💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 87
அன்று விடுமுறை நாள் என்பதால் சிறுவர்களுடன் ஆட்டம் போட்ட ஜனனி, மதிய வேலை தாண்டி குட்டித் தூக்கம் போட்டாள். குளித்து விட்டு வந்த சத்யாவின் கண்கள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருப்பவளைப் பார்த்தன.
வலக்கரத்தைக் கன்னத்தில் வைத்து இமை மூடி துயில் கொண்டிருந்தாள் தாரகையவள். சற்று நேரம் அவனையே விழி மூடாது ரசித்தவன், அருகில் சென்று அவள் கையைத் தட்டினான்.
“ஜானு! எழுந்திரு. ஜானூஊ” அவளின் காதருகே சென்று அழைக்க, “தூக்கம் வருதுங்க. தூங்க விடுங்க” மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
“தலை ஈரமா இருக்கு ஜானு. துடைச்சு விடு” என்று சொல்ல, வேகமாக எழுந்தமர்ந்து தனது சேலை நுனியைப் பிடித்தவள், சட்டென்று அவன் முகம் நோக்கினாள்.
அவனது கையில் டவல் இருப்பதைப் பார்த்து புருவம் உயர்த்த, “நீ துவட்டி விடேன் ஜானு. ப்ளீஸ்” கண்களைச் சுருக்கி கெஞ்சினான் கணவன்.
“வர வர ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க. எங்கேயாச்சும் போனா தலையை யார் துடைக்கிறது?”
“நீ தான். உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் ஜானு. போற இடமெல்லாம் உன்னையும் கூட்டிட்டு தான் போவேன்” கண்களைச் சிமிட்டி சொன்னான் சத்யா.
“தலை துவட்டுறதுக்காக என்னையும் பாக்கெட்ல போட்டுட்டு போவீங்களா? என்னை என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?” அவள் முறைப்புடன் கேட்க,
“அச்சோ அப்படி இல்ல ஜானு! உனக்கு வேலை தர்றேன், இதற்காக தான் உன்னை வெச்சிட்டு இருக்கேன்னு நினைக்காத. உன் கிட்ட இப்படி செல்லமா திட்டு வாங்கிட்டு, உன் கையாலயே துடைச்சுக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு. அது ஒரு தனி ஃபீல். மத்தபடி நீ என்னை தப்பா நினைக்காத” அவனது முகத்தில் சோக ரேகைகள் படரவும், அவளுக்கு ஏதோ போல் ஆகிற்று.
“நான் அப்படி சொல்லலங்க. சாரி! என்னால பண்ண முடியலங்கிறதுக்காக சொல்லல. நீங்களே பண்ணிக்கலாமேனு தான் கேட்டேன். இப்போ சொல்லிட்டீங்கள்ல. உனக்கு அப்படி சந்தோஷமா இருக்குன்னா நான் கண்டிப்பா செய்வேன்” டவலை எடுத்து ஓரமாக வைத்து விட்டு, சேலை நுனியால் துவட்டி விட ஆரம்பித்தாள்.
சோக ரேகைகள் சென்ற இடம் தெரியவில்லை. திகட்டாவொரு இன்பம் திட்டுத் திட்டாக அவன் தேகமெங்கும் நுழைந்தது.
“இன்னிக்கு என் பர்த்டேனு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று வேலைக்கு மத்தியில் அவள் கேட்க, “உன் ஃபேஸ்புக் ஐடில பார்த்தேன்” கண்சிமிட்டினான் அவன்.
“ஓஓ! என் ஃபேஸ்புக் எல்லாம் ஃபோகஸ் பண்ணி இருக்கீங்களா? நடத்துங்க நடந்துங்க” என்றவள், நொடி நேரம் கைகளின் வேலையை நிறுத்தம் செய்து “எது எப்படியோ இன்னிக்கு நான் ரொம்ப ஹேப்பி! எனக்கு இதுவரை ஒரு நாள் கூட பர்த்டே கொண்டாடியது இல்ல. அப்பாவுக்கு அந்த விஷயங்கள் அவ்வளவா பிடிக்காது. மகி, நந்து விஷ் பண்ணுவாங்க. அம்மா கோவிலுக்கு கூட்டிட்டு போவாங்க. அவ்வளவு தான் என் நாள்.
இன்னிக்கு நாளோட தொடக்கமே செமயா இருந்தது. காலையில் கூட எனக்காக ஸ்பெஷல் புட், மதியமும் அத்தை பிரியாணி பண்ணுனாங்க. இதெல்லாம் எனக்கே அதிகமா இருந்தது. இருந்தாலும் எல்லாம் புடிச்சது” என்றவளுக்கு அப்போது தான் அவர்கள் தந்த பரிசுகள் நினைவுக்கு வந்தன.
“கிஃப்ட் எதுவும் பார்க்கலையே” என்று சொன்னவளிடம், “முதல்ல இதைப் பார்” அலுமாரியில் இருந்து அழகான பிடவை ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
நீல நிற சாரியில் தங்க நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வடிவாக இருந்தது.
“ரொம்ப அழகா இருக்குங்க. ஆமா அது என்ன எல்லாமே ப்ளூ கலர்? எனக்குப் பிடிக்கும் என்றதாலயா?” அவள் கேட்க, “உனக்கு பிடிச்ச எல்லாமே தருவேன் ஜானு, என்னால முடிஞ்ச அளவு” என்று தலையசைத்துப் புன்னகைத்தான்.
“நீங்க என்னை அளவுக்கு அதிகமா கொண்டாடுறீங்க. இதெல்லாம் எப்போவும் இருக்கனும் சொல்லிட்டேன். இல்லனா இப்போவே நிறுத்திக்கங்க” மெல்லிய குரலில் சொல்ல, “பாதியில் விட மாட்டேன். என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பை இதை விட உனக்கு கொடுப்பேன். நீ திண்டாடுற அளவு உன்னைக் கொண்டாடுவேன்” அவனது பேச்சில் சிலிர்த்துப் போனாள் அவள்.
அனைத்தையும் இருவருமாகச் சேர்ந்து பிரித்துப் பார்த்தனர். சாக்லேட், பாதணிகள், கைக்கடிகாரம், வளையல் என்று அனைத்தையும் பார்த்து அகம் மகிழ்ந்தாள்.
“இப்படி கிஃப்ட் எனக்கு கெடச்சதே இல்ல. என் ஃப்ரெண்ட்ஸ் அவங்க பர்த்டேவுக்கு கெடச்ச கிஃப்ட்னு நிறைய சாமான்கள் ஸ்டேட்டஸ் போடுவாங்க. நமக்கு இப்படி கெடக்காதானு சில நேரம் தோணும். இன்னிக்கு இது நடந்தது என்னால நம்ப முடியல. இதை விட, அவங்க என் மேல வெச்சிருக்கிற அன்பும், என்னை மதிச்சு இந்தக் குடும்பத்தில் ஒரு ஆளா பார்க்கிறதும் தான் எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு” உள்ளம் உருகிக் கூறினாள்.
“இன்னும் ரெடியாகலயா ஜானு?” அகியும் யுகியும் ஒன்றாக வந்து நிற்க, “எங்கே போறோம்?” புரியாமல் கேட்டாள் அவள்.
“பர்த்டே கேர்ள் சொல்லுற இடத்துக்கு போகலாம். எங்கே போகனும்னு சொல்லுங்க” என்று அகி சொல்ல, “பார்க் போகலாம்” நொடிப்பொழுதில் பதில் வந்தது.
“உனக்குப் பிடிச்ச இடம் சொல்லு ஜானு. எங்களுக்காக சொல்ல வேண்டாம்” மறுப்புடன் தலையசைத்தான் யுகன்.
“பார்க் போகனும் போல தான் இருக்குடா. நீங்க விளையாடுறத பார்க்கனும் போல. போகலாம் தானே?” என்று அவள் கேட்க, இருவரும் தந்தை முகம் பார்த்தனர்.
“ஓகே டன்” என்று சத்யா சம்மதிக்க, ஜனனி ஆயத்தமாகி வந்தாள்.
மேகலையை ஜனனி அழைக்க, “எனக்கு முட்டி வலி கூட வர முடியாதும்மா. நீங்க போயிட்டு வாங்க” என்று விட்டார்.
பூங்காவிற்குச் சென்றதும், பட்டாம்பூச்சிகள் போல் மாறி விட்டனர் இருவரும். அங்கும் இங்கும் ஓடியாடித் திரிந்து விளையாட, சிவப்புப் பூ சொரியும் மரத்தினடியில் அமர்ந்து கொண்டனர் சத்யாவும் ஜனனியும்.
துள்ளித் திரியும் மான்குட்டிகள் போல் இருவரும் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ஜனனி. சத்யாவின் விழிகள் அவளை ரசித்தன.
புன்னகை வீற்றிருக்கும் உதடுகள் அவனிலும் அதன் தாக்கத்தைக் கொடுத்தன. கதை பேசும் விழிகள், கச்சிதமான இமைகள், கலையழகு சொட்டும் புருவங்கள், கமலப்பூக் கன்னங்கள் யாவும் அவனைக் கலா ரசிகனாக்கின.
அவன் பார்வை உணர்ந்த ஜனனி, “என்ன?” எனக் கேட்க, “ஒரு கவிதாயினி என் கண்ணுக்கு கவிதையா தெரியுறாளே. அந்தக் கவிதையை படிச்சிட்டு இருந்தேன்” என்றான் சத்ய ஜீவா.
அவள் கண்களில் பளிச்சென்ற மின்னல்.
“நான் கவிதை எழுதுறது உங்களுக்கு தெரியுமா?” இதழ்களும் இன்னும் விரிந்து கொண்டன.
“ஃபேஸ்புக்ல தான் பார்த்தேன். உன் கவிதைகள், நல்லா இருந்துச்சு. ஒன்னு ரெண்டு தான் காதல் கவிதைகள். எல்லாமே அவ்ளோ அழகு” அவனது பேச்சில் அவள் இன்பம் கண்டாள்.
அவளுக்குக் கவிதைகள் என்றால் அத்தனை பிரியம். நினைப்பதை எல்லாம் வார்த்தையாய் வடித்து விடுவாள். அவளிடம் யாராவது கவிதை எழுதித் தரச் சொன்னால் மகிழ்ந்து போவாள். இவனோ அவளைப் புகழ்வதில் அவளுக்கு சந்தோஷம் சுரந்தது.
“ஏதோ எனக்கு தோணுறப்போ எழுதுவேன். சிலதை ஃபேஸ்புக்ல போட்டிருக்கேன். மற்றது எல்லாம் டைரில இருக்கு” என்று சொல்ல, “அதையும் கொடு. நான் படிச்சு பார்க்கிறேன்” அவன் சொன்னதும், குதூகலமாகி விட்டாள்.
“என் கிட்ட யாரும் இப்படி கேட்டதில்ல. நான் எழுதினா என் கிட்ட வெச்சுப்பேன். நானா அவங்க காட்டினா ம்ம் நல்லா இருக்குனு சொல்லுவாங்க. இப்படி நீங்க கேட்டதும் ஒரு மாதிரி எக்ஸைட்மண்டா இருக்கு. நான் எழுதுறதைப் படிக்கிற ஒருத்தர் தான் எனக்கு ஹஸ்பண்டா வரனும்னு அப்போல இருந்து ஆசை” அவளுக்கோ என்ன பேசுவதென்றே புரியவில்லை.
இது மனித இயல்பு! தனக்குப் பிடித்ததை, இன்னொருவருடன் பேசும் போது நாம் அறியாமலே உணர்ச்சி வசப்பட்டு விடுவோம். அதீத ஆவல் நம்மைத் தொற்றிக் கொள்ளும். வார்த்தைகளை வஞ்சனை இன்றி வீசச் செய்திடும். அப்படித் தான் இவளும் இருந்தாள்.
“நான் தான் சொன்னேன்ல ஜானு. உனக்கு எது பிடிக்குமோ அதை செய்வேன். இருக்கிற எல்லாமே கொடு, இன்னும் நிறைய எழுது. அத்தனையையும் படிச்சிட்டு சொல்லுறேன் சரியா?” என்று கேட்க, அவள் தலை வேகமாக ஆடியது.
“நான் கவிதை எழுத மாட்டேன். ஆனால் நிறையவே படிப்பேன். இப்போ ரொம்ப குறைவாகிடுச்சு. முன்னெல்லாம் லோன்லியா ஃபீல் பண்ணுனா கவிதை எடுத்து படிக்க ஆரம்பிச்சிடுவேன். சிலது நம்ம நிலமை கூடவே ஒத்துப் போற மாதிரி இருக்கும். அப்போ அந்த வார்த்தைகளே நமக்கு சின்னதா ஆறுதல் சொல்லுற மாதிரி இருக்கும். அந்த ஃபீலே தனி தான்” தனது விருப்பங்களையும் அவன் பரிமாறிக் கொண்டான்.
களைத்துப் போய் வந்து அமர்ந்தனர் சிறுவர்கள்.
“என்னடா டயர்டா இருக்கா?” சத்யா கேட்க, “ஆமா டாடி! அந்த பையன் எனக்கு தந்துட்டு யுகிக்கு ஊஞ்சல் தர மாட்டேன்னு சொல்லிட்டான். அவனுக்கு வேணாம்னா எனக்கும் வேணாம்னு வந்துட்டேன்” என்றான் அகி.
“கொஞ்சம் நேரம் இருந்தா அந்தப் பையன் கிட்ட கேட்டு எடுத்திருக்கலாம். இவன் சும்மா கோபப்பட்டு வந்துட்டான்” யுகன் குற்றப்பத்திரிகை வாசித்தான்.
“எனக்கு சொல்லி இருந்தா இவனும் அப்படி தான் நடந்திருப்பான். இப்போ என்னைத் திட்டுறான்” என்று அகி சொல்ல, “நான் வந்திருக்க மாட்டேன். எப்படியாவது வாங்கி தந்திருப்பேன்” முறைத்துப் பார்த்தவன் ஜனனியைப் பார்த்து விட்டு, “சும்மா தான் சொன்னேன் ஜானு. அகி மேல கோபம் இல்ல. இவனுக்காக சண்டை போடுவேனே தவிர, இவன் கூட சண்டை போட மாட்டேன்” என்றான் யுகன்.
“எஸ் ஜானு! நாங்க சமத்து பிள்ளைங்க” என்று அகியும் கூற, “என் கண்ணே பட்டுடும் போலயே” இருவருக்கும் நெட்டி முறித்தாள் பாவை.
“டாடி…!!” என்று யுகன் பேச, “என்ன டா ஐஸ்கிரீமா?” சிரிப்புடன் சத்யா கேட்க, ஆம் எனத் தலையசைத்தான்.
எழுந்து சென்றவன் ஐஸ்க்ரீம் தள்ளு வண்டி வியாபாரியை அழைத்து வந்தான்.
“என்ன டாடி கடையவே வாங்கப் போறீங்களா?” அகிலன் வியந்து பார்க்க, “கடையில் உள்ள ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கிடலாம்” என்றவன் அங்கிருந்த மழலைகளை அழைத்து வந்தான்.
வியாபாரியிடம் பணத்தைக் கொடுத்தவனோ, “பர்த்டே பேபி கையால் கொடுக்கனும்னு ஆசைப்படுறேன். கொடுக்க சொல்லு” என்றான் சத்யா.
அவளோ விழிகளை விரிக்க, “கொடு ஜானு” துள்ளிக் குதித்தான் யுகி.
தலையசைப்புடன் வாங்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்.
புன்னகை ஏந்தி தன்னிடம் ஐஸ்கிரீம் வாங்கிச் செல்லும் மலர் மொட்டுக்களின் மகிழ்வு மிளிரும் முகம் ஜனனிக்கு அத்தனை இன்பத்தை வழங்கியது.
இறுதியாக அகி, யுகிக்கும் வழங்கியவள் தானும் ஒன்றை எடுத்து, “தாங்க் யூ ஃபார் எவ்ரிதிங்” என்றவாறு சத்யாவிடமும் நீட்ட, “விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே ஜானு” மீண்டுமொரு முறை வாழ்த்துச் சொல்லி, மங்கையவள் மனம் கவர்ந்தான் மன்னவன் அவன்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி