விட்டது தொல்லை என்று கருடேந்திரன் மாலையைக் கழற்றி விட்டு நிம்மதியாக ஓரிடத்தில் நின்றுகொள்ள, அவன் பெற்றோர்களுக்குத்தான் என்ன செய்வதென்று புரியவில்லை. மகளின் பின்னால் ஓடிய பொன்வண்ணன்,
“நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல ரிது. தாலி கட்டுன கையோட யாராவது இப்படிப் போவாங்களா?” கேட்டார்.
“நீங்க பண்ணது மட்டும் நல்லா இருந்துச்சா? எல்லா அப்பாவும் தன் பொண்ணுக்கு, அப்படி மாப்பிள்ளை வரணும். இப்படி மாப்பிள்ளை வரணும்னு மெனக்கெட்டுப் பார்த்துப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. நீங்க என்னடான்னா இந்தப் பொறுக்கிக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க.”
“அதை ஒரு பொறுக்கி சொல்லுது பாரு.” தூரமாக நின்றிருந்தவன் வேண்டுமென்றே கத்தினான்.
“கோவில்னு பார்க்குறேன்.”
“உன்னை விட நான் நல்லாவே பேசுவேன். கோவில விட்டு வெளிய வா, பேச்சு வார்த்தை வச்சுக்கலாம்.”
“உன்கிட்ட எனக்கென்னடா பேச்சு. நீ எனக்கு யாரு? தாலி கட்டுனமா, மூடிக்கிட்டுக் கிளம்புனமான்னு இருக்கணும்.”
“அதே தான்டி உனக்கும். ஒழுங்கு மரியாதையா என் பின்னாடி வந்து என் வீட்டுல சாணி அள்ளிக்கிட்டு இரு.”
“கருடா!”
“எவ்ளோ திமிராப் பேசுறான்னு பார்க்குறீங்க தான. இப்படி ஒருத்தியை என் தலையில கட்டிட்டீங்களே.”
“இது நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை!”
“தெரியாம நடந்த விபத்து அது. அப்படியே விட்டுட்டுப் போகாம, இந்தச் சனியனை என் கால்ல கட்டிட்டீங்க. இப்பப் பாருங்க, காலச் சுத்துன பாம்பா எப்படித் தொல்ல தரான்னு. இவல்லாம் குடும்பத்துக்குச் செட்டாக மாட்டாம்மா.”
“திருட்டுத் தாலியைக் கழற்றிப் போட்டவ, எதுக்குடி வந்து வெட்கமே இல்லாம உட்கார்ந்த.”
“அந்த வெட்கம் உனக்கும், உன் குடும்பத்துக்கும் இருந்திருந்தா இப்படி வந்து நின்னு இருப்பீங்களா? உழைச்சுச் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. அதை விட்டுட்டு ஒரு டிராமாவைப் போட்டு, நல்லா சொகுசா வாழலாம்னு பார்க்குறீங்க. இந்தப் பொழப்புக்குக் குடும்பத்தோட…” என்றவளைச் சீறிப் பாய்ந்து பிடித்தவன்,
“என் குடும்பத்தைப் பத்திப் பேசாத. அவங்களைப் பத்தி என்னடி தெரியும் உனக்கு. உன்ன மாதிரிப் பணத்துக்குப் பல்லக் காட்டுறவங்கன்னு நினைச்சியா எங்களை…” என இல்லாத முடியை இறுக்கிப் பிடித்தான்.
“முடியாதுப்பா, இவளை மாதிரி ஆளை விட்டு வைக்கிறது தப்பு.”
“என் பொண்ண விடு!” என்ற அதிகாரக் கட்டளையில் கருடனின் கைகள் அவள் தலைமுடியில் இருந்து விடுபட, “என் முன்னாடியே என் பொண்ண இப்படிப் பண்றது நல்லா இல்ல. நல்லாப் பார்த்துப்ப என்ற நம்பிக்கையில தான் நீ பண்ணதையும் மன்னிச்சு, இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கேன். அந்த நம்பிக்கையைக் கெடுத்துடாத.” என்றார்.
“உங்களை யாரு என் மேல நம்பிக்கை வைக்கச் சொன்னா? முதல்ல உங்க பொண்ண ஒழுங்கா வளர்க்காதது உங்க தப்பு. இத்தனைக்கும், பிள்ளையார் சுழி நீங்க தான். நியாயமானவரா இருந்திருந்தா, உங்க பொண்ணு பண்ண தப்பைத் தட்டிக் கேட்டு இருப்பீங்க. கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டீங்க.”
“என்னடா பேச்சு இது? பெரியவங்கன்னு கூட இல்லாம. இந்தக் கல்யாணம் நடக்க அவர் காரணம் இல்ல, நீ தான் காரணம்! ஒரு அப்பாவா என்ன செய்யணுமோ அதைத்தான் அவரு செஞ்சிருக்காரு. இதுக்கு மேல எதுவும் பேசாத. எதுவா இருந்தாலும் நாங்க பேசிக்கிறோம்.” என மகனை அடக்கிய சரளா மருமகளின் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டார்.
“எங்கம்மா போற?” எனத் தன்மையாகக் கேட்ட சரளா மருமகள் முன் நின்று, “புகுந்த வீட்டுக்கு வந்து விளக்கு ஏத்திச் சாமி கும்பிடுறது ஒரு மருமகளோட முதல் கடமை. அதைச் செய்யாமல் போற.” என்றவரை உதாசீனப் பார்வையோடு பார்த்தாள்.
“நான் உங்க மருமகளும் இல்ல, உங்க வீடு எனக்குப் புகுந்த வீடும் இல்லை.”
“ஒன்னுக்கு ரெண்டு தடவை என் மகன் தாலி கட்டி இருக்கான். அவன் உனக்குப் புருஷனா இருக்க வரைக்கும், நான் உனக்கு மாமியார் தான். நம்ம வீடு உனக்குப் புகுந்த வீடு தான்…”
“ஓஹோ… வர முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?”
“நாங்க சண்டைக்கு வரலம்மா. உன்னை எங்க வீட்டுக்கு மருமகளாய் கூட்டிட்டுப் போக வந்திருக்கோம். இனி உன்னோட வாழ்க்கை அந்த வீட்லதான். உன்னோட கோபம் எங்களுக்குப் புரியுது. இருந்தாலும் நடந்ததை மறந்துட்டு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ முயற்சி பண்ணலாமே.”
சரளாவை விட மிகவும் தன்மையாக சத்யராஜ் புரிய வைக்க, வர மாட்டேன் என்று ஒட்டாரம் செய்தாள். பொறுத்துப் பார்த்த பொன்வண்ணன், “அவன் உன்னைக் குடும்பத்துப் பொண்ணு இல்லன்னு சொல்லாம சொல்றான். அதுக்கு உனக்குக் கொஞ்சம் கூட ரோஷம் வரலையா? அவன் சொல்ற மாதிரி தான் உன்னை வளர்த்திருக்கனா?” என உசுப்பி விட முயற்சித்தார்.
அவை அவள் முகத்தில் நன்றாக வேலை செய்ய, “அவன்கிட்டத் தோத்துப் போயிட்டன்னு ஒத்துக்கப் போறியா?” என மீண்டும் அதே வேலையைக் கனகச்சிதமாகச் செய்தார்.
சில நொடிகள் பார்வை சுருக்கி யோசித்தவள், “நான் உங்க மருமக தான…” எனச் சரளாவைப் பார்த்துக் கேட்க, மன மகிழ்வில் ஒன்றும் புரியவில்லை அவருக்கு.
“சொல்லுங்க?”
“ஆமாடா!”
“மருமகளா உங்ககிட்ட முதல் முறையா ஒன்னு கேட்கப் போறேன்.”
“கேளுடா, உனக்கு இல்லாத உரிமையா?”
“உங்க வீட்டு மருமகள் கழுத்துல எவனாது ஒருத்தன் வற்புறுத்தித் தாலி கட்டுனா சும்மா விடுவீங்களா?” என்ற கேள்வியை அவர் தலையில் இடியாக இறக்க, அதைச் சற்றும் எதிர்பார்க்காதவர் உறைந்து நின்றார்.
“அதைப் பண்ண உங்க பையன் கூட எப்படிச் சேர்ந்து வாழ முடியும்? உங்க வீட்ட எப்படி என் புகுந்த வீடாய் பார்க்க முடியும்.”
“என் பையன் பண்ணது தப்பு தான். அதுக்கான பிராயச்சித்தமா தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சிருக்கோம்.”
தன் வார்த்தைக்குப் பதில் வார்த்தை கூறிய மருமகளை, எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சத்தியராஜ் வாயை மூடிக்கொள்ள, “எங்க வீட்டுக்குத் தான் வரச் சொன்னமே தவிர, அவனை மன்னிச்சு ஏத்துக்கச் சொல்லல. அவனை மன்னிக்கிறதும் மன்னிக்காமல் போறதும் உன்னோட முழு உரிமை! என்னைக்கும், அதுல எங்க தலையீடு இருக்காது.” என வாக்குறுதி கொடுத்தார் சரளா.
“குட்!” என மெல்லிய புன்னகையை வீசியவள்,
“உங்க பையனை நான் மன்னிக்கிற வரைக்கும் உங்க வீட்டுக்கு வர மாட்டேன். அவனை வேணா என் கூட வந்து வாழச் சொல்லுங்க. ஒருவேளை என் மனசு மாறுனா, உங்க பையனையும் ஏத்துக்கிட்டு உங்க வீட்டுக்கு வரேன்.” என்றதும் அடித்துக் கொண்டிருந்த அலை நின்றது போல் திகைத்து நின்றான் கருடேந்திரன்.
இவ்வார்த்தையை அவனின் பெற்றோர்களும் எதிர்பார்க்காததால் அதே நிலையில் நிற்க, மகளை அடக்கப் பார்த்தார் தந்தை. “இது என் வாழ்க்கை விஷயம்!” என அவரை ஒதுங்க வைத்தாள்.
“இதான் உங்க பையனுக்கு நான் கொடுக்குற தண்டனை. எந்தக் குடும்பத்துக்காக எனக்கு இப்படி ஒரு பாவத்தைப் பண்ணானோ, அந்தக் குடும்பத்தை அவன் பிரிஞ்சு இருக்கணும். நீங்க அவனப் பார்க்க முடியாம, அவன் உங்களைப் பார்க்க முடியாம தவிக்கணும். என் வீட்ல ஒரு வேலைக்காரன் மாதிரி வாழனும். இதுக்கெல்லாம் சம்மதம்னு சொன்னா உங்க பையனைக் கார்ல ஏறி உட்காரச் சொல்லுங்க. இல்லன்னா நீங்க தனியாப் போங்க, நான் தனியாப் போய்க்கிறேன்.” என்று விட்டாள் ஒரே முடிவாக.
“கடைசி ஆப்ஷன் நல்லா இருக்கு. நீ அப்படியே கிளம்பு. என் குடும்பத்தை எல்லாம் விட்டு வந்து உன் முகரையப் பார்த்துட்டு இருக்க முடியாது.”
“அப்போ கடைசி வரைக்கும் வாழாவெட்டியா உன் வீட்டுலயே வாழு. எப்படியும் உன் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணுவ தான. அப்போ உன்னப் பத்தின கேள்வி வரும். உன் பொண்டாட்டி எங்கன்னு கேப்பாங்க. அன்னைக்கு அவங்க முன்னாடி வந்து நின்னு இவன் எனக்குத் திருட்டுத் தாலி கட்டிட்டான். அதனால வாழா வெட்டியா இருக்கான்னு சொல்லி உன் தங்கச்சி வாழ்க்கையைக் கெடுப்பேன்.”
“அடிங்க்குகுகு…” என அடிக்கப் பாயும் மகனை சத்யராஜ் தடுக்க,
“என் பையன் உன் வீட்டுக்கு வருவான். அவன் பண்ண தப்புக்குத் தண்டனையா வீட்டோட மாப்பிள்ளையா இருப்பான். நீ எப்போ சமாதானமாகி என் வீட்டுக்கு வரியோ, அப்பத்தான் அவன் எனக்குப் புள்ள… அதுவரைக்கும், அவனுக்கும் எனக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் இருக்காது. இது என் மருமகள் உன்மேல சத்தியம்.” என்றவரால் பெரும் நிலநடுக்கம் அங்கு.
மனைவியின் வார்த்தையை உதாசீனம் செய்வது போல், அன்னையின் வார்த்தையைச் செய்ய முடியாது கருடேந்திரனால். அதனால்தான் பிடிக்காதவளைத் திருமணம் செய்திருக்கிறான். எடுத்த முடிவிலிருந்து நிச்சயம் பின்வாங்க மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். எங்கு அடித்தால் எப்படி வளைவோம் என்பதைத் தெரிந்து அடித்திருக்கும் மனைவியைக் குரோதத்தோடு பார்த்தவன்,
“என்னால முடியாது.” என்றான்.
“அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கேன். ஒருத்தி என் முன்னாடி உன் புள்ள வளர்ப்பு இதுதானான்னு கேட்காமல் கேட்டுட்டா. அவ வாயாலயே உங்க புள்ளை மாதிரி ஒரு புள்ளை எங்க தேடி எடுத்தாலும் கிடைக்காதுன்னு சொல்லணும். உண்மையாவே நீ எனக்குத்தான் பிறந்தன்னா, அப்படி அவளைச் சொல்ல வச்சுட்டு வீட்டுக்கு வா…”
சரளாவின் முடிவில் யாருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும், ஒருத்தி மட்டும் மிகுந்த ஆனந்தத்தோடு நின்றிருந்தாள். சிரித்த முகமாக, “வரம்மா…” எனத் தலையசைத்து அவர் விடைபெற, எந்தப் பாவனைகளும் இல்லை அவளிடம். போட்ட திட்டம் அப்படியே நடந்ததில் மனமகிழ்ந்தவர், மகளின் திட்டத்தில் மனம் கசங்கி நகர்ந்தார்.
“என்னடா, வீட்டோட மாப்பிள்ளை! கக்கூஸ் கழுவத் தெரியுமில்ல… இன்னையோட வேலைக்காரங்களுக்குச் சம்பளம் கொடுக்குற காசு மிச்சம்.” என்றவள் அவனை நெருங்கி,
“இந்தப் பலி கொடுக்கப் போற ஆட்டைக் கயிறு கட்டி இழுத்துட்டுப் போவாங்க தெரியுமா, அப்படித் தெரியுற என் கண்ணுக்கு.” எனத் தலையை உயர்த்திச் சத்தமிட்டுச் சிரித்தாள்.
“யாரு யாருக்குப் பலியாகுறாங்கன்னு பார்த்துடலாம்.”
“பார்க்கலாமே!”
“ஆணவத்துல ஆடாதடி. எங்க அம்மா சொன்ன மாதிரி, எந்த வீட்டுக்கு வர மாட்டன்னு சொன்னியோ அந்த வீட்டுக்கு வர வச்சு, எங்க எல்லாருக்கும் சோறாக்கிப் போட்டு, வேர்வை சிந்தி வேலை பார்த்து அக்மார்க் மருமகளா நடக்க வைக்கல, என் பேரு கருடேந்திரன் இல்லடி.”
“கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்…” என நக்கலாகப் பாடியவள்,
“வேலைக்காரனா வாழப் போற வசந்த மாளிகைக்குப் போகலாமா?” என முன்னே நடக்க, ஒவ்வொரு செல்லிலும் அவள் மீதான குரோதத்தைச் செலுத்தி, பகையைத் தீயாக உருவாக்கி வைத்தவன் அதை அணைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறான்.
***
எந்த வீட்டின் முன்பு கழுகாகக் காவல் காத்தானோ, அந்த வீட்டிற்குள் இப்படியான தருணத்தில் நுழைவோம் என்ற எண்ணம் சிறிது கூட உதித்ததில்லை. முதல்முறையாக இந்தக் கட்டிடத்தைத் தலை உயர்த்திப் பார்க்கும்பொழுது, ‘இன்னும் ரெண்டு மாடி சேர்த்துக் கட்டிருந்தா சூரியன், நிலா, நட்சத்திரம் எல்லாத்தையும் கைலயே பிடிச்சிருக்கலாம்.’ என்ற எண்ணம் தான் அவனுக்குள்.
என்ன கோபம் இருப்பினும், இந்தக் கட்டிடத்தை அவன் உள் மனம் ரசித்தது. ஆனால், இன்று நிலைமையோ வேறு. அவன் விரல் நுனி பட்டால், இந்த மொத்தக் கட்டிடமும் எரிந்து சாம்பல் ஆகிவிடும். அந்த அளவிற்கு இறுகிப் போயிருந்தது மொத்த உடலும். துடிக்கும் இதயம் கல்லாக மாறி, அதில் யாரோ உளியை வைத்து அடிப்பது போன்ற ஓசை.
வெடிக்கத் துடிக்கும் எரிமலைக்குள் இவனைத் தள்ளிவிட்ட சூழ்நிலை, எரிமலையின் நிலையைச் சிறிதும் கவனிக்கவில்லை. பூமி மொத்தத்தையும் தன் சூட்டால் கதி கலங்க வைக்கும் அந்த எரிமலையே இவனால் கதி கலங்கிப் போயிருக்கிறது. விழிகளுக்குள் இரு கத்தி கூர்மையாக நின்று கொண்டிருக்க, அழுத்தத்தின் மொத்த உருவம் இந்தக் கருடேந்திரன்.
தன்னவன் நிலையைச் சிறிதும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதவள், வந்த கையோடு வேறு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட, “உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்றார் பொன்வண்ணன்.
அவன் மறுக்கவும் செய்யாமல், சம்மதிக்கவும் இல்லாமல் அதே இடத்தில் அப்படியே நின்றிருக்க, “என்னை உனக்கு நினைவு இருக்கா?” முதல் கேள்வியை மருமகனிடம் இடமாற்றினார்.
பதில் உரைக்காமல் புருவத்தை மட்டும் சுருக்கியவனுக்கான பதிலைக் கொடுக்க, “சரியா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் உன்னைப் பார்த்தேன்.” எனப் புதிதாகப் புதிர் ஒன்றைப் போட்டார்.
சுருங்கிக் கொண்ட புருவங்கள் இன்னும் நான்கு ஐந்து சுருக்கங்களைக் காட்டி, அவன் நெற்றியில் கேள்விக் குறியாக வந்து நிற்க, “எஸ்7 போலீஸ் ஸ்டேஷன்!” என்ற வார்த்தையோடு கடந்த காலத்திற்குள் நுழைய, புத்திக்குள்
பொறி அடித்த உணர்வு அவனுக்கு.
இரண்டு வருடத்திற்கு முன்பு, லட்சக்கணக்கில் பணத்தைப் பையில் அடுக்கி வைத்தவர் தன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவைத் தொடப்போகும் நேரத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் பழுதாகியது. பணத்தைப் பத்திரமாக எடுத்துச் செல்ல முடியாமல், நடுரோட்டில் திண்டாடிக் கொண்டிருந்தவருக்குத் தரிசனம் கொடுத்தான் வருங்கால மருமகன்.
விலையைக் கூடப் பேசாமல் செல்ல வேண்டிய இடத்தைக் கூறியவர், பந்தாவாக ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். சரியாக இருபது நிமிடத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அவரது ஓட்டுநர், கார் சரியாகிவிட்ட செய்தியைக் கூறத் தான் இருக்கும் இடத்தைக் கூறியவர் காத்திருந்தார்.
“சார்!” எனக் குரல் கொடுத்தான்.
“என்னப்பா?”
“எக்ஸ்ட்ரா 200 ரூபாய் இருக்கு சார்.”
“பரவால்லப்பா, வச்சுக்க.”
“என் உழைப்புக்கான பணம் மட்டும் போதும் சார். உங்க உழைப்புக்கான பணம் உங்க கிட்டயே இருக்கட்டும்.” என்றவன் முகத்தை அப்போதுதான் பார்க்கவே செய்தார் பொன்வண்ணன்.
வருங்காலத்தில், திமிர் பிடித்தவளின் கணவனாகவும், இந்தக் கதையை மாமனார் சொல்லிக் கேட்கப் போகும் மருமகனாகவும், அந்த இரவு வெளிச்சத்தில் தன் முகத்தை ஆழமாகப் பதிவு செய்தான். கைநீட்டிக் காசை வாங்கிக் கொண்டவர்,
“இந்தக் காலத்துல உன்ன மாதிரி மனுசனைப் பார்க்குறது ரொம்ப அபூர்வம். பியூச்சர்ல நீ ரொம்பப் பெரிய ஆளா வருவ…” என வாழ்த்திட, சிரித்த முகமாக அங்கிருந்து கிளம்பினான்.
காரில் ஏறியவர் வீடு வந்ததும் இறங்கி, “உள்ள இருக்கற பேகை எடுத்துட்டு வாப்பா…” என ஓட்டுநருக்குக் கட்டளையிட்டார். அடுத்த சில நிமிடங்களில்,
“உள்ள எந்தப் பேகும் இல்லையே சார்.” என்றார் ஓட்டுநர்.
அப்போதுதான் ஆட்டோவில் அந்தப் பையை அப்படியே விட்டது நினைவிற்கு வந்தது. பல லட்சங்கள் என்பதால் பெருத்த மனஉளைச்சலுக்கு ஆளானவருக்கு, எங்குச் சென்று அந்த நல்லவனைத் தேடுவது என்று தெரியவில்லை. எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அத்தனைப் பணத்தை மொத்தமாகப் பார்க்கும் பொழுது மனம் மாறி இருப்பான் என அஞ்சியவர் காவல் நிலையத்திற்கு ஓடினார்.
அங்கு அவருக்கு முன்பாகக் கருடேந்திரன் நின்றிருந்தான். யோசனை படிந்த முகத்தோடு இருந்தவருக்கு, அங்கிருந்த அதிகாரி அனைத்தையும் புரிய வைத்தார். தன்னைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல், பணம் இருப்பதைக் கண்டதும் இந்தக் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறான்.
“காசு கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க சார்.”
லட்சங்களை எண்ணிப் பார்க்காமல், “உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. இது மிஸ் ஆகி இருந்தா பெரிய லாஸ் ஆகி இருக்கும். நீ பண்ண உதவிக்கு என்ன வேணும்னாலும் கேளு. எதுவா இருந்தாலும் செஞ்சு தரேன்.” என்றிட,
“அதெல்லாம் எதுக்கு சார்? உங்களைப் பத்தி எந்த டீடைல்ஸும் தெரியல. எப்படியும் இந்த ஏரியாவைச் சுத்திதான் இருப்பீங்கன்னு கெஸ் பண்ணி இங்க வந்தேன். பணம் கரெக்டா இருக்கான்னு பார்த்துக்கோங்க சார்.” என்றான்.
“இவ்ளோ தூரம் வந்தவன் ஒத்தத் தாளையா உருவி இருக்கப் போற?”
தன்னை நம்பியவருக்கு நன்றியுரைத்தவன் அங்கிருந்து கிளம்பும் முன், “இந்த மாதிரி நேரத்துல ரொம்ப ஜாக்கிரதையா வரணும் சார். அடுத்த தடவை யாரையாவது கூடக் கூட்டிட்டு வாங்க.” என அறிவுரை கூற,
“உன்ன மாதிரி நம்பிக்கையான ஆளு என் பக்கத்துல இல்லப்பா…” என்றவர் முகத்தில் அத்தனை வேதனைகள்.
அதை நன்கு உணர்ந்து கொண்டவன், கனத்த மனத்தோடு அங்கிருந்து கிளம்பினான். வீடு வந்தவர் தன் மகளிடம் நடந்த அனைத்தையும் சொல்லிப் புகழாரம் சூட்டிவிட்டார். இப்படிப் புகழும் அளவிற்கு என்ன செய்து விட்டான் என அலுத்துக் கொண்டவள், ஒரு கட்டத்திற்கு மேல் யார் அவன்? என்று யோசிக்க ஆரம்பித்தாள். சில நேரம் நம் தேடுதல், வாழ்க்கையோடு இணைந்து விடும் என்பதை எந்நொடி உணர்வாளோ அவனைத் தேடியவள்.
நடந்த அனைத்தையும் கூறியவர், “உன்ன மாதிரி ஒருத்தனுக்கு, என் பொண்ணைக் கட்டிக் கொடுக்கணும்னு பல நாள் யோசிச்சிருக்கேன். நீயே அதுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு அப்புறமும் எப்படி நழுவ விடுவேன்?” என்றவரின் செயலுக்கான காரணம் இப்போதுதான் புரிந்தது கருடேந்திரனுக்கு.
“இனி என் சாம்ராஜ்யமும், என் பொண்ணும் உன்னோட பொறுப்பு. பல வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்குத் தான் கொஞ்சம் நிம்மதியா பீல் பண்றேன். கூடிய சீக்கிரம் இந்த நிம்மதி சந்தோஷமா மாறனும்.”
“சாரி சார். கிடைச்ச நிம்மதியே நிலைக்குமான்னு தெரியல. எனக்கும் உங்க பொண்ணுக்கும் சுத்தமா செட் ஆகாது. என் அம்மாவுக்காக மட்டும் தான் இந்தக் கல்யாணம். இதை முறியடிக்க, ஒரு சின்னச் சந்தர்ப்பம் கிடைச்சா கூட உதறித் தள்ளிட்டுப் போய்கிட்டே இருப்பேன்.”
“என் பொண்ணு வார்த்தையை வச்சு அவ கேரக்டரை முடிவு பண்ணாத. இந்த சொசைட்டிக்காக, அவளுக்கு அவளே போட்டுகிட்ட வேஷம் அது. ரொம்ப சென்சிட்டிவான பொண்ணு. என்னைக்கு அவ கண்ணு முன்னாடி அவ அண்ணன், இந்த உலகத்தை விட்டுப் போனானோ அன்னைக்கே மொத்தமா மாறிட்டா. என் பொண்ணைப் பழைய மாதிரி நீ தான் மீட்டுத் தரணும்.”
“அது என் டியூட்டி இல்ல சார். என் குடும்பத்துகிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டு வந்த உங்க பொண்ணப் பார்க்கவே எனக்குப் பிடிக்கல. என் தம்பி கேஸ்ல உங்க பொண்ணுதான் குற்றவாளின்னு நிரூபிச்சுட்டு இங்க இருந்து கிளம்பிடுவேன்.”
“நிச்சயமா அதைப் பண்ணது என் பொண்ணா இருக்காது. இந்த விஷயத்துல உனக்குத் தோல்வி மட்டும் தான் மிச்சம்.” என்றவர் அவனை நெருங்கித் தோள் மீது கை போட்டு,
“உன்னை வெளிய எடுக்கும்போதே ரவியையும் வெளிய எடுத்துட்டேன். அதுக்கு என்ன காரணம் தெரியுமா?” என மருமகன் முகத்தைப் பார்த்தார்.
அவனோ எந்த உணர்வுகளையும் காட்டாமல் ஜடமாக நின்றிருக்க, “என் பொண்ணைச் சுத்தி, துரோகமும் பகையும் மட்டும் தான் சொந்தமா இருக்கு. உன் தம்பிக்காக நீ தேடப் போற வேட்டையில, அந்தத் துரோகமும் பகையும் அழிஞ்சு என் பொண்ணு மீண்டு வந்துடுவா…” என மருமகன் மீதுள்ள அதீத நம்பிக்கையில் வகுத்து வைத்த திட்டத்தைப் போட்டு உடைத்தார்.
அப்போதும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அதை உணர்ந்தவர், அவனுக்கான நேரம் வரும்வரை காத்திருக்க முடிவு செய்து, “உன் வீட்டுப் பத்திரம் இந்நேரம் உன் அப்பா கையில சேர்ந்திருக்கும். உன் தம்பியோட வேலையும், மெடிக்கல் செலவும் இனி என்னோட பொறுப்பு. என் பொண்ண மட்டும் பத்திரமா பார்த்துக்க கருடா…” என அங்கிருந்துச் சென்று விட்டார்.
***
இரவுப் பார்ட்டியை முடித்துவிட்டு, நள்ளிரவு ஒரு மணி அளவிற்கு வீடு திரும்பினாள் ரிதுசதிகா. நண்பர்களோடு ஜாலியாக லூட்டி அடித்து விட்டு வந்தவள், தன் அறையில் தாலி கட்டியவன் இருப்பதைப் பார்த்துக் கொந்தளித்து விட்டாள். அவனோ, அவள் வந்ததைக் கூட அறியாமல் தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான்.
“டேய் வேலைக்காரா! உனக்கு என் ரூம்ல என்னடா வேலை?”
அந்த அதிகாரக் குரலில் தன் நினைவைக் கலைத்தவன் ஆயாசமாகத் திரும்பி, “இதெல்லாம் பழைய டயலாக்!” என மூக்கை அறுத்தான்.
“பிளடி ராஸ்கல்…”
பாய்ந்து அவன் சட்டைக் காலரைப் பிடிக்கப் போக, அவள் வரும் வேகத்தை வைத்து எண்ணத்தைப் படித்தவன், “ப்பே! ஓரமா…” என மெத்தையில் தள்ளி விட்டான்.
“ஹேய்! என்ன தைரியம் இருந்தா என் மேல கை வைப்ப? உச்சி மண்ட சூடாகி உன்னைக் கடிச்சுக் குதறுறதுக்குள்ள இங்க இருந்து போயிடு.”
“மப்புல எப்படி உளறுது பாரு. திருடின்னு மட்டும் தான் நினைச்சேன், நீ குடிகாரியாடி!” எனத் தன் இடையில் விரல்களை ஒட்ட வைத்தவன்,
“சரக்கு மட்டும் தானா, இல்ல எல்லா மேட்டரும் கைவந்த கலையா?” அருவருப்பான முகத்தோடு வினவினான்.
“ம்ம்… மகா மட்டமான தண்ணிப் பார்ட்டின்னு அப்பட்டமாய் தெரியுது.”
என்ன சொல்லித் திட்டுவதென்று தெரியாமல் வார்த்தையைத் தேடிக் கொண்டிருந்தவள் செவியில், “போதை தெளிஞ்சாதான் கை நடுங்கும். உனக்கு என்னடி இப்பவே நடுங்குது?” என்ற வார்த்தைகள் விழுந்தது.