அத்தியாயம் 2
பகலவன் தனது கடமையை ஆற்ற கிழக்கில் உதித்த நேரம் சக்கரவர்த்தி இல்லத்திலோ தேவ்வின் அலறலில் தான் பொழுது விடிந்தது..
தேவ் அலறிய சத்தத்தில் திடுக்கிட்ட சொர்ணம்மாளோ “இவன் ஏன் இப்படி கத்துறான்?” என்று நினைத்தவாறே அறையை விட்டு வெளிவந்தார்.
தேவ் ஹாலில் இருந்த நீள்விருக்கையில் அமர்ந்திருக்க, அவர் அருகே இருந்த தேவிகாவோ தேவ்வின் நெற்றியில் மருந்திட்டு கொண்டிருந்தார்.
அவர்களின் அருகே வந்த சொர்ணம்மாளும் “என்னாச்சு?” என்று கேட்டார்..
தேவிகா திருதிருவென்று முழிக்க.. தேவ்வோ ” அம்மா எண்ணெய்யில போட்ட குலாப்ஜாமூன் வெடிச்சு என் நெற்றியில் பட்டுடிச்சு” என்று கூற..
“நல்லவேளை உன் பல்லு உடையாம தப்பிட்ட” என்று சொர்ணம்மாள் கேலியாக கூற..
கண்கலங்கிய தேவிகாவோ எழுந்து தோட்டத்திற்கு சென்றுவிட்டார்.. அவரை பின் தொடர்ந்து செல்ல இருந்த தேவ்வை தடுத்த சொர்ணம்மாளோ “நான் போய் பார்க்கிறேன்” என்று கூறியவாறே தோட்டத்திற்கு வந்தார்..
தோட்டத்தை வெறித்தவாறே நின்ற தேவிகாவின் அருகே வந்தவர் “நீ செஞ்ச பால் அல்வாவ புதைச்ச இடத்தை தேடுறியா?” என்று கேட்க..
அவரை முறைத்த தேவிகாவோ “நீங்க எனக்கு நல்ல மாமியார் இல்லை” என்று கூற..
“நேத்துதான் என்னை மாமியார் கொடுமை பண்ண சொல்லி என் மகன் சொன்னான். அவன் பேச்ச கேட்டு உன்னை கொடுமைபடுத்திருக்கனும். நான்தான் தூங்கிட்டேன்” என்று நக்கலாக கூற..
“ம்பச் விளையாடதீங்க அத்தம்மா நீங்க ஆரம்பத்திலயே கண்டிப்பா இருந்திருந்தீங்கன்ன நான் ஒரு நல்ல மருமகளாவும், என் மகன்களுக்கு நல்ல அம்மாவாகவும் இருந்திருப்பேன்..”
“நான் கண்டிக்கிற அளவுக்கு நீ எப்பவும் நடக்கல. நீ கிளப், பார்ட்டினு சுத்தல. நீ இரவு பகல் பார்க்காம உழைச்சது எல்லாம் இந்த குடும்பத்துக்காக தான். சமைக்க தெரியலனா நீ நல்ல மருமக இல்லன்னு அர்த்தமா..?”
“ஆனா நான் ஒரு நல்ல அம்மாவா? என் பையன் மனசில என்ன இருக்குன்னு தெரியாத அளவுக்கு நான் முட்டாளா இருந்திருக்கேன். அதனால தான் என் பிள்ளைங்க என்னை விட்டு தூரம் போய்ட்டாங்க” என்று அழுதவாறே தேவிகா பேச..
அவரை ஆதரவாக அணைத்த சொர்ணம்மாளோ “வருணை நீ வயித்துல சுமந்திட்டு இருந்தப்ப அம்மா குழந்தை இரண்டுல ஒருத்தர்தான் பிழைக்க முடியும்ன்னு டாக்டர் சொன்ன நேரத்தில எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என் குழந்தையை காப்பத்துங்கன்னு டாக்டர்க்கிட்ட எவ்வளவு பிடிவாதம் பண்ணுன. உன் குழந்தைகளுக்காக உயிரை கூட விட துணிஞ்ச. உன்னை மாதிரி நல்ல அம்மா கிடைக்க உன் பிள்ளைங்க புண்ணியம் பண்ணிருக்கனும்..”
“வருணை புரிஞ்சுக்காம போனது என்னோட தப்பு தானே..”
“வருண் விஷயத்தில நம்ம யாருடைய தப்பும் இல்லை. யார் தப்பு செஞ்சாங்களோ அவங்களுக்கான தண்டனை கிடைச்சிடுச்சு. இனிமேல் அதைப்பற்றி பேச வேணாம்..”
“ஆனா அத்தைம்மா” என தேவிகா இழுக்க..
“இப்ப என்ன சொல்ல போற..?”
“எனக்கு என் கையால என் பசங்களுக்கு சமைச்சு தரணும்னு ஆசையா இருக்கு” என்று தேவிகா கூற..
நடைபயிற்சி முடித்த சக்கரவர்த்தி தன் மனைவி மருமகள் தோட்டத்தில் நின்று பேசுவதை பார்த்தவர் ” மாமியாரும் மருமகளும் என்ன ரகசியம் பேசுறீங்க..?” என்று கேட்டபடியே அவர்களை நோக்கி சென்றார்..
சொர்ணம்மாளும் சக்கரவர்த்தியிடம் தேவிகாவின் ஆசையை கூறினார்..
சக்கரவர்த்தியும் “ஏன் மா உனக்கு இந்த விபரீத ஆசை..?”என்க..
“ப்ளீஸ் மாமா எனக்கு உதவி பண்ணுங்க..”
“வயசான காலத்துல உன் சமையல சாப்பிடற அளவுக்கு உடம்புலயும் மனசிலயும் அவருக்கு தெம்பில்லை” என்று சொர்ணம்மாளிடம் இருந்து பதில் வரவும் தேவிகாவின் முகம் சுருங்கியது..
தேவிகாவின் வருத்தத்தை பார்த்த சக்கரவர்த்தியோ “நீ ஏன் சமையல் கத்துக்க கூடாது” என்று கேட்டார்..
“மருமக வரப்போற வயசுல சமையல் கத்துக்க சொல்றீங்களே..”
“அதனால என்ன அவ ஆசை படறா பிடிச்சதை பண்ணட்டுமே..”
“அவளுக்கு பிடிச்சு பண்ணுனா நான் தடை சொல்லமாட்டேன். இவ என்னடானா சமைக்க தெரிஞ்சாதான் நல்ல அம்மாங்கிற மாதிரி பேசுறா..”
“நீ ஏன்மா அப்படி நினைக்கிற..?” என்று சக்கரவர்த்தி தேவிகாவிடம் கேட்டார்..
“மாமா உங்க அம்மா சமைச்சதுலயே உங்களுக்கு ரொம்ப பிடிச்சது என்ன..?”
“என்னமா இப்படி கேட்கிற. அம்மா சமைக்கிறதுல எல்லாமே எனக்கு பிடிக்கும். அவங்க வைக்கிற மீன் குழம்பு இருக்கே அவ்வளவு ருசியா இருக்கும். அத நினைச்சு இப்பவே பசியெடுக்குது..”
“பார்த்தீங்களா மாமா இவ்வளவு வயசாகியும் உங்களோட அம்மா சமையலை எப்படி பாராட்டுறீங்க. இப்படி ருசியா சமைச்சு என் பசங்களுக்கு தரணும்னு ஆச படுறேன். நீங்க சொன்ன மாதிரி நானும் சமையலை அத்தைக்கிட்ட இருந்து கத்துக்கிறேன். எனக்கு அத்தை பண்ற மீன் குழம்புதான் பிடிக்கும் ஏன்னா உங்க அம்மா சமையலை நான் சாப்பிட்டது இல்லை..” என்று கூறியவாறே வீட்டிற்க்குள் தேவிகா சென்றுவிட்டார்..
தேவிகா சென்றதும் சக்கரவர்த்தி அருகே வந்த சொர்ணம்மாளும் “அப்ப நான் வைக்கிற மீன் குழம்பு உங்களுக்கு நல்லா இல்லை அப்படிதானே..”
“நான் எப்ப அப்படி சொன்னேன்..”
“அதான் உங்க மருமகக்கிட்ட சொன்னீங்கள்ள..”
“அவ அம்மா சமையலை பத்திதான கேட்டாள். அதான் சொன்னேன்..”
“இரண்டு நாளைக்கு முன்னாடி கூட எங்க அம்மா வைக்கிற மாதிரியே நீ மீன் குழம்பு வைக்கிறன்னு சொன்னதெல்லாம் பொய்..”
“கொள்ளு பேரன் பேத்தி எடுக்கிற வயசுல நமக்கு இந்த சண்டயெல்லாம் தேவையா..”
“அப்ப நான் உங்கக்கிட்ட சண்ட பிடிக்கிறேன் அப்படிதானே” என்று கோபமாக பேசியபடியே வீட்டிற்குள் நுழைந்ததார் சொர்ணம்மாள்..
தன் அம்மா கோபமாக வருவதையும் தன் தந்தை அவரை சமாதானபடுத்த முயற்சி செய்வதையும் பார்த்த தேவ் என்னாச்சு என்று தேவிகாவிடம் சைகையால் கேட்க அவரோ தெரியவில்லை என்று தலையாட்டினார்..
“என்னாச்சு மாமா?” என்று தேவிகா கேட்க..
சக்கரவர்த்தியோ நடந்ததைக் கூறினார். அதைக்கேட்ட தேவ்வும் “அம்மா இதெல்லாம் ஒரு விஷயமா?” என்று கேட்க..
“ஆமாடா உங்க அப்பா என் சமையலையும் உங்க பாட்டி சமையலையும் சாப்பிட்டுருக்கார். அவங்க சமையலை பாராட்டினா என் சமையலை குறை சொல்லறதா தான அர்த்தம்”..
பத்தவைச்சிட்டியே பரைட்ட என்கிற ரீதியில் தேவ் தேவிகாவை பார்க்க அவரோ சிரிப்பை அடக்கியவாறே தேவை பார்த்து கண்சிமிட்டினார்..
“சொர்ணாமா தாய்க்கு பின் தாரம்தானே. இப்ப நான் என்ன செஞ்சா உன் கோபம் குறையும்” என்று சக்கரவர்த்தி கெஞ்சுதலாக கேட்டார்..
“இனிமேல் நான் என்ன சாப்பிட சொல்றனோ அதைதான் சாப்பிடணும்..”
“உன் கையால பாகற்காய் கொடுத்தா கூட இனிக்கும். நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்..”
“அப்ப சரி” என்ற சொர்ணம்மாளோ “கற்பகம்” என்று வேலைக்கார பெண்மணியை அழைத்தவர் சக்கரவர்த்தி தினமும் சாப்பிடுவதற்கான உணவுகளைக் கூறி முடித்தார். “உங்க பெரிய அய்யாவுக்கு இதை தவிர வேறு எந்த உணவுகளையும் கொடுக்ககூடாது” என்று கூறியபடியே சக்கரவர்த்தியை பார்த்தவர் “என்ன எனக்காக செய்வீங்கதானே..!” என்று கேட்டார்..
சக்கரவர்த்தியும் ஆம் என தலையை ஆட்டியவர் குளிப்பதற்காக தனது அறையை நோக்கி சென்றார். அவரை தொடர்ந்து சொர்ணம்மாளும் அவ்விடம் விட்டு சென்றார்..
இப்பொழுது தேவ்வோ தேவிகாவை பார்த்து எல்லாம் “உன்னாலதான் அப்பா ரொம்ப பாவம்” என்று கூற..
தேவிகாவும் “நாரதர் கலகம் நன்மையிலதான் முடியும்” என்க..
“புரியல..”
“அத்தைமா நிறைய தடவை சொல்லிருக்காங்க உங்க பாட்டி சமையல் ரொம்ப ருசியா இருக்கும்னு. இன்னைக்கு அவங்க மாமாகிட்ட சண்ட போட்டதை மாமாவ டயட் ஃபுட் ஃபாலோ பண்ணதான்..”
“டயட் ஃபுட்டா ஏன்..?”
“மாமா இந்த தடவை மெடிக்கல் செக்கப் பண்ணப்ப சுகர், பிபி, கொலஸ்ட்ரால்லாம் அதிகமா இருக்குன்னு ரிப்போர்ட் வந்துச்சு மாமாவும் டயட் ஃபாலோ பண்ணாம மெத்தனமா இருக்குறதுனால அத்தைமா ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு சண்ட போட்டு மாமாவ சம்மதிக்க வைச்சிட்டாங்க..”
“எங்கம்மாவும் புத்திசாலிதான் என் பொண்டாட்டி மாதிரி..”
“ஆனா நீங்க மாமா மாதிரியில்ல என்ன எப்ப கொஞ்சி கெஞ்சி சமாதானம் பண்ணுனீங்க..”
“பாதி நேரம் வேலை சொல்லி என்னை பிசியா வைச்சிருக்க. மீதி நேரம் அல்வா கிண்டி என் வாயை அடைச்சிருத இதுல உன்னை கொஞ்ச நேரம் எங்க இருக்கு ” என்று தேவ் கேலி செய்ய அவரை செல்லமாக முதுகில் அடித்தார் தேவிகா..
இவர்கள் இவ்வாறு பேசி கொண்டிருக்கும் போதே தேவிகாவோ தேவ்விடம் “நம்ம சூர்யா யாரையாச்சும்
காதலிச்சிருக்கானா..?அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியல. இதுக்கு முன்னாடி கூட நம்ம பிசினஸ்ல பிரச்சனை வந்தப்ப கூட அவன் லண்டன்ல இருந்து தான் சால்வ் பண்ணுனான். இப்ப தீடீரென ஒரு சின்ன விஷயத்துக்காக இந்தியா வரான் ஏனோ..?”
“வருணுக்காக இருக்கலாம் தேவிமா..”
“வருணுக்காக மட்டும் இல்லை வேற ஒரு காரணமும் இருக்குன்னு தோணுது..”
“என்ன காரணம்..?”
“தெரியல ஆனா சூர்யா இந்தியா வந்தப்ப எல்லாம் பிப்ரவரி பதினேழாம் தேதிதான் வந்தான்..”
“ஆமா நான் கூட இதை கவனிக்கல..”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தேவ்வின் அலைப்பேசி ஒலித்தது. அதை ஏற்று காதில் வைத்தார். மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்தவர் பின்னர் தான் வருவதாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டு தேவிகாவை பார்த்து “நம்ம ஆஃபிஸ் கிளம்பனும் ரெடியாகு போற வழியில எல்லாம் சொல்றேன்” என்றவர் ஆஃபிஸ் செல்ல தயாரானார்..