அம்ருதாவின் விரக்தியான சிரிப்பையும், கடலை வெறித்தவாரு வெறுமையான முகபாவனையுடன் அவள் அமர்ந்திருக்கும் விதத்தையும் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்த உணர்வு. தான் அனுபவிக்கும் அதே வேதனையை இன்னொருத்தியும் அனுபவிக்கிறாள் என்பதில் அவனால் அவள் மனநிலையை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.
அருகில் நின்றிருந்த ஆருபேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் மேலும் சில அநியாய வார்த்தைகளை அம்ருதாவின் மீது வீசிவிட்டு கலைந்து சென்று விட்டனர்.
சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள் பிறகு குழந்தையிடம் “வீட்டுக்கு போகலாம் பாப்பா?” என்று கேட்க,
“ப்ளீச் மா.. இன்னும் கொஞ்ச நேதம்” என்றாள் ஆத்யா.
“சரி இன்னும் கொஞ்ச நேரம்தான். திரும்பவும் அடம்பிடிக்க கூடாது” என்று கண்டிப்புடன் கூறியவளை பார்த்து,
“ஓகேம்மா” என்று அழகாக சிரித்து கொண்டாள் அம்ருதாவின் செல்ல மகள். குழந்தையின் சிரிப்பில் இவ்வளவு நேரம் நடந்தது அனைத்தும் மறந்து போக அவள் கன்னத்தில் முத்தமிட்டு நெற்றி முட்டி சிரித்தாள் அம்ருதா. இருவரையும் பார்க்க பார்க்க திகட்டவில்லை ஹர்ஷ மித்ரனுக்கு.
தன்னையும் அறியாமல் இதழில் பூத்த புன்னகையுடன் அந்த காட்சியை ரசித்தபடியே அவனிருக்க, மணலில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஹர்ஷாவை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டது. ஆத்யா அவனை நோக்கி சிறிய சிறிய எட்டுக்களை வைத்து வேக வேகமாக ஓட துவங்க, அதை பார்த்த அம்ருதா சட்டென எழுந்து அவள் பின்னாலேயே ஓட துவங்கினாள். அவர்களுக்கும் ஹர்ஷாவுக்கும் சிறிது தூர இடைவெளியே இருக்க, அம்ருதா குழந்தையை பிடிக்கும் முன்னரே குழந்தை ஹர்ஷாவின் கால்களை பற்றி கொண்டது.
எதிரில் நிற்பவனை கண்டதும் அவனை இங்கு சற்றும் எதிர் பாராதாவள் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள். “அய்யயோ.. இவனா? அன்னைக்குதான குழந்தையை நான் கவனமா பாத்துக்கலைன்னு திட்டினான். இவ வேற வேகமா ஓடி வந்துட்டாளே. இன்னைக்கும் ஏதாவது திட்டுவானோ?” என்று அவன் முகத்தை பார்த்த படியே அரண்டு விழித்தவள், தொண்டையில் எச்சில் கூட்டி விழுங்கினாள்.
அவள் தன்னை பார்த்து அஞ்சுகிறாள் என்பதை அவள் முகமே காட்டி கொடுக்க, இவ்வளவு நேரம் ஒருவனை வார்த்தையால் ஓட ஓட விரட்டியவள் தன்னை பார்த்து அஞ்சுகிறாள் என்றதும் உள்ளுக்குள் சிரித்துகொண்டான் ஹர்ஷா.
“சா.. சாரி சார்.. அது.. நான் பிடிக்காத்தான் வந்தேன். அதுக்குள்ள அவ ஓடி வந்துட்டா.” என்று திக்கி திணறி படபடக்கும் விழிகளோடு பேசியவளை காண காண பிடித்து போனது அவனுக்கு. ஆனால் முகத்தில் எதையும் காட்டி கொள்ளாதவன் தன் கால்களை கட்டியவாரு இருந்த குழந்தையை தன் உயரத்துக்கு தூக்கி அணைத்தவாரு பிடித்து கொண்டவன், “உன்னோட அம்மா உன்னை கவனமாவே பார்த்துக்க மாட்டாங்களா பாப்பா? எப்போதுமே இப்படித்தானா?” என்று குழந்தையை கேட்பது போல் அவளை கேட்டுவிட அவளுக்குதான் அய்யோவென்றானது.
“போச்சுடா.. இன்னைக்கும் ஏதாச்சும் சொல்ல போறான். கடவுளே… அது எப்படிடா தப்பான நேரத்துல சரியா வந்து நிக்கிற? இன்னைக்கு என்ன சொல்ல போறானோ?” என்றவள் மனமோ ஆசிரியரிடம் தவறு செய்து மாட்டிக்கொண்ட சிறு மாணவியை போல் அச்சம் கொண்டது.
அவள் மருண்ட விழிகளை கண்டவனுக்கு அவள் மேல் பிடித்தம் கூடி கொண்டே போக, வேண்டுமென்றே மிரட்ட துவங்கினான்.
“உங்களைத்தான் கேக்குறேன். குழந்தையை கவனமா பார்த்துக்க முடியுமா முடியாதா? இப்படித்தான் தனியா ஓட விடுவீங்களா? ம்ம்ம்ம்..?” என்று அவன் கணீர் குரலில் அதட்ட, அதில் ஒரு நிமிடம் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.
இறுகிய முகத்துடன் அவளை முறைப்பது போல் அவன் பார்க்க, அழுது விடுபவளை போல் ஹர்ஷாவை பார்த்தாள் அம்ருதா.. தனது புன்னகையை மிக சிரமப்பட்டு அடக்கி கொண்டிருந்தவனின் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியது குழந்தை.
“அங்கிள்… ஏன் எப்போமே அம்மாவ தித்திதே இதுக்கீங்க?” என்று ஆத்யா கேட்க,
“உன்னை சரியா கவனிச்சுக்க வேண்டியது அவுங்கதான? எனக்கு உன்னோட அம்மா இப்படி உன்னை கேர்லெஸ்சா விடுறது சுத்தமா பிடிக்கல. அதனாலதான் திட்றேன்” என்றதும்,
“ஓ… அப்போ உங்களுக்கு என்னை பிதிக்குமா?”
“ஹ்ம்ம்ம்.. ரொம்ப பிடிக்குமே..”
“அப்போ எனக்கு ஐஸ்கீம் வாங்கி ததீங்களா? அம்மா சளி பிதிக்கும்னு வாங்கியே தத மாத்தாங்க அங்கிள்… என்றதும் இதை கேட்ட அம்ருதாவிற்கு கோபம் வந்துவிட்டது.
“ஆத்யா.. என்ன பழக்கம் இது? யார்கிட்டயும் எதுவும் கேட்க கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல?” என்று குழந்தையை அதட்ட,
“எதுக்கு இப்போ குழந்தையை திட்றீங்க? உனக்கு ஐஸ் க்ரீம்தான வேணும் நான் வாங்கி தரேன்டா செல்லம்” என்று ஏதோ குழந்தையை பெற்ற தந்தையை போல அவன் உரிமையோடு அழைத்து செல்ல,
“இல்ல அதெல்லாம் வேண்டாம். குழந்தையை என்கிட்ட கொடுங்க” என்று அவன் பின்னாலேயே ஓடியவளை திரும்பி ஹர்ஷா ஒரு பார்வை பார்த்ததும் சட்டென நின்றவளுக்கு அதற்க்கு மேல் வார்த்தையே வரவில்லை.
“என்ன இவன்.. என் பிள்ளையை கேட்டதுக்கு என்னையவே முறைக்கிறான்?” என்று கோபம் வந்தாலும் அவனுடைய கம்பீரமான தோற்றத்தையும் எதிரில் நிற்பவரை பார்வையாலேயே அதட்டி நிற்க வைக்கும் கூர்மையான விழிகளையும் மீறி ஒரு வார்த்தையும் பேசிட முடியவில்லை அவளால்.
ஆத்யாவிற்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தவன் அவள் உண்டு முடிக்கும் வரை தன்னிடமே வைத்து கொண்டான்.
“நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க நான் ட்ராப் பண்றேன்” என்று கேட்க, “அதெல்லாம் எதுவும் வேண்டாம். நாங்களே போய்க்கிறோம்” என்றப்படியே குழந்தையை வாங்கியவள், விட்டால் போதுமென்று அங்கிருந்து வேக வேகமாக சென்று விட்டாள். அவர்களது உருவம் தன் பார்வையை விட்டு மறையும் வரை பார்த்து கொண்டே நின்றிருந்தவன், அவர்கள் சென்ற பின்னரே அங்கிருந்து கிளம்பினான்.
கடற்கரையிலிருந்து வந்தவன் வீட்டிற்குள் நுழையும்போதே ஹர்ஷ மித்ரனின் அன்னை வழக்கம் போல அவனை சூழ்ந்து கொண்டு திருமணத்தை பற்றி பேச ஆரம்பிக்க சலித்து போய் நின்றவன் “ப்ளீஸ் மா.. இப்போதான வந்தேன். அதுக்குள்ளையும் ஆரம்பிக்கதீங்க. நான் கொஞ்சம் ரெஃப்ரஷ் ஆகனும்” என்றதும் அதற்க்கு மேல் அவனை தொந்தரவு செய்ய வில்லை அவர். இரவு உணவு உண்கையிலும் ‘அவனிடம் இப்போது பேச்சை ஆரம்பித்தால் சரியாக சாப்பிட மாட்டான்’ என்றெண்ணியவர் எதுவும் பேசி கொள்ளவில்லை.
அவனது அறைக்கு சென்று உறங்க போகும் நேரம் கீர்த்தனா உள்ளே வந்தார். “உன்னோட ஃபோன் கொஞ்சம் கொடுக்குறியா ஹர்ஷா? என்றவரிடம் பெருமூச்சுடன் தனது கைபேசியை கொடுத்தனுக்குதான் நன்றாக தெரியுமே எதற்கு கேட்கிறார் என்று.
சிறிது நேரம் எதையோ தேடி எடுத்தவர் இந்த பொண்ணோட ப்ரொஃபைல்ல கொஞ்சம் பாருப்பா என்று தயங்கியப்படியே நீட்ட, பார்க்காமலே வேண்டாம்ன்னு சொன்னா கண்டிப்பா கேக்க மாட்டாங்க. சரி பாக்குறமாதிரி பார்த்துட்டு வேண்டாம்னு சொல்லிடுவோம் என்று அவன் வாங்கிக்கொள்ள, அவனுக்கு கொஞ்சம் நேரம் தனிமை கொடுத்துவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார்.
அந்த பெண்ணின் சுயவிவரம் அடங்கிய பக்கத்தை பார்க்க விருப்பம் இல்லாது அதிலிருந்து வெளியே வந்தவனின் விழிகளில் பட்டது அந்த புகைப்படம். கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் சட்டென நேராக எழுந்து அமர்ந்து அந்த புகைப்படத்தை பார்த்தான். அவனது விழிகள் ஒரு நிமிடம் மிளிர்ந்தன. இது அவதான?. பீச்ல பார்த்த அதே பொண்ணு. என்றெண்ணியவன் அவளது ஐடி க்குள் உடனடியாக உள் நுழைந்தான்.
அவளுடைய பெயர் அம்ருதா என்று இருக்க, “அம்ருதா…” என்று ஒருமுறை சொல்லி பார்த்தவனின் இதழ்களில் விரிந்தது அழகான புன்னகை.
அவளுடைய அடுத்தடுத்த புகைப்படங்களை நகர்த்தி பார்த்தவனுக்கு அவள் குழந்தையோடு நிற்கும் நிழற்படங்களும், கூடவே அவளது அலைபேசி எண்ணுடன் கூடிய மொத்த விவரமும் இருந்தது. அவளுடைய எண்னை தனது கைபேசியில் குறித்து வைத்து கொண்டான்.
அவளது புகைப்படத்தையே பார்த்து கொண்டிருந்தவனின் மனமோ, ‘அழகிதான் கூடவே தைரியமும் அதிகம்தான்’ என்று ஒப்புக்கொண்டது. ‘யாரோ ஒருத்தன் தன்கிட்ட தப்பான நோக்கத்தோட நெருங்குறான்னு தெரிஞ்சதும், சும்மா அழுதுட்டு நிற்காம, அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடாம அவனை ஓட விட்ட பாத்தியா? அந்த தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா என்னை பார்த்தா மட்டும் ஏன் பயந்து நடுங்குற?’ என்று சிரித்து கொண்டவன் முழு மனதோடு அவளது மேட்ரிமோனி ஐடிக்கு சென்ட் ரெக்வஸ்ட் பட்டனை அழுத்தி இருந்தான்.
வெளியில் சென்ற தன் அன்னை திரும்ப வந்ததும் “என்னப்பா? அந்த பொண்ணு ஓகேவா?” என்று கேட்க, “இல்லாம வேண்டாம்” என்று சட்டென முடித்து கொண்டான். ஏன் எதற்கு என்று எந்த காரணமும் அவர் கேட்கவில்லை, கேட்டாலும் அவன் சொல்ல போவதில்லை என்று அறிந்தவர் பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
இவனது மனமோ “அவள் என்னுடைய ரெக்வஸ்ட்டை பார்த்திருப்பாளா? பாத்தால் எதுவும் பேசுவாளா? என்று வெகு நேரமாய் காத்திருக்க, அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சரி காலையில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணியவனுக்கு வெகு நேரம் கழித்தே உறக்கம் தழுவி கொண்டது.
அடுத்த நாள் காலை பொழுது ஆதவனின் ஒளி கதிர்கள் ஹர்ஷாவின் முகத்தில் படற, அதில் மெல்ல இமை திறந்து பார்த்தவனுக்கு முதலில் நினைவில் வந்தாள் அம்ருதா. அதில் சட்டென எழுந்து அமர்ந்தவன் முதல் வேலையாக தன்னுடைய கைபேசிய எடுத்து பார்க்க, அவனுடைய விழிகள் ஆச்சரியத்தில் விரிந்து கொண்டன.