💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 99
அழகான காலைப் பொழுது. உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள் ஜனனி. மேகலை தேவனுடன் சொந்தக்கார வீடொன்றிற்கு சென்றிருந்தார். வர நாளையாகும் என்று கூறி இருந்தார்.
கழுவி விட்டு வந்து உணவு சமைக்க எண்ணியவள் எழுந்து செல்ல, “எங்கே போற ஜானு?” என்றவாறு வந்தான் சத்யா.
“சமைக்கப் போறேன். அகி, யுகியை நர்சரி அனுப்பவும் வேணும்ல?” என்று கூற, “மதியம் சமைச்சுக்கலாம். இப்போ ஏதாச்சும் ஆர்டர் பண்ணுறேன்” என்று விட்டான்.
சரியென்று தலையசைத்தவளுக்கோ வயிற்றில் சுள்ளென்ற வலி. கண்களை இறுக மூடித் திறந்தாள்.
“ஜானு என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒன்னும் இல்லங்க” என்றவளுக்கோ அதை அவனிடம் சொல்லத் தயக்கமாக இருந்தது.
“ஜானு! ட்ரெஸ் போட்டுட்டேன். நல்லா இருக்கா?” அவள் முன்னால் வந்து நின்றான் அகி.
“உனக்கென்ன டா? சூப்பரா இருக்க” அவனது முடியைச் சீவி விட, “நான் எப்படி இருக்கேன் ஜானு?” யுகியும் அவளுக்கு அழகு காட்டினான்.
“அவன் அழகுனா நீயும் அழகு தான் செல்லம்” அவனது கன்னங்களைப் பிடித்து ஆட்டி விட்டு முடி சீவி விட்டாள்.
“நீயும் ரொம்ப அழகு ஜானு” யுகி பெரிய மனிதன் போல் அவளுக்கு நெட்டி முறிக்க, “சோ கியூட்” எனச் சிரித்தாள்.
“நான் எப்படி இருக்கேன் ஜானு?” என சத்யா கேட்க, “நல்லா இருக்கீங்க” என்று மட்டும் சொன்னாள்.
“முகத்தைப் பார்த்து சொல்லனும். நிலத்தில் என்னத்த பார்க்குற?” அவன் முறைக்கவும், “அழகா இருக்கீங்க போதுமா?” சட்டென்று சொன்னவளால் அவன் முகம் நோக்கி இயலவில்லை.
“போதாது. நல்லா பார்க்கனும்” அவள் நாடி பிடித்து உயர்த்த, தன் விழிகளால் அவனை அளவிட்டாள்.
காதல் சொட்டும் கண்கள், அடர்ந்து வளர்ந்த புருவங்கள், கூர் நெடிய மூக்கு, தாடியடர் கன்னங்கள், அழகிய மீசை, அளவாகச் சிவந்த உதடுகள் என்று அவனும் பார்க்க அழகன் தான்.
அதிலும் நெற்றி தொட்டு விளையாடும் முடிகள் அவளை வா வா என்றழைத்தன. அம்முடியைப் பிடித்துப் பார்க்கவும் அத்தனை ஆவல் அவளுக்கு.
“ஓய் மேடம்” முகத்தின் முன்னே கையை அசைத்தான் சத்யா.
விலுக்கென்று சிந்தை கலைந்தவளோ, “என்ன?” எனப் பார்க்க, “மாமனைப் பார்த்து மயங்கிட்டீங்களோ?” புருவம் உயர்த்திக் கேட்க,
“இல்லையே. நான் மயங்கல” அவசரமாக மறுத்தாள் அவள்.
“அப்படியா? ஆனால் நான் மயங்கிட்டேன். உன்னோட ரசனைப் பார்வையில மொத்தமா மயங்கிட்டேன். மயக்குற டி மாயக்காரி” என்று விட, அவனது உரிமையான டி’ எனும் அழைப்பைக் கேட்டு அவள் ஹோமோன்களில் ஏதோ மாற்றம்.
யுகனும், அகியும் ஆயத்தமாகி விட்டனர். சத்யா மூவரையும் காரில் அழைத்துச் செல்ல, அவள் அசௌகரியமாக உணர்ந்தாள்.
அவர்கள் இறங்கி உள்ளே ஓடியதும், “ஜானு” அவளது கையைப் பிடித்து நிறுத்தினான் சத்யா.
“என்னங்க?” அவளும் நடைக்குத் தடை விதித்து அவன் முகத்தை ஏறிட, “ஆர் யூ ஓகே?” மென்மையாகக் கேட்டான்.
அவளுக்கோ மனம் இளகியது. தன் வலி அவனுக்குப் புரிகிறதே, ஏதோ சரியில்லை என்பதை உணர்கிறானே என்று நினைத்தாள்.
“ம்ம்ம்” தலையை அசைத்தாள் ஜனனி.
இருந்தும் அவன் கையை விடவில்லை. அவளையே ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருக்க, “நான் போகட்டுமா?” என்று வினவினாள்.
“டேக் கேர் டா! நான் போயிட்டு வர்றேன். எதுவானாலும் கால் பண்ணு” கனிந்து ஒலித்தது அவன் குரல்.
“சரி. நான் போயிட்டு வர்றேன்” தலையசைப்புடன் அவள் செல்ல, சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டே கிளம்பினான் கணவன்.
பாலர் பாடசாலையில் இருந்த ஜனனிக்கோ இன்று மாதவிடாய் வலி அதிகமாக வந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அகி, யுகியிடம் சொல்லிக் கொண்டவள், டாக்சி பிடித்து வீட்டிற்கே சென்றாள்.
வீட்டில் எவரும் இல்லை. ரூபனும் ஹாஸ்பிடல் சென்றிருந்தான். கட்டிலில் சரிந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் சத்யாவை நாடியது.
“என்னங்க” ஏனென்று அறியாத உணர்வுகள் வதைக்க, அவன் தனது அருகில் வேண்டும் போல் தோன்றியது.
ஒவ்வொரு அணுவும் அவனைத் தேடித் தவிக்க ஆரம்பித்தன. முன்பும் இப்படி வலி வரும். தனியாகத் தாங்கிக் கொள்வாள். இன்று ஏன் தன்னுள்ளம் அவனுக்காக ஏங்குகிறது என்று அவளுக்குப் புரியவில்லை.
அலைபேசியைக் கையில் எடுத்தவள், அவனது எண்ணை அழுத்தினாள். அவனது புகைப்படம் அழகாகத் தோன்றியது. இந்நிலையும் தன்னை மறந்து ரசிக்கச் சொல்லியது அவளின் இதயம்.
அவனுக்கு அழைத்து வரச் சொல்லி விடுவோமா என்று நினைத்தாள். இருந்தும் அழைக்கத் தயங்கினாள். அவனுக்கு ஏதாவது வேலை இருக்குமா என நினைத்து அமைதியாக இருந்தாள்.
கண்களை மூடித் திறந்தவளுக்கு அவள் அறியாமலே கண்ணீர் சுரந்தது. வலியின் நிமித்தம் மட்டுமல்ல, அது ஏக்கத்தின் விளைவு. அவனுக்காகத் தான் சர்வமும் துடித்தது.
கதவு திறக்கும் சத்தத்தில் தலையுயர்த்தியவள் அதிர்ந்து தான் நின்றாள். அங்கு நின்றிருந்தது அவளது கணவன் தானே?
“ஜானு” எனும் அழைப்புடன் தன்னை நெருங்கி அமர்ந்தவனைப் பார்த்து, அவளுக்கோ விம்மல் வெளிப்பட்டது.
“என்னாச்சு டா? உனக்கு என்ன? ஏன் வீட்டுக்கு வந்த? நல்லா தானே இருக்க? டாக்டர் கிட்ட போகனுமா?” அதீத பதற்றத்துடன் வினாக்களைத் தொடுத்தான்.
“பீரியட்ஸ் தான். ஒன்னும் பிரச்சினை இல்லை” என்றவளுக்கோ அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல் உணர்வு.
“காலையிலே நீ சரியில்லை. நான் கேட்டேன் தானே? ஏன் சொல்லல?” அவன் கேள்வியில் தலை குனிந்து, “சொல்ல ஒரு மாதிரி இருந்தது” என்றாள், மெல்லிய குரலில்.
“அது சரி. நான் அப்படி தானே? என்னை நீ சொல்லக் கூடாத இடத்தில் தானே வெச்சிருக்க” தலையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான்.
அவள் இருக்கும் நிலை புரிந்தும் அவனால் அவள் செய்ததை ஏற்க முடியவில்லை. தன்னை ஏன் இத்தனை தூரமாக நிறுத்துகிறாள் என புரியவேயில்லை.
“அப்படி இல்லங்க. ஏதோ தயக்கமா இருந்துச்சு. சரி ஆகிடும்னு தான் நான் நெனச்சேன். ஆனால் அங்கே போனதும் நின்னுட்டு இருக்க முடியல. அதனால தான் வந்தேன்” என்று கூறினாள்.
“நீ என்ன ஜானு நெனச்சிட்டு இருக்க? சொல்லாம போன ஓகே. அங்கே வலின்னா எனக்கு ஒரு கால் பண்ணி இருக்கலாம்ல? கார் எடுத்துட்டு ஓடி வந்து இருப்பேனே. டாக்சில வரனுமா? இங்கே வந்தும் கூட ஒரு வார்த்தை சொல்லல.
மனசு ஒரு மாதிரி இருக்கவும் தான் உனக்கு கால் பண்ணுனேன். நீ ஆன்ஸ்வர் பண்ணல. அப்பறம் டீச்சருக்கு பண்ணுனா வீட்டுக்கு போயிட்டதா சொன்னாங்க. உடனே வந்துட்டேன். இல்லனா நீ தனியா தானே இருந்திருப்ப” சற்றே கடுமையாகச் சொன்னான் அவன்.
“நீங்க வேலையில் இருப்பீங்க. நான் கூப்பிட்டா அது கெட்டுப் போயிடும் இல்லையா?” அவள் கேட்க, “எனக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் பெரிசில்ல ஜானு. வேலை இன்னிக்கு இல்லனா நாளைக்கு செஞ்சுக்கலாம். ஆனால் இப்போ உன் கூட இருக்கனும், நாளைக்கு இருந்து பிரயோசனம் இல்லல்ல? இந்த மாதிரி தியாகியா யோசிச்சு என்னை கடன்காரன் ஆக்காத. உன்னைப் பார்த்துக்க முடியலைங்கிற கில்ட் ஃபீலிங்ல என்னைத் தள்ளிடாத” அவன் சொல்லவும் அவள் மௌனித்து நின்றாள்.
“உனக்கு நான் வேண்டாதவனா இருக்கலாம். ஆனால் எனக்கு நீ வேணும். உனக்கு ஒவ்வொன்னையும் பண்ணனும், உன் சந்தோஷத்தைக் கொண்டாடனும், கஷ்டத்தில் தோள் தரனும்னு ஆசைப்படுறேன். அதை கடமைக்கும் மேலா நினைக்கிறேன். அதைப் பண்ணலனா நான் என்னமோ தப்பு பண்ணுன மாதிரி ஃபீல் பண்ணுவேன். அதை எனக்கு தந்துடாத. என்னை கஷ்டப்படுத்துறது தான் உன் விருப்பமா?” என்று அவன் கேட்க,
“இல்லங்க. நான் அப்படி எதுவும் நெனக்கல. நீங்க இந்த மாதிரி பேசாதீங்க” அவசரமாக தலையை அசைத்தாள் ஜனனி.
“அப்பறம் ஏன் ஜானு? என்னால நீ பண்ணுறதை ஏத்துக்கவே முடியல” என்றவன் சட்டென நிதானித்தான்.
அவளே வலியில் இருக்கிறாள். இதில் தானும் கேள்வி கேட்பது சரியல்லவே என அமைதியாக நிற்க, அவனைப் பார்த்து “சொல்லுங்க. இன்னும் என்ன இருக்கோ எல்லாமே சொல்லிடுங்க. நான் தான் ஒன்னுமே யோசிக்காம தப்பு தப்பா பண்ணுறேன். நான் தான் சரியான லூசு” அவள் அழத் துவங்க,
“ஹேய் ஜானு! என்ன இது குழந்தை மாதிரி” அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவளுக்கும் அவ்வணைப்பு தேவையாக இருந்ததுவோ? அவன் கையணைப்புக்குள் பாந்தமாக அடங்கிப் போனாள். அவளது அழுகையும் மெல்ல மெல்ல மட்டுப்பட ஆரம்பித்தது.
“நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல?” அவள் பாவமாகக் கேட்க, “இல்லம்மா. அப்படி இல்ல. நீயா எதுவும் நெனச்சு பண்ணல. நான் தான் உன்னை குற்றம் சாட்டி பேசிட்டேன். நீயே வலி தாங்க முடியாம இருக்க” அவளது தலையை மென்மையாக வருடிக் கொடுத்தான்.
“நான் இப்படிலாம் அழ மாட்டேன். ஆனால் இன்னிக்கு என்னால தாங்க முடியல. என்னவோ தெரியல. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுனேன். உங்களைப் பார்க்கனும் போல இருந்துச்சு. உங்க பக்கத்தில் இருக்கனும் போல இருந்துச்சு. தவிச்சு போயிட்டேன்” தனது உணர்வுகளை மறைக்காமல் பரிமாறிக் கொண்டாள்.
“ஜானு” அவன் ஆச்சரியமாக அழைக்க, “என் கிட்ட எந்தக் கேள்வியும் கேட்காதீங்க. எதையும் சொல்லுற நிலமையில் நான் இல்ல. எதுவும் கேட்டுடாதீங்க” அவள் என்ன கேட்கிறாள் என்று அவன் புரியாமல் யோசிக்க,
“லவ் பற்றி பேச வேண்டாம்னு சொன்னேன். அதுக்கு எந்த பதிலும் என்னால சொல்ல முடியாது” அவள் சொன்னதைக் கேட்டு, அவன் கண்களில் பளிச்சென்ற மின்னல்.
“அட்ராசக்கை! நீ ரொம்பவே தேறிட்ட ஜானு” அவன் சிரிக்க, “என்ன தேறிட்டேன்?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் சொல்ல மாட்டேன். நீயா புரிஞ்சுக்க” என்றவன், “நீ சாஞ்சுக்கிட்டு இரு” என்றவாறு வெளியில் சென்று விட்டான்.
சிறிது நேரம் கட்டிலில் உருண்டவளுக்கு அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. கீழே இறங்கி சத்யாவைத் தேடிச் செல்ல அவன் சமயலறையில் இருந்தான்.
“என்ன பண்ணுறீங்க?” என்று அவள் கேட்க, “டான்ஸ் பண்ணலாம்னு வந்தேன்” என்றவனை இடுப்பில் கை குற்றிப் பார்த்தாள்.
“சமைக்கலாம்னு தான். நீ இங்கே என்ன பண்ணுற?” என்று கேட்டான்.
“அங்கே இருக்க முடியல. ஏதாவது ஹெல்ப்..” என சொல்ல வர, “நீ எதுவும் பண்ணக் கூடாது. இப்படி உட்கார்ந்து இருந்தா அதுவே பெரிய ஹெல்ப்” என்று கதிரையைக் கை காட்டினான்.
அவளும் அமர்ந்து கொள்ள, வெளியில் சென்று வந்தவன் சாக்லேட் ஒன்றை நீட்டினான்.
“உனக்காக வாங்கிட்டு வந்தேன்” என்று அவன் சொல்ல, “தாங்க் யூ” அதைச் சாப்பிட்டவளுக்கு சாக்லேட்டை விட அவனது அன்பு இனித்தது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி