9.சிறையிடாதே கருடா

5
(6)

கருடா 9

“ஹலோ!”

“என்னடி?” எனப் பற்களை நரநரத்தான் கருடேந்திரன்.

“நீ பாட்டுக்குப் போற. என்னை யாரு, உங்க அப்பா சத்தியராஜ் வந்து தூக்கிட்டுப் போவாரா?”

“உனக்கு அவ்ளோ தான் மரியாதை.”

“மரியாதையை வச்சுக்கிட்டு நான் என்னடா பண்ணப் போறேன்…”

“ஏன்டி, உன் வாய் என்ன பெட்ரோல் டேங்க்கா? வாயத் தொறந்தாலே குபுகுபுன்னு பத்திகிட்டு வார்த்தை வருது.”

“நீ சரிப்பட்டு வர மாட்ட.” எனக் கைப்பேசியை எடுக்கும் மனைவியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவன்,

“இப்ப என்ன தான்டி பண்ணனும்?” கேட்டான்.

“தூக்கிட்டுப் போடா…”

“மரியாதையாப் பேச உங்க அப்பா பொன்வண்ணன் சொல்லித் தரலையா?”

“அந்த ஆளால தான், உன் கூட இப்படி மல்லுக் கட்டிட்டு இருக்கேன்.”

“இந்த வார்த்தையை நான் சொல்லணும்.”

“என்னைத் தூக்கிட்டுப் போய் மேல விட்டுட்டு பொறுமையா சொல்லிக்க.”

“கால் நல்லாத்தான இருக்கு.”

“ஆமா…”

“நடந்து வா…”

“அதெல்லாம் இனிமே நடக்காது. எனக்கு என்ன தேவையா இருந்தாலும் நீ தான் செஞ்சு தரணும். இல்லன்னா உங்க அம்மாக்கு போன் போட்டு என்ன புள்ளைய வளர்த்து வச்சிருக்கீங்கன்னு கேட்பேன். அவங்க அவமானம் தாங்க முடியாம…”

“வாய மூடு!” என்றவன் குரலைக் கேட்டு வெளியில் வந்தார் பொன்வண்ணன்.

மருத்துவமனையில் இருந்தவரைக் கண்டமேனிக்குத் திட்டியவள், “நேத்து வந்தவன் சொன்னான்றதுக்காக, எல்லாரையும் வேலைய விட்டு நிறுத்தி இருக்கீங்க. புள்ள, தப்புப் பண்ணான்னு தெரிஞ்சதுமே கண்டிச்சிட்டுப் போறாங்களே, அவங்க தான் நல்ல பெத்தவங்க. இனி எங்களுக்குள்ள என்ன நடந்தாலும் தலையிடாதீங்க. இது அவனா, நானா? என்ற போர். இதுல ஜெயிக்கிற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது. உண்மையைக் கண்டுபிடிச்சு அவன் மூஞ்சில கரியப் பூசி உங்க வாயாலயே வெளிய போன்னு சொல்ல வைக்குற வரைக்கும் வாயத் தொறக்காதீங்க.” என்று விட்டாள் முடிவாக.

வந்து நின்றவர் சிலை போல் அப்படியே நின்று கொண்டிருக்க, “உன்னோட வீக்னஸ் பாயிண்ட்டைப் புடிச்சி ரொம்ப நேரம் ஆகுதுடா. தேவை இல்லாம அதை இன்னும் பலவீனமாக்கிக்காம என் கை அசைவுக்கு ஆடுற அடிமையா இருந்துட்டுப் போ. இப்போல இருந்து எனக்கான எல்லாத் தேவையும் நீ தான் செஞ்சு தரணும்.” என்றவள் அமைதியாக நின்று கொண்டிருக்கும் தந்தையை ஓர விழியில் பார்த்துக் கொண்டு,

“டிரைவரையா வேலைய விட்டுத் தூக்குன, இனி நீ தான்டா எனக்கு டிரைவர்.” என்றாள்.

“உன்னோட வீக்னஸ் பாயிண்ட் இப்ப என் உள்ளங்கையில. அதுல ஆட்டி வைக்கப் போய்தான் இந்த நிலைமையில நிக்கிற. யாரு யாருக்கு அடிமையா இருக்காங்கன்னு போகப் போகத் தெரியும்.”

மெச்சிக் கொள்ளும்படி ஒரு பார்வை பார்த்தவள் மேல் விழி அசைத்து வாவென்று அழைக்க, இமைகளை அசைக்காது திடமாக நடந்து வந்தவன் அவளை உரசிக்கொள்ளும் இடைவெளியில் நின்றான். சிறிதும் சலனம் கொள்ளாது அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவளைக் கண்ணால் சிறைப்பிடித்தவன், சின்னதாக இடது பக்கம் இதழை இழுத்துச் சிரித்தான். அதைக் கவனித்துக் கொண்டிருந்தவள் அவன் மீதான பார்வையை அகற்றிக் கொள்ளாமல் வலது பக்கமாக இதழை வளைக்க, அங்கு நின்று கொண்டிருந்தவர் நிலை பரிதாபத்திற்குரியதானது.

விழியோரம் ஏற்பட்ட காயத்தால் சற்று வீங்கி இருக்கும் அந்த அதிகாரத்திற்கான கண்களை மெல்ல ஊடுருவியவன் கையைப் பற்றினான். ஆடவன் உள்ளங்கை இத்தனைக் கரடு முரடாக இருக்கும் எனச் சற்றும் எதிர்பார்க்காதவள், விழி மூலம் அதனை உறுதி செய்து அப்படியே நின்றிருந்தாள். பற்றிய உள்ளங்கையை மெல்ல இழுக்க நகராமல் முரண்டு பிடித்துக் கொண்டு நின்றாள் ரிது.

இந்த அடங்காப் பிடாரியை எப்படி அடக்கி, அன்னை முன் நல்லவனாக நிற்கப் போகிறோம் என்ற பெரும் மலைப்போடு, அழுத்தமாகத் தன் பக்கம் இழுக்க, அவன் நெஞ்சோடு உரசி நின்றவள் அண்ணாந்து முகம் பார்த்தாள். தாடை நடுவில் உண்டான குழியில் அவள் கோபம் மறைந்து போனது. மணாளனின் கோபம் இன்னும் மறையவில்லை என்பதைக் கடிபடும் தாடைகளை வைத்துப் புரிந்து கொண்டவள், தன்னை உயர்த்தத் துடிக்கும் அவன் கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாள்.

அழகாக நடந்தேற வேண்டிய காட்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொதப்பிய கருடேந்திரன், கல்லைத் தூக்குவது போல் தன் இரு கைகளால் தூக்கிக்கொண்டு ஒரு குலுக்குக் குலுக்க, தன்னால் அவளது கைகள் அவன் தோள்ப்பட்டையைச் சுற்றி வளைத்தது. இடது தோளைப் பிடிக்கும் அவள் செயலில் திரும்பி தோள்ப்பட்டையைப் பார்த்தவன், இமையைக் கீழ் இறக்கினான் வெகு அருகில் அவள் முகம் இருந்ததில்.

இருவருக்கும் ‘கோபம்’ என்னும் அதீத சக்தியை அதிகளவு கடவுள் படைத்து விட்டதால் விழிகள் முழுவதும் அவை மட்டும் தான் பிரதிபலித்தது. சங்கு விழிகளுக்குச் சொந்தக்காரி கடலளவுக்கு விரித்து அதைக் காட்ட முயல, கருடக் கண்களுக்குச் சொந்தக்காரன் சூரியனாய் சுட்டுப் பொசுக்கினான். இரு விழிக் கத்திகள் சண்டையிட்டுக் கொண்டது. யாருக்கும் அதில் வெற்றி கிடைக்கவில்லை என்பது தான் பரிதாபம்.

சரிக்குச் சமமான சண்டையில் இருவரும் தோல்வியுற்று அதே நிலையில் நின்றிருக்க, பார்த்துக் கொண்டிருந்த பொன்வண்ணன் நகர்ந்தார். அதை அறியாதவள், அவன் கொடுக்கும் அனலைத் தாங்க முடியாது புருவங்களை மேல் உயர்த்த, அந்த அடர்த்தியான புருவ நெளிப்பில் சிக்கிக் கொள்ளத் தடுமாறியது கருடனின் விழிகள். கண்ணால் தோலுரிக்கும் அவன் செயலில் சின்ன மாற்றத்தை உணர்ந்தவள், மேல் உயர்ந்த புருவத்தைச் சுருக்கி இமைகளைச் சிமிட்டிட, அதைப் பார்ப்பதை விட்டுவிட்டு வளைந்து நெளியும் இதழ் மீது அவன் பார்வை சென்றது.

உதட்டு ரேகைகள் ஒன்று குவிந்து அதிசயமாக மின்னிக் கொண்டிருந்தது. இன்றுதான் உதட்டுச் சாயம் இல்லாமல் முதல் முறையாகப் பார்க்கிறான். எப்போதும், கண் கூசும் நிறத்தில் அந்தச் சாயம் இருந்திருக்கிறது. எதுவும் போடாமல் இளஞ்சிவப்பு நிறத்தில் செதுக்கி வைத்த அளவில் குவிந்திருக்கும் அதில், தொலையத் துடிக்கும் தன் உணர்வுகளைப் புரிந்து கொண்டவன் உடனே மீட்டெடுத்தான்.

இமை முடியிலிருந்து, அவன் முகத்தில் தோன்றி மறைந்த சுருக்கங்கள் வரை ஒவ்வொன்றையும் அச்சு எடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தவள், துளியும் மாறாது இருக்கும் அந்தக் கடுமையைக் கண்டு அதிசயித்தாள். ஒரு நொடி வந்து சென்ற தடுமாற்றத்திற்கு, என்ன காரணம் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளப் பேராவல். அதை அவளுக்கு உணர்த்த விரும்பாதவன்‌ மெல்லத் தலையசைக்க, அதில் இரு முறை சிமிட்டிய இமைகளை அவளையும் மறந்து ரசித்தாள்.

ஒவ்வொரு நடையும் அவள் இதயத்தின் ஓசையை ஆட்டிப் பார்த்தது. தடதடக்கும் ரயில் வண்டி போல் திகிலான அனுபவத்தைக் கொடுத்தவன் கதவைத் திறக்கச் சொல்லிச் சைகை செய்ய, புரியாது பார்வையால் என்னவென்று கேட்டாள். கதவைக் கண் காட்டியவன் திறக்கும்படி கண்ணால் சைகை செய்ய, அவன் விழிகளுக்குள் இருக்கும் காந்தம் மெல்ல ஈர்த்தது.

மொத்த அணுக்களையும் அதனுள் ஒளித்து வைத்தவன் வெளிச்சத் துகள்களை விழிகளில் பிரகாசிக்க வைக்க, பிடிவாதக்காரி பிடிபடாமல் இருக்கப் போராடினாள். எவ்வளவு சொல்லியும், செய்யாத மனைவியைப் பார்வையால் எரித்தவன் ஓங்கிக் காலால் உதைத்தான். பிரிந்த கதவு சுவரை முட்டி ஓசை கொடுக்க, அதில் தெளிந்தவள் பல்லைக் காட்டினாள்.

வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடி நடந்து சென்றான். அதைக் கவனித்த அவளுக்கு ரசனையான சிரிப்பு உருவானது. தன்னை வெறுப்பேற்றிச் சிரிக்கும் அந்த இதழைக் கடித்துக் குதறும் அளவிற்கு வெறி வந்தது கருடேந்திரனுக்கு. எண்ணத்தை அப்படியே நிறைவேற்றுவதற்காக அந்த இதழ் மீது பார்வையைச் செலுத்தியவன் மென்மையான பூவைக் கசக்க விரும்பாது கைவிட்டான்.

தன்னவன் ரசிப்பதை உணராதவள், விழிகளில் குடி கொண்டிருக்கும் அந்தக் கடுமையை ரசித்துக் கொண்டே, “ஏன்டா ஆட்டோக்காரா, அரை மணி நேரமா இப்படியே முறைச்சுக்கிட்டு இருக்கியே… கண்ணு வலிக்கல.” கேட்டாள்.

“உன்ன மாதிரி ஒருத்தியை ரசிக்கவா முடியும்?”

“ரசிக்கிற அளவுக்குத் தைரியம் இருந்தா நீ ஏன்டா முறைக்கப் போற.”

“டா போடாதடி!”

“அப்படித் தான்டா போடுவேன்!” என்றவளை என்ன செய்தால் தகும் என்ற எண்ணத்தில் ஒரு பக்கப் பல்லைக் கடித்தான். அதைக் கவனித்தவள் தலையை உயர்த்திச் சத்தமிட்டுப் புன்னகைக்க, தொப்பென்று மெத்தையில் தூக்கிப் போட்டான்.

“ஆஆ!” என்ற பெரும் அதிர்வோடு மெத்தையில் விழுந்தாள்.

அவள் துடிப்பைக் கண்டு கொள்ளாது, தனக்கு முன்னால் இருக்கும் காலைப் பிடித்து மெத்தையின் விளிம்பிற்குக் கொண்டு வந்தவன் மிக நெருக்கமாக நகர்ந்தான். காந்த விழிகள் மீண்டும் அவளைச் சிறைப்பிடிக்க முயன்றது. கருடனின் இழுப்பிற்கு வந்தவள், நெருங்கி வரும் அந்தக் கண்களுக்குள் இருக்கும் கருவிழியை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருக்க,

“உன்னை என்னைக்கு அடக்குறனோ, அன்னைக்குத் தான்டி நான் ஆம்பளைங்குற எண்ணமே எனக்கு வரும்.” என்றவன் வார்த்தைகள் எதுவும் அவளிடம் செல்லவில்லை.

கடித்துத் துப்பும் வார்த்தைக்கு ஏற்பச் சுருங்கி விரியும் அந்தக் கருவிழிக்குள் நிலை குத்திய பார்வையைச் செலுத்தியவள், “தள்ளிப் போடா” என்றாள்.

இழுத்த காலை இன்னும் இழுத்து, இடைவெளி இல்லாத நெருக்கத்தை உண்டாக்கியவன் கழுத்தைப் பிடித்தான். சின்ன இறுக்கம் என்றாலும் மூச்சு முட்ட வைத்தது. அதில் தலை உயர்த்தியவள் பெரிதும் அஞ்சாத பார்வையோடு அமர்ந்திருக்க, “உன் நாக்கை ரெண்டாய் கிழிச்சுப் போட்டால் கூட என் கோபம் அடங்காதுடி. ஆம்பளை மாதிரி நடந்தாலும், நீ ஆம்பளை இல்ல. கொஞ்சமாச்சும் பொண்ணு மாதிரி நடந்துக்க. இப்படியே இருந்தா போற போக்குல பொண்ணு என்ற அடையாளமே மறைஞ்சு போயிடும்.” என்ற கருடேந்திரனின் வார்த்தைகள் அவள் உதட்டோடு ஒட்டியது.

அவ்வளவு நெருக்கத்தில் இருந்தார்கள் இருவரும்.

கடுமையான வார்த்தைகளுக்கு எவ்விதப் பிரதிபலிப்பையும் கொடுக்காமல், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அவள் விழிகளை நோட்டமிட்டவன் அவளைப்போல் அதில் தொலைய ஆரம்பித்தான். அடிக்கடி இடது வலமாக அசைந்து ஒட்ட வரும் இமை முடிகளை ஒட்ட விடாது கட்டுப்படுத்தி வைக்கும் அவள் செயலை உள்வாங்கியவனின் பார்வை அந்த உதட்டிற்குச் சென்றது.

என்னவோ தெரியவில்லை, அதில் ஏதோ வசியம் இருப்பது போல் உணர்ந்தான். கட்டியவன் பார்வை கீழ் நகர்வதை வைத்துச் சுயம் பெற்றவள் கீழ் உதட்டை கடிக்க, அதில் அவனும் புத்தி தெளிந்து பிடித்திருந்த கழுத்திற்கு விடுதலை கொடுத்தான். உடனே, விலகியவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தவள்,

“நீ ஆம்பள தானடா…” எனக் கேட்டிட, மீண்டும் கழுத்தைச் சிறைப் பிடித்தவன் அப்படியே மெத்தையில் தள்ளி,

“காட்டச் சொல்றியா?” எனத் திமிராகக் கேட்டான்.

மெத்தையோடு மெத்தையாக மறைந்து போகும் அளவிற்கு, அழுத்தம் கொடுக்கும் அவன் செயலால் உண்டான அசௌகரியத்தைக் காட்டாது கர்வத்தோடு சிரித்தவள், “இதுல மட்டும் தான்டா உன்னால காட்ட முடியும்.” என்றாள்.‌

கழுத்தோடு இருந்த ஐ விரல்களை அப்படியே பின்னந்தலைக்கு மாற்றியவன், இல்லாத கூந்தலைப் பிடிக்க முயன்று தோற்றுப்போய், உச்சந்தலையில் குவிந்திருக்கும் முடியைப் பிடித்துத் தூக்கினான். அதுவரை அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்று கொண்டிருந்தவள், கொஞ்சமும் இடம் கொடுக்காது சட்டைக் காலரைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்துப் பழைய நிலைக்கு வந்தாள்.

அவனாக மேலே சரியும் பொழுது சற்று இடைவெளி விட்டுச் சரிந்திருக்க, இவள் இழுத்த இழுப்பில் நிலை தடுமாறி மொத்தமாக அவள் மேல் விழுந்தான். இருவருக்கும், இருவரின் தேகமும் உரசிக் கொண்டிருப்பது புரிந்தாலும், கோபம் எனும் ஆயுதத்தை முன்னிறுத்தி முறைத்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் இந்த முறை ரிது சதிகாவின் பார்வை சற்றுத் தூக்கலாக இருந்தது.

“உன் தேவைக்காக என்னைப் பொண்ணா நடந்துக்கச் சொல்றியா? இல்ல ஆம்பளைங்க இப்படித்தான் இருப்போம்…” என அவனைப் போல் பற்களை நரநரத்து,

“பொண்ணுங்க எங்களுக்குக் கீழ தான் இருக்கணும்னு சொல்றியா?” பிடித்திருந்த சட்டைக் காலரை இறுக்கினாள்.

“கையை எடுடி!”

“நீ மட்டும் டி போடலாமா?”

“நியாயமா உன்னை ‘டா’ தான் போடணும். என்ன பண்ண? பார்க்கக் கொஞ்சம் அப்படி இப்படி இருக்குறதால டி வருது.”

“அப்படி இப்படியா?”

“அதான்டி!” எனச் சொல்ல வந்தவன் கன்னத்தில் “பளார்” என்று அறைந்தாள். அவளின் கணவன் சற்றும் எதிர்பார்க்காததால் தடால் என்று சிவந்த விழிகளால் சுட்டெரிக்க,

“என்னடா முறைக்கிற? அப்படியே கண்ண நோண்டிடுவேன். நீ மொறச்சா அப்படியே அடங்கிப் போயிடுவேன்னு நினைச்சியா? இன்னொரு தடவை என்னை சைட் அடிச்ச, கொலை பண்ணிடுவேன்.” எனத் தீவிரமாக மிரட்டிக் கொண்டிருந்தாள்.

அதுவரை ராவணன் போல் பத்து தலை கொண்டு முறைத்துக் கொண்டிருந்தவன் சற்றென்று, “ஹா ஹா ஹா!” என அந்த அறை அலறச் சிரித்தான்.

அவனுக்குக் கீழ் படுத்திருந்தவள் ஒன்றும் புரியாது நான்கைந்து கோடுகளை நெற்றிச் சுருக்கங்களாகக் காட்டிக் கொண்டிருக்க, “ஐயோ! அம்மா, சிரிக்க முடியல.” மூச்சு வாங்கி அவள் மீது படுக்கப் பார்த்தான்.

அதைப் புரிந்து கொண்ட ரிது சதிகா, “ச்சீ போடா…” எனத் தள்ளி விட்டாள்.

அவளை உரசிக்கொண்டு பக்கத்தில் படுத்தவன், “உனக்கு இவ்ளோ நல்லா காமெடி பண்ண வருமா? ஐயோ… வயிறு ரொம்ப வலிக்குது. நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணி இப்படிச் சிரிக்க வைக்கிறியே.” என்றதும் கடுப்பானவள் அவன் வயிற்றின் மீது தாவி அமர்ந்தாள்.

இந்தச் செயலையும் அவளிடமிருந்து சற்றும் எதிர்பார்க்காத கருடேந்திரன், “அம்மா!” எனக் கை கால்களைச் சுருக்கி அலறினான்.

“என்னடா, இப்போ காமெடி பண்ணேன்?”

“எந்திரிடி! பன்னி, மாடு…”

“இப்ப எதுக்குச் சிரிச்சேன்னு சொல்லு.”

“முதல்ல எந்திரிடி!”

“இப்பச் சொல்லல, எகிறி எகிறிக் குதிப்பேன்.”

“அடியே! பேச முடியல எந்திரி.”

“சொல்லுடா!”

“பார்க்கக் குச்சி மாதிரி இருந்தாலும், நல்லா செனைப்பன்னி கணக்கா இருக்க…” என்றவன் வயிற்றில் குத்தாட்டம் போட ஆரம்பித்தாள் ரிது சதிகா.

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் எகிறிக் குதிக்கும் அவளால், பெரும் அவஸ்தைக்கு உள்ளானவன் எப்படியோ போராடி இடப்பக்கமாகச் சரிந்து, அவளையும் சரிய வைத்தான். எழத் துடிக்கும் மனைவியைக் கால்களால் சிறைப்பிடித்து எழுந்தமர்ந்தவன், “குட்டிச் சாத்தானே!” என முன்னால் இருக்கும் நான்கு முடிகளைப் பிடித்து ஆட்ட ஆரம்பித்தான்.

வலி பொறுக்க முடியாதவள் விடும்படி அடித்துக் கொண்டிருக்க, “நானும் இப்படித்தான கதறிட்டு இருந்தேன்.” என இன்னும் பிடித்து ஆட்ட ஆரம்பித்தான்.

“விடுடா நாயே…” என்றதும் அன்று போல் அவள் கழுத்தைக் கடித்தான். அந்த வலியில் வெறியாகிய அவன் மனைவி கண்டமேனிக்கு அடிக்க ஆரம்பித்தாள். இவனும் பதிலுக்குப் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, அங்கு ஒரு குத்துச் சண்டையே நடந்தேறியது.

உடல்நிலை சரியில்லாததால் கொஞ்ச நேரத்தில் சோர்ந்து போனவள், முறைத்துக் கொண்டு மெத்தையை விட்டு இறங்கி நிற்க, எழுந்தமர்ந்தவன் தன் சட்டையைச் சரி செய்து பதிலுக்கு முறைத்தான்.

“எதுக்குச் சிரிச்சன்னு சொல்லு!”

“மனசாட்சியே இல்லாம, உன்ன சைட் அடிச்சன்னு சொல்ற? அறுபது வயசுக் கிழவன் கூட உன்னைப் பார்க்க மாட்டான்டி. உன் மூஞ்சி, முகரையைக் கண்ணாடில பார்த்ததே இல்லையா… வெள்ளத் தோலும், பளபளன்னு மேக்கப்பும் போட்டுக்கிட்டா நீ பெரிய உலக அழகியா? தாலி கட்டுன பாவத்துக்குக் கூட உன்னைப் பார்க்க மாட்டேன். இதுல எங்க இருந்து சைட் அடிக்க.”

அவன் வார்த்தைக்கு உள்ளம் கொதித்தது. அதை இழுத்து விடும் மூச்சால் வெளிக்காட்டியவள், “ரொம்பப் பேசுற.” என விரல் நீட்ட,

“முதல்ல நீ பொண்ணானே எனக்குச் சந்தேகமா இருக்கு. எதுக்கும் நல்ல டாக்டரா போய்ப் பாரு. இப்பத்தான் பொம்பள, ஆம்பளையா மாறுறது நல்ல டிரெண்டிங்ல இருக்கு.” என்றான்.

“போடா, பொறுக்கி நாயே!”

“போடி களவாணி!”

“பல்லப் பேத்துருவேன்!”

“மூஞ்சிய உடைச்சிடுவேன்!”

“உன்கிட்ட எனக்கு என்னடா பேச்சு?”

“என் நேரமே வேஸ்ட் ஆகிடுச்சு!”

“ரொம்ப சீன் போடாத. நீ அதுக்கெல்லாம் ஒர்த் இல்ல.”

“எரும மாடு! உன்னைத் தூக்கிட்டு வந்து என் உடம்பெல்லாம் வலிக்குது. முதல்ல போய் குளிக்கணும். உன் மூஞ்சிய வேற ரொம்பக் கிட்டப் பார்த்துட்டேன். ராத்திரி தூக்கத்துல அலறி அடிச்சு எந்திரிக்கப் போறேன்.” எனப் பேசிக்கொண்டு எழுந்தவன் தலையைப் பதம் பார்த்தது அங்கிருந்த ஜாடி.

வலியில் துடித்துக் கொண்டிருந்தவனை நெருங்கியவள், “கனவுல கூட என்னை மாதிரி ஒரு பிகரைப் பார்க்கணும்னு நினைச்சி இருக்க மாட்டடா. என் கையையும், உன் கையையும் ஒண்ணா வச்சுப் பாரு.” என அவன் கையோடு சேர்த்து வைத்தாள்.

இரண்டிற்கும் மண்ணளவும், மலையளவும் வித்தியாசம் இருந்தது. அதைக் கவனித்தாலும் முறைப்பை விடாது நின்றிருக்க, “என் பின்னாடி எத்தனை ஆம்பளைங்க சுத்தி வந்திருக்காங்க தெரியுமா? கண்ணக் காட்டுனா காலடியில வந்து விழ ரெடியா இருக்கானுங்க. அதோ அந்தக் கண்ணாடி முன்னாடி என்கூட ஒரு ரெண்டு நிமிஷம் மனசு உறுத்தாம உன்னால நிக்க முடியுமா? ஏணி வச்சாலும் எட்டாத உசரத்துல இருக்க எனக்கு, நீ ரொம்பக் குறைவுடா… என் போதாத காலம், இப்படி உன்னப் பக்கத்துல வச்சிருக்க வேண்டியதா இருக்கு.” என்றவள் பேசி முடித்ததும் முகம் சிவந்து போனாள்.

இதமாகச் சிரித்தாலும் அதில் ஏளனங்கள் குவிந்து இருந்தது.‌ தன் அழகையும், தரத்தையும் வார்த்தையால் விவரிக்கும் மனைவியைப் புன்னகையால் வெறுப்பேற்றியவன்,

“என்னம்மா பண்ண, இந்த ஜென்மத்துல ஒன்னுக்கு ரெண்டு தடவையா என் கையால தாலி வாங்கணும்னு விதி. விதிய இந்த மதியால மாத்த முடியுமா?” என அவள் நெற்றியைத் தட்டினான்.

கடும் அனலுக்கு நடுவில் கருணையாகப் பேசும் காற்று போல், அவன் முகத்தில் வந்து மறையும் அந்தச் சின்னப் புன்னகையைக் களவாடிக் கொண்டவள், “எல்லாம் உண்மை தெரியுற வரைக்கும் தான்.” வார்த்தையை அவனுக்கு எதிராக விட்டுக் கண்களை அவனோடு உலாவ விட்டாள்.

ஒரு நொடி கேள்வி முடிச்சோடு சுருங்கிய புருவத்தை உடனே தளர்த்தி, “அதுவரைக்கும், இந்தக் களவாணியை கட்டி மேய்க்கப் போறவன் இந்த ராஜா தான்!” என்றான்.

இவர்களின் சம்பாஷனைகளுக்கு நடுவில் கதவு தட்டப்பட்டது. இருவரும் பார்வையை அதில் திருப்ப, லேசாகக் கதவைத் திறந்த வீட்டின் வேலை ஆள்,

“சாப்பாடு ரெடி மேடம்.” என்றார்.

“ம்ம்!” என அதிகாரமாகக் குரல் கொடுக்கும் மனைவி புறம் திரும்பியவன், அதில் இருக்கும் கடுமையைக் கண்டு திகைத்தான். இவ்வளவு நேரம் தன்னோடு உரையாடும் பொழுது, இத்தனை மிடுக்கான ஓசை அவளிடம் இருந்து வரவில்லை. அது ஏன்? என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தவன் முன் சொடக்கிட்டவள்,

“போய் சாப்பாடு எடுத்துட்டு வரீங்களா ராஜா” என்றாள்.

“உனக்குக் கால் இல்லையா?”

தன் ஆடையைக் கணுக்கால்வரை ஏற்றி இரு கால்களையும் காட்டியவள், “ரெண்டும் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் நீ தான் எடுத்துட்டு வரணும்.” என்றாள்.

“நான் எதுக்கு எடுத்துட்டு வரணும்?”

“உன் அம்மாகிட்ட நல்ல பேர் வாங்க வேண்டாமா…”

“ஏய்!”

“அடப் போடாடாடா… கருடாடாடா…” எனத் தள்ளி விட்டவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கால் மீது கால் போட,

“எனக்கு நேரம் வரட்டும்.” என்ற புலம்பலோடு உணவை எடுத்து வரச் சென்றான்.

அவன் கதவைத் திறந்து வெளியில் சென்றதும், வேலையாளைத் தொடர்பு கொண்டவள், “சார் வந்துட்டு இருக்காங்க. அவர் எடுத்துட்டு வரேன்னு சொன்னாலும், விடாம எல்லாத்தையும் நீங்களே எடுத்துட்டு வாங்க.” என உத்தரவு பிறப்பித்தாள்.

கீழே சென்றவன் சகஜமாகப் பேசிக்கொண்டு இரவு உணவைக் கேட்க, தானே எடுத்து வருவதாக அந்த நபர் கூறினார். வேண்டாம் என்று மறுத்தவன் பாத்திரத்தில் கை வைத்ததும்,

“அய்யய்யோ! வேண்டாம் சார், மேடம்க்கு தெரிஞ்சா திட்டுவாங்க.” என்றார்.

“உங்க மேடம் தான் எடுத்துட்டு வரச் சொன்னாங்க.”

“அதே மேடம் தான் போன் பண்ணி அவரை எதுவும் எடுக்க வைக்காதீங்க, நீங்களே எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்கன்னு சொன்னாங்க.” என்றதைக் கேட்டதும் உள்ளம் மகிழ்வதைத் தடுக்க முடியவில்லை அவனால்.

அந்த மகிழ்வோடு அறைக்குச் சென்றவன் மிதப்பாகப் புன்னகைக்க, என்னவென்று கேட்கும் நேரம் உணவு கொண்டு வந்தார் சமையல்காரர். உடனே தன் உடலை மிடுக்காக வைத்துக் கொண்டவள்,

“அப்பா சாப்பிட்டாச்சா?” விசாரித்தாள்.

“அய்யா லேட்டா சாப்பிடுறதா சொன்னாரு.”

“மறக்காம சாப்பாடு எடுத்து வச்சிருங்க.”

சம்மதமாகத் தலையசைத்தவர் கதவைத் திறக்கப் போகும் நேரம், “அம்மாக்கு?” எனக் குரல் கொடுக்க, “வாணிப் பொண்ணு எடுத்துட்டுப் போயிருக்கு மேடம்.” என்றார்.

முதல்முறையாக இந்த வீட்டிற்கு வந்த பின், ‘அம்மா’ என்ற வார்த்தையைக் கேட்கிறான். அவர் எங்கிருக்கிறார் என்று கூட இன்னும் தெரியாது கருடேந்திரனுக்கு. அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களும், ரகசியமாக இருப்பது போல் உணர்ந்தான். அதைப் பற்றிக் கேட்க நினைத்தவன் எண்ணத்தை,

“எனக்கு நீ பிச்சைக்காரனா இருந்தாலும், இந்த வீட்ல வேலை செய்யறவங்க முன்னாடி புருஷன் தான். அவங்களுக்கு ஈக்குவலா உன்னை வச்சா என் ஸ்டேட்டஸ்க்கு அசிங்கம். அதனாலதான் அவரையே எடுத்துட்டு வரச் சொன்னேன். இதுக்கு நீ சிரிக்கணும்னு அவசியம் இல்ல. நியாயமா வெட்கப்படனும்.‌” என்றவள் அருகில் இருந்த மேகஸினைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் மூழ்கி விட, பலத்த அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டதாய் உணர்ந்தவன் மனம் நொந்து போனான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!