💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 09
“நான் மாப்பிள்ளை கிட்ட தனியா பேசனும்” என்ற ஜனனியின் வேண்டுகோளைக் கேட்டு, “எதே?” அதிர்ந்து நின்றான் ரூபன்.
“என்ன மேன்? முட்டையை முழுசா முழுங்கின மாதிரி முழிக்கிற?” அதீத கடுப்பில் அவள்.
“உங்க அக்கா இதைக் கேட்டா நியாயம் இருக்கு. அவங்க கட்டிக்கப் போறவங்க. ஆனால் நீங்க எதுக்கு பேசனும், அதுவும் தனியா?” எனக் கேட்டான், அதிர்ச்சி விலகாமல்.
“அதை உங்க கிட்ட சொல்ல முடியாது. தயவு செஞ்சு உங்க அண்ணாவைக் கூட்டிட்டு வாங்க” என்று அவள் அவசரப்படுத்த, “என்னால முடியாது. அது ரொம்ப ரிஸ்கான வேலை” ஒரேயடியாக மறுத்து விட்டான் ரூபன்.
சத்யா ஏற்கனவே அவர்கள் மீது கோபத்தில் இருக்கிறான். இதில் இவள் சொன்னதைச் சொன்னால் அவனது கழுத்தைப் பிடித்து விடுவான்.
“உங்க அண்ணன் தானே? எதுக்கு பேயைப் பார்க்க சொன்னது போல ரியாக்ஷன்? நான் கூப்பிட்டேன்னு சொல்லுங்க” என்று சொல்ல, அவனோ இவளைச் சமாளிக்க முடியாமல் புலம்பிக் கொண்டு சென்றவன் துள்ளிக் குதித்து வந்த மகிஷா மீது மோத, அவள் விழுந்து விட்டாள்.
“அம்மாஆஆ” கத்திக் கொண்டு விழுந்தவள், தன்னைப் பார்த்து சிரிக்கும் ரூபனைக் கண்டு கடுப்பானாள்.
“டேய் வாத்து வாயா! சிவனேனு வந்தவளை ஆக்சிடன்ட் பண்ணிட்டு கெக்க பெக்கேனு சிரிக்கிறியா?” முறைத்துத் தள்ள, “என்னைக் கூட ஒரு லாரி பலமா இடிச்சு கதிகலங்க செஞ்சுடுச்சு” பாவமாக சொன்னான் அவன்.
“லாரியா? எங்க வீட்டுல லாரி எதுவும் இல்லையே? வரும் வழியில் இடிச்சா இப்போ ஆஸ்பத்திரியில இல்லையா இருந்திருக்கனும்?” யோசனைக்குச் சென்றாள் மகி.
“உங்க வீட்டுல இருக்கே லாரி ஒன்னு. அதான் அந்த ஜான்சி ராணி ஜனனி” என்றதும் அவள் முறைக்க, “நீங்க என்ன தான் முறைச்சாலும் அவங்க அப்படித் தான். ஜான்சி ராணிக்கும் மேல” கையை உயர்த்திக் காட்ட,
“எவ்ளோ தைரியம் இருந்தா என் கிட்டயே என் அக்காவை ஜான்சி ராணின்னு சொல்லுவ? பிச்சிருவேன் பிச்சு” அவள் முறைக்க, “ஹேய் மினி ரெடியோ. இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணு. உன் அக்காவுக்கு என் அண்ணன் கூட பேசனுமாம்” என்று சொல்ல,
“செம்ம ஆளுங்க தான் அவங்க” துள்ளிக் குதித்தாள் மகிஷா.
“இப்போ எதுக்கு வானத்துக்கும் பூமிக்கும் தாவுற?”
“மாம்ஸ் கூட நந்து அக்காவோட பேசனும்னு கூட்டிட்டு வர சொன்னார். அக்காவும் இப்படி சொல்லி இருக்காங்கனா, அவங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகுதுல்ல?”
“அண்ணா கூட பேசனும்னு கேட்டது உன்னோட நந்து அக்கா இல்ல, ஜானு அக்கா. இதுல மேடம் துள்ளிக் குதிச்சாச்சு கெமிஸ்ட்ரி பிசிக்ஸ்னு” அவன் தலையிலடித்துக் கொள்ள, “ஜானுவா?” கூவினாள் மகி.
“நானே தான் டி. அவர் மேல தானே இருப்பார். நானே போய் பேசிக்கிறேன்” யாருக்கும் காத்திராமல் ஜனனி சத்யாவைத் தேடிச் செல்ல, ரூபனும் மகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நந்திதாவுக்காக காத்திருந்த சத்யா, ஜனனியைக் கண்டதும் “உங்கக்கா?” என்று கேட்க, “நான் உங்க கிட்ட பேசனும்” வந்த காரணத்தை சொல்லி விட்டாள் அவள்.
“சொல்லுங்க” கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொள்ள, “நந்துவுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் இல்லைனு தோணுது” என்றதும், “சோ…?” கேள்வியாக நோக்கினான் அவன்.
“விருப்பம் இல்லைனு சொல்லுறேன். நீங்க ஈசியா கேட்கிறீங்க”
“எனக்கு கூடத் தான் விருப்பம் இல்லாத கல்யாணம். ஆனால் என்ன செய்றது? என்னால எதுவும் பண்ண முடியாது. அன்ட், உங்க வீட்டுல நிறுத்தினா எனக்கு எந்த இஷ்யூவும் இல்லை” தோளைக் குலுக்கினான் சத்யா.
“நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்றவள் அவனது அனுமதியைப் பெற்று அடுத்து கேட்ட கேள்வியில் அவனுக்கு கண்கள் சிவந்தன.
“அது உங்களுக்கு தேவை இல்லாத கேள்வி. அதை நந்திதா கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்” கோபமாக அங்கிருந்து சென்றவனுக்கு ஜனனி மீது ஆத்திரம் வந்தது.
“இவ்ளோ கோபக்காரனா இருக்கார். நந்து எப்படி இவர் கூட வாழ முடியும்?” அவளது அமைதியான சுபாவத்தை நினைத்துக் கலங்கி நின்றாள் ஜனனி.
வெளியில் சென்று நின்ற சத்யாவிற்கு கோபம் தீரவில்லை. ஏற்கனவே இருந்த கோபத்திற்கு ஜனனி தூபம் போட்டது போல் இருந்தது.
“சத்யா…!!” ரூபன் அவனருகே வர, “நான் அந்தப் பொண்ணு கூட பேசனும்னு சொன்னா அவ தங்கச்சி எதுக்கு வந்தா? ச்சே. மூடை ஸ்பாயில் பண்ணிட்டா” தரையில் காலை உதைத்தான்.
“ஏன்ணா என்னாச்சு?”
“எதெல்லாம் நடக்கும்னு நெனச்சேனோ அது நடக்குது. இதுக்கு தான் கல்யாணமே வேணாம்னு சொன்னேன். கேட்டீங்களா நீங்க? நானும் யுகனும் எங்க பாட்டுல வாழ்ந்துட்டு இருந்தோமே. இது பொறுக்கலல்ல உங்களுக்கு?” தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.
“நீ சந்தோஷமா இருக்கனும்னு தானே நாம ஆசைப்படுறோம். அதுக்காக தான் இவ்ளோவும் பண்ணுறோம். ஏன் புரிஞ்சுக்க மாட்ற?” ரூபன் சோர்ந்து போனான்.
“எவ்ளோ சொன்னாலும் என்னை நீங்க புரிஞ்சுக்க மாட்டீங்க. நான் உங்களை புரிஞ்சுக்கனும்ல? நல்லாருக்கு உங்க நியாயம்” என முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அனைவரையும் சாப்பிட அழைக்க, வந்து அமர்ந்தனர். சத்யாவின் சிரிப்பில்லாத முகம் ஜெயந்தியின் மனதை நெருடியது.
சத்யா ஊட்டி விடும் வரை யுகன் பார்த்துக் கொண்டிருக்க, “வா யுகி” மகனுக்கு ஊட்டி விட்டான் அவன்.
“ஆர் யூ ஓகே டாடி?” மகன் தனது முகத்தை ஆராய்வதைக் கண்டு, “அய்ம் ஓகே கண்ணா” அழகாகப் புன்னகைத்தான் அவன்.
“மகனோட மட்டும் தான் ஐயா சிரிப்பாரோ?” ஜனனி நந்துவிடம் கேட்க, அவளோ அமைதியாக அமர்ந்திருந்தாள்.
மேகலை ஜெயந்தியோடு பேசினார். அவர்களுள் நல்லதொரு நட்பு மலர்ந்தது.
“ஏன்க்கா இவங்க மூனு பேரும் மூனு விதமா இருக்காங்க?” மகிஷா ஜனனியிடம் வினவ, “நாம மூனு பேரும் ஒரே மாதிரியா இருக்கோம் இல்லையே. அப்படித் தான்” என்றவளுக்கு சத்யாவின் கோபமே நினைவுக்கு வந்தது.
‘நான் கேட்ட கேள்வி அவ்ளோ தப்பானதா? சாதாரணமா கேட்டேன். ரொம்ப சூடா இருக்கார் மனுஷன்’ தனக்குள் சொல்லிக் கொண்டாள் அவள்.
சாப்பிட்டு முடித்து விட்டு, யுகன் சகோதரிகளிடம் வந்தான்.
“உனக்கு இவங்க தான் இனிமே அம்மாவா?” என மகிஷா கேட்க, “நோ” கோபம் கொண்டான் சிறுவன்.
“எனக்கு அம்மாங்குற பெயரே பிடிக்காது. எனக்கு அம்மாவே இல்லை” என்றவனை மூவரும் புதிராகப் பார்த்தனர்.
“ஏன் யுகி? உன்னைப் பெத்தவங்களை நீ அம்மா சொல்ல மாட்டியா?” இந்தக் கேள்வியை நந்திதா கேட்டாள், ஆச்சரியமாக.
“இனியாவைக் கேட்கிறீங்களா? அவங்க அம்மா இல்லை. ஐ ஹேட் ஹர்” என்றான்.
“அப்படி சொல்லக் கூடாது டா” என்ற ஜனனிக்கு அவனது கோபம் சத்யாவை நினைவுறுத்தியது.
“அப்படி தான் சொல்லுவேன். அம்மா அவங்க பிள்ளையை விட்டு போவாங்களா? இல்லல்ல. ஆனால் இனியா என்னை விட்டுப் போயிட்டா. அப்போ அவங்களை நான் எப்படி அம்மானு சொல்லுவேன்?” என அங்கிருந்து சென்றான் சிறுவன்.
“இந்தப் பிள்ளை ஏன் இப்படி இருக்கு? இந்த வயசுல இவ்ளோ கோபமா? எனக்கு ஆச்சர்யமாக இருக்கு” மகிஷாவால் கூட அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“நந்து! நீ அவர் கிட்ட பேசலயா?” என்று ஜனனி கேட்க, “பேச எதுவும் இல்லை டி. அப்பா சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கேன். வேற என்ன பண்ண முடியும்?” பெருமூச்சு விட்டாள் தமக்கை.
“உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைனு எனக்கு தெரியுது நந்து. அதை வாய் விட்டுச் சொல்லலாம்ல?”
“நிச்சயமாகிருச்சு. அடுத்த வாரம் கல்யாணம். இனி என் வாழ்க்கை அப்படித் தான் போல” அலைபேசிக்குள் புகுந்து கொண்டாள் நந்து.
மகி தோட்டத்திற்கு வரும் போது “ரூபி ரூபி” என அழைத்துக் கொண்டிருந்தான் யுகன்.
“டேய் டேய் வாயை மூடு டா” ரூபன் அவனது வாயைப் பொத்த, “ரூபி” எனும் அழைப்பு பின்னால் கேட்டது.
அவன் திரும்பிப் பார்க்க, வாயில் கை வைத்து சிரித்துக் கொண்டிருந்தாள் மகிஷா.
“ஹா ஹா. ரூபி” என சிரிக்க, “வாயை மூடு டி” அவளை முறைக்க, “யுகி கூப்பிடும் போது நாய்க்குட்டியை எடுத்துட்டு வந்திருக்கானோனு நெனச்சேன். ஆனால் அந்த ரூபியே நீங்க தானா?” என கிளுக்கிச் சிரிக்க,
“ஏய் போதும். நிறுத்து” அவளைத் துரத்த, “பாய் ரூபி” கையசைத்து ஓடி விட்டாள்.
“மானத்தை வாங்கவே வர்றியே வாண்டு” யுகனின் கன்னத்தைக் கடித்து வைத்தான் ரூபன்.
“என்னடா அந்த பொண்ணு கூட கடலை போட்டுட்டு இருக்க” என தேவன் சிரிக்க, “நானே காண்டுல இருக்கேன். உனக்கு கடலை போடுற மாதிரி இருக்கா?” அவனை அடித்தான் மற்றவன்.
“என்னை யாராவது கொஞ்சுறாங்களா இல்லையே? ஆனால் உன்னை நிக் நேம் வெச்சு எவ்ளோ கியூட்டா கொஞ்சுறாங்க. நீ என்னன்னா இந்த கடி கடிக்கிற. அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கனும்” என்றான், அடக்கப்பட்ட சிரிப்போடு.
“போடா டேய். நீ என்னை புகழ்றேங்கிற பெயர்ல கிண்டல் பண்ணுற பரதேசி” அவன் தலையில் தட்ட, “கண்டு பிடிச்சிட்ட குமாரு” என சிரித்தான் தேவன்.
“ஹலோ ட்வின்ஸ்…!!” எனும் அழைப்போடு வந்த ஜனனி, “ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உங்களுக்கும் என் வயசு தானாம்” என்றிட, அவர்களும் அதிசயித்தனர்.
“அதுல என்னம்மா? ஒரே வயசு வேணாம். வயசை மாத்துங்கனு சண்டை போட வந்தீங்களா?” எனக் கேட்டான் ரூபன்.
“என்னைப் பார்த்தா சண்டைக் கோழி மாதிரி இருக்கா?” என்றவளின் கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல், “எக்ஸாட்லி” என்றிருந்தனர் இருவரும்.
“நீங்களுமா தேவா?” பாவமாகப் பார்த்தாள் பாவை.
“நெஜமா அப்படி தான் தெரிஞ்சீங்க. எனக்கு எங்கண்ணாவைப் பார்க்கிற மாதிரியே ஃபீல் ஆச்சு”
“அது சரி. என் லவ்வை கண்டு பிடிச்சீங்க. உங்க லவ்வை சொல்லுங்க பார்ப்போம்” என்று ஜனனி கேட்க,
“ஆத்தீ. நமக்கு இந்த லவ் எல்லாம் வேண்டாம். ஒன்லி சைட்டிங். லவ் பண்ணிட்டு ஃபைட்டிங் பண்ண முடியாது” என ரூபன் கூறினான்.
“இப்படி சொல்லுறவங்க தான் டக்குனு காதல் வலையில் வீழ்ந்து போவாங்க. எனக்கு தெரியாதா?” என்றவள், “தென், தேவன் யாரையாவது லவ் பண்ணுறாரா?” அவள் பார்வை தேவன் மீது படிந்தது.
அத்தனை நேரம் சாதாரணமாக இருந்த அவன் முகம் சிவக்கத் துவங்க, “இந்த லவ் எல்லாம் வெறும் நாடகம் தான்” என்றான்.
ஜனனி அதிர்ந்து பார்க்க, “எதுவும் கேட்க வேண்டாம்” என்பதாக தலையசைத்தான் ரூபன்.
அனைவரும் அங்கிருந்து கிளம்ப, “இந்தக் குடும்பத்தில் நிறைய மர்மம் இருக்கும் போல” என எண்ணிக் கொண்டாள் மாரிமுத்துவின் இரண்டாம் புதல்வி.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
2024-12-24