💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 88
கடற்கரை மணலில் அமர்ந்திருந்த தேவனுக்கு வினிதாவின் வருகையின் தாமதம் யோசனையைக் கொடுத்தது. எங்கு சென்று விட்டாள் என சிந்தித்தவனுக்கோ, சற்று முன் அழைத்த அவளின் குரல் உவப்பானதாக இல்லை.
சிறிது நேரம் கழித்து வந்தாள், அவனின் காதல் கண்மணி. அவள் முகத்தில் தெரிந்த வாட்டமும், கண்களில் பளிச்சிட்ட சிவப்பும் ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தின.
“வா வினி” கை நீட்டி அமரச் சொல்ல, அவனருகில் அமர்ந்தவளோ தோள்களில் சாய்ந்து கொண்டாள்.
“வினிமா” எனும் அழைப்புக்கு இறுக்கமாக கைப்பற்றுதல் மட்டுமே பதிலாகக் கிட்டியது.
வீட்டில் ஏதோ நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவன், “என்ன நடந்தாலும் நான் உன் கூட இருப்பேன் டி” என அமைதியாக தலையைக் கோதிக் கொடுக்க, “தேவ்” மென் குரலில் விசும்பினாள் வஞ்சிக் கொடியாள்.
அவளே மேற்கொண்டு பேசட்டும் என அவன் மௌனம் காக்க, “அப்பா எனக்கு ரொம்ப திட்டிட்டார்” மூக்கை உறிஞ்சினாள் அவள்.
“அப்பா தானே வினி? உன்னைத் திட்ட அவருக்கு உரிமை இல்லையா? இதுக்கு முன்னாடி உன்னை அவர் திட்டினதே இல்லையா என்ன?” அவளின் காதோரமாக பேச,
“திட்டுவார் தான். ஆனால் இன்னிக்கு என்னென்னவோ சொல்லிட்டார். பக்கத்து வீட்டுப் பொண்ணு வீட்டில் எதிர்த்தாங்கனு அவ லவ்வர் கூட ஓடிப் போயிட்டாளாம். அதுக்கு நம்ம வீட்டுலயும் இந்த மாதிரி நடக்குமோனு நாளுக்கு நாள் பயமா இருக்குனு எனக்குக் கேட்கவே சொல்லுறார்” என்றவளுக்கோ மனம் தாளவில்லை.
“என் மேல அவருக்கு நம்பிக்கை இல்லையா? காதலிச்சது அவ்ளோ பெரிய தப்பா? நானும் அப்படி பண்ணுவேன்னு பேசுறதை என்னால ஏத்துக்க முடியல. காதலிச்ச ஒரு விஷயத்துக்காக குடும்பத்துக்கு அவமானத்தைக் கொடுக்குற மாதிரி இப்படி பண்ணுவேன்னு பேசுறது கஷ்டமா இருக்கு தேவ்” கலக்கம் சூழ்ந்திருந்தது, அவள் வதனத்தில்.
“ப்ச் வினி! நீ என்னிக்கும் அப்படி பண்ண மாட்ட. அது எனக்கு நல்லாவே தெரியும். நீயாவே கூப்பிட்டா கூட நான் வர மாட்டேன். அது நம்மளை மட்டும் இல்ல, நம்ம குடும்பம், பசங்களைக் கூட பாதிக்கும். ஓடிப் போனவங்களோட பிள்ளை தானே என்கிற பேச்சுக்கு அது வழியமைச்சுடும். நம்மளோடது ஒன்னும் சின்ன வயசு காதல் இல்லை. மெச்சூர்டா யோசிக்கிறோம்ல?
அவரோட ஆதங்கம் அது. அப்படி பண்ணுவியோனு பயமா இருக்குனு சொல்லுறார். அப்படி பண்ணக் கூடாது என்றதை அந்த மாதிரி சொல்லுறார்னு நெனச்சுக்க. நீ அப்படி பண்ண மாட்டல்ல. அப்பறம் எதுக்கு இதை நெனச்சு நெனச்சு மனசப் போட்டு குழப்பிக்குற? ஃப்ரீயா விடு” அவளுக்குப் புரியும் படி எடுத்துரைத்தான்.
“எனக்கு புரியுது தேவ்! ஆனாலும் என்னால முடியல. அவர் வார்த்தைகள் என்னை அவ்ளோ பாதிக்குது. நான் அந்த குடும்பத்துக்கே சாபம்னு சொல்லுறார். நான் அப்படி என்ன பண்ணுனேன்னு புரியல.
காதலிச்சு, ஊர்ல பேச்சு வாங்கினவங்க கூட நல்லா இருக்காங்க. அவங்க வீட்டுல எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க. நான் ஒரு லவ் பண்ணி, அதுக்காக இவ்ளோ பேச்சு வாங்குறேன். அதை நெனச்சா என்னவோ போல ஆகுது” அவளுக்கு என்ன உணர்கிறோம் என்றே புரியவில்லை.
“மத்தவங்க கூட ஒப்பிட்டு பார்த்தா நமக்கு ப்ரெஷர் தான் கூடும். நம்ம மனசு அப்படி தான் வினி. நல்லா இருக்கும் போது மத்தவங்க நம்மள மாதிரி இருக்காங்களானு யோசிக்கிறதில்ல. ஒரு கஷ்டத்துல இருக்கும் போது இவங்க நல்லா இருக்காங்களே. நமக்கு மட்டும் தான் பிரச்சினையானு தோணும். நெஜமாவே போய் பேசி பார்த்தா அவங்களுக்கு நம்மள விட பெரிய பிரச்சினைகள் இருக்கலாம். நாம மத்தவங்களை யோசிக்க வேண்டாம். நம்மளைப் பார்ப்போம் சரியா?” அவளின் தலையை வருடிக் கொடுத்தான்.
“உன் மடியில் சாஞ்சுக்கட்டுமா?” என்று கேட்க, “உனக்காகத் தான் என் மடி. கேட்டுட்டு இருக்க தேவையில்லை. சாஞ்சுக்க டி” என்றதும், அவன் மடியில் தலை சாய்த்தாள்.
அவள் மனதுக்குள் ஒரு போராட்டமே நடந்தது. தந்தையின் அன்புக்கும், தேவனின் காதலுக்கும் இடையில் நிற்கிறாள் அவள். இருவரும் வேண்டும் என இரு தோணிகளில் கால் வைத்து, எந்தப் பக்கமும் ஈடேற முடியாமல், எதனையும் விட்டு விடவும் மனமின்றி நிற்பது அவளுக்கு சுமையாக இருந்தது.
இருப்பினும் தாங்கித் தானே ஆக வேண்டும்? அவளிடம் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
தன்னை மீட்டுக் கொண்ட வினிதா எழுந்து அமர, “அங்கே பாரேன் வினி” தூரத்தில் கைப்பிடித்து நடக்கும் வயதான தம்பதியரைக் காண்பித்தான்.
அந்தக் கணவர் பொக்கை வாய் திறந்து ஏதோ சொல்ல, வெட்கப்பட்டு வாயில் கை வைத்து அவர் மனைவி சிரிக்க, அவர் வாயிலும் புன்னகை.
வினியின் கண்கள் அதனை அளவெடுத்து, தேவனின் பக்கம் திரும்பின.
“நாமளும் அப்படி தானே இருப்போம். காதலிச்சு கட்டிக்கிட்ட மனைவியை, காலம் முழுக்க கண்கலங்காம இப்படி சிரிக்க வெச்சு பார்த்துக்குறதும் தனி சுகம் தான். வயசு போனாலும், முடி நரைச்சு உதிர்ந்தாலும், பல்லு விழுந்தாலும், நோயே வந்தாலும் உன்னை நான் பார்த்துக்கனும். என்னை நீ பார்த்துக்கனும். எனக்கு நீயும், உனக்கு நானுமா எல்லா நிலையிலும் இருக்கனும்” அவன் சொல்வதைத் கேட்டவளுக்கு சோகங்கள் மெல்ல மெல்ல விலகும் உணர்வு.
“இப்போ பிடிச்சிட்டு இருக்கிற இந்தக் கையில் சுருக்கம் விழலாம். ஆனால் என் காதல்ல விரிவு மட்டுமே நடக்கும். இதே இறுக்கத்தோட உன் கையை கெட்டியா பிடிச்சுப்பேன் தேவ்” அவள் கண்கள் தன்னவன் மீது காதலுற நிலைத்தன.
“அப்படியே இருப்போம் வினி! உன்னை என்னிக்கும் விட மாட்டேன். உனக்குள்ள நிறைய போராட்டம் நடக்குது. உன் வீட்டுல பிரச்சினை வர்ற அந்த நேரத்தில் உன் கூட இருக்க முடியல. உனக்காக பேச முடியல. தன்னந்தனியா நீயே எல்லாம் அனுபவிக்கிற.
எல்லாம் கொஞ்சம் காலம் தான். உன் வீட்டுல ஓகே சொன்னதும், நாம ஒன்னாயிடுவோம். உனக்காக நான் இருப்பேன். எவ்வளவு கண்ணீர் சிந்துறியோ, அதைத் துடைச்சிட்டு பல மடங்கு சிரிப்பை உனக்குத் தருவேன். ஐ லவ் யூ வினி” அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான் தேவன்.
“லவ் யூ டூ டா. நீ என் கூட இருந்தா நான் எவ்ளோ கஷ்டத்தை வேணா தாங்குவேன். காலம் நமக்காக என்ன எழுதி வெச்சிருக்கு, நாம எப்படி ஒன்னு சேரப் போறோம்னு தெரியல. ஆனால் சேருவோம்னு நம்புறேன்” என்றவளின் கண்களில் உறுதியான காதலின் ஊற்று.
……………..
மீண்டும் விமானத்தில் பறந்து வந்தாள் தன்யா. என்றும் போல் அவளுக்காக நுழைவாயிலில் காத்திருக்கும் கார்த்திக் இன்று வரவில்லை.
“எங்கே போயிட்டான்? கோபமா இருக்கானோ?” அவன் வரவில்லை என்றதும், அவள் முகம் வாடியது.
‘தன்யா’ எனும் பெயர்ப்பலகையைக் கண்டதும் புருவம் சுருக்கியவளோ, நொடி நேரத்தின் பின்னர் ஓடிச் சென்று அவனைத் தாங்கி இருப்பவனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“கார்த்தி” உற்சாகம் வழியும் குரலுடன் அவனைப் பார்க்க, “ம்ம்” முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு நின்றான் கார்த்திக்.
“கொஞ்சம் நேரம் நீ வரலனு நெனச்சுட்டேன்”
“உன்னை மாதிரின்னு நெனச்சியா? யாரையோ போல நெனச்சிட்டு நீ என்னை கண்டுக்காம போகலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. நீ வர்றேனு தெரிஞ்சதும் ஓடி வந்துட்டேன்” முகம் பாராமல் பதில் சொன்னான் ஆடவன்.
“சோ ஸ்வீட் கார்த்தி” அவனது கன்னம் கிள்ள, “நீ என்ன பண்ணுனாலும் நான் கோபம் தான். அது போகாது” என்றான் அவன்.
“பரவாயில்லை. நீ கோபமா இருந்துக்கோ. எனக்காக வந்த தானே? அதுவே சந்தோஷம்” என்றவள் மீண்டும் அவனை நோக்கி, “உன்னை விட்டுட்டு போனது தப்பு தான். அதுக்காக இப்படி பண்ணாத கார்த்தி” பாவமாகக் கேட்டாள்.
“என் கோபம் தீராது”
“கோபத்தைப் போக்க என் கிட்ட சூப்பர் ட்ரீட்மெண்ட் இருக்கு. அகி பாப்பா சொல்லி தந்துச்சு” என்றவளோ, அவன் என்ன என்று கேட்கும் முன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ஏய் லூசு! என்னடி இது? கிறுக்குத்தனமா எதுவும் பண்ணாத” முறைத்துத் தள்ளினான் கார்த்திக்.
“இது சமாதான முத்தம். மத்தபடி நீ நெனக்கிற மாதிரி ஒன்னும் இல்ல”
“என்ன முத்தமோ? யாராச்சும் பார்த்தா என்ன நெனப்பாங்க?”
“ஹலோ நல்லவனே! இது ஒன்னும் இண்டியா இல்ல, வாயில் கை வைக்கிறதுக்கு. இங்கே இங்கிலீஷ் முத்தம் கொடுக்குற ஆளுங்களைக் கேட்டா கூட ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லுறாங்க. நான் ஜஸ்ட் ஒரு சைவ முத்தம், அதுவும் கன்னத்துல தானே கொடுத்தேன்” என்று அவள் சொல்ல,
“கன்னத்துல அப்பிடுவேன் டி” கை ஓங்கியவன் சட்டென்று அதை இறக்கிக் கொண்டு, “இங்கே எப்படி இருக்கிறாங்கனு முக்கியம் இல்ல. நாம நாடு விட்டு நாடு வந்தாலும் நம்ம பண்பாட்டை மறக்கக் கூடாது” என்று சொல்ல,
“நீ இப்படியே இரு டா. மாறிடாத. பண்பாடு கருவாடுனு சொல்லிட்டே இரு. உன்னைப் போய் அந்த ரூபன் எரும லவ் பண்ணுறியானு கேட்குது. நீ ஒரு முத்தத்துக்கு கூட ஒத்து வர மாட்டேன்னு எனக்கு தானே தெரியும்” இரு புறமும் தலையை ஆட்டிக் கொண்டாள் தன்யா.
“நீ என்னடி கிழவி மாதிரி பேசுற?” அவளது தலையில் தட்ட, “ஆமா! லவ்வுனு பேசினா மட்டும் பேச்சை மாத்திடு. போடா! நீ இல்லனா என்ன? என் அண்ணனுங்க எனக்காக நல்ல பையனா பார்த்து தருவாங்க” பெருமையுடன் சொன்னாள் அவள்.
“தேவன் கிட்ட சொல்லி உனக்கு அவனை மாதிரி ஆளா பார்த்து தர சொல்லுறேன்”
“தேவா அண்ணாவும் என் கிட்ட பேசிட்டாரே. இப்போ எனக்கு ஜாலி தெரியுமா? தேவாண்ணா ஒன்னும் அவ்ளோ மோசம் இல்ல. கோபம் வருமே தவிர, பாசமும் அவ்ளோ இருக்கு. அவரை வெச்சே உன்னை ஒரு வழி பண்ணுறேன் டா” அவள் கையை முறுக்கிக் கொண்டு கூற,
“தேவாவுக்கு பாக்ஸிங் தெரியும்னு பில்டப்பா? எனக்கு கராத்தே, குங்ஃபூ எல்லாமே அத்துப்படி. உன் அண்ணனை சாச்சு காட்டுறேன் பார்”
“அவர் தங்கச்சிய உன்னால சாய்க்க முடியல. இதுல அவரை சாய்க்க போறியா?” சிலுப்பிக் கொண்டாள் அவள்.
“ரொம்பத் தான் பேசுற. நான் சாய்ச்சா, சாய்க்குற விதத்துல நீ எந்திரிக்க முடியாது பார்த்துக்க. அப்படியே உன்னை சாய்ச்சு வெச்சு இங்கிலீஷுக்கும் மேல சைனீஸ், ஜப்பானிஷ் முத்தம் எல்லாம் கொடுத்துடுவேன்” அவளின் கன்னத்தைப் பிடித்து நெருக்கியவனுக்கு உள்ளுக்குள் இருந்த காதல் கட்டுப்பாட்டை மீறி வெளிவந்தது.
தொடரும்…….!!
தனு, கார்த்திக்கும் சின்னதா ஒரு சீன் கொடுக்கலாமேனு நெனச்சேன். எப்படி இருந்துச்சு?
ஷம்லா பஸ்லி