💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 93
இரவு நேரம். சமையலை முடித்துக் கொண்டு வந்தார் மேகலை. ஜனனி அனைவரையும் அழைத்து வர, சத்யாவின் தோள்களில் தொங்கிக் கொண்டு வந்தான் யுகி.
“என்னடா குரங்கு வித்தை காட்டிட்டு இருக்க?” என்று ரூபன் கேட்க, “உங்களுக்கும் பழக்கி விடலாமேனு தான். வர்றீங்களா ரூபி?” என்று கேட்டவனின் தலையில் வலிக்காமல் கொட்டினான் ரூபன்.
“ஜானு! சித்தா எதுக்கு ஃபோன் பார்த்து சிரிக்கிறார்?” அகிலன் தீவிர யோசனையில் கேட்க, “ஃபோன்ல சித்தாவுக்கு பிடிச்ச எதுவும் இருக்கலாம். அதனால தான் சிரிக்கிறார்” என்றாள் ஜனனி.
“இருங்க போய் பார்க்கிறேன்” பின்னால் சென்று தேவனின் அலைபேசியைப் பார்த்தவனோ, “ஆமா! வினி சித்தியைப் பார்க்கிறார்” என்று சத்தமாகக் கத்த,
“அய்யோ” பதறியடித்துக் கொண்டு நிமிரிந்த தேவன், யாவரும் தன்னை நோக்குவது கண்டு அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.
“என்ன ப்ரோ இப்படி பண்ணுறீங்க? டுவெண்டி போர் ஹவர்ஸும் ரொமான்ஸா?” என்று ரூபன் கேட்க, “நீ நைட்டுக்கு மட்டும் ஃபோன் பார்த்து சோக கீதம் வாசிக்கிறியே. அதை நான் சொல்லட்டுமா?” என்று அவன் கேட்க,
“அப்படி மட்டும் பண்ணிடாத. அண்ணி இருக்காங்களே. அப்பறம் உனக்கு அவ்ளோ தான் டா” உடன் பிறந்தவனை முறைத்தான் ரூபன்.
“என்ன பேச்சு? ரகசியம் பேசக் கூடாதுன்னு சொன்னா கேட்கவே மாட்றீங்க” இடுப்பில் கை குற்றிக் கேட்டான் யுகி.
“இல்ல யுகி கண்ணா! ரூபியோட லவ்வர் பற்றி பேசிட்டு இருந்தோம்” என்று கூறி மற்றவனின் முறைப்பைப் பெற்றுக் கொண்டான் தேவன்.
“அவனைப் பற்றி பேசாத டா. லவ்வு லவ்வுனு சொல்லுறானே தவிர, அது யாருன்னு சொல்ல மாட்டேங்கிறான். இவனுக்கு என்ன நடக்குதுனு ஒன்னுமே புரியல” மகனை முறைத்தார் மேகலை.
“எனக்கு அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கலம்மா. காலம் முழுக்க சிங்கிள் சிங்கமாவே சுத்தனும் போல” பெருமூச்சொன்றை இழுத்து விட்டான் அவன்.
“அப்படிலாம் முடியாது. நீ யாரையாவது கட்டிக்கிட்டு தானே ஆகனும்? வினி வீட்டில் ஓகே ஆகிட்டா ரெண்டு பேர் கல்யாணத்தையும் ஒன்னா செஞ்சுடலாம்னு நெனக்கிறேன்” என்று மேகலை கூற, “ம்மா! எனக்கு அதெல்லாம் நடக்காது” அவர் மடியில் தலை வைத்துக் கொண்டான் ரூபன்.
“இவன் சரிப்பட்டு வர மாட்டான். தேவா! இவன் கிட்ட நீ ப்ராமிஸ் எதுவும் வாங்கலையா?” என்று அலுப்புடன் கேட்டான் சத்யா.
“ப்ராமிஸ் எதுக்குங்க?” புரியாமல் பார்த்தாள் ஜனனி.
“உங்களுக்கு விஷயம் தெரியாதே அண்ணி” துள்ளி எழுந்து அமர்ந்த ரூபன், “அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொன்னார். கைகேயி தக்க சமயத்தில் தசரதன் கிட்ட வரம் கேட்ட மாதிரி, தேவனும் அண்ணன் கிட்ட ஒரு நாள் கொடுத்த வாக்கை சொல்லித் தான் சம்மதம் வாங்கினான். அதைத் தான் அண்ணன் கேட்கிறார்” என்று அவன் கதை சொல்ல,
“ஓஓ இவ்ளோ நடந்ததா?” இதழ் குவித்தவாறு கணவனை ஏறிட்டாள் ஜனனி.
“நீ இப்போ சோகமா இருந்தியே. கதை சொல்ல வந்ததும் அதை மறந்துட்ட” என்று தேவன் சொல்ல, “போடா. நவீன கைகேயி” என்று கூறி அவனிடமிருந்து அடிகளை வாங்கிக் கொண்டான்.
“வாங்க வாங்க சாப்பிடலாம் பசிக்குது” என்று யுகி அழைக்க, “அதானே. வேற பேச்சுல சாப்பிடறதை மறந்துட்டோம்” என்றவாறு அவர்களை அமர வைத்தாள்.
ஜனனி அனைவருக்கும் பரிமாற, “நீயும் சாப்பிடு ஜானு” என்றார் மேகலை.
“இல்ல அத்தை. அப்பறமா சாப்பிடுறேன்” என்றவாறு சமயலறைக்குச் சென்றவள் வராமல் இருக்கவே சத்யாவுக்கு சிந்தனை அலைகள்.
அவனுக்கு ஊட்டாமல் இருக்க மாட்டாளே. இன்று என்னவானது என்று யோசித்தவாறு அவசரமாக சாப்பிட்டு முடித்து அவளைத் தேடிச் சென்றான்.
“என்னாச்சு ஜானு?” பின்னிருந்து கேட்ட குரலில் விலுக்கென்று திரும்பியவள், “ஒன்னும் இல்லையே” எனச் சொன்னாலும் அவள் விழிகள் தரை நோக்கித் தாழ்ந்திருந்தன.
“என்னைப் பார்” அவளது கையைப் பிடிக்க, “ஸ்ஸ்” என்றவாறு கையை இழுத்துக் கொண்டாள்.
அவளின் வலது கை விரல்களுக்கு இடையில் சற்றுப் பெரிய அளவிலான காயம். கை செவேலென சிவந்து போயிருந்தது.
“என்னாச்சு ஜானு? இது எப்படி? எப்போ?” படபடப்புடன் கேட்டான் சத்யா.
“ஒன்னும் இல்லங்க. நேற்று நைட் கரண்ட் போச்சே. அப்போ கேண்டில் பற்ற வைக்கும் போது, மிஸ்ஸாகி கை சுட்டுருச்சு. பெருசா எதுவும் இல்ல” என்று சொல்ல, “பொய் சொல்லி சமாளிக்காத ஜானு. உன் முகத்தைப் பார்த்தாலே புரியுது. நானும் உன்னைப் பார்த்துட்டு தான் இருந்தேன். என் கண்ணுல படாமலே ஓடிட்டு இருந்த. இதை வெச்சுட்டு சமைச்சு இருக்க. என் கிட்ட எல்லாம் மறைச்சிடுவியா?” சற்றுக் கடினமாகக் கேட்டான் அவன்.
“அப்படி இல்லங்க. உங்க கிட்ட சொல்லி கஷ்டப்படுத்த வேணாம்னு..” என்று அவள் இழுக்க, “அப்படியே ஒன்னு போட்டேன்னா பல்லு விழுந்துடும். நான் மட்டும் உன் கிட்ட என்ன நடந்தாலும் வந்து நிற்கனும். ஊட்டி விட சொல்லனும். எல்லாமே எதிர்பார்க்கனும். நீயும் எனக்கு அதையெல்லாம் பண்ணி விடனும்னு எதிர்பார்க்கிற.
அதே எதிர்பார்ப்பு எனக்கு இருக்கக் கூடாதா? நான் உனக்காக எதுவும் பண்ணக் கூடாதா? கை வலிக்குது, ஊட்டி விடுங்கனு உரிமையா கேட்க தோணலயா? எங்கே தோணும்? நீ தான் என்னை இன்னும் வேற ஆளா பார்த்துட்டு இருக்கியே” அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
“அய்யோ அப்படி இல்லங்க. ஏதோ தோணல எனக்கு. அதுக்காக இப்படி சொல்லாதீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு” கண்களைச் சுருக்கிக் கெஞ்சுதல் பார்வை பார்த்தாள்.
“உனக்கு தோணலனா என்ன? எனக்கு தோணுறத இப்போ நான் பண்ணுவேன். நீ பேசாம இருக்கனும். என் கூட வா” என்றவனது அதிகாரக் குரலுக்கு அடிபணிந்து சென்றான்.
மேசையில் இருந்த உணவைத் தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு மேல் மாடிக்குச் செல்ல, அவளும் அமைதியாக அவனைத் தொடர்ந்து சென்றாள்.
“இப்படி உட்கார்” ஊஞ்சலைக் காண்பிக்க, உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்தாள் ஜனனி.
அவன் உணவைப் பிசைந்து வாயருகே கொண்டு செல்ல, வாய் திறந்து வாங்கிக் கொண்டாள். அவனது முகத்தையே பாவமாகப் பார்த்திருக்க, கடுமை மாறாமல் தான் இருந்தது அவன் முகம்.
‘ஹிட்லர் ஹிட்லர்! கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்? இஞ்சி தின்ன மங்கி மாதிரி இருக்கிறதைப் பார்’ உள்ளுக்குள் பொரிந்து தள்ளியவள் வெளியில் அப்பாவி போல் இருக்க,
“என்ன? என்னைத் திட்டனும் போல இருக்கா?” என்று கேட்டான் அவன்.
“இல்ல” தலையை இடமும் வலமுமாக ஆட்ட, “ஆனால் எனக்கு உன்னைத் திட்டனும் போல இருக்கு. இனிமே என் கிட்ட எதையும் மறைக்காம இருக்கிற அளவுக்கு மண்டையில் குட்டனும் போல இருக்கு” என்றான், முறைப்புடன்.
“நானே வலியில் இருக்கேன். நீங்க திட்டிட்டே தான் இருக்கீங்க. நான் அழுதுடுவேன்” இதழ் பிதுக்கினாள் அவள்.
அவனது கடுமையில் அவளுக்கு கவலை எழுந்தது. அவனுக்கோ அவள் தன்னிடம் காண்பிக்காமல் இருந்ததை ஏற்க முடியவில்லை. அன்றொரு நாள், அலுமாரி நுனியில் கால் இடிபட்டு உராய்ந்ததையும் அவளிடம் காட்டியவன் அவன். அவளும் தன்னிடம் அப்படி இருக்க வேண்டும் என நினைத்தவனுக்கு அவள் இப்படி செய்தது சிறு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
“இரு தண்ணி கொண்டு வர்றேன்” அவனே நீர் எடுத்து வந்து குடிக்க வைத்தான்.
எழுந்து செல்லப் போனவளைத் தடுத்து, “எங்கே போற?” என்று வினவ, “யுகி, அகி கிட்ட போறேன்” என்றாள் மெதுவாக.
“அவங்க இருப்பாங்க. நீ என் கூட வா” அவளின் மற்றைய கையைப் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான்.
சுடுபட்ட காயத்திற்குத் தடவும் மருந்தை எடுத்துக் கொண்டு வந்து தனக்கு அருகில் அமர்ந்தவனை, அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி.
“என்ன பார்க்கிற? கண்ணை மூடு” அவன் சொல்லவும், வெடுக்கென்று மூடியவள், கண்களைத் திறந்தாள்.
“என்ன?”
“என்ன என்ன? சும்மா சும்மா கோபப்படுறீங்க? நான் பயந்துடுவேன்னு நெனப்போ?”
“நீ அஞ்சா நெஞ்சம் கொண்டவள் தான் ஒத்துக்கிறேன். அதனால தானே என்னைக் கண்டுக்க மாட்டேங்கிற?” என்று முறைத்தவன், அவளது கையைப் பிடித்தான்.
ஏதோ சொல்ல வந்தவள் அமைதியாகி விட, மருந்தைத் தடவ ஆரம்பித்தான் சத்யா.
“ஸ்ஸ்ஸ்” அவள் மெலிதாக முனக, “வலிக்குதா ஜானு?” என்று கேட்டவனின் குரலில் அத்தனை மென்மை.
இப்போது உண்மையில் வலித்தது. அந்த வலியை அவனது மென்மையில் உணர்ந்தாள்.
“சொல்லும்மா. ரொம்ப வலிக்குதா?” மென்மையாக அவளது கையைத் தடவியவாறு கேட்க, “ம்ம்ம்” தலையை அசைத்தாள் அவள்.
“பத்திரமா இருக்கக் கூடாதா ஜானு? அடுத்தவங்களைப் பற்றி யோசிச்சு, எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்ற. உன்னையும் கொஞ்சம் பார்த்துக்கனும் இல்லையா?” என்று கேட்டவனோ, “உன்னை நான் தானே பார்த்துக்கனும். பார்த்துப்பேன். உன்னை இப்படி காயப்பட விட மாட்டேன். நல்லா பார்த்துப்பேன் டா” என்று பேசியவனின் குரலில் கலக்கம்.
“இதெல்லாம் ஒரு விஷயமே இல்லைங்க. நீங்க இவ்ளோ யோசிக்க வேண்டாம்” அவன் கலங்குவது அவள் மனதை நெருடியது.
“பாரு எப்படி சிவந்து போயிருக்குன்னு. ரொம்ப வலிச்சு இருக்கும்ல? இதை வெச்சுக்கிட்டு வேலையும் பார்த்திருக்க. உன்னை என்ன சொல்லுறது ஜானு?” அவளது கையில் ஊதி விட, கண்கள் தானாக மூடிக் கொண்டன அவளுக்கு.
“டாடீஈஈஈ” என்றவாறு வந்த சிறுவர்கள் ஜனனியின் கையைப் பார்த்து, “அய்யோ என்னாச்சு?” என்று அகி கேட்க, “எப்படி ஜானு காயமாச்சு?” யுகியும் முகம் சுருங்கினான்.
“சும்மா தான்டா! அது சரியாகிடும்” மற்றைய கையால் இருவரது தலையையும் வருடிக் கொடுத்தாள்.
“டாடி வேலைக்குப் போனா நீங்களாச்சும் ஜானுவைப் பார்த்துக்க வேண்டாமா?” என்று சத்யா கேட்க, “நாங்க இனிமே பார்த்துக்கிறோம் டாடி” ஒரே சமயத்தில் கூறினர் இருவரும்.
“ரொம்ப வலிக்குதாம்மா?” அகிலன் அவள் கையைக் கலங்கிய கண்களுடன் பார்க்க, “இப்போ சரியாகிடும்மா” யுகன் அவள் கையில் மெல்ல முத்தமிட்டான்.
அவர்களது அன்பில் அவளுக்குக் கண்கள் கலங்கின. இப்படிப்பட்ட அன்பையெல்லாம் அவள் எதிர்பார்த்ததும் இல்லை. அனைத்தும் அவளுக்கென்று அளவின்றிக் கிடைக்கையில் திணறிப் போனாள்.
“நானும் முத்தம் கொடுக்கிறேன்” அகியும் அவளுக்கு முத்தமிட்டாள்.
“டாடியும் முத்தம் கொடுங்க. சரியாகிடும்” என்று யுகன் கூற, அவன் விழிகள் இவளை ஏறிட்டன.
அவளின் இமைகள் மெல்ல மூடித் திறந்தன. அது சம்மதத்தின் அறிகுறியோ? அவன் அப்படித் தான் எடுத்துக் கொண்டான்.
அவளின் கைப்பிடித்து, மிக மிக மெதுவாக முத்தமிட்டான், இதழ்கள் மட்டும் படும் படியாக. மீசை முடி அவளில் குத்தி விடுமோ என அஞ்சவும் தவறவில்லை.
அன்புப் பார்வையொன்றை அவனை நோக்கியும் வீசினாள் ஜனனி. இரு சோடி விழிகளும் கவர்ந்து நின்றன.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி