92. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(5)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!!

ஜனனம் 92

 

மகிஷா, நந்திதா, ஜனனி மூவரும் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தனர். 

 

“ஹேய் நெஜமாவா சொல்லுறீங்க? அய்ம் சோ ஹேப்பி. அச்சோ தலை கால் புரியல” மகிழ்வின் உச்சத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது ‌ஜனனிக்கு.

 

“ஆமாக்கா. அப்பா இன்னும் ஒழுங்கா பேசல. இருந்தாலும் நந்துவை சேர்த்துக்கிட்டார். அவர் கோபமும் போகப் போக சரியாகிடும்” என்று மகி கூற, “அப்படி ஏத்துக்கிட்டதே பெரிய‌ விஷயம். நான் பண்ணுன வேலைக்கு அவர் மன்னிப்பே தண்டனை தான். அப்பா முகத்தைப் பார்க்கும் போது எனக்கு அதான் ஞாபகம் வருது. காலம் முழுக்க அந்த நினைவு வாட்டிட்டே இருக்கும்” கவலை படர்ந்தது நந்துவின் முகத்தில்.

 

“ப்ச் நந்து! பழசைப் பேசாத. நடக்கிறதை ஏத்துக்கிட்டு சந்தோஷமா இரு. இனிமே உனக்கு எந்த கவலையும் வேண்டாம்” என்று ஜனனி கூற, “அம்மா” என்றவாறு அவள் மடியில் அமர்ந்தனர் அகியும் யுகியும்.

 

“என்ன கண்ணா?” இருவரையும் தாயின் நேசத்துடன் நோக்கியது அவள் பார்வை.

 

ஜனனியின் மகிழ்வு பூத்த முகத்தை மனநிறைவுடன் பார்த்து ரசித்தனர் சகோதரிகள். இரண்டாம் தாரம் எனும் போது தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை நினைவுபடுத்தினாள் நந்து. ஆனால் அதனை இயல்பாக ஏற்றுக் கொண்டாள் ஜனனி. இன்று இரு பிள்ளைகளின் தாய் எனும் உன்னத அந்தஸ்தைப் பெற்றும் விட்டாள்.

 

நந்திதா ஒன்று மட்டும் புரிந்து கொண்டாள். கடவுள் யாருக்கு எது பொருந்துமோ அதைத் தான் வழங்குவார். நாம் விரும்பியதை மறுப்பதும் கூட, நமக்குப் பொருத்தமானதை வழங்கத் தான்.

 

“டாடி உங்களைக் கூப்பிடுறார். ஊட்டி விடட்டுமாம்” என்று அகி சொல்ல, சங்கடத்துடன் நெளிந்தவளைப் பார்த்துச் சிரித்தனர் சகோதரிகள்.

 

“சரி நான் வர்றேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தவள், “வரன் வந்திருக்குனு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. நீ என்ன சொன்ன மகி?” தங்கையிடம் கேட்டாள் ஜனனி.

 

“சொல்ல என்ன இருக்கு? அவங்களுக்கு விரும்பம்னா செய்யட்டும். நான் மறுப்பு சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன் தானே?” என்று மகி சொல்ல, “உன்னையும் கேட்கனும்ல? ஏன்னா கட்டிக்கப் போறது நீ தான். அப்பா அதில் உறுதியா இருக்கார். உன் கிட்ட கேட்டா நீ உன் மனசுல உள்ளதை சொல்லு” அழுத்தமாக உரைத்தாள்.

 

“ஆமா மகி‌. மனசுல ஏதாவது இருந்தா அதை வெளிப்படையா சொல்லிடு. உள்ளுக்குள்ள வெச்சிட்டு வாழுறதும் கஷ்டம். அதைச் சொல்லாம இருந்து, ஒரு கட்டத்தில் நாம நிலை தடுமாறி எடுக்குற முடிவுகள் நம்ம குடும்பத்தையும் பாதிக்கும்.

 

அதனால கேட்குற நேரமே நீ உண்மையான பதிலை மனசாட்சிக்கு விரோதம் இல்லாம சொல்லு. என்ன சொல்லுவாங்களோனு பயந்து சொல்லாம இருந்தா, அது உன்னையும் சேர்த்து உன்னைச் சுற்றி உள்ளவங்களையும் பாதிக்கும். என் விஷயத்தில் நடந்த தப்பு உனக்கு நடந்துடக் கூடாதுன்னு சொல்லுறேன்” நந்திதாவும் தனது பக்கத்து அறிவுரையை வழங்கினாள்.

 

மூச்சுத் திணறியது மகிக்கு. ஆணி வேரூன்றி முளைத்து விட்ட காதலை அல்லவா அவள் அடியோடு பிடுங்கி எறியப் பார்க்கிறாள்? அது சாத்தியமா என்று தெரியவில்லை. இருந்தும் அதனை சாய்க்கப் போராடுகிறாள் பேதையவள்.

 

“யார் கிட்ட அண்ணி தீவிர டிஸ்கஷன்?” சரியாக அந்நேரம் பார்த்தே வந்து விட்டான் ரூபன்.

 

“சிஸ்டர்ஸ் கூட தான் ரூபன்” என்று பதிலளித்தவாறு அலைபேசி அவனுக்குத் தெரியும்படி காண்பித்தாள்.

 

மகியின் விழிகள் அவனை நோக்கின. காதலும் ஏக்கமும் கலந்த பார்வை அவன் மீது நிலை பெற்றது. அந்தப் பார்வையின்‌ ஆழம் அவனையும் தாக்கியது.

 

அவன் ஏதோ முணுமுணுக்க, “என்ன ரூபன் சொல்லுறீங்க?” என்று கேட்டாள் நந்திதா.

 

“என் கேர்ள் ஃப்ரெண்டை நெனச்சி பாட்டுப் பாடுறேன்” என்றவனைப் பார்த்து, “கேர்ள் ஃப்ரெண்ட் இருக்குனு மட்டும் தான் சொல்லுறீங்களே தவிர, யாருன்னு சொல்ல மாட்றீங்க. என் கொழுந்தனாருக்கு என்ன குறைன்னு அந்த பொண்ணு மறுக்குதுனு தெரியல. கையில மட்டும் அகப்பட்டா நல்லா நாலு கேள்வி கேட்டு விட்றுவேன்” என்று ஜனனி சொல்ல, மகிக்கு நெஞ்சாங்கூடு சில்லிட்டது.

 

“மறுக்குது இல்ல மறைக்குது. இருக்கிற காதல் வெட்ட வெளிச்சமா தெரியும் போது, முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிற வேலையைப் பார்க்கிறா. லவ்வு இல்லனு வாயால சொல்லுறா. ஆனால் அவ கண்ணுல டன்னு கணக்குல காதல்” தன்னவளின் கண்களை ஊடுறுவித் தாக்கினான் ரூபன்.

 

“யார்னு சொல்லுங்க. நாமளும் பேசி பார்க்கலாம்ல? மகி உங்க ப்ரெண்டு தானே? அவ கூட சப்போர்ட்டுக்கு வருவா” என்று ஜனனி சொல்ல, “மகி இப்போ என் கூட பேசுறதே இல்லண்ணி. எல்லாரும் அப்படித் தான். என் கூட பழகிட்டு கொஞ்ச காலத்தில் மறந்துடு, அழிச்சிடுனு சொல்லி உறவை கட் பண்ணிப்பாங்க” என்று பெருமூச்சு விட்டான் அவன்.

 

“மகி அப்படி பண்ண மாட்டா. அவளுக்கு யாரையாவது பிடிச்சா அவ்ளோ சீக்கிரம் விட்டுக் கொடுக்க மாட்டா” என்ற நந்துவின் வார்த்தை கேட்டு, மகி அவனையே இமைக்க மறந்து பார்த்தாள்.

 

அவள் கண்களில் அத்தனை காதல். அவனிடம் அதைக் கொட்டித் தீர்ப்பதற்கான தவிப்பும் கொட்டிக் கிடந்தது. அதை அவன் உணராது இருப்பானா?

 

” 🎶காதல் கேட்டுக் கொண்டு வருமா

தோட்டத்துக்குள் பறவை வந்தால்

வேலி என்ன தடுத்திடுமா?🎶

 

🎶காதல் காட்டுச்செடி போலே

கட்டளைகள் போடும் போதும்

பூக்கள் பூக்க மறுத்திடுமா” 🎶 

என்று பாடிக் கொண்டே செல்ல, அதனை உள்வாங்கியவளின் உள்ளுக்குள் காதல் பிரவாகம்.

 

……………..

“வினிமா…!!” இரவு நேரம் அவளது அழைப்புக்குப் பதில் கொடுத்தான் தேவன்.

 

“அப்படி சொல்லாதீங்க” சுள்ளென்று எரிந்து விழுந்தாள் வினிதா.

 

“பேபிமா! ஹனிமா! செல்லம்மா! கண்ணம்மா.. உனக்கு என்னம்மா?” அவன் ராகம் போல் கேட்கவும், “எந்த மாவும் எனக்கு தேவையில்லை. எல்லாத்தையும் நீயே வெச்சுக்க” கோபத்தில் கொந்தளித்தாள் அவள்.

 

“சாரி டி! எனக்குத் தெரியும் நீ என் கூட கோபமா இருக்கேன்னு. காரணம் நான் தான்னும் தெரியும். உன் மாமா பாவம்ல? இப்படி கோபப்பட்டு இந்த பொன்னான நெஞ்சை புண்ணாக்கலாமா?” பாவமாகக் கேட்டான் தேவன்.

 

“ஏதோ கொஞ்சம் நேரம் தான்னு சொல்லி கூட்டிட்டு போனாங்க. அப்பறம் ஃப்ரெண்ட்ஸ் கூட இருந்ததுல நேரம் போனதே விளங்கல. இதைத் தானே சொல்லப் போற?” என்று அவள் கேட்க, 

 

“இல்ல வினி! இன்னிக்கு கொஞ்சம் டிப்ரண்டா சொல்லலாம்னு நெனச்சேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் மீட் பண்ணுனது‌. வந்ததில் இருந்தே அவனவன் லவ்வர் கூட பேசிட்டு இருந்தாங்களா அதனால ஃபோனைக் கூட வாங்கி ஆஃப் பண்ணிட்டாங்க. இதுல எப்படி உன் கூட பேசுறது?” என்று பதிலளித்தான் அவன்.

 

“பேச வேண்டாம். வேண்டவே வேண்டாம் சாமி. நீங்க போய் ஃபோனை வெச்சிட்டு உங்க ஃப்ரெண்ட்ஸ் கூடவே பேசிட்டு இருங்க. நான் போறேன்” அழைப்பைத் துண்டித்து விட்டாள் வினிதா.

 

அவன் அழைத்து, “ஏன்டி இப்படி பண்ணுற? உன் கூட பேச முடியுமான டைம் பேசுவேன் தானே? ஒரு நாள் போனதுக்கு இப்படி பண்ணாத” ஆதங்கத்துடன் சொன்னான்.

 

“ஒரு நாள் தான். ஆனாலும் என்னால உன் கூட பேசாம இருக்க முடியல. ரொம்ப மிஸ் பண்ணுனேன். வரலனு சொல்லிட்டு போனா கூட இவ்ளோ இருந்திருக்காது. வருவேனு டைம் சொல்லிட்டு போனியே. அதான் அந்த டைம் வரும் போது தவிச்சு போயிட்டேன்” அவளுக்கு குரல் கரகரத்தது.

 

“எனக்கு புரியுது வினி. நீ எனக்காக காத்துட்டு இருப்பியேனு என் மனசு உன்னை நெனச்சு தான் துடிச்சுது. இருந்தும் வர முடியாத சிட்டுவேஷன். சாரி டி” அவனும் மென் குரலில் மன்றாடினான்.

 

“சரி விடு தேவ். அப்பா எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க போறதா பேசிக்கிட்டார். எனக்கு என்ன பண்ணுறதுன்னே புரியல டா. அதை நெனச்சு ஒரு பக்கம் டென்ஷனா இருக்கு” 

 

“உங்க அப்பா ஏன் தான் இப்படி பண்ணுறாரோ. பேசாம நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா?” அவன் கேட்ட போது அவளிடம் மௌனமே கிடைத்தது.

 

“சொல்லு வினி. வர்றியா?”

 

“வர்றது பெரிய வேலை இல்ல. ஆனால் அதுக்கு பிறகு பிரச்சினை கிளம்புமே. அதை எப்படி சமாளிக்கிறது? அதுவும் இல்லாம, என் கல்யாணம் அப்பா சம்மதத்தோட நடக்கனும்னு ஆசைப்படுறேன். நாமளா போய் ஒன்னு சேர்றதை விட, அவரா முன்வந்து சந்தோஷமா என்னை உன் கையில் ஒப்படைக்கனும். அதான் எனக்கு திருப்தியா இருக்கும்” தனது விருப்பத்தைக் குறிப்பிட்டாள் காரிகை.

 

“உன் சந்தோஷம் அதுன்னா எனக்கும் அது தான் வேணும். உங்க அப்பா சம்மதத்தை எப்படியாவது வாங்குவோம். நீயும் அதுக்கு அவர் கிட்ட பேசு வினி”

 

“அய்யோ எனக்கு பயமா இருக்கு” அவளுக்குப் படபடத்தது.

 

“அவர் வேற யாரோ இல்ல. உன் அப்பா தானே வினி? உனக்கு வேணும் என்றதை நீ கேட்காமலே பார்த்து பார்த்து பண்ணி தந்தவர். உனக்கு வேணும் என்றதையும் நீ அவர் கிட்ட கேட்கனும் இல்லையா?

 

அவர் கோபமா இருக்கார்னு விலகி விலகிப் போனா விரிசல் வருமே தவிர, உங்களுக்குள்ள புரிதல் வராது. உன் மனசுல உள்ளதை வெளிப்படையா சொல்லு. எனக்கு தேவ்வைப் பிடிச்சிருக்கு. அவன் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது. நீங்க என்ன சொல்லுறீங்கப்பானு கேள்” என்று அவன் சொல்ல,

 

“அவர் தான் வேணாம்னு சொல்லிட்டாரே. மறுபடியும் சொல்லி என்ன ஆகப் போகுது?” அவளுக்கோ தந்தையை எண்ணிப் பயம்.

 

“நீயா ஒரு முடிவை சொல்லாத. போய் பேசு. மகள் என் கிட்ட வந்து சொல்லுறாளேனு அவர் மனசுல நினைக்கக் கூடும். அம்மா மூலமா நீ அறிஞ்சதை விட, அவர் வாயாலயே அவருடைய எண்ணங்களை தெரிஞ்சுக்கலாம். உனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்” என்று தேவ் சொல்ல, அவன் சொல்வது அவளுக்கும் சரியாகப் பட்டது.

 

“அதுவும் சரி தான். இருந்தாலும் படபடனு இருக்கு. நான் அப்பா கூட இப்படி பேசுனதே இல்ல. ஏதாவது தேவைக்கு தான் பேசுவேன்” என்றாள் வினி.

 

“உனக்கு நான் அப்போவும் சொல்லி இருக்கேன். அப்பா கூட ஃப்ரெண்ட்லியா பழக சொல்லி. அப்போ தானே தயக்கம் இல்லாம உன்னால அவர் கூட பேசியே முடிவுகளை எடுக்க முடியும்‌. அவர் கிட்ட முதல்ல பேசு. ஒரு தடவை வாய் திறந்து உன் காதலை அவருக்கு தெரியப்படுத்து. அப்பறம் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” அவன் சொன்னதைக் கேட்டவள், “ம்ம்” அரை மனதோடு தலையசைத்தாள்.

 

“அவர் உன் அப்பா வினி. உன் மேல கோபப்படவும் உரிமை இருக்கு. உனக்காக யோசிக்கவும் உரிமை இருக்கு. நீ அவரையும் விட்டுக் கொடுக்காம எனக்காக பேசனும் சரியா?”

 

“சரி தேவ். பார்க்கிறேன்” என்றவளுக்கோ தந்தையின் நினைவுகள்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!