💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 94
இனிமையான இராப்பொழுது அது. ஜனனிக்கு உறக்கம் வரவேயில்லை. தலை தூக்கி சத்யாவைப் பார்க்க, அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
ஏதாவது எழுத வேண்டும் போல் இருந்தது. டைரியைக் கையில் எடுத்துக் கொண்டு பல்கோணி நோக்கி நடை போட்டாள். அவளின் வேண்டுகோளுக்கு இணங்க, அங்கு ஒரு மேசையும் கதிரையும் போட்டு வைத்திருந்தான் சத்யா.
அவளுக்கு வேண்டும் என்பதைக் கேட்குமாறு வற்புறுத்தியதன் பேரில் இதைக் கேட்டாள்.
‘வேற ஒன்னுமே இல்லாம கேட்டு இருக்க’ அவளைத் திட்டிக் கொண்டே வாங்கி வந்தான்.
ஏதாவது எழுதலாம் என்று நினைத்தாள். எதைப் பற்றி எழுதுவது எனும் யோசனை. கண்களை மூடிய நொடி அவள் மனக்கண்ணில் தோன்றினான் அவன்.
சத்யா! ஆம். அவளைத் தொட்டுத் தாலி கட்டியவன் அவன். தாலி என்ற ஒன்றும் உள்ளதே. அவளின் கை அதனைத் தொட்டுப் பார்த்தது. கையில் காயம் பட்ட போது அவன் தொட்டது போலவே இப்போதும் அவன் ஸ்பரிஷத்தை உணர்ந்தாள்.
அவனைப் பற்றி எழுதலாமா? என்று நினைத்தவளுக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. அவனைப் பற்றி, அவனுக்கும் தனக்குமான உறவு பற்றி அவளால் குறித்தவொரு வரைவிலக்கணத்தைக் கொடுக்க முடிவதில்லை.
சத்யா அவளுக்கு ஒரு நண்பனா என்று கேட்டால் அப்படியும் இருக்கலாம். அகி மற்றும் யுகியின் விடயத்தில் அவர்களுள் நட்பு சார்ந்த புரிதல் ஒன்று இருக்கிறது. ஒருவர் கஷ்டத்தில் ஒருவர் பங்கெடுத்து ஆறுதல் சொன்னதுண்டு. அதனை நட்பு தான் என்று வரையறுக்க முடியவில்லை.
அவன் ஜனனிக்கு இன்னொரு பிள்ளை. அகி, யுகியைப் போலவே பல்வேறு விடயங்களுக்கு அவளை எதிர்பார்க்கும் குழந்தை மனம் கொண்டவன். ஊட்டி விடும் போதும், தலை துவட்டி விடும் போதும் நல்ல பிள்ளை போல் அமைதியாக இருக்கும் அவனைப் பார்க்கையில் கன்னங்களைக் கிள்ளி விடத் தான் தோன்றும்.
தாயாகவும், தந்தையாகவும் கூட அவளுக்குத் தோன்றுவான். அவளுக்கு ஒன்று எனும் போது பதறுவதில் அன்னையை உணர்வாள். கண்டிக்கும் சமயங்களில் தந்தையை அறிவாள். நிறைய விடயங்களைக் கற்பிப்பதில் ஆசானையும் மிஞ்சுவான்.
அனைத்தையும் ஒன்றிணைத்தும் குறித்ததொரு உறவை அவளால் சொல்ல இயலவில்லை. பேனாவை நாடியில் தட்டி யோசித்தாள் ஜனனி. அவளும் நாவல்கள் வாசிப்பாள் தான். அவற்றில் இரண்டாம் தாரமாக மணமுடித்தாலும், ஒரு சில வாரங்களில் இருவருள்ளும் காதல் மலர்வது நினைவு வந்தது.
ஒரு வேளை காதலாக இருக்குமா? காதல் எனும் கண்ணோட்டத்தில் வைத்தும் அவளால் உறுதியாகக் கூற இயலவில்லை. அவனை ரசித்துள்ளாள். அவன் இல்லா விட்டால் எதையோ இழந்தது போல் இருக்கும். அவனுக்காக நேரம் செலவழிப்பாள். அவனை நினைப்பாள். அவனுக்காக ஒவ்வொன்றும் செய்வாள். அவன் மீது உரிமை எடுத்துக் கொள்வாள்.
ஆனால் மனைவி எனும் உரிமையை அவள் எதிர்பார்த்தது இல்லை. அவன் செய்வதை மறு கேள்வி கேட்காமல் ஏற்பாளே தவிர, தனக்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்த்தது இல்லை.
இன்னொரு விடயமும் அவளுக்கு இடித்தது. அது தான் வெட்கம்! அவனது அருகில் அமர்ந்துள்ளாள், கையைப் பிடிப்பாள், தலையைத் தடவுவாள். அப்போதெல்லாம் பெண்ணுக்கே உரிய நாணம் எழுந்தது இல்லை. அவன் பார்வை கண்டால் புருவம் உயர்த்துவாளே அன்றி கூச்சம் கொண்டு இமை தாழ்த்தியதில்லை.
ஆக! தனக்கு அவன் மீது காதல் இல்லை என்று உறுதி செய்து கொண்டாள். அவன் கணவனாக எது கேட்டாலும், மனைவி எனும் கடமையைச் செய்ய அவள் தயாராக இருந்தாள். இப்படியொரு உறவு அவள் பார்த்த சீரியலிலும் இருந்தது இல்லை, படித்த நாவல்களிலும் கண்டது இல்லை.
அவனுக்காக என்ன எழுதலாம் என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் செவ்வந்தியாள். எழுதி விடத் தானே வேண்டும். பேனா முனை காகித மேட்டில் சிறகடிக்கத் துவங்கிற்று.
இனங்காண முடியாமல் உன் உறவு
இருந்தும் இதமான உணர்வு
இதயத்தில் வசிக்கிறாய்
இணையிலா இன்பங்கள் தருகிறாய்
இறுகிய நினைவுகள் சுமக்கிறேன்
இயல்பாய் உனை ஏற்கிறேன்
இவ்வுறவுக்குப் பெயரொன்று தேடினேன்
இல்லாமலே நானும் வாடினேன்
இருக்கவும் வேண்டுமோ நமக்குள்
இலக்கணமாய் அன்பன்றி இன்னொன்று
இனியவனே!
இனி என்றும் என் வாழ்க்கை உன்னோடு தான்
இறப்பு வரை இருப்பேனே உன்னோடு நான்..
சற்றும் யோசிக்கவில்லை. தோன்றிய அனைத்தையும் ரயில் வேகத்தில் எழுதி முடித்து விட்டாள். எழுதிய வாசகங்களை மீட்டிப் பார்க்க எண்ணிய கணம், அவளருகில் ஒரு அரவம்.
சடாரென நிமிர்ந்து பார்த்தாள். சத்யா தான் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
“துங்கலயா ஜானு?” எனக் கேட்டவாறு அவளருகில் அமர்ந்து கொண்டான்.
“தூக்கம் வரலங்க. அதான் வந்து எழுதிட்டு இருந்தேன்” என்று பதிலளித்தாள் பாவை.
“இனிமே இப்படி பண்ணாத. கண் முழிச்சு நீ இல்லன்னதும் தவிச்சு போயிட்டேன். ஒரு நிமிஷம் என் மனசே ஒரு நிலையில் இல்லாம போயிடுச்சு. பயமா இருக்கு ஜானு” அவளது கைகளைப் பற்றிக் கொண்டான் சத்யா.
அவனை ஆழ்ந்து நோக்கினாள் ஜனனி. அவனுள் தவிப்பு. அப்பட்டமான ஏக்கத்தைப் பறைசாற்றும் கண்கள், உணர்வில் துடிக்கும் உதடுகள், தன்னுள் அவள் விரல்களை அடக்கிக் கொள்ளும் இறுக்கமான பிடி என்று அவனது உணர்ச்சிக் குவியலை இரவின் ஏகாந்தத்தில் அணு அணுவாய் உள்வாங்கினாள் அவள்.
“ஏன் பயப்படுறீங்க? இங்கே இருந்து நான் எங்கே போயிடப் போறேன்?” என்று கேட்க, “நீ எங்கேயும் போகக் கூடாது. என்னை விட்டுப் போயிடாத ஜானு. குழந்தைங்களுக்கு நீ வேணும். எனக்கும் நீ வேணும் ஜானு” தனது உணர்வுகளையும் அவன் வெளிப்படையாகவே சொன்னான்.
“உங்களுக்கு நான் எதுக்கு வேணும்?” இதற்கான பதிலுக்காக காதுகளைக் கூர் தீட்டிக் கொண்டாள்.
“எனக்கு பொண்டாட்டியா நீ வேணும் ஜானு” அவனின் ஒற்றை வாசகத்தில் இருந்தது காதல்.
“ம்ம் நீ என்ன நெனக்கிறியோ அது தான். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னை ஆரம்பத்தில் பிடிக்கல தான். காரணம் உன் மேல இருந்த தப்பான அபிப்பிராயம். நீ யுகி மேல வெச்ச அன்பு அதை மாற்றிடுச்சு.
பார்த்த உடனே காதல் வருமே ஜானு. அது அழகை அடிப்படையா கொண்டிருக்கும். ஆனால் எனக்கு வந்துச்சே உன் மேல. அது முழுக்க முழுக்க அன்பை மட்டுமே வெச்சு வந்தது. நீ என் குடும்பத்து மேல காட்டின அன்பு, அக்கறை, உறவுகளை ஒன்று சேர்க்க நீ கையாண்ட வழி எல்லாமே என்னை நாளுக்கு நாள் உன் கிட்ட விழ வெச்சது.
அகியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ மொத்தமா உன் கிட்ட சரணடைஞ்சுட்டேன். அவனுக்காக நீ நின்ன. அகியை இந்தக் குடும்பத்தில் ஒன்னு சேர்ப்பதற்காக, நீ ரொம்ப பாசம் வெச்ச யுகியோட விலகலை பொறுத்துக்கிட்ட. விட்டுக் கொடுப்பும், பொறுமையும், அன்பும், தப்பை தட்டிக் கேட்டு அந்தந்த டைம்ல அமைதியா அட்வைஸ் பண்ணுற குணமும் இருந்தா எந்த உறவையும் நிலைக்க வைக்க முடியும்னு கத்து தந்த.
என்னையும் நீ இயல்பா ஏத்துக்கிட்ட. உன் மேல வெச்ச தப்பான எண்ணம் பற்றி தெரிஞ்சும் என்னை ஒரு நாள் கூட அதை வெச்சு தப்பா பேசாம என்னோட பழகின. உன் எண்ணங்கள், என் எண்ணங்களை மாத்திடுச்சு. பழைய நினைவுகளோட கசப்பை, உன்னோட அழகான நிகழ்காலம் மறக்கடிச்சுடுச்சு. புதுசா ஒரு வாழ்க்கையை வாழனும்னு ஆசை வந்துடுச்சு” அவளைப் பார்த்தவாறே பேசியவன் பேச்சை நிறுத்த, அவளும் அதைக் கிரகிக்க முயன்றாள்.
“உன் அன்பைக் காதலிக்கிறேன். உன் குணத்தைக் காதலிக்கிறேன். உன் அழகான இதயத்தைக் காதலிக்கிறேன். மத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்காத மனசை காதலிக்கிறேன். உன் சின்னச் சின்ன ஆசைகளைக் காதலிக்கிறேன். அகி, யுகி மேல வெச்ச தாய்ப்பாசத்தைக் காதலிக்கிறேன்.
மொத்தத்துல நான் உன்னைக் காதலிக்கிறேன். உன்னை உசுரா காதலிக்கிறேன் ஜானு. வரம் கொடுக்க வந்தா தான் தேவதை. ஆனால் நீ எனக்கு வரமாக வந்த தேவதை ஜானு. யூ ஆர் மை ஏஞ்சல். ஐ லவ் யூ! ஐ லவ் யூ ஃப்ரொம் பொட்டம் ஆஃப் மை ஹார்ட்” அவளின் கையைப் பிடித்துத் தன் இதயத்தில் வைத்தான்.
இளந்தென்றல் தேகம் வருடிச் சென்ற வேளை, இனியவனின் இதயத் துடிப்பு இணையவளுக்கு இதமாய் இருந்தது. அவனது வாய்வழி காதலை அறிந்து விட்டாள். எது தனக்கு அவன் மீது இல்லையென சற்று முன் முடிவு செய்தாளோ, அது அவனுக்குத் தன்னில் உள்ளது என அறியக் கிடைப்பது தான் வாழ்வின் விந்தையோ என்றிருந்தது அவளுக்கு.
அவன் கண்கள் டைரியை நோக்கின. அதில் என்ன எழுதி இருக்கிறாள் என்று பார்த்தான். அவனுக்காகத் தானே எழுதி இருந்தாள். அதைப் படித்தவனின் பார்வை அவளை ஏறிட்டது.
“எனக்காகவா ஜானு?” அவன் சிறு சிரிப்புடன் கேட்க, “ம்ம்ம்” ஹூம்காரம் இசைத்தாள் அவள்.
மீண்டும் வாசித்தான். எத்தனை அழகான வரிகள்? தனக்காகவும் ஒருத்தி எழுதுகிறாளே என்றிருந்தது. இருப்பினும், அவளின் குழப்பம் அவனுக்குப் புரிவதாய். முன்பு தான் அப்படி எழுதினாள். இப்போது காதல் உரைத்து விட்டானே. அவள் எண்ணங்கள் மாறி இருக்குமோ என்ற நப்பாசை எழுந்தது.
“சொல்லு ஜானு! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” அவளிடம் கேட்டான், ஏராளம் எதிர்பார்ப்புகள் சுமந்து.
அவள் நயனங்கள், சத்யா மீது படிந்தன. அழகு தான் அவன். ரசிக்கத் தோன்றியது. எனினும் காதலை உணரவில்லையே.
“இல்லங்க” உடனடியாக மறுத்தாள் ஜனனி.
“ஏன்?” அவளது மறுப்பில் அவன் புருவங்கள் முடிச்சிட்டன.
“நாம இருக்கிற மாதிரி இருப்போம். இதுக்கு காதல்னு பெயர் எல்லாம் வைக்க வேண்டாம். அதை நெனச்சா எனக்கே குழப்பமா இருக்கு. இருக்கிற உறவும் கேள்விக்குறியா மாறுற மாதிரி ஃபீல் ஆகுது” தனக்கு தோன்றியதை எடுத்துரைத்தாள் அவள்.
“ஏன் ஜானு இப்படி பேசுற? காதல் வர்றது ஒன்னும் தப்பில்லையே”
“தப்பில்லங்க. உங்களுக்கு வந்த காதலை நான் தப்புனு சொல்லல. ஆனால் என் கிட்ட அதை எதிர்பார்க்காதீங்க. அது எனக்கு வருமானு தெரியாது. வரலனா அதை எதிர்பார்த்து நீங்க ஏமாந்து போகலாம். அதனால எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்க வேண்டாம்னு சொல்லுறேன்” என்று சொல்ல,
“ஓகே ஓகே! நீ ரொம்ப யோசிக்காத. ஆனால் நான் உன்னை லவ் பண்ணிட்டு தான் இருப்பேன். உன் கிட்டவும் அதை எதிர்பார்ப்பேன்” என்று விட்டுச் செல்ல, அவனைத் தொடர்ந்து சென்று கட்டிலில் சரிந்தவளுக்கு தூக்கம் வருவேனா என்றது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி