5. நேசம் கூடிய நெஞ்சம்

4.9
(15)

நெஞ்சம் – 5 

வீடு வரும் வழியெல்லாம் மலரை கரித்து கொட்டிக் கொண்டே வந்தான் அர்விந்த். ஏதோ வந்திருக்கே, என்ன ஏதுனு கேட்போம்னு இல்லாம, தூக்கி கொடுத்திட்டு இருக்கு! எல்லாம் அது இஷ்டத்துக்கு செய்யும் போல… லூசு! லூசு!

அடப்பாவி, அந்த பிள்ளை கிட்டே ஒண்ணுமே சொல்லாம ஆர்டர் போட்டதும் இல்லாம, அந்த பச்சப் புள்ளையை இப்படி திட்டுற! உன் மனசாட்சி, நான் சொல்றதை கண்டுக்க கூட மாட்டேங்கிற! நியாயமா டா இது? ஒரு ஒரமாக இருந்து கதறியது அவன் மனசாட்சி!

வீட்டை அடைந்தவன், காலிங்பெல் அழுத்திய வேகத்தில் வந்து இருப்பது யார் என்று தெரிந்து போயிற்று மலருக்கு. பதறி ஓடினாள் கதவை திறக்க. கதவை திறந்த அவளின் முகத்தில் தெரிந்த பயம் கூட அவனின் ஆத்திரத்தை குறைக்கவில்லை. வந்த அதே வேகத்தை அவளிடம் இறக்கினான்.

“போன் பண்ணா எடுக்க மாட்டியா? இந்த காலத்தில இப்படி ஒரு லூசா? உன்னை என்ன போன்ல தூக்கிட்டு போய்டுவாங்களா? லூசு! லூசு! உன்னால எனக்கு இப்போ தேவையில்லாத அலைச்சல்.”

ஐயோ! ஏதோ அவசரம் போல என்று பயந்து போனாள் மலர்.

“ஸாரி, ஸாரி சார்! மன்னிச்சுருங்க சார்! எதாவது பிரச்சனையா சார்? என்ன சார் வேணும்? என்ன ஆச்சு சார்?” என்றாள் மிகுந்த பயத்துடன்.

அப்போது தான் அவளின் பயத்தை உணர்ந்தான் அர்விந்த். கொஞ்சம் நிதானித்தான். மிகவும் பயந்து போனவளாக என்ன பிரச்சனை என்று அவள் கேட்ட பொழுது,

ஹான்…. நீ பீட்சா சாப்பிடாதது தான் பிரச்சனை! அதுக்கு தான் இப்போ அவசரமா வந்தேன் என்று சொல்ல முடியாமல் நின்றான். அவனுக்கே இப்போது அவன் செய்த முட்டாள்தனம் உரைத்தது. நான் என்ன பைத்தியக்கார தனம் பண்ணிட்டு இருக்கேன்? இப்படியா கோவத்தில யோசிக்காம செய்றது? இடியட், இவளால எனக்கு தேவையில்லாத டென்ஷன், நொந்து போனான் அர்விந்த். ஆனால் அவ்வளவு கோவத்தை அவளிடம் இறக்கி வைக்காமல் இருக்க முடியவில்லை. அதனால், அவளிடம் நெருங்கி,

“வீட்டில எதாவது நடந்தா, உனக்கு தெரியலைனா எனக்கு போன் பண்ணனும் இனிமே புரியுதா? உன் இஷ்டத்துக்கு முடிவு எடுக்கிறது கூடாது! ஓகே? புரியுதா? என்றான்.

அவளை அவ்வளவு நெருங்கி நின்றான் அர்விந்த். ஆனால் அவனுக்கு எந்த அசூசையும் இல்லை, வித்தியாசமாகவும் இல்லை. அவன் இயல்பாக பேசினான்.

ஆனால் இங்க மலருக்கு தான் நெஞ்சம் படக் படக் என்றது. பேச்சே வரவில்லை. அவள் முகம் அருகே இருந்த அவனின் நெஞ்சம், அதன் திண்மையை கொஞ்சமாக திறந்து இருந்த டிஷர்ட் வழியே காட்ட, மூச்சை இழுத்து விட்டு தன் படபடப்பை சரி செய்ய பார்த்தாள். மூச்சை இழுத்து விட்டாள், அவன் வாசனை அவளுள் சென்று நிரம்பியது! கடவுளே! தவித்து போனாள் மலர் அவளின் கவனம் முழுதும் அவர்களின் நெருக்கத்திலேயே இருக்க, எங்கே பேசுவது?

ஆனால் அவளின் பதிலுக்கு காத்திருந்தவன்,

“புரியுதா இல்லையா?” என்று அவள் தாடையை நிமிர்த்தினான்.

அவனின் ஸ்பரிசம் ஒன்றும் அவளுக்கு புதிதல்ல, முதல் நாளே அதை இதை விட அதிகமாக உணர்ந்தவள் தான், ஆனால் இப்பொழுது மூச்சே நின்று விடும் போல் இருந்தது. அவன் தாடையை நிமிர்த்த, அவன் முகத்தில் அவள் பார்வையை நிலைக்க விட்டவளுக்கு அதில் தெரிந்த ஆத்திரத்துக்கு கொஞ்சமும் காரணம் தெரியவில்லை. அவனுக்கு இந்த நெருக்கம், மலரின் அருகாமை எதுவும் பாதிக்கவில்லை, அவனின் எண்ணம் எல்லாம் அவள் சொதப்பி விட்டாள் என்பதே!

காதல் கடவுள் மன்மதன் மேலேருந்து, அட லூசு பயலே! என்று திட்டிக் கொண்டு இருந்தார்.

அவனின் ஆத்திரம் கண்டவளுக்கு, தான் என்ன தவறு செய்தோம் என்று தெரியாததால், அவன் வேறு புரியுதா என்றும் கேட்டு இருக்க, மெதுவாக,

“நான் என்ன தப்பு செஞ்சேன் சார்? எனக்கு புரியலை சார்!” என்றாள்.

“உனக்கு தான் ஒன்னும் புரியாதே…” பல்லை கடித்தவன், “பீட்சா ஆர்ட்ர் போட்டேன், வீட்டுக்கு வந்துச்சா?”

ஆமா! பெரிசாக தலையை ஆட்டியவள், “ஜனனி அக்கா சார் கிட்டே கொடுத்துட்டேனே” என்றாள் வேகமாக மலர்.

“அந்த டேஷை தான் எதுக்கு உன் இஷ்டத்துக்கு செஞ்ச? எனக்கு போன் பண்ணி இருக்கணும்ல….” அவனின் தரமற்ற பேச்சில் மலருக்கு கோபம் வந்துவிட்டது.

“நான் ஏன் உங்களுக்கு போன் பண்ணனும்? எனக்கு எப்படி தெரியும் இதெல்லாம்? நீங்க தானே எனக்கு போன் பண்ணி சொல்லி இருக்கணும்!” பட்டென்று திருப்பி கொடுத்தாள் அவனுக்கு.

அவள் அப்படி பேசியது அர்விந்திற்கு மரியாதை குறைச்சலாக தெரிந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இல்லாமல், அவளை மேற்கொண்டு வம்பு இழுத்தான்.

“இதெல்லாம் நல்லா பேசு! போன் பண்ணா எடுத்து இருப்பியா? லூசு”

“நான் ஒன்னும் லூசு இல்லை, பொண்ணுங்க எல்லாம் இப்படி தான் ஜாக்கிரதையா இருப்பாங்க!” சொல்லிவிட்டு வேகமாக திரும்பி உள்ளே செல்ல பார்த்தாள் மலர்.

“ஆமா இந்த அம்மா உலக அழகி, அந்த டப்பா போன்ல இருந்து இந்த அம்மாவை கடத்திட்டு போயிடுவாங்க….” என்றவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தி இருந்தான்.

அவன் வந்ததே வீண் வேலை பார்க்க, அந்த வீண் வேலையையும் பார்க்காமல்வேறு ஏதோ வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். என்ன செய்கிறான், பேசுகிறான் என்பது அவனுக்கும் புரியவில்லை, அவளுக்கும் புரியவில்லை.

தன் கைகளை அழுந்த பிடித்து இருக்கும் அவனின் செயலை நம்ப முடியாமல் கண்களை விரித்து பார்த்தாள் மலர்.

அந்த விரிந்த கண்களுக்குள் சென்று விடுவது போல் இருந்தது அவனுக்கு. ஷப்பா! என்ன கண்ணு டா! என்று நினைத்தவன்,

“ஹேய் விழி, உனக்கு பெரிய விழி தான், அதுக்கு இப்படி முழிச்சு என்னை பயமுறுத்தாத!” என்றான்.

“இப்போ உங்களுக்கு என்ன தான் சார் வேணும்?” அலுத்துக் கொண்டு கேட்டாள் ஒன்றும் புரியாமல்.

“போய் உன் டப்பா போனை எடுத்திட்டு வா” என்றவன், அவள் கைகளை மெதுவாக விட்டான்.

அவள் எடுத்து வந்து தர, அதில் தன் நம்பரை சேர்த்தவன், “இனி நான் போன் பண்ணா எடு! நீ எதுனாலும் என்னை கேட்டு தான் செய்யணும்! நான் சொல்றதை தான் செய்யணும்! சொல்றதை மட்டும் செய்ய தான் நீ இங்க இருக்க, புரியுதா?” கடைசியில் வழக்கம் போல் அவள் மனதை கீறி விட்டான்!

மனம் வலிக்க, தலையை ஆட்டினாள் மலர்.

அவன் அறைக்குள் சென்று விட்டான். சற்று நேரத்தில் மீண்டும் ஒரு சாப்பாடு டெலிவரி வர, வாங்கியவள் அவனை அழைத்தாள்.

“குட் கேர்ள்! சரியா பண்றியானு டெஸ்ட் பண்ண தான் ஆர்டர் போட்டேன்! நீ தான் சாப்பிடணும் அதை” என்றான்.

அடேய், அடேய், உலக மகா நடிப்பு டா, மனசாட்சி கதறியது மீண்டும்!

“நானா? இவ்வளவா? எனக்கு வேண்டாம்….” மலர் இழுக்க, அழைப்பை துண்டித்தான்.

என்னடா இது புது வம்பா இருக்கு? இவரை புரிஞ்சுக்கவே முடியலையே என்று தவித்தாள் மலர்.

“என்ன என்னை திட்டுறியா?” என்றபடி அவளை தேடி வந்தவன், டப்பாவை திறந்து அவளுக்கு அழகாக பீட்சா துண்டுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொடுத்தான்.

ஒன்றும் சொல்லாமல் வாங்கி கொண்டவள், அமைதியாக இருக்க,

“சாப்பிட்டு இருக்கியா இதை?” ஒரு எதிர்பார்ப்போடு கேட்டான்.

அவளுக்கு புதிதாக ஒன்றை செய்து கொடுத்து விடும் வேகம் தானே அவன் செயலில். அதற்கு தானே இவ்வளவு பாடு! அவனின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், இல்லை என்று தலையசைத்தாள் மலர்.

மிகுந்த சந்தோஷம் அவனுக்கு. அவள் அருகிலேயே இருந்து அவளை உண்ண வைத்தான். அவனின் அக்கறையில் அவள் உள்ளம் நெகிழ்ந்தது. அவனின் கவனிப்பில் அவள் உள்ளம் அவன் பக்கம் பலமாக சாய்ந்தது. மூன்று துண்டுக்கு மேல் அவளால் சாப்பிடவே முடியவில்லை. அவனிடம்,

“ப்ளீஸ் சார், போதும் சார்! நீங்க சாப்பிடுங்க சார்” என்று கெஞ்சிய பின் தான் விட்டான். சற்று நேரத்தில் மீண்டும் ஹாஸ்பிட்டல் கிளம்பி சென்று விட்டான்.

எதற்கு வந்தான்? எதற்கு கோபப்பட்டான்? ஏன் தன் அருகிலேயே இருந்து உண்ண வைத்தான்? எந்த கேள்விக்கும் விடையில்லை மலருக்கு. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. அவன் நல்லவன் என்று. கோபப்பட்டாலும், தன்னை வித்தியாசமாக நடத்தினாலும் அவனிடம் கள்ளம் இல்லை, கெட்ட எண்ணம் இல்லை! அந்த அளவில் சந்தோஷப்பட்டுக் கொண்டாள் மலர்.

வண்டியில் சென்று கொண்டு இருந்த அவனுக்கும் பல குழப்பம்! ஆனாலும் எதையும் ஆழமாக யோசிக்கவில்லை அவன். ஒரு சிறு பெண் வேலைக்கு வந்ததில், அவளின் இருப்பில் அவளை எப்படி ஹாண்டில் செய்வது என்று தான் கொஞ்சம் குழம்பி போய் இருக்கிறோம். இனி பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டதோடு முடித்து விட்டான்.

அவனின் மனதில் தோன்றும் உணர்வுகள் எதுவும் இன்னும் அரங்கேற்றும் ஆகும் அளவுக்கு உருவம் பெறவில்லை. ஆங்காங்கே சிதறி இருந்தது. அதெல்லாம் ஒன்று சேர்ந்து உருவம் பெற இன்னும் நாள் ஆகும்! அதற்குள் மலர் ஒரு வழியாக போகிறாள் அது மட்டும் நிச்சயம்!

அன்று இரவு அருணாவை அறைக்கு மாற்றி விட, அவருக்கு துணைக்கு ஜனனி அங்கே தங்குவதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் அவந்திகாவிற்கு காய்ச்சல் வந்துவிட, குழந்தை அம்மாவை தேடியது. தியாகு இருக்கிறேன் என்றார், நீங்கள் சரியாக உறங்காவிட்டால் உங்கள் உடம்புக்கு எதாவது வந்து விடும் என்று மறுத்து விட்டனர் இருவரும். அதனால் மலரை அழைத்து கொள்ளலாம், வீட்டில் ஜனனி இருப்பாள், அதனால் பாட்டிக்கும் பிரச்சனை இல்லை என்று முடிவெடுத்தனர்.

சின்ன பெண், ஊருக்கு புதிது என்பதால் துணைக்கு நான் இருக்கிறேன் என்றார் தியாகு. வலுக்கட்டாயமாக அவரை வீட்டிற்கு அனுப்பியவன், தானே இருக்கிறேன் என்றான். இவர்கள் வீட்டிற்கு சென்ற பின், ஆரவ் வந்து மலரை மருத்துவமனையில் விடுவான்.

அவனுக்கு ஆயிரம் அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பி சென்றார் தியாகு. “அந்த பொண்ணுக்கு உன் வேகத்துக்கு எதுவும் புரியலைனா கோபப்படாதே டா, நல்ல பொண்ணு, பாவம் டா, ஏற்கனவே உன்னை பார்த்து பயப்படுறா! என்றார்.

“இதென்ன புது கதை பா? அவ என்னை பார்த்து பயப்படுறாளா? நீங்களே சொல்லிக்கோங்க!” என்றவன் மனதில், மாலை என்னிடம் எப்படி பேசினாள்? பயமா அவளுக்கு? செல்லமாக சொல்லிகொண்டான்.

“அவகிட்ட என் லேப்டாப் கொடுத்து விடுங்க பா! கொஞ்சம் வேலை இருக்கு!” என்று அவர்களை வழியனுப்பி வைத்தான். மனம் ஏனோ உற்சாகமாக இருந்தது. அவள் வரவை ஆவலாக எதிர்நோக்கினான் அர்விந்த்!

“எதுக்கு இப்போ நான் இவ்ளோ ஹாப்பி யா இருக்கேன்?” அவனே அவனிடம் கேட்டு கொண்டான்.

இங்கே ஒருவன் ஆவலாக இருக்க, அங்கே ஒருத்தி மந்திரித்து விட்டது போல் கிளம்பினாள். ஜனனி அவளிடம்,

“பயப்படதே நீ அம்மா கூட ஜஸ்ட் துணைக்கு தான்! மத்தது எல்லாம் அர்வி பார்த்துப்பான்” என சொல்ல, மிரண்டாள் மலர்.

“அங்க தான் இருப்பாங்களா?” அவள் கேட்டது அவனுடன் இருக்க வேண்டுமா என்ற பயத்தில். ஜனனி புரிந்து கொண்டது வேறு,

“ஆமா, உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டான். நல்ல பெரிய ரூம் அது. ரெண்டு பேர் தங்கிக்கலாம் தாராளமா” என்றாள் ஜனனி.

தெய்வமே! அண்ணாமலையாரே! என்னை காப்பத்துங்க! மனதினில் வேண்டியவள், சிங்கத்துடன் குகையில் தங்க போகும் முயல்குட்டி போல் பயந்து கிடந்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “5. நேசம் கூடிய நெஞ்சம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!