💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 89
வாசலில் அமர்ந்திருந்த மகிஷாவுக்கோ வாயிலை நோக்கியதும் கண்கள் அகல விரிந்தன. அங்கு நின்ற நந்திதாவைப் பார்த்து “அக்கா” என்றழைக்க, பெற்றவர் பார்வையும் அப்புறம் நோக்கின.
எழிலழகனுடன் தான் வந்திருந்தாள் நந்திதா. அவள் தயங்கி நிற்க, கணவனை ஏறிட்டார் ஜெயந்தி.
மகளை அழைக்க வேண்டும் போல் இருந்தது அவருக்கு. யாரோ போல் அவள் தயக்கம் கொள்வது தாயானவளுக்குப் பொறுக்கவில்லை.
“எதுக்கு என்னைப் பார்க்கிற? வரச் சொல்லு. வாசப்படி வரை வந்தவளுக்கு உள்ளே வர என்னவாம்?” மனைவியிடம் கடுமையாக சொன்னார் மாரிமுத்து.
“அப்பாஆஆஆ” அழுது கொண்டே அவரது அருகில் வந்தவளுக்கு அவரது அனல் பார்வையில் உள்ளம் குமைந்தது.
“அழாத நந்து! நந்தும்மா” எழில் அவளது கையைப் பிடிக்க, “அழுகையை நிறுத்தச் சொல்லு முதல்ல. இது ஒன்னும் இழவு வீடு கிடையாது” அவர் மீண்டும் மனைவியிடம் சொல்ல,
“அழாத நந்து. அப்பா சொல்லுறார்ல. அவர் பேச்சை இப்போவாவது கேட்கலாமே” என்றாள் மகி.
அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள் நந்து. அவளுக்கோ தந்தையைப் பார்க்கும் போது தாங்க முடியவில்லை.
“கால் எப்படி இருக்குப்பா?” தடுமாற்றத்துடன் கேட்டாள் அவள்.
“காலுக்கு எதுவானாலும் சரியாகிடும். மனசைப் போல இல்லையே அது. மனசுல வர்ற காயத்தைத் தான் காட்டிக்கிட்டு திரியவும் முடியாது, மருந்து போட்டு ஆத்தவும் முடியாது. பெத்தவங்க மனசு உங்களுக்குப் புரியாது இல்லையா?” நேரடியாகக் கேட்டு விட்டார் மாரிமுத்து.
அவரது மனக்கலக்கம் அது. ‘உங்க மகள் ஓடிப் போயிட்டாளாமே, வளர்த்த லட்சணம் இதானா?’ ஏச்சுகள் சரமாரியாக விழுந்தன. ‘இன்னும் என்ன கோபம் அவருக்கு? மாப்பிள்ளை நல்ல பையன் தானே சேர்த்துக்கலாமே’ எத்தனை அட்வைஸ் அவருக்கு. சமூகத்தில் பேருடன் திகழ்ந்தவருக்கு கிட்டிய அவமானம் கொஞ்சமா நஞ்சமா? இதையெல்லாம் எளிதில் மறந்து விட முடியுமா?
“நான் பண்ணுனது தப்புத் தான்பா. என்ன பண்ணுனாலும் அதுக்கு பரிகாரம் தேட முடியாது. என்னால உங்க கூடல்லாம் பேசாம இருக்க முடியல. எதையோ இழந்த மாதிரி வாழுறேன். என் கூட பேசுங்கப்பா. எனக்கு வேறு எதுவும் கேட்கத் தெரியல” கரம் கூப்பிக் கெஞ்சினாள் நந்து.
“பேச முடியாதுன்னா உன்னை வீட்டுக்குள்ள விட்டிருக்க மாட்டேன். இனி உன் இஷ்டப்படி வரலாம், இவங்க கூட பேசலாம். நீ சந்தோஷமா இரு. உனக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கனுமே” எவ்வளவு முயன்றும் அவரால் மென்மையாகப் பேச முடியவில்லை.
அவளுக்கோ அழுகையாக வந்தது. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது இதனைத் தானா? அவர் மன்னித்தாலும் அந்த மன்னிப்பே அவளுக்கு தண்டனையாக இருக்கப் போகிறது என்பது புரிந்தது.
வினை விதைத்தவன் வினை அறுப்பான் அல்லவா?
அவள் விதைத்த வினையை இதோ அவளே அறுவடை செய்கிறாள், அளவில்லா துக்கத்தைச் சுமந்து.
“என் மனசுல இருக்கிற ஆதங்கத்தைக் கொட்டனும்னு தோணுது. ஆனால் எனக்கு இப்படி பேசுறது கூட கஷ்டமா தான் இருக்கு. நீ அவங்க கூட பேசு” கண்களை மூடிச் சாய்ந்து கொண்டார் மாரிமுத்து.
“ஏன் டி நந்து இப்படி பண்ணுன?” என்ற ஜெயந்தி, “நீங்களாவது சொல்லி இருக்கலாமே தம்பி. இவ தான் புத்தி கெட்டு கூப்பிட்டா நீங்களும் போவீங்களா?” எழிலிடம் தன் உளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.
அவனோ எதுவும் பேசாமல் மௌனிக்க, “நான் போறது அவருக்கு தெரியாதும்மா. வீட்டில் பேசுறேன்னு சொல்லியும் நான் தான் மறுத்தேன். நான் போன பிறகு அவர் வந்து கோபப்பட்டார். இந்த விஷயத்தில் அவர் குற்றம் எதுவும் இல்லம்மா. எல்லாம் நான் பண்ணுனது தான்” எழிலை விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.
அது உண்மையும் கூடவே. அவன் சொல்லவில்லை. அவள் தானே சென்றாள்?
“எனக்கு தெரியும் இந்தப் பையனைப் பற்றி. அவனும் நல்லா பழகி துரோகம் செஞ்சுட்டானேனு நெனச்சேன். ஆனாலும் அவன் குணம் அதை இல்லாம பண்ணிடுச்சு. எழில் பற்றி உங்களை விட நான் அறிவேன்” என்று மாரிமுத்து சொல்ல,
“அது சரி. நீங்க எல்லாம் நல்லா நெனச்சிட்டு எங்களை மட்டும் பேச விடாம பண்ணிட்டீங்க” ஜெயந்தி தாடையைத் தோளில் இடித்துக் கொள்ள,
“ஏன்டி நான் பேச வேண்டாம்னு சொன்னேனா? பேசுறப்போ பேசுவேன்னு ஜானு சொன்ன மாதிரி நீங்க யாரும் என் கிட்ட தைரியமா சொல்லல. அவ மாதிரி இனிமே உண்மையைப் போட்டு உடைக்க கத்துக்கங்க. அதுவே பாதி கஷ்டத்தை இல்லாம பண்ணிரும்” என்றார் அவர்.
மகிக்கு உள்ளுக்குள் திக்கென்றது. அவளும் மறைக்கிறாளே. காதல் கொண்ட இதயத்தை இழுத்துப் பிடித்து சிறை வைத்திருக்கிறாளே. அதனை எண்ணி ஒரு பக்கம் படபடப்பாக இருப்பினும், மறு பக்கம் இது தன் குடும்பத்திற்காகத் தானே என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.
“நீங்க வந்து உட்காருங்க. சாப்பிட்டு போகலாம்” என்று ஜெயந்தி அழைக்க, “நான் ஸ்கூல் போகனும் அத்தை. அப்பாவைப் பார்க்கப் போகனும்னு அவர் விழுந்ததுல இருந்து அப்செட்டாவே இருந்தா. அதனால தான் என்னவானாலும் பரவாயில்லைனு கூட்டிட்டு வந்தேன். நந்து இருக்கட்டும். நான் போயிட்டு வர்றேன்” அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான் எழில்.
“நீயும் ஏதோ சமையல் க்ளாஸ் போறியாமே. என்னெல்லாம் கத்துக்கிட்ட?” என்று ஜெயந்தி கேட்க, “நிறைய ரெசிபி கத்துக்கிட்டேன் மா. அன்னிக்கு போட்டி மாதிரி வெச்சாங்க. அதுல நான் தான் வின் பண்ணுனேன். புது அடுப்பு ஒன்னு கிஃப்ட் கெடச்சுது” மகிழ்வுடன் சொன்னாள் நந்திதா.
அவளின் குரலில் இருந்த ஆனந்தம் மாரிமுத்துவுக்கு இதமாக இருந்தது. அவளுக்குப் பிடித்ததை அவர் மறுத்தாரே. இன்று அவள் அதில் இன்பம் அடைகிறாள் என்பது அவர் வலிகளுக்கு மருந்திடுவதாய். கண்கள் மூடிய நிலையிலேயே நெடுநாட்களாக கேட்க மறந்த மூத்த மகளின் பேச்சைக் கேட்கலானார் அவர்.
……………..
லெக்சர் ஹாலில் இருந்து வெளியே வந்த மகி, விடாமல் அடித்துக் கொண்டிருந்த அலைபேசியை காதில் வைத்தாள்.
“என்ன வேணும்?” இவள் கடுமையாகக் கேட்க, “அய்ம் சோ ஹேப்பி மகி! உன் கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லலாம்னு வந்தேன்” ரூபனின் குரலில் குதூகலம் கொட்டிக் கிடந்தது.
“என்னாச்சு?”
“ஆக்சிடன்ட்ல ஒரு சின்னக் குழந்தை நல்லா சீரியஸா வந்தானு அன்னிக்கு சொன்னேனே. நீ கூட அந்தப் பிள்ளை பற்றி அடிக்கடி கேட்பியே. இன்னிக்கு அவளுக்கு முழுசா குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி போனா. எனக்கு அவ்ளோ ஹேப்பி. என் கிட்ட வந்து அவளும் பெருசானா இந்த மாதிரி நிறைய பேரை காப்பாத்துற டாக்டரா மாறனும்னு சொல்லிட்டு போனா. இதை உடனே உன் கிட்ட சொல்லனும்னு தோணுச்சு” படபடவென பேசிக் கொண்டே சென்றான் ரூபன்.
“தாங்க் காட்! எனக்குமே ஹேப்பியா இருக்கு” அவளையும் அம்மகிழ்வு தொற்றிக் கொண்டது.
“சாப்பிட்டியா மகி?” அவன் கேட்டதும் தான் அவளுக்குப் பசி என்ற உணர்வே வந்தது.
“காலையில் லேட் ஆச்சுனு வந்துட்டேன். இனி தான் சாப்பிடனும். நீங்க கேட்கவும் தான் பசியே வருது” கேன்டீன் நோக்கி நடை போட்டாள் மகிஷா.
“இதுக்கு தான் ரூபன் வேணுங்குறது. உன்னைப் பார்க்கனும் போல இருக்கு மகி. வீடியோ கால் வரியா?” அவன் ஆர்வத்துடன் கேட்க, “அதெல்லாம் வேண்டாம்” உடனடியாக மறுத்தாள்.
“ஏன் வேண்டாம்?”
“இல்லாதது இல்லாததாவே இருக்கட்டும். மறுபடி ஆரம்பிக்க தேவையில்லை”
“என்னடி இல்ல? இல்லாதது பொல்லாததுனு உன் வாய் தான் பேசுதே தவிர, மனசு இல்ல. உன்னால என்னை விட்டு வாழ முடியாது. நீ இல்லனு எவ்ளோ சொன்னாலும் அதான் உண்மை” அவனுக்கும் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.
“ரூபன்! நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்க. என்னை மறந்துடுங்க” அவள் கெஞ்சும் குரலில் கேட்க, “ஜஸ்ட் ஷட் அப் மகிஷா…!!” அவனது கர்ஜனையில் இந்தப் புறம் நின்றவள் நடுங்கிப் போனாள்.
“உன்னால என்னை மறக்க முடியுமாக இருக்கலாம். அதனால தான் நீ இவ்ளோ ஈசியா சொல்லுற. ஆனால் என்னால உன்னை மறக்க முடியாது. அதைப் பற்றி நெனச்சு கூட பார்க்க முடியாது.
உன்னை ப்ளாக் மெயில் பண்ண மாட்டேன். உன் வாழ்க்கையில் தலையிட மாட்டேன். கேள்வி கேட்க மாட்டேன். எப்படி வேணா முடிவெடுத்துக்க. என் முடிவையும் கேட்டுக்க. என் முடிவு வரை உன்னைத் தவிர யாரையும் நினைக்க மாட்டேன்” அவனது வார்த்தைகள் காதலின் வலிமைப் பறை சாற்றின.
“அய்யோ ப்ளீஸ்ங்க! உங்களை அப்படி வெச்சுட்டு நான் எப்படி இருக்கிறது? என்னைப் புரிஞ்சுக்கங்க”
“இங்கே புரிஞ்சுக்காம இருக்கிறது நீ தான். இந்த விஷயத்தில் நீ சொல்லுவதைக் கேட்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. உனக்கு வேணும்னா இன்னொருத்தனைக் கட்டிக்க. அதில் நான் குறுக்கிட மாட்டேன். ஆனால் நான் யாரை நினைக்கனும், கூடாதுன்னு சொல்ல உனக்கு ரைட்ஸ் இல்ல” அவனும் பிடிவாதக்காரன் தான் என்பதைக் காட்டினான்.
அவளுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் குடும்பம். காதல் வேண்டும் என்றால் அனைத்தையும் இழந்து விடுவாள். மாற்றமாக காதலை இழக்க எண்ணினாள்.
அதில் அவள் மட்டும் இழந்தால் பரவாயில்லை. அவனும் தன் வாழ்வை இழந்தால் அந்த எண்ணமே தன்னைக் கொன்று விடாதா என்றிருந்தது.
“நீ என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம். உன் வாழ்க்கை எதுவோ அதைப் பார். உனக்கான முடிவை எடு. ஆனால் அது உன்னைப் பாதிக்காம இருக்கனும். உன் முடிவால நீ சந்தோஷத்தை இழந்தா, அதனால எந்தப் பயனும் இல்லை. வாழுறது முக்கியம் இல்ல மகி! சந்தோஷமா வாழனும். மனசுக்குப் பிடிச்சு வாழனும். நமக்கு எது வேணுமோ அதைத் தேர்ந்து எடுக்கனும். அவ்வளவு தான்”
காதல் வேண்டாம். விலகி விடு என்பவளிடம் இதை விட விளக்கம் சொல்ல அவன் தயாராக இல்லை. அவளிடம் கெஞ்சிக் கொஞ்சி காதலைத் தூண்டி விடவும் அவனுக்கு மனம் இல்லை.
அவளாக அறிய வேண்டும். தன் காதல் இல்லை என்றால் அவளால் இருக்க முடியாது என்பதை உணர வேண்டும். இல்லாமல், அவள் ஒரு நிலையில் இருக்க மாட்டாள் என்பதில் உறுதியாக இருந்தான்.
எனினும் அவளின் முடிவால் அவள் அவளை இழந்து விடுவாளோ என்பதுவே அவனுக்குப் போராட்டமாக இருந்தது.
“ஒரு வரன் வந்திருக்குனு அப்பா அம்மா கிட்ட பேசிட்டு இருந்தாராம். என் கிட்ட எதுவும் சொல்லல. என்ன நடக்குமோ தெரியல. அவர் கேட்டா நான் மறுப்பு சொல்ல மாட்டேன்” அவள் அழைப்பைத் துண்டித்து விட,
“மகீஈஈஈஈ” என்ற அவனது அழைப்பு காற்றோடு கரைந்து கலந்து போனது.
தொடரும்…….!!
ஷம்லா பஸ்லி