மாலைப் பொழுதானது நெருங்க கண்ணாடி அறையில் தீவிரமாக கணிணியின் முன் இருந்து வேலை செய்து கொண்டிருந்தான், இன்னுழவன்.
“டேய் முடிஞ்சுதா… மணி 5:30” என கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அகரன்.
“இதோ முடிஞ்சுது” என நிமிராது பதில் அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியவன் எழும்ப, அவர்களின் முன் வந்து நின்றார் மேனேஜர்.
“சொல்லுங்க பிரசாந்த் சார்” இன்னுழவன் கேட்க,
“சார் ஜெர்மன் பைனல் பெமெட் கோட்டேஷன் பைல், நீங்க இதுல சைன் பண்ணனும். அகரனை பார்த்தவர் அண்ட் சார் நீங்களும் தான்” என்றார் பணிவாக.
“இன்னுழவன் டேபிள்ல வச்சிருங்க சார், நாங்க செக் பண்ணிட்டு அப்புறமா சைன் பண்ணிக்கிறோம்” என் அகரன் கூற… அவரும் சிறு தலையசைப்புடன் கோப்பை டேபிளில் வைத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
பெருமூச்சு இழுத்து விட்டு “சரி போலாமாடா இப்ப கிளம்புனா தான் கரெக்ட்டா இருக்கும்” என்றவனாய் அகரன் முன் செல்ல… “6:00 மணிக்கு தானடா மணி 5:35 தான் ஆகுது” இன்னுழவன் பின் செல்ல… இருவரும் வெளியே வந்து வண்டியில் ஏறி புறப்பட்டனர் இனிதுழனியின் கல்லூரியை நோக்கி.
பரம்பரை சொத்தான தோட்டம், துறவு, வயல் என அனைத்தையும் இன்னுழவன் கவனித்துக் கொண்டாலும், அவனுடனே இருந்தான் அகரனும் அவனுக்கு உதவியாக.
அகரன் அவ்வாறு இருப்பது இன்னுழவனுக்கு சரியாக படவில்லை. நாளை பின் அவனுக்கு குடும்பம் என்று வந்தால் அப்பொழுது அவன் நிலையும் தரமும் சரியாக இருக்க வேண்டும் என எண்ணினான்.
அதனால் அவனை தனியாக தொழில் நடத்து உனக்கு பக்க பலமாய் நான் இருக்கிறேன் என இன்னுழவன் கூற, அகரனோ நீ பக்க பலமா இருக்க வேண்டும் பாட்னரா இருந்து நீயும் என்னோடு சேர்ந்து கொள் என அவன் கை கோர்க்க…
பின் இருவரும் சேர்ந்து யார் தயவும் இல்லாமல் வங்கியில் கடன் வாங்கி சிறிய அளவில் தொடங்கிய அவர்களின் கார்மெண்ட்ஸ் பிசினஸானது இன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்து நின்றது.
சரியாக இருவரும் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்துகொள்ள அவர்களின் முன் பரதநாட்டிய உடையோடு எழில் கொஞ்சும் ஓவியமாய் நடந்து வந்து வரவேற்றாள் இனிதுழனி.
“பரவால்லையே 6:00 ஓ கிளாக் ஃபங்ஷனுக்கு 5:55 க்கு வந்துட்டீங்க” என்றவள் இருவரையும் பார்த்து முறைக்க, “அதுவா குடை மிளகா ரொம்ப டையர்டா இருக்கா. அதான் சீக்கிரமா வந்து ரெஸ்ட் எடுக்கலாமென்னு” என்றவாற அகரன் அவளை வார…
“அதுக்கு நீ வீட்டுக்கு தானே போயிருக்கணும் எருமை எதுக்கு இங்க வந்து” என ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள் இனிதுழனி அவனை.
“எப்படியும் கொஞ்ச நேரத்தில நீ டான்ஸ் என்கிற பேர்ல ஆடி எல்லாரையும் தூங்க வைக்க போற. வீட்டுக்கு போனா இப்படி ஒரு தாலாட்டு கிடைக்காது பார்த்தியா” என்றவன் மண்டையில் நன்கென்று ஒரு குட்டையவள் வைக்க, தன் கரத்தை நீட்டியிருந்தான் இன்னுழவன் இனிதுழனியின் முன்.
அவளும் அண்ணன் அவன் கரங்களுக்குள் தன் கரம் நுழைத்துக் குலுக்கி கொள்ள… “நல்லா பண்ணுடா ஆல் த பெஸ்ட்” என அவள் தலை வருடி இன்முகமாய் இன்னுழவன் வாழ்த்துக் கூற… அவளும் மென்னகையுடன் அண்ணனின் வாழ்த்தை மனமார பெற்றுக்கொண்டு அவர்களை முன் வரிசையில் அமர சொல்லி அங்கிருந்து விடை பெற்றாள்.
இது இன்று நடப்பது மட்டுமல்ல வாடிக்கையே! இனிதுழனியின் ஒவ்வொரு பரத அரங்கேற்றத்திலும் இன்னுழவனிடம் வாழ்த்து வாங்காது அவள் மேடை ஏற மாட்டாள். ஐந்தாம் வகுப்பு படிக்கையில் இனிதுழனியின் முதல் அரங்கேற்றம் நடந்ததிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.
கூறியது போல் ஆறு மணி அளவில் அரங்கேற்றம் நடைபெற்றது.
அகரன், இன்னுழவன் மற்றும் கல்லூரி அரங்கத்தில் அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள் என்றால், இங்கோ அதற்கு மேல் கண்களில் மின்னல் வெட்ட மிளிர்வுடன் அதீத ஆர்வத்துடன் இரு கண்கள் மையலிட்டிருந்தன, இனிதுழனியின் நாட்டியத்தைக் காண்பதற்காக மடிக்கணினியின் முன்.
அனைவரும் கரகோஷங்கள் எழுப்ப…
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….
என ஆரம்பமானது இனிதாய் இனிதுழனியின் நாட்டியம்.
சரியாக அந்நேரம் வேலையை முடிந்து வீட்டை அடைந்து இருந்தாள் மேக விருஷ்டி.
மேக விருஷ்டி தாய் தந்தையான சோமசுந்தரமும், மைதிலியும் நடு கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க, “ம்மா… எங்கம்மா உன் அருமை புதல்வன? என்ன பிக்கப் பண்ண வரேன் சொல்லிட்டு என்ன பன்றான் மாடு” என கத்திக் கொண்டு உள்ளே வந்தாள்.
“ஏண்டா அப்பாக்கு கால் பண்ணி இருக்கலாம்ல அப்பா பிக்கப் பண்ணி வந்து இருப்பேன்ல உன்ன” சோமசுந்தரம் வினவ…
“ப்ச் பரவாலப்பா ஃபிரண்ட் டிராப் பண்ணிட்டா. சரி அவனை எங்க?”
“அவனுக்கு ஆறு மணிக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னான். அதனால தான் உன்ன பிக்கப் பண்ண வந்திருக்க மாட்டான். ரூம்ல தான் இருக்கிறான். அவன டிஸ்டர்ப் பண்ணாத” என்று மகனுக்கு பரிந்து பேசினார் மைதிலி.
“உன் மகனுக்கு தானே… மீட்டிங் தானே… அந்த மீட்டிங் என்னனு எனக்கும் தெரியும் நான் போய் பாக்குறேன்” அவள் மேலே செல்ல, “காஃபி குடிச்சிட்டு போடி…” என்றார் மைதிலி.
“போட்டு வைமா ப்ரெஷப் ஆகிட்டு, அந்த எரும மாட பார்த்துட்டு வரேன்” என சென்றாள் மேக விருஷ்டி மேலே.
சரியாக மேக விருஷ்டி உள்நுழைய
இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….
ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ..ஓ..
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…
என்ற பாடல் வரிகள் தங்களுக்காகவே எழுதபட்டது போல், அவளின் அழகான ஒப்பனையும் நேர்த்தியான முகபாவனையும் என அவளுடனான தனக்கானது என கற்பனையில் சிந்தை மயங்கி நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும் இனிதுழனியினை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருக்க,
“எருமை… எருமை… இதுதான் உன்னோட முக்கியமான மீட்டிங் ஆ…” தன் தோள் பையினால் மண்டையில் அடித்தவளாய் சரியாக அந்நேரம் உள்ளே வந்திருந்தாள் மேக விருஷ்டி.
இனிதுழனி நாட்டியதை மடிக்கணினி முன் அமர்ந்து திளைத்து பார்த்ததும்… மேக விருஷ்டி அடித்ததும்… வேறு யாருமல்ல மேக விருஷ்டியின் உடன் பிறப்பான
யாதவ நிவர்த்தனன்.
மேக விருஷ்டியின் உடன் பிறந்த ஒரே தமயன்.
( யாதவன் – கண்ணன்,
நிவர்த்தனன் – குறைகளை நிவர்த்தி செய்பவன்.)
அவளின் அடிக்கு சற்றும் அசராது எருமை மாட்டின் மேல் மழை பொழிந்தது போல் பார்வையை எங்கும் விலக்காது கணினியில் மயில் நடனம் ஆடும் கன்னிகையான இனிதுழனி மீது தான் செலுத்தியிருந்தான் யாதவ நிவர்த்தனன்.
மேக விருஷ்டியோ அவன் அருகில் அமர்ந்தவள், “டேய் தொடச்சிக்கோ டா…” என நீட்டினாள் அவள் கைக்கூட்டையை.
இனிதுழனி நாட்டியத்தில் லையித்து இருந்தவன், “ப்ச்… டிஸ்டர்ப் பண்ணாதக்கா… ஷோ முடிஞ்சதும் ஏதுவா இருந்தாழும் நானே துடைச்சி தரேன் உனக்கு” என பார்க்கும் ஆர்வத்திலவன் எதை சொல்கிறாள் என அறியாது சீறினான்.
“டேய் அதுக்குள்ள ஆறா ஓடிரும் டா…” என்றவள் மேலும் சீண்ட…
“ஹா… இப்ப என்னக்கா உன் பிரச்சனை?” என்றவன், கண் அப்போதும் மடிகணிணி விட்டு அகலவில்லை.
“வாய துடைச்சிட்டு பாருடா எருமை…” என்றாள் அவள் மண்டையிலேயே ஒன்று போட்டு.
அவனோ வாயில் ஏதோ ஓட்டியிருக்கிறது என வேகமாக மௌவாயை தடவியவன் நிதர்சனம் புரிய பார்வையாலே அவளை எரித்தான்.
“பின்ன என்னடா எருமை… நீ அந்த பொண்ண பார்க்க பார்வையில வாயிலயிருந்து நிக்காம ஜொள்ளு வடியிது…” என அவனை வாரினாள் மேக விருஷ்டி.
“அக்கா… உன்ன… ” என்றவன் கையை அவள் கழுத்தை நோக்கி கோவமாக கொண்டுவர, “டேய் ஷோ போகுது பாரு…” அவளோ அவனை திசை திருப்ப…
“ஐயோ ஆமால்ல… உன்ன அப்புறம் வச்சுகிறேன்” என்றவன் மீண்டும் பார்வையை கணிணியில் பதிக்க,
புன்னகையுடன் மேக விருஷ்டியும் அவனுடன் இணைந்து கொள்ள, இருவரும் இனிதுழனியின் நாட்டியம் முற்றுப்பெறும் வரை பார்த்து முடித்தனர்.
அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டும் வண்ணம் மிக நேர்த்தியாக நடனம் ஆடி அனைவருக்கும் இறுதி வணக்கத்தை பறைசாற்றி இனிதுழனி மலர்ந்த முகத்துடன் அன்ன நடையிட்டு உள்ளே சென்றாள்.
செல்லும் அவள் முதுகை பார்த்தவாரு பெருமூச்சு இழுத்து விட்டு, “ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ… ஓ..
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…” என உதட்டை பிதுக்கி பாடியவனாய் மடிக்கணினியை மடித்து வைத்து ஏறிட்டு பார்த்தான் எதிரில் அமர்ந்திருந்த மேக விருஷ்டியை நிவர்த்தனன்.
அவளோ முறைத்து கொண்டு இருக்க, “வாட் சிசி… எதுக்கு என்ன இப்படி குறுகுறுன்னு பாக்குற… நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்” என்றவன் மேல் மேலும் அவள் கூர் பார்வையே பதிக்க…
“ஐயோ அப்பிடி பார்க்காத அக்கா… வெக்கமா இருக்கு” என்றவன் நகைக்க, “அடிங்க” என அருகில் இருந்த பிளவர் வாஷ்சை தூக்கி வீசி இருந்தாள் மேக விருஷ்டி அவன் மீது.
அதை அவன் பிடிப்பதற்குள் அதுவோ மண்டையை பதம் பார்க்க, “ஸ்ஸ்ஸ்… ஆஆ… எதுக்குடி எறிஞ்ச…”
“மார்னிங் சொல்லிட்டு தானடா போன என் ஸ்கூட்டியை நான் சர்வீஸ் விட்டு இருக்கேன், என்ன பிக்கப் பண்ண வான்னு” அவள் சீற…
“ஐயோ சிசி நான் உன்ன பிக்கப் பண்ண தான் வேகமாக கிளம்புனேனா… அதுக்குள்ள என் கிரஷ் டான்ஸ் ஷோ டைம் என் மண்டையில ஒளி வட்டமா தெரிஞ்சிச்சா… சரி எப்பிடியும் நீ வந்து என் மண்டைய பிளப்ப, அதுக்குள்ள அந்த ஒளி வட்டம் வழியா என் கிரஷ்ஷ பார்த்துத்துறலாம்னு இருந்துட்டேன் சோ… சாரி… அக்கா…” என்றான் இதழை பிரிக்காது நகைத்தவனாய் அசடு வழிய.
“இதுல அம்மாகிட்ட முக்கியமான மீட்டிங் வேற சொல்லிருக்க. சொல்லுடா என்ன நடக்குது இங்க? உண்மையா அந்த பொண்ண கிரஷ்ஷா தான் பாக்குறியா…? இல்ல எனக்கு தெரியாம லவ் எதுவும் பண்றியா…?” கேட்டாள் புருவம் உயர மேக விருஷ்டி தீவிரமாக.
“எனக்கும் அந்த டவுட் இருக்கு சிசி…” அவன் யோசிக்க,
“ஏதேய் டேய் நிவர்த்தனா…” மேக விருஷ்டிக்கோ அவனுடைய சந்தேகம் அவனுக்கும் இனிதுழனிக்கும் தான் என்று எண்ணி அதிர…
அவனோ வெகு சாதாரணமாக மேக அவள் பார்த்தவன், “இல்ல அந்த மார்னிங் தேனீர் காலர் பேர் கூட… இன்னு… இன்னு இன்னு… யோசித்தவன் ஹான்… இன்னுழவன், அவரு உனக்கு ஷோ காலர் ஆ? இல்ல காதலர் ஆ?ன்னு…” என்றான் அவள் கேள்வி பதில் கூறாது, தன் கேள்விக்கு பதில் கூற முடியாத அளவிற்கு குதர்க்கமாக மேக விருஷ்டியிடம் இதழுக்குள் சிரிப்பை அடக்கியவனாய் அவளை போல் புருவம் உயர…