மாப்பிள்ளைக்கு சற்று வயது அதிகமாக இருந்தது. முகத்தில் வயது சுமந்த சுருக்கங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவன் பக்கம் பார்த்தவுடனேயே அங்கிருந்த அனைவரின் மனசும் கனக்கத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல், அன்னத்தை இரண்டாவது தாரமாகக் கேட்க வந்திருப்பது தெரியவந்ததும், கிருத்திஷின் உள்ளம் கொதித்துக் கொண்டே இருந்தது.
அவன் நேராகவே வேலுச்சாமி அருகே சென்று, குரலில் பதட்டம் கலந்த கோபத்தோடு,
“மாமா, எதற்காக இப்படி அன்னத்துக்கு ஒரு தரமற்ற கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் பார்க்கிறீங்க? இது உங்களுக்கு சரியா தோணுது?” என்று கேட்டான்.
வேலுச்சாமி அவன் முகத்தைக் கூட நேராகப் பார்க்க முடியாமல், தலை குனிந்து,“வேற என்ன பண்றது, மாப்ளே? என் பொண்ணு சாதாரணமா கல்யாணம் ஆகுமா? இவங்க மட்டும்தான் ஒத்துக்கிட்டாங்க. எனக்கும் மனசுக்குள் வலி தான் இருக்கு. ஆனா, ஒரு அப்பாவா என் பொண்ணை ஒருத்தர்ட்ட கொடுக்கணும் என்ற கடமை இருக்கு இல்லையா? அதனால தான் சம்மதிச்சேன்…” என்றார்.
கிருத்திஷின் குரல் அதற்குப் பின் இன்னும் சற்று அதிர்ந்தது.
“அதுக்காக கிளியை கூண்டில போட்டு அடைச்ச மாதிரி இருக்குதே மாமா. நீங்க பண்றது சரியா? நீங்க யோசிச்சுப் பாருங்க. இது அன்னத்துக்கு தெரியுமா?”
வேலுச்சாமி திணறியபடி, “அவளுக்கு இந்த விஷயமா ஒன்றும் சொல்லல. ‘நான் கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னேன்.” அவளும், “அப்பா நீங்க சொல்றதுக்கு நான் ஒத்துக்கிறேன்னு சொல்லிட்டா. என் பொண்ணு என் பேச்சைத் தட்டவே மாட்டா,” என்றார்.
அந்த வார்த்தைகள் கேட்டு, கிருத்திஷின் உள்ளம் இன்னும் கனத்தது. அவன் பேசாமல் அங்கேயே அமைதியாக நின்றுவிட்டான்.
சில நிமிடங்களில் மாப்பிள்ளை வீட்டார், “அன்னத்தை அழைத்து வாங்க” என்று சொன்னார்கள். பார்வதி உள்ளே போய் அவளை அழைத்துக் கொண்டு வந்தார். அன்னத்தின் கைகளில் காபி கோப்பைகள் அடங்கிய தட்டு இருந்தது. அவள் கண்கள் இன்னும் குழந்தை மாதிரி தூய்மையோடு இருந்தன.
வெளியே வந்தவுடன், பார்வதி சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு,
“அண்ணே, யாரு இங்கே மாப்பிள்ளை? யாரையும் மாப்பிள்ளை சாயல்ல தெரியலையே?” என்று கேட்டாள்.
அங்கிருந்தவர்களில் ஒருவரைச் சுட்டிக் காட்டி வேலுச்சாமி, “இதோ இவருதான் மாப்பிள்ளை,” என்றார்.
பார்வதி திடுக்கிட்டு, “என்னண்ணே இது? இவங்க இவ்வளவு வயசானவர்களா? நம்ம அன்னம் இன்னும் குழந்தைத்தனம் மாறாம இருக்கிறாள். இப்படிப் பண்ணலாமா?” என்றாள்.
அந்த நேரத்தில் அன்னம் மாப்பிள்ளையைப் பார்த்ததும் அவளுக்கே எல்லாம் புரிந்து விட்டது. இவள் ஒரு இரண்டாவது தாரமாகத்தான் கேட்கப்பட்டிருக்கிறாள் என்ற உணர்வு அவளது உள்ளத்தை எரித்தது. அவள் தந்தையைப் பார்த்தாள். வேலுச்சாமியின் கண்களில் திணறலும், வெட்கமும், உதவியற்ற தன்மையும் தெளிவாகத் தெரிந்தன.
“அப்பா சொல்ற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்று மெளனத்தை உடைத்துக் கொண்டாள் அன்னம். குரல் நடுங்கியது.
அவள் சொல்லி முடிப்பதற்குள், அவளது கைகள் குலுங்கத் தொடங்கின. மூச்சு சிரமமாக மாறியது. காபி கோப்பைகள் கையில் இருந்து வழுக்கி தரையில் சிதறியது. அடுத்த நொடியில், அன்னம் மயங்கி விழுந்துவிட்டாள்.
“அன்னம்” என்று பார்வதி அலறினார்.
உடனே கிருத்திஷ் பாய்ந்து சென்று அவளைத் தூக்கிக் கொண்டான். அவன் கைகளில் அவள் எடை சுமையாக இருந்தாலும், மனசுக்கு இன்னொரு விதமான அதிர்வைத் தந்தது. அவன் முகத்தில் பதட்டமும், உள்ளத்தில் ஒரு அச்சமும் இருந்தது. ‘இவளுக்கேதாவது ஆகிவிட்டதா? நான் இவளை இழந்துடுவேனா?’
அவளை படுக்க வைக்க, அருகே ஒரு இரும்புக் கம்பி இருக்க அதை எடுத்துக் கொண்டு அவளது கையில் பிடிக்க வைத்தான். சற்று நேரத்தில் அவளது விரல்கள் தன்னிச்சையாக கிருத்திஷின் கையைப் பற்றிக்கொண்டன.
அந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
“யாரு இந்த பையன்? ஒரு வயசுப் பொண்ணு கையைப் பிடிச்சுக்கிட்டு இருக்கானே. ஊர்ல இவகூட ஒரு பையன் தான் சுத்திக்கிட்டு இருக்கிறான்னு கேள்விப்பட்டோம். அது இவரா?” என்று மாப்பிள்ளை வீட்டார் வம்பு பேச ஆரம்பித்தார்கள்.
அதற்கு முன்பே கோபமோடு இருந்த பார்வதி கடுமையுடன்,
“இங்க பாருங்க! வார்த்தையை பார்த்து பேசுங்க. இவன் என் பையன். ஆமா அன்னத்தோட கையைப் பிடிச்சிருக்கிறான், அதில் தவறென்ன இருக்கு? அவ உயிருக்கு போராடுற நேரம் காப்பாத்துறது பாவமா?” என்று சத்தமாகச் சொல்லிவிட்டார்.
அந்த வார்த்தை சூழலை இன்னும் தீவிரப்படுத்தியது. மாப்பிள்ளை வீட்டார்,
“நாங்க ஒழுக்கமான பொண்ணைத்தான் பார்க்க வந்தோம். இப்படி சந்தேகப்படுற மாதிரி நடந்துக்கிற இந்த பொண்ணு எங்களுக்கு வேண்டாம். இந்தச் சம்மந்தம் வேண்டாம். வாங்க போகலாம்.” என்று சொன்னார்கள்.
அவர்கள் எழுந்து செல்ல முற்பட, வேலுச்சாமியும் மனக்குமுறலோடு எழுந்து,
“இங்க பாருங்க, என் பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க வேண்டி வந்தீங்க, அதற்காகத்தான் நான் சம்மதிச்சேன். ஆனா இப்போ அவளோட ஒழுக்கத்தை சந்தேகிக்கிறீங்க. இதுக்குப் பிறகு உங்களோட எந்தச் சம்மந்தமும் எங்களுக்கு தேவையில்லை. போங்க வெளியே.” என்று கோபத்துடன் கத்தினார்.
அவர்கள் அனைவரும் விரக்தியோடு அங்கிருந்து வெளியேறினர்.
சில நிமிடங்கள் கழித்து, அன்னத்தின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினர். அவள் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்ததும், அருகில் தன் அப்பா கஷ்டமாக நின்றிருப்பதைப் பார்த்தாள். அந்தக் காட்சியை அவளால் பொறுக்க முடியவில்லை.
அந்த நேரம் திடீரென்று வேலுச்சாமி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்த நாற்காலியில் விழுந்தார்.
“அண்ணே!” என்று பார்வதி அலறி, அவரைத் தாங்கிக் கொண்டாள்.
உடனே கிருத்திஷ் விரைந்து சென்று,
“மாமா, என்னாச்சு?” என்று கேட்டான்.
“ஒண்ணும் இல்ல மாப்ளே… லேசா நெஞ்சு வலி. மாத்திரை போட்டா சரியாகிடும்.” என்று வேலுச்சாமி கூறினார்.
ஆனால் அவர் குரலில் இருந்த தயக்கம் கிருத்திஷின் மனதைப் புண்படுத்தியது.
“மாமா, நிஜமாக சொல்றீங்களா? உங்களுக்கு வேற ஒண்ணும் பிரச்னை இல்லையே?” என்று அவன் மீண்டும் கேட்டான்.
வேலுச்சாமி முகம் திருப்பி, “ஒண்ணும் இல்லை மாப்ள. கவலைப்படாதீங்க.” என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கண்களில் பதட்டம் தெரிந்தது.
“சரி, நீங்கள் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. தூங்கி எழுந்தா சரியாகிடும்.” என்று பார்வதி அவரை அறைக்குள் அழைத்துச் சென்றார்.
அன்றிரவு பார்வதி, அன்னத்தைத் தூக்கி அமர வைத்து,
“எதையும் யோசிக்காத அன்னம். உனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பான். உன் நல்ல மனசுக்கு நல்லதுதான் நடக்கும். நீ பயப்படாதே.” என்று ஆறுதல் கூறினாள்.
ஆனா அந்த வார்த்தைகள் அன்னத்தின் உள்ளத்தை எட்டியவுடனே, கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
பின்னர் பார்வதி வேலுச்சாமிக்கு உணவும் மாத்திரையும் கொடுத்து படுக்க வைத்து விட்டு, அன்னத்திற்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு வெளியேறினாள்.
அன்னம் படுக்கையில் படுத்துக் கொண்டாலும், தூக்கம் அவளது கண்களில் எட்டவே இல்லை. புரண்டு புரண்டு கிடந்தாள். தன்னுடைய வாழ்கையை நினைத்து பல கேள்விகள் அவளைத் துரத்தியது.
‘என் வாழ்க்கை இப்படி போய்விடுமா? என் அப்பா நிம்மதியா இருப்பாரா? இந்தக் கிருத்திஷ் என்னை எப்போவும் காப்பாத்துறாரே… ஏன் அவர் இப்படி இருக்கிறார்?’
அவளது மனதில் குழப்பம், பயம், ஆனால் அந்தக் குழப்பத்தோடு சேர்ந்து ஒரு புதுச்சா முளைக்கத் தொடங்கிய உணர்ச்சி. அந்த இரவில் அவளுக்கு தூக்கம் வரவில்லை.