வாடி ராசாத்தி – 9
ஜெயந்தி பேசி விட்டு சென்றதை பொருட்படுத்தாமல், ஞானம் மகனை கண்ணால் அழைத்து கொண்டு அவர் அறைக்கு சென்றார்.
“என்ன பா…. ஏதாவது முக்கியமான விஷயமா?”
“ம்ம்…. உன் கல்யாண விஷயமா….”
“அப்பா, அம்மாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை….”
“என்ன தம்பி இப்படி அவசரப்படுற…. புதுசா இருக்கு…. எதிராளியை பேச விட்டு அவன் மனசை தெரிஞ்சுக்கிற என் பையன் எங்க….? ஏன் இந்த அவசரம்….?” எப்போதும் அவர் வியக்கும் குணம் அது கேபியிடம். அவ்வளவு எளிதாக வார்த்தைகளை விட்டு விட மாட்டான், மற்றவர்கள் அவனின் யோசனைகள், திட்டங்கள் எதையும் தெரிந்து கொண்டு விட முடியாத படி தான் பேசுவான். தொழிலில் அவன் நிதானம் தான் அவனின் மிகப் பெரிய பலம்.
“இதுநாள் வரை பேசாத நீங்க பேசறீங்கனா, பிரஷர் பில்டப் ஆகுதுனு தானே அர்த்தம்….?” கேபி கேட்க,
“ஆமா எனக்கு ஆகுது…. உன் மாமா ஒத்துக்க மாட்டான் நீ தலைகீழா நின்னாலும், அதனால அதை நினைச்சு எனக்கு கவலையா இருக்கு….” என்றார் ஞானம் அமைதியாக.
“நான் ஏன் தலைகீழா நிற்க போறேன்…. அசிங்கமா இருக்கும்…. நேரா நல்லா கம்பீரமா தான் போய் நிற்பேன்…. மாமாவே நடத்தி வைப்பார் பாருங்க.”
மகனின் ஜாலி பேச்சில் சட்டென்று சிரித்து விட்டார் ஞானம். “இப்படி எல்லாம் பேசுவியா நீ ….? உன் பெரியப்பா கிட்ட பேசுற மாதிரி என்கிட்டயும் பேசலாம்….” அவரின் அடி மனதில் இருந்த ஏக்கம் வெளி வந்தது அன்று.
நீங்களும் பெரியப்பா மாதிரி என்கிட்ட பேசுங்க என்பதை அப்படியே முழுங்கி விட்டான், தலையை மட்டும் சம்மதமாக அசைத்து வைத்தான் கேபி. சில விஷயங்கள் இனி பேசி பிரயோஜனம் இல்லை என்றால் அதை பேசக் கூடாது என்பது அவன் எண்ணம். அவன் அப்பாவை எதிர்பார்த்த காலத்தை இனி அவரிடம் சொல்லி என்ன ஆக போகிறது. இப்போது அவர் அவனை எதிர்பார்க்கிறார் என்பதை சொல்லி விட்டார், அதை செய்ய வேண்டியது இவன் கடமை.
“சரி, உன் கல்யாணத்துக்கு வருவோம், நந்துவை தவிர வேற யாரை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் குடும்பத்தில் ரொம்ப குழப்பம் வரும்…. அம்முவோட உன் கல்யாணத்தில எவ்ளோ உறுதியா இருக்க நீ….?”
“இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லாத அம்முவோடவும் போராடி கல்யாணம் பண்ற அளவு உறுதியா இருக்கேன்….”
“டேய் விருப்பம் இல்லாத பொண்ணை….”
“அவ ரெண்டு குடும்பம் பத்தி யோசிக்கிறா…. என் மேல் எல்லாம் விருப்பம் தான்…. நான் பார்த்துக்கிறேன் பா….”
“ம்ம்…. இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேனே…. உனக்கு தெரியாதா….?”
“என்ன….?”
“மரக்கடை நாராயணன் பையனுக்கு தான் அம்முவை கட்ட போறதா….”
அவரை முழுதாக பேசவிடவில்லை கேபி,
“என்ன ஏற்பாடு வேணா பண்ணட்டும் மாமா, அவ கழுத்திலே தாலி கட்ட போறது நான் தான். என் பொண்டாட்டி அவ….” அழுத்தமாக சொன்னான் கேபி.
“என்ன செய்றதா இருந்தாலும்….” ஞானம் ஆரம்பிக்க,
“அப்பா, நான் பார்த்துக்கிறேன்…. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு பா….” என்று கிளம்பி விட்டான்.
செல்வராஜின் வீட்டை நாராயணன் வாங்க போவது தெரியுமே தவிர இது புது செய்தி கேபிக்கு. வீட்டையே அவர் கைக்கு போக விட போவதில்லை அவன், இதில் அம்முவை அவர்கள் மருமகளாக விடுவானா….? அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்திருப்பதே அவனை பொறுத்தவரை தவறு, வந்து விட்டது அதை அழித்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டான் கேபி. வேகமாக இரண்டு மூன்று பேருக்கு அழைத்தவன், பேசி விட்டு வைத்த போது பலத்த யோசனைக்கு உள்ளானான்.
************
மறுநாள் காலை,
கேபியிடம் இருந்து அழைப்பு வர பதட்டத்துடன் எடுத்தாள் அம்மு. அழைக்காதவன் அழைத்ததில் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.
“என்ன ஆச்சு….? ஒன்னும் பிரச்சனை இல்லையே….?” என்றாள் நேரடியாக.
“என் நம்பர் வைச்சு இருந்தும் இத்தனை நாள் எனக்கு ஒரு போன் கூட பண்ணாம இருந்திருக்க…. ம்ம்ம்….” அந்த பக்கம் கேபியின் கிண்டலும் கேலியும் ஆன பேச்சில் நிம்மதி வர பெற்றவள்,
“யாராவது தானா பிரச்சனையை தேடி போவாங்களா பாண்டி….?”
“கரெக்ட் சில்மிஷம், சரியா சொன்னே…. எல்லாரும் என்னை மாதிரி தைரியமான ஆளா இருப்பாங்களா….? அதுக்கு எல்லாம் ஒரு திறமை வேணும்….” ஹாஹாஹா…. சொல்லுவிட்டு அவன் சிரிக்க, இந்த பக்கம் அம்மு வெறியானாள்.
“சிரிக்கிறியா…. சிரி சிரி…. உன் சிரிப்பை நீ மறக்கிற காலம் வரும்….” கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் அவள் பட்டென்று சொல்ல, ஏனோ கேபிக்கு நெஞ்சில் சுருக்கென்றது.
“லூசு…. வாயை மூடு…. இஷ்டத்துக்கு உளற வேண்டியது….” கத்தினான் கேபி.
அவனின் கேலி கிண்டல் நக்கல் எல்லாம் தெரியும் அம்முவிற்கு, ஆனால் அவன் கோபம் அரிது. அதுவும் அவளிடம் இப்படி கத்துவது புதிது. பயந்து விட்டாள் அம்மு.
அவள் அமைதியாகவும், சட்டென்று நிமிடத்தில் கோபத்தை கை விட்டவன், குரலை கூட மாற்றி கொண்டு, சாதாரணமாக,
“எங்க இருக்கே….?” என்றான்.
அவனின் மாற்றத்தில் மலைத்து போனாள் அம்மு. எப்படி இவனால் சட்டென்று மாற முடிந்தது…. அவன் மனதில் இருக்கும் காதல் புரியாமல், அவன் மனசில இருக்க எண்ணத்தை செயல்படுத்த எவ்வளவு தெளிவா இருக்கான்…. என்று நினைத்து கொண்டாள். அந்த கடுப்பில்,
“இந்த உலகத்தில தான்….” என்றாள் நக்கலாக.
“அது எனக்கும் தெரியும், நான் இருக்க உலகத்திலே தான் நீயும் இருப்பே சில்மிஷம்….” என்றான் உல்லாசமான சிரிப்புடன். பின் அவனே மெதுவாக, குசுகுசுவென்று பேசுவது போல்,
“உன் மனசிலனு நீ சொல்லி இருந்தா சூப்பரா இருந்திருக்கும்டி…. இருக்கேன் தானே நான்….? சொல்லு அம்மு….” என்றான் குரல் குழைந்தது.
காதிற்குள் கேட்கும் அவனின் குழைந்த குரலில், அதுவும் அவனின் அம்மு என்ற அழைப்பிலும் அம்முவின் உடலெங்கும் சிலிர்த்தது. தலைக்குள் ஜிவ்வென்றது…. அவள் பேச்சிழந்து தவிக்க, அவளின் நிலை உணர்ந்தவன் போல் அந்த பக்கம் இருந்தவன் உதடு கடித்து சிரித்தான்.
கொஞ்சமாக தன்னை மீட்டு கொண்ட அம்மு,
“டேய் பால் பாண்டி, உன் வார்த்தைக்கெல்லாம் உண்மையான அர்த்தம் என்னனு எனக்கும் தெரியும் டா, நடிக்காத டா….”
“சூப்பர் டி, இப்படி சொல்லாததை எல்லாம் புரிஞ்சுகிற நாம தான் சிறந்த ஜோடி அப்போ….” அதற்கு மேல் அவனை சமாளிக்க முடியாமல்,
“என்ன வேணும் இப்போ?” என்றாள் களைத்தவளாக.
“பிளேஸ் மா….பிளேஸ்…. இடம்….?”
“வீட்டில தான், கிளம்ப போறேன் வெளில….”
“சரி நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்….”
“என்ன விளையாட்டு இது புதுசா….?”
“ஹேய் சீரியசா தான், எங்க போகணுமோ நான் அழைச்சுட்டு போறேன்….”
“அதெல்லாம் எனக்கு போக தெரியும், நீங்க உங்க வேலையை பாருங்க…. புதுசு புதுசா பிரச்சனையை ஆரம்பிக்காதீங்க….” மனம் பதைத்தது அவளுக்கு. நினைத்ததை செய்வானே இவன்.
“நீ சொன்ன வழி தான் மா இது, உன் பேரை கெடுத்து உன்னை என் தலையிலேயே கட்டிக்கலாம்னு இருக்கேன்….நல்ல வழி தான் சொல்லி இருக்கே நீ….” என்றான் கேபி சீரியஸாக. இனி யாரை பற்றியும் கவலைப்படும் நிலையைத்தாண்டி விட்டான் அவன். நாராயணனும் கிஷோரும் அம்மு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டதில் இருந்து எவ்வளவு விரைவில் அவன் அம்முவை திருமணம் செய்ய முடியும் என்பதை தான் சிந்திக்கிறான் கேபி.
“சே! காலையிலே ஆரம்பிச்சுட்டீங்களா….” என்றவள் மேலே எதுவும் பேசாமல் போனை அணைத்து வைத்து விட்டாள். அணைத்த கையோட வெளியே கிளம்பியும் விட்டாள். என்ன வேண்டுமானாலும் செய்யும் திடம் அவனுக்கு இருக்கிறது என்ற பயத்தில். நிச்சயம் அவள் வீட்டில் இல்லையென்றால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவள் தாத்தாவிடம் சென்று,
“உங்க அருமை பேரனுக்கு போன் பண்ணி நான் அவசரமா வெளில போய்ட்டேன், எங்கனு சொல்லலைனு சொல்லுங்க….” என்றாள்.
“அப்படி எங்க தான் போறே….?” தாத்தா கேட்க,
“சொல்ல மாட்டேன்…. நீங்க எல்லாம் அவன் ஆளுங்க…. கண்டிப்பா சொல்லமாட்டேன்….” என்றவள் வேகமாக கிளம்பி விட்டாள்.
தாத்தா கேபியை அழைத்து சொல்ல, மிகுந்த ஆத்திரம் வந்தது அவனுக்கு. அவனுடன் ஆங்காங்கே அம்முவை கண்டால் நாராயணனுக்கு மட்டுமின்றி வேறு யாருக்கும் அவளை பெண் கேட்கும் எண்ணம் வராது என்பது தான் அவனின் எண்ணம். ஆனால் அவள் அவனை கண்டு ஓட, இயல்பான அவனின் கோப குணம் மூர்க்கமாக தலை தூக்கியது. என்கிட்ட இருந்து ஓடி ஒளியிறியா…. எவ்ளோ நேரத்திற்கு பார்ப்போம் என்றவன், கடகடவென்று சில அழைப்புகள் செய்தான். அவர்கள் மூலம் அவன் மாமன் வீட்டு தெருவில் இருந்து அம்மு கிளம்பியது முதல் சென்றதை வரை சுலபமாக தெரிந்து கொண்டான். இது எதையுமே நேரடியாக யாரிடமும் கேட்கவில்லை அவன். அது தான் அவனின் திறமை. அவன் பொண்டாட்டியை பற்றி மற்றவரிடம் அவன் விசாரிப்பதா…. வாய்ப்பில்லை அல்லவா….?
அவள் சிவன் மலையில் இருக்கும் கோயிலுக்கு சென்றிருப்பதை தெரிந்து கொண்டவன், நேரே அங்கே சென்று காத்திருந்தான். தரிசனம் முடித்து கீழே வந்தவள் அவனை கொஞ்சம் கூட அங்கே எதிர்பார்க்காமல் திகைத்து தடுமாறி போனாள். முதல் முறையாக கேபியின் தீவிரம் அவள் நெஞ்சில் உறைத்தது.
“ஏன்…. ஏன் இப்படி….?” அவள் திக்கி தடுமாறி பேச, கோபத்தில்,
“நான் தானே சொல்லி இருக்கேனே, உன்னோட இந்த திமிரும் அலட்சியமும் தான் என்னை இப்படி செய்ய வைக்குது….” என்றான் கடுகடுத்த முகத்துடன்.
“ப்ளீஸ் அப்படி இல்லை அத்தான்….”
“நடிக்காதடி…. நீ மரியாதை கொடுத்து பேசுறவளா…. இப்போ பாரு என்கிட்ட இருந்து தப்பிக்க நடிக்கிற இப்போ….” என்று அவளை பேச விடாமல் குதித்தான். அவள் அவனிடம் இருந்து ஓடுகிறாள் என்ற எண்ணமே அவனை வேறு எதையும் சிந்திக்க விடாமல் கோபப்பட செய்தது.
“எல்லாரும் நம்மளை பார்க்கிறாங்க….ப்ளஸ்….” அம்மு சங்கடமாக சொல்ல,
அவள் கையை பிடித்தவன், அவள் இழுக்காத குறையாக காரில் ஏற்றி கொண்டு பறந்தான். அவன் செல்லும் வேகத்திற்கு பயந்தவள், அவனிடம் சொல்லி பிரயோஜனம் இருக்காது என்பதால் கண்ணை இறுக மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டாள். அவளை கண்டவனின் கால்கள் தானாக வேகத்தை குறைத்தது. படுத்துறா என்னை…. என்று முனகியும் கொண்டான். வேகம் குறைந்தது உணர்ந்தவள், கண்ணை திறக்கவும் வண்டி நிற்கவும் சரியாக இருந்தது. ஒரே ஒரு ஒற்றை பாதை செல்லும் அந்த இடத்தில் பேருக்கு கூட எந்த கட்டடமும் இல்லை. இருந்த அந்த ஒற்றை ரோட்டில் இருந்து வண்டியை இறக்கி ஒரு மரத்தின் கீழே நிறுத்தி இருந்தான் கேபி.
அவனின் பார்வையும் ஆளில்லாத அந்த பிரேதேசமும் அவளுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வை கொடுத்தது. அதை உணர்ந்து கொண்டவன்,
“என்ன சில்மிஷம், பயமா? இல்லை அத்தான் கிட்ட இருந்து பெர்பார்மன்ஸ் எதிர்பார்க்கிறியா ….?” என்றான் கிண்டலாக.
பயம் இல்லை என்றால் வேறு மாதிரி கேட்பான்…. என்ன சொல்வது என்று புரியாமல்,
“எனக்கு பயமும் இல்லை, என்ன நடந்தாலும் கவலையும் இல்லை….” என்றாள். அவனின் செயல் அவளை பாதிக்காது என்பது போல். அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே, தாத்தா கேபியை அழைக்க, அவர் சொன்ன விஷயத்தை கேட்டு குறைந்து இருந்த ஆத்திரம் மீண்டும் தலை தூக்கியது. போனை வைத்தவன், அம்முவிடம்,
“இப்போ நான் உன்னை உங்க வீட்டில கொண்டு போய் விடுறேன்…. நீ உங்க அப்பா கிட்ட நான் அத்தானை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் சொல்ற…. புரியுதா….?” என்றான் அவளிடம் அழுத்தமாக.
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது…. எல்லாம் உங்க இஷ்டம் இல்லை….”
“உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்காரே உங்க அப்பா, அப்போ அவனை கட்டிக்க போறியா…. அவன் உன் கிட்ட வந்து, இப்படி எல்லாம் செய்வான், பரவாயில்லையா….?” என்றவன் மெதுவாக அவள் விரல்களில் இருந்து தன் ஒற்றை விரலால் வருடியபடி மேலறியவன், சங்கு கழுத்தில் கோலமிட்டு, உதட்டின் வளைவுகளை அளந்தான். செய்வதோடு மட்டுமின்றி இப்படி எல்லாம் எவனோ வந்து செஞ்சாலும் உனக்கு ஒன்னுமில்லை தானே…. யாரை வேணா கட்டிக்குவே தானே என்ற கேபியின் குரலில் சட்டென்று உடைந்து அழுதாள் அம்மு. அவளின் ஆழ் மனதில் புதைத்து வைத்திருந்ததை அவன் தோண்ட, அழுகை பொங்கியது அவளுக்கு. எதற்கு விடை காண வேண்டாம் என்று அவள் இருந்தாலோ அதற்கு தானாக விடை கிடைக்கும் படி செய்தான் கேபி.
உடைப்பெடுத்த கண்ணீரை கண்டவன், அது கன்னத்தில் வழியும் முன் சுண்டி விட்டான். அவளை ஆழ்ந்து நோக்கி விட்டு, அவள் இதழ்களை நிறுத்தி நிதானமாக பற்றினான். பற்றியவன், அதில் ஆழ்ந்து விட, தவித்து தடுமாறியவளின் மனதை திசை திருப்பி தன்னில் ஆழ்ந்து போகுமாறு செய்தான். அவ்வளவு நேரம் அவனுக்கு இருந்த ஆத்திரம் அமைதியாக மாறியது. அதே நேரம்,
அம்முவின் வீட்டிற்கு அமைதியாக வந்திருந்த கிஷோருக்கு ஆத்திரம் அடங்காமல் பெருகியது!