அந்தியில் பூத்த சந்திரனே

4.8
(13)

“உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியவே புரியாதா அம்ருதா? நானும் இவ்வளவு நாளா பொறுமையா இருந்துட்டேன். ஆனா இனிமேலும் முடியாது.” என்றதும்,

தன் காதுகளில் எதுவும் விழவே இல்லை என்பது போல் புத்தகத்தை புரட்டியவாரு அமர்ந்திருந்தாள் அவள்.

“உன்கிட்டதான் பேசிகிட்ருக்கேன் அம்ரு.. உன் காதுல விழுதா இல்லையா?” என்றவர் அவள் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென பிடுங்கி கொள்ள, அப்போதும் சலிப்பான ஒரு பெருமூச்சு வந்ததே தவிர, எந்த ஒரு பதிலும் அவள் பேசிட வில்லை.

“நீ சொன்னா கேட்க மாட்டேன்னு, நானே மேட்ரிமோனி சைட்ல உன்னோட டீடெயில்ஸ் கொடுத்து அப்ளை பண்ணிட்டேன். நிறைய ப்ரொபைல்ஸ்ல இருந்து ரெக்வஸ்ட் வந்திருக்கு. ஒருமுறை பாரும்மா” என்று தன் மகள் கன்னம் ஏந்தி கெஞ்சுவது போல நோக்கினார் அவள் தாய் காவேரி.

“என்னமா பேசுறீங்க? எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. அவளை படிக்க வச்சு நல்லபடியா வளர்த்தாலே எனக்கு போதும். இனிமேல் கல்யாணம் அது இதுன்னு பேசி தயவு செஞ்சு என்னை நோகடிக்காதீங்க.” என்றவள் எழுந்து தன் அறைக்கு செல்ல முற்பட, அவள் கரத்தை பற்றி தடுத்த அவளின் அன்னையோ..

“ஏற்கனவே நீ சொன்னதை கேட்காம நல்ல பையன், நல்ல குடும்பம்னு நம்பி நாங்களா பார்த்து அந்த ராஜேஷ்க்கு உன்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சதுனாலதான இன்னைக்கு உனக்கு இந்த நிலமை? என்மேலயே எனக்கு கோபமா வருது அம்ரு.

அவன் உன்கிட்ட பேசும் விதம் சரி இல்ல, இவன் வேண்டாம்மான்னு நீ சொல்லும்போதே நான் கேட்டிருக்கணும். நானே அந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கணும். அப்படி பண்ணாம எல்லார்கிட்டயும் இவர்தான் மாப்பிள்ளைன்னு சொல்லியாச்சு. இனிமேல் என்ன செய்யறது? கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே சரி ஆகிடும்னு நெனச்சது என் தப்பு. எல்லாமே என்னோட தப்புதான்.”என்று கண்கலங்க கூறியவர்,

“இந்த முறை உன்னோட வாழ்க்கையை தேர்ந்தெடுக முடிவுல நான் தலையிடவே மாட்டேன். எந்த முடிவையும் நான் எடுக்குறதா இல்ல. உனக்கான லைஃப் பார்ட்னரை நீயே ச்சூஸ் பண்ணிக்கோடி” என்றதும் அன்னையின் வார்த்தையில் கூசி போய் நின்றாள் அம்ருதா.

“என்னம்மா பேசுறீங்க? ஒரு பொண்ணுக்கு ஒருமுறைதான் கல்யாணம். நல்லதோ கெட்டதோ என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இந்த கல்யாணம்ன்ற நரகத்துக்குள்ள போய் நான் நிறைய அனுபவிச்சுட்டேன். இனியாவது என்னை நிம்மதியா வாழ விடுங்க. எனக்கு என் பொண்ணு ஆத்யா இருக்கா. அவள் மட்டும் என் வாழ்க்கைக்கு போதும்.” என்றதும்,

“சொன்னா புரிஞ்சுக்கோடி. சும்மா கிழவி மாதிரி பேசாத. உனக்கு அப்படி ஒன்னும் வயசாகிடல. இருபத்தி ஆறு வயசுலயே எல்லாம் முடிஞ்சுச்சுன்னு சொன்னா என்ன அர்த்தம்?

சரி, உனக்கு புருஷன் வேண்டாம்னா பரவால்ல. உன்னோட குழந்தைக்கு அப்பா வேணும்ல. அதுக்காகவாவது கொஞ்சம் யோசி.” என்றதும் விரக்தியாக சிரித்தவள்,

“பெத்த அப்பாவே என் பிள்ளையை பார்க்க ஒரு முறை கூட வரல. இதுல நான் ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா? யாரோ ஒருத்தன் பெத்த பிள்ளைக்கு இன்னொருத்தன் அப்பாவா இருந்து, அவன் என் பிள்ளையை நல்லா பார்த்துப்பானா?” என்று அருவருப்பாக முகம் சுழித்தவள்,

“இதுதான் உங்களுக்கு கடைசி. இனி கல்யாணம் அது இதுன்னு என்கிட்ட நீங்க பேசவே கூடாது. என் பிள்ளைக்கு நான் மட்டும் போதும்.” என்றவள் அந்த இடத்தை விட்டு விலகி விருவிருவென  தன் அறையை நோக்கி செல்ல,

“நீ இப்படியே இருந்திடலாம்னு நினைக்குறியா அம்ருதா? அம்மா உன் நல்லதுக்காகத்தான் சொல்வேன் கேளுடி…” என்ற அவள் தாய் காவேரியின் குரல் காற்றோடு கரைந்து காணாமல் போனது.

அறைக்குள் வந்ததும் கதவை தாளிட்டவள் மெத்தையில் உறங்கும் தன் ஒன்றரை வயதே நிறைவடைந்த பிஞ்சு குழந்தையை கண்டதும் அனைத்தும் மறந்து அவள் முகத்தில் சிறு கீற்றாய் மலர்ந்தது புன்னகை. அருகில் நெருங்கி தன் பெண் குழந்தையின் கன்னத்தில் அவள் தூக்கம் கலையாதவாறு மென்மையாக முத்தமிட்டுவிட்டு விலகியவள்,

“எனக்கு நீ மட்டும் போதும் ஆத்யா. உனக்கு நான் இருக்கேன். நமக்கு நடுவுல யாரும் வேண்டாம்.” என்று உறங்கும் குழந்தையிடம் தானாக பேசியவள் பின் சற்றே தள்ளி இருந்த சோபாவில்

கால்களை மடக்கி சாளரத்தின் வழியே வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்து விட்டாள்.

அவள் பார்வையில் எந்த ரசனையும் தெரியவில்லை. அது ஒரு வெற்று பார்வை. வெறுமையான ஒரு உலகத்திற்குள் தன்னை புகுத்தி கொண்டாள். நிமிடங்கள் நகர்ந்து கொண்டே போக அவள் பார்வையை எந்த பக்கமும் திருப்பவே இல்லை.

குயில்கள் கூவும் இன்னிசையும், மலர்களின் மணமும், அதன் அழகும் என இதுவரை தன் வாழ்வில் தான் ரசித்த எந்த விடயத்தாலும் தற்போது ஈர்க்க படாமல் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் முனிவர்களை போல எதன் மீதும் நாட்டம் இல்லாது அமந்திருந்தாள் அவள்.

“அம்மா….” என்ற தன் குழந்தையின் ஒற்றை அழைப்பில் தன் வெறுமையை கலைத்து நிஜ உலகிற்கு தன்னை இழுத்து கொண்டவள், குரல் வந்த திசை பக்கம் திரும்பி பார்க்க,

திராட்சைபோன்ற கருவிழியும், பந்து போன்ற கன்னமும், சற்றே பூசினார் போன்ற உடல் வாகுடன் தத்தி தத்தி நடக்கும் அந்த ரோஜா பூ குவியலின் அழகில் தன்னை மறந்து ரசிக்கலாயினாள்.

குழந்தையை அள்ளி அணைத்து தூக்கி தன் மடியில் அமர வைத்தவள்,

“அம்மு…. சொல்லு டா… என்ன வேணும் என்  செல்ல பாப்பாவுக்கு? பசிக்குதா? சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா?” என்று கொஞ்சலாக கேட்டவளிடம்,

வேண்டாம் என்று மறுப்பாக தலை அசைத்து, “அம்மா.. எனக்கு ஐஸ் கீம் ஏனும்…” என்று தன் மழலை குரலில் ஆத்யா கேட்க,

“ஓ… பாப்பாவுக்கு ஐஸ் க்ரீம் வேணுமா?” என்றதும்

‘ஆம்..’ என்பதுபோல் மேலும் கீழுமாக தலையத்துது அந்த பிஞ்சு.

“அம்மாவுக்கும் வெளில போகணும், உன்னையும் கூட்டிட்டு போறேன். வாங்க ரெடி ஆகலாம்.” என்றவள் குழந்தையை குளிக்க வைத்து, உணவூட்டி, அழகாக உடை அணிவித்து தானும் தயாராகி வெளியே சென்றாள்.

அதே தருணம், தனது உணவகத்திற்கு வர வேண்டிய காய் கறிகள் சரியான நேரத்திற்கு வராமல் போனதால் மேனேஜரை கடுமையாக திட்டி கொண்டிருந்தான் ஹர்ஷ மித்ரன். தனது உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவில் சுத்தம் மிகவும் அவசியம், உணவின் தரத்தில் எந்த குறையும் இருக்க கூடாது, தனது உணவகத்திற்கு வருபவர்களின் மனமும், வயிறும் ஒருசேர நிறைய வேண்டும் என்று எண்ணுபவன்.

அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள், வயது வித்யாசம் என்ற எந்த பாகுபாடும் இன்றி வேலை விடயத்தில் மட்டும் தவறு ஏதும் ஏற்பட்டால் கடுமையாக பேசி விடுவான். இப்போது ரெஸ்டாரண்ட்டாக இருக்கும் தனது உணவகத்தை பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லாக  மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பாடு பட்டு உழைப்பவன். முழு கவனமும் தன் தொழில் மீது மட்டுமே செலுத்தி முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்ட, வளர்ந்து வரும் தொழில் அதிபர்.

காய்கறிகள் குறித்த நேரத்துக்குள் வரவில்லை என்று மேனேஜரிடம் குரல் உயர்த்தி பேசி கொண்டிருக்குபோது இடையில் அவன் தாய் கீர்த்தனா அழைப்பு விடுத்தார். ஒரு நிமிடம் தனது பேச்சை நிறுத்தி அன்னையின் அழைப்பை ஏற்று காதில் வைக்க,

“ஹலோ… ஹர்ஷா நான் மேட்ரிமோனில ஒரு பொண்ணோட ஃபோட்டோ பார்த்தேண்டா ரொம்ப அழகா இருக்கா. நீ ஒருமுறை…” என்று கூறி கொண்டிருக்கும்போதே அழைப்பை துண்டித்து விட்டான் ஹர்ஷா.

மேனேஜரிடம் தனது பேச்சை தொடர்ந்தவன் “இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். இனிமேல் எல்லாமே சரியான நேரத்துக்கு நடக்கணும்.” என்று கூறிவிட்டு அவன் தன் அலுவலக அறைக்குள் புகுந்து கொள்ள,

இவனிடம் திட்டு வாங்கியதும் தன்னுடைய இடத்திற்கு போனவர் தன் அறையில் மைக் மற்றும் கேமரா இருப்பதை அந்த கோபத்தில் மறந்தே போனார். “ஒரு மேனேஜர் என்னையவே ஒரு சின்ன தவறுக்காக இப்படி திட்டுறானே. இவன் பொண்டாட்டிய என்ன பாடு படுத்தினானோ யாருக்கு தெரியும்? இவன்கூடல்லாம் எப்படி ஒரு பொண்ணால வாழ முடியும். அதான் விவாகரத்து வாங்கிட்டு போய்ட்டா.” என்று கூற இவர் பேசிய அனைத்தும் அறையில் மடி கணினியை பார்த்து கொண்டிருந்த ஹர்ஷாவின் காதுகளில் நன்றாகவே விழுந்தது.

விழிகளில் ஓடும் நரம்புகள் இரத்த சிவப்பாக மாற, முகம் இறுகி தனது கரங்களை இறுக மூடி தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்று முடியாமல் தோற்று போனவன், தனது பி.ஏ வை அழைத்து “அந்த மேனேஜர் சீனிவாசன் இதுக்கு மேல இங்க ஒரு நிமிஷம் இருக்க கூடாது. உடனே அவரை வேலைய விட்டு அனுப்பு.

 

அவர் அத சொன்னாரு இத சொன்னாருன்னு திரும்ப என்கிட்ட வந்து நின்னா, உனக்கு இங்க வேலை கிடையாது” என்றதும் மறுப்பேதும் கூறாமல் “ஓகே சார்” என்று விட்டு கிளம்பிவிட்டான். 

சில வருடங்கள் முன்பு அனைவரிடமும் அன்பாக, நட்போடு பழகி வந்தவன் தன் கடந்த காலத்தில் அவன் முன்னாள் மனைவி தாரிக்கா அவனுக்கு கற்று கொடுத்த பாடத்தினால் மனம் இறுகி, முகமும்  இறுகி புன்னகையிக்க மறந்தவனாய் மாறி போனான்.

‘உன்னாலதாண்டி எனக்கு இப்படி ஒரு நிலமை. நீ என்னைக்குமே என் கண்ணுல படவே கூடாது. அப்படி ஏதும் நடந்துட கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கோ தாரிகா.. இல்லன்னா நடக்க போற எதுக்கும் நான் பொறுப்பில்ல.’ என்றான் அடக்க மாட்டாத கோபத்தோடு.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “அந்தியில் பூத்த சந்திரனே”

  1. நல்ல கதை கரு. சரியான முயற்சி சரியான சமயத்தில். சமீபத்தில் நடந்த ஒரு துயர நிகழ்வில் இரண்டாவது திருமணம் தவறு என்ற மன ஓட்டத்தை தகர்த்து எறியும் விதமாக இந்த கதையின் கரு அமைந்துள்ளது. அம்ருதாவின் மனதை மாற்றி தனக்கான ஒரு புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்க செய்யவும்.
    முதல் மண வாழ்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கை அதோடு முடிவதில்லை. நல்ல கருத்து.
    வாழ்த்துக்கள் 💐
    பெயர் தெரியாத அனாமிகா எழுத்தாளர் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!