13. சிறையிடாதே கருடா

4.8
(9)

கருடா 13

பலத்த யோசனையோடு அமர்ந்திருந்தாள் ரிது சதிகா. அவளுக்கு முன்னால் மாணவர்கள் நிரப்பிக் கொடுத்த காகிதங்கள் நிறைந்திருந்தது. ஒவ்வொரு காகிதத்திலும், ஒவ்வொரு அனுபவம் கிடைத்தது. தன்னுடைய சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்துச் சரியான முறையில் வழி நடத்திக் கொண்டிருப்பதாக, இத்தனை நாள் நம்பிக் கொண்டிருந்தவள் மனக் கோட்டையை உடைத்தெரிந்தது மாணவர்களின் கையெழுத்து. அங்கு நடக்கும் தவறும், மூர்த்தி போன்று பலரிடம் பணம் வாங்கி இருப்பதும் அப்பட்டமாகத் தெரிய வந்தது.

காகிதத்தில் இருந்த உண்மையைப் படித்தவளுக்குப் பெரும் சலனம். இவள் அன்னை ஓர் ஆசிரியர். காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பொன்வண்ணன், மனைவியின் ஆசைக்காக இதை உருவாக்கினார். முதலில், இதை நிர்வகித்துக் கொண்டிருந்தது ராதா தான். அவ்வப்போது பொன்வண்ணன் வந்து செல்வார்.

எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்தது அந்த விபத்திற்கு முன்னர் வரை. இதைவிடக் குடும்பத் தொழில்கள் பல இருப்பதால் அதன் மீது அதிக நாட்டம் சென்றது. அதுவும் இல்லாமல், இதில் அவளுக்கு எவ்வித அனுபவமும் இல்லை. மகள் மீதுள்ள நம்பிக்கையில் பொன்வண்ணனும் தலையிடவில்லை. போதுமான ஆள்களை வேலைக்கு வைத்தவள், எப்போதாவது கணக்கு வழக்குகளைப் பார்க்க இங்கு வருவாள். மீதி அனைத்தும் ரவியிடமே ஒப்படைக்கப்பட்டது. அவை எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தாள். அவளைப் பார்த்தவாறு உள்ளே நுழைந்தான் கருடேந்திரன்.

தான் வந்ததைக் கூட அறியாது, எங்கோ வெறித்துக் கொண்டிருக்கும் மனைவியை ரசித்தவாறு ஜன்னல் இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு எதிர்ப்புறம், இயற்கையான காற்றை வீசிக்கொண்டிருந்தது கடல். அதை விட, ரசிக்க ஏதுவான கட்டியவள் மீது பார்வை மொய்த்தது.

“என்ன இதெல்லாம்?”

நினைவில் இருந்து திரும்பியவள், அவனை நோக்கி அனைத்துக் காகிதங்களையும் நகர்த்தி வைத்தாள். தன் அடங்காப்பிடாரி மனைவியின் செயலைப் புரிந்து கொண்டவன் எழுந்து சென்றான். அவன் அமர்வதற்காக, மெத்தையிலிருந்து நகர்ந்து அமர்ந்தாள். அவளின் செயலில் புருவத்தைச் சுருக்கியவன் மாணவர்கள் மனக்குறையைக் கேட்ட பின்,

“இந்த லட்சணத்துல இன்ஸ்டிடியூட் நடத்திட்டு இருக்கீங்க.” என்றான்.

“ஒவ்வொரு மாசமும், நான் அக்கவுண்ட்ஸ் பார்க்கப் போகும்போது எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கும். அதனால எதையும் பெருசா செக் பண்ணதில்லை.”

“உன் கண்ணுக்கு பர்ஃபெக்ட்டா இருக்கிற மாதிரி செஞ்சிருக்கான்.”

“ம்ம்!”

“அந்த ரவி இப்ப எங்க இருக்கான்?”

“என் ஆளுங்க அவனை வாட்ச் பண்ணிட்டுத் தான் இருக்காங்க.”

“ஓஹோ…”

“இப்பவாவது இதுல எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு நம்பறயா?” என்றவள் பார்வை அவன் மீது அழுத்தமாகப் பதிந்தது.

அந்தப் பார்வையை உணராது காகிதத்தின் மீது கவனம் செலுத்தி, “என்னை நம்ப வைக்கிறதுக்காக இப்படி செட்டப் பண்ணி இருந்தா?” என்றான்.

ஐந்து வினாடிகள் கடந்த பின்னும், அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் நேராகப் பார்க்காமல் பார்வையை மட்டும் அவள் புறம் திருப்பினான். தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன் முகம் நிமிர்த்தி விழியைத் திருப்ப, அலிபாபா குகை, ஆளை விழுங்கிக் கொள்ள வாய் திறந்திருப்பது போல் அவள் விழிகள் அகலமாகத் திறந்து இருந்தது.

அதில் கோபமும் இல்லை, கவலையும் இல்லை. இதுவரை, அந்தத் திமிர் பிடித்தவளிடம் பார்க்காத ஓர் உணர்வு. அவை என்னவென்று ஆராய்வதற்குக் கூட நேரம் கொடுக்காத அளவிற்கு அந்தப் பார்வை இழுத்தது. கையில் இருக்கும் காகிதங்கள் நழுவியதை உணராது, அந்த இழுப்பிற்குத் தன் உள்ளத்தை அசைத்துக் கொடுத்தான்.

இருவருக்கும் நடுவில் இருவர் அமர்ந்து கொள்ளும் அளவிற்கு இடைவெளி இருந்தாலும், இமைகள் மூச்சு முட்ட ஒட்டி நின்றது. உணர்வுகள் நடப்பைத் தள்ளி வைத்து மனதை நெருங்க வைத்தது. முல்லைப் பூ விழிகளில் மயக்கம் கூத்தாட, கருடன் கண்கள் மயக்கத்தைத் தாங்க முடியாது தள்ளாடியது.

அவன் விழிகள் உலா வந்து உள்ளத்தை நெருங்குவதை உணர்ந்தாள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என மூளை அறிவுறுத்தியதை உடனே ஏற்றுக் கொண்டவள்,

“இவரு பெரிய முண்டாசு ஜமீன்தாரு! இவரை நம்ப வச்சு இவரு சொத்துக்கு வாரிசாகப் பார்க்கிறோம்.” என அந்தப் பார்வைக்குத் தடை விதித்தாள்.

“ஏமாத்துக்காரி! உன்ன எந்த மாதிரிச் சூழ்நிலை வந்தாலும் நம்ப மாட்டேன். இப்பவும் என் உள் மனசு, இதுல உனக்குப் பெரிய பங்கு இருக்குன்னு தான் சொல்லுது. மாட்டிக்கக் கூடாதுன்னு ரவிய மொத்தமா உள்ள தள்ள பிளான் பண்ற.”

“நான் மாட்டுனாலும் யாராலயும் எதுவும் செய்ய முடியாது.”

“இந்தத் திமிருக்குத் தான்டி எவ்ளோ அசிங்கப்பட்டாலும், உன்னை அடக்கணும்னு முழு வெறியோட சுத்திக்கிட்டு இருக்கேன்.”

தளர்ந்த புன்னகையோடு அவன் தோள் மீது கை வைத்தவள், “அடக்கிடுவியா?” எனக் கண் சிமிட்டி வெறுப்பேற்ற, அந்தக் கையை வெடுக்கென்று தட்டி விட்டு எழுந்தான்.

நகர விடாமல் கைப்பிடித்து இழுத்து மெத்தையில் தள்ள, மல்லாக்கப் படுத்தவன் தன் கையைப் பற்றி இருந்த அவள் கையை வீசித் தள்ளினான். மீண்டும் அவள் கைப்பிடிக்க, முன்னர் வீசியதை விட அதிவேகமாக வீசினான். சின்னதாக வலி எடுத்தாலும் பெரிது படுத்தாமல் புன்னகைத்தவள்,

“புடிச்சா என்னவாம்?” கேட்டாள்.

“என் கையப் புடிக்கிற உரிமை உனக்கு இல்லை!”

“அப்படி என்ன உரிமை?”

“அதைக் கேட்கக் கூட ஒரு உரிமை வேணும்டி!”

“ஹா‌ஹா… சும்மா உருட்டிக்கிட்டு இருக்காத. இப்படி ஒரு பொண்ணு உன் கையப் புடிக்கிறாளேன்னு உள்ளுக்குள்ள குளுகுளுன்னு இருக்கும். வெளிய நல்லவன் மாதிரி நடிக்கிற.”

“உன் மனசுல பெரிய உலக அழகின்னு நினைப்பா?”

“நான் உலக அழகியா இல்லாம இருந்தாலும், உனக்கு ரொம்ப அதிகம்!”

“எனக்கு என்னடி?” என இரு கைகளையும் பின்னந்தலைக்குத் தலையணையாக மாற்றினான்.

“எனக்கு மட்டும் என்னடா? நான் கை புடிச்சா என்ன ஆகிடும்? எந்த ஜென்மத்துல என்ன புண்ணியம் பண்ணியோ, உன்னை மாதிரி ஒரு லோக்கலுக்கு இப்படி ஹைஃபையா பொண்ணு கிடைச்சிருக்கு.”

“வெக்கமே இல்லாம உன்னை நீயே பெருமை பேசிக்கிற பாரு, த்தூ…”

வெடுக்கென்று அவன் சட்டையைப் பிடித்தவள் தன் பக்கம் இழுக்க, சிறிதும் அசைக்க முடியவில்லை அந்த உடலை. இழுத்துப் பார்த்தவள், அவன் சிரிப்பில் சினமாகி, தாவி வயிற்றில் அமர, இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காதவன் கிறுகிறுத்துப் போனான்.

கொத்தாக அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவள், “என்னடா ரொம்பப் பேசுற. என்னை மாதிரிப் பொண்ணைக் கற்பனையில கூட எண்ணிப் பார்க்க முடியாது. இந்த ரூம்ல எத்தனை லட்சத்துக்குப் பொருள் இருக்கு தெரியுமா? இது மொத்தத்தையும் கணக்குப் போட்டால் கூட உன் வீட்டோட சொத்து மதிப்பு வராது. அப்படிப்பட்டவளை, சைட் அடிக்கிறன்னு ஒத்துக்கிட்டுப் போடா. பழைய சோறு தின்னுட்டு இருந்தவனுக்குப் பஞ்சாமிர்தத்தைக் கடவுள் கொடுத்திருக்கான் பாரு… ச்சைக்!” என்றவள் பேசும் வரை சாவகாசமாகப் படுத்திருந்தவன் அசரும் நேரத்தில் அவளைக் கீழே தள்ளினான்.

இந்த முறை அவள் தலை கிறுகிறுத்தது. நெற்றியில் கை வைத்து அந்த அதிர்வை அடக்கிக் கொண்டிருக்கும் மனைவியின் பக்கம் திரும்பியவன், “எனக்குப் பஞ்சாமிர்தம் பிடிக்காது.” என ஒரு கையைத் தலைக்குத் தாங்கிக் கொண்டான்.

பதில் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதைப் பார்வையால் ரிது வெளிக்காட்ட, சில நொடிகள் கழித்து இருவருக்கும் நடுவில் இருக்கும் நெருக்கம் புரிந்தது அவள் கணவனுக்கு. கருடேந்திரனின் நாசித் துவாரத்திலிருந்து வெளிவந்த காற்று, அவள் முகத்தில் பட்டு உணர்வுக்குள் மறைய, கருவிழிகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருப்பதை விழிகளால் படம் பிடித்தான். ஆடைகள், ஒரு இன்ச் இடைவெளியில் எப்போது வேண்டுமானாலும் உரசிக் கொள்ளலாம் என்ற நிலையில் இருக்க, முதல் முறையாக இருவரும் இருவரையும் ரசித்தார்கள்.

இன்று ரிது சதிகாவின் முகத்தில் எந்த ஒப்பனைகளும் இல்லை. பளிங்குக் கற்கள் போல் ஒப்பனைகள் இல்லாமல் பளபளத்துக் கொண்டிருந்தது. அவனுக்குள் ஆடிக்கொண்டிருக்கும் கோபம், எவ்வளவோ தடுத்துப் பார்த்து விட்டது. அதன் பேச்சைச் சிறிதும் காது கொடுத்துக் கேட்காத அவனின் மனம் நெருங்கிச் சென்று ரசித்தது.

கருடேந்திரனுக்கு நெருங்கிச் செல்வது புரிந்தது. தன்னை மோத வரும் அவன் முகத்தைத் தடுக்காமல் இருப்பது ரிதுவிற்குப் புரிந்தது. இருவரும் செய்து கொண்டிருப்பதும், செய்யாமல் இருப்பதும், புரிந்தாலும் இந்தத் தருணத்தை அதன் போக்கில் விட்டு விட்டார்கள். நன்றாக நெருங்கி வந்தவன் மூக்கை மெல்ல உரசி விழிகளுக்குள் நீந்த முயல, கரடு முரடான அவன் பார்வைக்குள் செல்லத் துடித்தவள், மூக்கு நுனி உரசியதில் உறைந்து விட்டாள்.

அடாவடியும், ஆக்ரோஷமும் ஒன்றாக இருப்பதை நம்ப முடியாது அந்த நான்கு சுவர்களும் பார்த்துக் கொண்டிருக்க, “அழகு தான்டி நீ…” எனச் சொன்னவன் புருவங்கள் சுருங்கியது, எப்படி இந்த வார்த்தையைச் சொன்னோம் என்று.

அதை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாது முகம் சுளிக்க, மனம் வெட்கப்படு என்று தூண்டியது. இருவரும் இரு வேறு சிந்தனைகளோடு அந்த நேரத்தைக் கடந்து கொண்டிருக்க, அவளையும் அறியாமல் இதழ்கள் அசைய ஆரம்பித்தது. அந்த அதரங்கள் மீது அலாதிப் பிரியம் கொண்டவன் பார்வை அங்குத் திரும்பியது. தன் விழிகளைக் களவாடத் துடிக்கும் அவன் பார்வை விலகிய பின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டவள், மீண்டும் நெருங்கவும் விலகவும் ஒரே நேரத்தில் முயற்சித்தாள்.

இரண்டிலும் தோல்வியைக் கண்டவள் இந்த நிலையை மாற்றுவதற்காக, “கையவே பிடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு, இப்படி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க. இந்த மாதிரி ஃபிகரைப் பக்கத்துல வச்சுக்கிட்டு எவன்தான் சும்மா இருப்பான்? கடைசியா உன் தோல்வியை ஒத்துக்கிட்ட.” என்றாள் மிதப்பாக.

விழிகளை அவள் கண்களுக்கு இடம் மாற்றியவன், மெல்லக் கண்ணுக்குத் தெரியாத காற்றாக ஆக்கிரமித்தான். நிலையை மாற்றுவதற்காகப் பேச்சுக் கொடுத்த அவள் அதரங்கள் சுவர் போல் அழுத்தமாக நின்று கொள்ள, மெல்ல முன்னேறினான் முகத்தோடு முகம் உரச. உரச வருவதை உணர்ந்து திரும்பிக் கொண்டாள். கீழ்த்தாடையில் கை வைத்து முகம் பார்க்க வைத்தவன், இருந்த இடைவெளி அனைத்தையும் குறைத்து முகத்தோடு முகம் உரசினான்.

விக்கித்த உணர்வை எந்த முறையில் விரட்டியடிப்பது என்ற சூட்சுமம் தெரியாமல், அவன் தாடி முடிகள் கொடுக்கும் கூச்சத்தைத் தாங்க முடியாது மேனி சிலிர்த்தது. அங்கங்கே நட்டு வைத்த நாற்றைப் போல் விரைப்பாக நிற்கும் சிறு முடிகளை உணர்ந்தவளுக்குச் சூடானது உடல். கட்டியவளின் நிலை உணர்ந்தும், மனசாட்சி இல்லாமல் இன்னும் ஆழமாக நெருங்கியவன் உதட்டைக் குவித்தான்.

அவளின் இரு உதட்டுக்கதவுகள் அவனின் இரு உதட்டுக்கதவோடு மூடிக்கொள்ள, ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான் இருந்தது. அந்த நொடியை அரை நொடியாகக் குறைத்தவன் நெருக்கத்தைத் தாங்க முடியாது விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அந்தச் செயலுக்குப் பின், குவித்த உதட்டை மெல்ல நகர்த்திக் காதுப்பக்கம் கொண்டு வந்தவன், வைரக் கற்களால் மின்னிக் கொண்டிருக்கும் காதணியில் மீசை உரசி,

“நான் ஒண்ணும் கே(Gay) கிடையாது.” என்றிட, வெடுக்கென்று விழி திறந்து முகம் திருப்பியவளின் அதரங்கள் அவன் அதரத்தோடு உரசியது.

முதல் முறையாகத் தன் உதட்டை உரசும் ஒரு பெண்ணின் செயலில், திடுக்கிட்டு முகம் பார்த்தவனை வேகமாகத் தள்ளி விட்டவள் புசுபுசுவென்று மூச்சை இழுத்து விட்டு முறைக்க, முதல் தழுவலை முழுவதும் அனுபவிக்கும் முன் அதிலிருந்து வெளிவந்தவன் சத்தமிட்டுச் சிரித்தான்.

தன்னை அவன் உரசியது போல், தானும் கட்டையான மீசைக்குள் கரடு முரடான அந்தத் தடித்த இதழை உரசியதை உணராது, “போடா…” எனத் தள்ளி விட்டாள்.

“ஹா ஹா…”

மெத்தையில் விழுந்தவன் மனைவியை வெறுப்பேற்ற இன்னும் சிரிப்பின் சத்தத்தை அதிகரிக்க, தலை முடிகளைக் கொத்தாகப் பிடித்து நான்கு ஐந்து முறை சுழல வைத்தவள், தலையணையை முகத்தில் வைத்து அழுத்தினாள்.

காண்டான மனைவியின் செய்கையில் போதுமென்றவரை குத்தாட்டம் போட்டவன், அந்தத் தலையணையை வீசி அடிக்க, அதைப் பற்றிக் கொண்டிருந்தவள் அவன் நெஞ்சின் மீது கை ஊன்றி விழுந்தாள். கோபத்தோடு எழ முயற்சிக்கும் ரிதுவைத் தடுத்துத் தன்னோடு சேர்த்தான்.

“சத்தியமா ஓரினச்சேர்க்கைல இன்ட்ரஸ்ட் இல்ல. எனக்கெல்லாம் அழகா அம்சமா இருக்க பொண்ணக் கல்யாணம் பண்ணி செம்மையா மஜா பண்ணத் தான் புடிக்கும். சோ, நீ வேற நல்ல, உன்னை மாதிரியான ஆம்பளையா பார்க்கிறது நல்லது.” என்றதும் தான் தாமதம், ஈவு இரக்கம் பார்க்காமல் அடி வெளுக்க ஆரம்பித்தாள்.

விளையாட்டிற்கு அடிப்பதாக நினைத்து வாங்கிக் கொண்டிருந்தவன், போகப் போக அதன் தீவிரம் அதிகமாவதை உணர்ந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராட, இதற்கு மேல் அவமானப்படுத்த எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்தவள், கோபம் மொத்தத்தையும் இன்றே தீர்த்துக் கொள்ளும் முடிவோடு ரவுண்டு கட்டினாள்.

இதற்கு மேல் விட்டால் ஆறு வருடத்திற்கு முன் இறந்து போன தன் பாட்டியைப் பார்க்கவே சென்றுவிட வேண்டும் என்பதை முழுதாக உணர்ந்து, “இங்கப் பாருடி… நீ கோபப்பட்டாலும் அதுதான் உண்மை. ஒரு ஆம்பள கூட ரொமான்ஸ் பண்ணவா, முப்பது வயசாகியும் கட்ட பிரம்மச்சாரியா இருக்கேன். வேணும்னா வெயிட் பண்ணு. ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி, ரெண்டு குழந்தையப் பெத்துட்டு வரேன்.” என்றவனின் மூக்குப் புடைத்தது.

“இன்னொரு வார்த்தை பேசினா மூக்கு எலும்பை உடைச்சிடுவேன். என்னைப் பார்க்க ஆம்பள மாதிரியா தெரியுது. எப்பப் பாரு, இதையே சொல்லிட்டு இருக்க.”

கண்களைக் கீழ் இறக்கி மூக்கைப் பார்த்தவன் அதிர்ந்தான். நான்கு கிராமில் இருக்க வேண்டியது, நானூறு கிலோவாக மாறி நிற்பதைக் கண்டு அரண்டவன்,

“அடிப்பாவி! என்னடி இப்படி இருக்கு?” கதறினான்.

“சாவுடா…” என மெத்தையில் இருந்த அனைத்துத் தலையணையும் எடுத்தவள் முகத்தில் வைத்து அழுத்த, வலி உயிர் போனது. புடைத்த மூக்கைத் தொடவே அஞ்சியவன், கட்டியவள் செய்த செயலில் ஆடிப் போனான். ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை கருடேந்திரனால். குத்துச் சண்டையில் தூக்கி அடிப்பது போல் ஒரே அசைவில் அவளை விழ வைத்தான். மூச்சு வாங்க எழுந்து அமர்ந்தவள்,

“இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இனி என்னை ஆம்பளைன்னு சொன்ன, செத்துட்டன்னு டெத் சர்டிபிகேட் வாங்க வேண்டியதா இருக்கும்.” என்றுவிட்டு நகரும் நேரம் இரு கால்களுக்கு நடுவில் கால் நுழைக்க, தடுக்கித் தரையில் விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் நெற்றி தரையோடு தரையாக, பன் மீது இருக்கும் ஜாமாக ஒட்டிக்கொள்ள, பின்பக்க இடுப்புச் சுளுக்கிக் கொண்டது. வாய் விட்டுக் கதறியவள் எழ முடியாமல் தவித்துப் போனாள். தலையை உயர்த்தி அவள் நிலையைப் பார்த்தவன் பழி வாங்கிய உணர்வோடு,

“கடவுள்னு ஒருத்தன் இருக்கான்.” விட்டத்தை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டான்.

“தூக்குடா!”

“இந்த நிலைமையில கூட ஆணவத்தப் பாரு.” என அவள் முதுகின் மீது கால் வைக்க,

“அம்மாமாமா…” எனப் பிதற்றினாள்.

“இடுப்பு போச்சா?”

“வாய மூடிட்டுத் தூக்கி விடுடா.”

“மரியாதையா, தூக்கி விடுங்க கருடேந்திரன் சார்னு சொல்லு, தூக்கி விடுறேன்.”

“அடேய்! எந்திருச்சேன், அவ்ளோதான்.” என்றதற்குப் பழி வாங்கும் விதமாக அவள் முதுகில் கால் வைத்து லேசாக அழுத்த, வலியில் தரையைப் போட்டுக் குத்த ஆரம்பித்தாள்.

“இப்பச் சொல்லு பார்க்கலாம்!”

“தூக்கி விடுடா கருடேந்திரா சார்.”

“விடுங்க!”

பல்லைக் கடித்துக் கொண்டு, “தூக்கி விடுங்க கருடேந்திரன் சார்.” என்றிட, “அடடடடா! இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.” கண்களை மூடிக்கொண்டு அந்த அனுபவத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

“அப்புறம் பீல் பண்ணலாம் சார். முதல்ல தூக்கி விடுங்க.”

“அய்யய்யோ! பேசுறது யாரு, ரிது சதிகாவா? இவ்ளோ பெரிய வீட்டோட ஓனர் அம்மாவா? எனக்கு வேலை போட்டுக் கொடுத்த முதலாளியா? கட்டுன தாலியைக் கம்பீரமாய் தூக்கி அடிச்ச திமிரு பிடிச்சவளா? கொஞ்சம் கூட மரியாதை கொடுத்துப் பேசத் தெரியாத அடங்காப்பிடாரியா? மனசே இல்லாத ராட்சசியா? மூணு வேளையும் பணத்தை மட்டுமே திங்கிற பணப் பிசாசா?” என அடுக்கிக் கொண்டு செல்ல,

“ஒரு அளவுக்குத் தான் சார் பொறுப்பேன். எந்திரிக்க முடியலனாலும் பரவால்லன்னு கட்டிலுக்குக் கீழ இருக்க கன்ன எடுத்து சூட் பண்ணிடுவேன்.” என்றாள்.

“கன்னா!” கருடேந்திரன் வாய் பிளக்க, “வித் லைசன்ஸ்!” என்றாள்.

“என்னடி சொல்ற? நீ என்ன சொல்ற…”

“டைம் இல்ல சார். தூக்கி விடுறீங்களா, இல்ல கன் எடுக்கவா?”

“இருமா தாயே. நான் இன்னும் என் வாழ்க்கையில பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. என்னைக் கட்டிக்கப் போறவ எனக்காகக் காத்துட்டு இருப்பா. என் பிள்ளைங்க ரெண்டும், அப்பா எப்போ அம்மா கூடச் சேருவாரு நம்ம பொறக்கலாம்னு கனவு கண்டுட்டு இருக்குங்க.” எனப் புலம்பிக் கொண்டே அவளைத் தூக்கி நிறுத்தியவன்,

“நிஜமாகவே கன் வச்சிருக்கியா?” கேட்டான்.

“சந்தேகமா இருந்தா கீழ குனிஞ்சு பாரு.” என்றதும் கருடேந்திரன் கட்டிலுக்கு அடியில் குனிய, அவன் மீது ஏறி மெத்தையில் அமர்ந்தாள். அமர்வதற்கு முன் காலால் எட்டி உதைக்க, அவளைப்போல் சேதாரம் இல்லை என்றாலும் விழுந்த வேகத்தில் மூக்கு மீண்டும் இடித்துக் கொண்டது.

“ஆஆஹாஆஆ!”

“நக்கலா பண்ற நக்கல்! என் இடுப்பு சரியாகட்டும், உன் இடுப்பு எலும்பை உடைக்கிறேன்.”

வலியைப் பொறுத்துக் கொண்டு எழுந்தவன், “அதுக்கு முதல்ல நீ எந்திரிக்கணும்.” என்று அவள் இடுப்பைப் பிடிக்க, வலியில் சுருண்டு படுத்து விட்டாள்.

இருவரும் சரிக்குச் சமமாகத் தங்கள் உடல்களைக் காயப்படுத்திப் பழி தீர்த்துக் கொண்டிருக்க, இதை முடிவுக்குக் கொண்டு வந்தார் பொன்வண்ணன். மகள் கதவைத் தட்டியவர் சங்கடத்தோடு உள்ளே நுழைய, “என்னப்பா இந்நேரத்துல?” விசாரித்தாள்.

“ரவியோட கால் ஹிஸ்டரி டீடெயில்ஸ் கேட்டிருந்தல்ல. அது கிடைச்சிடுச்சு. நாளைக்குக் காலைல மோகன்னு ஒருத்தர் வந்து உன்கிட்டக் கொடுப்பாரு.”

“சரிப்பா.”

“மாப்பிளையோட அப்பா போன் பண்ணிருந்தாரு.”

ரிது கருடன் முகத்தை நோக்க, எதற்கென்று தெரிந்ததால் அவன் முகம் இறுகியது. மருமகனின் முக மாற்றத்தைக் கவனித்தவர், “நாளைக்குக் காலைல வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க.” என்றார்.

“அவங்க வந்தா எனக்கு என்ன?”

“ஏய்!”

“நானும் என் அப்பாவும் பேசிட்டு இருக்கும்போது குறுக்க வராத.”

கருடேந்திரன் அங்கிருந்து வேகமாகக் கிளம்பி விட, “ஏம்மா இப்படிப் பண்ற?” என்ற தந்தையின் பேச்சைக் காதில் வாங்கவில்லை.

சொல் பேச்சைக் கேட்காத மகளை நினைத்துப் பெருமூச்சு விட்டவர், “அம்மாவப் பார்த்துட்டு இருந்த வாணிப் பொண்ணு ரெண்டு நாள் லீவு கேட்டு இருக்கா. அவளுக்குப் பதிலா வேற ஒரு பொண்ணு வரும்.” என்றார்.

“எதுக்கு அவளுக்கு ரெண்டு நாள் லீவு? புதுசா வர்ற பொண்ணுக்கு அம்மா பத்தி எதுவும் தெரியாது. எப்படி நம்பி விட முடியும்? நினைச்ச நேரத்துக்கு லீவு கேட்கவா லட்ச ரூபா சம்பளம் கொடுக்கிறேன்.”

“அவங்களுக்கும் குடும்பம் இருக்கும்ல.”

“இருந்தா வீட்டோட உட்கார்ந்து பார்த்துக்க வேண்டியது தான. எங்கயாவது இந்த மாதிரிப் பார்த்துக்க மாசம் ரெண்டு லட்சம் குடுப்பாங்களா? வந்தா வந்த வேலைய மட்டும் பார்க்கணும். அடுத்த தடவை அந்தப் பொண்ணு லீவ் கேட்டா என்கிட்ட அனுப்பி விடுங்க.”

“சரிமா” என அவர் அங்கிருந்து வெளியேற, அன்னையின் சிந்தனையில் நேரத்தைக் கடந்தாள் ரிது.

இருட்டான உலகம் போல் செயலிழந்து போன தன்மானத்தை மீட்டெடுக்க வழி தெரியாமல், நடையாக நடந்து கொண்டிருந்தவன் கால் வலி எடுத்ததால் அறைக்கு வந்தான். அவன் வரும் வரை தூங்காமல் இருந்தவள், “துயரத்த ஆத்தியாச்சா…” வாயைக் கிளற முயன்றாள்.

சண்டையிடும் தெம்பு இல்லாததால் அமைதியாகப் படுத்துக் கொள்ள, “சாப்பிட்டியா?” கேட்டாள்.

அவனிடம் இருந்து பதில் வராது போக, “நான் இன்னும் சாப்பிடல.” மீண்டும் அவளாகப் பேசினாள்.

“நீ சாப்பிட்டா எனக்கென்ன, சாப்பிடலனா எனக்கென்ன?”

“ரொம்பப் பசிக்குது.”

அவள் பக்கம் திரும்பாது படுத்திருந்தவன் மீது தலையணையைத் தூக்கி அடித்தவள், “வா சாப்பிடலாம்…” என்றழைக்க, “எதுக்கு? மானங்கெட்டுச் சாப்பிடுறான்னு நீ பேசறதைக் கேட்கவா?” என்றான்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, என்ன தோன்றியதோ திரும்பி அவள் முகம் பார்த்தான். பேசாமல் இருந்தாளே தவிர அவனைப் பார்க்காமல் இல்லை. அந்தப் பார்வையில் புது உணர்வைப் பெற்றவன்,

“பசிச்சா போய் சாப்பிடு!” என்றான்.‌

“உனக்குப் பசிக்கலையா?”

“என்ன, திடீர்னு என் மேல் அக்கறை.”

“தெரியல!”

“இதுக்குப் பின்னாடி என்ன பிளான் போட்டு வச்சிருக்கன்னு என் மூளை யோசிக்குது.” என்றதும் ரிது சதிகா அமைதியாகப் படுத்துக் கொள்ள, சில நொடிகள் அவளைப் பார்த்துவிட்டுப் படுத்துக் கொண்டான் கருடன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!