வாடி ராசாத்தி – 14
அன்று இரவு வீட்டிற்கு வந்த கேபியை தன் அறைக்கு அழைத்தார் ஞானம். ஜெயந்தி கூறிய அனைத்தையும் அவர் சொல்ல, வெகுண்டு எழுந்தான் கேபி.
பெரியம்மாக்கு நீங்களே பதில் சொல்லி இருக்கணும் பா, அன்னைக்கு எனக்கு சாதகமாக பேசினீங்க….இப்போ மாத்தி பேசறீங்க….? அவன் கோபம் கண்டு நல்லவேளை அம்ரிதவல்லி பற்றி ஜெயந்தி சொன்னதை சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டார் ஞானம்.
“நந்து, விஜி எல்லாம் நினைச்சா எனக்கும் ஏன் புதுசா இப்போ நாம இதெல்லாம் செய்யணும்னு தோணுது? பெரியம்மா பயப்படுற மாதிரி ஏதாவது தப்பா போய்ட்டா….?”
“இந்த விஷயம் ரெண்டு குடும்பத்துக்கும் பாலமா தான் மாற போகுதே தவிர தடுப்பு சுவரா இல்லை….இப்போ உங்களுக்கு புரியாது பா….”
“அதுக்கு கல்யாணம் தான் செய்யணும்மா? வாழ்க்கை டா….”
“ஆமா, என் வாழ்க்கையை என்னை வாழ விடுங்க பா, என்னோட இந்த முடிவால என்ன பிரச்சனை வந்தாலும் நான் சமாளிச்சுக்கிறேன்…. அம்மு மட்டும் தான் நான் இதுவரை விரும்பினது, வேண்டினது எல்லாம்!”
அவன் அப்படி சொன்னதும் அமைதியாகி விட்டார் ஞானம். அதற்கு மேல் என்ன பேசுவது?
கடுகடுவென்று ஞானத்தின் அறையில் இருந்து செல்லும் கேபியை திருப்தியாக பார்த்தார் ஜெயந்தி. நிச்சயம் ஞானம் அவனிடம் உறுதியாக சொல்லி இருப்பார் அதனால் தான் இப்படி போகிறான் என்று சந்தோஷப்பட்டு கொண்டார்.
கேபி அவன் அறைக்குள் சென்றதை உறுதி படுத்தி கொண்டு, வேக வேகமாக சென்று ஞானத்தின் முன் நின்றார் ஜெயந்தி. அவரை கண்ட ஞானம்,
“நாம செய்றதுக்கு ஒன்னுமில்லை, அவன் முடிவு பண்ணிட்டான்…. விஜி கிட்ட நான் பேசுறேன்….” என்றதோடு அமைதியாக படுத்து கொண்டார்.
கேபி, ஞானத்தின் மீது ஆத்திரம்….
அம்முவின் குடும்பத்தின் மீது வெறுப்பு….
அம்முவின் மீது துவேஷம்….
இன்னும் என்னெல்லாம் எதிர்மறை எண்ணங்களோ அத்தனையும் வந்தது ஜெயந்திக்கு. கண்ணை மூடிக் கொண்டு படுத்து இருக்கும் ஞானத்தை வெறுப்பாக பார்த்து,
“இதே உங்க காரியம்னா எந்த எல்லைக்கும் போய் செய்வீங்க…. எனக்கு தானே…. சரி நானே எப்போதும் போல பார்த்துக்கிறேன்…. எனக்கு தெரியும் என்ன செய்யணும்னு….” என்று கசப்பாக பேசி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.
வெளியே வந்தவரை, எதிர்கொண்டார் முருகர். அவரை அந்நேரத்தில் அங்கே எதிர்பார்க்காமல் கண்டதில் ஆச்சரியமாக அதே சமயம் நக்கலாக பார்த்தார்.
“இங்க பாரு ஜெயந்தி, நம்ம வாழ்க்கை முடிஞ்சுது…. சின்னதுகளை சந்தோஷமா வாழ விடு…. உன் இஷ்டபடி நடந்துக்காதே இப்போவும்…. போதும் நீ மத்தவங்களுக்கு கொடுத்த கஷ்டம்….”
“நீ வாயை மூடு…. உன்னால தான் என் வாழ்க்கையே போச்சு…. நீ பேசாத….எப்போவும் போல் மூலையில் போய் உட்காந்து இந்த வீட்டில நடக்கிறதை வேடிக்கை பாரு….” அவரை முடிந்தவரை அவமானபடுத்திவிட்டு சென்றார் ஜெயந்தி.
ஜெயந்தி பேசியது அவருக்கு வலிக்கவில்லை, அவருக்கு துணிவு இல்லாத ஒரே காரணத்தால் எவ்வளவு நடந்து விட்டது…. இப்போது அது சின்னஞ்சிறுசுகளை பாதித்து விடுமோ என்று அஞ்சினார். அதே சமயம் இல்லை இல்லை, கடந்த போனவை போனதாக இருக்கட்டும், இனியும் யாருக்கும் எந்த தீங்கும் நடக்க விடமாட்டேன்…. அம்ரிதவல்லி…. என் சாமியே…. நீ இங்க தான் இருக்கேனு எனக்கு தெரியும்…. எனக்கு துணையா இரு…. நம்ம பிள்ளைங்க நல்லா சந்தோஷமா இருக்கட்டும்! மனசார அழுத்தமாக சொல்லிக் கொண்டார் முருகர். எங்கேயோ யாரோ பட்டாசு வெடித்தார்கள்…. மென்முறுவல் பூத்தார் முருகர். அம்ரிதவல்லிக்கு பட்டாசு என்றால் அத்தனை இஷ்டம்…. அவளின் இருப்பை உணர்த்துகிறாளா?
மறுநாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பொழுது புலர்ந்தது.
அன்று அதிகாலையிலேயே கிளம்பி வெளியே சென்றுவிட்டார் செல்வராஜ். நாராயணன் கொடுக்கும் பிரச்சனைக்கும் தீர்வு தேடி அவரின் நெருங்கிய நண்பரை சந்திக்க திருப்பூர் சென்றார்.
ஜெயந்தியின் வன்மம் அவரை நிலைகொள்ளாமல் தவிக்க விட, நேரயாய் கிளம்பி அம்முவின் வீட்டிற்கு சென்றார். கேபி சென்றதற்கு கோபப்பட்டவர், இப்போது எதை பற்றியும் கவலைப்படவில்லை, யாரை பற்றியும் கவலைப்பட வில்லை. தன் மனதில் இருப்பவைகளை இறக்கி வைக்க வேண்டும் அவருக்கு. காலை உணவு முடிந்து, வாசுகி மற்ற வேலைகளை பார்த்து கொண்டு இருக்க, தாத்தா பாட்டி ஓய்வாக இருந்தார்கள். கொஞ்சமும் ஜெயந்தியை எதிர்பார்க்காதவர்கள் கொஞ்சம் திகைத்து தான் போனார்கள்.
அம்மு அப்போது தான் தன் வண்டியை எடுத்து வருவதாக சொல்லி சென்றிருந்தாள்.
“அடடா வாங்க மேடம், வண்டி வேணுமா….?” அம்முவை ஆரவாரமாக வரவேற்றான் கேபி.
“அப்பறம் உங்க ஆபிசில் எனக்கென்ன வேலை?”
“என்ன இப்படி சொல்லிட்டே…. இனிப்பை தேடி எறும்பு வர்றது சகஜம் தானே….?”
“நீ இனிப்புனு யாரு பா சொன்னா உன்கிட்ட?”
“என்கிட்ட கொஞ்சம் க்ளோஸா வந்து பாரு செல்லம், நான் எவ்ளோ இனிப்பு, நாம எவ்ளோ தித்திப்புனு தெரியும்….” கொஞ்சியது கேபியின் குரல்.
“ஏன், நான் உன்கிட்ட க்ளோஸா வந்து நான் மொத்தமா க்ளோஸ் ஆகவா…. நல்ல ஆளுடா நீ….!”
“ஏய்…..! லூசு….” என்றவன் பட்டென்று அவளை நெருங்கி அவள் வாயில் ஒரு அடி வைத்தான். “இந்த மாதிரி ஏதாவது உளறினே, பிச்சுடுவேன் ராஸ்கல். இந்தா உன் வண்டி சாவி, எடுத்துக்கிட்டு கிளம்பு….” என்று அவளை ஏறெடுத்தும் பாராமல் அவன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.
“ஹலோ என்ன ரொம்ப ஓவரா பண்ற….?”அவனுக்கு சாவை பற்றி பேசினால் பிடிக்காது என்று தெரியும்… ஆனால் விளையாட்டு பேச்சிற்கு கூடவா என்று கோபம் வர அவனை திட்டினாள்.
“யாரு நானா….? நீயெல்லாம் லவ் பண்ண லாயக்கு இல்லைனு தெரிஞ்சுடுச்சு எனக்கு. கிளம்புடி நீ உன்னை கல்யாணத்தன்னைக்கு பார்த்துகிறேன்….கிளம்பு கிளம்பு….”
“பண்டினு கூப்பிடுறதால நீ பண்டிதன் இல்லை பா…. நீ ஒரு லூசு….நீ மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு முடிவு பண்ணா போதுமா….? எல்லாம் உன் இஷ்டம் இல்லை…. புரியுதா….?”
“அப்படியா…. சரி இன்னையில இருந்து நீயும் என்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணிடு…. பிராப்ளம் சால்வ்டு….சிம்பிள்….”
“அடப்பாவி…. நீ முடிவு பண்ணினத்துக்கே பிரச்சனையே இல்லாம பிரச்சனை ஆயிட்டு இருக்கு….இதில நானும் முடிவு பண்ணா சுத்தம்…. நல்லா வருவே டா ராஜா நீ….”
“எல்லாத்தையும் சரி பண்ணுவோம்டி….”
“அடேய்….பிரச்சனை ஆக்கினதே நீ தாண்டா….”
“என் கனவுகளை ரொம்ப நாள் காக்க வைக்கிற பழக்கம் எனக்கில்லை….”
“நான் கிளம்புறேன், இது வேலைக்கு ஆகாது….”
“இதோட முடிவு ஒன்னே ஒன்னு தான்…. மூளையை தயார் பண்ணிக்க, உன் மனசு ஆல்ரெடி கரெக்ட்டான பாதையில் தான் இருக்கு….”
அவனுடன் இழையும் அவளின் மனதை வைத்து சொல்கிறான் என்று புரிய, அதற்கு பதில் சொல்லாமல்,
“எங்க அப்பாவை கஷ்டப்படுத்தி நான் ஏன் இந்த கல்யாணம் பண்ணிக்கணும்…. சொல்லு….?” என்றாள். அதற்கு கேபி பதில் அளிக்கும் முன்பே அம்முவின் தொலைபேசி அவளை அழைத்தது. வாசுகி அழைப்பதால், உடனே எடுத்தாள். அவர் அந்த பக்கம் பேச பேச அம்முவின் முகமெல்லாம் கோபத்தில் சிவந்து போனது. எதுவும் பேசாமல் கேட்டு முடித்து விட்டு, “நான் இதோ வரேன்மா வீட்டுக்கு….” என்று அழைப்பை துண்டித்து விட்டு, கேபியிடம்,
“உன்னால எங்களுக்கு இன்னும் என்னெல்லாம் மனக்கஷ்டம் வரப்போகுதோ தெரியலை…. உன்னை திட்ட முடியாத உன் பெரியம்மாக்கு எங்களை திட்ட என்ன உரிமை இருக்கு….? அவங்க யார் எங்க வீட்டுக்கு வந்து எங்களை பேச….?”
“என்ன பேசினாங்களாம்….?”
“உன்னை கல்யாணம் பண்ணிக்க அவங்க பேத்தி இருக்காம், நாங்க தேவையில்லாம ஆசைப்பட கூடாதாம்…. நாங்களா….” அவள் பேசுவதை குறுக்கிட்டவன்,
“சிலநேரம் யார் என்ன பேசுறாங்கனு எல்லாம் கண்டுக்க கூடாது…. நமக்கு என்ன வேணும்னு தான் பார்க்கணும்….” அமைதியாக சொன்னான் கேபி.
“நீ சொல்லுவே எல்லாம் ஈசியா, அவங்க அவங்களுக்கு வந்தா தான் தெரியும் எல்லாம் கஷ்டமும்….”
“சரி உன் இஷ்டம், உனக்காக நான் காரணம் கண்டுபிடிச்சு கொடுக்க முடியாது…. என்னவேணா பண்ணிக்க…. என்னால என்ன முடியுமோ நான் அதை பண்றேன்….” மேற்கொண்டு பேச முடியாமல் அவனுக்கு முக்கியமான அழைப்பு வர, அவளுக்கு கை ஆட்டிவிட்டு மீட்டிங் ரூமில் நுழைந்து கொண்டான்.
சுருசுரு வென்று ஆத்திரம் பொங்கியது அவளுக்கு. அவன் பெரியம்மா செய்தது தவறு என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே…. எங்களுக்கு என்ன தலையெழுத்து கண்டவங்க கிட்ட பேச்சு வாங்க…. பொருமினாள் அம்மு. ஜெயந்திக்கு நன்றாக திருப்பி கொடுக்க மனம் தவித்தது.
*********
“வீட்டிற்கு வந்த அம்மு, நீ எப்படிமா சும்மா விட்டே….? நம்ம வீட்டுக்கே வந்து நம்மளையே குறைவா பேசி இருக்காங்க…. நல்லா கேட்டு அனுப்பாம விட்டுட்டியா….?”
“இல்லடி, தாத்தா நல்லா பேசி தான் விட்டார்.”
ஜெயந்தி, தங்களுக்கு தான் உரிமை அதிகம், புதிதாக நீங்கள் குறுகிக்கிட்டு ராஜாவின் மனசை கலைக்காதீங்க என சொல்ல, ஒன்னு விட்ட அக்கா மகளை விட சொந்த மாமன் மகளுக்கு தான்மா உரிமை ஜாஸ்தி என்றார் சொக்கலிங்கம்.
“அவ்ளோ முக்கியமான உரிமையான சொந்தம்னா, இத்தனை வருடம் எப்படி இருந்த இடம் தெரியாம போச்சு….” நக்கலாக ஜெயந்தி பேச,
“உங்க வீட்டில் பெரியவங்களை விட என் பேரனுக்கு உறவோட முக்கியத்துவம் தெரிஞ்சு இருக்கு…. மாமன் வீட்டுக்கு எவ்வளவு மரியாதை தரணும்னு தெரிஞ்சு, புரிஞ்சு உங்களை மாதிரி கண்டுக்காம இருக்காம தேடி வந்து மரியாதை செஞ்சான். எங்க மனசை குளிர்விச்ச அவனுக்கு பதில் மரியாதையா அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்கணும்ல்ல…. அது தானே நியாயம்….? அவன் கேட்கிறதை நாங்க செய்வோம், நீங்க எது சொல்றதுனாலும் உங்க வீட்டுல கலந்துபேசுங்கள்…. நியாயமா எங்க கிட்ட பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை…. எங்க மாப்பிள்ளை வந்திருந்தா கூட பரவாயில்லை….” நீ வந்ததே தப்பு என்று சொல்லிவிட்டார் தாத்தா.
கேபியின் நடவடிக்கைனால் தான் இவர்கள் தைரியமாக இப்படி பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்ட ஜெயந்தி எதையும் முகத்தில் காண்பித்து கொள்ளாமல்,
“எங்க பேத்திக்கும் பேரனுக்கும் கல்யாண பத்திரிக்கை கொடுக்க உங்க மாப்பிள்ளை கண்டிப்பா வருவார்” என்று அப்போதும் கெத்தாக சொல்லி விட்டு கிளம்பினார்.
அங்கிருந்தது சென்ற உடனேயே மகளை அழைத்த ஜெயந்தி, நந்துவை உடனடியாக காங்கேயம் அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். மாப்பிள்ளை கிட்ட நான் பேசுறேன் என்று சிவகுமாரிடமும் பேசி சரி செய்தார். காலேஜாவது ஒன்னாவது, இங்க வாழ்க்கை என்ன ஆக போகுது தெரியலை, ஒழுங்கா வந்து சேரு என்று வரமாட்டேன் என்று சொல்லிய நந்துவிற்கு இரண்டு திட்டு விழுந்தது.
மாலை அலுவலகத்தில் இருந்து வந்த கேபி நந்துவை கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.
“ஹேய், இங்க என்ன வேலை உனக்கு இப்போ? காலேஜ் லீவ் கூட இல்லையே….?”
“இல்லை…. மாமா…. அது பாட்டி தான்….”
“நான் தான் வரசொன்னேன் ராஜா, கல்யாணம் ஆக போகுது, எல்லாம் சொல்லி கொடுக்கணும்ல்ல….”
“அவளுக்கு நாம இப்போ கல்யாணம் பண்ணலை பெரியம்மா….”
“எப்படியும் பண்ணுவோம்ல, நான் இன்னும் எவ்ளோ நாள் இருப்பேனோ தெரியாது….”
“அதெல்லாம் நீங்க ரொம்ப நாள் இருப்பீங்க….”
“அவங்க கரெக்ட்டா தான் சொல்றாங்க…. வயசு ஆய்டிச்சுல்ல அத்தைக்கு….”
யாருடா அது என்று மூவரும் திரும்பி பார்க்க, வந்தது அம்மு!! இனிய அதிர்ச்சிக்கு உள்ளானான் கேபி. இங்கே வருவது தப்பா சரியா என்று குழம்பி கொண்டு வந்த அம்முவிற்கு அவன் முகத்தில் தெரிஞ்ச மலர்ச்சி கண்டு அத்தனை ஆனந்தம். கேபியின் மகிழ்ச்சி கண்டு நந்துவின் மனம் கொஞ்சமாக வாடி தான் போனது. ஜெயந்திக்கோ தாளவில்லை…. அவ்வளவு பிடித்தமா அவள் மீது என்று வன்மம் கொண்டார்.