இனிதுழனியிடம் கூறியது போல் அடுத்த பத்து நிமிடத்தில் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை சகிதம் நெற்றியில் சந்தனக்கீற்றுடன் முழங்கை சட்டையை மடக்கி கையில் இருக்கும் காப்பினை மேல் நோக்கி ஏற்றிவிட்ட வண்ணம் மிடுக்கான தோரணையில் கீழ் இறங்கி வந்தான் இன்னுழவன்.
இறங்கி வருபவனுக்காக காத்துக் கொண்டிருந்தனர் வீட்டின் முன் கூடத்தில் ஊர் பெரியவர்கள்.
முன் கூடம், நடு கூடம், சுற்றிலும் வாழை, தென்னை, தோட்டம், கீழே பூஜை அறை மற்றும் சமையலை அறையுடன் கூடிய மூன்று அறைகள், மேலே நான்கு அறைகள் என அனைத்து வசதிகளுடன் தேக்கு, பர்மா என கட்டப்பட்ட அழகான அந்தகால மாளிகையே இன்னுழவனின் வீடு.
எள்ளும் கொள்ளுமாய் நடு கூடத்தில் அமர்ந்து செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டிருந்த சக்திவேலின் பார்வை ஒரு கணம் அவரை கடந்து செல்லும் இன்னுழவன் மீது விழ்ந்து மீண்டு மீண்டும் செய்தித்தாளில் படிந்தன.
ஆனால் சற்றும் அவரை பார்த்து திரும்பாது கைகளைக் மார்புக்கு இடையில் கூப்பியவனாய் புன் சிரிப்புடன் நடுக்கூடத்தை நோக்கி சென்றான் இன்னுழவன்.
இன்னுழவன் தந்தை தான் சக்திவேல். இன்னுழவனுக்கு சக்திவேலுக்கும் கிஞ்சித்தும் ஒத்து போகாது.
இருவரும் எப்பொழுதும் கீரியும் பாம்புமாக தான் முறைத்துக் கொண்டிருப்பர். தந்தை மகனாக பாசமாய் சீராட்டுவார்கள் என்றால் அது கேள்விக்குறியே! இவர்களுக்கு இடையில் பாலமாய் இருப்பது இன்னுழவன் தாய் கோதாவரி தான். அவருக்குமே சக்திவேல் செயல்கள் பிடிக்காது தான். எனினும் கணவன் என்பதால் சகித்து கொள்வார்.
கிருஷ்ணகிரியில் சக்திவேலின் குடும்பம் தான் அவ்வூரின் பெரிய தலக்கட்டு குடும்பம். ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சக்திவேலின் குடும்பத்திற்கு முதல் மரியாதை.