எவ்வளவு தொகை கொடுத்து வாங்கி இருந்தாலும், என் கோபத்திற்கு முன்னால் துச்சம் எனக் காட்டிக் கொண்டிருக்கிறாள் ரிது. விஷயத்தைக் கேட்டதும் தான் தாமதம்… பளிங்குக் கற்கள் உடைந்தது. பளபளக்கும் கண்ணாடி அறை தான் வேண்டும், இங்கிருந்து பார்த்தால் எதிரில் இருக்கும் கடற்கரை அப்படியே தெரிய வேண்டுமென்று பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்த அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கிறது.
மகளிடம் பேச முடியாத தந்தை தடுமாறி ஒதுங்கி நிற்க, “ஒரு பொண்ணுக்கு அப்பா மாதிரியா பேசிட்டு வந்திருக்கீங்க? என் கல்யாணத்தை முடிவெடுக்குற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது. எவனோ ஒரு பொறுக்கி தாலி கட்டுவான், அவன் கூடச் சேர்ந்து வாழச் சொல்லுவீங்களா? என்னால இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க முடியாது. கடைசி வரைக்கும் அவன் ஜெயில்ல தான் இருப்பான். ரவிய என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். உங்க வேலைய மட்டும் பாருங்க.” தையத்தக்காவென்று குதித்துக் கொண்டிருக்கிறாள்.
“கோபத்துல எந்த லாபமும் கிடைக்காது. எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு கொஞ்சம் காது கொடுத்துக் கேளு.”
மிச்சம் இருந்த அலங்காரப் பொருள் ஒன்றைக் கையில் எடுத்தவள், “நான் எதுக்குக் காது கொடுத்துக் கேட்கணும்? படிச்ச பைத்தியக்காரனா நீங்க வேணா நடந்துக்கோங்க, என்னை நடக்கச் சொல்லாதீங்க.” என அதைத் தூக்கிப் போட்டு உடைத்தாள்.
“நீ அவனை அவ்ளோ கேவலமாய் பேசாம இருந்திருந்தா, அவன் அதைச் செஞ்சிருக்கவே மாட்டான்.”
அதுவரை தந்தை என்று கோபத்தை மட்டுப்படுத்தி வைத்திருந்தவள், “இப்படிப் பேச அசிங்கமா இல்ல உங்களுக்கு. இவனை மாதிரி எத்தனைப் பேரைப் பார்த்திருப்பேன் தெரியுமா? ரிது இப்படி இருந்ததாலதான் இன்னும் பாதுகாப்பா இருக்கா. ஆம்பளத் திமிர்ல ஒருத்தன் வருவான், நான் அடங்கிப் போறன்னு மண்டியிடனுமா?” எனக் கடிபடும் பற்களுக்கு நடுவில் வார்த்தைகளை உமிழ்ந்தாள்.
“என்ன இருந்தாலும், நீங்களும் ஒரு ஆம்பள தான. அதான் ஆம்பளப் புத்தி வெளிப்படுது.”
“நான் ஆம்பளையா பேசல, உனக்கு அப்பாவா பேசுறேன்.”
“அப்படியா! சரி, நீங்க ஒரு நல்ல அப்பாவா தாலி கட்டுனவனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கறீங்க. நாளைக்கு இன்னொருத்தன் வந்து திரும்பத் தாலி கட்டுனா, அவனுக்கும் என்னைக் கல்யாணம் பண்ணி வைப்பீங்களா? ஒரே வீட்ல ரெண்டு புருஷனோட வாழ்ந்துக்கவா…”
“எதுக்குமா இப்படிப் பேசுற? அவன் பண்ணது தப்புதான். அதை என்னைக்கும் நான் சரின்னு சொல்ல மாட்டேன். ஆனா, அவன் ரொம்ப நல்லவன். உன்ன மாதிரிக் கண் மூடித்தனமான கோபத்துல இப்படி ஒரு தப்பைச் செஞ்சுட்டான்.”
“நீங்க என்ன சொன்னாலும் என்னால இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க முடியாது.”
“அப்போ அவன் மேல கொடுத்த கேஸையாவது வாபஸ் வாங்கு.”
“வாட்! என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குப்பா.”
“இங்க பாரு ரிது, நீ எனக்கு எவ்ளோ முக்கியமோ, அதே மாதிரி அந்த இன்ஸ்டிடியூட்டும் ரொம்ப முக்கியம். அதுதான் என்னோட அடையாளம். உன்ன மாதிரி அவனும் ஒரு கேஸ் கொடுத்து நாளைக்குப் பிரஸ், மீடியான்னு விஷயம் வெளிய தெரிய வந்தா அதோட பேர் கெட்டுப் போகும். மீடியா முன்னாடி உன்கிட்டதான் பணம் கொடுத்தேன்னு ரவி சொல்லிட்டா, மொத்தமா எல்லாமே முடிஞ்சிடும். இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாதுன்னா அவனைச் சமாதானம் பண்ணனும்.
அவ்ளோ சீக்கிரம் சமாதானம் ஆகுறவன் அவன் கிடையாது. அதனால அவனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும். பொண்டாட்டிய நிச்சயம் காட்டிக் கொடுக்க மாட்டான். அப்படியே நினைச்சாலும், அவன் வீட்ல இருக்குறவங்க விட மாட்டாங்க. அதுக்காகத்தான் இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருக்கேன். உனக்குப் பிடிக்குதோ, இல்லையோ கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்.”
“நீ இவ்ளோ பிடிவாதமா இருக்கும் போது எனக்கு வேற வழி தெரியல ரிது. எனக்கு என் பொண்ணை விட அந்த இன்ஸ்டிடியூட் ரொம்ப முக்கியம். அது என் கைய விட்டுப் போறதை விரும்பல. நீதான் வாங்குனன்னு சாட்சி சொல்லிட்டா உன்னோட இந்தப் பிரச்சினை முடிஞ்சிடும்.”
“அப்பா!”
அப்பட்டமான அதிர்வோடு அழைக்கும் மகள் மீது, கருணை ஏற்பட்டாலும் காட்டிக் கொள்ளாது, “சாரி!” என வெளியேற,
“நான் உங்களுக்கு ஒரே பொண்ணு. நான் இல்லாம அந்த இன்ஸ்டிடியூட் வச்சு என்ன பண்ணுவீங்க?” கேள்வி எழுப்பினாள்.
“நீ எனக்கு ஒரே பொண்ணா இருக்கலாம். ஆனா, அந்த இன்ஸ்டிடியூட் நான் பெற்றெடுக்காத பல ஆயிரம் பிள்ளைங்களை உருவாக்கி இருக்கு. நாளைக்கே எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா தூக்கிப் போட அவங்க வந்து நிப்பாங்க.”
“இதுதான் உங்க முடிவா?”
“உன் முடிவுல மாற்றம் வரலன்னா, இதான் என்னோட முடிவு.”
“நீங்க என்னைக் கார்னர் பண்றீங்க.”
“பண்ண வைக்கிறது நீ தாம்மா…”
“அவனோட என்னால வாழ முடியாது.”
“அது உன்னோட விருப்பம்.”
“எனக்கு அப்பாவா, கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?”
“ஒரே ஒரு ஆப்ஷன் தரட்டுமா?” என்றவரைப் புருவம் நெளிய ரிதுசதிகா பார்க்க, “உனக்கும், ரவி சொன்னதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லன்னு ப்ரூஃப் பண்ண அடுத்த நிமிஷம், அவன்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கித் தரேன். அவனை உன் வாழ்க்கையில இருந்து அனுப்பிட்டு எப்பவும் போல வாழ்ந்துக்கலாம். அனேகமா அவனுக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்காது. சோ, விட்டால் போதும் சாமின்னு ஓடிடுவான். உன் பிரச்சினையும் முடிஞ்சிடும். என் பிரச்சினையும் முடிஞ்சிடும்.” என்றார்.
“கல்யாணத்துக்கு நாள் பாருங்க.”
“ரிது!”
“நான் காசு வாங்கலன்னு ப்ரூஃப் பண்ண அடுத்த செகண்ட் அவன் மட்டும் இல்ல, நீங்களும் என் லைஃப்ல இருக்க மாட்டீங்க. எனக்குத் தாலி கட்டுனானே, அவனாவது பரவால்ல. நேர்ல நின்னு எதிர்த்துத் தோத்துப் போய் முதுகுல குத்துனான். இத்தனை வருஷம் என்கிட்ட வேலை பார்த்த அந்த நாயும், அப்பாவான நீங்களும் பச்சத் துரோகத்தைப் பண்ணிட்டீங்க. என்னை ஜெயிச்சுட்டதா நினைக்கிற உங்க மூணு பேரையும் மொத்தமா தோற்கடிச்சு இந்த ரிது யாருன்னு காட்டுறேன்.”
“ஆல் தி பெஸ்ட் ரிது!”
“தேங்க்ஸ் ப்பா.” என அவள் அறையை விட்டு வெளியேற, மகளுக்காக எடுத்த முடிவு ஒரு பொழுதும் தவறாகப் போகக்கூடாது என்ற வேண்டுதலோடு நின்றார் பொன்வண்ணன்.
***
ஐந்து நாள்கள் கழித்து எதிரில் நிற்கும் மகனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை சரளா. காரணத்தை அறிந்தவன் தலைகுனிந்து கொண்டு நிற்க, நதியா ஆரத்தி சுற்றினாள். உள்ளே செல்லாமல் மனைவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மகன் தோளைத் தட்டிக் கண்ணைக் காட்டியவர், “இப்பத்தான் வந்திருக்கான் சரளா.” மனைவியிடம் பேசினார் தன்மையாக.
அவருக்கு எவ்விதப் பதிலையும் கொடுக்காதவர், உள்ளே சென்று ஒரு மூலையில் அமர்ந்து கொள்ள, பார்த்தவன் மனதெல்லாம் சங்கடம். மிகவும் கண்டிப்பான அன்னையின் வளர்ப்பில் வளர்ந்தவன் கருடேந்திரன். அப்படிப்பட்டவன் செயலை எப்படி ஏற்றுக் கொள்வார் சரளா. சொத்து, சுகங்களை விடத் தன் பிள்ளைகளே செல்வம் என்று ஒழுக்கமாக வளர்த்தவருக்கு இது பெரும் இழுக்கு.
மெல்ல நகர்ந்து அன்னைக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவர் கைகளைத் தொட முயற்சிக்க, இடம் கொடுக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். மனபாரத்தோடு வீடு திரும்பியவன் இன்னும் நொந்து போய், “சாரிம்மா, நான் வேணும்னு அப்படிப் பண்ணல.” என்றதும் ‘பளார்!’ என்ற சத்தம்தான் அங்குக் கேட்டது.
ஆரத்தியைக் கொட்டி விட்டு நிமிர்ந்த நதியா அந்தச் சத்தத்தைக் கேட்டு அவசரமாக உள்ளே ஓட, “என் பிள்ளையாடா நீ. எப்படிடா இப்படி ஒரு வேலையைச் செய்யத் தைரியம் வந்துச்சு. பெத்தவ வளர்ப்பைக் களங்கப்படுத்திட்டு வந்து நிக்கறியே. இதுக்கு நீ கொலை பண்ணிட்டுக் கூட, ஜெயிலுக்குப் போயிருக்கலாம். உனக்கு ஒரு தங்கச்சி இருக்காடா. நீ பண்ண பாவம் அவ தலைலதான் வந்து விழும். பொண்ணப் பெத்தவரு என் பொண்ணோட வாழ்க்கைக்கு என்ன பதில்னு கேட்டு நிக்கிறாரு. கஷ்டப்படும்போது கூட இவ்ளோ வலிச்சது இல்ல கருடா. என் புள்ள போல யாருமே இல்லன்னு ஒவ்வொரு தடவையும், மார்தட்டிப் பெருமைப்பட்டு இருக்கேன். அந்தப் பெருமையைக் குழி தோண்டிப் புதைச்சிட்டு வந்திருக்கியே.” என்ற சரளாவிற்கு ஆத்திரம் குறையாததால் மீண்டும் போட்டு அடிக்க ஆரம்பித்தார்.
சத்யராஜும், நதியாவும் தடுத்துக் கொண்டிருக்க, “இனி நீ என் பிள்ளையே இல்லை. உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் முகத்துல முழிக்காம எங்கயாவது போயிடு.” கத்தினார்.
“அண்ணா வீட்டுக்கு வரணும்னு ராத்திரியெல்லாம் புலம்பிட்டு, இப்ப எங்கயாவது போன்னு சொல்ற. அதான் சொல்லுதுல்ல, வேணும்னு பண்ணலன்னு. நம்ம வீட்ல என்ன நடந்துச்சுன்னு நீயும் பார்த்துட்டுத் தான இருக்க. அது மட்டும் என்னம்மா பண்ணும்.”
“வாய மூடுடி! ஒரு பொண்ணா இருந்துட்டு இவன் பண்ண தப்புக்குக் கொடி பிடிக்காத. ஒழுங்கு மரியாதையா அந்தப் பொண்ணு கழுத்துல திரும்பவும் தாலி கட்டி வாழச் சொல்லு.”
“அம்மா!”
“என்னை அம்மான்னு சொல்லாத. இப்படி ஒரு புள்ள என்னை அம்மான்னு சொல்றதைக் கேட்க அசிங்கமா இருக்கு. அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுனா மட்டும்தான், உனக்கும் எனக்குமான உறவு நிலைக்கும். இல்லனா ஒரு புள்ள ஹாஸ்பிடல்ல இருக்க மாதிரி இன்னொரு புள்ள தொலைஞ்சு போயிட்டான்னு மனசைத் தேத்திக்கிறேன்.”
“அவளைப் போய் எப்படிம்மா கல்யாணம் பண்ணுவேன்?”
“பண்ணித் தான்டா ஆகணும். அந்தப் பொண்ணு இடத்துல நான் இருந்திருந்தா இவ்ளோ சீக்கிரம் மனசு மாறி உன்னை வெளிய எடுத்திருக்க மாட்டேன். அந்தப் பொண்ணோட நல்ல மனசுக்காகத் தாலி கட்டி தான் ஆகணும். இந்த வீட்டோட மூத்த மருமகள் அவதான்.” என மருமகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மாமியாருக்குத் தெரிய வாய்ப்பில்லை, வருபவள் மருமகளாகவே வாழப் போவதில்லை என்று.
***
இன்று சிங்கத்திற்கும், புலிக்கும் திருமணம். சிங்கமும், புலியும் எப்போது பாயலாம் என்ற நோக்கோடு காத்திருக்க, இவர்கள் எண்ணம் அறியாத குடும்பத்தார்கள், திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாட்டையும் செய்து விட்டனர். பெரிதாக யாரையும் கூப்பிடாமல் இரு வீட்டாரோடு மட்டும் திருமணத்தை முடிக்கிறார்கள்.
காலையிலிருந்து மௌன விரதம் இருக்கிறான் கருடேந்திரன். இப்படியே இருந்துகொள் என்று கோவிலுக்கு அழைத்து வந்த சரளா, மணமேடையில் அமர வைத்தார். தேவையில்லாமல் திருமணத்தை நடத்தி வைக்கும் அய்யர், அக்னி குண்டத்தைக் கொளுத்தி விட்டார். இவன் பார்வையால் தன்னால் பற்றி எரிந்திருக்கும். அப்படியான அனல் பார்வையோடு அமர்ந்திருந்தவன் கழுத்தில் மாலை போட்ட சத்யராஜ்,
“மருமக இன்னும் வரலைங்களா?” தனி ஒரு ஆளாக நின்றிருந்த பொன்வண்ணிடம் விசாரித்தார்.
“இதோ… இதோ வந்துடுவா.”
“நல்ல நேரம் முடியுறதுக்குள்ள தாலி கட்டணும். கொஞ்சம் சீக்கிரம் வரச் சொல்றீங்களா.”
“சரிம்மா…” என ஓரமாக ஒதுங்கி வந்தவர் மகளை அழைத்தார். வேண்டுமென்று எடுக்காமல் அவரைச் சோதித்தவள், “வரும்போது தான் வருவேன், வெயிட் பண்ணுங்க.” குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தாள்.
அதைப் படித்தவர் கைகள் இரண்டையும் பிசைந்து கொண்டு தடுமாறி நின்றிருக்க, அவர் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவை எதையும் கவனிக்காதவன் யாருக்கோ நடக்கும் திருமணம் என்று அமர்ந்திருந்தான்.
“என்ன சார், சொன்னாங்க?”
“ரொ..ரொம்ப டிராபிக்கா இருக்காம். பத்து நிமிஷத்துல வந்துடுவேன்னு சொன்னா…”
“அதுக்கு இல்ல சார், யாராவது ஒருத்தரைக் கூடக் கூட்டிட்டு வர வச்சிருக்கலாம்னு சொல்றேன்.”
“வேற யாரையும் இப்போதைக்குக் கூட வச்சுக்க முடியல.”
சங்கடத்தோடு பேசும் பொன்வண்ணன் வார்த்தைகள் அனைத்தும், அவன் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது. இவரால் தான் இந்தத் திருமணம் நடக்கிறது என்ற செய்தி விழுந்ததிலிருந்து அவனுக்குள் எப்படி என்ற கேள்வி தான் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. நியாயமாக என்னைத் தண்டிக்க வேண்டியவர் பெண் கொடுக்கிறார். ஏன்? இதற்குப் பின்னால் என்ன சதி வேலை இருக்கிறது என்ற சந்தேகம் அவனுக்கு.
“ஐயோ சார், சங்கடப்படாதீங்க. என் மனைவி மருமகள் மேல இருக்கற அக்கறையில தான் கேட்டா.”
“அது எனக்கு நல்லாப் புரியுது சம்மந்தி.” என்றவர் மகள் வருவதைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, “அதோ! என் பொண்ணு வந்துட்டா…” அனைவரையும் அவள் வரும் பக்கம் பார்வையை மாற்ற வைத்தார்.
கருடேந்திரனின் அன்னை முதல் முறை பார்க்கிறார். பொதுவாகவே பணக்கார வீட்டுப் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்ற எண்ணத்தோடு, தங்கள் மருமகளின் அழகைக் காணத் திரும்பிய சரளா அதிர்ந்தார்.
“என்னம்மா, உன் மருமகளுக்கு முடியக் காணோம்.”
“நானும் அதைத் தான்டி தேடிக்கிட்டு இருக்கேன்.”
“இவங்க ஹேர் கட்டே இவங்க எப்படின்னு சொல்லுதும்மா. மாமியாரா அதிகாரம் பண்ணலாம்னு நினைக்காம அவங்களுக்கு அடங்கிப் போய் பிழைச்சுக்க.”
“நீ வேற சும்மா இருடி.”
“ரெண்டு பேத்துக்கும் சரியான பொருத்தம்ல.”
“நீங்களும் ஏங்க இவளை மாதிரியே பேசுறீங்க. முடி இல்லன்னா பொண்ணு நல்ல குணவதியா இருக்க மாட்டாளா? அதெல்லாம் நல்ல பொண்ணா தான் இருப்பா. அப்படியே முரண்டு பிடிச்சாலும், கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம எல்லாரும் சேர்ந்து மாத்திடலாம்.”
“ஆத்தாடி! இந்த விளையாட்டுக்கு நான் வரலம்மா.”
“நான் கூட வரல சரளா…”
“ப்ச்! மனசுக்கும், அழகுக்கும் சம்பந்தமில்லை. அவ குணம் என்னன்னு தெரியுறதுக்கு முன்னாடி நீங்களே ஒரு பட்டத்தைக் கொடுக்காதீங்க. எனக்கு என் மருமகள் மேல நம்பிக்கை இருக்கு. அவள் நிச்சயம் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருப்பா…”
“ஆல் தி பெஸ்ட் அம்மா” என்ற மகளை அடக்கியவர், “வாம்மா…” என அன்பொழுக அழைத்தார்.
அவர் பக்கம் சிறிதும் பார்வையைத் திருப்பாதவள், “எங்க உட்காரனும்?” தந்தையைப் பார்த்துக் கேட்டாள்.
“கருடா பக்கத்துல உட்காருமா.” என்றவரை அப்போதும் பார்க்காதவள் தன்னை முறைத்துப் பார்ப்பவனை முறைத்துக் கொண்டு அமர்ந்தாள்.
“மருமகளுக்கு மாலை போட்டு விடு சரளா.”
“சரிங்க.”
வாய் நிறையப் புன்னகையோடு, மாலையை எடுத்து மருமகள் கழுத்தில் போடச் செல்லும் நேரம், “நானே போட்டுக்கிறேன்.” என முகத்தில் அடித்தது போல் அதை வாங்கிக் கொண்டாள்.
அன்னையின் ஏமாந்த முகத்தைக் கண்டவன் பற்களைக் கடிக்க, “சரிமா” என உடனே முகத்தை மாற்றிக்கொண்டு புன்னகைத்தார் சரளா.
“ஏண்டி, இவ்ளோ கெத்து காட்டுறவ எதுக்கு இங்க வந்த?”
“நீ எதுக்குடா வந்த?”
“சாவ…”
“நானும் அதுக்குத் தான்டா வந்துருக்கேன்.”
“வராம ஓடி இருந்தா என் வாழ்க்கை தப்பிச்சிருக்கும்ல.”
“ஜெயிக்கிறதுக்காக மட்டும் தான் நான் பிறந்திருக்கேன்.”
“அது நான் வரதுக்கு முன்னாடி வரைக்கும்.”
“நீ இல்ல, எவன் வந்தாலும் இதுல எந்த மாற்றமும் இல்லை. அதனாலதான் அஞ்சு நாள் ஸ்டேஷன்ல இருந்துட்டு வாழ்க்கை முழுக்க எங்கிட்டச் சிறைப்பட பட்டுவேட்டி சட்டைல வந்து உட்கார்ந்திருக்க.”
“வெட்கங்கெட்டு நீயே உட்கார்ந்து இருக்கும்போது எனக்கு என்ன? உனக்கு வேணும்னா நீ எந்திரிச்சுப் போ…”
“உன்னப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல. போயும் போயும் நீ என் புருஷனா வந்திருக்க பாரு.”
“உன்னப் பார்த்தா அப்படியே மத்தாப்பு வெடிக்குது எங்களுக்கு. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா உன்ன மாதிரிப் பிறவிய நான் பார்க்கவே கூடாது.”
“இந்த ஜென்மத்துலயே ஏன்டா பார்த்த?”
“என்ன பண்றது? உன் கழுத்துல ஒரு தடவை தாலி கட்டினாலே விளங்காது. ரெண்டாவது தடவையா கட்டி என்னை நானே அழிச்சுக்க வந்திருக்கேன்.”
“ரொம்பப் பேசாத. திரும்பவும் ஸ்டேஷன்ல உட்கார வச்சுருவேன்.”
“கூடவே நீயும் வந்து உட்காரனும். உன் மேல தான் பலமான கேசு.”
“நீ ஒரு ஆளுன்னு உன்கிட்டப் பேசுறேன் பாரு.” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஏண்டி! மண்டையில கொஞ்சம் மசுர வளர்க்கக் கூடாது. பூ வைக்க இடம் இல்லாம மொட்டையா இருக்கு. யாராது பின்னாடி இருந்து பார்த்தா ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும் கல்யாணம் பண்றதா நினைச்சுக்கப் போறாங்க.”
“அவ்ளோ ஆசை இருந்தா உன் தலை சும்மாதான இருக்கு, வச்சிக்க.”
“எனக்கு என்ன தலையெழுத்து?”
“அப்போ மூடிக்கிட்டு உட்காரு. இதுக்காக எல்லாம் என்னால முடி வளர்க்க முடியாது.”
“நடு மண்டையில் ஒரு ஆணி அடிச்சுப் பூவைச் சுத்தி விட்டு உட்கார வச்சிருக்கணும். கவலப்படாத, இனி என் வீட்லதான இருக்கப் போற. தினமும் ராத்திரி பன்னிரண்டு மணிக்கு நடு மண்டைல ஆணி அடிக்குறது தான் என் வேலை.”
அவன் வார்த்தைக்கு எந்தப் பதிலும் உரைக்காதவள், இடது பக்கமாக இதழை வளைத்து நக்கலாகச் சிரித்தாள். அதற்குப் பின்னால் இருக்கும் சூட்சுமம் தெரியாது, ஐயர் கொடுத்த தாலியைக் கையில் வாங்கியவன் தன் அன்னையைப் பார்த்தான். அவரோ அமைதியாக அச்சதையோடு நின்றிருக்க,
“கட்டுப்பா” என்றார் சத்யராஜ்.
“என் வாழ்க்கையை அழிச்ச உன்னைப் பழி வாங்காம விடமாட்டேன்டா” தாலி கட்ட நெருங்கி வந்தவன் காதில் ரகசியமாக ரிதுசதிகா உரைக்க,
“உன் திமிரை அடக்குறதுக்கு முதல் முடிச்சு. திருட்டுப் புத்திய அடக்க ரெண்டாவது முடிச்சு. என் குடும்பத்தைக் கஷ்டப்படுத்துனதுக்கு மூணாவது முடிச்சு. இந்த மூணு முடிச்சால நீ துடிக்கப் போறதைப் பார்க்க ரொம்ப ஆவலா காத்திருக்கேன்.” என்று மூன்று முடிச்சையும் போட்டு இரண்டாவது முறையாகத் தன்னவளோடு தன் வாழ்வைத் தொடர்புபடுத்திக் கொண்டான் கருடேந்திரன்.
அதன் பின்னால் நடத்த வேண்டிய சடங்குகள் கோவில் முறைப்படி நடந்து கொண்டிருக்க, கண் கலங்க நின்று கொண்டிருந்தார் பொன்வண்ணன். அவருக்கு ஆறுதலாக சத்யராஜ் உடன் நிற்க, இந்தத் திருமணத்தோடு அனைத்துப் பிரச்சினைகளும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார் சரளா.
“முதல்ல எங்க வீட்டுக்குப் போயி விளக்கேத்திச் சாமி கும்பிட்டுட்டு, அப்புறம் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் சார்.” என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மாலையைக் கழற்றி வீசியவள் கடகடவென்று நடையைக் கட்ட,
“நில்லு ரிது…” கத்தினார் தந்தை.
“இவனைக் கல்யாணம் பண்ணச் சொன்னீங்க, பண்ணிட்டேன். அவ்ளோதான் டீலிங். இதுக்கு மேல அவன் யாரோ, நான் யாரோ…”