💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 95
தங்கைக்குத் திருமணம் என்பதில் ஓடியாடி வேலை செய்து ஓய்ந்து போயிருந்தான் எழிலழகன். இன்று தான் அவள் மறு வீட்டுக்கு வந்து சென்றிருந்தாள்.
அறையினுள் வந்த எழிலின் விழிகள் தூக்கத்துக்காகக் கெஞ்சின. அவ்வளவு வேலை அவனுக்கு. தந்தை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய, அவனே அனைத்தையும் முன்னின்று நடாத்தினான்.
மாரிமுத்துவும் அவருக்கு பக்கபலமாக நின்றது பெரும் சக்தியாக இருந்தது. இப்பொழுதெல்லாம் அவனுடன் பழையபடி சகஜமாக உரையாட ஆரம்பித்திருந்தார்.
ஜெயந்தியும் வந்து, அன்னம்மாள் மற்றும் நந்துவுக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்து கொடுத்தார். அது அன்னம்மாளுக்கும் திருப்தியாக இருந்தது.
கட்டிலில் சாய்ந்து கொண்ட போது அங்கு வந்தாள் நந்திதா. அவளைக் கண்டவனோ, “நந்தும்மா” என்றழைக்க, “என்னங்க?” எனக் கேட்டவாறு வந்து அமர்ந்தாள்.
“ரொம்ப டயர்டா இருக்குல்ல நந்து?” அவள் மடியில் தலை வைத்துக் கொண்டான்.
“இல்லாம இருக்குமா? தனியாளா இருந்து எவ்ளோ வேலை பார்த்தீங்க? ஒவ்வொன்னையும் குறை இல்லாம பார்த்து பார்த்து பண்ணுனீங்களே” அவன் தலையை வருடிக் கொடுத்தபடி சொன்னாள்.
“நான் தானே நந்து பண்ணனும். அப்பா இல்லாத வீடு. அம்மா அந்த குறை இல்லாம வளர்த்தாங்க. அது இல்லாம நானும் என் தங்கச்சியை நல்லபடியா புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கனும்ல? மனசுக்கு இப்போ தான் திருப்தியா இருக்கு. அவ இன்னும் என் கைப்பிடிச்சு ஸ்கூல் போன மாதிரி ஞாபகம். ஆனால் எவ்ளோ வளர்ந்துட்டா” தங்கையின் நினைவில் இதழ் விரித்தான்.
“அப்படி தாங்க இருக்கும். நம்மளால நம்பவே முடியாத அளவுக்கு அவங்க வளர்ந்துடுவாங்க. அதைப் பார்த்து பிரம்மிக்கிறதா, சந்தோஷப்படுறதானு தெரியாம போயிடும்” என்றாள் நந்திதா.
அவளின் கையைப் பிடித்துக் கொண்டவனோ, “நீ என்னை மிஸ் பண்ணுனியா?” என்று கேட்க, ஆம் என்று தலையசைத்தாள்.
அவன் வேலை வேலை என்று சென்ற சமயங்களில் அவனின்றி வருந்தினாள் தான். இருந்தும் மனதைத் தேற்றிக் கொண்டாள்.
“மிஸ் பண்ணுனேன். அதுக்காக அதைச் சொல்லி சொல்லி இருக்க முடியாதே. நம்ம கடமைகளையும் நாம செய்யனும்ல? அதுக்காக மிஸ் பண்ணினாலும் தப்பில்ல” என்று சொன்னவளை நெருங்கி,
“மிஸ் பண்ணுனா மட்டுமில்ல, கிஸ் பண்ணுனாலும் தப்பில்ல” என்றவாறு அவள் கன்னத்தில் முத்தமொன்று வைத்தான்.
அவள் இமை பிரித்துப் பார்க்க, “ஓய் பொண்டாட்டி” என்று அழைத்தான்.
என்றுமே போல் அவ்வழைப்பில் நாணம் வந்து குடிகொண்டது. புன்னகையும் வெட்கமும் கலந்த சிரிப்பை உதிர்த்தாள் நந்திதா.
“அழகா இருக்க டி” அவன் பார்வை அவளைச் சுற்றிப் பயணம் செய்தது.
“சும்மா இருங்க” என்றவளுக்கோ வெட்கம் பெருக, “அப்படிலாம் இருக்க முடியாது. ஒன்னு தோணுனா அப்போவே சொல்லிடனும். மனசுல வெச்சிட்டு இருக்கிற பழக்கம் எனக்குக் கிடையாது” என்றான் அவன்.
“ரொம்ப தான் பேசுறீங்க” என்றவளோ சற்று எட்டி, மேசை மீது வைத்திருந்த டப்பாவை எடுத்தாள்.
“என்ன இது?” அவன் யோசனையுடன் பார்க்க, “உங்களுக்கு பிடிச்ச ஒரு ஐட்டம்” என்றவாறு அதனைத் திறந்தாள்.
“வாவ்! குலாப் ஜாமூன்” நாவில் எச்சில் ஊறியது அவனுக்கு.
“வர்றவங்களுக்கு கொடுக்க பண்ணேன். அப்படியே உங்களுக்கும் பிடிக்கும்னு வேறயா எடுத்து வெச்சேன்” என்று புன்னதைத்தவளை அன்புடன் பார்த்தான்.
“இதைப் பண்ணுனது நீ தானா? எங்க அத்தையும் நல்லா இருக்குனு சொன்னாங்க. சும்மா அசத்துற நந்தும்மா” அவளின் கையைப் பிடித்து முத்தமிட, அழகாக முறுவலித்தாள்.
மாரிமுத்து பேசியதில் இருந்து அவளுக்கு கவலை நீங்கிய உணர்வு தான். அவரைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும். பழைய விடயங்கள் நினைவுக்கு வரும். இப்பொழுது அவரின் சகஜமான பேச்சு அதை மாற்றி இருந்தது.
எவ்வளவு தான் தவறு செய்தாலும் பிள்ளை மீது பெற்றவர் வெறுப்புக் காட்டுவதில்லை என்பதை அறிந்தாள் அவள். அப்படிப்பட்டவர்களுக்கா அவமானத்தைத் தேடிக் கொடுத்தேன் என்று அவள் மருகாத நாளும் இல்லை.
“மலர் கல்யாண நேரம் அப்பா என்னை ஒரு பார்வை பார்த்தார். என் கல்யாணத்தை மனசு குளிர அவரால பார்க்க முடியலயேங்குற ஆதங்கம் அது. மகி கல்யாணமாவது ஒழுங்கா நடக்கனும்னு வேண்டிக்கிட்டேன். அவளால அவர் இழந்த சந்தோஷம் கிடைக்கனும். அப்பா முகத்தில் சந்தோஷத்தைப் பார்க்கனும்” அவளுக்குத் தந்தையைச் சுற்றித் தான் மனம் சுற்றியது.
“கண்டிப்பா நந்து! உன் ஆசை நிறைவேறும். மகி கல்யாணம் அவர் விருப்பப்படி நடக்கும். நாமளும் நம்மளால முடிஞ்ச சப்போர்ட்டை கொடுப்போம். சரியா?” அவன் மென்மையாகக் கேட்க, “சரிங்க” என்றவளுக்கு மனம் தெளியவில்லை.
“வா நந்து” அவளைப் பிடித்துத் தன் மடியில் சாய வைத்தான்.
தன்னை அண்ணாந்து பார்த்தவளைக் கண்டு, “கண்ண மூடிக்க. கொஞ்ச நேரம் எதையும் யோசிக்காம அமைதியா இரு” என்றிட அவளும் விழி மூடினாள்.
அவளுக்குப் பிடித்த இசையை ஓட விட்டான் எழில். நீர்வீழ்ச்சி சலசலக்கும் ஓசை அது. நிலையின்றித் தவித்த தனம் மெல்ல மெல்ல அமைதியடைய ஆரம்பித்தது.
அவனது கையைப் பிடித்துக் கொண்டாள். மீண்டும் கண் திறந்தவள் நிர்மலமான பார்வையொன்றை அவனை நோக்கி வீசினாள்.
“எல்லாம் நல்லதா நடக்கும். ஃபீல் பண்ணாத. நிம்மதியா தூங்கு டா” அவளின் நெற்றியில் அவன் வைத்த முத்தம், அத்தனை கவலைகளையும் மொத்தமாய் மறைய வைத்தது.
……………..
தலை வலியோடு அமர்ந்திருந்தாள் தன்யா. அவள் இருப்பது தனியறையில் தான். காலேஜ் சென்றால் கார்த்தியை சந்திப்பாள். மற்றபடி அவளை இந்தத் தனிமை வாட்டி விடும்.
இன்று அவ்வளவு தலை வலி. குப்புறப் படுத்திருந்தவளுக்கு கதவு தட்டும் ஓசையில் யாவும் அணுக்கள் விழித்துக் கொண்டன.
சாவி நுழைக்கும் துவாரம் வழியாக பார்வையைச் செலுத்திப் பார்த்தாள். அந்நேரம் அலறியது அவள் அலைபேசி. கார்த்திக் தான் அழைத்திருந்தான்.
“ஹலோ தனு எங்கிருக்க?” அவன் கேட்க, “ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன் டா. யாரோ கதவைத் தட்டுறாங்க. திறந்து பார்க்க பயமா இருக்கே. அன்னிக்கு மாதிரி அந்த மார்க் வந்து தொல்லை பண்ணிட்டான்னா?” மெல்லிய குரலில் கேட்டாள் அவள்.
“மார்க் வந்தா மூக்குல குத்தி அனுப்பனும். இப்போ வந்து கதவைத் திற. மனுஷனுக்கு கால் வலிக்குது” அவன் கடுப்படிக்க, “ஹேய் கார்த்தி நீயா?” ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.
அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. கார்த்திக் அவளைத் தேடி ரூம் வரை வர மாட்டான். ஏதாவது தேவை என்றாலும் அவளை அழைத்துக் கொடுப்பானே தவிர, இங்கு வருவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
“வா போகலாம்” அவளை அழைக்க, எதுவும் பேசாமல் அவனுடன் சென்றாள்.
அவள் தங்கும் ஹாஸ்டலுக்குப் பின்னால் உள்ள பூங்காவுக்குத் தான் அழைத்துச் சென்றான் கார்த்திக். இருவரும் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர்.
“ஐயாவோட திடீர் வருகைக்குக் காரணம் என்னவாம்?” கேள்வியாக அவன் முகம் பார்த்தார் காரிகை.
“யாருமில்லா தனிமை தங்களை வாட்டக் காரணம் என்னவாம்?” பதிலுக்கு அவன் கேட்டான்.
இன்று தனிமை பற்றி ஸ்டேட்டஸ் வைத்தது நினைவில் உதித்தது. அதற்காகத் தான் வந்திருக்கிறானோ?
“தனிமையில் துணை நிற்க வந்தீங்களா?” என்று அவள் கேட்க, “இல்ல. தனிமையைத் துடைத்தெறிய வந்தேன்” என்றவனோ முறைப்பை வழங்கினான்.
“என்ன முறைப்பு?”
“உனக்காக நான் இருப்பேன்னு சொல்லி இருக்கேன்ல? அது உன் மண்டையில் ஏறாதா? மறுபடியும் இப்படித் தான் தனிமை இனிமை கொடுமைனு ஸ்டேட்டஸ் போட்டு கடுப்பைக் கிளம்புற?”
“ஓஓ அதுவா? சும்மா போடுறேன் பேபி. நீ கூட இருந்தாலும் எப்போவும் இருக்கப் போறதில்லயே. அதனால நான் தனிமை பற்றி பேசத் தான் செய்வேன். அது என் கூட ஒட்டிப் பிறந்தது” என்று அவள் கூற,
“நான் இருக்கும் வரை நீ இப்படி பேசக் கூடாது தனு. உன் தனிமையை நான் இல்லாம பண்ணுவேன். உன் கூட நான் இருப்பேன்” அவன் குரலில் அத்தனை உறுதி.
“எனக்காக எப்படி இருப்ப? எனக்குனு ஒருத்தன் வந்தா நீ எப்படி என் கூட இருப்ப?”
“உனக்குனு வரப் போறதே நான் தான். நான் மட்டும் தான் உன் கூட இருப்பேன். என்னால நீ இல்லாம இருக்க முடியாது தனு. உன்னைத் தனியா விட்டு என்னால நிம்மதியா வாழ முடியாது” அவன் சொன்னதைக் கேட்டு அவள் கண்கள் விரிந்தன.
“சொல்லிட்டானே அவன் காதல..” என்று அவள் பாட, சுயம் திரும்பிய கார்த்திக்கிற்கு தான் உண்மையை வெளிப்படுத்திய விடயம் புரிந்தது.
“காதலா? அப்படி எதுவும் இல்லயே” அவன் பொய்யாக மறுக்க, “பச்சையா பொய் சொல்லாத. உனக்கு என் மேல லவ்வுனு காட்ட உன் பேச்சும், செயலும் வேணாம். இந்தக் கண்ணு ரெண்டுமே போதும். நானும் எவ்ளோ நாள் தான் நீ அப்போ சொல்லுவ இப்போ சொல்லுவனு காத்துட்டு இருக்கிறது? இப்போவாச்சும் ஒத்துக்கிட்டியே” நெடிய மூச்சொன்றை இழுத்து விட்டாள் அவள்.
“போடி! நானும் ஊருக்கு போய் வீட்டுல பேசிட்டு சொல்லலாம்னு பார்த்தா விட மாட்டியே. தனிமை தக்காளினு போட்டு ரகசியத்தை ரிலீஸ் பண்ணிட்ட” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான் ஆடவன்.
“பெரிய ரகசியம். என்னைத் தவிர காலேஜ் முழுக்க சொல்லுது உனக்கு என் மேல லவ்ஸ்னு. ரூபி கூட அடிக்கடி கேட்குது. நீ சொன்ன அப்பறம் சொல்லலாம்னு இன்னும் எதுவும் மூச்சு விடல. இனி சொல்லிடுறேன்” என்று சொல்ல, “உனக்கு பயமே இல்லையா?” எனக் கேட்டான்.
“எதுக்கு பயப்படனும்? லவ் வந்தா தைரியமா சொல்லுனு சத்யா அண்ணா சொல்லி இருக்கார். என் லவ்வுக்காக எவ்ளோ வேணா ஹெல்ப் பண்ண ரூபி இருக்கான், கன்வின்ஸ் பண்ண அண்ணி இருக்காங்க, ஒத்துக்கலனா தூக்கிட்டு வர தேவாண்ணா இருக்கார், பாசத்தால கட்டிப் போட அம்மா இருக்காங்க, சேட்டையால ஒருவழி பண்ண குட்டி வாண்டுங்க இருக்காங்க. இவ்ளோ பேர் எனக்காக இருக்கும் போது எதுக்கு பயம்?” என்றவள் முகத்தில் தன் குடும்பத்தினரை எண்ணி பூரிப்பு.
“அப்போ நான்?” அவன் புருவம் தூக்கிக் கேட்க, “என்னைக் காதலால களவாட, காவலனா என்னைக் காக்க, எப்போவும் பக்கத்தில் இருந்து தோள் தர நீ இருக்க. லவ் யூ கார்த்தி! எனக்கு பக்கத்துல நீ வேணும். உன் கையைப் பிடிச்சிட்டு வாழ்நாள் பூரா நான் பாதுகாப்பை உணரனும். உன்னை பாசமா பார்த்துக்கனும்” அவன் தோளில் சாய்ந்தாள் மங்கை.
“நான் உனக்காக பிறந்தவன் தனு! உனக்காகவே இருப்பேன். உனக்காகவே வாழ்வேன். லவ் யூ சோ மச்” அவள் கன்னங்களைப் பிடித்து ஆட்டினான் காதலன்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி