண்டு வந்து கட்டிலில் போட்டிருந்தான் சத்யா.

 

“அய்யோ நான் கீழே தூங்கிக்கிறேன். இங்கே எல்லாம் வேண்டாம்” என்று அவள் தலையணையில் கை வைக்க, “பேசாம இருக்கனும். நீ இங்கே தான் தூங்கனும், இனி எந்த நாளும். இதுக்கு மேல இதைப் பற்றி ஒரு மூச்சு விடக் கூடாது” அழுத்தமாக கூறி விட்டுச் சென்றான்.

 

அவனது கோபத்தில் அமைதியானவள், இதைப் பற்றி பிறகு பேசலாம் என நினைத்துக் கொள்ள, யுகி வந்து தனது தலையணையை எடுத்துக் கொண்டு அகியின் அறைக்குச் சென்றான்.

 

“என்னடா செல்லம்? டாடி சொன்னாரா உன் கிட்ட?” அவன் கோபமாக இருக்கிறானோ என்று நினைத்துக் கேட்க, “எஸ் ஜானு. டாடி சொன்னதை நான் கேட்டுட்டேன். இனி அங்கே தான் தூங்குவேன்” அவனின் முகத்தில் துளியும் கோபமில்லை.

 

தலையசைத்து விட்டு கட்டிலில் சாய்ந்தவளுக்கு தூக்கம் வரவில்லை. சத்யாவை இன்னும் காணவில்லை.

 

“எங்கே போயிட்டார்? இன்னிக்கு என்ன யோசனையோ?” என சிந்தித்துக் கொண்டு மேல் மாடிக்குச் சென்றவளோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!