💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 86
மேல் மாடிக்குச் சென்ற ஜனனியோ அங்கு கண்ட காட்சியில் கண்களை அகல விரித்தாள். சுற்றிலும் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் பலூன்கள் காற்றிலும், சுவரிலும் நிறைந்திருந்தன.
என்னவாக இருக்கும், யாருக்கும் பிறந்த நாளா என சிந்தித்தவளிடம் யுகன் வெள்ளை நிற ரோஜாப் பூங்கொத்தை நீட்ட வியப்புடன் அதனை வாங்கிக் கொண்டாள்.
கையில் இருந்த மந்திரக் கோல் போன்றதால் தலை குனியுமாறு செய்கை செய்தான் அகி. ஒரு காலை மடக்கி முட்டி போட்டு அமரவும், அவளது தலையில் வெள்ளி நிற கிரீடத்தை அணிவித்தான் அவன்.
அவள் ஆச்சரியத்துடனே எழும்ப, இருவரும் இரு கைகளையும் பிடித்து அழைத்துச் சென்று ஊஞ்சலில் அமர வைத்தனர்.
அவளை ஆட்டி விடவே புரிந்தும் புரியாத நிலையில் இருந்த ஜனனி ஊஞ்சல் சட்டென்று நிறுத்தப்படவும், அதிர்ந்து போக, “அதோ பார் ஜானு” குழந்தைகள் இருவரும் சுவரில் தொங்கிய பெரிய அளவிலான இதய வடிவ பலூனைக் காண்பித்தனர்.
“சர்ப்ரைஸ் ஃபார் யூ மை ஏஞ்சல்” அவளின் காதருகே கேட்டது சத்யாவின் குரல்.
அவனோ தனது கையில் இருந்த ரிமோட்டை அவள் கையில் வைத்து, அவளின் விரலால் அழுத்தினான். அந்த பலூனில் மெல்ல மெல்ல மின்குமிழ்கள் ஒளிர ஆரம்பித்தன.
அதில் இருந்த எழுத்துக்களை வாசிக்கும் போது, “ஹேப்பி பர்த் டே டு யூ ஜானு” சிறுவர்கள் மற்றும் சத்யா சத்தமாக சொல்ல, வீட்டிலுள்ள மற்றவர்களும் வந்தனர்.
‘மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே’ எனும் எழுத்துக்களின் பிரகாசம் அவளது கண்களைக் கூசச் செய்ய, இவர்களது வாழ்த்து அவளுள் ஆனந்த அலையை அள்ளி வீசியது.
அவள் இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு பிறந்த நாள் என்பதே மறந்து போயிருந்தது. அவர்களது வீட்டில் ஒரு வாழ்த்து சொல்வதோடு சரி. கொண்டாட்டம் எல்லாம் மாரிமுத்துவிற்குப் பிடிப்பதில்லை.
இன்று அவளுக்காக இப்படி ஒரு விடயம் நிகழ்ந்ததில் இறக்கையின்றி வானில் பறப்பது போல் இருந்தது.
தன்யா கையில் கேக்குடன் வந்தாள். நீலநிறத்தில் அழகான வேலைப்பாடுகளுடன் விளங்கியது.
“வாவ்” யுகன் விரல் வைத்துச் சுவைக்க, “கேக் வெட்டும் வரை இரு. அதுக்குள்ள முடியலயா வாண்டு?” அவன் தலையில் மெல்லத் தட்டினான் ரூபன்.
“கேக் வெட்டு ஜானு” அகி ஊக்கப்படுத்த, அவள் விழிகள் கணவனை நோக்கின.
அவனது பார்வையும், அன்பும், ஆவலும் இதற்கெல்லாம் முழுமுதற் காரணம் சத்யா என்பதை நிரூபிக்கப் போதுமாக இருந்தது. அவனது அக்கறை மிகுந்த அன்பு அவளை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
அவள் முகத்தில் தெரிந்த ஆனந்தம் ஒன்றையே இமை சிமிட்டவும் மறந்து பார்த்து ரசித்தான் சத்யா. அவளுக்காக ஒவ்வொன்றையும் செய்வதில் அவனுக்கு ஏக மகிழ்ச்சி.
அனைவரும் பாட்டுப் பாட, ஜனனி கேக் வெட்டினாள். ஒரு துண்டை எடுத்தவளோ இரண்டாகப் பிய்த்து சிறுவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் ஊட்டி விட்டாள்.
அவளின் அந்த செயலே அனைவரையும் நெகிழ வைத்தது. அவளுக்கு இருவரும் ஒன்று போல் சமமான முக்கியத்துவம் பெற்றவர்கள் என்பதை உணர்த்தியது அவளின் செய்கை.
அடுத்து அவளின் கண்கள் சத்யா மீது நிலைத்தன. சற்றுத் தள்ளித் தான் நின்றிருந்தான் அவன். அவனை அழைக்கலாமா என சிந்தித்தவள், வேண்டாம் என நினைத்து விட்டு தானே அவனருகில் சென்று ஊட்டினான்.
அவள் செயலில் அகம் குளிர்ந்தது அவனுக்கு. அவளுக்குத் தன் மீதுள்ள அன்பினை அல்லவா அவன் கண்டு கொண்டான்?
அடுத்து ஜெயந்தி, மேகலை, மகி, தேவன், ரூபன், தன்யா என்று ஒவ்வொருவருக்கும் ஊட்டி விட்டாள். அவை ஒவ்வொன்றும் அவள் வாழ்வில் இனிமையான தருணங்கள்.
அனைவரும் பரிசுப் பொதிகளை வழங்கினர், சத்யா மற்றும் அவன் மைந்தர்களைத் தவிர.
“இதெல்லாம் எதுக்கு? நீங்க இப்படி பண்ணுனதே எனக்கு பெருசு” மகிழ்வு மின்ன உரைத்தாள் மங்கை.
“எங்களுக்கு கெடச்ச பரிசு நீ! உனக்காக இதெல்லாம் கூட பத்தாது ஜானு” மருமகளின் தலையை அன்புடன் வருடினார் மேகலை.
“ஆமாண்ணி! எங்க வீட்டுல நடக்கிற எல்லா மாற்றங்களுக்கும் நீங்க காரணமா இருக்கீங்க. நிறைய விஷயங்களை சொல்லித் தர்றீங்க. நீங்க அண்ணன் கூட இருந்து எங்க அப்பாவோட ஸ்தானத்தை வகிக்கிறீங்க. நீங்க எங்களுக்காக பண்ணுனதோட ஒப்பிட்டா இது சின்ன விஷயம்” என்று சொன்னான் தேவன்.
“அதே தான்! இதெல்லாம் வெறும் பரிசு தான். ஆனால் நீங்க எங்களுக்காக எங்க குடும்பத்தோட சந்தோஷத்தை மீட்டு தந்திருக்கீங்க. உறவுகளோட அருமையை உணர்ந்து, அதை எங்களுக்கும் உணர்த்தி ஒற்றுமையா வாழ வெச்சிருக்கீங்க. இதுக்கு எந்த விலையும் இல்ல அண்ணி” என்ற ரூபன், “நீங்க கிஃப்ட் கொடுக்கலையா செல்லம்ஸ்?” எனக் கேட்க,
“ஜானுவுக்குக் கெடச்ச கிஃப்ட் நாங்க தானே?” இருவரும் ஒன்று போல் சொல்ல, “சமாளிபிகேஷன்!” தன்யா சிரிக்க,
“உண்மை தானே ரூபன். அவங்களால தானே நான் இப்படி இருக்கேன். அவங்க எனக்குக் கெடச்ச வரம்” இருவரையும் கை விரித்து அணைத்துக் கொண்டாள் பெண்.
யுகனும் அகியும் அவள் காதில் ஏதோ கூற, விழி விரித்து நின்றாள் ஜனனி. அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்” ஆனந்தம் அருவியெனக் கொட்டியது அவள் நெஞ்சத்தில்.
“ஜானுவுக்கு நாங்க கொடுக்குற கிஃப்ட் எங்க ஃப்ரெண்ட்ஷிப் தான். பிடிச்சிருக்கா ஜானு?” அவளிடம் அகி கேட்க, “பிடிச்சிருக்காவா? அய்யோ! பிடிக்காம போகுமா? நீங்க ஒன்னா இருக்கனும்னு என்னைத் தவிர யாரும் அதிகமா ஆசைப்பட மாட்டாங்க. என் வேண்டுதல் வீண் போகல. எனக்குக் கெடச்ச பெரிய கிஃப்ட் இதான்” இருவரையும் இறுக அணைத்தாள்.
“அது எப்போ ஃப்ரெண்ட் ஆனீங்க?” மகி கன்னத்தில் கை வைத்து வினவ, “அகிக்கு என் மேல கோபம் இல்லை. அவன் நார்மலா தான் இருந்தான். எனக்கு தான் அவன் ஜானு கூட பழகுறதும், டாடி கிட்ட நெருங்குறதும் பிடிக்காம இருந்துச்சு. அப்பறம் போகப் போக அப்படி தோணவே இல்ல.
நாங்க சண்டை போட்டா ஜானுவுக்கும் டாடிக்கும் பிடிக்காதுனு புரிஞ்சுக்கிட்டு அமைதியா இருந்தேன். இருந்தும் அவன் கிட்ட அதை சொல்ல முடியல. நான் எதுக்கு சொல்லனும்னு இருந்தேன். அப்பறம் இன்னிக்கு டாடி கிட்ட என்ன கிஃப்ட் தர்றதுனு கேட்டேன். ஜானுவுக்கு பிடிச்ச எதையாவது கொடுங்கனு சொன்னார்.
எல்லாத்தையும் விட ஜானுவுக்கு பிடிச்சது நாங்க தானே? நாங்க ஒன்னா இருந்தா அது பிடிக்குமே. அதனால அந்த சந்தோஷத்தையே கொடுக்கலாம்னு நெனச்சேன். அகி கிட்ட பேசினேன். அவ்ளோ தான்” தோளைக் குலுக்கினான் யுகன்.
“சும்மா எல்லாம் பேசல ஜானு! ஏதோ சண்டைக்கு வர்றவன் மாதிரி வா ஃப்ரெண்ட் ஆகலாம் அப்படினு கையை நீட்டினான். நானும் என்னடா இது புதுசா இருக்குனு யோசிச்சேன். ஜானுவுக்காக ஃப்ரெண்ட் ஆகப் போறேன். இனிமே என் கூட தான் இருக்கனும். அந்த ஆகாஷ் பையன் கூட நர்சரில பக்கத்துல இருந்தா உன்னை இல்ல, அவனுக்கு அடிச்சிடுவேன். அப்படினு சொன்னான்” அவன் சொன்ன பாணியில் சொல்லிக் காட்டினான் அகிலன்.
“அவனுக்கு அவ்ளோ பாசசிவ்” தேவன் சிரிக்க, “ப்ரபோஸ் கூட இப்படி தான் பண்ணுவானோ?” ரூபனின் சிந்தனை எங்கெங்கோ சென்றது.
“யுகி அப்படி தேவனைப் போல, கொஞ்சம் டெரரா இருப்பான். பாசம் வெச்சா பாசசிவ் அதிகமா வரும். அகி ரூபனை மாதிரி. அவன் கிட்ட ஒரு சாஃப்ட் எப்போவும் இருக்கும்” என்று சொன்னான் சத்யா.
ஜனனிக்கோ இருவரும் ஒன்றிணைந்தது தவிர, வேறெதுவும் பெரிதாகத் தோன்றவில்லை. அவளுள் அவ்வளவு சந்தோஷம். அவள் முகம் கண்டு மகிழ்வில் மூழ்கிப் போனது தாயுள்ளம். தன் மகள் இங்கே கொண்டாடப்படும் விதம் அவருக்கு அத்தனை திருப்தியைக் கொடுத்தது.
“நாங்க டான்ஸ் பண்ணப் போறோம். எல்லாரும் உட்காருங்க” என்று பாட்டை ஒலிக்க விட்டான் யுகன்.
🎶 காத்து மேல காத்து மேல…
காத்து கீழ காத்து கீழ…
காத்து சைட்ல காத்து சைட்ல…
காத்து ரைட்ல காத்து ரைட்ல…
🎶 வீட்டு மேல காத்தடிக்குது…
காத்து ரொம்ப நாத்தடிக்குது…
சைட்ல பாத்தா குப்ப மேடுமா…
குப்ப மேடுமா… 🎶
யுகனும் அகியும் துள்ளிக் குதித்து, ஆடி அசைந்து ஆட, அவர்களது ஆட்டத்தில் சிரித்தே ஓய்ந்து போயினர் அனைவரும்.
“ரூபி! சித்தா வாங்க” அவர்களையும் நடனத்தில் இணைத்துக் கொள்ள, “எனக்கு ஆட வராது டா” பாவமாகப் பார்த்தான் ரூபன்.
“எனக்கும் தான்டா” தேவனும் சொல்ல, “அதெல்லாம் முடியாது. நீங்க பாக்ஸிங் பண்ணுற மாதிரி ஆடுங்க. ரூபி பேஷன்டை செக் பண்ணுற மாதிரி சரி ஆடட்டும். எப்படியோ டான்ஸ் பண்ணனும் அவ்ளோ தான்” என்று யுகன் சொல்ல வேறு வழியின்றி ஆடினர் அவர்கள்.
“ஹா ஹா! ரூபனைப் பாருங்களேன்” கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு பாவமாக ஆடிய ரூபனைக் காட்டிச் சிரித்தாள் ஜனனி.
சத்யாவுக்கோ அளவில்லா ஆனந்தம். அவள் வாய்விட்டுச் சிரிப்பது அவனது மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச வலிகளையும் தீர்த்தன. புதிதாகப் பிறந்ததாய் உணர்ந்தான். அவனது சந்தோஷத்திற்கு மீண்டுமொரு ஜனனம் கொடுத்து விட்டாள் ஜனனி!
ஆடி முடித்து ஓய்ந்து போய் அமர்ந்தனர் அனைவரும்.
“டேய்! உனக்கு வேற பாட்டே கிடைக்கலயா? நாத்தடிக்குது கூத்தடிக்குதுனு பாட்டு போடுற. அதுக்கு ஸ்டெப் போட்டு இடுப்பு வலிக்குது” யுகனின் கன்னத்தைக் கடித்து வைத்தான் ரூபன்.
“எவ்ளோவோ பாட்டு இருக்கு. அதைத் தான் நானும் யுகி கிட்ட கேட்டேன். சூப்பர் பாட்டு எல்லாம் இருக்கும் போது இந்த குப்பை பாட்டை எடுத்திருக்கான்” அகியும் சித்தப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டான்.
“சூப்பர் பாட்டு நிறைய இருக்கு. ஆனால் அதைப் பார்த்து ரசிக்க மட்டும் தான் முடியும். சிரிக்க முடியுமா? இதுக்கு போட்ட டான்ஸ் பார்த்து ஜானு எப்படி சிரிச்சா. அதுக்கு தானே இதை சிலெக்ட் பண்ணுனேன்” என்று யுகன் கூற,
“என் செல்லக் குட்டி! லவ் யூ டா” அவனது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள் ஜனனி.
தனக்காக யோசித்த அவனது கள்ளமற்ற அன்பில் கனிந்து போனாள் காரிகை. தான் பெறாமலே பெற்ற பொக்கிஷம் அல்லவா அவன்? அகிக்கும் முதலில் அவள் வாழ்வில் வந்து அவளுள் தாய்மை சுரக்கக் காரணமானவன் இந்த யுகன்.
மீண்டும் அவனது அன்பைத் திருப்பிப் பெற்றதில் பூவாய் மலர்ந்தது, அவளிதயம். அகியும் அவளது மடியில் வந்து அமர, இருவரையும் அணைத்துக் கொண்டாள் ஜனனி.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி