91. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(7)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம்‌ 91

 

அன்று பாலர் பாடசாலையில் சிறுவர் தினத்திற்காக விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனனி நேரத்துடன் எழுந்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தாள்.

 

“ஜானு! என்ன கிஃப்ட் தருவாங்க?” ஆவலுடன் கேட்டவாறு அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான் அகி.

 

“ஜானு ரொம்ப மோசம் டாடி. என்ன தருவாங்கனு சொல்லுறதே இல்ல” யுகன் தந்தையிடம் முறைப்பாடு செய்ய, “தரும் போது தருவாங்க டா. அவ டீச்சர் தானே? உங்க கிட்ட சொன்னா சர்ப்ரைஸ் பண்ண முடியாம போயிருமேனு நெனக்கிறா” என்று கூறியவனின் பார்வை அவள் மீது நிலைத்திருந்தது.

 

கண்ணாடி முன் நின்று முடி சீவிக் கொண்டிருந்தாள் ஜனனி. பவுடரை மட்டும் பூசிக் கொள்ள, “லிப்ஸ்டிக் பூச மாட்டியா நீ?” என்று கேட்டான் சத்யா.

 

“எனக்கு அதெல்லாம் பிடிக்காது. உதட்டை பளிச்சுனு காட்டுற மாதிரி இருக்கும்னு போட மாட்டேன்” என்று பதில் தந்தாள்.

 

“நானும் வரனுமா?” என்று சத்யா கேட்க, “அதென்ன வரனுமா? கண்டிப்பா வரனும். எல்லாரோட டாடியும் அங்கே வருவாங்க. நீங்க தான் அவ்வளவா வர மாட்டீங்க. ஜானு கூடவே அனுப்பி வைப்பீங்க. இப்போ ஜானு டீச்சர்ஸ் கூட வேலையா இருந்தா எங்களைப் பார்த்துக்க நீங்க வேணும்” என்றான் யுகன்.

 

“சரிடா சரி. நான் வர்றேனே” அவளுக்குப் பொருத்தமான நிறத்தில் ஷர்ட் ஒன்றை அயர்ன் செய்ய ஆரம்பித்தான்.

 

அவளுக்காகவே சிந்தித்தது அவன் மனம். அவனது சிந்தையெங்கும் இந்த அன்புப் பெண்ணவளே முழுதாக ஆட்கொண்டிருந்தாள்.

 

யுகனும் அகிலனும் ஒன்று போல் உடை அணிந்திருந்தனர். அதனை சத்யா தான் வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

 

“டாடியும் ஜானுவும் சேம் கலர்” என்று அகி கண்களில் மின்னலுடன் மொழிய, ஜனனியின் விழிகள் வேங்கையை நோக்கின. 

 

இதழ் பிரித்துப் புன்னகைத்தான் சத்யா. அவளோ இரு புறமும் தலையசைத்து விட்டு “போகலாமா?” என்று கேட்டாள்.

 

“டேய்! டீச்சருக்கு நீங்க ரெண்டு பேரும் மாறிப்படாதா? இன்னிக்கு ஒரே மாதிரி ட்ரெஸ் வேற பண்ணி இருக்கீங்க?” என்று கேட்டான் ரூபன்.

 

“நோ ரூபி! நாங்க முடி சீவி இருக்கிற ஸ்டைல் வேற. நான் சும்மா வாரி இருக்கேன். அகி சைடா சீவி இருக்கான். சோ அதை வெச்சு எங்க டீச்சர்ஸ் கண்டுக்குவாங்க” என்றுரைத்தான் யுகன்.

 

“இது தான் உங்க ட்ரிக்கா? சூப்பர்” இருவரது கன்னத்தையும் பிடித்துக் கிள்ளி விட்டு ஹாஸ்பிடலுக்குப் புறப்பட்டான் ரூபன்.

 

சத்யாவும் காரை எடுத்துக் கொள்ள, பூங்கா ஒன்றில் தான் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் பல்வேறு வண்ண பலூன்கள் வழங்கப்பட்டன.

 

“நான் அங்கே போய் இருக்கேன்” என்றவாறு சென்று விட்டாள் ஜனனி.

 

சத்யாவின் பார்வை அவளை விட்டும் நகர மறுத்தது. இன்று அவன் பிறந்த நாளுக்காகக் கொடுத்த சாரியை அணிந்திருந்தாள். அதில் மேலும் அழகாகத் தெரிந்தாள் மாது.

 

‘இவ என்னை ஏதோ பண்ணுறா’ என உள்ளுக்குள் முணுமுணுத்தவனுக்கு அந்த உணர்வு கூட புது சுகமாக இருந்தது.

 

“டாடீஈஈஈ” என்று அழுது கொண்டு வந்தான் அகி.

 

“அகி என்னாச்சு? விழுந்துட்டியா தங்கம்? என்னாச்சு?” மகனைப் பதற்றத்துடன் அவனை ஆராய்ந்தான்.

 

“இவன் யாரையோ பார்த்தான். பார்த்ததும் அழுதுட்டு வந்தான். நானும் பின்னாடி வந்துட்டேன் டாடி” என்று விளக்கம் கொடுத்த யுகி, “அழாத அகி! என்னாச்சு உனக்கு? யாரைப் பார்த்த?” எனக் கேட்க, அவன் மௌனமாக இருந்தான்.

 

சிறிது நேரத்தில், பாட்டுப் போட்டு ஆட வைத்தனர். அகியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான் சத்யா. ஜனனிக்கோ இதையெல்லாம் பார்க்கும் நேரமில்லை. அவள் அங்குமிங்கும் ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். கீ டேக், பொம்மைகள், பந்துகள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

 

சிறுவர் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. ஒவ்வொருவரும் பாடினார்கள். பேச்சுப் பேசினார்கள்.

 

“நீ போய் ஏதாவது பண்ணு யுகி” என்று சத்யா யுகனிடம் சொல்ல, “எனக்கு பயமா இருக்கே” என்றான் கண்களைச் சுருக்கி.

 

சகோதரனின் காதில் ஏதோ சொன்ன அகிலன், எழுந்து சென்றான். அவன் கைகளில் மைக் வழங்கப்பட்டது.

 

“நீங்க எதுக்காக வந்தீங்க?” ஜனனி தான் ஒலி வாங்கியின் மூலம் கேட்டாள்.

 

“நான் ஒருத்தரைப் பற்றி பேசப் போறேன். எனக்கு இந்த உலகத்துலயே பிடிச்ச ஆளைப் பற்றி. நான் குட்டிப் பாப்பா தானே? என் குட்டி உலகத்தில் நிறைய கவலையா இருந்தேன். எனக்கு கவலையை இல்லாம பண்ணிட்டு சந்தோஷத்தைக் கொண்டு வந்தவங்க தான் என் ஜானு. எனக்கு என் ஜானுவைத் தான் ரொம்ப பிடிக்கும்” என்று அவன் சொல்ல, நெகிழ்ந்து போனாள் அவள்.

 

அவனிடம் வந்த யுகனும் மைக்கை வாங்கி, “எனக்கு ரொம்ப பிடிச்சது என் டாடியைத் தான். அவரைப் போலவே எனக்கு அன்பு காட்ட வந்தது என் ஜானு! அன்புன்னா அப்படி ஒரு அன்பைக் காட்டினாங்க. நான் கோபப்பட்டாலும் எனக்காக யோசிச்சு, எனக்காக எல்லாமே பண்ணுனாங்க. அவ எனக்கு தேவதை” என்று சொன்னான் யுகன்.

 

ஜனனியின் கையில் இருந்து மைக்கை வாங்கிய இன்னொரு ஆசிரியர், “ஜானுனு தான் நீங்களும் கூப்பிடுவீங்களா? சோ கியூட்! அவளுக்காக ஒரு பாட்டு பாடுங்க” என்றிட, இருவரும் யோசனைக்குப் பின் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு பாட ஆரம்பித்தனர்.

 

“அம்மா அம்மா அம்மா நீயே

அன்பின் உருவம் நீயே” என்று அகி பாட, “உலகில் உலகில் உன் போல் சொந்தம்

யாரும் இல்லையே” என்று கைகளை விரித்து ஜனனியைக் காட்டிப் பாடினான் யுகி.

 

அவளது விழிகள் அகன்று விரிந்தன. சத்யாவும் தன் கண்களை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஜனனியின் அருகில் வந்த இருவரும், “அம்மா ஐ லவ் யூ! மம்மி ஐ லவ் யூ

அம்மா ஐ லவ் யூ! மம்மி ஐ லவ் யூ” என்று பாட, கண்கள் கலங்கிற்று அவளுக்கு.

 

எத்தனை நாட்களாகக் கேட்க ஏங்கிய வார்த்தைகள் அவை? இன்று பாட்டாகப் பாடி, தாய் எனும் அந்தஸ்தை அவளுக்காக வழங்கி விட்டார்கள்.

 

இதைத் தவிர வேறு என்ன வேண்டும் அவளுக்கு? இருவரையும் வாரி அணைத்துக் கொண்டாள். அவ்வளவு தான் அவளால் உணர்வுகளைக் காட்ட முடிந்தது.

 

நிகழ்ச்சி முடிந்ததும், இருவரும் “அம்மாஆஆ” என்று ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டனர்.

 

இப்பொழுது அங்கு யாரும் இல்லையே. 

“என் தங்கங்களா! லவ் யூ சோ மச்” இருவரையும் அணைத்து முத்த மழை பொழிந்தாள்.

 

தனது உணர்வுகளை வார்த்தை கொண்டு வடிக்க முடியவில்லை. அவர்களது வாயால் ‘அம்மா’ என்று அழைக்கக் கேட்ட நொடி, அவளுள்ளும் தாய்மை தாராளமாய் சுரக்கத் துவங்கிற்று.

 

புன்னகை முகமாக நின்றிருந்த சத்யாவுக்கோ அவளின் மகிழ்ச்சி நிறைந்த வதனம் இன்பத்தை வாரி இறைத்தது. 

 

“ஜானு” என்று அழைத்த நொடி, அவன் கண்கள் எங்கோ நிலைகுத்தி நிற்க, அதிர்ந்து நிற்கலானான். அகியின் அழுகைக்குக் காரணமான இனியா தான் அங்கு நின்றிருந்தாள்.

 

யுகியும் அகியும் ஜனனியின் கைகளை இறுக்கிப் பிடிததுக் கொள்ள, அந்த அழுத்தமே அது யார் என்பதை உணர்த்திற்று அவளுக்கு.

 

“அகி! வா பாப்பா” அவள் அழைக்க, இவனோ பின்னால் சென்றான்.

 

“வேணாம்னு விட்டுப் போனவ தானே நீ. இப்போ எதுக்காக வந்த? என் பையன் கிட்ட உனக்கு என்ன பேச்சு?” அழுத்தமான குரலில் கேட்டான் சத்யா.

 

“நா..நான் அவங்க கூட வந்தேன். அது என் ஹஸ்பண்ட். அடுத்தது அவர் பசங்க” அங்கு நின்றிருந்த மூன்று சிறுவர்களைக் காண்பித்தாள்.

 

ஒரு ஒரு வயது வித்தியாசம் இருந்தாலும் இருக்கலாம். அதில் ஒருவன் நர்சரி படிக்கும் வயதில் இருந்தான்.

 

“அவருக்கு பிள்ளை இருக்கா?” இதனைக் கேட்டது அகியே.

 

இத்தனை நாள் அவன் இருந்த போது இந்தப் பிள்ளைகளைப் பார்த்தது இல்லையே. ஆகையால் அவன் குழம்பிப் போனான்.

 

சத்யாவைப் பார்த்தவளோ, “அவர் ஏற்கனவே கல்யாணமானவர்னு மறைச்சுட்டார் என் கிட்ட. ஃபர்ஸ்ட் வைப் இறந்து போயிட்டாங்கனு பசங்களைக் கூட்டி வரவும் தான் உண்மை தெரிஞ்சது. என்ன பண்ணுறது? எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாம வாழுறேன், நான் செஞ்ச தப்புக்கு தண்டனையா நெனச்சிட்டு.

 

கர்மா இஸ் பூமராங்னு சொல்லுறது நிஜம் தான் போல. சொந்தப் பிள்ளைங்களை தொலச்சிட்டேன். அவங்களோட அம்மா என்கிற அழைப்பைக் கேட்குற வாய்ப்பை இழந்துட்டேன். அந்தப் பிள்ளைங்க என்னை சித்தினு தான் கூப்பிடுறாங்க. அம்மாங்குற வார்த்தை இனி எனக்காக எழுதப்பட்டு இல்லையோ என்னவோ? நான் பெத்த பிள்ளைங்களை ஒரு அம்மாவா நின்னு பார்க்காததுக்காக எனக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது” அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

சத்யா இறுகிப் போய் நின்றிருந்தான். தன் பிள்ளைகளை விட்டுச் சென்று எத்தனை கஷ்டங்களைக் கொடுத்தாள்? இப்போது அவள் அழும் போது ஆறுதல் சொல்லக் கூட அவனது ரணங்கள் இடம் தரவில்லை.

 

“இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா போறேன். இவங்க ஒரு நல்ல தாய் கிட்ட சேர்ந்துட்டாங்க என்றதே எனக்குப் போதும். ரெண்டு பேரும் நல்லா இருங்க” அவர்களது தலையைத் தடவி விட்டுச் சென்றாள் இனியா.

 

ஜனனியின் பார்வை அகிலனைத் தழுவியது. வேலைப்பளுக்கு மத்தியிலும் அவன் அழுவதைக் கண்டிருந்தாளே?

 

“நீ இவங்களைப் பார்த்து தான் அழுதியா?” என்று வாய் ஒரு கேள்வி கேட்டாலும், அவளின் பார்வையோ ‘நீ அம்மா என்று அழைத்தது இனியாவுக்குக் காட்டவா?’ எனும் கேள்வியைத் தாங்கி நின்றது.

 

“நான் அழுதது அவங்களைப் பார்த்து தான். எனக்கு ஒரு மாதிரி கவலையா வந்துடுச்சு. அடுத்த நிமிஷமே என் கண்ணு அம்மானு சொல்லி உங்களைத் தான் பார்த்தது. எனக்கு அம்மாவா இருக்கிறது நீங்க தான். இனி எப்போவும் நீங்க தான் என் அம்மா. எனக்கு வேறு யாருமே வேண்டாம். உங்க பையனா மட்டும் இருப்பேன். அவங்களை நெனச்சுப் பார்க்க மாட்டேன். திரும்ப கண்டா அழவும் மாட்டேன்” ஜனனியை இறுக்கி அணைத்துக் கொண்டான் அகி.

 

“நான் அறிஞ்சு இதுவரை யாரையும் இப்படி கூப்பிட்டதில்ல. எனக்கு நீங்க தான் ஜானு அம்மா. எந்த உறவை வெறுத்தேனோ, அதை நீங்க பாசத்தால அழகா மாத்திட்டீங்க. எனக்கும் பிடிச்சது யாருன்னு கேட்டா என் டாடியும், நீங்களும் தான். அப்பறம் அகியும்” என்று யுகன் கூற, அவளுக்கோ மனதெங்கும் பூமாரி பொழிந்தது.

 

“என்னை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைக்கிறீங்க. அவ்ளோ ஹேப்பியா இருக்கு. தாங்க் யூ டா. லவ் யூ லவ் யூ” அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.

 

“ஜானு சொல்லி பழகிப் போச்சு. அதனால நாங்க அப்படியே கூப்பிட்டா கண்டுக்க வேணாம். மத்தவங்க முன்னால உங்களை அம்மானு தான் கூப்பிடுவோம் சரியா?” என்று சொன்னான் அகி‌.

 

“வாயால கூப்பிடனும்னு இல்லயே அகிம்மா. உங்க மனசுல நான் அம்மாவா பதிஞ்சுட்டேனே. அது போதும் எனக்கு” இருவரையும் அணைத்துக் கொண்டவளின் பார்வை, கணவன் மீது கனிவுடன் நிலைபெற்றது.

 

தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!