96. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(4)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 96

 

“ஜானு எங்கே டாடி?” தந்தையின் முன் வந்து நின்றான் யுகன்.

 

“ஜானு டாடி கூட கண்ணாமூச்சி ஆடுறா. அதனால நான் இருக்கிற இடத்திற்கு வர மாட்டா” அலைபேசியை நோண்டிக் கொண்டு பதிலளித்தான் சத்யா.

 

“ஏன் டாடி? எங்களை விட்டு நீங்க மட்டும் விளையாடுவீங்களா?” அகிலன் முகம் சுருக்கிக் கேட்க, “எங்களுக்கு டயர்ட் தானே. அதனால இருக்கலாம். நாம போய் தூங்குவோம் வா” உடன் பிறந்தவனை அழைத்துக் கொண்டு சென்றான் யுகி.

 

இருவரது நெருக்கத்தைப் பார்க்கும் போது சத்யாவுக்கே ஆச்சரியம் தான். எப்படி இருந்தவர்கள் இவர்கள்? இப்போது நகமும் சதையுமாக உறவாடுவது அவ்வளவு அழகாக இருந்தது.

 

இந்த அன்புக்குத் தான் எத்தனை வலிமை? அன்பென்ற ஒன்று மட்டும் இல்லாவிடின் இவ்வுலகம் இயங்குவது சாத்தியமா? உறவுகள் தான் நிலைத்திடுமா?

 

அவ்வன்புக்காகத் தானே இன்று அவனும் போராடுகிறான்? அன்பையும் தாண்டிய காதலைக் கேட்டு விட்டான். அதனால் தான் விலக்கி வைக்கப்படுகிறோமா எனும் எண்ணம்.

 

ஆம்! அவன் காதல் சொன்ன கணம் தொட்டு ஜனனியிடம் ஒருவித விலகலை உணர்ந்தான் சத்யா. வழக்கம் போல் பேசுவாள். உணவும் ஊட்டுவாள். அவனுக்காக அனைத்தும் செய்வாள்.

 

ஆனால் முன்பு போல் பேசுவது கிடையாது. அவனது அருகில் வந்து அமர்வதும் இல்லை. ஏதோ ஒரு வகையில் அவள் தள்ளிச் செல்வது போல் உணர்வு. அவனால் அதை ஏற்கவும் முடியவில்லை. அதைப் பற்றிக் கேட்கவும் நேரம் அமையவில்லை.

 

இன்று இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டும் என்ற முடிவில் இருந்தான். சற்று நேரம் கழித்தே அறையினுள் வந்தாள் ஜனனி. அவள் பார்வை கண்ணாடி வழியே கணவனைத் தீண்டியது.

 

அவனும் சளைக்காமல் அவளையே பார்க்க, “என்ன மிஸ்டர்?” பார்வையின் அர்த்தம் அறிய முயன்றாள் மாது.

 

“கண்ணாமூச்சி ஆட்டம் எப்போ தீருமாம் மிஸ்ஸஸ் சத்ய ஜீவா?” அழுத்தத்துடன் அவன் கேட்க, அவளிதயம் திக்கென்றது.

 

“நா..நான் எதுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடனும்?” கேட்கும் போதே அவளுக்கு திணறி விட்டது.

 

பொய் சொல்கிறாள் அல்லவா? அவனின் கூரான பார்வைக்கு முன், பொய் சொல்வது கடினமாய் இருந்தது.

 

“என் ஜானுவுக்கு உண்மையைப் பேசும் போது வாய் தடுமாறாது. மீறி தடுமாறினா அவ மனசுல ஏதோ தடுமாற்றம் இருக்குனு அர்த்தம். அது உண்மை தானே?” எழுந்து வந்து அவளை நெருங்கி நின்றான்.

 

அவனது மூச்சுக் காற்றின் வெப்பம் அவள் மீதும் வீசியது. அவனது பார்வைக்கு அவளால் ஈடுகொடுக்க இயலவில்லை.

 

“நான் சரியா தான் இருக்கேன். நீ..நீங்க தள்ளி நில்லுங்க” ஏனோ படபடப்பாக உணர்ந்தாள் அவள்.

 

“பயப்படாத! உன் பக்கத்தில் வந்துட்டதால அதை வெச்சு வேற எதையும் கற்பனை பண்ணிக்காத. உன் அனுமதி இல்லாம நான் தொட மாட்டேன்” என்றவன் அவளைத் தொடவில்லை. 

 

“தொட வேண்டாம்னு நான் சொல்லலயே” 

 

“நீ எனக்கு பொண்டாட்டி தான். உன்னைத் தொட எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. ஆனால் நான் உரிமையைத் தாண்டியும் ஒன்ன எதிர்பார்க்கிறேன். உரிமையால மட்டுமே நடந்தா நம்ம உறவு கடமைக்காக வாழுற மாதிரி ஆயிடும். எனக்கு அதில் உடன்பாடு இல்ல.

 

அணு அணுவா ரசிச்சு வாழனும். மத்தவங்க மீதான ஈடுபாட்டை அடிப்படையா வெச்சு நம்ம உறவு வளரனும். அதற்கு நம்ம வாழ்க்கையில் காதல் இருக்கனும். அந்தக் காதலை உன் கிட்ட கேட்கிறேன். காதல் இல்லாம வெறும் கடமைக்காக வாழ்ந்தா அதில் காரசாரமே இருக்காது. உப்பில்லாப் பண்டம் குப்பையில் என்ற மாதிரி தான், காதலும் எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கை மேல எந்த சுவாரசியமும் இருக்காது” அவனின் உள்ளத்து ஆசைகள் ஆழமான உணர்வுகளோடு ஆர்ப்பரித்தன.

 

“இந்தப் பேச்சு வேண்டாம்னு தானே சொன்னேன்? காதல் வரல எனக்கு. அது வருமா இல்லையானு கூட தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்க எதிர்பார்க்காதீங்க” இதற்கு மேல் அவனுக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.

 

“எதிர்பார்த்தா ஏமாந்துடுவேன்னு தானே சொல்லுற. அதனால என்னை ஏமாற்றாம நீயே என் எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுடு. அப்போ எல்லாம் ஓகே தானே?” அவன் மீண்டும் அதையே கேட்கவும் அவளுக்கு ஆயாசமாக இருந்தது.

 

“நான் என்னவோ காதலை கிலோ கணக்குல ஸ்டாக் பண்ணி வெச்சிருக்கிற மாதிரி பேசுறீங்க. இருந்தா தானே கொடுக்கலாம்?” என்று அவனைப் பார்க்க,

 

“ஸ்டோர்ல இருக்கும்‌. தேடிப் பார்த்தா தான் கிடைக்கும். ஒன்னுமே பண்ணாம இல்ல இல்லனு சொல்லி கஞ்சத்தனம் பண்ணாத. தேடிப் பிடிச்சு கிள்ளிக் கொடு, நான் உனக்கு அள்ளிக் கொடுக்கிறேன் ஜானு” என்று பேசியவனுக்குள்ளே அவ்வளவு ஆச்சரியம்.

 

தனக்கு இப்படியும் பேச வருமா? இதோ பேசி விட்டானே? இல்லை, பேச வைத்து விட்டாளே. சத்யாவின் வரண்டு போன பாலைவன பூமியிலும் பெய்யெனப் பெய்தது அடைமழை!

 

“கிள்ளவும் வேண்டாம். அள்ளவும் வேண்டாம். என் கிட்ட காதல் அது இதுன்னு சொல்லவும் வேண்டாம். அந்த பேச்சே இல்லாம இருங்க. இத்தனை நாள் நல்லா தானே இருந்துச்சு. எதுக்கு திடீர்னு லவ் பற்றி பேசி இருந்த உறவையும் முரண்பட வைக்கிறீங்க?” சோர்வுடன் கேட்டாள் வஞ்சி.

 

“நான் தெளிவா தான் இருக்கேன். அதை ஓவரா தலையில் போட்டு சிக்கலாக்கி முரண்பட்டுக்கிறது நீ தான். காதல் வரக் கூடாதுனு இல்லையே. ஹஸ்பண்ட் அன்ட் வைஃப்குள்ள லவ் வர்றது சகஜம் ஜானு” என்று சொல்ல,

 

“எனக்கு அது தெரியாது. நான் அதை அலட்டிக்க மாட்டேன். காதல் கத்திரிக்கானு பேசினா நான் பழையபடி பேசவும் மாட்டேன். அப்பறம் நான் கண்ணாமூச்சி ஆடுறேன், கபடி ஆடுறேன்னு சொல்லக் கூடாது” கண்களை மூடிச் சாய்ந்து கொண்டாள்.

 

மறு பக்கத்தில் சாய்ந்தவனும் அவளைப் பார்க்க, புருவம் உயர்த்தினாள் அவள்.

 

“என் பொண்டாட்டியை நான் பார்ப்பேன். சும்மா சும்மா புருவம் தூக்குற வேலை வெச்சுக்காத. பிறகு நான் உன்னைத் தூக்க வேண்டி வரும்” என்று அவன் கூற, சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள்.

 

‘ஹிட்லர்! எப்படி பேசுது பாரு. லவ்வு வந்தா எல்லாரும் லூசா மாறிடுவாங்களோ. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு. யாவும் காதல் செய்யும் கோலம்’ உள்ளுக்குள் புலம்பிக் கொண்டு உறங்கிப் போனாள்.

 

அவளைப் பார்த்தவாறு இருந்தவனையும் உறக்கம் தழுவியது. 

 

………………

காலையில் தானாகவே உறக்கம் கலைந்து எழுந்தாள் ஜனனி. இப்போதெல்லாம் அவளாகவே எழுந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். கைகளை நீட்டி சோம்பல் முறித்தவளின் பார்வை வட்டத்தினுள் விழுந்தான் சத்யா.

 

“குட் மார்னிங்” என்று அவள் சிரிக்க, “குட் மார்னிங் மை லவ்” சல்யூட் வைத்தான் அவன்.

 

இவளோ கடுமையாக முறைக்க, “ஓஓ! லவ் வரலையா இன்னும். நான் கூட இன்னிக்கு கனவு வந்து என் மேல லவ் இருக்குனு ஃபீல் பண்ணிட்டியோனு நெனச்சேன்” என்று சொல்ல,

 

“உங்களுக்கு இதை விட்டா வேற பேச்சே இல்லையா? லவ்வு லவ்வுனு அதை நெனப்பா இருக்கீங்க” காரசாரமாக முறைத்தாள் ஜனனி.

 

“பண்ணுற எல்லாம் நீ பண்ணிட்டு பழியைத் தூக்கி என் மேல போடுறியா? உன் மேல லவ் வர வெச்சது நீ தானே?” பதிலுக்கு அவனும் முறைத்தான்.

 

“நான் என்ன பண்ணுனேன்?” 

 

“உன் அன்பைக் காட்டி, குணத்தைக் காட்டி, விதவிதமா மயக்கிட்டு உன் நெனப்பாவே சுற்ற வெச்சிட்டு, அப்படி இருக்க வேண்டாம்னு சொல்லுறியே. இது நியாயமா?” இடுப்பில் கை குற்றிக் கேட்டான் சத்யா.

 

“நான் எப்போவும் இப்படித் தான். கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த புதுசுல கூட இதே மாதிரி தான் இருந்தேன். அப்போ வராத காதல் இப்போ ஏன் வந்துச்சாம்?”

 

“இப்போ தானே ஜானு ஃபீல் வந்துச்சு. சோ லவ்வும் வந்துச்சு”

 

“நான் ஒன்னும் புதுசா பண்ணல. சும்மா தான் இருக்கேன். நீங்க அதைப் பார்த்து காதலிச்சதுக்கு என்னைப் பொறுப்பு சொல்லாதீங்க. எல்லாம் ஒன்னா தான் இருக்கும். பார்க்குற பார்வைக்கு ஏற்ப அதோட அர்த்தம் மாறும் என்ற மாதிரி தான் இதுவும்” என்று சொன்னாள் ஜனனி.

 

அவள் சொல்வதும் உண்மை தான். அவள் ஒன்றும் புதிதாக செய்யவில்லை. இயல்பாகத் தான் இருக்கிறாள். அவள் செய்யும் செயல்கள் என்றும் ஒன்று போல் தான். அதை ரசனை உணர்வோடும், அன்பை அடித்தளமாகக் கொண்டும் அவன் பார்த்த போது தானே காதல் கொண்டான்.

 

ஒருவர் பார்வைக்கு கல்லாகத் தெரிவது இன்னொருவர் பார்வைக்கு வைரமாகத் தெரியலாம் என்பர். அது வாழ்க்கையின் யதார்த்தமும் கூட. சத்யாவுக்கு அன்று தெரிந்த ஜனனி வேறு, இன்று தெரியும் ஜனனி வேறு. காரணம், அவனின் பார்வை மாற்றம்.

 

“நீ எது சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். நீயும் சீக்கிரமே ஆரம்பிச்சிடு. அப்போ தானே லவ் ட்ரெயினை அமோகமா ஓட்டலாம்” மீண்டும் அவன் அதே இடத்தில் வந்து நிற்க, அவளுக்குத் தான் ஐயோ என்றானது.

 

“உங்க கிட்ட பேசி தப்ப முடியாது. ஓவரா தான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று அவள் முறைக்க, “நீயும் தான் ஓவரா பிகு பண்ணுற. என்னை அலைய விடனும்னு முடிவு பண்ணிட்டல்ல?” அவனது கேள்வியில் தலையில் கை வைத்துக் கொண்டாள்.

 

“உங்களை நான் எதுக்கு அலைய விடனும்? நீங்க அலையவும் வேண்டாம். இத்தனை நாள் இருந்தீங்கள்ல? அதே மாதிரி நாம எப்போவும் போல இருக்கலாம். இதுக்கு பெயரும் வேண்டாம். நமக்குள்ள வாக்குவாதமும் வேண்டாம்” என்றவளுக்கு அவனுடன் வாக்குவாதம் செய்வதில் விருப்பம் இல்லை.

 

“ஜானு! இது வாக்குவாதம் இல்ல. என் காதலை உன் கிட்ட சொல்லுறேன். அதுக்காக உன் கிட்ட பேசுறேன். நீ இவ்ளோ சுமையா இதை நினைக்க வேணாம்” அவள் ஏன் இப்படிச் செய்கிறாள் என்றிருந்தது அவனுக்கு.

 

சாதாரணமாகத் தானே பேசினான். அவளுடன் இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று பேசுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அது கூட அவளுக்குப் பிடிக்கவில்லையா என நினைத்தான்.

 

“இப்போ நான் என்ன பண்ணனும்கிற?” அவனே மூச்சு விட்டுக் கொண்டு கேட்டான்.

 

“நீங்க இனிமே காதல்னு பேச வேண்டாம். முன்னெல்லாம் எப்படி இருந்தோமோ அதே மாதிரி இருப்போம். சரியா?” தலை சாய்த்துக் கேட்டாள் அவள்.

 

“நோ! அது சாத்தியம் இல்ல. காதல் வர முன்னால ஓகே. பட் இப்போ என்னால பழைய மாதிரி நார்மலா பழக முடியல. உன் குணத்தோட சேர்த்து அழகாலயும் என்னைக் கட்டிப் போடுற. உன் கண்ணு, மூக்கு, உதடுனு என் பார்வை போகுது. இப்போ என்னால அதை மாத்திக்கிட்டு இருக்க முடியாது” என்று விட்டுச் செல்ல, அவன் முதுகைப் பார்த்தவளுக்கு உலகம் புரியவில்லை.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!