தேனி மாவட்டத்தின் தெற்கே, உள்ள கிராமம் செல்வபுரம்.
மண்ணின் வாசத்தில் மல்லிகை மனமும் கலந்து வீசும் பசுமை கலந்த ஊர். அந்த ஊருக்குள் செல்லும் பாதை, வழியெல்லாம் உயர்ந்த மரங்களும்,அவற்றின் அடியில் நீளும் பசுமையான செடிகொடிகளும், பூந்தோட்டங்களும் ஓரமாக ஓடும் நதியும், இன்னும் அந்த ஊருக்கு அழகு சேர்க்கும். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசலென காட்சியளித்தது.
அந்த ஊருக்குள் நுழைந்தது பாலாவின் கார். அவர்கள் வருவது காலை நேரத்தில், மழை லேசான தூறல் போட்டுகொண்டிருக்க, காரின் கண்ணாடியில் மழைத்துளி பட்டு தெரித்தது.
தென்றல் காற்று தேகத்தை வருடி செல்ல, சொந்த ஊரை அடைந்ததும் மனதிற்குள் சொல்லமுடியத ஒரு வித உணர்வு பாலாவிற்கு. காரை ஓட்டிய படியே ரசித்துக்கொண்டு வந்தவன் பார்வை எதேச்சையாக பின்னால் இருந்த ஆத்விகாவின் மீது விழுந்தது.
கண்களை விரித்து அழகு கொஞ்சும் இயற்கையை தன்னை மறந்து ரசித்து கொண்டிருந்தாள்.
“டேய், பாலா உங்க ஊர் ஏதோ பாரதிராஜா படத்துல பாக்குற மாதிரியே அழகா இருக்குடா” என்றான் தினேஷ்
“ஆமா பாலா. இவ்வளவு அழகா இருக்கும்னு எதிர்பாக்கலை. நல்லா ஜாலியா ஊர் சுற்றி பாக்கனும்.” என்றான் கோகுல்..
வித்யாவோ , “வருஷத்துக்கு ஒருதடவையாவது உங்க ஊருக்கு மெடிக்கல் கேம்ப் போட்டுடனும் பாலா. பார்க்கவே எவ்வளோ அழகா இருக்கு, இங்கேயே கொஞ்சநாள் வாழ்ந்தாள் இன்னும் அழகா இருக்கும்” என ஒவ்வொருவர் பேச ஆத்வி பேசவில்லையே தவிர அவள் கண்கள் அந்த ஊரின் அழகை பேசின.
பாலா, தன் நண்பர்களுடன் அவனது ஊருக்குள் செல்லும் பாதையில் நுழைந்தான்.. திருவிழா என்பதால் ஊரெங்கும் தோரணங்கள் கட்டப்படும் அங்கங்கே ஒலிபெருக்கியில் பக்தி பாடல்கள் ஒலித்துகொண்டும் இருந்தன. மழையால் குளிர்ந்த சாலை, காலை நேரம் என்பதால் வாசலில் தண்ணிர் தெளித்துகொண்டும் கோலமிட்டுகொண்டும், தண்ணிர் குடங்களை சுமந்து கொண்டும் அங்கங்கே பெண்கள் நடந்து கொண்டு இருக்க, ஆண்கள் சைக்கிளிலும், பைக்கிலும் சென்றபடி, சிலர் டீக்கடை முன் அமர்ந்தும் பேசியபடி இருந்தனர்.
புதியதாக கார் ஊருக்குள் நுழைந்ததும் அதை பார்த்தபடி சென்றனர் சிலர்.
பாலா அவன் வீட்டின் முன் காரை நிறுத்தினான். இரண்டு மாடி வீடு. தன் மகனை எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்தார் கற்பகவல்லி.
அவனை பார்த்ததும் கண்கள் கசிய “யய்யா பாலா, எப்படி இருக்குற, நல்லாயிருக்கியா தங்கம்? வருஷத்துக்கு ஒருதடவைதான் எங்களை வந்து பாக்கனும்னு இருந்தியாக்கும்” என கண்ணிர் வடிக்க,
“வா தம்பி எப்படி இருக்க? என்றபடி வந்தாள், அவன் அக்கா மங்கை. பக்கத்து ஊரில் தான் திருமணம் முடிந்து இருக்கிறது. அதனால் மாதத்தில் முக்கால்வாசி நாட்கள் இருப்பது என்னவோ இங்கேதான்.
“என்ன அக்கா நீ மட்டும் இங்கே இருக்க, மாமா, ஷிவானி எல்லாம் எங்கே,”
“மாமா கடைக்கு போயிருக்காருடா, வரும்போது ஷிவானியும் கூட்டிட்டு வந்துருவார். அவளுக்கு ஏதோ ஸ்பெஷல் கிளாஸாம், உங்கூட வரலை, அப்பா கூட வாரேன்னு சொல்லிட்டாள், அதான் நான் உன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக நேற்றே இங்கே வந்துட்டேன்.”
“சரி உள்ளே வா, இவங்க எல்லாரும் உன் ப்ரெண்ட்ஸ் ஆஹ்.”
“ஆமாக்கா”
“சரி எல்லாரும் உள்ளே வாங்க” என
தன் தம்பியையும் அவனுடன் வந்தவர்களையும் வீட்டிற்குள் அழைத்து கொண்டு வந்தாள் மங்கை.”
தன் மகனின் கையை பிடித்துகொண்டு நகரவில்லை கற்பகம். ஊருக்கே விரோதியாக இருந்தாலும் தன் பிள்ளைகள் என வந்தால் அவர்களின் பாசம் வேறுதான்.
பாலாவிற்கு குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது. இருந்தாலும் அவனின் சூழ்நிலை அப்படி.
அவனின் நண்பர்கள் மூவரும் வீட்டை சுற்றி பார்க்க ஆத்வி மட்டும் அந்த இடத்தில் அமர்ந்திருந்தாள். பெண்ணவள் முகம் சோர்வை காட்டியது.
ஆத்வியை மேலும் கீழும் பார்த்த மங்கை, “இந்தாம்மா உன் பெயர் என்ன?”
“ஆத்விகா”
“பேரும் நல்லாதான் இருக்கு. ஆளு நல்லா தான் இருக்க, இந்த புடவை எல்லாம் கட்டுற பழக்கம் இல்லையோ! என்றாள் ஆத்வி அணிந்திருக்கும் ஜீன்ஸ் டிசர்ட்டை பார்த்தபடியே,
“ஏன்டி, அந்த புள்ளைய நோண்டிட்டு இருக்க, அது பட்டணத்திலே பிறந்து வளர்ந்த புள்ளை, அந்த ஊருக்கு ஏத்தாப்புலதான் இருக்கும். நீ ஏதும் தப்பா எடுத்துக்காதம்மா, அவ இப்படித்தான் வளவளன்னு எதையாவது பேசிட்டு இருப்பாள்.
பாலா ஆத்வியை பார்த்தவன்“ நீ அவங்க கூட வீட்டை சுற்றி பாக்க போகலையா”
“இல்லை எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு.”
“அம்மா இவங்களுக்கு ரூம் ரெடி பண்ண சொன்னேன், தோட்டத்து வீட்டை சுத்தம் பண்ணிட்டிங்களா.’
“ஆமாய்யா, உங்க அப்பத்தாதான் கூட இருந்து சுத்தம் பண்ணுச்சி.”
“ஆமா அப்பத்தா எங்கேம்மா”.
“காலையிலே தோட்டத்துக்கு போய்டுச்சி. இன்னைக்கு கோவில்ல எல்லார் தோட்டத்துல விளையிற பொருள் கொண்டு வச்சி பூஜை நடக்கும்ல. அதான் ஆத்தா அங்கே போய்ருக்கு” என்றார் நாராயணண்.
“சரிப்பா அப்போ இவங்களை நான் தோட்டத்து வீட்டில் கொண்டு விட்டுடு வந்துடவா?”
“யய்யா சாப்பிட்டு போகலாம்ல.”
“இல்லம்மா ரொம்ப தூரம் பயணம். அவங்களுக்கு ரொம்ப சோர்வா இருக்கும் இல்ல, கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் அதுக்கப்புறம் மற்றதை பார்க்கலாம்.”
“சரிய்யா… நீ…”
“நான் கொண்டு விட்டுட்டு உடனே வந்துடறேன்.”
“சரிய்யா, உன் கூட இன்னொரு தம்பி வரும்ல, அந்த தம்பியை காணலையே, அந்த தம்பி இந்த தடவையும் வரலையா”
“சமரா..? அவங்க அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள், அதனால அவனால நேத்து எங்க கூட வர முடியாம போச்சு. இன்னைக்கு ராத்திரி இங்க வந்துடுவான்ம்மா”
“சரி தம்பி அவங்களை கூப்பிட்டு விட்டு சீக்கிரமா வா” என்றார் கற்பகம்.
நாராயணண் தன் மகனிடம் நலம் விசாரித்துவிட்டு வெளியே கோவில் வேலையாக சென்று விட்டார்.
பாலா தன் நண்பர்களை அழைத்துகொண்டு தோட்டத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
“அவர்களுக்கான அறையை பிரித்து கொடுத்துவிட்டு எல்லாரும் ரெஸ்ட் எடுங்க. அப்புறம் வெளியே போகலாம் நான் ஒரு இரண்டு மணிநேரம் கழித்து வரேன்” என அங்கிருந்து கிளம்பினான்.
“அம்மா தம்பி கூட வந்து இருக்க அந்த பிள்ளையை பார்த்தியா?”
“ரெண்டு பேர் வந்திருக்காங்க, நீ யாரை சொல்லுற மங்கை.”
“இதுல உட்கார்ந்திருந்துச்சு, என்ன கூட வளவளன்னு பேசாதன்னு சொன்னியே”
“ஆமா அந்த பிள்ளைக்கு என்னடி?”
“பாக்க நல்ல லட்சணமா இருக்கு இல்ல”
“ஆமா”
“ஒருவேளை தம்பி இந்த பிள்ளையைதான் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டான்னா, அப்போ என் பொண்ணை யார் கட்டுவாங்க”
“அடியே அறிவு கெட்டவளே உன் பிள்ளைக்கு வயசு என்ன? என் பையனுக்கு வயசு என்ன?”
“வயசுல என்னமா இருக்கு, வாழுற வாழ்க்கையில தான் இருக்கு”
“கூறு கெட்டவ மாதிரி பேசாதடி, உன் பொண்ணு என் பேத்தி. என்ன இருந்தாலும் நான் எல்லாத்தையும் யோசிக்கணும். 15 வயசு பொண்ண 28 வயசான உன் தம்பியை கட்டனும்னு ஆசைப்படுகிற மனசாட்சி இல்லையாடி உனக்கு..?”
“நீ தாம்மா அறிவே இல்லாத மாதிரி பேசுற, தம்பி கோயம்புத்தூர்ல இருக்கான், அங்கேயே வேலை பார்த்துட்டு வருஷத்துக்கு ஒருக்காதான் இங்கே வர்றான். இதே என் பொண்ணை அவன் கல்யாணம் முடிச்சான்னா, இங்கேயே இருப்பான். அவனுக்கு நம்ம ஊர்லயே ஒரு ஹாஸ்பிடல் கட்டிக் கொடுத்திடலாம். என் பொண்ணு உன் கூடவே இருப்பாள். நானும் உன் கூடவே இருந்து விடுவேன். கடைசி காலத்தில் நம்ம ரெண்டு பேரையும் நல்லா பார்த்துக்குவாளே” அடுத்தவ வந்தா பார்ப்பான்னு சொல்லமுடியுமா?
“ஆயிரம் சொல்லு , இது நடக்காது உன் மனசுக்குள்ள வீணா ஆசையை விதைக்காத மங்கை”
“அது சரி அப்போ சந்திரா இரண்டாவது ஒரு பொண்ண பெத்து வெச்சிருக்குல்ல, அதுக்கு உன் பையன கட்டி கொடுக்குற எண்ணத்தில் இருக்கியா”
“அடி செருப்பால யாரு வீட்டுக்கு யாரு மருமகளா வரணும், அந்த ஓடுகாளி பெத்த பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வரணுமா ஆத்தாளையும் மகளையும் சேர்த்து ஆஞ்சிபுடுவேன் ஆஞ்சி”
“அந்தப் பிள்ளைக்கும் கல்யாண வயசு தாண்டிடுச்சு, இன்னும் கல்யாணம் கட்டிக் கொடுக்காமல் தானே இருக்காங்க, அதான் சொன்னேன். அந்த வீட்டு செம்பருத்தி இங்க வந்து பூக்கப்போகுதுன்னு”
“பூக்கப்போறாளா, செடியோட ஆஞ்சி தூர வீசி புடுவேன்” என் தம்பியை கட்டி இருந்தா ராணி மாதிரி இருந்திருப்பாள். என் தம்பியை வேண்டாம்னு ஒரு பிச்சைக்கார பயலை கட்டிட்டுதான் இப்படி சீரழிகிறாள். அவள் பெத்த புள்ளைக்கு என் புள்ளையை கட்டி வைக்கணுமாக்கும். அதுக்கு ஒரு பிச்சைக்காரியா பார்த்து கட்டி வச்சாலும் வைப்பேனே தவிர, அவள் மகளை என் வீட்டில் வாழ விட மாட்டேன்”
“என்னமோ சொல்லுமா, இந்த காலத்து பசங்க நம்ம பேச்சையா கேக்குறாங்க, அவளும் ஆளு நல்லா லட்சணமாதான் இருக்காள். ஒரு வேளை தம்பிக்காக அத்தை பொண்ணுன்னு பார்த்ததும் விழுந்துட்டான்னா என்ன பண்றது.”
“அந்த சின்னவ நான் பேசிய பேச்சுக்கு என் முகத்துலயே இப்போ வரைக்கும் முழிக்க மாட்டாள். அவள் என் பையன் பின்னாடி வரப்போறாளாக்கும். போடி போய் வேற வேலை இருந்தா பாரு, என் பையன் வந்து இருக்கான் நான் வகை வகையான சமைக்கணும். எனக்கு நிறைய வேலை கிடைக்கும்” என கற்பகம் சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.
எப்படியாவது தன் அம்மா அப்பாவிடம் பேசி தன் ஒரே மகளான ஷிவானியை பாலாவிற்கு கட்டி கொடுக்கும் எண்ணத்தில்தான் இங்கே வந்தது. பாலாவும் இங்கே இருப்பதில்லை. வேலை என வெளியில் தான் இருக்கிறான். மங்கை கணவனும் தொழில் ஆரம்பிக்கிறேன் என அனைத்து பணத்தையும் வீணாக்கியதுதான் மிச்சம். இப்போது மறுபடியும் கடை பார்க்கிறேன் என்றுதான் திரிந்து கொண்டிருக்கிறார். மற்றபடி அவர்கள் வீட்டிற்கு பணம் கொடுத்து உதவுவது எல்லாமே நாராயணனும் கற்பகமும்தான். தன் தம்பியை வேறொருத்தி கட்டிக் கொண்டாள், தனக்கு பணம் தருவதற்கு விடமாட்டாள் என அதற்கு பதில் தன் மகளை கட்டி வைத்தாள், அத்தனை சொத்துக்களையும் தனக்கு சொந்தமாகிவிடும் என்ற கணிப்பில் இங்கே வந்திருக்கிறாள் மங்கை.
“இதோ பாரு செம்பா காலையில இருந்து வீம்பு பிடிச்சுட்டு இருக்குற, பெத்தவ சொல்றாளே அவ பேச்சைக் கேட்போம்னு கேட்கிறாயா? திருவிழா முதல் நாள் அதுவுமா வேலைக்கு போக வேண்டாம். நாளைக்கு போன்னு சொல்றேன், சொன்ன பேச்சைக் கேட்காமல் அடம் பிடிச்சுட்டு இருக்க, உன் வழியிலேயே எல்லா விஷயத்திலும் விட்டது தப்பா போயிடுச்சு, கால காலத்தில் ஒருத்தன பார்த்து கட்டி வைத்திருந்தால் இந்த வீம்பு பிடித்திருக்க மாட்ட, பெத்தவளை மதிச்சிருப்ப” என சந்திரா கத்தி கொண்டிருக்க,
“ஆமா, என் பொண்டாட்டியை நீ மதிக்கிறதே இல்லை ஆத்தோவ்” என்றார் நல்லசிவம் போதையில்
“இவர் வேற வாயை வச்சிட்டு அமைதியா துங்குங்க” என்ற சத்ததில் வாயை முடிக்கொண்டு தன் மகளை பார்த்து சிரித்தார்.
“ஏன்டி உங்கிட்டதானே சொல்றேன். செவுடன் காதுல ஊதுன சங்கு மாதிரி இருக்குற.”
“அம்மா ஏற்கனவே நாங்க இன்னைக்கு வேலைக்கு சேர்ந்துடறோம்னு சொல்லிட்டோம். இன்னொரு நாள் என்று சொன்னால் நல்லாவாம்மா இருக்கும்”
“முதல் நாள் திருவிழாடி. ஆணும் பெண்ணும் அழகா அலங்கரிச்சி கிளம்பி போவாங்க, நீ என்னடான்னா வேலைக்கு போறேன்னு ஒத்த காலில் நிக்கிற!”
“அம்மா தாயே! நான் எங்கேயும் போகல, நாளைக்கு வேலைக்கு போறேன். காலையில இருந்து இதையே சொல்லி சொல்லி கழுத்தை அறுக்கிற”
அப்போது குகன் ஸ்கூட்டியை கொண்டு விட வந்திருந்தான். வண்டி சத்தம் கேட்டதும் சந்திராவும் செம்பாவும் எழுந்து வெளியே வந்தனர்.
“வாய்யா குகா, அம்மா எப்படி இருக்காங்க, நல்லா இருக்காங்களா”
“நல்லா இருக்காங்க அத்தை, மாமாவை எங்கே ஆளை காணோம்”
“அவருக்கு என்ன ராசா, உள்ள குடிச்சிட்டு தூங்குறாரு”
“எங்க மாமா வேலைக்கு போறது, உங்க அத்தை இன்னைக்கு லீவ் போட சொல்றாங்க”
“ஏன் அத்தை. என்னாச்சி?”
சந்திரா குகனிடம் விவரத்தை சொல்ல “அத்தை சொல்றதும் சரிதானே செம்பா, இன்னைக்கு முதல் நாள் திருவிழா. ஊரில் உள்ள ஆளுங்க அத்தனை பேரும் இன்னும் கொஞ்ச நேரத்துல கோவிலுக்கு போவாங்க. நீ இல்லாமல் இருந்தால் அத்தைக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதான் அப்படி சொல்லுவாங்க, இன்னைக்கு ஒரு நாள் லீவ் போட்டு நாளைக்கு போ செம்பா” என குகன் சொன்னதும் “சரி மாமா” என்றாள் செம்பருத்தி.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.8 / 5. Vote count: 11
No votes so far! Be the first to rate this post.
Post Views:850
1 thought on “இதயமே இளகுமா அத்தியாயம் 6”
DEEPA V
அருமை சகோதரி👌👌👌👌
கற்பகம் அம்மா கூறுவது போல் இந்த மங்கைக்கு என்ன பைத்தியமா பிடிச்சி இருக்கு…
15 வயது பெண் ஷிவானியை 28 வயது பாலாவுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க 🤦🤦🤦…
உங்கள் எழுத்துகளின் வர்ணனையில் அழகான கிராமத்தை எங்கள் கண் முன் கொண்டு வந்தீர்கள் அருமை…
குகன் செம்பாவிற்க்கு மனதளவில் ஒரு நல்ல சகோதரனாக செயல்படுகிறான் .மிக அருமை..👌👌👌👏👏👏..
அருமை சகோதரி👌👌👌👌
கற்பகம் அம்மா கூறுவது போல் இந்த மங்கைக்கு என்ன பைத்தியமா பிடிச்சி இருக்கு…
15 வயது பெண் ஷிவானியை 28 வயது பாலாவுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க 🤦🤦🤦…
உங்கள் எழுத்துகளின் வர்ணனையில் அழகான கிராமத்தை எங்கள் கண் முன் கொண்டு வந்தீர்கள் அருமை…
குகன் செம்பாவிற்க்கு மனதளவில் ஒரு நல்ல சகோதரனாக செயல்படுகிறான் .மிக அருமை..👌👌👌👏👏👏..
கதை போக்கு மிக அருமை..ஆவலுடன் அடுத்த பதிவிற்கு..