13. காயமின்றி வாழும் காதல்

5
(12)

காயமின்றி வாழும் காதல் – 13

மேகலாவிற்கு ஆதரவாக பேசிய குறிஞ்சியை சுத்தமாக பிடிக்கவில்லை ராதிகாவிற்கு. ராதிகாவிற்கு மாடுலர் கிட்சன், மடிப்பு கலையாத உடை, வைட் காலர் ஜாப் என்பது தான் வாழ்க்கை. விவசாயம், ஆடு, மாடு என்பது ஏற்புடையதாக இல்லை. எளிமையாக இருக்கும் இவர்களின் நல்ல குணம் தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை.

“கம்ப்யூட்டர் ஈஸினு யாரு சொன்னா உனக்கு? அதில வேலை பார்த்தா தெரியும்” என்றார் கோபமாக.

“தப்பு தான். அப்படி சொல்லி இருக்க கூடாது. நான் சொல்ல வந்த அர்த்தம் என்னனா இப்போ இருக்கவங்க அதை சீக்கிரம் கத்துக்குவாங்க, இது மாதிரி வேலை செய்ய முடியாதுனு தான்….” என்று இறங்கி போனாள். அதற்கு மேல் அவளிடம் என்ன வாதாடுவது?

அப்போது தான் ரவி வந்ததை கவனித்தாள் குறிஞ்சி. அவனை கண்டவுடன், “எங்க அத்தானை கூட கேளுங்க, அவருக்கு கம்ப்யூட்டர் ரொம்ப ஈசி ஆனா எங்க சிகப்பி கிட்ட ஒரு நாள் கூட போக மாட்டார்….” என்று வம்பு செய்தாள்.

அவன் பின்னேயே ஸ்ரீராம், கௌஷிகா என அனைவரும் வந்தனர். அவர்கள் வர அவளின் பேச்சை ஒதுக்கி விட்டு, கௌஷிகாவிடம் அவளை அறிமுகப்படுத்தினான்.

“இது குறிஞ்சி, உள்ளே இருந்தாங்களே கோகிலா அத்தை, அவங்க பொண்ணு” என்றான். அனைவரும் வள்ளி என்பார்கள். ஏனோ இவன் மட்டும் அவளை மற்றவரிடம் குறிப்பிட வேண்டும் என்றால் குறிஞ்சி என்று தான் சொல்வான்.

கௌஷிகா இவளை பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஹாய் சொல்லி விட்டு, சிரிப்புடன் நகர்ந்து விட்டாள். குறிஞ்சியும் அவளிடம் ஏதும் பேச விரும்பவில்லை. மேகலா வந்து சொன்னது போல் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று நினைத்து கொண்டாள். அவர்களுடனே ரவியும் உள்ளே சென்றான். அவர்கள் உள்ளே சென்ற பின் ஷ்யாமளா இவளிடம் வந்து அமர்ந்து விட்டாள். ஷ்யாமளா அவர்களிடம் பட்டும் படாமல் பேசி விட்டு விலகி வந்து விட்டாள்.

“டிவியில் வர்ற ஆளுங்க மாதிரி செமயா தான் இருக்கு பொண்ணு!” ஷ்யாமளாவிடம் சொன்னாள் குறிஞ்சி.

“சம்பாதிக்கிற காசில் பாதி அழகை பராமரிக்க தான் செலவு பண்ணுவாளா இருக்கும்!”

“நாமளும் கொஞ்சம் டிப்ஸ் கேட்டு தெரிஞ்சுக்குவோம் மதினி”.

“ஒன்னும் வேணாம்! நமக்கு இருக்கிறது போதும். பேசாம இரு” என்று திட்டுவது போல் சொன்னாள் ஷ்யாமளா.

எப்படி இவளால் இயல்பாக இருக்க முடிகிறது என்று ஆச்சர்யம் அடைந்தவள் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. கேட்டாலும் சொல்ல மாட்டாளே அது வேறு விஷயம். ஷ்யாமளா அவள் மனதை கண்டுபிடித்தது ஒரு நாள் இரவு. ரவியின் காதல் பற்றி தெரிந்த சில நாட்கள் கழித்து, ஷ்யாமளா அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். அறிவழகன் வெளியூர் சென்றிருந்ததால் கோகிலாவையும் குறிஞ்சியையும் இவர்கள் வீட்டிற்கு படுக்க அழைத்தாள் ஷ்யாமளா. வர வெகுவாக தயங்கினாள் குறிஞ்சி. இதற்கு முன் இப்படி அழைத்தால் ஓடி வருவாள், ஏதாவது கதை பேசி கொண்டே இருப்பாள். அவள் தயங்கவும் ஏன் என்று புரியவில்லை அவளுக்கு. வற்புறுத்தி வர சொன்ன போதும் அன்று இரவு வழக்கம் போல் கதை பேசவில்லை. ரவியின் காதலை பற்றி ஷ்யாமளா புலம்ப ஆரம்பிக்க அவளையும் மீறி கண்ணீர் உகுத்து விட்டாள் குறிஞ்சி.

“வள்ளி!” அதிர்ந்து விட்டாள் ஷ்யாமளா.

“ரவியை விரும்புறியா?” என்ற கேட்டவளின் மடியில் படுத்து கதறி விட்டாள். ஆனால் ஒரு வார்த்தை கூட வரவில்லை.

அந்த ஒரு நாள் தான் அழுகை, அதற்கு பின் இவள் என் தம்பியை நினைத்து வருத்தமாக இருக்கிறாள் என்று ஷ்யாமளா சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்! அப்படி இயல்பாக இருப்பது போல் காட்டி கொண்டாள்.

“நான் விரும்புறேன்னு யாரிடமும் சொல்ல கூடாது” என்று கண்டிப்பாக சொல்லி விட்டாள். “சொன்னாலும் உங்க தம்பி ஒத்துக்கொள்ள மாட்டார். சொல்லி என்னை அசிங்கப்படுத்திடாதீங்க மதினி” என்று அவள் சொல்ல ஷ்யாமளா அமைதி ஆகி விட்டாள்.

“என்ன மதினி என்னை பத்தி பிளாஷ்பேக் கா? நீங்க நினைச்சது போதும், நம்ம ரெண்டு பேர் மட்டும் பிரியாணி வாங்கிட்டு வந்து சாப்பிடுவோமா? சம்பந்தி எல்லாம் வந்தா நம்ம வீட்டில சாப்பாடு எல்லாம் எப்படி அதகளப்படும்! இப்போ சாம்பார் ஊத்துறீங்க! சே! நமக்கு வந்த சோதனை?” என்று சிரித்தாள் குறிஞ்சி.

“ஹேய்! வேண்டாம் எப்படியும் வாசனை வந்துரும். அப்பா உன்னை ஒன்னும் சொல்ல மாட்டார். நான் உனக்கு சொல்லி தரலைனு எனக்கு தான் திட்டு விழும்” என்றாள்.

சரி வேண்டாம் விடுங்க என்று விட்டு விட்டாள் குறிஞ்சியும்.

உணவு உண்ணும் நேரம் வர, பரிமாற ஷ்யாமளா வை அழைக்க அவள் உள்ளே சென்றாள். அனைவரும் இருக்க, குறிஞ்சி மட்டும் காணாமல் போய் இருந்தாள். எங்கே போய் இருப்பாள் இவள் என்று நினைத்தபடி உண்டான் ரவி.

சாப்பாட்டு அறை சூழ்நிலையும் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை. அவர்கள் ஊர் வேலை பற்றி கேட்டால் நன்றாக பேசுவார்கள் என்று உணர்ந்த மூர்த்தி, லேசாக அதை பற்றி கேட்டார். அவர் எதிர்பார்த்ததை போல் கணவனும் மனைவியும் அவர்களை பற்றி பேசி தள்ளி விட்டனர். சங்கடமாக அமர்ந்து இருந்தான் ரவி. இப்படியா சுயபுராணம் பாடுவார்கள் மக்கள் என்று அவனுக்கு ஆயாசமாக இருந்தது.

உணவு உண்ட பின்,

“ரவி எனக்கு ஒரு தனி ரூம் வேணும். ஒரு மீட்டிங் இருக்கு” என்றாள் கௌஷிகா.

கீழே அறையில் சத்தம் கேட்கும் என்பதால் மேலே அழைத்து சென்றான் ரவி. அங்கே சென்றதும், வேகமாக அவனை இறுக்கி அணைத்து கொண்டாள் கௌஷிகா.

“ஹேய்! என்னதிது? கீழே எல்லாரும் இருக்காங்க” என்று மெதுவாக அவளை விலக்க பார்த்தான் ரவி.

“எவ்ளோ நாள் ஆச்சு?” என்று அவனுக்கு உதட்டில் முத்தம் வைத்தாள் கௌஷிகா.

அவளுடன் ஒன்று முடியாமல், விலகியவன் கீழே எல்லாரும் இருக்காங்க. “நீ மீட்டிங் அட்டெண்ட் பண்ணிட்டு வா, நான் போறேன்” என்று போக பார்த்தான்.

“ஹாஹா, நீயுமா நம்பிட்டே? அவ்ளோ டென்ஷனா இருக்கியா? நான் குறைக்கிறேன் உன் டென்ஷனை” என்றவள் மீண்டும் அவனைத் தழுவிக் கொண்டாள்.

“நான் லேப்டாப் கூட வைச்சுக்கலை பார்! என் பேரெண்ட்ஸ் பத்தி கவலை இல்லை எனக்கு. உங்க வீட்டில் ஒன்னும் தெரியாதவங்க தானே? அதனால் தான் அப்படி பொய் சொன்னேன். கமான் ரவி….” என்று அவன் முகத்தை இழுத்து அவன் இதழை பற்றினாள் கௌஷிகா. அவளுக்காக சற்று நேரம் அவளுடன் ஒத்துழைத்து அமைதியாக இருந்தான் ரவி.

அவனுக்கு கொஞ்சம் கூட எந்த உணர்வும் இல்லை இப்போது. ஒரு மாதிரி தவிப்பில் இருந்தான். வீட்டில் இன்று நிலவும் இந்த கனமான சூழ்நிலை தன்னால் தான். தேவையில்லாமல் காதல் என்று சொல்லி அவர்களை கஷ்டப்படுத்துகிறேமோ என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஒரு வேளை கௌஷிகாவின் பெற்றோர் நல்லவிதமாக பேசி இருந்தால் இப்படி உணர்ந்து இருக்க மாட்டானோ என்னவோ? அதோடு உண்மையிலேயே பெரிய தவிப்பு அவனுக்கு குறிஞ்சியின் முன் கௌஷிகாவை கொண்டு வந்தது தான். ஏன் என்றே புரியாமல் தவித்தான் ரவி. குறிஞ்சி முகத்தை முகத்தை பார்த்தான் அடிக்கடி. அவள் இயல்பாக இருந்தாலும் இவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.

பின் அவளிடம் இருந்து விலகியவன்,

“நான் கீழே போறேன். நீ கொஞ்ச நேரம் கழிச்சு வா….” என்று சொல்லி விட்டு இறங்க போனான்.

“இட்ஸ் ஓக்கே ரவி. இங்கே சிக்னல் சரியில்லை சொல்லிக்கலாம்! நானும் வரேன்” என்று அவனுடனே இறங்கி போனாள் கௌஷிகா.

அவர்கள் இருவரும் இறங்கியதும், அங்கே இன்னொரு அறையில் அமர்ந்து இருந்த குறிஞ்சி அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை வேகமாக வெளியிட்டு தளர்ந்து அமர்ந்தாள்.

ஷ்யாமளா பரிமாற வீட்டினுள் சென்றதும், தனிமையில் இருக்க எண்ணி வெளிப்படிக்கட்டு மூலமாக மாடி அறைக்கு வந்திருந்தாள் குறிஞ்சி. ஒரு அறையில் பெரிதாக பொருட்கள் கிடையாது. ஒரு கட்டில் மட்டும் உண்டு. சிறிய அறை தான் அது. அங்கே சென்று தனியாக அமர்ந்து இருந்தவள் கொஞ்சம் கூட இவர்கள் இருவரையும் அங்கே எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவர்கள் அங்கிருந்த ரவியின் அறைக்குள் சென்றிருந்தால் இவளுக்கு எதுவும் தெரிந்து இருக்காது. ஆனால் ஹாலிலேயே நின்று விடவும் அனைத்தையும் பார்க்க நேர்ந்தது.

அவர்கள் நெருக்கத்தை பார்த்து வருத்தமில்லை என்று சொன்னால் அது பொய். இருந்தது. நிறையவே இருந்தது. ஆனால் இது போன்ற விஷயம் எல்லாம் அவள் கற்பனையில் கண்டு துடித்து தெளிந்து மீண்டு இருந்ததால் சமாளித்து கொண்டாள் குறிஞ்சி.

அவர்கள் சென்ற பின்னரும் அவர்கள் நின்ற கோலமும் செய்கையுமே அவள் மனக்கண்ணில் உலா வந்தது.

“சே! கண்ணு கெட்டு போச்சு! கடவுளே இப்படி ஒரு ஷோ பார்க்க வைச்சுட்டியே என்னை! எப்படி இழுக்குது அத்தானை அந்த பொண்ணு…. இது தான் லவ் போல், எவ்ளோ உரிமை? வருத்தமாக, ஏக்கமாக கோபமாக என தனக்குள் புலம்பி கொண்டாள் குறிஞ்சி.

அவனின் காதல் விஷயம் தெரியும் வரை, ரவி மேல் ஆசை இருந்த போதும் அவனுடன் மிகவும் நெருக்கமாக தன்னை பற்றி கற்பனை செய்ததில்லை குறிஞ்சி. அவன் காதல் பற்றி தெரிந்ததும் முகம் அறியா அந்த பெண்ணுடன் அவனை சேர்த்து நினைத்து துடித்து இருக்கிறாள். இப்போது வருத்தத்தையும் மீறி அவர்களின் நெருக்கம் கண்டு இவளுக்கு ஏக்கம் வந்தது. கௌஷிகாவின் இடத்தில தானில்லையே என்று ஏக்கமாக இருந்தது. ஏக்கம் தோன்றியவுடன், இது நல்லதற்கில்லை என்று சுதாரித்து விட்டாள் குறிஞ்சி.

அடச்சே! கருமம் என்னை கெடுத்துடுச்சுங்க லூசுங்க என்று கடுப்பாகி, இந்த நிலைக்கு தன்னை கொண்டு வந்த அவர்களை கொஞ்சம் வம்பு செய்வோம் என்று அவள் சோகத்தை மூட்டை கட்டி விட்டு மாடியில் இருந்து இறங்கினாள். இப்போது வீட்டிற்குள் இருந்த படி வழியே அவள் இறங்கி வரவும், ஹாலில் நின்றிருந்த ரவிக்கு மாடியில் இருந்து கீழே இறங்கும் அவளை கண்டவுன் முகம் சுருங்கியது. இவ எங்கே இருந்தா? மிகுந்த பதட்டம் ஆகி விட்டது அவனுக்கு. அவன் முகத்தை பார்த்தவளுக்கு குளு குளு வென்று இருந்தது.

மெதுவாக அவன் அருகில் வந்தவளிடம் “எங்கே போனே நீ?” என்றான் வேகமாக.

“மாடியில் சின்ன ரூமில் இருந்தேன்” என்றாள் புன்னகையுடன். பின், “ஏன் அத்தான் என்னை தேடினீர்களா?” என்றாள் நக்கலாக தூய தமிழில்.

அவள் பதிலை கேட்டு அவன் முகம் இருண்டு விட்டது. அவமானப்பட்டவன் போல் அவளை பார்க்க குறிஞ்சியால் ரவியை அப்படி பார்க்கவே முடியவில்லை.

“நான் நல்லா தூங்கிட்டு இருந்தேன் அத்தான்! என்னை யாரும் தேடினீங்களா?” என்று வருத்தபடுபவள் போல் பேச்சை மாற்றினாள். அப்போது தான் அவன் முகம் தெளிந்தது.

“இல்லை, நாங்க மாடிக்கு வந்தோம். மீட்டிங்காக! சிக்னல் சரியில்லை ஸோ திரும்ப வந்துட்டோம். உன்னை பார்க்கலையே அங்கே! அதான் கேட்டேன்” என்றான் கொஞ்சம் நிம்மதியாக.

இவர்கள் பேச்சை கலைக்கும் விதமாக,

“இனி என்ன பிளான் பா? எங்கே போலாம்? ரவி கிட்டே கேட்டிங்களா?” என்றாள் கௌஷிகா ஸ்ரீராமிடம்.

“போலாம் மா! அதுக்கு முன்னாடி உங்க கல்யாண விஷயம் பத்தி பேசி முடிச்சுடலாம்” என்றார் ஸ்ரீராம்.

“பரவாயில்லையே அவராகவே பேசுகிறார்” என்று ஆச்சர்யப்பட்டார் மூர்த்தி. அவரே பேசட்டும் என்று அமைதியாகவே இருந்தார். அறிவழகனும் ஓர் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்.

“ரவி இப்போ பர்ஸ்ட் விஷயம், ரெண்டு பேரும் எங்கே இருக்க போறீங்க?”

“அதெல்லாம் இன்னும் டிஸ்கஸ் பண்ணலை அங்கிள்.”

“பேசாம நீங்க புனே வந்துடுங்க. உங்க ஊரில் இருந்து சென்னை, பெங்களூர் ரெண்டுமே தூரம் தான். அட்லீஸ்ட் கொஞ்சம் எங்க பக்கத்தில இருந்தா உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் தேவைபடுற நேரத்தில் நாங்க கொஞ்சம் சீக்கிரம் வர முடியும். ஊருக்கு நீங்க மட்டும் வேணுங்கிற அப்போ வந்து போயிக்கலாம்!” என்றார் ஸ்ரீராம் ஈஸியாக.

முதலில் சொன்னதை கூட ஏற்றுக்கொள்வான் ரவி. ஆனால் அவன் மட்டும் ஊருக்கு வருவது என்றால் கௌஷிகா அவனுடன் அடிக்கடி இங்கு ஊருக்கு வர மாட்டாள் என்பதை இவர் எப்படி சொல்லலாம்? வேகமாக மூர்த்தியை பார்த்தான் ரவி. அவர் முகத்தில் உணர்வே இல்லாமல் அமைதியாக இருந்தார். இதற்கு மேல் தான் அமைதியாக இருக்க கூடாது என்று முடிவு செய்தவன்,

“கௌஷிகாவும் நான் வர்றப்போ என்கூட எங்க ஊருக்கு வரணும் அங்கிள். அவளுக்கு இவ்ளோ லாங் ட்ராவல் ஒவ்வொரு தடவையும் ஓக்கேனா எனக்கு ஓக்கே” என்றான்.

“அது எல்லாம் ரொம்ப தேவையானதுக்கு மட்டும் பார்த்துக்கலாம்” என்றார் உடனே ராதிகா.

தேவை தேவையில்லைனு எதை நீங்க சொல்வீங்க ஆன்ட்டி? பல்லை கடித்தபடி கேட்டான் ரவி.

அதற்குள் ஸ்ரீராம் மூர்த்தியை இழுத்தார். “நீங்க சொல்லுங்க சார், நாங்க சொல்றது கரெக்ட் தானே? நாங்க பைவ் ஹவர்ஸ் தூரத்தில் இருக்கோம். அப்போ அது தானே ஈசி.”

“என் பையன் முடிவு தான் சார். இது காதல் திருமணங்கிறதால் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது மட்டும் தான் என் வேலைனு எனக்கு புரியுது” என்றார் ஒரே போடாக மூர்த்தி.

“கரெக்ட் சார். நம்ம வேலை அது தான், அவ்வளவு தான்!” ஸ்ரீராமும் ரொம்ப நல்லவர் போல் பேசினார்.

“உடனே ஒரு வீடும் வாங்கிடணும் ரவி. ரொம்ப இஎம்ஐ கட்டாம இருக்க பார்க்கணும். உங்களுக்கு நிறைய லாண்ட்ஸ் இருக்குமே…. அதை வைச்சு கூட பார்த்துக்கலாம்” ஸ்ரீராம் சொல்ல, மிகுந்த கடுப்பானான் ரவி.

“என்ன கௌஷிகா, நீயும் நானும் பேச வேண்டிய விஷயம் எல்லாம் அங்கிள் பேசுறார்? நீ அமைதியா இருக்கே? நான் இதெல்லாம் பண்ணினா தான் இந்த கல்யாணம் நடக்குமா? ” கோபமாக அவன் கேட்க,

“ஏன் ரவி டென்ஷன் ஆகுறீங்க? எங்களை மாதிரி உங்க பேரண்ட்ஸ்க்கு விஷயம் தெரியாது. அதனால் உங்க இஷ்டம் சொல்லிட்டாங்க. நாங்க உங்களுக்கு ஹெல்ப் தான் செய்றோம் ரவி! நீங்க சொல்லுங்க மா” என்று ரவியிடம் ஆரம்பித்து மேகலாவிடம் முடித்தார் ராதிகா.

“நீங்க இப்படி எல்லாம் பேசினா, நான் இந்த காதல், இந்த கல்யாணம் இதெல்லாம் வேணுமானு யோசிக்கணும்!” என்றான் ரவி கடுமையாக.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!