💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 97
“இப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க தனு?” வீடியோ காலில் வந்திருந்த தன்யாவைப் பார்த்துக் கேட்டான் சத்யா.
“வெட்கம்! நம்ம ஊருல இதுக்கு அப்படித் தான் பெயர். ஆனால் இவ எதுக்கு இவ்ளோ கன்றாவியா பண்ணிட்டு இருக்கானு தெரியலயே” தலையைச் சொறிந்த ரூபனை முறைத்து, “ஏன்? எனக்கு வெட்கம் வரக் கூடாதா?” எனக் கேட்டாள் தங்கை.
“வரலாம் தனு. ஆனால் திடீர்னு வந்து ஏதோ சொல்லனும்னு சொல்லிட்டு வெட்கப்பட்டா பயம் வருதுல்ல. சொல்லிட்டு அதைப் பண்ணேன்” என்று தேவனும் ஓட்ட, “எல்லாரும் ஒன்னாகிட்டீங்க. நான் சொல்ல மாட்டேன்” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“நான் சொல்லுறேன். நீ அந்த கத்திரிக்கா பயல லவ் பண்ணுற. ஆம் ஐ ரைட்?” என்று ரூபன் கேட்க, “கத்திரிக்கா இல்ல. கார்த்திக்” சட்டென்று சொன்னாள் தன்யா.
“அப்படினா அது உண்மையா தனு?” என்று மேகலை ஆச்சரியத்தோடு கேட்க, “உண்மை தான். அன்னிக்கு அந்தப் பையன் தனு இல்லன்னதும் தவிச்சுப் போய் தேடினப்போ அந்தக் குரல்ல அவ்ளோ காதல் இருந்தது. அந்தப் பையன் கூடவும் நான் பேசி இருக்கேன். ரொம்ப நல்ல குணம் அத்தை” என்று சொன்னாள் ஜனனி.
சத்யா தொண்டையை செருமிக் கொள்ள, “என்னண்ணா?” எனக் கேட்டான் தேவன்.
“உங்க அண்ணி மத்தவங்க விஷயத்தை புரிஞ்சுக்கிறதுல கில்லாடி. குரலை வெச்சே காதலை கண்டுபிடிப்பாங்களாம்” என்று கூறியவன், “ஆனால் என் விஷயத்தில் மக்கு சாம்பிராணி. நான் கூப்பாடு போட்டாலும் காதலை புரிஞ்சுக்க மாட்டா” என்றான், அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக.
“பேச்சை என் பக்கமா திருப்பி விடாம இருங்க” முறைப்பை அள்ளி வீசினாள் அவள்.
“கார்த்தி என்ன சொல்லுறான் டா?” என்று சத்யா தங்கையிடம் கேட்க, “வீட்டுல இன்னும் சொல்லலையாம். அவங்க இவன் பேச்சுக்கு மறுப்பு சொல்ல மாட்டாங்க. அவங்க கூட பேசிட்டு நம்ம வீட்டுக்கு வருவாங்க” என்று விடையளித்தாள் தன்யா.
“ஓகே ஃபைன். உன் விஷயம் என்ன தேவா?” என்று சத்யா வினவ, “வினி அப்பா தான் இன்னும் கோபமாவே இருக்கார். நம்ம குடும்பம் தான் அவருக்கு இடிக்குது போல” என்றவனின் குரலில் சோர்வு.
“பார்த்துக்கலாம் விடு. வினி அவ அப்பா கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்கா தானே? அதுக்கு என்ன பதில் வருதுன்னு பார்ப்போம். அவர் நோ சொன்னாலும் வினி உன்னை விட்ற மாட்டா. சோ நீ ஃபீல் பண்ணாத” அவன் தோளில் தட்டினான் ரூபன்.
“அப்போ அய்யாவோட விஷயம்?” என்று ஜனனி கேட்க, “அது ஒரே ட்விஸ்ட்டா இருக்கு. என்ன நடக்குதுன்னே புரியல அண்ணி” என்று கூறினான்.
“அந்த பொண்ணு சைடும் சரி தானே? அவ குடும்பத்துக்காக யோசிக்கிறா. இப்படி எல்லாம் பொண்ணுங்க இருக்க மாட்டாங்க. ஆனால் காதலை வெச்சுக்கிட்டு இன்னொருத்தன் கூட வாழுறது பெரிய கொடுமை. குடும்பத்துக்காக பண்ணப் போறேனு அவ கஷ்டத்தை தேடிக்காம இருக்கனும். அவ்ளோ தான்” என்றான் சத்யா.
ரூபன் தான் காதலிக்கும் பெண் யார் என்பதைத் தவிர, மற்ற அனைத்தையும் சொல்லி இருந்தான். ஜனனியின் தங்கை என்பதால் ஏனோ அவனால் சொல்ல முடியவில்லை. அவளுக்குத் தெரிந்து மகிக்கு எதுவும் பிரச்சினை வருமோ என்பது அவனது அச்சம்.
“யாருனு சொல்லு டார்லிங்! ஆள் வெச்சு கடத்தலாம். வீட்டுக்கு வந்த அப்புறம் குடும்பத்தைப் பார்த்துக்கலாம்” என்று தன்யா சொல்ல, “என் ஆளு உன்னை மாதிரி அராத்துனு நெனச்சியா? அவ குடும்பத்து குத்து விளக்கு” எனச் சிரிக்க,
“போடா எரும. உனக்காக பேசினா நீ என்னை கலாய்க்கிறியா?” அவனை இயன்ற வரை முறைத்தாள்.
“ஜானு” என்னவாறு அகி மற்றும் யுகி டவலை எடுத்துக் கொண்டு வந்தனர்.
“துடைச்சு விடுங்க” யுகி ஜனனியிடமும், அகி சத்யாவிடமும் வந்து நிற்க, “இன்னும் சின்னப் பசங்களா நீங்க? தனியா செஞ்சுக்கனும்” கிண்டல் செய்தான் ரூபன்.
“டாடியே இப்படித் தான். நாங்க அவரை விட சின்னப் பசங்க தானே” என்று அகி சொன்னதும், யுகி அவனைக் காரமாகப் பார்க்க, “டாடி எப்படி?” புரியாமல் கேட்டாள் தனு.
“டாடி குளிச்சிட்டு வந்தாலும் ஜானு தான் தலை துடைச்சு விடுவாங்க” என்று அகி சொல்ல, அனைவரது பார்வையும் அவர்களைத் தாக்கிற்று.
“அண்ணேஏஏ” என ரூபன் கண் சிமிட்டிச் சிரிக்க, “போடா” அவன் தோளில் அடித்து வெட்கப்பூ பூத்தான் சத்யா.
ஜனனியின் நிலையோ அதை விட மோசமாக இருந்தது. அவளுக்கு முகத்தைக் கொண்டு சென்று எங்காவது புதைத்துக் கொள்ளலாம் போலிருந்தது.
தன்னை முறைத்த யுகியைப் பார்த்து, “எதுக்கு முறைக்கிற?” என்று அவன் கேட்க, “இப்போ முறைச்சு வேலை இல்ல டா. சொல்ல வேண்டியது எல்லாம் சிறப்பா சொல்லிட்டியே” என்று உரைத்தவன், “உனக்கு இதை நான் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல” என்று சொல்ல,
“சொன்னா என்னவாம்? விடு யுகி” அவனை அடக்கினாள் ஜனனி.
“சரியான பிள்ளைங்க” என்று சிரித்த மேகலைக்கோ, மூத்த மகனின் வாழ்வு சிறப்பாய் மாறியதில் ஏக மகிழ்வு.
அப்படியே பேசிக் கொண்டிருந்தவர்கள் இரவானதும், அறைக்குள் தஞ்சம் கொள்ள, கதை கேட்டு ஜனனியை நச்சரித்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
“என்ன கதை வேண்டுமாம்?” என ஜனனி கேட்க, “ஹேன்ஸல் அன்ட் க்ரேட்டல்” இருவரும் ஒன்று போல் பதிலளித்தனர்.
“ஹான் ஓகே” கதை சொல்ல ஆரம்பித்தாள் அவள். தன் மடியில் சார்ந்திருந்த இரு மகவுகளின் தலையையும் தடவிக் கொண்டு அவள் கதை கூறும் அழகை ரசித்துப் பார்த்தான் சத்யா.
இப்பொழுதெல்லாம் அவளை அப்பட்டமாக ரசிக்க ஆரம்பித்திருந்தான். காதல் வந்தால் ரசனை உணர்வுகளும் தூண்டப்பட்டு விடுகின்றனவோ? அவன் கண்களுக்கு நாளுக்கு நாள் அழகாகத் தெரிந்தாள் மனைவி.
அவன் பார்வை அவளில் லிப்ஸ்டிக் பூசாத இதழ்கள் மீது நிலைத்தன. செயற்கைப் பூச்சின்றியே சிவந்த இதழ்கள் அவனை சித்தமிழக்கச் செய்தன.
அவன் பார்வை உணர்ந்த பாவையவள் புருவம் உயர்த்த, “ஐ லவ் யூ” இதழ் குவித்து ரகசியமாய் சொன்னான் சத்யா.
“குழந்தைங்க இருக்காங்க” என்று கண்களால் காட்டி முறைக்க, “என்ன டாடி?” எனக் கேட்டான் யுகி.
“ஜானுவுக்கு ரொம்ப கவலையாம் டா. அவ மடியில் எனக்கு இடம் தர முடியலைனு ஃபீல் பண்ணுறா” அவன் சொன்னதைக் கேட்டு, ‘அடப்பாவி ஹிட்லர்’ என கண்களை விரித்தாள்.
“இதோ சின்னதா இடம் இருக்கு டாடி. வர்றீங்களா?” தலையை நகர்த்தியவாறு கேட்டான் அகி.
“இதோ வர்றேனே” அவன் அருகில் வரவும், ஜனனிக்கு இதயம் படபடத்தது.
தலை சாய்த்து விடுவானோ? அதை நினைக்கவே கூச்சமாக இருந்தது. கண்களை மெல்லமாய் மூடிக் கொள்ள, குனிந்தவன் தன் இரு மகன்களின் நெற்றியிலும் முத்தமிட்டுச் சென்றான்.
கண்களைத் திறந்தவளுக்கோ அப்பொழுது தான் ஆசுவாசமாக இருந்தது. கதை சொல்லி முடித்த பிறகு உறங்க வைக்க, “ம்மா!” அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டான் யுகன்.
“என் யுகி செல்லத்துக்கு என்னவாம்?” அவன் தலையை வருடிக் கொடுக்க, “தெரியல. மிஸ் பண்ணுற மாதிரி இருக்கு” என்று கூற, “நான் உன் கூட தான் இருக்கேன் தங்கம். நீ தூங்கும் வரை பக்கத்தில் இருக்கேன். சரியா?” அவனது அருகில் சாய்ந்து நெஞ்சில் தட்டிக் கொடுக்க சிறிது நேரத்தில் கண் அயர்ந்தான்.
அகியை எட்டிப் பார்க்க அவனும் உறங்கி இருந்தான். இருவருக்கும் முத்தமிட்டு போர்த்தி விட்டு அறைக்குச் செல்ல, குளித்து விட்டு வந்தான் சத்யா.
“எதுக்கு இந்த டைம்ல குளிக்கிறீங்க?” என்று அவள் கேட்க, “சூடா இருக்கு. குளிச்சேன்” என்று பதிலளித்தவன் அவளருகில் வரவில்லை.
தன்னிடம் தலை துவட்டி விடச் சொல்ல மாட்டானா என்று ஏங்கியது அவள் பார்வை. நேற்றும் அவனே துடைத்துக் கொண்டிருந்தான். அவள் சமயலறையில் இருந்ததால் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.
இப்பொழுதும் வராமல் அவனே துவட்டுவது, வேண்டுமென்றே செய்வது போல் இருந்தது. அவளின் பார்வை உணர்ந்து அவன் புருவங்கள் உயர்ந்தன.
“ஒன்னும் இல்ல” இரு புறமும் தலையை ஆட்டிக் கொண்டவள் திரும்பிப் படுத்தாள்.
ஆனால் கண்கள் மூடவில்லை. எழுந்து அமர்ந்தவள் அவனை நோக்கி வந்து “ஏன் என்னை தலை துடைக்க கூப்பிடல?” என்று கேட்டு விட்டாள்.
அவனும் இதை அல்லவா எதிர்பார்த்தான்?
“எதுக்கு கூப்பிடனும்? கடமைக்காக எல்லாம் உனக்கு வேலை தர்றது எனக்கு சரியாப்படல. நானே பண்ணிக்கிறேன்” என்று சொல்ல, அவள் முகம் கூம்பியது.
“நீங்க இப்படி பண்ணுறது நல்லா இல்ல. நான் தானே இவ்ளோ நாள் பண்ணுனேன். இப்போ திடீர்னு வேணாம்னு சொன்னா என்னால அதை ஏத்துக்க முடியாது” அவளால் தாங்க இயலவில்லை.
“காதல் இல்லனு சொல்லிட்டல்ல. காதல் இல்லாம ஏன் பண்ணனும்?”
“நீங்க என்னவா வேணா நெனச்சுக்கங்க. இத்தனை நாள் பண்ணுன என் வழக்கங்களை உங்க விளக்கத்துக்காக என்னால பண்ணாம இருக்க முடியாது. நான் தான் பண்ணுவேன்” டவலைப் பிடுங்கி எடுத்தவள் துடைக்கப் போக, அவன் முழு உயரத்திற்கும் எம்பி நின்றாள்.
அவளால் அவனது தலையைத் தொட முடியவில்லை. முகத்தைச் சுருக்கி அவனை நோக்க, சமத்து பிள்ளையாக கட்டிலில் அமர்ந்தான்.
அவன் தலையைத் துடைக்க ஆரம்பித்தாள் ஜனனி. என்றும் போல் பேசவில்லை அவள். அமைதியாகவே வேலையைச் செய்ய, “ஏதாவது பேசு” என்றான்.
“என்ன பேசுறது? சட்டுனு எதுவும் வர மாட்டேங்குது” யோசித்தவளுக்கு உடனடியாக சொல்ல எதுவும் வரவில்லை.
“அப்போ பாட்டு பாடு” என்றதும், தலையசைத்து என்ன பாடலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்.
“நான் பாடட்டுமா?” என்று அவனே கேட்க, தலையசைத்தவளுக்கு அவன் பாடிக் கேட்க வேண்டும் போல் இருந்தது.
தலை துவட்டி முடித்ததும் அவனது அருகில் அமர்ந்து கொள்ள, அவளைப் பார்த்தான். அவள் கண்கள் அவனோடு கலந்தன. அந்நேரம் மனதில் உதித்த பாடலைப் பாட ஆரம்பித்தான்.
🎶 ஒளி இல்லா உலகத்தில்
இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய்
காதில் பேசினாய் 🎶
🎶 மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய் 🎶
🎶 நூறு ஆண்டு உன்னோடு
வாழ வேண்டும் மண்ணோடு
பெண் உனை தேடும் எந்தன் வீடு 🎶
🎶 நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு 🎶
அவனின் குரல் உண்மையை உணர்ந்து உருகியது. அதில் தெரிந்த ஆழமும், கண்களில் தெறித்த காதலும் பெண்ணவளைக் கவர்ந்து நின்றன.
“இது வெறும் பாட்டு இல்ல ஜானு. இதெல்லாம் என் வாழ்க்கையோட இணைஞ்சிருக்கு. இருட்டா இருந்த என் வாழ்க்கையை ஒளியேற்றிய தீபம் நீ. பேசாமலே வாழ்ந்தேன். என் மௌனத்தை வென்று இவ்ளோ பேச வெச்சிருக்க.
சிரிப்பை இழந்தேன். என்னை சிரிக்க வெச்ச, ரசிக்க வெச்ச. உணர்வுகளுக்கு உயிர் தந்து என்னை மனுஷனா வாழ வெச்சிருக்க. நூறு வருஷம் இல்ல, அதுக்கும் மேல உன்னோட வாழ ஆசைப்படுறேன் ஜானு. லவ் யூ” அவள் கையைப் பிடித்து அழுத்தி விட்டு கண்களை மூடி சாய்ந்து கொண்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இன்னதெனத் தெரியாத உணர்வு. தனக்காகவும் காதல் வார்த்தைகள். இருந்தும் அதை முழுமனதோடு ரசிக்க முடியவில்லையே. அவளும் மௌனமாகவே உறங்கிப் போனாள்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி