கனவே சாபமா..!
கனவு -01
அந்தி சாயும் வேலை.
அந்த இரவு நேரத்தில் சுற்றி எங்கும் பசுமையாக காட்சியளித்தது.
மிகப்பெரிய அரண்மனை அது.
அந்த அரண்மனையில் தனக்கும் தன் மன்னவனுக்குமான அறையில் உள்ள பால்கனியில் நின்று ஜன்னலின் ஊடாக அங்கு குளத்தில் வீற்றிருக்கும் வெள்ளை நிற தாமரை மலர்களை கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவ்வப்பொழுது அவளுடைய விழிகளோ தன்னுடைய மன்னவனை காண ஏங்கியது போல் அறையின் வாயிலை அவப்பொழுது தழுவின.
அந்த இருட்டில் நிலவின் வெளிச்சத்தில் இரண்டு வெள்ளி நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது போல மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து கொண்டிருந்தன.
அதை பார்த்தவளோ தன் மன்னவன் தன்னுடன் இருக்கும் நேரங்களில் தாங்களும் இவ்வாறு தானே இருப்போம் என்று நினைத்தவளுக்கோ அப்பொழுதே தன்னுடைய மன்னவனை காணும் ஆர்வம் அதிகரித்தது.
“எங்கு சென்றீர்கள் எவ்வளவு நேரம் ஆக உங்களைக் காண ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்.
எப்பொழுது வருவீர்கள் சீக்கிரம் வாருங்கள் வெகு நேரம் என்னை காக்க வைக்காமல்.
தங்களுடைய அரவணைப்பில் அடைக்கலமாக ஆவலாக உள்ளேன்.
காலம் தாழ்த்தாமல் எமது அருகில் வாருங்கள்”
என்று தன்னுடைய மன்னவனை நினைத்துக் கொண்டிருக்க,
அவளுடைய மன்னவனோ அறைக்குள் வந்தவன் அவள் பால்கனியில் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு ரசித்தவனின் இதழ்களிலோ புன்னகை அரும்பின.
அவளை அழைக்க துடித்த தன்னுடைய இதழ்களை கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன் மெதுவாக அவள் அருகில் சென்றான்.
தாமரை மலரை பார்த்துக் கொண்டிருந்தவளோ தன்னுடைய மன்னவனின் மேல் வரும் தனித்துவமான வாசனை திரவியம் அவளுடைய நாசியை துளைத்தது.
மெல்லிய இதழ்களை விரித்து லேசாக புன்னகை பூத்தவள் மன்னவனை காணும் பொருட்டு திரும்ப,
அவனோ அவளை இடிப்பது போல் வந்து நிற்க,
அவனுடைய நெஞ்சில் மோதினாள் பாவையவள்.
“என்ன அமையா என்னை எதிர்நோக்கி காத்திருக்காமல் தங்களுடைய விழிகள் அங்கு தண்ணீரில் மிதிக்கும் தாமரையின் மேல் விழுந்து கொண்டிருக்கிறது.
தமக்கு என்னை விட அந்த தாமரை மலர்கள் மீதுதான் காதல் பெருகிவிட்டதா”
என்று கம்பீரமாக அதேசமயம் அவள் மட்டும் உணரும் காதலையும் தேக்கி வைத்து கேட்டான் அவன்.
“என்ன நீங்கள் என்னை பார்த்து இவ்வாறு கூறி விட்டீர்கள்.
என்னுடைய விழிகள் எதைப் பார்த்தாலும் அதில் தங்களுடைய நினைவுகள் மாத்திரமே என்னை சூழ்ந்து உள்ளது.
அந்த மலர்களாகட்டும் அல்லது அந்த நிலவாகட்டும் இல்லை நான் சுவாசிக்கும் இந்த காற்றாகட்டும் அனைத்திலும் தாங்களே என்னுள் ஆட்சி புரிகிறீர்கள்.
தாங்கள் என்னை விட்டு பிரிந்து செல்லும் பொழுதெல்லாம் தங்களுடைய நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை பார்த்தா இவ்வாறு கேட்கிறீர்கள்.
இந்த உடலில் இருக்கும் உயிர் பிரிந்தாலும் கூட தங்களையே சுற்றிக்கொண்டு தான் இருக்கும் எமது ஆத்மா” என்றாள் அவள்.
அதில் கர்வம் மீதூர தன்னுடைய அடர்ந்து வளர்ந்திருந்த மீசையை முறுக்கி விட்டவனோ அவளை தோளோடு பிடித்து தன் மார்போடு சாய்த்து கொண்டவன்,
அவளை அந்த மிகப்பெரிய அறையில் இருக்கும் படுக்கைக்கு அழைத்துச் சென்றவன் தான் முதலில் சாய்ந்து அமர்ந்து தன்னுடைய மடியில் அவளை அமர்த்தி கதைகள் பேச ஆரம்பித்தான்.
அவர்கள் இருவருடைய முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் இணையும் சமயம் அவர்களுடைய அறை கதவு தட்டும் ஓசை கேட்டது.
அதில் அவள் மேல் இருந்து எழுந்தவனோ,
“தாங்கள் இருங்கள் நான் யார் என்று பார்த்து விட்டு வருகிறேன்”
என்று கூறியவன் அவர்கள் அறையில் உள்ள அந்த மிகப்பெரிய கதவைத் திறந்தவன் வெளியே நின்ற மங்கையை கண்டு விழி விரித்தான்.
அந்த மங்கையோ நல்ல உயரம்.
சிவந்த மேனி உடையவள்.
அவளுடைய இடையோ நன்றாக வளைந்து இருந்தது.
சிகப்பு நிற மேல் கச்சை அணிந்து அதற்கு ஏற்றார் போல தங்க நிறத்தில் கீழாடை அணிந்திருந்தாள்.
அவளுடைய மேனி முழுவதும் தங்கத்தில் ஜொலிப்பது போல அணிகலன்கள் அணிந்திருந்தாள்.
கண்களில் எதிரில் வரும் ஆண்களை கவரும் வகையில் மை தீட்டியிருந்தாள்.
அவளுடைய சிவந்த இதழ்களில் ரத்த நிறத்தில் வண்ணமும் தீட்டியிருந்தாள்.
கூந்தலை நன்றாக முடிந்து மல்லிகை சரங்களால் அதை அலங்கரித்து தன்னுடைய முன்பக்கம் மார்பினில் தழுவி இடையினில் உரசி தொடையினில் முடியுமாறு கூந்தலை விட்டிருந்தாள்.
சர்வ அலங்காரத்தில் தங்களுடைய அறை வாசலில் நிற்கும் அந்த மங்கையை கண்ட மன்னவனோ நிமிடத்தில் சொக்கி நிற்க.
தான் வந்த நோக்கம் நன்றாகவே நிறைவேறிய மகிழ்ச்சியில் இதழ் கடையோரம் பூத்த புன்னகையை அவனுக்கு தெரியாமல் மறைத்தவள்,
“அரசே எனது பெயர் சேனபதி சாயரா. நான் இங்கு ஒப்பனை கலைஞியாக பணி செய்கிறேன்.
தாங்கள் அனுமதி தந்தால் உள்ளே வந்து அரசியாரை அலங்கரிக்கலாமா.
இன்று அரசியாரை அலங்கரிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. தாங்கள் அனுமதி தந்தால் என்னுடைய பாக்கியத்தை நிறைவேற்றிக் கொள்வேன்”
என்றவள் தாழ்மையாக கூறினாலும் அவளுடைய வழிகள் எதிரே நிற்கும் மன்னனை முழுவதுமாக தழுவிச் சென்றன.
அவனோ,
“ஆகட்டும் சேனபதி சாயரா உள்ளே வாருங்கள்”
என்றவன் அவளுக்கு வழி விட்டு சற்று விலகிக் கொள்ள, தன்னுடைய இடையை வளைத்து நெளிந்து நடந்து சென்றாள் அந்த மங்கை அமையாவை நோக்கி.
“அரசியாரே தாங்கள் எமக்கு ஒத்துழைத்தால் தங்களை அலங்கரித்து விடுவேன் எமக்கு அருள்புரிவீரா”
என்று மிகுந்த மரியாதையாக கேட்டாள் அவள்.
அதற்கு புன்னகையை பதிலளித்த அமையாவோ,
“தொடங்குங்கள் தங்களுடைய பணியை சேனபதி சாயரா”
சேனபதி சாயரா அமையாதேவிக்கு அலங்காரம் செய்து கொண்டிருக்க,
மன்னனின் பார்வையோ அமையாவை விட்டு சேனபதி சாயரா அவள் மேலே முழுவதும் விழுந்தது.
சாயரா சொன்னது போலவே குறிப்பிட்ட நேரத்திற்குள் அமையாவை முழுவதும் அலங்கரித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப போக, அவளை அங்கு நிற்க சொல்லிவிட்டு அமையாவிடம் வந்த மன்னனோ,
“அமையா நான் உன்னிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்”
என்று கோரிக்கை விடுக்க அமையாவோ புன்னகை முகமாகவே,
“என்ன இது தாங்கள் என்னிடம் இப்படி தயங்கி நிற்கலாமா தங்களுக்கு என்ன வேண்டுமோ என்னிடம் தயங்காமல் கேளுங்கள். தங்களுக்காகவே படைக்கப்பட்டவள் இந்த அமையா என்னிடம் தாங்கள் வேண்டி நிற்பதா”
என்று மொழிந்தாள்.
உடனே மன்னனோ,
“இன்றைக்கு இந்த சாயராவுடன் நான் இருக்க விரும்புகிறேன் தங்களுக்கு சம்மதமா”
என்று மன்னன் கேட்க.
அமையாவோ அதற்கு சற்றும் முகம் சுளிக்காமல் சாயராவை நோக்கி தன் பார்வையை திருப்பினாள்.
அவளோ தலையை குனிந்து நின்று கொண்டிருக்க பின்பு தன்னுடைய பார்வையை தன் கணவனின் மீது திருப்பியவள்,
“அவ்வளவுதானா இதற்காகவா தாங்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தீர்கள். தாங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை செய்ய தங்களுக்கு முழு அதிகாரமும் இருக்கிறது.
தங்கள் விருப்பம் போல் செயல்படுங்கள்”
என்றவள் சற்று ஒதுங்கி நிற்க.
மன்னனோ சாயரா அருகில் வந்தவன்,
“சேனபதி சாயரா என்னுடன் வாருங்கள்”
என்று அவளை அழைத்து வந்து அமைய உடன் ஒன்றாக இருந்த அந்த படுக்கையில் அவளுடன் ஒன்றிணைய தொடங்கினான் அதுவும் அமையாவின் கண் முன்னாலேயே.
சிறிது நேரம் அவர்களுடைய லீலைகளை செவிமடுத்து நின்று கொண்டிருந்த அமையாவிற்கோ அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை அவர்கள் இருவருடைய சத்தத்தினால்.
மெதுவாக தன்னுடைய பார்வையை அவர்கள் பக்கம் திருப்பிய அமையாவிற்கோ நெஞ்சில் முள் தைத்தது போல ஒரு வழி உருவாகியது.
தன்னுடைய கணவன் தன்னுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் அவளுடைய நினைவில் வந்து போனது.
இப்பொழுது அந்த இடத்தில் இன்னொரு பெண் அவனுடன் சல்லாபத்தில் ஒன்றிணைந்து கொண்டிருக்க அவளால் அதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
அதற்கு மேல் பொறுக்காதவள் படுக்கையின் அருகில் சென்று,
“அரசே போதும் நிறுத்துங்கள் இதற்கு மேல் இதை என்னால் கண் கொண்டு காண இயலவில்லை”
என்றாள் அவள்.
மன்னனோ முழுவதுமாக சாயரா வசத்தில் சிக்குண்டவன் போல மனைவியின் கூற்றை உதாசீனப்படுத்துவது போல,
“தங்களால் இங்கு நிற்க முடியவில்லை என்றால் தாங்கள் வெளியே செல்லலாம் அமையா”
என்று உரைக்க அமையாவுக்கோ ஆத்திரம் வந்தது.
“தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் அரசே நான் தமது பத்தினியாவேன். தன்னையா தாங்கள் வெளியே செல்ல சொல்கிறீர்கள். இல்லை முடியாது அந்த பெண்ணுடன் இருந்தது போதும் தாங்கள் இப்பொழுதே அவளை வெளியே அனுப்ப வேண்டும்”
என்று உத்தரவிடுவது போல கூற அதைக் கேட்ட மன்னனுக்கோ கோபம் வந்தது.
அதே சமயம் மன்னனுக்கு அடியில் இருந்த சாயரா கொஞ்சும் குரலில்,
“அரசே தங்களுடைய வாளால் அவளுடைய சிரசை கொய்து விடுங்கள் அதுவும் இப்பொழுதே”
என்றாள்.
அவளுடைய கூற்றை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிய மன்னனோ அவளிடம் இருந்து பிரிந்தவன் தன்னுடைய வாளால் அமையாதேவியின் சிரசை நொடியில் வெட்டினான்.
“ஆஆஆஆ”
என்ற அலறலோடு படுக்கையில் இருந்து எழுந்த அமர்ந்தாள் அவள்.
தன்னுடைய இரு கைகளாலும் தன்னுடைய கழுத்தை தொட்டுப் பார்த்தவள் தான் உயிரோடு தான் இருக்கிறோம் என்று நினைத்து பெருமூச்சு விட்டாள்.
அப்பொழுது அவள் இருந்த அறை கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அவளுடைய கணவனோ,
“ஹேய் என்ன துவாரகா ஏன் இப்படி காலங்காத்தாலேயே பேய பார்த்த மாதிரி கத்துற நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா.
இங்க பாரு உனக்காக காபி எடுத்து வந்துகிட்டு இருந்தேன் நீ கத்தின கத்துல அப்படியே என் மேல ஊத்திட்டேன்”
என்றவாறு வந்தான் அவளுடைய கணவன் கௌதம்.