சோதிக்காதே சொர்க்கமே 3

4.7
(7)
மகனுக்கு அடியை தந்த பிறகும் சுலோச்சனாவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.
“நீயெல்லாம் நரகத்துக்குதான்டா போவ..” என்று திட்டினாள்.
“ஆனா நான் அந்த பொண்ணை லவ் பண்றேன்..” என்று இவன் அம்மாவின் கோபத்தை பொருட்படுத்தாமல் பதில் சொன்னான்.
இவள் சுற்றி தேடினாள். செருப்பு கையில் கிடைக்கவில்லை.
உணவு கொண்டு வந்து தந்திருந்த தட்டு இருந்தது. இவள் சாப்பிட்டு இருக்கவில்லை. அந்த தட்டை எடுத்து மகனின் தலையில் அடித்தாள். உணவு அவன் தலையிலும் உடம்பிலும் கொட்டியது.
சுலோச்சனாவின் கண்களில் கண்ணீர் இறங்கியது.
“பொண்டாட்டி செத்த வீட்டுல புருஷன் புது மாப்பிள்ளைன்னு சொல்வாங்களே! அதை நிரூபிக்க பார்க்கிறியா நீ?” எனக் கேட்டு அழுதாள்.
இவனிடம் எந்த உணர்வும் இல்லை.
“உங்கப்பா இறந்த பிறகு பதினைஞ்சி வருசமா தனியா நின்னு உன்னை வளர்த்தினேனே! உன்னை மாதிரி காமம்தான் பெருசுன்னு நான் நினைச்சிருந்தா இன்னைக்கு உன் வாழ்க்கை இப்படி இருந்திருக்குமா?” என்று கேட்டாள்.
அவளின் கண்ணீர் எப்போதும் இவனை ஆட்டி படைக்கும். ஆனால் இன்று எந்த மாற்றத்தையும் தந்திருக்கவில்லை.
“அந்த பொண்ணு நல்லா இருக்காம்மா. அழகா எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கா..” என்றான்.
“பாவி பாவி..” தலையில் அடித்துக் கொண்டாள்.
“இத்தனை நாளா ப்ரீத்தியோடு வாழ்ந்தியே.. உனக்கு மனசாட்சி இருக்கா? ஒரு வருசம் முடியலன்னாலும் மூனு மாசமாவது துக்கம் அனுசரிக்க கூடாதா? எப்படி எப்படியோ வளர்த்தினேனே! இப்படி இரக்கம் இல்லாம வாழுறியேடா?” என்று அழுதாள்.
“நரேன்..” என்று கத்தினாள்.
தீனாவின் பிஏ ஓடி வந்தான்.
அவனை பார்த்த சுலோச்சனா “இவனை இங்கிருந்து கூட்டி போ. இவனை நான் பார்க்கவே விரும்பல. போய் இவனையும் சாக சொல்லு..” என்று கத்தினாள்.
அவன் அருகில் வந்து தீனாவை எழுப்பி நிறுத்தினான்.
“ப்ளீஸ் மேடம். டென்ஷன் ஆகாதிங்க. உங்க உடம்பு கெட்டுடும்..” என்று சொல்லிவிட்டு தீனாவை அங்கிருந்து அழைத்து போனான் நரேன்.
வெளியே வந்தவன் பணிப்பெண் ஒருத்தியிடம் “மேடம் ரூமை க்ளீன் பண்ணுங்க..” என்று சொல்லி அனுப்பினான்.
தீனாவை அவனின் அறைக்கு அழைத்து வந்தான் நரேன்.
அவனை பாத்ரூமுக்குள் தள்ளினான். “குளிச்சிட்டு வாங்க சார்..” என்றான்.
தீனா பெருமூச்சோடு குளித்தான். பச்சை தண்ணீர் மேலே விழுந்தும் உடம்பு சூடாக இருந்தது. மானசா மனசை விட்டு போக மறுத்தாள்.
குளித்து விட்டு டவல் ஒன்றை கட்டியபடி வெளியே வந்தான் தீனா.
நரேன் அதே அறையில் ஓரமாக நின்றிருந்தான்.
“என்னாச்சி சார்?” எனக் கேட்டான். இதுவரை தீனா தன் அம்மாவின் பேச்சை மீறி நடந்ததே இல்லை. அம்மாவுக்கும் தீனாவுக்கும் நடுவில் சின்ன சண்டை கூட வந்ததும் இல்லை. ஆனால் இன்று உணவு தட்டை தூக்கி அடிக்கும் அளவிற்கு சுலோச்சனாவுக்கு கோபம் வந்திருக்கிறது என்றால் அப்படி என்ன செய்திருப்பான் இவன் என்று நரேனுக்கு ஆச்சரியம்.
இவன் தலையை துவட்டியபடி வந்து கட்டிலில் அமர்ந்தான்.
“அந்த பொண்ணு.. ப்ரீத்தியோட பிரெண்ட் அன்ட் சிஸ்டர்.. ஐ லைக் ஹேர்..” என்றான்.
நரேன் அதிர்ச்சியோடு அவனை பார்த்தான். மனைவி இறந்த அன்றே இப்படி சொல்லும் ஒருவனை தன் வாழ்நாளில் இப்போதுதான் முதல் முறையாக பார்த்திருக்கிறான். வைப்பாட்டி வைத்திருப்பவன் கூட ஒரு நாளும் இப்படி சொல்லி இருக்க மாட்டான்.
“ஐ வாண்ட் ஹேர்.. அம்மா கோபப்படுறாங்க. உன்கிட்ட ஏதாவது ஐடியா இருந்தா சொல்லேன்..” என்றான் தீனா.
நரேனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“சீரியஸ்ஸா கேக்குறிங்களா சார்?” என கேட்டான்.
“சீரியஸ் இல்லாம வேற என்ன? அவ எனக்கு உடனே வேணும்.. ஐ வாண்ட் டூ..” என்றவனுக்கு மேற்கொண்டு வெளிப்படையாக சொல்வதற்கு சிறு தயக்கமாக இருந்தது. அவனுக்கு அவளை கட்டி அணைக்க வேண்டும். முத்தாட வேண்டும், கட்டிலின் மீது அவளை கொஞ்ச வேண்டும். அதுவும் உடனே வேண்டும்.
“வீட்ல ஒருத்தர் இறந்து போனா மூனு மாசம் ஆகாம வேற எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது சார்..” என்றான் நரேன்.
தீனாவுக்கு இந்த சாங்கியம் சடங்குகள் அனைத்தின் மீதும் வெறுப்பு வந்தது.
“எல்லாம் நாம கண்டுபிடிச்சதுதானே? மூனு மாசம் ஆகலன்னா என்ன? எனக்காக அந்த பொண்ணுகிட்ட போய் பேசு..” என்றான்.
முடியாது என்று தலையாட்டிய நரேன் “உயிர் போனாலும் இப்படி ஒரு கேவலமான காரியத்தை நான் செய்ய மாட்டேன். உங்க மனைவியோட இறப்புக்கு நீங்க மரியாதை கொடுக்கலன்னாலும் உங்க குழந்தைக்காகவாவது யோசிங்க. அந்த குழந்தை பெரிய பொண்ணா வளர்ந்த பிறகு உங்களை மதிப்பாளா? அது உங்க பொண்ணு சார். கொஞ்சம் யோசிங்க..” என்றான்.
தீனா தலைத் துவட்டிக் கொண்டிருந்த டவலை நரேனின் மீது வீசினான்.
“போய் தொலை.. உன்கிட்ட பேசியதே என் தப்பு. சம்பளம் மட்டும் கரெக்டான தேதிக்கு வாங்கிக்கிற. ஆனா ஒரு ஐடியா உருப்படியா குடுக்குறியா?” என்று திட்டினான்.
அங்கு இருக்கவே பிடிக்காமல் நரேன் கிளம்பி விட்டான். தீனாவின் மீது அளவுக்கு அதிகமான வெறுப்பு வந்து விட்டது.
அந்த அறையை விட்டு கிளம்பியவன் சுலோச்சனாவின் அறையை கடந்தபோது அழுகை சத்தம் இவன் காதில் வந்து விழுந்தது.
சுலோச்சனாவை தெய்வம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு தாய்க்கு இப்படி ஒரு மகனா?
நரேன் அந்த வீட்டை விட்டே கிளம்பி விட்டான்.
கண்கள் வலிக்கும் வரை அழுது கொண்டிருந்த சுலோச்சனா தீனா பிறந்த தன் வயிற்றை வெறுத்தாள். அவனை இத்தனை ஆண்டுகளும் நெஞ்சில் சுமந்ததற்காக தன்னையும் வெறுத்தாள்.
ப்ரீத்தி இறந்ததற்கு பதிலாக நாம் இறந்து இருக்கலாம் என்று அவளின் இதயம் மோசமாக வருத்தப்பட்டது. அவளுக்கு ப்ரீத்தியை மிகவும் பிடிக்கும்.
ப்ரீத்தி நல்ல பெண். மாமியாரையும் இந்த வீட்டையும் நன்றாக பார்த்துக் கொண்டவள். கணவனுக்கு மூன்று வேலையும் விதவிதமாக சமைத்து போட்டவள். அப்படி ஒரு மனைவி கிடைக்க தீனா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இந்த தீனா மட்டும் அவளை ஆரம்பத்தில் இருந்து அன்போடு கவனித்துக் கொண்டு இருந்திருந்தால் அவள் இப்போது இறந்து இருக்க கூட மாட்டாள். இவன்தான் பாவி பையல்.. அவளை செக்கப்களுக்கு கூட மருத்துவமனைக்கு அழைத்துப் போகாமல் எப்போதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்தான். ப்ரீத்தி ஒவ்வொரு மாதமும் தனது அசிஸ்டன்ட்டை அழைத்துக் கொண்டுதான் மருத்துவமனைக்கு செல்வாள். அப்படி போய் வந்தாலும் கூட அவளுக்கு தீனாவின் மீது கோபமே வந்ததில்லை.
“புருஷனுக்கு இந்த அளவுக்கு இடம் கொடுக்காத. அப்பப்ப பிடிச்சி கத்தி வை. இல்லன்னா உன் தலை மேல ஏறி உக்காந்து ஆடுவான்..” என்று சுலோச்சனை சொன்னால் கூட “அவர் உழைக்கிறதே நமக்காகதானே அத்தை? நாமளே அவரை புரிஞ்சிக்கலன்னா வேற யார் புரிஞ்சிப்பாங்க?” என்று கேட்பாள்.
வேலையில் ஏற்படும் டென்ஷனை எல்லாம் வீட்டில்தான் கொண்டு வந்து இறக்குவான் தீனா. பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைப்பான். அதை கூட அமைதியாக பொறுத்துக் கொள்வாள் ப்ரீத்தி.
டென்ஷன் உச்சமாகும் போதெல்லாம் அவளைப் பிடித்து கத்தி வைப்பான். அவன் திட்டும் வார்த்தைகளை எல்லாம் கேட்கும் போது சுலோச்சனாவுக்கே அவமானத்தில் செத்து விடலாம் என்று தோன்றும். ஆனால் ப்ரீத்தியோ அவனிடம் மென்மையான முறையில் மன்னிப்பு கேட்டு அவனை சமாதானம் செய்து அவன் கோபத்தை குறைக்க அவனின் தலையையோ நெற்றியையோ பிடித்து விடுவாள்.
இந்த குடும்பத்தில் எப்போது யாரோ செய்த புண்ணியம்தான் ப்ரீத்தி இந்த வீட்டிற்கு மருமகளாக வந்தது என்றே நம்பினாள் சுலோச்சனா.
செய்த புண்ணியத்தை அரைகுறையாக விட்டுவிட்டார்கள் போல. வீட்டிற்கு ஒளிவிளக்கு போல் இருந்தவள் இப்போது அனைவரையும் இருட்டில் நிறுத்தி விட்டு போய் விட்டாள்.
அவளின் மரணம் தந்த உயிர் வலியே இன்னும் சுலோச்சனாவை விட்டுப் போகாமல் இருக்கிறது.
மகன் நம்மை முழுதாக கொல்லாமல் விடமாட்டான் என்றே நினைத்தாள் இந்த அப்பாவி தாயார்.
தன் வீட்டில் இருந்த மானசாவுக்கு உறக்கம் வரவில்லை. அந்த குட்டி குழந்தை என்ன செய்வாளோ என்று அதைப் பற்றியே கொண்டிருந்தாள்.
‘ப்ரீத்தி எதற்காக நம்மை வரச்சொல்லி இருப்பாள்?’ என்று யோசித்தவள் அதன்பிறகு ஞாபகம் வந்து போனின் பேக் கவருக்கு நடுவே இருந்த கடிதத்தை தேடி எடுத்தாள்.
கைகள் நடுங்க அந்த கடிதத்தை பிரித்தாள்.
“உன்கிட்ட நிறைய சொல்லணும் மானசா.. ஆனா எனக்கு டைம் இல்ல. ஒருவேளை நான் இந்த பிரசவத்தை தாண்டி உயிரோடு வரலன்னா என் குழந்தையை பத்திரமா பாத்துக்க. இந்த உலகத்துல எனக்கு உன்னை விட்டா வேற உறவு கிடையாது. என் குழந்தைக்கு நீ அம்மாவா இருப்பங்கற நம்பிக்கையிலதான் நான் நிம்மதியா செத்துப் போறேன். என் நம்பிக்கையை காப்பாத்திடு ப்ளீஸ்.. அன்ட் ஐயம் சாரி. லவ் யூ மை அனதர் சோல்..” என்று எழுதி வைத்திருந்தாள்.
சிம்பிளான சின்ன கடிதம். ஆனால் கடிதத்தில் இருந்த அர்த்தங்கள் ஏராளம்.
இவளுக்கு கண்ணீர் இறங்கியது. தோழியை தொலைத்த துக்கம் பெரிதாக இருந்தது. குழந்தையை வாங்கி வர என்ன செய்வது என்ற யோசனை அதை விட பெரிதாக இருந்தது.
இரவெல்லாம் அவள் உறங்கவில்லை. கண்ணீரை சிந்தியபடியே புரண்டுக் கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை நேரத்திலேயே ப்ரீத்தியின் புகுந்த வீட்டுக்கு ஓடினாள். கேட்டின் வாட்ச்மேன் இவளை பார்த்து “யார் வேணும்?” எனக் கேட்டார்.
நேற்று துக்க நிகழ்ச்சி நடந்ததால் பாதுகாப்பை தளர்த்தி இருப்பார்கள் போல.
“நான் ப்ரீத்தியோட பிரெண்ட். குழந்தையை பார்க்க வந்திருக்கேன்..” என்றாள்.
அவர் சுலோச்சனாவுக்கு போன் செய்தார். விசயத்தை சொன்னார்.
மகன் விரும்புகிறேன் என்று சொன்னது இந்த பெண்ணைதானே என்று யோசித்த சுலோச்சனாவுக்கு இந்த பெண்ணை வீட்டுக்குள் அனுமதிக்க விருப்பம் இல்லை.
“உள்ளே விடாதிங்க..” என்று வாட்ச்மேனிடம் சொன்னாள்.
வாட்ச்மேன் அதை மானசாவிடம் சொல்ல, இவளுக்கு கண்ணீர் தளும்பியது.
வாட்ச் மேனிடம் இருந்த போனை பிடுங்கி தன் காதில் வைத்தாள்.
“மேடம் ப்ளீஸ். ஒரே ஒருமுறை குழந்தையை பார்க்க அனுமதி கொடுங்க.. உங்களை கெஞ்சி கேக்குறேன்..” என்று அழுகை குரலில் போனில் கெஞ்சினாள்.
அங்கே சுலோச்சனாவுக்கு மனம் தடுமாறியது. இப்போது இரக்கத்தால் இவளை உள்ளே விட்டுவிட்டால் பிறகு மகனையும் இவளையும் நாமே சேர்த்து வைத்தது போல் ஆகிவிடும்.‌ இந்த தவறை செய்யவே கூடாது என்ற முடிவெடுத்தவள் “என் பேத்தியை நீ ஏன் பார்க்கணும்?” என்று கடினமான குரலில் கேட்டாள்.
“குழந்தை கண்ணுக்குள்ளேயே இருக்கா மேடம். அது என் பிரீத்தியோட குழந்தை. என்னோட குழந்தையை போல. உங்களுக்கு ஓகேன்னா நான் குழந்தையை என் வீட்டுக்கு கொண்டு போய் வளர்த்துறேன். நாலு இல்லன்னா அஞ்சு வயசுல அவளை உங்ககிட்டயே திருப்பி அனுப்பிடுறேன். ப்ளீஸ் மேடம், நோ சொல்லாதிங்க. ப்ரீத்தி எனக்காக லெட்டர் கூட எழுதி வச்சிருக்கா. என் அம்மா குழந்தையை ரொம்ப நாளா வளர்ப்பாங்க..” என்றாள்.
சுலோச்சனாவுக்கு கோபம் வந்தது. “இந்த வீட்டை பார்த்தியா? இந்த மாளிகை வீட்டுல இத்தனை வேலைக்காரங்க இருக்கும்போது நீ என் பேத்தியை உன் வீட்டுக்கு கொண்டு போய் வளர்கிறேன்னு சொல்ற? உனக்கு எங்களை பார்த்தா முட்டாள்கள் மாதிரி தெரியுதா?” என்று கேட்டாள்.
“சாரி மேடம் நான் அந்த மீனிங்ல சொல்ல வரல. அது எங்க வீட்டுக்கும்தான் உரிமைப்பட்ட குழந்தை. அவளை என் கையால வளர்க்கணும்ன்னு மனசு சொல்லுது..” என்றாள் மானசா.
“முந்தாநாள் வரை ப்ரீத்தி உன்னை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல. நீ யாருன்னு கூட எங்களுக்கு தெரியாது. ஆனா இன்னைக்கு திடீர்ன்னு வந்து எங்க குழந்தையை உங்க வீட்டுக்கு உரிமையுள்ள குழந்தைன்னு சொல்ற. போனை தந்துட்டு போய் உன் வேலையை பாரு. மறுபடி என் வீட்டு பக்கம் வராத..” என்று சீற்றமாக சொல்லிவிட்டு போனை வைத்தாள் அந்த பெண்மணி.
போனை வைத்த கணம் குழந்தை அழ ஆரம்பித்தது.
வீல்சேரில் இருந்த சுலோச்சனா குழந்தை இருந்த ரூமுக்கு சென்றாள்.
பணிப்பெண் ஒருத்தி குழந்தைக்கு புட்டி பாலை கொடுத்தாள்‌. ஆனால் குழந்தை பாலை குடித்ததும் அந்தப் பாலை வெளியே கக்கியது.
“ஏதாவது பண்ணுங்க..” என்றாள் சுலோச்சனா.
“ஃபார்முலா மில்க் குழந்தைக்கு ஒத்துக்கலன்னு தோணுது மேடம்..” என்றாள் பணிப்பெண்.
“தாய்ப்பால் தர யாராவது இருந்தா அவங்களை வர சொல்லு..” சுலோச்சனா அவசரப்படுத்தினாள். தன் பேத்தி அழுவதை பார்க்க அவளுக்கு பிடிக்கவில்லை.
“சொல்லி இருக்கோம் மேடம். ஆனா இன்னும் ஆள் கிடைக்கல..” என்று அப்பாவியாக சொன்னாள் அந்த பெண்மணி.
தீனா வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தான். மனைவி இறந்து கிடந்த நேரத்தில் கூட கணினியும் கண்ணுமாக இருந்தவனுக்கு இப்போது வேலைக்கு போவதில் என்ன கஷ்டம் இருந்து விடப்போகிறது?
பிஏ நேராக அலுவலகம் வருகிறேன் என்று சொல்லி விட்டான். நேற்று இவன் மானசாவை மடக்க ஐடியா கேட்டதில் இருந்து பிஏ உள்ளத்தால் நான்கடி விலகி நின்றுதான் பேசிக் கொண்டிருக்கிறான்.
லேப்டாப் இருந்த பேக்கை எடுத்துக்கொண்டு வந்து காரில் அமர்ந்தான் தீனா. டிரைவரும் காரை எடுத்தார்.
கேட்டில் இருந்த வாட்ச்மேன் சிறு பதட்டத்தோடு கேட்டை திறந்து விட்டார். அவரின் பார்வை வெளியே எங்கோ சென்று வந்தது.
இவரிடம் இந்த பதட்டம் எதற்காக என்று தீனா யோசித்துக் கொண்டிருந்தபோது கார் கேட்டை கடந்தது.
கேட்டின் அருகில் காம்பௌண்ட் மீது சாய்ந்து நின்றிருந்தாள் மானசா. கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்தபடி தரை பார்த்து நின்று இருந்தாள்.
அவளை கண்டதும் “காரை நிறுத்துங்க..” என்று சொன்னான் தீனா.
தொடரும். யாராவது ஒருத்தராவது கமெண்ட் பண்ணுங்க பிரெண்ட்ஸ்.. சூப்பர் சொல்லாம இந்த கேரக்டர்ஸை திட்டியாவது ஒரு கமெண்ட் கொடுங்க. அடுத்தடுத்த எபிசோட் எழுத உங்க கமெண்ட் உதவியா இருக்கும். ப்ளீஸ் ஹெல்ப்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!